“ஐஸ் உன் வீட்டுக்கு வந்திருக்கேன்… நீ எங்க இருக்க?” வர்மா.
“வெளியே ஷாப்பிங் வந்தேன் வர்மா… வீட்லயா இருக்க?” என்று கேட்டவளின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது. தன் மனதின் பயத்தை ஓரம்கட்டி,
“நீ கிளம்பு… நான் வர லேட் ஆகும் டா…” என்றாள்.
“வீட்ல உன் அக்கா இருக்காங்கலா?? ஒரு மாசமா இங்க தான் இருக்காங்க போல… முத்துக்கா சொன்னாங்க… என்கிட்ட போன்லகூட நீ சொல்லவே இல்லயே?” வர்மா கேட்டான்.
“உன்கிட்ட நான் சொல்லலையா? அக்காவுக்கு அம்மை போட்டுருந்ததுல… அதுக்கப்புறம் தான் வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க… உன்கிட்ட சொன்னேன்னு நினைச்சேன்டா…”
“சிக்கன் பாக்ஸ் பற்றி சொன்ன… ஆனா உன் அக்கா வந்தது பற்றி சொல்லலை… சரி சீக்கிரம் வா. நான் வெயிட் பண்றேன்.”
“நான் வர்ற லேட் ஆகுமே? நீ கிளம்பு…”
“என்ன?? என்னை விரட்டிவிடுறதுல குறியா இருக்க? நான் மாப்பிள்ளை தோழன்கிறதை நீ அடிக்கடி மறந்துடற… என்கிட்ட பயம் இருக்கணும் மேடம்…”
“ஏன்டா உயிரை எடுக்கிற? நான் வர்றதுக்கு அரை மணி நேரம் ஆகும்… எனக்காக நீ வெயிட் பண்ண வேணாமேன்னு நினைச்சேன்…”
“நான் உன்னைப் பார்க்க வரல… உன் அம்மாவைப் பார்த்து பேசிட்டுப் போலாம்னு நினைச்சேன்… நீ பொறுமையாவே வா…”
“என்ன பேசப் போற? விக்ரம் பற்றி எதுவும் பேசாத வர்மா…”
“எப்பவும் விக்ரம் நினைப்பு தானா? என் தங்கச்சி வதனிக்கு ஒரு வரன் வந்திருக்கு ஐஸ்… மாப்பிள்ளை உங்களுக்கு தூரத்து உறவாம். அதைப் பற்றி தான் அம்மாகிட்டப் பேசப்போறேன்.” என்று ஐஸ்வர்யாவுடன் வர்மா பேசிக்கொண்டிருந்தபோதே “ஹாய் வர்மா எப்படி இருக்க?” என்று கேட்டாள் ஐஸ்வர்யாவின் அக்கா ஷாலினி.
கைபேசியில் ஐஸ்வர்யாவுடன் பேசுவதை நிறுத்தி “செம்ம ஹாப்பியா இருக்கேன்ங்க… நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான் வர்மா.
“நல்லா இருக்கேன் வர்மா. உட்காரு, ஏன் நின்னுட்டே இருக்க?” என்று ஷாலினி வர்மாவை உபசரித்தாள். உடனே சோபாவில் அமர்ந்தவன் கைபேசியில் ஐஸ்வர்யாவிடம்,
“சரி ஐஸ்… நான் உன் அக்காகிட்ட பேசிட்டு கிளம்புறேன்.” என்று கூறி அவளது அழைப்பை துண்டித்தான்.
“என்னது? ஷாலினிகூட பேசப்போறானா?” என்று மனதுக்குள் கேட்ட ஐஸ்வர்யா அழைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்த பத்தாவது நிமிடத்தில் தனது வீட்டில் இருந்தாள்.
“என்னப்பா? அதுக்குள்ள வந்துட்ட? நீ இல்லன்னா உன் வீட்ல யாரும் எனக்கு காப்பி போட்டுக்கொடுக்க மாட்டாங்களா?” என்று வர்மா கேலி பேசியதைக் கூட காதில் வாங்கிக்கொள்ளாமல்,
“நீ வதனி விஷயத்தை அம்மாகிட்ட பேசிட்டியா?” என்று வர்மாவிடம் கேட்டு அவனது கவனத்தை திசை திருப்பினாள் ஐஸ்வர்யா.
வர்மா பதில் சொல்லும் முன்,
“அம்மா சூப்பர்மார்கெட் போயிருக்காங்க ஐஸ்வர்யா… நிறைய பலசரக்கு காலியாகிடுச்சு. இப்பத்தான் லிஸ்ட் அனுப்பினேன்.” என்று ஷாலினி சொன்னாள்.
