“நான் எங்க மா அப்படிச் சொன்னேன். எனக்கெல்லாம் தமிழ் இங்கிலீஷ் ரெண்டு மொழிதான் தெரியும். ஆனா நீங்க அப்படியா? தமிழ், இங்கிலீஷ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளம், மராத்தின்னு இந்திய மொழிகள் மட்டும் இல்லாம இப்ப ஜெர்மன் மொழி வேற கத்துக்கிற.” 

“நீங்கதான உனக்குப் பிடிச்சதை நீ செய்யலாம் சொன்னீங்க.” 

“கண்டிப்பா… இன்னும் உனக்கு என்ன கத்துக்கணுமோ கத்துக்கோ…. எனக்குச் சந்தோஷம்தான்.”
கணவனின் பேச்சை கேட்டு கீர்த்தியின் முகம் மேலும் மலர… “சரி வா டைம் ஆகுது. என்னை வழியில டிராப் பண்ணிடு.” என்றான். 

“ஏன் நீங்க உங்க வண்டியில போகலையா?” 

“வா… உனக்கே தெரியும்.” என்றவன், கீழே சென்று தாத்தா பாட்டியிடம் நலம் விசாரித்து விட்டு, தன் அம்மா பரிமாற மனைவியோடு காலை உணவை உண்டான். 

அபி பள்ளிக்கு சென்றிருந்தாள். பள்ளி என்றால் வெறும் படிப்பை சொல்லித்தருவது மட்டும் அல்ல…. விளையாட்டு, கலைகள், நமது பாரம்பரியம் எனச் சொல்லித்தரும் பள்ளியை பார்த்து மகளைச் சேர்த்திருந்தான். படிப்பு மட்டும் வளர்ச்சி அல்ல என்பதற்கு உதாரணமாக அவனே தான் இருக்கிறானே…. 

இருவரும் பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தவர்கள் காரில் ஏறினர். கணவன் தன்னோடு வரும் மகிழ்ச்சியில் கீர்த்தியும் காரை எடுத்தாள். ஆனால் கார் நகர்ந்த சிறிது தூரத்திலேயே நிறுத்தச் சொன்னான். 

அவன் இறங்கி உமாநாத்தின் வீட்டிற்குச் செல்ல… எதோ கேட்க போகிறான் என நினைத்தாள். ஆனால் விஷாலை அழைத்தவன், அவன் வந்ததும் அவனைப் பார்த்து போகலாமா? என்றான்.
அவன் கேட்டதும் தான் விஷாலுக்கு நேற்று கம்பனிக்கு வர சொன்னதே நினைவு வந்தது. இப்படி அண்ணனே நேரில் வந்து நிற்பான் என்று கனவா கண்டான். இருங்க வரேன் என்றவன் உள்ளே செல்ல… தர்மா காரை விட்டு இறங்கி நின்ற கீர்த்தியிடம் சென்று நின்றான். 

விஷால் உடைமாற்றி வந்தவன், கணவன் மனைவி இருவரையும் பார்த்ததும் சிரித்து விட்டான். 

“என்ன ஒரே கலர் டிரஸ் போட்டிருக்கீங்க? யுனிபார்ம் மாதிரி.” எனக் கிண்டலாகச் சொல்ல, தர்மா மனைவியைப் பார்த்தான். 

“உனக்குப் பொறாமை.”என்ற கீர்த்தி, “எங்க ரெண்டு போரையும் போட்டோ எடு.” எனத் தனது கைப்பேசியை விஷாலிடம் கொடுத்தவள், கணவனின் கையேடு கைகோர்த்து சேர்ந்து நிற்க, சில படங்கள் எடுத்தவன், “என்ன செல் இது நல்லாவே இல்லை.” எனத் தர்மாவின் கைபேசியைக் கேட்க, 

அண்ணன் நீட்டியதை வாங்கிப் பார்த்தவன், உடனே திருப்பிக் கொடுத்து விட்டான். 

