Advertisement

அத்தியாயம் 10 1

ரங்கப்பாவிற்கு விஷயத்தை சொன்னதும் அனைத்தையும் அவர் கையில் எடுத்துக் கொண்டார். மறுநாள் காலை ஆறு மணியளவில் மனைவி மதிநாயகிக்கு போன் செய்து, தனக்கு தில்லைநாயகியின் வீடு அருகே வேலை இருப்பதாகவும், மாலை தானே வந்து கூட்டி வருவதாகவும் அதுவரை அங்கு ஓய்வெடுக்கும்படியும் சொன்னார்.

அடித்து போட்டாற்போல் தூங்கிய நறுமுகை, காலை பத்து மணி போல எழுந்தாள். அதற்குள் தோட்டவேலை, வீட்டு வேலை,  சமையல் வேலை செய்பவர்கள் வந்து வேலையை முடித்து சென்றிருந்தனர். காலைக்கடன்களை முடித்த நறுமுகை அப்பாவின் சொல்படி, நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு கேட்டாள்.

காலை உணவை முடித்தவுடன் அவருடன் மருத்துவமனை சென்று செக் அப் செய்து குழந்தை & அதன் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொண்டாள். மருத்துவமனையியிருந்து வரும் வழியில் ரங்கப்பா ஒரு பிரபல நகைக்கடையில் காரை நிறுத்தி விறுவிறுவென ஐந்து சவரனில் சரடு, மற்றும் இவர்கள் வழக்கப்படி தாலி வாங்கி, வீடு சென்றதும் நறுமுகையிடம், பூஜையறைக்கு சென்று தெய்வத்தின் முன் நின்று வாங்கி வந்த சரடை கழுத்தில் போட்டுக் கொள்ள சொன்னார்.

அவள் திகைத்து விழிக்க.., “உங்கம்மா சாயங்காலம் வந்துடுவா, அவளுக்கும் ஊருக்கும் பொறுத்தவரை உனக்கு கல்யாணமாயிடுச்சு. நீ உன் புருஷனோட இங்க ஆசிர்வாதம் வாங்க வந்த, நான் சண்டை போட்டு, கன்னா பின்னான்னு திட்டி அவனை அனுப்பிட்டேன், புரியுதா?” என்று சொல்லி அவரது திட்டத்தை விளக்கினார். நறுமுகைக்கு மீண்டும் அழுகை எட்டிப்பார்த்தது.

மாலை மதிநாயகியை கூட்டி வர மைத்துனியின் வீட்டில் நுழைந்தும் நுழையாததுமாக, “உன் பொண்ணு என்ன காரியம் பண்ணி வச்சிருக்கா தெரியுமா?”, என்று ஹை பிட்சில் படபடப்பாக ஆரம்பித்து, “அவளா கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறா, என்ன ஜாதியோ, என்ன குலமோ? முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட கைய பிடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா நான் ஒத்துக்கணுமா?, போடா வெளிய-ன்னு கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளிட்டேன், மான ரோஷமிருந்தா என் வீட்டு படியேறாதன்னு விரட்டி விட்டுட்டேன், என்ன தைரியம்? “, என்று சத்தம் போட, மதிநாயகி தலையும் புரியாமல் காலும் புரியாமல் விழித்தார். அவர் மட்டுமல்ல, அவருடன் இருந்த இவர்களது சொந்தங்களும்.

என்ன!  மகளுக்கு திருமணமாகிவிட்டதா? அவளே செய்து கொண்டாளா? இது முதல் அதிர்ச்சியென்றால் கணவர் பெண்ணை கோபித்துக் கொண்டார் என்பது அவருக்கு அடுத்த ஷாக். சில நொடிகள் ஒவ்வொன்றாக உள்வாங்கியவர், ஐயோ தான் அந்த நேரத்தில் அங்கு இல்லாது போனோமே? என்று நினைத்து புலம்ப ஆரம்பித்தார்.

