அத்தியாயம் 25

அலுவலகத்தில்…

“வா ஐஸ் லிஃப்ட்ல போலாம்…” லலிதா ஐஸ்வர்யாவை அழைத்தாள்.

“விக்ரம் போறான்ல? வெயிட் பண்ணு… அடுத்து போலாம் லலிதா.”

“ஒண்ணா ஒரே வீட்ல இருப்பீங்களாம்.. லிஃப்ட்ல போக மாட்டீங்களா?” என்று கேட்டு ஐஸ்ஸை இழுத்துக்கொண்டு லிஃப்ட்டிற்குள் சென்றாள் லலிதா.

தனது செல்போனை எடுத்து பேஸ்புக் பார்ப்பதுபோல நடித்த லலிதா தான் சேமித்து வைத்திருந்த காணொளியை உச்ச ஒலியில் ஒலிக்கவிட்டாள்.

“ஒரே வீட்டுல மனசு ஒட்டாமல் வாழறதுக்கு பதிலா டைவர்ஸ் வாங்கிட்டு போயிடலாம்ங்க…” காணொளியில் ஒரு கதாபாத்திரம் பேசியது.

“ஆமா… எதுக்கு ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்கணும்…” காணொளியில் மற்றொருவர் பேசினார்.

லிஃப்ட் நின்றது. லலிதாவின் முகத்தையோ ஐஸ்வர்யாவின் முகத்தையோ பார்க்காமல் தனது காரில் ஏறி கிளம்பிவிட்டான் விக்ரம்.

“சும்மாவே அவன் கோபப்படுவான்… அவனை எதுக்கு லலிதா சீண்டுற?” என்று ஐஸ்வர்யா கேட்டபோது “சும்மா தான்ப்பா… விக்ரம் முகத்தைப் பார்த்தியா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் லலிதா.

“செம்ம கடுப்புல இருக்கான்… வீட்டுல என் மேல எப்படி எரிஞ்சி விழப்போறானோ…”

“உன் மேல விழட்டுமே… அதுக்குத் தான நான் ஆசைப்படறது…”

“அடப்போப்பா…” என்று சிரித்துக்கொண்டே சொன்ன ஐஸ்வர்யாவின் மனம் விக்ரமின் அன்பிற்காக மிகவும் ஏங்க ஆரம்பித்துவிட்டது. மனம் கனத்துப்போய் தான் வீட்டிற்குள் நுழைந்தாள் ஐஸ்வர்யா.

****

மறுநாள் அலுவலத்தில்.

லிஃப்ட்டில் லலிதா ஒலிக்க விட்ட காணொலியைப் பற்றி நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரம்.

“ஐஸ்வர்யா மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குமா? டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிடலாம்னு ஐஸ்வர்யா நினைப்பாளா? லலிதா காரணம் இல்லாமல் எதையும் செய்யாதே… இப்ப தான் சேர்ந்து வாழலாம்னு என் மனசு யோசிக்க ஆரம்பிச்சிருக்கு… உடனே போய் ஐஸ்வர்யாகிட்ட சரன்டர் ஆக முடியாது… எல்லாத்தும் நேரம் வரும்… இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். மனசுல இருக்கிற வெறுப்பு சுத்தமா மறையட்டும்… என்னால போலியா நடிக்க முடியாது…” என்று விக்ரம் மனதில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது அவனுக்கு ஒரு கொரியர் வந்தது. கொரியரைக் கொடுத்த பணியாள் அதே இடத்தில் நின்றபடி ஒரு விசிட்டிங் கார்ட்டை விக்ரமின் கையில் கொடுத்தான்.

“என்ன இது?” விக்ரம் கேட்டான்.

“இந்த நம்பருக்கு கால் செய்து பேசுங்க சார்…”

கொரியரைப் பிரித்துக்கொண்டே கார்ட்டில் இருந்த எண்ணிற்கு கால் செய்து பேசினான் விக்ரம்.

“ஹலோ… கால் பண்ணச் சொல்லியிருந்தீங்களா?” விக்ரம்.

“சார்… ஐஸ்வர்யா மேடம் உங்களுக்கு ஒரு டைவர்ஸ் நோட்டஸ் அனுப்பிருக்காங்க. உங்ககிட்ட இந்த டைவர்ஸ் நோட்டீஸ்ல சைன் கேட்டாங்க…”

“யாருங்க நீங்க?”

