அன்று ஞாயிறு என்பதால்… ஆளுக்கொரு திட்டம் இருக்க… சிறிது நேரத்தில் வீடே காலியானது போலத் தோன்றியது. அலுப்பில் நாயகியும் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்.
மகளோடு அறையில் விளையாடிக் கொண்டிருந்த தர்மா சிறிது நேரம் சென்று கீழே இறங்கி வந்த போது, கீர்த்தியும் ஜமுனாவும் சேர்ந்து உணவு மேஜையை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தனர்.
“அம்மா நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.” என்றவன், துணிக் கொண்டு உணவு மேஜையைத் துடைக்க ஆரம்பித்தான்.
“எல்லாம் இன்னைக்கு வெளியே போறாங்க. ஷ்ருதி கூட அவ அம்மா வீட்டுக்குப் போறாளாம். நீங்களும் வெளிய போயிட்டு வாங்களேன்.” என்றார் ஜமுனா.
“இருக்கட்டும் அத்தை. அவர் இன்னிக்குதானே ஊர்ல இருந்து வந்திருக்கார். அடுத்த வாரம் போறோம்.” என்றாள் கீர்த்தி.
“காலையில வடை பூரின்னு சாப்பிட்டு திரும்ப மதியம் வெளிய சாப்பிட முடியாது. நாங்க பெரியவங்க எதாவது எளிதா செஞ்சு சாப்பிட்டுகிறோம். உன் பொண்ணு வேற ஒரு வாரம் நீயில்லாம கீர்த்தியை போட்டு படுத்தி எடுத்திட்டா. நீ அவங்களைக் கூடிட்டு வெளிய போயிட்டு வா.”
“சரிமா..” என்றவன், எல்லோரும் வந்திருந்தால் கலைந்திருந்த சோபா, குஷன் என எல்லாம் சரி செய்து, வீட்டை ஒதுங்க வைத்து விட்டே ஓய்வெடுக்கச் சென்றான்.
மதியம் மூவரும் காரில் உணவகத்திற்குச் சென்றனர். மகளுக்குப் பிடித்தது கேட்டு ஆர்டர் செய்தவன், அதே போல மனைவிக்கும் கேட்டது வாங்கி உண்ண வைத்தான். அதன் பிறகும் அபி கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் கணவன் பதில் சொல்வதைப் பார்க்க, இவருக்கு எங்க இருந்து தான் இவ்வளவு பொறுமையோ என எப்போதும் போலக் கீர்த்தி நினைத்துக் கொண்டாள்.
மதிய உணவு உண்டு. மாலில் இருந்த விளையாட்டுப் பகுதியில் மகளை விளையாட விட்டு, அங்கேயே தேவையான ஷாப்பிங் முடித்துக் கிளம்ப இருள் சூழ்ந்து விட்டது.
இவர்கள் கார் வீட்டிற்க்குள் நுழைய… அதே நேரம் விஷாலும் தனது பைக்கில் வெளியே இருந்து வந்தான்.
மகனால் வந்த செலவிற்கு உமாநாத் அவனை வைத்து வாங்கி இருக்க… அதனால் அதிக நேரம் வெளியில் சுற்றாமல் வீடு வந்திருந்தான். அவனைப் பார்த்ததும், அவனிடம் செல்வதாக அபி ரகளைச் செய்ய…. தர்மா காரை நிறுத்த, விஷாலும் வந்து அவளைத் தூக்கிக்கொண்டு சென்றான்.
எப்போதும் அண்ணனுக்கும் தம்பிக்கும் தான் முட்டிக் கொள்ளும். மற்றபடி அண்ணன் மகளை நன்றாகவே பார்த்துக் கொள்வான். அபியின் பிரியமான சித்தப்பாவும் அவனே… சித்தப்பா என அழைக்க வராது. அதனால் விஷால் என்றே அழைப்பாள்.
பேரை சொல்லி மட்டும் அழைக்கக் கூடாது என்று தர்மா தான் விஷால் பா எனச் சொல்லிக் கொடுக்க…. அதன்படியே அபியும் அழைப்பாள். மகளை இறக்கி விட்டுத் தர்மா காரை அவர்கள் வீட்டின் முன்னே சென்று நிறுத்தினான்.
வாங்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு கணவனும் மனைவியும் உள்ளே செல்ல.. பெரியவர்கள் டிவி பார்த்துக் கொண்டு ஹாலில் தான் இருந்தனர்.
வயதானவர்கள் இருப்பதால் இரவு உணவு எளிமையாக முடித்துக் கொள்வார்கள். கேழ்வரகு, சாமை அல்லது குதிரைவாலியில் செய்த எதாவது சிற்றுண்டி தான்.
