Advertisement

அவள் நான் பயணம் – 7

நெகிழ்ந்து

நீ தந்த முத்தத்தில்

உடைந்து உன் வசமானதடி

என் இதயக் கோட்டை….

வாழ்க்கையின் வழித்தடங்களை வரைமுறைக்குள் என்றுமே வைப்பதில்லையடி காலம், புரட்டிபோட்ட புயலின் கீழ் புதைந்து போன வானமடி நான். அகழியில் பூத்து ஆகாயம் நிறைத்த தாமரையடி நீ….

சுடர்விடும் பூவே நீயும், இதழ் காதல் சொல்வாயா, இமை மூடிப்போவாயா, இளங்காற்றின் முதல் தீயே, எதுவரினும் உயிர் நீயே, நிலம் ஒன்று பூக்க நிழல் தந்த நிலவே, பனியில் வாடவிட்டு எனைப்பறித்துச் செல்லாதே….

போறானே போறானேன்னு பாடுறாங்களா, போகாதே போகாதேன்னு பாடுறாங்களான்னு தெரியலை, மியூசிக்கும் கேக்கல, லிரிக்குசும் புரியல, என்ன சிட்யூவேசன் போயிட்டு இருக்கு, சோகமா, இல்ல காதலா எதுவுமே புரியலை,என்ன மெசேஜ் சொல்ல வராங்க, ஒண்ணுமே புரியலைஎவனோ ஒருத்தன் புலம்புறான், ஸ்மார்ட் போன வச்சிகிட்டு சீரியல் பாக்குறான்னு நெனக்கிறேன்.

யோவ் ஒண்ணுமே புரியலைல்ல அந்த சோப்பு டப்பாவ வச்சிட்டு வந்து இங்க ஒரு கை பிடியா, இவங்கள ஆம்புலன்ஸ்க்கு கொண்டு போகணும்யாரோ கோவமா சத்தம் போடுறாங்க, மனுசங்களும் இருக்காங்க போல

இல்லங்க, நீங்க மக்கள காப்பாத்துறத அப்புடியே வீடியோவா எடுத்து பேஸ்புக்குல போடலாம்னு ட்ரை பண்றேன், லைட் சரியா இல்லாததுனால, ஒரு கிலாரிட்டியே இல்ல, ஒரே நாஸ்ஸியா இருக்கு, இப்படி இருந்தா எப்படி லைக் வரும் , மக்கள் எப்படி இதுக்கு ரியாக்ட் பண்ணுவாங்க, அது புரியாம நீங்க வேற கத்துறீங்க, அட போங்க சார்

அடேய் உங்க அலும்புக்கு அளவே இல்லையா, உன் மண்டையிலயும் இரத்தம் ஒழுகுது, அதைக்கூட கவனிக்காம இந்த நேரத்துல வீடியோ எடுக்குற பாரு, உன் போனெல்லாம் ஏன் டா இன்னும் தொலையாம இருக்குதலையில அடிச்சிகிட்டு அந்த ஆம்புலன்ஸுக்குள்ள என்னை யாரோ தூக்கி வைக்குறாங்க.

ஊசி, மாத்திரை, ஸ்டெதஸ்கோப், இதெல்லாம் எனக்கு ஒரே அலர்ஜி. தலைவலி, காய்ச்சல்ன்னு கூட ஆஸ்பத்திரிக்கு போக மாட்டேன். என்ன தான் வீரதீரமெல்லாம் பேசுனாலும், அங்க நோயில படுத்துகிட்டு கஷ்டப்படுறவங்கள பாத்தாலே, சின்னப்புள்ளையில இருந்தே, உதட்டுக்கு கீழ தாடையில ஒரு துடிப்பு வரும், அப்படியே மனசு பதட்டமாயிடும், அவங்கள பத்தி நெனச்சிகிட்டே தூக்கம் கூட வராது.