“உங்களுக்கு அண்ணியே பரவாயில்லை போல… லேட்டஸ்ட் மாடல் எத்தனை வந்திருக்கு. இன்னும் பழசை வச்சிட்டு இருக்கீங்க.” என்றவன், தனது செல்லை எடுத்து இருவரையும் சில படங்கள் எடுத்தான். 

“எனக்கு அந்தப் போடோஸ் எல்லாம் அனுப்பி விடு.” என்ற கீர்த்தியிடம் சரி என்றவன், தனது பைக்கை எடுக்க, தர்மா அதன் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். 

விஷால் பைக் ஓட்டும் வேகம் கீர்த்தி அறிந்ததே… “கொழுந்தனாரே என் வீட்டுகாரரை பத்திரமா கூடிட்டு போங்க.” என்றாள். 

“அவரை ஒழுங்கா பிடிச்சுக்கச் சொல்லுங்க.” என விஷால் கிண்டலாக சொல்ல…. “சரிதான் போடா…” என்றான் தர்மா. 

அண்ணனும் தம்பியும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக்கொண்டு செல்வதைப் பார்க்கவே கீர்த்திக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் கணவனின் புன்னகை முகம் எப்போதும் போல வசீகரிக்க… செல்லும் அவனையே அவள் பார்த்துக் கொண்டு நிற்க, திரும்பி மனைவியைப் பார்த்துத் தர்மா கை அசைத்து விட்டுச் சென்றான். 

தர்மா மிகவும் இள வயதிலேயே தொழிலை பார்க்க வேண்டிய நிலை. அதுவும் திடிரென்று ஒரு புதுச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட போது, அவனுக்கு நீந்தி கரை சேர்வதே பெரும் பாடாக இருந்தது. சிறிது சறுக்கினாலும் பத்தாண்டுங்கள் பின்னால் போக வேண்டியதுதான். அதனால் வீட்டினரோடு நேரம் செலவழிப்பது என்பது மிகவும் குறைவு. அதிலும் கேளிக்கைகளில் செலவழிக்க நேரமும் இல்லை. 

பள்ளியில் இருந்த தம்பிகளும் ஆளுக்கொரு கல்லூரியில் சேர்ந்து படிக்க… எதாவது விசேஷம் என்றால் பார்த்துக் கொள்வதுதான். 

தனக்கு வழிகாட்ட ஆள் இல்லாதது போலத் தம்பிகளுக்கும் ஆகி விடக் கூடாது என்றுதான். பார்க்கும் நேரமெல்லாம் இப்படி இருங்கள் அப்படி இருங்கள் என்று எதாவது சொல்லுவான். ஆனால் அது என்னவோ அவனுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பேசுவது போல… இவர்களாக நினைத்துக் கொண்டனர். அது அவர்களுக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. 

அதிலும் விஷால் வயதுக்கே உரிய சேட்டைகள் செய்ய… அண்ணனாகத் தர்மா கண்டிக்க… தன்னை மட்டம் தட்டுவதாக விஷால் நினைத்துக் கொண்டதால்… இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகம் நடக்கும். 

தன் நல்லதுக்குதான் என விஷாலும் நினைக்கவில்லை. அவன்தான் மதிப்பதில்லையே அவனுக்கு ஏன் சொல்ல வேண்டும் எனத் தர்மாவும் விடுவது இல்லை. அதனால் தான் இவர்கள் இருவருக்கும் அதிகம் முட்டிக்கொள்ளும். 

தர்மாவும் விஷாலும் ஒன்றாக ஒரே வண்டியில் கம்பனிக்கு வருவதைப் பார்த்த சூரியாவுக்கு ஆச்சர்யமே. 

ஆர் . எஸ் குழுமம் என்பது பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் டீலர்கள். சிமெண்ட், ஸ்டீல், மோட்டார் உதிரி பாகம் எனப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்களை ரீடைல் கடைகளுக்குச் சப்பளை செய்பவர்கள். 

