Advertisement

அவள் நான் பயணம் – 6

உன்னால் ஈர்க்கப்பட்ட

என் மனத்தில்

நிற்கவில்லையடி

காதலெனும் அலைகள்

        நீ நிலா நான் கடல்

ஈர்ப்பில் வலிமையில்லையென்றால் அண்டப்பெருவெளியும் அர்த்தமற்றதடி, அகிலத்தின் அத்துணைக்கும் ஆதியான காதலை அடிமனதில் பூட்டிவிட்டு, மணலில் வீழ்ந்த மழைத்துளியாய் மானே நீயும் விலகாதே,

மார்கழியில் அனல்வெயிலாய் இதம் கொடுக்க வருகின்றேன். மாந்தோப்பின் தென்றலென மார்போடு சேர்வாயா, அலைகளின் அடியில் தடம் பதித்து செல்பவளே, ஆழ்கடல் அமைதி அன்பில் கொடுமையடி….

கொடுமையா மகாகொடுமை மகாகொடுமை, ஏன்பா கண்டக்டர் எப்ப வண்டி எடுப்பீங்க, பஸ் இருக்க நிலைமைய பாத்த வேற பஸ் ஏதும் வர சொல்லுவீங்களா, விடிஞ்சதும் எனக்கு ஒரு முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு, இப்பவே இவ்வளவு நேரமாயிடுச்சு, எப்ப கொண்டு போய் திருச்சியில விடுவீங்க

யோவ் பஸ் ஆக்சிடெண்ட் ஆகி நெறைய பேருக்கு அடிபட்டிருக்கு, நல்லவேளை டிரைவர் சாமார்த்தியத்தால நீயும் நானும் நல்ல படியா நின்னு பேசிகிட்டு இருக்கோம், உயிருக்கு ஆபத்தில்லாம எல்லாரையும் காப்பாத்தனுமேன்னு போராடிகிட்டு இருக்கோம்,

நீ என்னயா கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம பேசிகிட்டு இருக்க, அப்படி அவசரமா போகனும்னா, கார் எடுத்துகிட்டு போகவேண்டியது தான, வந்து சேர்றானுக பாரு, போயா அங்கிட்டு…” கண்டக்டர் அந்த ஆள்கிட்ட கோவமா பேசுறது என் காதுல விழுகுது.

என்ன சுத்தி ஒரே சத்தமா இருக்கு, என்னால கண்ண முழிச்சு எதையும் பாக்க முடியல, தூரத்தில ஆம்புலன்ஸ் வர சத்தம் கேக்குது, இதுவரைக்கும் சீட்டில உக்காந்து பேசிட்டு இருந்தேன்,

விழுப்புரத்துல இருந்து பஸ் கிளம்பும் போது, காத்து சரியா வராத மாதிரி இருக்கேன்னு டிரைவர்கிட்ட போய் பஸ் ஏறுற இடத்துல உக்காந்திருந்தேன். கொஞ்ச நேரந்தான், கண்ண மூடித் திறக்குறதுக்குள்ள எல்லாம் நடந்திடுச்சு.

நீங்க நினைக்கிற மாதிரி டிரைவர்கிட்ட போய் உக்காந்து கதை பேசியெல்லாம் இந்த ஆக்சிடெண்ட் நடக்கலைங்க, விழுப்புரத்துல காபி குடிச்சிட்டு தான் பஸ் எடுத்தார், சோ அவர் தூங்கி இந்த ஆக்சிடெண்ட் ஆகியிருக்குமோன்னு நீங்க யோசிக்க முடியாது. என்ன தான் நடந்துச்சுன்னு கேக்குறீங்களா

நம்ம நேரா நிதானமா போனாலும், நமக்கு எதிர்ல வரவனும் ஸ்டெடியா தான் வரனும்னு எந்த அவசியமும் இல்லையே, அவ்வளவு பெரிய ரோட்டையும் பட்டா போட்டு வாங்குனவன் மாதிரி அளந்துகிட்டு வந்தான். உள்ள ஒருத்தன் தான் இருந்தான். ஆனா அவனுக்குள்ள ரெண்டு பேரா இருந்தானுங்க.

