Advertisement

அத்தியாயம் 6
சில நொடிகள் கண்ணை மூடி நின்றவள், படுக்கை அறை வார்டு ரோபை மூடிவிட்டு, “மற மற, மட மனமே,  மறந்து போ, ஆரம்பத்தில் இருந்தே அவன் செய்தது துரோகம், அவனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலும் அது உனக்கு அவமானம்”, உருப்போட்டு மனதை திடம் செய்து அறையை விட்டு வெளியே வந்தாள், நறுமுகை.
“விது, ஆரவ், ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடுங்க, வெளியல்லாம் ஹைஜீனிக்-கா இருக்குமா தெரியாது”, என்ற நறுமுகையின் சொல்லுக்கு பிள்ளைகள் பணிந்தனர். ஆரவ் விது இருவரும் பிராயணப் பொதிகளை ஆளுக்கு ஒன்றாக கையில் எடுத்தும், இன்னமும் இரண்டு பெட்டிகள் இருந்தன, அனைத்துமே சக்கரம் பொருத்தியவை என்பதால் கனம் பற்றிய கவலை இல்லை.
விது இலகுவான ஒரு பெட்டியை வாசல் வரை இழுத்துச் சென்றான், அதற்கு மேலே செல்ல வாசற்கால் தடுக்க, கார் அருகே நின்றிருந்த சசி உடனே வந்து பெட்டியை வாங்கி கொண்டான். “நீ காருக்கு போ, மிச்சத்தை நான் எடுத்துட்டு வர்றேன், ஆரூ நீயுந்தான்”, என்று ஆரவ் கொண்டு வந்த பெட்டியையும் தானே ஏற்று டிக்கியில் வைத்தான்.
ட்ரைவர், எஞ்சின் ஆயில், கூலன்ட் அளவு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார். சசி, நறுமுகைக்காக காத்திருந்து நிமிடங்கள் கரைவதை கவனித்து வாட்ச் பார்த்தான். விமானத்திற்கு நேரமாகிவிட்டதால், நறுமுகைக்கு உதவுவதற்காக மீதமிருந்த பொதிகளை எடுத்து வர, வீட்டினுள் சின்ன தயக்கத்துடன் சென்றான்.
அங்கே, ஹாலில் (மண்டபத்தில் அந்த ஆன்ட்டி கொடுத்த) புடவையை & இப்போது மாற்றிய உடையையும் பெட்டியில் திணித்து, நறுமுகை அதை மூட பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். மனம் தாளமுடியாத குழப்பத்தில் இருக்கும்போது எதையும் சரிவர செய்ய முடியாது, நறுமுகையின் நிலையும் அதுதான்.
வீட்டின் போர்டிகோ தாண்டி ஹாலுக்கு நுழைந்த சசிசேகரன், அவளது பெட்டி மூடும் போராட்டத்தைப் பார்த்தான். அவள் ரெஸ்ட்லெஸ் என்பது புரிந்து, அருகே அவளது முதுகுப்புறமாக வந்து, “நகரு நான் பாக்கறேன்”, என்றான்.
அருகே அவன் குரல் திடீரென கேட்டதும் நறுமுகைக்கு தூக்கிவாரிப் போட்டது. ஹக். ஒரு முறை நிமிர்ந்து சசியைப் பார்த்து, “இல்ல தேவையில்லை, நானே மேனேஜ் பண்ணிப்பேன்”
“நீ மேனேஜ் பன்னிப்பதான், இல்லன்னு சொல்லல, ஆனா இப்போ டைமாச்சு, தள்ளு”, என்று அழுத்திக் கூற, நறுமுகை நகர்ந்தாள். சசியும் அந்த பெட்டியை மூட இருமுறை முயற்சி செய்தான், அந்த பொதி அடங்குவேனா என்றது.
“நான் போர்ஸ்சா பிரெஸ் பண்றேன், நீ ஜிப் போடு”.
இருவரும் முயன்றும் முடியவில்லை, இன்னமும் சோதனையாக ஏற்கனவே மூடியிருந்த ஜிப்-ம் பிரிந்து கொண்டது.