நான் எப்பயிருந்து இப்படி ஆனேன்னு எனக்கு தெரியலை, அதனாலயே எங்கம்மா ஆஸ்பத்திரிக்கு போகாத அளவுக்கு என்னைய பாத்துக்குவாங்க, ஆனா இன்னிக்கு ஆம்புலன்ஸ்ல நான். சத்தியமா நெனச்சுபாக்கல,

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கீழ கிடந்தப்போ, ரொம்ப தூக்கம் வரமாதிரி இருந்துச்சு, ஒரு வேளை அது தான் கான்சன்ரேசன் மிஸ் ஆகுதுறதுன்னு சொல்லுவாங்களோ, ஆனா எனக்கு கொஞ்சம் தூங்குனா எல்லாம் சரியாகிடும்னு தோணுச்சு.

கண்ணமூடி படுத்திருந்த எனக்கு தூங்குறதா பெரிய விசயம், ஆனா சில்லுன்னு முகத்தில தண்ணி பட்டுச்சு, ஒரு நொடி ஒண்ணுமே புரியல, எங்க இருந்துச்சோ தெரியல, கிளம்புன மூச்சு சட்டுனு வந்துச்சு, கண்ணு ரெண்டும் மேல போயி அந்த காத்த கரெக்ட்டா ப்ராசஸ் பண்ணி உள்ள அனுப்புறதா வெளிய விடுறதாங்குறது தெரியுறதுக்கு முன்னாடி, நான் மூச்சு விட்டுகிட்டு இருந்தேன்,

இவ்வளவு நேரம் மூச்சு, வலி எதுவுமே தெரியாம கிடந்த எனக்கு இப்ப லைட்டா தொண்டை வறண்டு போகுற மாதிரி இருந்துச்சு, நமக்கு என்ன வேணும்ங்குறத சில நேரங்கள்ல நம்மளவிட அடுத்தவங்களுக்குத் தான் நல்லாத் தெரியும், யாரோ என் தலைய தூக்கி, என் வாய்ல தண்ணி ஊத்துறாங்க, எங்கயோ எப்பவோ யாருக்காச்சும் உதவி செஞ்சிருக்கமான்னு யோசிச்சேன், தெளிவா ஞாபகம் வரலை.

ஆனா இனிமே செய்யுறதுக்காதத்தான் திரும்ப இப்ப எனக்கு நினைவு வந்துருக்குன்னு நெனக்கிறேன். பச்சத்தண்ணி தேவாமிர்தமா தெரியுறது ஒரு சில இக்கட்டான நேரத்துல தான், அப்ப அது தர்ற எனர்ஜி, 24, 34ன்னு விட்டமின் லிஸ்ட் குடுக்குற எனர்ஜி டிரிங்ஸால குடுக்கமுடியாது.

தலைய தூக்கி தண்ணி குடுத்தப்போ என் தலையில இருந்து வந்த இரத்தம் அவங்க கையில பட்டிருக்கணும்னு நெனக்கிறேன், எப்படியும் ஒரு நாப்பது வயசுக்கு மேல தான் இருக்கும் என்னை மடியில போட்டிருக்குற ஆளுக்கு, ஆனா மனுசன் கத்து கத்துன்னு கத்தீட்டாரு, இரத்தம் இரத்தம்னு.

எங்க பஸ்ஸில எல்லாருக்கும், ஓரளவு மீடியமான காயம் தான் ஆயிருக்குனு நெனக்கிறேன். அதான் என்னோட காயம் பெருசா தெரிஞ்சிருக்கு. எங்க போனாலும் போன இடத்துல பாப்புலர் ஆயிடுறியே மாறான்னு, பார்த்திபன் ஸ்டைல்ல தட்டி குடுத்துக்கனும்னு பாக்குறேன் கைய தூக்க முடியல,

ஆனா பறக்குற மாதிரி ஒரு ஃபீலிங்குங்க, ஆனா சட்டுன்னு இறக்கீட்டாங்க, தூக்கி ஸ்ரெச்சர்ல வச்சிருப்பாங்க போல, முகத்தில இப்ப காத்து நல்ல பட்டுச்சு, அவசர அவசரமா எல்லாரும் அங்கயும் இங்கயும் ஓடிகிட்டு இருக்காங்க,

இந்த நேரத்திலயும் ஒருத்தன் போன்ல வீடியோ எடுத்து நல்லா வாங்கி கட்டிகிட்டான். முன்னாடியெல்லாம் ஒரு ஆக்சிடெண்ட்ன்னா கிட்ட போக பயந்தவனெல்லாம் இப்ப போறான் எதுக்கு தெரியுமா, போட்டோ வீடியோ எடுத்து பேஸ்புக்குல போடுறதுக்கு. அங்க லைக் வந்தா அவார்டு குடுக்குறானுகளா, இல்ல அத வச்சி எதாச்சும் வருமானம் பாக்குறானுகளான்னா, எதுவுமே இல்ல.