அதாங்க உள்ள இன்னொருத்தன் போயிருந்தான். பேயில்ல ஆனா ரொம்ப கெட்ட பையன், இப்ப புரிஞ்சிருக்குமே, அவனே தான். குடி குடியைக் கெடுக்கும்னு சொல்லுவாங்க, அடுத்தவன் குடியையும் சேர்த்துக் கெடுக்கும். இப்ப நான் சொல்லுறேன். என் பொழப்பையும் சேர்த்துக் கெடுத்துட்டானே பாவி.

அவன் வந்த கோலத்துக்கு டிரைவர் பஸ்ஸ நிப்பாட்டி வச்சிருந்தாலும் வந்து மோதியிருப்பான். ஆனா இந்த டிரைவர் அவன் மேல மோதக் கூடாதுன்னு வளைச்சு ஒரு மரத்துல முட்டி நிறுத்தீட்டாரு.

பஸ்ஸில கண்ணாடி நொருங்கி, உள்ள இருந்தவங்க முன்னாடி இருந்த கம்பியில இடிச்சு நிறைய பேர் சீட்டில இருந்து விழுந்து காயம், பகல் நேரமாயிருந்தாலும் எல்லாரும் கொஞ்சம் அலார்ட்டா இருந்திருப்பாங்க, நடுராத்திரி, எல்லாரும் தூங்கீட்டு இருந்தாங்க, என்ன நடந்ததுன்னு புரிஞ்சுக்கவே நேரம் எடுத்துச்சு, புரிஞ்சப்போ எல்லாம் கைய மீறி போயிருந்துச்சு.

பஸ்ஸில இருந்தவங்க யாருக்கும் உயிருக்கு ஆபத்தில்லைன்னு தா நெனச்சோம், ஆம்புலன்ஸ் வந்து எல்லாரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகுறதுக்குள்ள, கொஞ்சம் பேர் சீரியஸ் ஆயிட்டாங்க, கொஞ்சம் பேருக்கு கை கால் உடைஞ்சிருந்தது.

அந்த ரோட்டில போயிட்டு இருந்த மத்த வண்டியெல்லாம் நின்னு அடிபட்டவங்களுக்கு அவங்களால முடிஞ்ச உதவி பண்ணிகிட்டு இருந்தாங்க, இதுல ஒரு முக்கியமான விசயம் என்னன்னா டிரைவர் மயக்கம் ஆயிட்டாரு, லேசனா காயத்தோட தப்பிச்ச கண்டக்டரும், மத்தவங்களும் சேர்ந்து அவங்களால முடிஞ்ச அளவுக்கு வர்ற வண்டிய நிப்பாட்டி அடிபட்டவங்கள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிகிட்டு இருந்தாங்க,

எனக்கு அங்க நடக்குற எல்லாமே கேட்டுகிட்டு தான் இருந்துச்சு, ஆனா என்னால எழுந்திரிக்க முடியல கண்ண கூட திறக்க முடியல, கழுத்துகிட்ட கசகசன்னு இருந்துச்சு, பயணிங்க எல்லாரும் பஸ்ஸுக்குள்ளயே இருந்ததுனால வெளிய யாருமே யாரையும் தேடல.

நான் பஸ்ஸுக்குள்ள இல்ல, டிரைவர் கிட்ட போய் உட்கார போனவன், படிக்கட்டுல உட்காந்திருந்த விசயம் யாருக்குமே தெரியாதே, இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே கிடக்கப்போறேன்னு தெரியலை. எனக்கு நினைவு போறதுகுள்ள யாராச்சும் என்னைய பாப்பாங்களா, பெரிய கேள்விக்குறி தான்.

உடம்ப மறந்து மனசு மட்டும் வேலை செய்யுறதும் நல்லா தான் இருக்குஇந்த நிமிஷம் என் மனசு முழுக்க அவ மட்டும் தான் இருக்கா, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு என்ன நடக்கும்னு எனக்கே தெரியலை, என் கடைசி நெனப்புல கூட அவ மட்டும் தான் இருக்கனும்னு இப்ப நெனக்கிறேன்.

ஆனா அவ என் கூட இருந்த அந்த கொஞ்ச நாளும் இப்படி நெனக்காம விட்டுட்டேன். எது எப்படி இருந்தாலும், நான் அவள விரும்புறேன், காதலிக்கிறேன் இது உண்மையா இருக்கும் போது, அத முழுசா அனுபவிக்காம அவ என்ன நினைக்கிறா, பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டாளான்னு ஆராய்ச்சி பண்ணி அந்த அழகான நாட்களை தொலைச்சிட்டேன்.