தங்கை தில்லைநாயகி உடன் இருந்ததால், அவரை ஓரளவுக்கு தேற்றினார். நறுமுகையின் இந்த செயலை (இந்த செயலையே..) யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. ரங்கப்பா மருமகனோடு சண்டையிட்டது சரிதான் என்று தோன்றினாலும், சிறிது நேரத்தில் “ஊர்ல உலகத்துல நடக்காததா என் பொண்ணு பண்ணிட்டா? இதுநாள்வரைக்கும் அவ செய்யற எல்லாத்துக்கும் சரி சரின்னு  சொல்லிட்டு.., கல்யாணத்தை ஒத்துக்க மாட்டேங்கிறாரே? என் பொண்ணை இனி  நான் பாக்கமுடியுமா ன்னு தெரிலையே?” என்று மதிநாயகி புலம்ப,

இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ரங்கப்பா, “எல்லாம் வீட்ல தான் இருக்கா, என்னை சமாதானப்படுத்தணுமாம், நாலு மணிக்கு வந்தவ சட்டமா என் வீட்ல உக்காந்துட்டு இருக்கா, அவகிட்ட சொல்லி வை, ஆறு நூறானாலும் இந்த ரங்கேஸ்வரன் மனசு மாற மாட்டான்னு”, மனைவியிடம் பொரிந்தார்.

மதிநாயகியும், “வல்லி வீட்ல இருக்காளா! முதல்ல அத சொல்றதுக்கென்ன?”, என்று அவருடன் வாக்குவாதம் செய்து, “இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சு? இவ்ளோ கோபப்படறார்னு தெரிலையே?”, என்று தில்லையிடம் பதைபதைப்புடன் கூறி அவரையும் அழைத்துக் கொண்டு  மகளைப் பார்க்க வீடு வந்து சேர்ந்தார். (ரங்கேஸ்வருடன்தான்)

நறுமுகையைக் கண்டதும் முதலில் ஆற்றாமையோடு திட்டினார். அதன் பின் விபரங்களை தில்லைநாயகி கேட்க.. ரங்கப்பா சொன்ன அதே கதையை நறுமுகையும் ஒத்துப்பாடினாள். “சரி வா, நாம சென்னை போய் மாப்பிள்ளையை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரலாம்”, என்று மதிநாயகி குண்டைப்போட.. “யாரவது அவனை பாக்கணும்னு  இந்த வீட்டை விட்டு வெளியே போனா என் பொணத்தை தாண்டித்தான் போகணும்”, என்று ரங்கேஸ்வர் கூறியதும், வேறு வழியின்றி பெட்டிப்பாம்பாய் சுருண்டு கொண்டனர், பெண்கள் இருவரும்.

ஆயினும் விடாமல், ரங்கேஸ்வர் அறியாதவாறு மருமகனின் போட்டோவையாவது காண்பிக்குமாறு நறுமுகையிடம் கேட்டார், தில்லை. அவள் சற்றே ப்ளர்ரியாக இருந்த சசியின் புகைப்படத்தை செல்லில் காட்டினாள். “நல்லாத்தான் இருக்கார், ஹ்ம். நீ எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு கல்யாணம் பண்ணியிருக்கலாமேடீ”, சித்தி தனியாக ஆதங்கப்பட்டு, அவரது வீட்டிற்கு சென்ற பின் ஒருவாறாக சந்தடி அடங்கியது.

அங்கிருந்த ஓரிரு நாட்களில் அன்னை, சசியைப் பற்றி தூண்டித் துருவ, “இன்னும் ஒருவாரத்துல அவருக்கு வெளிநாடு போகனும்மா, அஞ்சு வருஷ காண்ட்ராக்ட். அங்க போயி எனக்கு விசா ரெடி பண்ணனும்-னுதான் இந்த திடீர் கல்யாணம், சொன்னா புரிஞ்சிப்பீங்கன்னு…”… இன்னும் எத்தனை பொய்?

“எனக்கு புரியுதும்மா, ஆனா உங்கப்பாக்கு புரியனுமே? அவர் உன் கல்யாணம் பத்தி என்ன கனவெல்லாம் வச்சிருந்தார் தெரியுமா?”, என்று மதிநாயகி கண் கலங்கியதும், அப்பாவை ஒரு வழியில் நான் ஏமாற்றினேன் என்றால் அம்மாவை அப்பாவோடு சேர்ந்து எத்தனை ஏமாற்றுகிறோம் என்று எண்ணி நறுமுகைக்கு கண்ணைக் கரித்தது.

“நீ அழாத, இப்போ அழுது என்ன ப்ரயோஜனம்? ஆனது ஆயிடுச்சி, உங்கப்பா கிடக்கிறார், நீ கிளம்பு, போயி மாப்பிள்ளையை ஊருக்கு அனுப்பற வேலைய பாரு”, என்று சமாதானம் சொல்லி நறுமுகையை சென்னை அனுப்பி வைத்தார்.

