Advertisement

அத்தியாயம் 5
நறுமுகை பிள்ளைகள் இருவரையும் கூட்டிக்கொண்டு மால்-களில் ஆசைதீர சுற்றிவிட்டு, அங்கே இருந்த ஐஸ் ஸ்கேட்டிங்-கில் இரண்டு மணி நேரம் கடத்தி, பின் ஷாப்பிங் ஆரம்பித்தனர், கண்ணில் பட்டதை, தேவையென தோன்றியதை தனக்கும் மற்றும் வித்யுத் ஆரவ்-விற்கும், இரண்டு பெரிய பிக் ஷாப்பர் கொள்ளுமளவு நறுமுகை வாங்கினாள்/வாங்கினார்கள். பின் டாக்சி பிடித்து, வீடு சென்று அரைமணி போல ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அனைத்தையும் சீராக அடுக்கி பெட்டியில் வைத்து, மிகுதியானவைகளை ரோலர் பைகளில் அடைத்து, திருச்சி செல்ல அநேகமாக தயாராகி விட்டனர்.
நறுமுகையின் கேட்டட் கம்யூனிட்டி வளாகத்தின் அருகிலேயே, பத்து நிமிட பயணத்தில் ரிசப்ஷன் நடைபெறும் திருமண மண்டபம் இருந்தது. அந்த ரமா ஆன்ட்டி குடியிருப்பில் இருந்து வாகன வசதி செய்திருந்ததால் அதில் ஒன்றில் ஏறி, மூவரும் திருமண மண்டபம் சென்றனர்.
அங்கே நறுமுகை, தெரிந்தவர்களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு, நிகழ்ச்சி துவங்கியதும் மனமக்களுக்காக வாங்கிய வெள்ளி தொட்டிலில் படுத்தபடி இருக்கும் கிருஷ்ணன் விக்ரகத்தை பரிசாக தந்தாள். பார்த்த அனைவர்க்கும் மகிழ்ச்சி, சீக்கிரமே வாரிசு வர வேண்டும், என்பதை உணர்த்தும் பரிசாம் அது, இதைச் சொல்லி அங்குள்ளவர்கள் மணமக்களை கிண்டல் செய்தனர்.
புது மண தம்பதி மேடையில் சற்றே சங்கடமாக அசட்டு சிரிப்புடன் நெளிய, சூழ்நிலையை இலகுவாக்க “அந்த தாத்தா கிட்ட பிளெஸ்ஸிங் வாங்குங்க”, என்று சிறுவர்களிடம் சொல்லி மக்களின் கவனத்தை திருப்பினாள், நறுமுகை.  வாரிசு என்ற எண்ணத்தில் எல்லாம் இவள் அதை வாங்கவில்லை, சில்வர் கிராஃப்ட் என்று வெள்ளியில் நல்ல நகாசு வேலைப்பாடுடன் கூடிய பொருளைப் பார்த்ததில் இந்த கிப்ட் பிடித்தது, விலையும் பரிசாக குடுக்க நினைத்த தொகைக்கு ஏற்ப இருந்ததால் இதை தேர்வு செய்தாள். இப்படியொரு அர்த்தம் தொனிக்கும் என்று யார் கண்டார்?
அடுத்து உணவருந்த அங்கிருந்தவர்கள் அழைத்து செல்ல, நறுமுகை & கோ சாப்பிட்டு முடித்ததும், அலைபேசியில் விமான நிலையத்துக்கு செல்ல டாக்சி-யை வரச்  சொன்னாள். அந்த கார் இவள் கடந்த மூன்று நாட்களாக உபயோகித்தது, டிரைவரும் பழக்கமே. பத்திருபது நிமிடங்கள் தாமதமானாலும் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருப்பார். தவிரவும் இப்போது வி.நி செல்லும்போது ஒரு நடை வீடு சென்று லக்கேஜ்களை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவரிடம் தெரிவித்திருந்தாள். உடை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு.