“அம்மாவை எதுக்கு அலைய விடற ஷாலினி?” என்று எரிச்சலாகக் கேட்ட ஐஸ்வர்யா சோர்வாக வர்மாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.
“சின்ன லிஸ்ட் தான்… அடுத்து வரும்போது மிச்சத்தை வாங்கணும்.” என்று ஷாலினி சொல்ல,
“உனக்கு இதுவே வேலையா போச்சு… என்னமோ பண்ணு…” என்ற ஐஸ்வர்யா உயிரைப் பிடித்துக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்.
ஐஸ்வர்யாவின் பதற்றமான தோற்றத்தை கண்டுகொள்ளாமல் வர்மாவிடம் திரும்பிய ஷாலினி,
“பெங்களுர் வந்தா வீட்டுக்கு வாங்க வர்மா… ஐஸ் அடுத்த மாசம் வருவா…” என்று வெகு இயல்பாகப் பேசினாள். ஷாலினியின் பேச்சைக் கேட்டதும்,
“பெங்களுர் போறியா?” என்று வர்மா ஐஸ்வர்யாவைப் பார்த்துக் கேட்டான்.
“ஒரு கல்யாண வீடு வர்மா. கல்யாணம் முடிஞ்சதும். வந்திடுவேன்.” என்ற ஐஸ்வர்யாவின் பதிலில் வெறுப்பு தான் இருந்தது. அவளது வெறுப்பை உணர்ந்த ஷாலினி,
“என் வீட்ல ஒரு பத்து நாள் இருன்னு சொன்னா கேட்க மாட்டிக்கிறா டா… இப்பத் தான் அக்கா வீடுன்னு உரிமையா என் வீட்டுப்பக்கம் வர முடியும்… இவளுக்கு கல்யாணம் ஆகிட்டா வர முடியாதுல?” என்று சொன்னபோது அவளது குரல் உள்ளே சென்றுவிட்டது.
“கல்யாணம் ஆனா என்ன ஷாலினிக்கா? அதெல்லாம் அடிக்கடி வந்து போய் இருக்கலாம். சென்னையில் இருந்து பெங்களுருக்கு தடுக்கி விழுந்தா ப்ளைட் இருக்குல?” வர்மா கேட்டான்.
“வேலை… வருஷம் முழுக்க வேலை வேலைன்னு ஓட்டமா ஓடுறோம்ல? அப்படி இப்படின்னு பிரச்சனை வரும்ல அதைச் சொல்றேன்…” ஷாலினி.
“வீக்என்ட்ல பேமிலி டிரிப் ப்ளான் செய்து ஊர் ஊரா சுத்துறவங்க எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா அக்கா? உங்க ரெண்டு பேர் ஹஸ்பென்ட்டும் ஃப்ரன்ட்டாகிட்டா எல்லாம் ஸ்மூத்தா போகும்.” உண்மை நிலவரம் புரியாமல் வர்மா பேசிக்கொண்டே போக…
“எந்தப் பிரச்சனை வந்தாலும் நீ எங்க ஹஸ்பென்ட்ஸ்கிட்ட பேசி சால்வ் பண்ணிடுவ போலயே… உன் கண்ணுல அத்தனை ஆர்வம் தெரியிது என்று…” ஷாலினி கேலி போலச் சொன்னாலும் அவளது ஆழ் மனதில் அந்த எண்ணம் தான் இருந்தது. சில காரியங்கள் கைகூட அவள் வர்மாவை மலையளவு நம்பியிருந்தாள்.
“கண்டிப்பா ஷாலினிக்கா… உங்க ரெண்டு பேருக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா? உங்க ஹஸ்பென்ட்டை பார்க்கணுமே?” என்று வர்மா கேட்க உள்ளுக்குள் எழுந்த பயத்தை மறைத்து ஷாலினியால் இயல்பாக நடிக்க முடிந்தது. பேச முடிந்தது.
“ம்… பார்க்கலாம் பார்க்கலாம். அவர் இப்ப பிஸியா இருக்கார். ஒரு நாள் மீட் பண்ணலாம் வர்மா… ஐஸ் என்கிட்ட விக்ரம் பற்றி சொன்னா வர்மா… விக்ரம் எப்படி டைப் டா?” என்று ஷாலினி கேட்டதும் ஐஸ்வர்யாவும் வர்மாவும் பேந்தப் பேந்த விழித்தனர்.