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தைக் குடுத்த அந்த ஆளு, அவன் தாங்க, ரெட்டை ஆளா கார் ஓட்டிகிட்டு வந்தானே, அவனுக்கு என்ன ஆச்சுன்னு பாக்க இப்ப தான் போயிருக்காங்க, கொஞ்ச நேரத்துல நானும் எங்க இருக்கேன்னு யாராச்சும் தேடி வருவாங்க, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு

என் பொண்டாட்டிய பாக்கணும்னு கிளம்புன நான் அவள பாக்காம எங்கயும் போகமாட்டேன். இந்த கொஞ்ச நேர காத்திருப்புல முழுக்க அவதான் என்னைய ஆக்கிரமிச்சுகிட்டா, அன்னைக்கு நான் என் தோளோடு சேர்த்து அணைச்சு, மயிலுன்னு கூப்பிட்டப்போ, அவ கண்ணுல ஏதோ தெரிஞ்சுதுங்க

அத மிஸ் பண்ணாம அப்பிடியே பிடிச்சு போயிருந்தேன்னு வைங்க, இந்நேரம் அவ மடியில படுத்து கொஞ்சிகிட்டு இருந்திருப்பேன். விதி யார விட்டுச்சு, சடங்கு சம்பிரதாயம்னு ஒரு வழி பண்ணீட்டாங்க அன்னைக்கு, எப்படா விடுவாங்கன்னு ஆயிடுச்சு, இதுல அவ ப்ரெண்ட்ஸ் இருக்காங்க பாருங்க, இப்ப கூட அவள தனியா விடாம சுத்திகிட்டே இருக்குதுங்க.

நான் இந்தளவுக்கெல்லாம் ஒரு கூட்டத்தையே க்ளோஸா வச்சுக்கிற ஆளெல்லாம் இல்லைங்க, ரெண்டே ரெண்டு கண்ணே கண்ணுன்னு ரெண்டு ப்ரெண்ட்ஸ், அவனுகளும் ஒரு நாள் தான் லீவ் போட்டு வந்தானுங்க, கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பீட்டானுங்க.

என்ன தான் தனியா வளர்ந்தாலும், அவள மாதிரி யாராச்சும் கூட இருக்கனும்னு நான் நெனச்சதில்லை. அத விரும்புனதும் இல்லை, என் குணம் தெரிஞ்சு தான் எங்கம்மா அப்பிடியே நாசூக்கா எல்லாத்தையும் அடுத்த நாள் பேக் அப் பண்ணீட்டாங்க,

சின்னஞ்சிறுசுங்க தனியா இருக்கட்டும், நாம கிளம்புவோம், லீவ் இல்லைன்னு ஹனிமூனும் போகலை, நாம இங்க உக்காந்திருந்த சரிவராதுன்னு பேசி, அவங்க வீட்டு ஆளுங்களையும் ஒத்துக்க வச்சிட்டாங்க,

அடுத்த நாள் கிளம்பும் போது, போடிநாயக்கனூர்ல பாத்த அதே சீன், காஸ்ட்யூம் மட்டும் சேஞ்ன்ச் பண்ணீட்டு திரும்ப பர்பாமென்ஸ ஆரம்பிச்சுட்டாங்க, ஒத்துக்குறேன்ங்க, கஷ்டம் தான், இப்ப நானும் எங்க அம்மா அப்பாவ விட்டுட்டு தானே இருக்கேன். நான் இப்படியா அழுவுறேன். சும்மா எம் பொண்டாட்டிய அழுக வச்சிகிட்டு….

வடிவேல் சொல்ற மாதிரி சின்ன புள்ள தனமாவுள்ள இருக்குன்னு நெனச்சதும், அந்த சீரியஸான சீனுக்கு நடுவுல சிரிப்பு வந்துடுச்சு, நான் சிரிக்கிறது பாத்து மொதல்ல மொறைச்ச மீசை, என்ன நெனச்சாரொ சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு,

அப்படியே ஒவ்வொருத்தரா சிரிச்சு, சின்னக்கவுண்டர் படத்துல எதுக்குன்னே தெரியாம எல்லாரும் சிரிப்பாங்களே ஒரு சீன், அப்பிடியே லைவ்வா எங்க வீட்டில ஓடுச்சு.

