Advertisement

அத்தியாயம் 11

சசியின் வீட்டை விட்டு கிளம்பிய நறுமுகை,  திட்டமிட்டபடி பள்ளி செல்லாமல் அவளது வீட்டுக்கு சென்றாள். காரை நிறுத்தி உள்ளே வந்த மகளை ஏறிட்ட ரங்கப்பா, அவளை கேள்வியாய் நோக்கினார். பின் யோசனையாக, அவளது குழம்பிய முகம் பார்த்து எதுவும் சொல்லாதிருந்தார்.

உள்ளே வந்த நறுமுகை அவரை ஆராய, அவர் முகத்தில் இருந்து எதுவும் கண்டு கொள்ள முடியவில்லை. “அம்மா என்ன பண்றாங்கப்பா?”

“மாத்திரை சாப்டா, தூங்கறா”, கேள்விக்கு பதில் அவ்வளவே. ஏன் ஸ்கூல்-லேர்ந்து வந்த? எந்த விசாரணையும் கிடையாது. ஆனாலும் அவரது ஒரு நொடி புருவ சுருக்கத்தில் அந்த கேள்வி இருந்தது.

“தலைவலி ப்பா அதான் வந்துட்டேன், சாயங்காலம் நீங்க போயி விதுவை கூட்டிட்டு வந்துடுங்க”, என்று சொல்லி அமைதியாக அவளறைக்கு சென்று விட்டாள். உடை மாற்றி கட்டிலில் அமர.. மரகதம் காஃபி எடுத்து வந்து அறை வாசலில் நின்றார்.

“வல்லிமா காஃபி”

“இதோ வர்றேன்மா”, சென்று காஃபி கோப்பையை வாங்கிக்கொண்டாள்.

“சாப்பாடு வைக்கட்டுமா வல்லி?”

“வேணாம் மா, நா பசிக்கும்போது சாப்படறேன். நீங்க நைட் டிஃபன் செஞ்சு ஹாட் பாக்-ல வச்சிட்டு கிளம்புங்க, ரேவதி வருவா இல்ல?”

“ஆமா வல்லி, அவ வேலை முடிச்சிட்டு இங்க வந்து என்னை கூட்டுட்டு போவா”,

“அப்பா சாப்பிட்டாரா?”

“ஆங். அம்மாக்கு குடுத்துட்டு அவரும் சாப்டாருமா” என்று சொல்லி அவர் அடுக்களை சென்றார்.

காபி மணம் நாசியை துளைக்க, கட்டிலில் அமர்ந்து மெல்ல சிப் சிப்பாக குடித்தாள். மனம் தனது அலைப்புறுதல்களை நிறுத்தியிருந்தது. இவாஞ்சலின் என்று யாரும் இல்லை & ஆரவ் சசியின் மகன் இல்லை, என்பது பெரிய ஆறுதல். ஆனாலும் இது எதோ பெரிய மகிழ்ச்சியாக எண்ணி துள்ளிக் குதிக்க முடியவில்லை.

மனதில் ஒரு பாரம், ‘அன்னிக்கி பண்ணினது தப்போ? அவன் க்வெஸ்டினுக்கு நேரடியாக பதில் சொல்லாம அவனை கோபப்படுத்தி பொறுமைய சோதிச்சு கடைசியா சசி ‘ரிலேஷன்ஷிப்’ பத்தி கேட்டதும்  ‘என்னை எப்படி சந்தேகப்படுவ நீ?’ என்று பெரிசா ஆர்பாட்டம் பண்ணி.., ச்சே! அகாடமிக்.. ப்ரொஃபஷன்-ல சரியா  முடிவெடுத்து என்ன பிரயோஜனம்? ஒரு அவரெஜ் கேர்ள் இந்த பிரச்சனையை  அழகா சமாளிச்சிருப்பா. லூஸுத்தனமா பிஹேவ் பண்ணியிருக்கேன்’.

‘எவ்ளோ அஸால்ட்டா மேரேஜ் பண்ணிக்க கேக்கறான்?’, ‘என்ன விளையாட்டு விஷயமா? ஆரவ், விதுக்கிட்ட என்னன்னு சொல்லறது?’

‘சசி ஆரவ்-வை என் பையன் இல்ல-ன்னு சொல்ல மாட்டான், ஆனா ஏன் சொல்லணும்?, தேவையில்லையே? எப்படியும் விதுவை விட கிட்டதட்ட ஒரு வருஷம் பெரியவன்ன்னு தான் வருது, யார் கேக்கப்போறா?’