வாட்ச் பார்த்து, “ப்ச்.. கேண்டில் இருக்கா?”, என்று சசி கேட்க.. இருக்கா இல்லையா? யாருக்கு தெரியும்?.
பதில் வராததால், அவளது முகம் பார்த்தவன், அழுத்தமாக “இவா, கேண்டில் கேட்டேன்” என்றான்.
“இருக்கான்னு தெரில”
“கிட்சன் சிம்னிக்கு மேல லெஃப்ட் சைட் லாஃப்ட்-ல பாரு, எப்பவும் அங்கதான் வைப்போம்”, என்று சசி சொன்னதும் நறுமுகைக்கு முகம் கன்றி தொண்டை அடைத்தது.
சென்றாள். அவன் சொன்னது போலவே மெழுகுவர்த்தி இருந்தது, கண்கள் கரித்தது, எடுத்து சென்று அவனிடம் கொடுத்தாள். மெழுகினை சரசரவென ஜிப் மீது தேய்த்து, பின் ரன்னரை ஓடவிட, அது சமத்தாக மூடிக்கொண்டது, இன்னும் இருமுறை திறந்து மூடி செக் செய்து, திருப்தியானதும், நறுமுகையிடம் மெழுவர்த்தியை தந்து, “அங்கயே வச்சிடு”, என்றான்.
“எடுத்த பொருளை எடுத்த இடத்துல வை”, எத்தனை முறை என்னிடம் சொல்லி இருப்பான்?, கேண்டிலை வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து ஒரு ரோலர் சூட்கேஸை கையில் பிடித்து, ஹாண்ட் பாக் மாட்டிக்கொண்டாள். சசி அவன் பூட்டிய மற்றொன்றை எடுத்து பின் தொடர, வெளியே வந்தவர்கள்.. வீட்டை பூட்ட வேண்டுமே? சாவி? எங்கே வைத்தேன்? நினைவில் இல்லை, வாசலில் நின்று மீண்டும் முழித்தாள். சட். இவன் அருகாமையில் இருந்தால் புத்தி பேதலித்துதான் போகிறது, இன்று.. இப்போதல்ல எப்போதும்.., சாவியை எங்கே..?
இவள் மாறவேயில்லை என்பது போல தலையை மறுப்பாக அசைத்து, “நீ போய் கார்ல இரு, பெட்-ல வச்சிருப்ப, நான் லாக் பண்ணிட்டு வர்றேன்”, என்று அவன் எடுத்து வந்த பெட்டியை போர்டிகோவில் வைத்து, இவளைக் கேட்காமலே வீட்டுக்குள் சென்றான். அவளை அணுஅணுவாக தெரிந்தவன் அவன் என்று  மீண்டுமொருமுறை நிரூபித்தான்.
நறுமுகைக்கு பழைய நினைவுகள் மனதில் ரீவைண்ட் ராகமாக, படபடப்பில் முத்துமுத்தாக வியர்க்க ஆரம்பித்தது. அவன் பேச்சை வேண்டா வெறுப்பாக செவிமடுத்து, காருக்குச் சென்றாள். ட்ரைவர் பெட்டிகளை அவளிடமிருந்து வாங்கி டிக்கியில் அடுக்கினார்.
வீட்டிற்குள் சென்ற சசி, படுக்கையறை சென்று பார்க்க, அவன் யூகித்தபடி மெத்தையின் ஓரத்தில் வீட்டுச் சாவி இருந்தது. கையில் எடுத்துக் கொண்டவன், ஒரு நொடி அந்த அறையை கண்களில் நிரப்பிக் கொண்டான். அறை  வாசல் வரை சென்றவன், திரும்பி.. வார்ட் ரோப் திறந்து பார்த்தான். அவன் என்றோ எழுதிய “LUV IV”, இருக்கிறதா?.. இருந்தது.
ட்யூப் லைட் வெளிச்சத்தில் ப்ளோரோசென்ட் எழுத்துக்கள் மின்ன, மெல்ல அதைத் தடவி.. “இவா…”, என்றான், ஒரு பெருமூச்சு தானாக எழ, “இன்னுமா இதை அழிக்காம வச்சிருக்கா? முட்டாள்”,  வாய் விட்டு நறுமுகையைத் திட்டி, நொடியில் அறையை விட்டு வெளியேறினான்.