“என்ன ஐஸ்? உன் அக்காகிட்ட சொல்லிட்டியா?” என்று வர்மா அதிர்ச்சியாக கேட்க…
தனது உயிர் நண்பனிடம் எத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறோம் என்பது கணக்கில்லாமல் போனதை நினைத்து மனதுக்குள் நொந்து “ஆமா வர்மா ஷாலினிக்குத் தெரியும்.” என்றாள் ஐஸ்வர்யா.
“எப்ப சொன்ன?” அப்பாவியாகக் கேட்ட வர்மாவின் குரலில் சிறு சந்தேகம் கூட இல்லை.
“போன வருஷமே சொல்லிட்டேன் டா…” என்று ஐஸ்வர்யா சொல்லவும்,
“அப்படின்னா பெரிய பிரச்சனை முடிஞ்சதுன்னு சொல்லு… இதை சொல்லும்போது எதுக்கு முகத்தை உம்முன்னு வச்சிருக்க? உன் அக்கா சம்மதம் கொடுத்துட்டாங்க… இனி உன் அம்மாவை மட்டும் சரிகட்டினா போதும் ஐஸ்…” என்று தனது தோழியின் மனக்குமுறல் புரியாமல் சொன்ன வர்மா ஷாலியிடம் திரும்பி,
“ஷாலினிக்கா… நீங்க கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு விக்ரம் நல்லவன்.” என்று தனது விக்ரமிற்கு சர்டிபிகேட் கொடுத்தான்.
ஒரு வழியாக வர்மாவிடம் பேச்சுக்கொடுத்து தனது வீட்டில் இருந்து அவனைக் கிளப்பிய பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் ஐஸ்வர்யா.
ஆனால் மறுநாளே அவளுக்கு கால் செய்த வர்மா,
“விக்ரம் உன் வீட்டு வாசல்ல நிற்கிறான் ஐஸ்வர்யா… உன்கிட்ட ஏதோ முக்கியமா பேசணுமாம்… செம்ம கோபமா இருக்கான் ஐஸ்… என்ன விஷயம்னு எனக்குத் தெரியல. நீ ஏதாவது தப்பு பண்ணியா?” என்று கேட்க உயிரே போய்விட்டது ஐஸ்வர்யாவிற்கு.
ஐஸ்வர்யா பதிலே பேசவில்லை. வர்மா தான் பேசிக்கொண்டே போனான்.
“விக்ரம் என்னைப் பார்க்க வந்தான். எதிர்க்க உன் வீடு கண்ணுல பட்டுருக்கு… சரின்னு உன்னையும் பார்க்கலாம்னு நினைச்சிருக்கான் போல… காலிங் பெல் அடிக்க பயந்து உன் வீட்டு வாசல்ல நின்னுட்டான். இப்ப எல்லாம் அவனும் உன் அம்மாவுக்கும் அந்த சாமியாருக்கும் பயப்பட ஆரம்பிச்சிட்டான் போல… உன் அம்மா மார்கெட்டுக்கு தான போயிருக்காங்க? முத்துக்கா சொன்னாங்க… விக்ரம்கிட்ட இதைச் சொன்னா பயந்து நடுங்குறான்… காலிங் பெல் அடிக்க பயப்படறான். அம்மா வீட்ல இல்லை தான? நீயும் உன் அக்காவும் தான இருக்கீங்க? போய் கதவைத் திற ஐஸ்…” என்று வர்மா அதட்டிச் சொன்னபிறகு தான் அவன் சொல்வது புரிந்து,
“என்ன வர்மா சொல்ற? விக்ரம் என் வீட்டுக்கு வந்திருக்கானா?” என்று கேட்டுக்கொண்டே வேகமாக வாசலுக்கு விரைந்தாள் ஐஸ்வர்யா.
நாலா பக்கமும் பார்த்தாள்.
யாரும் இல்லை.
முக்கியமாக விக்ரம் இல்லை.
விக்ரம் இல்லை என்றதும் தான் அவளுக்கு உயிரே வந்தது.
“வாசல்ல விக்ரம் இல்ல வர்மா…” என்று பதறிக்கொண்டு சொன்னவளின் குரல் கேட்டு,
“ஹா ஹா பயந்துட்டியா ஐஸ்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் வர்மா.
“போடா… உயிரே போயிடுச்சு…” என்று சொன்னவள் கிட்டத்தட்ட வர்மாவிற்குத் தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள்.