“விது ஆரூ, போயி வாசல்ல சுரேஷ் அங்கிள் வந்துட்டாரா பாருங்க”, என்று ஏவி.., அந்த திருமண வீட்டில் ரமா ஆன்ட்டியை ஒருவழியாக தேடி கண்டுபிடித்து, “கிளம்பறேன் ஆன்ட்டி, எனக்கு எட்டு மணிக்கு ஏர்போர்ட்-ல இருக்கனும், பசங்களை கூட்டிட்டு போகணும், கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினாத்தான் சரியா இருக்கும்”, எனும்போது வாசலில் சலசலப்பு. மாப்பிள்ளையின் நண்பனும், தற்போதைய மேலதிகாரியுமான யாரோ ஒருவர் வந்துள்ளாராம், அவரை மாப்பிள்ளையின் அப்பா வாசலுக்கே சென்று வரவேற்கிறாராம், ஏக தடபுடல். ரிசப்ஷனில் நிற்பதால் மாப்பிள்ளை இங்கே இருக்கிறான் போலும், இல்லையென்றால் அவனும் ஓடியிருப்பான், அங்கே மேடையைப் பார்த்து நின்ற நறுமுகைக்கு அப்படித்தான் தோன்றியது.
“வல்லி, கொஞ்சம் இருமா, புடவை, சீர் பட்சணம் உனக்கு தரத்துக்கு எடுத்து தனியா வச்சிருக்கேன், ரெண்டு நிமிஷம் உக்காந்துட்டு இரு, தோ வந்துடறேன்”, என்ற ஆன்ட்டி மணமகளின் அறைக்கு அவசரமாக சென்றார். நறுமுகை வேறு வழியின்றி, அரங்கத்தின் மத்தியில் இருந்த நடைபாதையின் அருகிருந்த ஓர இருக்கையில் அமர்ந்து, வெறுமனே வேடிக்கை பார்த்திருந்தாள்.
இவளைக் தாண்டிச் சென்று நான்கைந்து பேருடன் மேடையேறிய அந்த உருவம்…?, சசி..!!  தலையை ஒருமுறை உலுப்பிவிட்டு மீண்டும் பார்த்தாள். அசிரத்தையாக பார்ப்பதினால், அப்படி தோன்றுகிறதா? சசியேதானா? எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன் பார்த்த சசியா? எல்லோருக்கும் வயது ஏற ஏற அழகு குறையும் என்றால், இவனுக்கு மட்டும் கூடுகிறதே? சற்றே மேடேறிய சிகையும், எலுமிச்சையாக  மாறியிருந்த நிறமும் இன்னமும் அவனுக்கு அழகூட்டுவதாக இருந்தது.
நறுமுகை மூச்சு விடக்கூட மறந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள். நல்ல வேளையாக அவனருகே அவனது சகாக்கள் சூழ இருந்ததால், கீழே நிறைய கூட்டத்தோடு அமர்ந்திருந்த நறுமுகையை கவனிக்க அவனுக்கு வாய்ப்பில்லாமல் போனது.
சில நிமிடங்களில் அவன் கிளம்புவதாக சொல்ல, அவனது அவசரம் புரிந்தோ அல்லது மேலதிகாரி என்பதாலோ அங்கே மேடைக்கே பாதாம் கீர் அவனுக்காக வரவழைக்கப்பட்டது. பின் மனமக்களுக்கு தலையசைத்து விடைபெற்று, மேடையை விட்டு கீழே இறங்க…, அப்போதுதான் அவன் தன்னைப்  பார்த்துவிடக்கூடாதே என்ற எண்ணம் நறுமுகைக்கு வந்தது. இப்போது எழுந்து சென்றால் அவனது கண்பார்வையில் படுவது நிச்சயம். அப்படியே இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தால், அவனது கவனத்தை ஈர்க்காமல்  தப்பிக்கலாம், என்றெண்ணி சற்றே தலையை எதிர்புறமாக திருப்பி உட்கார்ந்து கொண்டாள். மனம் தடதடத்தது.