கிடுகிடுவென வீட்டைப் பூட்டினான், கார் ஏறி, அனைவரும் வி.நிலையம் வந்தடைந்தார்கள். அதன் பின் திருச்சி வந்து சேரும்வரை இருவரும் கைக்கொண்டது மௌனம்.
விமானத்தில் மூவர் அமரும் இருக்கை இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்க, சசிக்கு பின்னால் தனியாக இருக்கை கொடுக்கப்பட்டிருந்தது. நறுமுகை, “தலைவலிக்குது, நான் அங்க உக்காந்துக்கறேன்”, என்று தனியாக அமர்ந்துகொண்டாள். சிறுவர்களோடு அமர்ந்தால், இவனோடு பேசவென இப்படியும் அப்படியுமாக அலைவார்கள் அல்லது சளசளப்பார்கள், அதற்கு தனியாகவே இருக்கலாம், தனிமை இவளுக்கு இப்போது தேவையும்கூட.
மனதுக்குள் போராட்டம், விது யாரென்று தெரிந்து கொள்வானோ? ஆனால் இவன் ஜனித்த விபரமே இவனுக்கு தெரியாதே? இப்போது இவனுக்கு விது பற்றித் தெரிந்தால் என்னாகும்? என்ன கேட்பான்? சட்டப்படி இவனுக்கு ஏதேனும் உரிமை..? ஐயோ விதுவிடம் என்ன சொல்லி இதைப் புரியவைக்க? அப்பாவிற்கு இவனைப் பற்றி தெரிந்தால்? என்று ஏதேதோ எண்ணங்களின் அலைக்கழிப்புகள்.
ஒருமணி நேரத்தில் திருச்சியை தொட்டது விமானம். இவர்களது பெட்டிகள் கன்வேயரில் வருவதற்காக காத்திருந்த நேரத்தில், ஆரவ் பசிக்கிறது என்று சொன்னான். சசி ஆரவ், வித்யுத் இருவரையும் அருகேயிருந்த இருந்த உணவகத்திற்க்கு அழைத்துச் சென்று, இருவரிடமும் ஆர்டர் செய்து சாப்பிடும்படி சொல்லிவிட்டு, நறுமுகையிடம் வந்தான்.
“உனக்கு ஏதாவது வாங்கி வரட்டுமா?, சீஸ் பர்கர்?”
“வேணாம்”
“பசிக்கிதா? ஜூஸ் ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா? ரொம்ப டையர்டா தெரியற”
“ம்ஹூம்.”, தலையசைத்து மறுத்தாள்.
“தலைவலி எப்படி இருக்கு?”
“….”
“இவா….”, இப்போது அழுத்தமாக.
“ம்ம். கூடவே இருந்துட்டு போமாட்டேன்னு சொல்லுது”
அவளது இடக்கு புரிந்து முகம் கடுத்து.. “லக்கேஜ் வந்து வெளிய போயாச்சுன்னா ஒரேடியா போயிடும்”, சொல்லி நகர..
“போனா ரொம்ப்ப சந்தோஷம்”, என்று நறுமுகை சொன்னதும் வேகமாக சசி திரும்பி நடக்கத் துவங்க, “ஒன் திங், இனி என்னை இவான்னு கூப்பிடாத, நான் இன்னும் அந்த பழைய இவா இல்ல”, வார்த்தைகளை பற்களிடையே கடித்து அரைத்து துப்பினாள்.
“நானும் நீ என்..”, “ம்ப்ச். பழைய இவான்னு நினச்சு கூப்பிடல, பழக்க தோஷம்”, வெறுப்பாக பதில் சொல்லி பிள்ளைகளிடம் சென்றுவிட்டான்.
உணவகத்துக்கு சென்ற சசி மூவருக்கும் தேவையானதை வாங்கி, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். நறுமுகை பெட்டிகளின் வரவினை எதிர்நோக்கி பொதிகளை சுமந்து வரும் தானியங்கி வார்பட்டியின் (luggage conveyor belt) அருகே நின்றிருந்தாள்.