‘நம்ம வீட்ல அப்பாம்மா, சித்தி மாமாக்கு சொன்னா போதும். அவங்கப்பா விதுவை எப்படி ஏத்துப்பாருன்னு தெரில. ஹூம். ஆனா எல்லார்கிட்டயும் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னுதான சொல்லி இருக்கோம்?’

‘ஆரவ் விது ரெண்டு பேரும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரில, பட் நிச்சயமா சந்தோஷப்படுவாங்க, பாப்போம்.., ஆனா அப்பா அம்மா கிட்ட கேட்டுட்டுதான் முடிவெடுக்கணும். எப்படியும் இங்கதான் இருக்கப் போறோம், அம்மாவை பாத்துக்கணும், தாமோதர் சார் இங்க வருவாரா? அட்ஜஸ்ட் பண்ணிப்பாரா தெரில, சசிட்ட கேக்கணும்’

‘எல்லாத்துக்கும் மேல… இன்னும் சசியை நா லவ் பண்றேனா?, அந்த ஃபீலிங் இன்னும் இருக்கா? தெரில, ஆனா அவன் அண்ணனைப் பத்தி சொல்லி வருத்தப்படும் போது, ‘டோன்ட் வொரிடா’ சொல்லி ஹக் பண்ணிக்கனும்னு ஒரு அர்ஜ் வந்ததே? Isn’t it Love? ஹ்ம்.’

‘அவன்கிட்ட ஒன்னு கேக்கணும், அப்பறம்தான் நா என்ன நினைக்கறேன்னு..’

“டொக். டொக்”, அறை வாசலில் அப்பா.

கதவை விரியத் திறந்து “சொல்லுங்கப்பா”

“விதுவை பிக்கப் பண்ணப் போறேன், மரகதம் கிச்சன்-ல இருக்காங்க, அம்மா எழுந்தா.. தேடுவா, பாத்துக்கோ”

“ம்ம். சரிப்பா”

ரங்கப்பா சென்றதும், அம்மா அருகே சென்று அமர்ந்துகொண்டாள். மெல்ல அம்மாவின் உறக்கத்தை கலைக்காமல் அவரது கையை எடுத்து தன் கையில் பொதிந்து கொண்டாள். உறங்கும் அவரது முகம் பார்த்து, ‘மா, நீ கேட்டுட்டே இருப்பியே? அவன் வந்திருக்கான், உன்கிட்ட காமிக்கப்போறேன், ரொம்ப திட்டிடாத, அவன் ஏற்கனவே நொந்து போயிருக்கான், உன் வீட்டுகாரர்கிட்டயும் சொல்லி வை.’

‘இந்த விஷயத்தால உனக்கு ஏதாவது ப்ராப்ளம் ஆகுமாம்மா? நீ கோவப்படுவியா? எதுக்கும் டாக்டரை கேட்டுட்டு உனக்கு சொல்லட்டுமா?’

‘நினைக்கவே இல்லமா, அவன் என் லைஃப்ல  திரும்பி வருவான்னு, ஆனா எந்த feel-ம் வரல, முதல் நாள் அங்க கல்யாணத்துல பாத்தபோது கொஞ்சம் டென்ஷன், ஆரவ் அவனை அப்பான்னு சொன்னபோது, செமையா… ஷாக், womanizer ன்னு எல்லாம் அவனைத் திட்டினேன். ஆனா, அப்பவும் stubborn-ஆ தான் இருந்தேன். அன்னிக்கு சென்னை வீட்ல.. ரொம்ப காஷுவலா என்கிட்ட பேசின போதுதான் அழுதுடுவேனோன்னு தோணுச்சு’

‘இப்போ என் life க்கு அவன் தேவையா-னு வேற தோணுது. இப்படியே போயிட்டுமே? யாருக்கும் காரண காரியம் எதுவும் சொல்லவேணாம். ஆனா விதுவை அவன் விடமாட்டான். அவன் அண்ணன் பையன் ஆரவ்.. அவனையே அப்படி பாசமா வச்சிருக்கான், இவன் son-ன்னு தெரிஞ்சிடிச்சு, விடுவானா என்ன? நா கிளம்பும் போது, அவன் கடைசியா எங்கிட்ட என்ன கேட்டான் தெரியுமாம்மா? விது என் பையன்னு சொல்லப் போறதில்லையா-ன்னு கேக்கறான்மா’