சரியாக சசியின் கால்கள் நறுமுகையைக் கடக்கும் நேரம், “மாம், சுரேஷ் அங்கிள் காரெடுத்துட்டு வந்துட்டாங்க, வெளில நிக்கறாங்க”, என்று வித்யுத் கூறி சசியின் பாதையை மறித்து அவன் எதிரே, இவளருகே நின்றான். சின்னவனை சற்றே கடந்து அந்த பாதையில் செல்ல முடியாதபடி ஒரு பக்கமாக வீடியோ கவரேஜ் ஒயர்கள் இருக்க, சசி யாரோ சிறுவன் அவன் அம்மாவிடம் பேசுகிறான், என்று அசட்டையாக நிமிர்ந்தவன், நறுமுகையைப் பார்த்து…, ஹக்.. பேச்சிழந்து நின்றான். “இவா”,என்று அவனையறியாமல் அவன் உதடுகள் காற்றாக உச்சரிக்க, அதைக் பார்த்த மாத்திரத்தில் நறுமுகை உடல் விரைத்தாள். இருவரது பார்வையும் நேர்கோட்டில் சந்தித்தது.
சசி சேகரனுக்கு திடீரென இவளைக் கண்டதில் அதிர்ச்சி இன்னும் இருக்க, நறுமுகைக்கோ அவனைப் பார்த்து சில நிமிடங்களுக்கு மேல் ஆகி இருந்ததால், இந்த சந்திப்புக்கு ஓரளவு தயாராகவே இருந்தாள். சசி தன் கூர் பார்வையால் அவளைத் துளைத்தான். நறுமுகையும் சளைத்தவளா? அவன் பார்வையை திண்ணமாக எதிர்கொண்டாள்.
‘என்னை வேணாம்னு சொன்னவன் நீ.. உன்கிட்ட எனக்கென்ன பயம்? இதோ இப்போ கூட.. உன்கூட இருந்த அதே வீட்ல இருந்துதான் வர்றேன். நீதான் coward மாதிரி ஓடி ஒளிஞ்சிகிட்ட. coward இல்ல, culprit, குத்தமுள்ள நெஞ்சு, என்னை பாத்ததும் குறுகுறுக்குதோ? போ போ நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளு?, நேரில் பார்த்தாயிற்று, இயந்திர புன்சிரிப்போடு,  “ஹலோ சசி, எப்படி இருக்கீங்க?”, வாய் முத்தினை உதிர்த்தாள்.
“ஹ்ம்ம்.. ஃபைன்”,என்று இவளிடம் சொல்லி, விதுவை எதோ அதிசய உயிரினம் போல பார்த்தான், அவனால் நம்ப முடியவில்லை, ‘இவா-வோட பையனா? இவ்ளோ உயரம் இருக்கான், அப்போ நான் போன உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டா போல? ஹ்ஹ.’,  மெதுவாக விதுவின் தலையைக் கோதி, “உங்க பேரு என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?”, என்றான், இயல்பாக shake hand செய்ய வலது கையை விதுவிடம் நீட்டினான்.
பதிலுக்கு கை கொடுத்து, “விது.. வித்யுத்”
“நைஸ் நேம், என்ன படிக்கறீங்க?”
“தேர்ட்”
கன்னம் தட்டி “ஓகே, பை..”, என்றுவிட்டு நறுமுகையின் முகத்தை பார்க்கப் பிடிக்கவில்லை, ஏதோ ஒரு வகையில் அடிபட்டதுபோல உணர்ந்தான். விதுவின் கையை விடுவித்து, மண்டபத்தை விட்டு வெளியேற ஒரு அடி எடுத்து வைக்க, “டாடீ…” என்ற மிகப் பரிச்சயமான ஒரு குரல் அவனைத் தடுத்தது.