முதலில் சாப்பிடுவதில் கவனமாக இருந்த சசி (திருமண மண்டபத்தில் வெறும் பாதாம் கீர்தான் குடித்தான்), ஆரவ் & வித்யுத்தை இரண்டொரு நிமிட கவனித்தத்தில் வித்யுத்-ம் இடது கை பழக்கமுடையவன் என்பதை புரிந்து கொண்டான். மெல்ல அவனது இதயம் அவனையறியாமல் தனது லப்டப்-பை அதிகப்படுத்தியது. நிமிர்ந்து அவனைக் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தான்.
எதிரே அமர்ந்திருந்த ஆரவ் & விது-வின் உருவ ஒற்றுமை, மேனரிசம், என்று ஒவ்வொரு சங்கிலியையும் பொருத்திப் பார்க்க, சசியின் உள்ளுணர்வு ஒரு விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தியது. ஆனால் இதற்கு வாய்ப்புள்ளதா? நூலிழையளவு இருப்பதாகத்தான் தோன்றியது, நிச்சயமாக இல்லையென மறுக்க முடியாதுதான். ஆனால் ஒருவேளை என் மகன்தான் என்றால் நறுமுகை இவனை எப்படி வளரவிட்டாள்?, தவிர்க்க எத்தனையோ மருத்துவ வழிமுறைகள் இருக்கின்றதே? ஒருவேளை நாள்கணக்கு தெரியாமல் ?
விதுவையே பார்த்துக் கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்த ஆரவ், “என்ன டாடி, விதுவையே பாத்திட்டு இருக்கீங்க?”, என்றான்.
“நோ நத்திங் ச்சும்மா”, ஆனாலும் விடாது விதுவை நோட்டம் விட்டான்.
ஸ்ஷ்!, எது எப்படியோ என் மகனென்றால் எனக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டுமல்லவா? என்ன தைரியம், என் ரத்தம்..
இதோ இப்போதே சென்று நறுமுகையிடம் கேட்டால் என்ன? ஆமாம் இல்லையென்று கண்டிப்பாக நேரடியான பதில் வராது, கேள்வி கேட்பதே அவளை பொறுத்தவரை ஆணாதிக்கம். feminist ஆனால் இவனிடம், விதுவிடம் ..? என்னவென்று கேட்பது? ஆங்.. பிக்கப் செய்ய வருபவர் பற்றி பேசி.. அப்படியே..
“விது, உங்களை கூட்டிட்டு போக ஏர்போர்ட்க்கு உங்கப்பா வர்றாரா?”
“நோ நோ, ரங்கப்பா தான் வருவார், வந்தொடனே மாம் க்கு போன் பண்ணுவார்”, காலாட்டியபடி விது. பின் “இருங்க ஆரூப்பா, மாம்-க்கு இந்த crust பிடிக்கும் கொடுத்துட்டு வர்றேன்”, என்று கையில் இருந்த பாதி பர்கரோடு நறுமுகையிடம் ஓடினான்.
ஆரவ்-விடம் அடுத்த தூண்டில்..”ஏன் ஆரூ, இவனோட டாட் வரமாட்டாரா?”
“நோ டாட், அவரை ஸ்கூல்-ல பாத்ததே இல்ல, நா மட்டுமில்ல விதுகூட அவரை பாத்ததில்லையாம், உனக்கும் மாம்க்கும் எப்படி சண்டையோ அப்படி அவங்களும் சண்டை”, ஆரூ சாதாரணமாக சொன்னான்.
இப்போது விது யாரென்று சசிக்கு தெள்ளென புரிந்தது. எச்சில் கூட்டி விழுங்கினான். நான்தான் தந்தை என்ற விஷயம் தெரிந்தால் ஆரவ்-வும் விதுவும் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? ஒன்றை ஒருவருக்கு தெளிவு படுத்தினால் மற்றொன்றில் மாட்டிக் கொள்ள வேண்டி வருமே?