இதற்காகச் சென்னையின் புறநகர் பகுதியில் அங்கங்கே பொருட்களைத் தேக்கி வைக்கும் கிடங்குகள் உண்டு. சிலது சொந்த இடங்கள் சிலது லீசுக்கு எடுத்தது.
லாபமும் அதிகம் வரும் தொழில். அதே நேரம் வாங்கி வைத்த பொருட்கள் திடிரென்று விலை குறைந்து நஷ்டத்தையும் ஏற்படுத்தும். 

தயாரிப்பு நிறுவங்களிடம் பெருட்கள் விலை குறித்துப் பேசுவது, அலைந்து திரிந்து ஆர்டர் எடுப்பது எல்லாம் தர்மாவின் வேலை. அதே போல ரீடைல் டீலர்களிடம் விலை பேசுவதும் அவன்தான். அதற்குத் தனியாக அலுவலகம் உண்டு. அலுவலகம் மட்டும் நகரத்திற்குள் இருக்கிறது. 

தர்மா வந்ததும் நேரம் கடத்தாமல்… சிமெண்ட் கம்பெனியில் சில பொறுப்புக்களைக் கொடுத்து இனி இதெல்லாம் விஷால் பார்க்க போகிறான் என்றதும், சூர்யாவின் முகம் மாறவே செய்தது.
தர்மா அதைக் கவனித்தும், கவனிக்காதது போல…விஷாலை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பி சென்றான். 

“நீ டென்ஷன் பண்ணிக்காத டா… அதுதான் நான் இருக்கேன் இல்ல பார்த்துகிறேன்.” சூரியா சொல்ல…. கேட்க விஷாலுக்கு மிகுந்த சந்தோஷம். 

“ஹப்பா… நான் எதுவும் செய்ய வேண்டாமா?” எனக் கேட்டவன், மதியம் வரை சூரியாவோடு அரட்டை மட்டும் அடித்து விட்டு கிளம்பி சென்று விட்டான். இரண்டு மூன்று நாட்கள் மட்டும் தர்மா சொன்னதற்காகச் சென்று வந்தவன், பிறகு நண்பர்கள் அழைத்தார்கள் என டூர் சென்று விட்டான். 

வெள்ளிக்கிழமை வகுப்பு முடிந்து ஷாப்பிங் சென்ற கீர்த்தி, வீட்டிற்குத் தேவையானது பார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்தில் நிழலாட நிமிர்ந்தவள், அவள் அம்மாவை எதிர்பாராமல் அங்கே பார்த்ததும், “அம்மா…” என்றால் உணர்ச்சிமயமாக… ஆனால் பதிலுக்கு அவளைப் பார்த்து உணர்ச்சி இல்லாத பார்வை ஒன்றை செலுத்திய நவீனா, மகள் என்ற ஒருத்தி இல்லாதது போலவே அங்கிருந்து கிளம்பி சென்றார். 

முகத்தில் அடி வாங்கியது போலக் கீர்த்தி அவமானத்தில் துடித்துப் போனாள். 

நவீனா முன்னே செல்ல… அவர் வாங்கிய சாமான்கள் இருந்த பைகளைத் தூக்கிக் கொண்டு பணிப்பெண் பின்னால் செல்ல… வாயிலில் தயாராக நின்ற காரில் அவள் அம்மா ஏறிச் செல்லும் வரை கீர்த்தி நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள். 

அப்போது இருந்த மனநிலையில் எதுவும் வாங்க தோன்றாது. வீட்டிற்கும் செல்ல மனமில்லாமல் கணவனின் அலுவலகத்திற்குக் காரை செலுத்தினாள். 

அந்த நேரம் அவளுக்குத் தேவையான ஆறுதல் அவனிடம் மட்டுமே கிடைக்கும். அதற்குத் தான் கணவனைத் தேடி செல்கிறாள்.