அது ஆரவ்! எதிரே அவனது ஆரவ்!
ஆனந்த அதிர்ச்சியோடு, நம்பமுடியாத பாவனையுடன் அவனைப் பார்த்து ஓரடி சசி  எடுத்து வைக்க, வாய் நிறைந்த புன்னைகையுடன் ஆரவ், மண்டபத்தின் வாயிலில் இருந்து உற்சாகமாக சசியிடம் ஓடி வந்தான்.  அவன் வருவதைப் பார்த்த சசி,  “ஹேய்ய்ய், ஆரூ, நீ இங்க..?”, என்றபடி இரு கைகளை விரித்து முழந்தாளிட்டு ஆரவ்-வை தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டான்.
புன்னைகையுடன் சசியின் தோளில் முகம் புதைந்திருந்த ஆரவ் தலை திருப்பி தனது டாடி-யைப் பார்த்து, “ஹ ஹ நான் கேட்கவேண்டிய கேள்வியை நீங்க கேக்கறீங்க? இதோ, இவன் என் friend விது, இவன் கூட வந்தேன், ஆமா, என்னை கேக்கறீங்க நீங்க எட்மான்டன்-ல தான இருக்கனும்?”
“யெஸ், யெஸ்,  ஆனா மும்பைக்கு ஒன் வீக் பிசினெஸ் ட்ரிப், அர்ஜெண்டா வரவேண்டியதா போச்சு, இன்னிக்கு மத்தியானம்தான் வேலை முடிஞ்சது”, மேடையை காண்பித்து, “இவன் என் ஸ்கூல் மெட், இங்க வந்து ஒரு ஹை-பை (hi fi)  சொல்லிட்டு நேரா ட்ரிச்சி வந்து,  உனக்கு சர்ப்ரைஸ் குடுக்க நினைச்சேன், பட் நீ எனக்கு சர்ப்ரைஸ் குடுத்திட்ட..”, என்று மகனிடம் விளக்கம் அளித்தான் சசி சேகரன்.
“நேத்து நீங்க போன் பண்ணலையேன்னு தாத்தா கிட்ட கேட்டேன், ‘உங்க நம்பர் வாய்ஸ் மெசேஜ் தான் வருது, எடுக்கவே இல்ல, பிஸியா இருப்பீங்க’ ன்னு சொன்னார்.
“ஓஹ் அதுவா? என் இந்தியா நம்பரை ஆக்டிவேட் பண்றதுக்கு மறந்துட்டேன், அன்ட் உனக்கு போன் பண்ணாம அங்க வந்து நிக்கனும்னு நினச்சேன்”
இவர்கள் இருவர் பேசுவதை அருகே நின்றிருந்த நறுமுகை கேட்டுக் கொண்டுத்தானிருந்தாள். ஆரவ் சசியின் மகன்!! மனது கணகண வென காந்தியது, விதுவைவிட ஒரு வருடம் பெரியவன் ஆரவ், அப்போது நான் இவன் வாழ்வில் வருவதற்கு முன்பே வேறு ஒரு பெண்? அதுவும் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவு? ச்சே. ச்சே என்ன ஜென்மம் இவன்? அதனால்தான் என்னை கைகழுவ அப்படியெல்லாம் பேசினானா? நினைக்க நினைக்க அவளது உடலே ஒருவித அசூயையில் கூசியது.
இன்னும் சிறிது நேரம் இங்கிருந்தால் இவன் முகத்தில் காறித் துப்பத்தோன்றும் எண்ணத்தை செயலாக்கி இங்கே இந்த திருமண மண்டபத்தில் காட்சிப்பொருளாகி விடுவோம்.   கிளம்ப வேண்டும், அதுவும் உடனடியாக..