வெட்டியா அதுல வர்ற போஸ்ட்ட சேர் பண்ணிகிட்டு, சீரியஸானா போஸ்ட்டுக்கு, கெக்க பிக்கன்னு சிரிச்சுகிட்டு, இதுனால லூசா போனவன் பல பேர் இருக்கானுங்க, லாட்டரி சீட்டு மாதிரி, கூடிய சீக்கிரம் தடை பண்ணினாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல.

திரும்பவும் சைரன் சத்தம் கேக்குது, நம்மள கிராஸ் பண்ணி போகும் போதே நெஞ்சு பக்கு பக்குன்னு அடிச்சுக்கும், அய்யோ யாரு உசிருக்காக போராடுறாங்களோன்னு, இப்ப விடாம கேக்குது, பத்தாததுக்கு அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வேற ஸ்பீடா போறார் போல, காத்து பயங்கர ஸ்பீட்டா வந்து முகத்துற அறையுற மாதிரி இருக்கு, உங்களுக்குத் தான் என் ஸ்பீட பத்தி தெரியுமே,

மொத்தத்துல எனக்கு இந்த அட்மாஸ்பியர் பிடிக்கல, பிடிக்காத எக்ஸாம் ஹால்ல பிடிச்ச சினிமாப்பாட்ட நெனச்சுக்குற மாதிரி, இப்பயும் சும்மா ஜில்லுனு அவ தான் என் கண்ணு முன்னாடி வந்து நிக்குறா, இந்த ஆம்புலன்ஸ் எவ்வளவு சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போகுதோ அவ்வளவு சீக்கிரமா என் பேச்சை, நினைவை நிப்பாட்டிடுவானுக,

ஆஸ்பத்திரீன்னாலே பீதி ஆகுது, சோ இருக்குற கொஞ்ச நேரத்த நான் மிஸ் பண்ண விரும்பல, விட்டத புடிக்கிறேன், அட அதாங்க எங்க லவ் ஸ்டோரிய கண்டினியூ பண்றேன், இது லவ் ஸ்டோரியாடா மாறா, ஒரு ப்ரொப்போசல் இல்ல, ரொமாண்டிக் சீன் இல்ல, குறைஞ்ச பட்சமா ஒரு சண்டை கூட போடலை, என்னடா இதுன்னு கேக்குறீங்க, புரியுது, புரியுது

நீஙக் கேக்குறது எல்லாமே சினிமால, இல்ல எதாவது நாவல்ல வேணா அடுத்தடுத்து அடுக்கி வச்ச மாதிரி வந்து எண்டர்டெயின் பண்ணும், ஆனா நான் என்ன சொல்லிகிட்டு இருக்கேன், என்னோட உண்மையான லைப், அண்ட் எபௌட் மை வைப், சோ நார்மலான கதை மாதிரி எதிர்பார்க்கக்கூடாது கே வா.

அன்னிக்கு வேகமா பைய தூக்கிட்டு வெளியில போனா பாருங்க, உண்மையிலயே நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், அந்த ஷாக்குல தான் அவள தேடி, பின்னாடியே ஓடி, கைல கால்ல விழுந்து அவள சமாதான படுத்தி கூட்டிகிட்டு வந்துட்டியாக்கும்னு என் மனசாட்சி என்னையவே திட்டுதுங்க.