காரணம் எதுவா வேணாலும் இருந்துட்டு போகட்டும்ங்க, எல்லாரும் சிரிச்சு சந்தோசமா இருந்தா அது ஒரு தனி சுகம் தானே. எல்லாரும் கிளம்புன அப்புறம் தான் அவ ப்ரெண்ட்ஸ் கிளம்புனாங்க, எல்லாருமே சென்னையில இருக்கவங்க போல, கிளம்புறதுக்கு முன்னாடி தான் என்கிட்ட பேசனும்னு தோணியிருக்கு,…

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு அக்காவா ஆனாங்களே சவீதா அக்கா, அவங்க தான் எல்லாரையும் பத்தி சொல்லி இன்ட்ரோ குடுத்தாங்க, கிட்டதட்ட எல்லாருக்கும் கல்யாணமாகி பிள்ளைங்க இருந்தாங்க, அதுல சிலரோட பசங்க காலேஜ்க்கு போறாங்க, இன்னும் சில பொண்ணுங்களுக்கு கல்யாணமாகலை

எனக்கு பெரிய சந்தேகம் எப்படி எல்லாரும் ப்ரெண்ட் ஆனீங்கன்னு, ஸ்கூல் ஒண்ணா படிக்கலை, காலேஜ்ம் ஒண்ணா போகலை, பக்கத்து பக்கத்து வீடும் இல்லை, ஆளுக்கொரு ஊர்ல இருக்காங்க, ஆனா எல்லாரோட மைண்ட் செட்டும் ஒரே மாதிரி இருந்துச்சு,

என்ன பொண்ணுங்கப்பா இவங்கன்னு கொஞ்சம் பிரமிப்பாவே இருந்துச்சு, எல்லாரும் அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும்னு அழைப்பு வச்சிட்டு கிளம்புனாங்க,

அதுல சவீதா அக்கா மட்டும் ரொம்ப உரிமையாவே சொல்லீட்டு, என் போன் நம்பர் வாங்கீட்டு, தம்பி இனிமே உனக்கு அக்கா இருக்கேன், இவ எதாச்சும் ஓவரா பண்ணுனா சொல்லு நாத்தனார்னா யாருன்னு இவளுக்கு காட்டிடுவோம் அப்படின்னு எனக்கு சப்போர்ட்டா பேசுனாங்க.

கல்யாணமாகாத பிள்ளைங்க முன்னாடியே கிளம்பிருச்சுங்க போல, நம்பர் வாங்காம விட்டுட்டோமேன்னு ஃபீல் பண்ணேன். ஒரு ப்ரெண்ட்ஷிப்ல தானுங்க, அவள மாதிரியே நீங்களும் மொறைக்காதீங்க, இவங்க சந்தோஷமா பேசி சிரிச்சத பாத்ததும், நமக்கும் இந்த மாதிரி ப்ரெண்ட்ஸ் இருந்தா நல்லாருக்குமேன்னு தோணுச்சு. சரி எங்க போயிடப்போறாங்க பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.

வீட்டில எல்லாமே செட் பண்ணீட்டாங்க, சோ பெரிசா ஒண்ணும் வேலையில்லை, எங்களோட ரெகுலர் வாழ்க்கை ஸ்டார்ட் ஆனுச்சு, பேசாமளும் இல்லை ரொம்ப பேசிக்கவும் இல்லை. ஒரு சின்ன தயக்கம் இருக்கும்ல அப்படித்தான் எங்களுக்கும் இருந்துச்சு.

அதெல்லாம் கொஞ்சம் நேரம் தான், அப்புறம் என்னால பதில் சொல்ல முடியல, என்ன சமைக்கட்டும், என்ன பிடிக்கும், எப்ப போவீங்க, எங்க ஆபீஸ், எவ்வளவு நேரமாகும் வர, எந்த நடிகர் பிடிக்கும், யாரோட மியூசிக் பிடிக்கும், ரீசெண்ட்டா எந்த படம் பாத்தீங்க, எந்த எழுத்தாளர் பிடிக்கும்….அப்படீன்னு நிப்பாட்டாம கேள்வி கேட்டுகிட்டே இருந்தா அவ.