இவளைக் காப்பாற்ற நல்ல வேளையாக, ஆபத்பாந்தவனாக அந்த ஆன்ட்டி புடவை, பட்சணங்கள் அடங்கிய பையோடு வந்துவிட்டார். “அங்க ரெண்டு பேர் கிளம்பறேன்னு கால்ல வெந்நீ ஊத்திட்டு நின்னாங்க வல்லி, அவங்கள பாத்திட்டு வர்றதுக்கு கொஞ்ச நேரமாயிடுச்சி, உனக்கு ஏர்போர்ட் போறதுக்கு கார் வந்துடுச்சா?”, பேசியபடியே நறுமுகையிடம் பையைக் கொடுத்தார்.
“ஆங். வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கு ஆன்ட்டி, சரி அப்போ நான் கிளம்பறேன்”, என்று அவரிடம் விடைபெற்ற நறுமுகை விதுவின் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்ப நினைக்க, அருகில் சசியோடு பேசி நின்ற ஆரவை பார்த்தாள். இவன்? ஆரவ்? தன் பொறுப்பில் அல்லவா கூட்டி வந்தோம்? இப்போது இவனை என்ன செய்வது? அவனது டிக்கெட், லக்கேஜ் அனைத்தும் வீட்டில் உள்ளது, என்றெல்லாம் நறுமுகை யோசித்தது சில நொடிகளே, ஆரவின் தந்தை வந்தான்.. விட்டுவிட்டேன், பெற்றவனை விட நான் என்ன? இங்கு இவன் முன் நில்லாமல் எங்காவது பறந்தேனும் சென்றுவிட அவளது கால்கள் துடித்தது. விறுவிறுவென பத்து வேக எட்டுக்கள் வைத்திருப்பாளோ என்னமோ?
“மேம், மேம், நானும் உங்க கூடவே வர்றேன்”, என்று ஆரவ் ஓடி வந்து இணைந்து கொண்டான்.
வந்ததோடு மட்டுமல்லாமல் திரும்பி தந்தையிடம், “டாட், நான் விது கூட போறேன், ஏர்போர்ட்-ல பிக்கப் பண்றதுக்கு தாத்தா வர்றார், அப்போ வீட்டுக்கு நாம சேர்ந்து போலாம்”, என்று தந்தையை நண்பனுக்காக கழட்டி விட்டான் மகன்.
சசியோ, “ஹேய்.. ஆரூ இரு இரு, நானும் அங்கதான் வர்றேன், உங்களுது எந்த ஃபிளைட்?”, வேகமாக இவர்களோடு இணைந்துகொள்ள வர..
“ஸ்பைஸ்ஜெட் டாட்”
“எனக்கும் அதுல தான் புக் ஆயிருக்கு”, ஓடி வந்ததில் சசியின் முடி கலைந்து ஒரு கற்றை நெற்றியில் புரண்டது.
‘உன் முடி கூட உன்னை மாதிரியே அடமண்ட் சசி, அடங்க மாட்டேங்குது பாரு’, என்று அவன் சிகையில் கைவிட்டு விளையாடியது இந்த ஜென்மத்தில்த்தானா? நறுமுகை முகம் திருப்பிக் கொண்டாள்
“அப்ப எல்லாரும் ஒன்னா போலாம்”, கோரஸாக ஆரவ் & வித்யுத்.
இவையத்தையும் நறுமுகை காதில் வாங்கவில்லை, ஆரவ்-வின் ‘டாட்’ விளிப்பைக் கேட்டு இவளுக்கு பாதாதிகேசம் எரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது, அதிலும் நறுமுகையின் முகம் ஜிவுஜிவு-வென்றாகி மூக்கு விடைத்து வெப்பக்காற்றை வெளியேற்றுவது சசிக்கு புரிந்தது.