அதன் பின், இதே நாடகம் சில மாதங்கள் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் மதிநாயகி, நறுமுகைக்கு நடந்த கல்யாணம் பற்றி பேசும்போதெல்லாம், மனம் சுணங்குவாள். ரங்கப்பா ஏதேனும் பேசி சமாளிப்பார். அடுத்து இவள் கருவுற்ற சேதி தெரியவர.., மதிநாயகியின் கவனம் பேரப்பிள்ளையிடம் திரும்பியது.

முதலில் சசி அடிக்கடி போன் செய்து பேசுவது போல பாசாங்கு செய்த நறுமுகை அதை படிப்படியாக குறைக்க, மதிநாயகி “என்னடி, உன் புருஷன் போனையே காணோம்?”, என்று கவலைப்பட ஆரம்பிக்க, நறுமுகை “இல்லம்மா, எங்களுக்குள்ள சின்ன சண்டை அதான்”, என்று பூசி மெழுகினாள். “என்ன கன்றாவியோ? உங்கப்பா கோவப்பட்டது சரிதான் போல?, யாரோ எவரோ? ஒழுங்கா பெரியவங்க பேசி கல்யாணம் நடத்தியிருந்தா, சண்டை சச்சரவைநாங்க சரி பண்ணலாம், ஹூம்.” அம்மாவின் இந்த மறைமுக குத்தல் பேச்சு நிறைய நாட்கள் தொடர்ந்தது. நறுமுகையும் இதற்குப் பழகிக்கொண்டாள், இதை மட்டுமல்ல, உறவுகளின் ஜாடைப் பேச்சுக்களையும் கூட. முதலில் இளைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக காண்பிக்கப்பட்டவள் இப்போதும் அவர்களுக்கு எ.கா.வாகத்தான் காண்பிக்கப்பட்டாள், எப்படி இருக்கக் கூடாதென்பதற்கு. ஆனால், இவையெல்லாம் அவள் சென்னை செல்லும்வரைதான். பின் அவளுண்டு, அவளது வேலையுண்டு.

இருந்தபோதும் நறுமுகையின் பிரசவத்தின் போது மதிநாயகி ரங்கேஸ்வரை படுத்தி எடுத்துவிட்டார். “நம்பர் கொடுங்க நா பேசறேன், என்ன கனடால தான இருக்கார்? நம்ம நவநீத்-ம் அங்க தான் இருக்கான், இவளை மொத்தமா விட்டுட்டாரா-ன்னு நான் கேட்கச் சொல்றேன்”, என்று பிடியாய் நின்றார்.

ஓரிரு முறை ரங்கப்பா சசியின் தொடர்பு எண்கள்/ நிறுவனம் பற்றி நறுமுகையிடம் கேட்டு பார்த்தார்தான். ஆனால் இவளுக்குத்தான் சசி கனடா சென்றான் என்பது வரை தெரியும் அதில் எந்த நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருக்கிறான் என்பது தெரியாதே?, அவனது FB ட்விட்டர் அக்கௌன்ட் தெரியும்தான், ஆனால் அவன் அதை  உபயோகிப்பது இல்லை என்பது தெரிந்து விட்டுவிட்டாள். சரியாக சொல்வதென்றால், நறுமுகைக்கு சசியை தொடர்பு கொள்ள விருப்பமில்லை, ‘குழந்தையை காரணம் காட்டி.. இருவருக்கும் இஷ்டமில்லாத ஒரு வாழ்க்கை தேவையா?’.

ரங்கேஸ்வர் மனைவியிடம், “இவள விட்டுட்டு போனவன் பேச்சே இந்த வீட்ல எடுக்க கூடாது”, என்று சமாளித்தார்.

விது வயிற்றில் இருந்தபோது, நறுமுகை மும்பையில் பணியிலிருந்தாள், தனது உடல் நலத்தைப் பற்றிக்கூட கவலைப்படாது மதிநாயகி அங்கு சென்று சூலுற்றிருந்த பெண்ணைப் பார்த்துக் கொண்டார். அவளது ஒன்பதாம் மாதத்தில் அங்கேயே நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து வளைகாப்பு செய்து, பின் பிரசவத்திற்கு திருச்சி கூட்டி வந்து விட்டார். ட்யூ டேட்-க்கு ஒரு வாரம் முன்புதான் திருச்சி வந்தாள் நறுமுகை.

மதிநாயகி “மருமகனை ஏத்துகிட்டு எப்படியாவது ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடுங்க” என்று சொன்னால்,  “தராதரம் பாத்து, பெத்தவங்க பண்ணி வச்சதா இருந்தா பேசலாம், இவங்களுக்கெல்லாம் நான் பேசமுடியாது”, என்று கட் அண்ட் ரைட் ஆக பேசி அவர் வாயை அடைப்பார்.