விதுவைக் குறித்து மட்டுமல்ல அவன் அம்மாவையும் கொஞ்சம் புரிந்தாற்போல் இருந்தது, ஆனாலும் இவா-விடம் பேசவேண்டும், அவளுடன் பேசுவதற்கு முன் என்ன பேசப்போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும், நின்று நிதானமாக திட்டமிட்டு.., திரும்பி அவர்களை பார்த்தான்.
பெட்டிகள் வந்துவிட்டது இங்கிருந்தே தெரிந்தது. நறுமுகை கன்வேயரில் இருந்து பெட்டிகளை ஒவ்வொன்றாக இறக்கிக் கீழே வைத்தாள். விது அவளுக்கு உதவி செய்தான். விதுவை மகன் என்ற உணர்வுடன் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது, க்யூட் பாய். அருகே இருந்த நறுமுகையயும் பார்த்தான், அப்படியேதான் இருக்கிறாள், முகம் கொஞ்சம் முதிர்ச்சி அதிலும் ஓர் அழகு. பார்வையின் குழந்தைமைத்தனம் போய் ஊடுருவும் தன்மை வந்திருந்தது. ஆனால் எதோ குறைந்தது, கூர்ந்து பார்த்ததில், அவள் முகத்தில் பெயருக்கு ஏற்றாற்போல் இருக்கும் அன்றலர்ந்த பூவின் புத்துணர்வு எப்போதும் இருக்கும் அது காணாமல் போயிருந்தது.
‘விது இருப்பை எப்படி ஏற்றுக்கொண்டாள்? அவளது வீட்டினரை எப்படி சமாளித்தாள்? திருமணமின்றி…? அல்லது வேறு திருமணம் செய்து…, இவளது குணம் உணர்ந்து அவனும் பிரிந்து போய்விட்டானா? அங்கே இவளது சென்னை வீட்டில் அன்று ஒருவனைப் பார்த்தோமோ? அவனாய் இருக்குமோ? அப்போது அவனை கணவன் என்றுதான் நினைத்தோம். ஆனால் தவறோ?
“ஆரூ, முடிச்சிட்டியா? போலாமா?”
“எஸ் டாட்” டிஷ்யூவால் கைகளை துடைத்து, இருவரும் மற்ற இருவரை நோக்கி நடந்தனர். சசி மனதுக்குள் அலுவலக விடுப்புக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தான். நிறைய கேள்விகள் குழப்பங்கள்.. ஆனால் தீர்வு வெகு அருகில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
ரங்கப்பா, இரவு நேரம் ஆனதால் கால் டாக்சி கூடாது என்று அவரே மகளையும் பேரனையும் அழைத்து வர வி.நி. வந்தார். தாமோதருக்கோ நான்கு நாட்கள் பேரனை பிரிந்த ஏக்கம், ட்ரைவரோடு வந்துவிட்டார். இரு தாத்தாக்களும் வி.நிலையத்தின் வெளியே காத்திருந்தனர். சசி தான் வந்திருப்பதை அப்பா தாமோதரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று ஆரவ்-விடம் சொல்லியிருந்தான். (“உன்னைத்தன் சர்ப்ரைஸ் பண்ண முடில, அட்லீஸ்ட் தாத்தாவுக்கு ஷாக் கொடுக்கலாமே?”).
வி. நி. வெளியே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அறிமுகமாகி  / விடைபெற்று கிளம்பினார்கள். மறுநாள் சிறுவர்கள் இருவரும் அலைச்சலில் காரணமாக பள்ளிக்கு விடுப்பு எடுத்தனர், நறுமுகை மட்டும் பள்ளி சென்று வந்தாள். சென்ற காரணம் ஆரவ் அம்மா யாரென்று பள்ளி பதிவுகளில் இருக்கும் அதை தெரிந்து கொள்ளவும், ஆரவ் பிறந்த தேதியை தெரிந்துகொள்ளவும்.
மாலை நேரம் அனைத்து ஊழியர்களும் செல்லும்வரை காத்திருந்து, நறுமுகை பள்ளியின் ரெக்கார்ட் ரூம் சென்று ஆரவ் அம்மா பெயர் தெரிந்து கொண்டாள். அவள் பெயர் இவாஞ்சலின்.

Advertisement