“இல்லல்ல, எனக்கு வேற வண்டி வரும், நான் அதுல வர்றேன், ஆரூ சொன்ன மாதிரி நான் ட்ரிச்சி ஏர்போர்ட்ல அவன் கூட ஜாயின் பண்ணிக்கறேன்”
“நோ டாட், நீங்க எங்ககூட தான் வரணும், கரெக்ட் தானடா?, துணைக்கு ஆள் சேர்த்தான் ஆரவ்.
“எஸ் எஸ், எங்க கூடத்தான் வரணும்”, சசியின் கையை சிறுவர்கள் ஆளுக்கொரு பக்கமாக பிடித்து இழுத்து சென்றனர். இவர்களை பார்க்க பிடிக்காமல் விறுவிறுவென நடந்து வெளியே கார் நிற்கும் இடத்தை தேட, ட்ரைவர் இவர்களை பார்த்ததும் வண்டியை வாசலுக்கு அருகே கொண்டு வந்தார்.
நால்வரும் ஏறியதும், டிரைவரிடம் “அண்ணா, முதல்ல வீட்டுக்கு போய் லக்கேஜ் எடுத்துக்கிட்டு அஞ்சு நிமிஷத்துல வர்றோம், ஏர்போர்ட் போயிடலாம்”, நறுமுகை சொன்னாள்.
“சரிம்மா, அப்டியே போயிடலாம்”
அதன்பின் ஆரூ, விது, சசி மூவரும்  ஏதேதோ பேசிக்கொண்டு வர, நறுமுகை கண்களை மூடி சீட்டின் பின்பக்கம் சாய்ந்து கொண்டாள். வீடு வந்ததும், சாவியை கையில் எடுத்தவள், முகம் இறுகி போயிற்று.
‘என்னோட கீ இருக்கு, உன்னோடத பத்திரமா கீ ஹோல்டர்ல வை, ஒண்ணா தொலைச்சிடுவ இல்லன்னா மறந்துடுவ’, சசி எப்போதும் சொல்வது மனதில் ரீங்காரமிட்டது.
‘இதோ வந்துடறோம்’ என்று, இருவருக்கும் பொதுவாக முணுமுணுத்து உள்ளே சென்றாள்.
சசியும் டிரைவரும் வெளியே காத்திருக்க, உள்ளே சென்றவள், மளமளவென பிள்ளைகளின் ஆடையை மாற்ற சொல்லி, ஏற்கனவே எடுத்து தயாராக வைத்திருந்த இலகு உடைகளைக் கொடுத்தாள். அவர்கள் ஒரு அறைக்கு செல்ல, நறுமுகையும் மாற்று உடை எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றாள்.
கதவைத் தாளிட்டு, அதிலேயே சாய்ந்து கண்மூடி நின்றாள், என்னதான் அவனது எதிர்பாராத சந்திப்பு தன்னை பாதிக்காதது போல, அதிலும் ஆரவ் அவன் மகன் என்ற விஷயம் தந்த அதிர்ச்சி ? வெளியே ஒன்றுமில்லாதது போல காண்பித்துக் கொண்டாலும், உள்ளூர மனம் உலைக்களமாய் கொதிப்பது அவளுக்கு தெரியுமே?
‘ஆண்டவா எனக்கு சக்தி கொடு, இவன் முன் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டிவிடக்கூடாது, முக்கியமாக விது அறிய எந்த ரசாபாசங்களும் கூடாது’, என்று இறைக்கு அவசர வேண்டுதலை வைத்து, குளியலறை சென்று முகம் கழுவி தன்னை சுத்தம் செய்துகொண்டாள். பின் உடை மாற்றி டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னை சரிபார்த்து புறப்பட நினைத்தவள்.. காலியாக இருந்த வார்டு ரோபை திறந்து சசி எழுதிய ‘LUV IV’,யை ஒரு முறை பார்த்தாள். வலித்தது. அவனது துரோகத்தை நினைக்க நினைக்க உள்ளம் காந்தியது.

Advertisement