ரொம்ப அமைதியான பொண்ணுன்னு தப்பா நெனச்சிட்டோமேன்னு ஃபீல் பண்ணுற அளவுக்கு கேள்வி கேட்டா, அப்பயும் பொறுமைய பிடிச்சு வச்சு, அவளுக்கு பதில் சொல்லணும்னு நெனச்சேனே தவிர, அவ கிட்ட திருப்பி ஒரு கேள்வி கூட கேக்கணும்னு தோணவே இல்லை.

நான் எதிர்பார்த்த கேள்வி, கேள்விக்கான பதில் எதுவும் அவகிட்ட இருந்து வராதப்போ, இதெல்லாம் அபத்தமான கேள்வியா தான் தெரிஞ்சுது எனக்கு. இதெல்லாம் விட முக்கியமானத பத்தி நாம பேச வேண்டியிருக்குன்னு அவ கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

ஆனா அவள பொருத்தவரைக்கும் அப்படியான எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை, அவ கண்ணுல ஒரு நிறைவு தெரிஞ்சுது, எப்படி சொல்றது, இது இவ்வளவு தான் அப்படீங்கிற மனநிலை தான் அவ இருந்தா,

கணவனுக்கும் மனைவிக்கும் நடுவுல பேச எப்ப மூன்றாவது காரணி  வரும் தெரியுமா, ஒண்ணு அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வருசம் ஒண்ணா வாழ்ந்த ஆதர்ஷன தம்பதிகளாயிருக்கனும், இல்லைன்னா, இப்ப தான் உறவால இணைஞ்சு இதயத்தால இணையாதவங்களா இருக்கனும், நாங்க ரெண்டாவது ரகம், அதுலயும் அவ தான் என்கிட்ட எதாவது பேசிகிட்டே இருந்தா.

எனக்கு அவளோட பேச்சு,எங்களுக்கு நடுவுல இருந்த மௌனத்த விட அன்னியமா தெரிஞ்சுது, ஏன் தெரியுமா, அவளோட கண்ணுல எப்பாவாசும் என் மேல இருக்க காதல் தெரிஞ்சிடாதான்னு தேடிகிட்டே இருந்தேன், என் கண்ணுல தெரியுற காதல அவ எப்ப உணருவான்னு காத்துகிட்டு இருந்தேன். அவ என்னடான்னா, என் கண்ணையே பாக்காம பேசிகிட்டே இருந்தா.

அவளுக்கு என்கிட்ட எந்த தேடலுமே இல்லாம இருந்துச்சு, என் மனசு அவகிட்ட எதையோ தேடிகிட்டே இருந்துச்சு, என்னன்னு சொல்லி பேசி புரிஞ்சிக்க பக்குவம் வராம இல்லை, ஆனா தயக்கம். நானா போய் அவகிட்ட காதலை சொன்னா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா, அவளுக்கும் இதே மாதிரியான காதல் இருக்கா,…

இல்லை நம்ம ஊரு ஓல்ட் லேடீஸ் மாதிரி, மஞ்சள் கயிறு செஞ்ச மேஜிக் என்கிட்ட பழகுறாளா, உண்மையிலயே ஒரு பெரிய சந்தேகம் தாங்க, இதோட அவகிட்ட எப்படி இயல்பா பழகுறது, அவளா பேசும் போது எதோ புதுசா குடி போன வீட்டுக்கு பக்கத்தில குடியிருக்கவங்க, நம்ம யாரு என்னன்னு தெரிஞ்சுக்குற ஆர்வத்துல கேப்பாங்க பாருங்க, அப்படியான ஆர்வம் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சிது.

என் பார்வையில பிழையா, அவ முகத்துல பொய்யா, எதுவுமே, தெரியல, ஆனா நேரம் மட்டும் நகர்ந்துகிட்டே இருந்துச்சு, கடிகாரம் நிக்காம சுத்ததுனதுல, காலண்டர்ல தாளும் கொறைஞ்சிகிட்டே போணுச்சு, நான் என்னையே எங்கயோ தொலைச்சிட்ட மாதிரி இருந்துச்சு, என் பேச்சு, சிரிப்பு, கலகலப்பு, எல்லாம் எங்கயோ போய் ஒளிஞ்சுகிச்சு.