‘அவனுக்கு பையன் வேணுங்கிறதால தான் மேரேஜ் பண்ணிக்க சொல்றானோன்னு தோணுதுமா, ஏதோ காஃபி சாப்பிடலாமான்னு கேக்கறா மாதிரி மேரேஜ் பண்ணிக்க சொல்றான்’,

‘ஹ்ம். ஆனா அவனும் என்னை மாதிரிதான? லவ்-ல்லாம் எதிர்பார்க்க முடியாது. இத்தனை வருஷம் ஆயிருச்சு, சரி.. ஒரு family வேணும், நான் விது வோட அம்மா, சோ… விதுக்கு, எனக்கு & அவனுக்கும் ஒரு அங்கீகாரம், போனஸா ஆரவ்க்கு அம்மா. அதனால கேட்டிருப்பான்’

“என்னடா ஸ்கூல் போகலியா?”, அம்மா மதிநாயகி கேட்க, சட். எப்போதிருந்து இவர் முழித்துக்கொண்டார்? திருதிருத்தாள்.

சுதாரித்து, “ஆமாம்மா, போயிட்டு கொஞ்ச நேரத்துல தலைவலின்னு வந்துட்டேன்”

நறுமுகையின் கையில் இருந்த தனது கையால் அவளது கையை ஆறுதலாக அழுந்தப் பற்றி, “என்ன ரொம்ப நேரமா யோசனை பண்ணிட்டு இருந்த?”.

“ம்ப்ச். அதெல்லாம் ஒண்ணுமில்லமா”,

“இல்ல எதோ உள்ள ஓடுது”,

“ஆமாம்மா, உள்ள எலி ஓடுது பிடிச்சு வைக்க எலிப்பொறி வைக்கலாம்னு இருந்தேன்”, சூழலை இலகுவாக்கி, “உங்களுக்கு குடிக்க சத்துமா கஞ்சி கொண்டுவர சொல்லட்டுமா?”

“அப்பா..?”

“விதுவை கூப்டுட்டுவர போயிருக்கார்”

கண்கள் மின்ன பளிச்சென சிரித்து, “அப்போ எனக்கு காஃபி, நார்மல் சுகர் போட்டு மரகதத்துகிட்ட எடுத்திட்டு வர சொல்லு”, என்றார்.

அவரது குறும்பு புரிந்து மெல்ல சிரித்தவள், “ம்மா… ஹ ஹ ஹ, அப்பா வந்தா மாட்டிப்பீங்க”

“அது.. குடிச்சதுக்கப்பறம்தானே? என்ன ரெண்டு திட்டு திட்டுவார் பாத்துக்கலாம் போ போ ஓடியே போய் காஃபி கொண்டா பாக்கலாம்”, அம்மா. அழகு அம்மா. பாமரத்தனம் இருந்தாலும் படுக்கையில் இருந்தாலும் அப்பாவின் சோர்ஸ் of எனர்ஜி அம்மாதான்.

“இன்னிக்கு ஒரு நாள்தான், ஆனா அப்பா கேட்டா நீங்கதான் கேட்டீங்கனு போட்டு கொடுத்துடுவேன்”

“சரீ.. சரீ.. அவர் வர்றதுக்குள்ள சீக்கிரமா கொண்டுவா”, கள்ளத்தனத்தோடு ஒரு வித அவசரம் கலந்து நறுமுகையை துரிதப்படுத்தினார்.

அவ்வாறே மரகதத்திடம் சொல்லி அம்மாவிற்கு காஃபி கொடுத்தாள். மணி சென்று கொண்டே இருக்க விதுவும் அப்பாவும் வந்தபாடில்லை. கொஞ்சம் பதட்டமாக இருந்தது. போன் செய்யலாமா என்ற யோசனை வந்தது? ‘ச்சே விது படிக்கறது நம்ம  ஸ்கூல், அப்பா கூட்டிவர போயிருக்கார், இதுல எங்க பிரச்சனையை வரப்போகுது? அவன் விளையாடிட்டு வர்றேன்-னு சொல்லி இருப்பான், ஒருவேளை சசி…?’, தன்குத்தானே குழம்பி பின் தேறி, அம்மாவிற்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டு, ஹாலுக்கு வந்து முனைந்து ஏதாவது செய்ய வேண்டுமே என்று வேலையில் ஈடுபட்டாள்.

மரகதம் விடை பெற்று சென்றிருந்தார். வீடு கலகலப்பின்றி அமைதியாக இருந்தது. காலையில் பார்த்த சசியின் சேகர்’ஸ் வீடு (வில்லா?) ஞாபகம் வந்தது.

வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை  ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்….‘,

மாலன் கவிதையில் உள்ள எட்டடி சதுர வீட்டின் உயிர்ப்பு சேகர்’ஸ் வில்லாவில் இல்லை. அது ஏதோ ஒழுங்காக அடுக்கி வைத்திருந்த மியூசியம் போல இருந்தது. அதனால்தான் ஆரவ் தனிமையை உணர்த்திருக்கிறான் போல.

அப்படி இப்படி என்று மணி ஆறானது, பொறுமையிழந்து போன் செய்துவிடலாம் என்று முடிவெடுத்து பேசியை எடுக்கும் போது, வாசலில் அப்பாவின் கார் ஹாரன் அடித்தது. கேட் திறந்து கார் உள்ளே வர, விதுவோடு ஆரவ்-வும் காரிலிருந்து கீழே இறங்கினான்.

எவ்வளவு முயன்றும் நறுமுகையால், சசியும் வருகிறானா என்று கண்கள் தேடுவதை தவிர்க்க முடியவில்லை, ஆனால் அவன் வரவில்லை. உள்ளே வந்த சிறுவர்கள் இருவரும் ஆடை மாற்றி இருந்தனர். குளித்தது போல..? ஓ. நீச்சல், எஸ் நீச்சலடித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

“ஹாய் ஆரவ்…”

“ஹாய் மேம்”

“மா, நா ஸ்விம் பண்ணினேன் தெரியுமா? இன்னிக்குதான் கத்துக்க ஆரம்பிச்சேன்,  தோ பாருங்க வீடியோ பாருங்க, தாத்தா எடுத்தார்” விது அலைபேசியை காண்பித்து துள்ளினான்.

“ஆமா மேம், விது சூப்பரா நீச்சல் அடிக்கிறான், எனக்கு ஏற்கனவே டாட் ஸ்விம்மிங் சொல்லிக் குடுத்திருந்தாரா? விது ஜஸ்ட் லைக் தட் கத்துக்கிட்டான். ஆனா ஸ்ட்ரோக்ஸ் லாம் தெரிஞ்சிக்கல..”

“ஆரூப்பா எனக்கு சொல்லித்தறேன்னு சொல்லிருக்காரு மாம்”

” ம்ம்.சரி, ஹோம் ஒர்க்-ல்லாம் முடிச்சிடீங்களா?”

“ஹி ஹி , இல்ல, ரெண்டு பெரும் சேர்ந்து பண்ணலாம்னு தான் இங்க வந்தோம், லேட்டாயிடுச்சுன்னு ஆரூப்பா சொன்னார், இல்லன்னா அங்கேயே இதையும் முடிச்சிருப்போம்”,

‘ஹ்ம். லேட் ஆனா எனக்கு டென்ஷானாகும்னு யோசிச்சிருக்கான்’.

“எஸ் எஸ் மாம், முதல்ல என் வீடியோ பாருங்க…” விது.

பார்த்தாள். விது முதலில் ரப்பர் வளையத்துடன், பின் சசியை பிடித்துக் கொண்டு, பின் தனியாக நீந்தினான். சசி விது கூடவே இருந்தான். விதுவின் மேல் அவனது கவனம் சற்று கூடுதலாக இருப்பதுபோல நறுமுகைக்கு தோன்றியது. ஒருவேளை பிரமையா?

ஆரவ் ஒருபுறமும், விது மறுபுறமாக நடுவில் சசியோடு சேர்ந்து மூவரும் சிரிக்கும் காட்சியில்…OMG !! மூவருக்கும் முகஜாடை அச்சில் வார்த்தாற்போல் அப்படியே இருந்தது.

“விது, வீடியோ யார் எடுத்தா?”

“ரங்கப்பா தான் எடுத்தார்மா”

‘சோ, அப்பாக்கு தெரியும்’.

“ஓகே, சூப்பரா ஸ்விம் பண்றீங்க, ஆரவ் உன்னோட சைட் ஸ்ட்ரோக் நல்லா இருக்கு. ரொம்ப ப்ராக்டீஸ் பண்ணிருக்க போல”

“எஸ் மேம், டாட் வீகென்ட் அங்க ரிலாக்ஸ் பண்றதுக்கு ஸ்விம் பண்ணுவாங்க, நானும் கூட போவேனா, அப்போவே கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். டாட் என்னை டௌர்ன்மெண்ட்-ல கலந்துக்க சொல்றாங்க, நான்தான் ரெகுலர் ப்ராக்டீஸ் வேணும், நீங்க இந்தியா வாங்க, தென் நான் காம்பெடிஷன் கலந்துக்கறேன்னு சொல்லி இருக்கேன்”

“ம்ம். ஆரூப்பா இங்க வந்துட்டா நானும் காம்பெடிஷன்-ல கலந்துக்குவேன்”, ஆரவ்-வைப் பார்த்து, “டேய் எப்படா வர்றேன்னு சொன்னாரு?”