இதெல்லாம் விது பிறந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு இருந்தது. பின், இதுதான் வாழ்க்கை என்று மதிநாயகி சமாதானமாகி விட்டார். முக்கியமான கரணம் வித்யுத். அவனை வளர்க்கவும், அவன் சேட்டைகளை பற்றி சிலாகித்து பெண்ணிடம் பேசவுமே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

நறுமுகையை ரங்கேஸ்வர் அன்று திட்டியதோடு சரி. அதன் பின், அவளது எந்த ஒரு விஷயத்திலும் தலையிடுவதில்லை. மதிநாயகியின் அணத்தல்களை சமாளிக்க அவ்வப்போது ஏதேனும் பேசினால் உண்டு. அவளது எல்லாவற்றிலும் தள்ளி நின்றார், விதுவைத் தவிர. வருடங்கள் செல்ல செல்ல மகளிடம் சகஜமானார் என்றுதான் சொல்ல வேண்டும். காலம் அவரை மாற்றியது.

நறுமுகை, சசியோடு வேலை பார்த்த நிறுவனத்தில் இவளது பதவி உயர்வு விது உயிர் கொண்ட இரண்டு மாதத்தில் வந்துவிட, அதை ஏற்றுக்கொண்டு மும்பையில் ஆறு மாதங்கள் பணியாற்றினாள். சரியாக டெலிவரிக்கு திருச்சி வரும் நேரம், அங்கே ராஜினாமா தந்து, ஐந்து மாதங்கள் கழித்து சேருவதாக ஒப்புக்கொண்டு சென்னையில் வேறொரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்தாள்.

கைக்குழந்தையாக விதுவை திருச்சியில் விட்டுவிட்டு சென்னை சென்ற நறுமுகைக்கு பணியில் இமாலய வளர்ச்சி. ஆனால், அவளது நட்பு வட்டம் சுருங்கி சைலஜாவோடு நின்றுபோனது, அவளும் மாற்றலாகி சென்றுவிட, அலுவலகத்தில் அனைவரிடமும் “Hai Bye” யோடு சரி.

இத்தனை வருடங்களில் சீனியர் சாஃட்வேர் ஆர்க்கிடெக்ட் எனும் நிலைக்கு உயர்ந்து நின்றாள். சென்னையில் அவளது வசிப்பிடம் என்னவோ சசியோடு இருந்த அதே வீடுதான். முதலில் வேதனையாக இருந்த நினைவுகள், மகனின் மழலையில் மெல்ல மறந்து போனது, அல்லது முயன்று மறக்கடித்தாள். மெல்ல மெல்ல அருகில் இருந்த ரமா ஆண்ட்டியோடு பழக்கம் ஏற்பட்டது.

விது வருவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி அவளது வார இறுதிகள் திருச்சியில்தான். அவளது வேலையை விடும் வரையும் அப்படியே. வாழ்க்கை தன் சுழல்களை, மேடு பள்ளங்களைத் தாண்டி தெளிவான நீரோடை போல ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சசி வந்து நிற்கிறான்.

என்ன கேட்கப் போறான்? சொல்யூஷன் ? ம்ம். பார்க்கலாம், ஆரவ்-க்கு என்ன காரணம் சொல்லப் போகிறான்? கொட்டிய வார்த்தைகளுக்கு..?, நினைத்தவாறே அறையிலிருந்து வெளியே சென்றாள்.

விளையாடி ஓய்ந்து போயிருந்த ஆரவ்-வோடு சசி ‘போய்வருகிறேன்’ என்று விதுவிடம் சொல்லி கிளம்பினார்கள். சசியை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள், அவன் கண்களில் ஒரு வித தீர்மானம் தெரிந்தது. ‘பாப்போமே என்னதான் சொல்றான்ன்னு’ என்று இவளுக்குத் தோன்றியது.

விது.. விளையாடிய வேர்வை தீரும்வரை காத்திருந்து குளித்து வந்தான். இரவு டின்னர் முடித்து படுக்கபோகும் வரை, அனைத்துமே ஒரே தாளகதியில் சென்றது. இரவு படுக்கையில் விது, “ஆரூப்பா சோ நைஸ் ம்மா, I like him very much”, என்று சொன்னதும் ‘அமைதியாக நிதானமாக இரு’ என்று ஆணையிட்டு கட்டுப்படுத்தி இருந்த நறுமுகையின் இதயத்துடிப்பு ஜிவ்வென ராக்கெட் வேகத்தில் எகிற ஆரம்பித்தது.

Advertisement