போகாம என்னடா மாறா பண்ணுனன்னு கேக்குறீங்களா, அவ வெளியில போனா, நான் அவ ரூம்முக்கு போனேன், போனது தான் போனேன், அவ சேலை கட்டிபிடிச்சுகிட்டு, என் டார்லிங் என்னைய புரிஞ்சுக்காம இப்படி விட்டுட்டு போயிட்டியேன்னு அழுதிருக்கக்கூடாதா, அட்லீஸ்ட் அந்த ஜன்னல் கம்பிய பிடிச்சுகிட்டு, அந்த பக்கம் தெரியுற கடல் அலைய பாத்திருந்தேன்னா கூட அன்னிக்கு அவ்வளவு சண்டை வந்துருக்காதுங்க

போனதும் கப்போர்ட திறந்து அவ டிரெஸ்ஸெல்லாம் இருக்கான்னு பாத்தேன். அவ பேக், ஹாண்ட் பேக், சாரீஸ் எல்லாமே அப்படியே தான் இருந்துச்சு, அப்ப அவ எங்கம்மா பைய தான் தூக்கிட்டு போனாளா, உண்மையிலயே அவ ஊருக்கு போகலையா, அப்படின்னு யோசிச்சுகிட்டு கப்போர்ட்ட திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே வந்தேனா, நங்குன்னு செவுத்துல முட்டிகிட்டேன்.

ச்சை உன்ன யாரு முன்னாடி வந்து நிக்க சொன்னாங்கன்னு செவுத்த பாத்து கேட்டேனா, உடனே அதுக்கு கோவம் வந்துருச்சு, என்ன பாத்தா சுவர் மாதிரி தெரியுதான்னு கேக்குது. சுவரெல்லாம் கூட பேச ஆரம்பிச்சுடுச்சான்னு நல்லா திரும்பி பாத்த எம் பொண்டாட்டி, “செத்தடா மாறா இன்னிக்குன்னு நெனச்சுகிட்டு.

நீயா

ஏன் திரும்பி வருவேன்னு நெனக்கலையோ

இல்ல அப்படி இல்ல

வேற எப்படி, இப்ப போய் டிரெஸ்ஸெல்லாம் செக் பண்ணீங்களே அப்படியா

அது அது வந்து சும்மா

எது சும்மா, பொண்டாட்டி திடுதிப்புன்னு ஊருக்கு போறேன்னு சொல்லாறாளே, என்னன்னு தெரியலையேன்னு மனசு பதறல, தெளிவா யோசிச்சு, எல்லா துணியும் எடுத்துகிட்டு ஒரேடியா போறாளா இல்ல திரும்பி வருவாளான்னு பாக்க ரூமுக்கு வந்துருக்கீங்க

அய்யயோ அப்படி இல்ல சக்தி, உண்மையிலயே எனக்கு பதறுச்சு மா

ஆமா ஆமா நல்லா பதறுச்சு, நானும் தான் பாத்தேனே

பாத்தியா நீ கூட பாத்திருக்க, மாமா பொய் சொல்ல மாட்டேன் மயிலு

அய்யய்யோ திரும்பி வந்துட்டா போலயேன்னு நெனச்சு இப்ப நல்லாவே பதறுச்சு

இப்ப பதறுனது அதுனால இல்லடா, என்னடா செவுரு(சுவர்) பேசுதே எதா பேய் வந்துருச்சோன்னு நெனச்சேன்

அப்ப என்னைய பாத்தா கல்லும் மண்ணும் வச்சு கட்டுன செவுரு மாதிரி இருக்கு, செத்துபோய் ஆவியா அலையுற பேய் மாதிரி இருக்கு, இத்தன நாள்ல ஒரு தடவ கூட பொண்டாட்டி மாதிரி தெரியலை

அய்யய்யோ பாயிண்டா புடிக்கிறாளே, வக்கீலுக்கு படிச்சிருப்பாளோ, கல்யாண கலவரத்துல அவ படிப்ப கூட தெரிஞ்சுக்காம விட்டுட்டியே மாறான்னு நான் எனக்குள்ள பேசுனா அவ இன்னும் டென்ஷனாயிட்டா