இரவு உணவு முடித்தும் அபி வரத்தால் மகளை அழைக்கத் தர்மாவே சென்றான். இவளுக்காகச் சுபா தோசை வார்த்துக் கொடுக்க, நான் ஊடட்டுமா என்ற ரித்விகாவை மறுத்து வட்டு, விஷாலிடம் சென்று அபி தட்டை நீட்ட, அவனும் வாங்கி ஊட்டிவிட்டான். அவன் ஊட்டி முடிக்கவும் தர்மா வரவும் சரியாக இருக்க. தர்மா வெளிய நின்றே குரல் கொடுத்தான்.
தந்தையின் குரல் கேட்டதும் அபி வெளியே ஓட, அவள் பின்னே ரித்விகாவும் விஷாலும் சென்றனர். அதே நேரம் சூரியாவும் ஷ்ருதியும் வீடு திரும்பியவர்கள், இவர்களைப் பார்த்ததும், காரை நிறுத்தி விட்டு வர… மாடி பால்கனியில் இருந்து பார்த்த வசியும் இறங்கி வந்தான்.
ஞாயிறு காலைத் தவிர மெனக்கெட்டு எல்லாம் யாரும் யார் வீட்டுக்கும் செல்வது இல்லை. இப்படி வழியில் பார்த்தால் நின்று பேசுவார்கள். அபி மட்டும் நினைத்த நேரம் நினைத்த வீட்டிற்குச் செல்வாள்.
அன்றும் அதே போல வாய்க்க. அபிதான் அங்கே கதாநாயகி. “விஷால் பா கோபம் வந்தா எப்படிப் பார்ப்பாங்க? வசிப்பா எப்படி நடப்பாங்க? ரித்விகா அத்தை எப்படிச் சிரிப்பாங்க?” எனச் சூரியா கேட்க கேட்க, அவள் ஒவ்வொன்றாகச் செய்து கொண்டே வர… அந்த இடமே சிரிப்பில் அதிர்ந்தது. இவர்களைத் தேடி கீர்த்தியும் அங்கே வந்துவிட்டாள்.
பெண்கள் மூவரும் வெளியே சென்று விட்டு வந்த உடை மாற்றாமல் இருக்க…. தனியாகச் சென்று அதைப் பற்றி அலசி ஆராய்ந்தனர்.
ஸ்ருதி, “நீங்க சிம்பிள்லா இருக்க மாதிரி இருக்கு கீர்த்தி. ஆனா உங்க டிரஸ் ஸ்டிச்சிங்ல இருந்து நீங்க போடுற ஜெவல்ஸ் வரை அப்போ என்ன பாஷனோ கரெக்டா போடுறீங்க.”
“நீங்களும் தான் கிராண்டா போட்டாலும், அடிக்காம மிதமான கலர்ல நல்லா இருக்கு.” எனக் கீர்த்தியும் ஸ்ருதியை பாராட்ட, “நான்தான் கொஞ்சம் காடியா டிரஸ் பண்றேனோ…” என ரித்விகா சந்தேகமாகக் கேட்க,
“காலேஜ் படிக்கிற பொண்ணு நீ. உன் வயசுக்கு என்ன போட்டாலும் அழகுதான்.” என அண்ணிகள் இருவரும் நாத்தனாரை விட்டுக் கொடுக்காமல் பேச… அந்த நேரம் தர்மா, “போகலாமா?” எனக் குரல் கொடுக்க, கீர்த்தி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டாள்.
செல்லும் போது தர்மா விஷாலிடம், “நாளைக்குச் சிமெண்ட் கம்பெனிக்கு வா… வேலை இருக்கு.” எனச் சொல்லிவிட்டு செல்ல.. விஷால் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் வருவான் எனத் தர்மாவுக்குத் தெரியும்.
அவர்கள் சென்றதும், “இன்னைக்கு வீட்ல வச்சு வாங்கினது பத்தாதுன்னு நாளைக்குக் கம்பெனிக்கு வர சொல்லிட்டு போறாரா.” எனக் கேலியாகச் சொல்வது போல வசி விஷாலை ஏற்றிவிட… சூரியாவும் கிண்டலாகச் சிரித்தான்.
தொழிலில் தங்களை விடத் தர்மா திறம்பட நடத்துவதைச் சூரியாவும் சரி, வசீகரனும் சரி ஒத்துக் கொண்டதே இல்லை. இவர்கள் இந்த வேலை என்று மட்டும் இருக்க… மொத்த வேலையும் இழுத்து போட்டுச் செய்வது அவன்தான். ஆனால் தெரிந்தும் தெரியாதது போலவே இருப்பார்கள்.
இவரு கூப்பிட்டதும் போகனுமா?” என விஷாலுக்கு இருந்தாலும், அப்போது எதுவும் சொல்லவில்லை. சிரித்தே சமாளித்தான்.
அங்கே கீர்த்தியும், “எதுக்கு விஷாலை பாக்டரிக்கு வர சொன்னீங்க?” எனக் கேட்க, “அவங்க அப்பாதான் அவனைப் பொறுப்பா வழி நடத்தனும். அவர் எங்கே அதை நினைக்கிறார். ரவி சித்தப்பாவும் ஒன்னும் கண்டுக்க மாட்டார். அவனை இப்படியே விட்டா சரி வராது.அடுத்து நான்தான் இருக்கேன் நான்தான் பார்க்கணும்.” என்றான்.