“லாயர் சார்…”

‘நாம நினைச்சது சரிதான் போலயே…’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்ட விக்ரம் தனது மனதின் கோபத்தை மறைத்து சபை நாகரீகம் உணர்ந்து,

“ஐஸ்வர்யாகிட்ட நான் பேசிக்கறேன்.” என்று தன்மையாகத் தான் பதில் அளித்தான்.

“இல்ல சார்… மேடம் இதைப்பற்றி பேசக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க… சைன் மட்டும் பண்ணுவீங்களாம்…” – கைபேசியில் வக்கீல்.

“வாட்? என் பொண்டாட்டிகிட்ட நான் பேசிக்கறேன் சார்…”

லாயர் விடாமல் தொணதொணக்க… விக்ரமிற்கு சபை நாகரீகம் மறந்து போனது.

“கெட் லாஸ்ட்.” என்று கூறி அழைப்பை கட் செய்தான் விக்ரம்.

நேராக ஐஸ்வர்யாவின் கேபினிற்குச் சென்றான். அங்கே ஐஸ்வர்யாவும் இல்லை. லலிதாவும் இல்லை. திட்டம் போடும் முன் எல்லா விளைவுகளையும் யோசித்து வைத்திருந்த லலிதா ஐஸ்வர்யாவை பதுக்கி வைத்துவிட்டாள்.

“ஐஸ்வர்யா எங்க?” என்று மற்றொரு பணியாளிடம் கேட்டான்.

“தெரியல சார்… ஆனா மதியம் வரை பெர்மிஷன் கேட்டுருந்தாங்களே?” என்ற பதில் கிடைக்க தனது அறைக்குள் சென்று அடைந்துகொண்டான் விக்ரம்.

அலுவலகத்தில் அவனுக்கு எந்த ஒரு வேலையும் ஓடவில்லை. சிக் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிற்குச் செல்லும் முன் கோயிலுக்குச் செல்லலாம் என்று சொன்ன மனதின் பேச்சைக் கேட்டு கண்ணில் பட்ட ஒரு விநாயகர் கோயிலுக்குச் சென்றான்.

அந்த மணக்குளப் பிள்ளை அவனது மனவாழ்வை சரிசெய்து வைக்கும் என்ற நம்பிக்கையுடன் கோயிலை விட்டு வெளியேறினான்.

****

அதே ஐஸ்கிரீம் கடை…

திட்டமிடும் நேரம்…

இப்போது வர்மா மட்டும் அவ்விடத்தில் இல்லை. லலிதாவின் தலையீடு இல்லாமல் தனது லௌலீக வாழ்க்கையை துபாயில் வாழ்ந்துகொண்டிருந்தான்.

லலிதா, பவித்ரா மற்றும் ப்ரியா அமர்ந்திருக்க ஒரு புது ஆள் வந்தார். அது லலிதாவின் பாலியகால நண்பரான ‘அந்த’ வக்கீல். பெயர் மோகன்.

லலிதாவிடம் காலையில் நடந்த விஷயத்தை சொன்னார்.

“அந்த டைவர்ஸ் பேப்பர்ஸ் எங்க மோகன்?” லலிதா.

“இந்தாப்பா… இதுக்கு மேல அந்த ஆள்கிட்ட விளையாடாத லலிதா. போன்லயே என்னை கத்திட்டான். கோபமா ஐஸ்வர்யாவை தேடினானாம்… என் ஆளு சொன்னான்.”

“இந்த பேப்பர்ஸ் வரும்போது ஐஸ்வர்யா விக்ரம் கண்ணுல படக்கூடாதுன்னு நினைச்சி தான் ஐஸ்வர்யாவை ஒரு வேலையா டிநகர் அனுப்பி வச்சேன்… சரியா தான் யோசிச்சிருக்கேன்… கோபத்துல விக்ரம் இப்ப சிக் லீவ் எடுத்துட்டு வீட்டுக்கே போயிட்டாராம். இப்பத்தான் என் ஆஃப்பீஸ் ப்ரன்ட்ஸ் மெசேஜ் அனுப்பினாங்க…”

“அப்படியா?” பவித்ரா பதற்றமானாள்.