“சீக்கிரமே ன்னு சொல்றாருடா”

“போடா. உனக்கு பேசத் தெரில, எப்பன்னு கரெக்ட்டா சொல்ல சொல்லு”.

அவன் ஜெராக்ஸ் அவனை மாதிரியே இருக்காங்க. “ம்ம்.   போங்க போய் பால் குடிச்சு…”

“நோ,மேம், நாங்க மில்க் ஷேக் குடிச்சிட்டுதான் வந்தோம், அதனால நோ பால்..”, ஆரவ். சில தினங்கள் சென்னை பயணத்தில் கூட இருந்ததால் இலகுவாக பேசினான். அதிலும் சசியின் வளர்ப்பு வேறு. எங்காவது எதிலாவது தயங்குமா என்ன?

“யெஸ் மாம், நாங்க ஹோம் ஒர்க் பண்ண போறோம், டேய் வாடா நாம ரூமுக்கு போலாம்”, விது ஆரவை கூட்டிச் சென்றான்.

இரவு உணவுக்கு ஆரவ்-க்கும் சேர்த்து செய்திருப்பாரா மரகதம்? எப்போதும் ஒரு ஆள் உணவு அதிகமாக செய்து வைப்பார்தான், ஆனாலும் இருக்கிறதா என்று பார்க்க கிட்சன் போனாள். அளவுக்கு அதிகமாகவே இருந்தது. ஓகே பிரச்சனையில்லை, என்று வெளியே வர.. ரங்கப்பாவை எதிர்கொண்டாள்.

“தாமோதர்கிட்ட பேசிட்டு இருந்தேன், அவர் ஆரவ் பத்தி சொன்னார்”

“ம்ம்”

“என்ன முடிவு பண்ணி இருக்க?”

“ப்பா..!”

“விது அப்பா பத்தி..?”

முகம் கன்றியது, “அது வந்து உங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்ன்னு..”

“என்ன பேசணும்மா?”

“தெரிலபா, என்ன பண்றதுன்னு கொஞ்சம் குழப்பமா..”

“இன்னும் உங்க மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கா?”

“…”, மென்று விழுங்கினாள். இருக்கா? இல்லையா?

“வல்லி?”

“க்..க்ஹும். இல்லப்பா”

“தென்?”

“அது.. இப்போ.. எப்படி..?”, திணறி..  தயங்கி, “எல்லார்கிட்டயும்.. என்ன சொல்லி எக்ஸ்ப்ளைன் பண்றதுன்னு ஒரு கன்ஃப்யூஷன்”

“ஏன்? சண்டைன்னு தானே சொல்லியிருக்கோம், இப்போ சரியா போச்சுன்னு சொன்னா முடிஞ்சது”

” ம்ம்”, ஒத்துக்கொள்ள ஏதோ ஒரு தடை அல்லது குறை இடறியது. என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

“யாராவது ஆரவ் பத்தி கேட்டா, அதான் பிரச்சனை, அதனாலதான் பிரிஞ்சாங்கன்னு சொல்லிடுவோம்” எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், அதற்கேற்ற பதில் ரங்கப்பா வைத்திருந்தார்.

“ப்பா, சசி மேல தப்பில்லப்பா, ஆரவ்..”

“தெரியும் மா, ஆனா அதை எல்லாருக்கும் ஏன் சொல்லணும்? அந்த பையனுக்கு தெரியாது, அப்படியே இருந்துட்டு போட்டுமே?”

“ம்ம். நம்ம வீட்டு முக்கியமானவங்களுக்கு மட்டும் உண்மைய சொல்லிடலாம்ப்பா”

“ம்ம்.அதுவும் சரிதான், அவர்ட்ட பேசணும், இன்னும் எத்தனை நாள் லீவ் இருக்கு தெரியுமா?”

“ம்ஹூம். தெரியாதுப்பா”

“காலைல பேசினீங்களே, கேக்கலையா?” ஓஹ். இதுவும் தெரியுமா?