“அவ இப்பத்தான் படுக்கப் போயிருக்கா. அத்தையை எல்லாக் கதையும் திரும்பச் சொல்ல வச்சுக் கேட்டுதான் தூங்குவா. அத்தை தான் பாவம்.”
“இருக்கட்டும் கீர்த்தி அம்மாவுக்கும் அவங்களைப் பிஸியா வச்சுக்க ஒரு ஆள் வேணும் இல்லையா…. அவங்க கண்டிப்பா அபிக்கு நல்ல கதைகள் தான் சொல்லுவாங்க. நல்லதை திரும்பத் திரும்பக் கேட்டா இன்னும் நல்லது தான.”
“நான் படிக்கும் போது எல்லாம் ஸ்கூல்ல முதல் வகுப்பு மாரல் சயின்ஸ் தான். டீச்சர் நல்ல நீதிக் கதைகள் சொல்வாங்க. இது சரி இது தப்புன்னு மனசுல ஏத்திடுவாங்க. இப்ப அந்தக் கிளாஸ் எல்லாம் இருக்கிறதே இல்லை. அதுதான் இப்ப இருக்க நிறையப் பசங்ககிட்ட மாரல் இல்லாம போச்சோ என்னவோ.”
“என் பொண்ணு படிக்கலைனா கூட நான் கவலைப்பட மாட்டேன். அவ ஒரு நல்ல மனுஷியா இந்தச் சமுதாயத்துல இருந்தால் போதும்.”
“அதெல்லாம் இருப்பா… அவ அவளோட அப்பாவை பார்த்து வளர்கிறா… அவ அப்படியே உங்களை மாதிரி தான் தெரியுமா?” எனக் கீர்த்திப் பெருமையாகச் சொல்ல, தர்மா முகத்திலும், என் மகள் என்ற பெருமிதம் இருந்தது.
மறுநாள் காலை தர்மா குளித்துவிட்டு வர… கீர்த்தி அவன் அணிய வேண்டிய உடையை மேஜையில் வைத்திருந்தாள். இள நீல நிற முழுக்கை சட்டையை எடுத்து அணிந்தவன், சீப்பை எடுத்து தலை வார ஆரம்பித்தான்…. அப்போது அறைக்குள் நுழைந்த மனைவியைக் கண்ணாடி வழியாகவே அறிந்தான்.
அவளும் நீல நிறத்தில் வெள்ளி நிற மெல்லிய பார்டர் வைத்த காட்டன் புடவை அணிந்திருந்தாள்.
“கீர்த்தி, ஏன் மா நீயும் இப்படி ஆகிட்ட… நம்ம ரெண்டு பேரையும் பார்த்து கிண்டல் செய்யப் போறாங்க.” என்றான்.
“எப்பவும் சூரியாவும் ஷ்ருதியும் வெளியப் போகும் போது மேட்சிங்கா தான் டிரஸ் பண்றாங்க. நாம் அப்படியா பண்றோம். என்னைக்கோ ஒருநாள் எனக்கும் ஆசையா இருக்காதா?” கீர்த்திச் சிணுங்க…
“இதுக்குதான் சின்னப் பெண்ணை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. சமயத்துல அதை நிரூபிக்கிற மாதிரி நடந்துக்கிற.” என்ற கணவனை முறைத்தவள், “ஆமாம் உங்களுக்கு அறுபது வயசு, எனக்கு இருபது வயசு பாருங்க. எனக்கு இருபத்திநாலு, உங்களுக்கு முப்பத்திமூன்னு தான். நீங்க உங்க தம்பிகளுக்குப் பெரிய அண்ணன் தான். அதுக்காகப் பெரியவர் இல்லை.”
“ஹம்மா எவ்வளவு பேசுற நீ.” என்றவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.
மனைவியைத் தனக்கு முன் நிற்க வைத்து உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளந்தான்.
நடு வகுடெடுத்து இரண்டு பக்க முன் கூந்தலை மட்டும் சுருட்டி கிளிப் போட்டு, மீதி கூந்தலை அப்படியே விரித்து விட்டிருந்தாள். வில் போலத் திருத்திய புருவம், லேசாக மையிட்ட விழிகள்…. ரோஜா நிறத்தில் பளபளத்தத உதடுகள். அவள் இதழ்களில் தவழ்ந்த குறும்பு புன்னகை எனத் தர்மா எல்லாவற்றையும் ரசிக்க… கீர்த்தியும் ஆர்வத்துடன் கணவனையே பார்த்துக் கொண்டிருக்க…
“மிச்சம் நைட் வந்து பார்த்துகிறேன். டைம் இல்ல…” என அவன் சட்டென்று விலக…
“கொழுப்பு உங்களுக்கு, எனக்கு மட்டும் வேலை இல்லையா என்ன?”