“கூல் கூல் பவி… நல்லது தான நடந்திருக்கு. இனி வீட்ல தனிமையில வச்சி தான ஐஸ்வர்யாவை விக்ரம் பார்க்க முடியும்… அவர்களுக்கு தனிமை கிடைச்சா தான் என் ப்ளான் வொர்க்அவுட் ஆகும்.”

என்ற லலிதாவின் வேகத்தைப் பார்த்து பயந்த அவளது பாலியகால நண்பர் மோகன்,

 “சரி… எதைச் செய்தாலும் கவனமா செய் லலிதா… பை.” என்று கூறி கழன்றுகொண்டார்.

பவித்ராவும் ப்ரியாவும் தான் இப்போது லலிதாவிடம் மாட்டிக்கொண்டு முழித்தனர்.

“விக்ரம் டைவர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணல… இது எதிர்பார்த்தது தான்.. இப்ப என்ன பண்ணலாம்?” என்று யோசித்த லலிதா,

“சூப்பர் ஐடியா வந்திருச்சு… இப்ப அடுத்த கட்டம்…” என்று கூறி டைவர்ஸ் பேப்பரில் விக்ரமின் கையெழுத்தைப் போட்டு அந்த பேப்பர்ஸ்களை ராப்பிட்டோ மூலம் ஐஸ்வர்யாவிடம் அனுப்பினாள்.

பேயைப் பார்த்தது போல பயந்து அமர்ந்திருந்த பவித்ராவிடம்,

“இன்னும் அரை மணி நேரத்துல ஐஸ்வர்யா டிநகர்ல இருந்து ஆஃப்பீஸ் போயிடுவா… ராப்பிட்டோ போறதுக்கும் அவ வர்றதுக்கும் சரியா இருக்கும்ல?” என்று மிகச் சாதாரணமாக லலிதா கேட்டபோது பவித்ராவினால் தனது காதுகளையே நம்ப முடியவில்லை.

“அம்மா தாயே… உனக்குள்ள இப்படி ஒரு சைக்கோ இருக்கிறதை நான் இன்னிக்கி தான் பார்க்கறேன்…” என்று பவித்ரா பயந்துகொண்டு சொல்ல…

“சில நேரம் அதிரடியா தான் காரியத்துல இறங்கனும்ப்பா பவி… நீயும் வர்மா மாதிரி ஏன் பயந்து சாகுற?” என்று லலிதா அதட்டினாள்.

“வர்மா அண்ணா மட்டும் இப்ப இந்த இடத்தில் இருந்திருந்தா அவருக்கு நெஞ்சுவலியே வந்திருக்கும்…” என்று பவித்ரா சொல்ல அவ்விடத்தில் இருந்த ப்ரியாவின் மூளை மின்னல் வேகத்தில் இனி நடக்கப்போகும் நிகழ்வுகளை கற்பனை செய்ய ஆரம்பித்திருந்தது.

ப்ரியா லலிதாவைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரிக்க,

அவளைப் பார்த்து “கற்பூரம்ங்க நீங்க.” என்றாள் லலிதா.

*****

வீட்டிற்கு வந்தபிறகு ஐஸ்வர்யாவிடம் என்ன பேச வேண்டும் என்று மனதுக்குள் ஒத்திகை செய்து கொண்டிருந்தான் விக்ரம்.

மிகவும் களைத்துப் போய் பசியெடுக்கவும் மதியம் சாப்பிடாதது அவனுக்கு நினைவு வந்தது. மேஜையில் இருந்த சில திராட்சைகளை அள்ளி வாய்க்குள் போட்டான். ஃப்ரிஜ்ஜைத் திறந்து ஆப்பிளை கையில் எடுத்தான்.

அப்போது தான் வெங்கலக்கடைக்குள் யானை புகுந்ததுபோல மிகுந்த சலசலப்புடன் வீட்டிற்குள் வந்தாள் ஐஸ்வர்யா.

அவளது கையில் ஒரு பேப்பர் இருந்தது. அதை காலையில் பார்த்ததாய் தான் விக்ரமிற்கும் ஞாபகம்.

“இந்த டைவர்ஸ் நோட்டீஸ்ல நீ தான் சைன் பண்ணியா விக்ரம்?” மூச்சு வாங்க கேட்டாள் ஐஸ்வர்யா.