“ஹா ஹா… நான் சும்மா சொன்னேன் டி…”
“ஏன்டா இவ்வளவு பொய்? எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடுச்சு…”
“நான் சொன்னதுல பாதிக்கு மேல உண்மை ஐஸ்…”
“நம்பிட்டேன் நம்பிட்டேன்…”
“நிஜமா ஐஸ்… வர்மா தான் உன் வீட்டுக்கு வந்தான். ஆனா நீ பயப்படுவன்னு தெரிஞ்சி காலிங் பெல் அடிக்காமல் கிளம்பிட்டான்.” என்று வர்மா சொன்னபோது தான் மயிரிலையில் தப்பித்ததை நினைத்து அவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
“சரி ஐஸ்… இதை சொல்லத்தான் கூப்பிட்டேன். பை…” என்று கூறி வர்மா அழைப்பை துண்டித்தபோது ஐஸ்வர்யா சோர்வாக தனது வீட்டிற்குள் நுழைந்தாள். சோபாவில் அமர்ந்திடத் தான் நினைத்தாள். ஆனால் மயக்கம் வந்துவிட அப்படியே தரையில் விழுந்துவிட்டாள்.
ஐஸ்வர்யா கீழே விழுந்தபோது அருகே இருந்த மேஜையும் சாய்ந்துவிட சப்தம் கேட்டு தனது அறையில் இருந்து வந்தாள் ஷாலினி.
ஏய் ஐஸ்… என்னடி ஆச்சு? என்று பதறிக்கொண்டே தனது தங்கையிடம் சென்றவள் தனக்குத் தெரிந்த முதலுதவிகளைச் செய்தாள்.
மயக்கத்தில் இருந்து கண்விழித்த ஐஸ்வர்யாவிடம் விஷயம் என்ன? என்று கேட்டுத் தெரிந்துகொண்டப் பின் ஷாலினி கேட்ட முதல் கேள்வி,
“இன்னும் எத்தனை நாள் இப்படி செத்துப் பிழைக்கப்போற ஐஸ்? உன்னை மனதார நேசிக்கிறவன் உன் நிலையை புரிஞ்சிக்க மாட்டானா டி?” என்பது தான்.
“விக்ரம் என்னை புரிஞ்சிப்பான் ஷாலினி… ஆனா உன்னை அவன் புரிஞ்சிக்க மாட்டான் டி… எனக்கு எப்படி நீயும் அம்மாவும் உசத்தியோ அப்படித்தான் அவனுக்கும் அவன் குடும்பம் தான் உசத்தி… அடுத்த செப்டம்பர் எப்ப வரும்னு இருக்கு ஷாலினி… எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி…”
ஷாலினியால் ஒரு வார்த்தைகூட ஆறுதலாகப் பேச முடியவில்லை.
ஆனால் அவர்கள் கும்பிட்ட தெய்வத்தின் அனுகிரகத்தால் விக்ரம் குறித்த நாள் வெகு விரைவாகவே வந்துவிட்டது.
ஆம் அடுத்த சில மாதங்கள் மின்னல் வேகத்தில் நகர்ந்துவிட்டன.
தனது திருட்டுக்கல்யாணத்திற்காக விக்ரம் குறித்துவைத்த செப்டம்பர் மாதம் வந்தது.
*****
விக்ரம் சொன்ன செப்டம்பர் மாதத்தில்…
*****
“பெங்களுர் போயிருக்க… என்கிட்ட சொல்லாமல் கொள்ளாமல் வெளியே போக ஆரம்பிச்சிருக்க? புருஷன் மேல மரியாதையே இல்ல…”
“இன்னும் சார் ஹஸ்பென்ட் ஆகல…”
“அதான் அடுத்த வாரம் ஆகிடுவேன்ல?”
“இந்த ஜம்பத்துக்கு குறைச்சல் இல்ல… திருட்டுக்கல்யாணம் பண்ண நான் தைரியம் கொடுக்க வேண்டியதா இருக்கு…”
“யார் பயந்தா? அம்மா அப்பா அண்ணா அண்ணி மேல மரியாதை டீ… எவ்வளவு பயம் இருந்தாலும் உனக்கு செய்து கொடுத்த ப்ராமிஸ்ஸை காப்பாத்த நான் எவ்வளவு விட்டுக்கொடுத்திருக்கேன் தெரியுமா? எல்லாம் அந்த பெருமால் கோயில் சாமியார் செய்த வேலை…”
“எப்படா செப்டம்பர் 23 வரும்னு இருக்கு டா…”
“ஐயாவுக்கு ஒரு முத்தம் கொடுத்தா சீக்கிரம் வந்துடும் ஐஸ்…”
ஹா ஹா… என்று சிரித்த ஐஸ்வர்யா அன்று தான் கடைசியாக சிரித்தாள்.