பதில் பேசக்கூட முடியல, எதோ ஒரு நாய் கத்துதுன்னு பதில் கூட சொல்லத் தோணலை

அய்யோ பதில் சொல்லுற மாதிரி ஒரு தடவயாவது கேளேன் டி, படுத்துறாளே

இவ்வளவு நாளா ஒண்ணுமே பேசாம கேக்காம, இன்னிக்கு பேசிடுவாரு, நாளைக்கு பேசிடுவாருன்னு பைத்தியம் மாதிரி உக்காந்திருந்திட்டு இன்னிக்கு ஒரு வார்த்தை கேட்டது, படுத்துற மாதிரி இருக்கோ, ரொம்ப சந்தோசம் சாமி,

இவளாவே ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சிகிட்டாளே, நான் இப்ப என்ன பண்ணுவேன், இனிமேலும் வாய மூடிகிட்டு இருந்தா, சரிவராது பொங்கி எழு மாறான்னு ஒரு வாய்ஸ் உள்ள இருந்து. நான் சீரியஸாயிட்டேன். மீன் பேச்சுல

நிறுத்து சக்தி, ஏன் இப்படியெல்லா பேசுற, உன்ன நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு இப்ப கூட உனக்கு புரியலையா

இப்ப கூட புரியலையான்னா, எப்ப புரிஞ்சிருக்கனும், நீங்க எப்ப என்கிட்ட சொன்னீங்க

இதெல்லாம் சொல்லி தான் புரிஞ்சுக்குறதா

சரியா கேக்கலை, இன்னொரு தரம் சொல்லுங்க

நேசிக்குற விசயத்தை சொல்லிதான் புரிஞ்சிக்கனுமா

என்ன சொன்னீங்க, காதுல சரியா விழுகலை

நான் உன்ன நேசிக்குறேன்னு சொன்னாதான் புரிஞ்சுக்குவியா டி

ஆஹான்

என்னடி விளையாடுறியா, என் காதல் உனக்கு விளையாட்டா இருக்கா, நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ என்னமோ காதுல விழுகாத மாதிரி நிக்குற

நீங்க என்ன சொல்றீங்கன்னு உணர்ந்து தான் சொல்லுறீங்களா

உணராம சொல்ற விசயமா டி காதல்

இதெல்லாம் எனக்கு மட்டும் பொருந்துற பதில்களா

எல்லாத்துக்கும், உலகத்துல காதலிக்கிற அத்தணை ஜீவராசிக்கும் பொருந்தும்

அப்ப ஏன் உங்களுக்கு மட்டும் பொருந்தல

எனக்கா, எனக்கு பொருந்தாம என்ன

எங்க நீங்க சொன்ன பதிலெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க

“……………………………………………………………………………………………….”

என்ன அமைதியாகீட்டீங்க

என்ன என்ன என் பதில்

சொல்லி புரியுற விசயமல்ல நேசம்

ஆமா அதுக்கென்ன

சொல்லி புரியவைக்க தேவையில்லைன்னா, எதை எதிர்பார்த்து இந்த காத்திருப்பு

காத்திருப்பா, யாரு காத்திருக்காங்க, எதுக்கு காத்திருக்கப் போறாங்க, அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் எதுக்காகவும் யாருக்காகவும் காத்திருக்கலை

நீங்க காத்திருக்கலையா, அப்ப உங்க மனசு காத்திருந்துச்சோ

ஏய் நீ இப்ப என்ன சொல்ல வர்ற

இதுக்கு மேல என்னால சொல்லி புரியவைக்க முடியாது சாமி

சொல்லாமயே புரியுற அளவுக்கு நீ ஒண்ணுமே செய்யலை, ”

அந்த உணர்வுகளை சொல்லிச் சொல்லி தான் புரியவைக்கணும்னு அவசியமில்லை, கொஞ்சம் முன்னாடி நீங்க தானே சொன்னீங்க

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்

தூங்குறவனை எழுப்பலாம் தூங்குறமாதிரி நடிக்கிறவனையெல்லாம் எழுப்ப முடியாது, நியாயப்படி கோவப்பட வேண்டியது சண்டை போட வேண்டியது எல்லாமே நான் தான், நான் மட்டும் தான்.”