“அது காலைல.. அவன் ஆரவ் பத்தி.. எங்க சண்டை பத்தி சொல்லிட்டு இருந்தாம்பா”

“ப்ச். அவருக்கு மரியாதை குடுத்து பேசிப் பழகு வல்லி, நீ பேசறா மாதிரிதான் பசங்களும் ஃபாலோ பண்ணுவாங்க, மத்தவங்களுக்கு வித்தியாசமா தெரியும்”

“ம்ம்”

“போன் பண்ணி நீ பேசறியா?, இல்ல நா தாமோதர் கிட்ட பேசட்டுமா?”, do or die அப்பா.

“நானே பேசி சொல்றேன்பா”

“நான் சாயங்காலம் அவங்க வீட்டுக்கு போனபோது அவர் இல்ல, நிலம் வாங்க வெளிய போயிருக்கறதா சம்மந்தி சொன்னார். அப்பறம் ஆரவ் பத்தி சொல்லிட்டு இருந்தாரு, அப்பத்தான் சசி வந்தார், உடனே பசங்க அவரோட நீச்சலுக்கு போயிட்டாங்க. உன்கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு அவர் கிட்ட பேசலாம்னு வந்துட்டேன். விது பத்தி அவருக்கும் தெரியும்போல?”

” ம்ம்.தெரியும்பா”

“ஹ்ம். தாமோதர் இங்க நம்ம வீடு பக்கத்துல குடி வர்றேங்கிறார், அவருக்காக பாக்கவேணாமாம், நீங்க ஒண்ணா குடும்பமா இருந்தா போதும்னு சொல்றார்”, எல்லாம் பேசி முடித்துவிட்டுத்தான் ரங்கப்பா வந்திருக்கிறார். இதில் என்னை என்ன கேட்பது?

“உங்கம்மா கிட்ட நான் சசியோட பேசினத்துக்கப்பறமா விஷயம் சொல்லலாம்னு இருக்கேன்”

“சரிப்பா”, சுரத்தே இல்லாமல் சொன்ன மகளை பார்த்து,

“எதையுமே பாஸிட்டிவா யோசி வல்லி, இனியாவது எல்லாம் நல்லபடியா  இருக்கணும்”, என்றுவிட்டு உள்ளே சென்றார்.

‘நா என்ன மாட்டேன்னா சொல்றேன்? பாஸிட்டிவா வரலைன்னா என்ன பண்றது?’, என்ற நினைப்புடன் சசியை அழைத்தாள். இரண்டாவது ரிங்கில் எடுக்கப்பட, “சொல்லு இவா”

“அப்பா உன்கூட பேசணும்னு சொல்றாரு”

“இப்பத்தான் எங்கப்பா முடிச்சாரு, அடுத்து அவரா?”

“அவருக்கு எப்படி தெரியும்?”

“காலைல வீட்டுக்கு நீ வந்தல்ல? சர்வன்ட்ஸ் சொல்லியிருப்பாங்க போல, கேட்டார், சொன்னேன்”

“என்ன சொன்னார்?”

“என்கிட்டே ஏன்டா சொல்லலைன்னு திட்டினார். உங்க வீட்டுக்கு எவ்ளோ தலையிறக்கமா இருக்கும்னு.. பிளா பிளா, உங்கப்பா வந்திருந்தார் போல, என்னை பசங்களோட விளையாட விட்டுட்டு இவங்க ஒரு ரவுண்ட் பேசி முடிச்சிருக்காங்க”.

“…”

“சரி, அதை விடு, நீ என்ன சொன்ன? உங்க அப்பாட்ட பேசணும்னு தான? நைட் ஆரூ வை கூப்பிட வரும்போது பேசவா?”

“ம்ம்”…  “எல்லாம் ரொம்ப அவசரமா பண்றா மாதிரி இருக்கு”

“….”, சில நொடி அமைதி..”இவா? நீ.. உனக்கு.. ஓகே தான?”

தன்னையறியாது பெருமூச்சு விட்டு, “ம்ம். எப்படியிருந்தாலும் விதுக்காக இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்னு இல்லையா?”, நறுமுகை.

“ஹ்ம்..”,சசியிடமிருந்தும் நெடுமூச்சொன்று வந்தது.

“அன்ட் ஆரவ்க்காகவும்தான்”

“யா அஃப் கோர்ஸ்.. அவனுக்காகவும்தான். ஒரு ஒன் ஹவர்ல வர்றேன்”

“ம்ம். சரி”

*************

Advertisement