அதான் போடுறியே

நல்லா யோசிச்சு பாருங்க, நடந்தது எல்லாத்தையும், எப்பயுமே எதுவுமே நடக்காதது மாதிரி இருக்காதீங்க

அது முடியாமத் தானே இப்படி தவிக்குறேன்மனசுக்குள்ள தான் சொல்லிகிட்டேன், அவகிட்ட வெளிப்படையா என்னால சொல்ல முடியலை.

என்னோட அமைதி அவளை இன்னும் கோவமாக்குனுச்சு

கல்யாணத்துக்கு முயற்சி எடுத்ததுல இருந்து, உங்களுக்கு பழைய கதைய ஞாபகத்துக்கு கொண்டு வந்து, கல்யாணம் பண்ணி ஒரு மாசம் கழிச்சு உங்க கிட்ட சண்டை போடுற வரைக்கும் எல்லாத்தையும் நானே செய்யுறேன், ஆனா நீங்க மனசுல வந்த காதலை கூட சொல்ல மனசில்லாம, காட்டிக்க மனசில்லாம, எப்ப பார்த்தாலும் எதையோ பறி கொடுத்த மாதிரி இருங்க

என்னது நீ முயற்சி எடுத்தியா, அதுவும் கல்யாணத்துக்கு

ஏன் நான் எடுத்திருக்க மாட்டேனா, அது மட்டுமா பண்ணேன், நீங்களா வருவீங்க பேசுவீங்க பழைய கதையெல்லாம் நெனச்சு நெனச்சு பேசி சிரிப்போம்னு நான் கனவு கண்டுகிட்டு இருந்தேன், நிச்சயம் முடிஞ்சு கூட அய்யா வாய தொறக்கல

நீ என்ன சொல்ற

ம்ம்ம் சொல்றாங்க சொரைக்காய்க்கு உப்பில்லைன்னு

டைலாக்க மாத்துங்க டீஇப்படி மட்டும் சொல்லீருந்தேன், உண்மையிலயே கொன்னிருப்பா

அவ என்ன சொல்றான்னு அவ சத்தம் போட்டிட்டு நகர்ந்து போனதுக்கு அப்புறம் கூட எனக்கு புரியலை, இவ எப்படி  கல்யாணம், அம்மா வேற எதோ கதைல சொன்னாங்க, எத நம்புறது.

சின்ன புள்ளைல நடந்ததா சொன்ன கதையே எனக்கு ஞாபகம் வரல, இதுல இவ வேற எதோ புதுக்கதை சொல்லுறாஎன்ன சுத்தி என்ன தான் நடக்குது….

அன்னிக்கு கேட்ட கேள்விக்கு விடை கிடைச்சுதா தெரியல, ஆனா அதே கேள்வி இப்ப திரும்ப முளைச்சிருக்கு

என்னை சுத்தி என்ன நடக்குது, அவசர அவசரமா ஒரு நர்ஸ் ஆம்புலன்ஸல சிரின்ஞ்ச் மருந்த ஏத்திகிட்டு இருந்தாங்க,…

என் கை காலெல்லாம் ஒரே பாரம், நாலு பேர் அழுத்தி பிடிச்சிருக்காங்க, விடுங்கடா

என் குரல் அவங்களுக்கு கேக்கவே இல்ல, அப்ப தான் தெரியுது என் உடம்பு தூக்கி தூக்கி போடுதுஎன் தலையில் இருந்து இரத்தம் நிக்காம வந்துகிட்டே இருக்கு, என் சட்டையெல்லாம் இரத்தம்….

சிஸ்டர் என்னமாச்சும் பண்ணுங்க, இப்படி துடிக்குதே அந்தப்புள்ளை, யாரு பெத்த புள்ளையோ,

டிரைவர் சீக்கிரமா போங்க

அய்யோ என்னாச்சு ஏன் நிப்பாட்டுறீங்க,

முன்னாடி போன வண்டியெல்லாமே நிக்குது சிஸ்டர் என்னன்னு தெரியலை

அய்யோ சீக்கிரமா போகனுமே,

ஆஸ்பிட்டலுக்கு போன் பண்ணி .சி.யூ ரெடி பண்ண சொல்லுறேன்

டிராபிக் கிளியர் ஆகணுமே சிஸ்டர்….

அட போங்கப்பா எனக்கு தூக்கமா வருது….  

Advertisement