அவளும் எதையாவது தொலைச்சிருக்காளான்னு அவ கண்ணுல தேடுவேன். அப்படி எதுவுமே தெரியாது, எப்ப நான் வீட்டுக்கு வரும்போதும், அவ போன்ல எதாவது செஞ்சிகிட்டு இருப்பா, இல்லைன்னா எதாவது ஒரு புக்குல மூழ்கி போயிருப்பா, என்னைய பாத்ததும் காபி போட எழுந்து போகும் போது கூட, அந்த போனும் புக்கும் கூடவே ட்ராவல் பண்ணும் கிச்சனுக்கு,

இதுபத்தாதுன்னு எப்பயுமே எதாவது ஒரு பாட்டு பாடிகிட்டே இருக்கும் ப்ளேயர்ல, புக் படிச்சாலும் சமைச்சலும், குளிச்சாக்கூட அது பாடிகிட்டே தான் இருக்கும், எதோ பெரிய மனசு பண்ணி, தூங்குறப்ப போடுறது இல்லை.

எப்பயுமே ஒரு ஸ்மைலோடவே இருப்பா அவ, பக்தி அதிகம், கோயிலுக்கு தவறாம போயிடுவா, அவ கேட்ட கேள்வியில பக்கத்துல எங்க கோயில் இருக்குங்குறதும் அடக்கம், பாத்து பாத்து செய்வா சமையல், அவ்வளவு ருசியா சமைப்பா, அவ துணியெல்லாம் மடிச்சு வச்சிருக்குறத பாத்தா எங்க பாட்டி ஒர் டைலாக் சொல்லும் எங்க அப்பாகிட்ட,

இப்ப இல்லைங்க நான் சின்ன பையனா இருந்தப்போ, “உங்கப்பன் வெளுக்க துணி கட்டுனதே , என்ன கட்டுனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிக்கஅது தான் ஞாபகம் வரும். பழைய கிழவி சொன்ன டைலாக்கெல்லாம் ஞாபகமா சொல்லுற, அந்த புள்ள சக்திய பாத்தது பழகுனது மட்டும் நெனவுக்கு வரலியோன்னு நீங்க கேக்குறது புரியுது,

என்ன பண்ண சொல்றீங்க, எனக்கு அப்படி ஒரு விசயமே மனசில பதியலையே, பழச விட்டு புதுசா லவ் பண்ணலாம்னா இவ ஒத்துவர மாட்டேங்கிறா, என்ன பண்ணுவேன் ஈஸ்வரான்னு புலம்ப மட்டும் தான் முடியுது.

அவ நாள் முழுக்க என்ன பண்ணுறா, யார்கிட்ட பேசுறா, எதையுமே நான் கேட்டதில்லை, காலையில நான் கிளம்புறப்போ, இருக்க மாதிரி இல்லாம, வீடே மாறியிருக்கும், நான் கலைச்சு போட்டுட்டு போறதெல்லாம், நைட் நான் வரும் போது அதோட இடத்துல உக்காந்திருக்கும்.

என்ன பத்தி மட்டுமே யோசிகிட்டு இருந்திருக்கேன்னு, அவ கூட இருந்த வரைக்கும் எனக்கும் புரியலை, அவள எங்கம்மா ஊருக்கு கூட்டிகிட்டு போகணும்னு சொன்னப்போ கூட தோணலை. ஏன் எதுக்கு எதையுமே கேக்காம, எப்ப அனுப்பனும்னு மட்டும் கேட்டேன்.

எங்கம்மாவுக்கு வந்துச்சே கோவம், என்னடா கேள்வி இது, அவளோட நீயும் தான் வரணும், மரியாதையா அவளையும் கூட்டிகிட்டு, வந்து சேரு.

ம்மா எனக்கு வேலையிருக்கு, லீவ்வெல்லாம் போட முடியாது, ஏற்கனவே நெறைய போட்டாச்சு

ஓவரா பிகு பண்ணீக்காம என் மருமகள கூட்டிகிட்டு வர்ற, அத விட வேலை ஒண்ணும் முக்கியமில்லை என்ன சொல்றது புரியுதா

அதெல்லாம் நல்ல புரியுது, நீங்க என்ன ஹிந்தியிலயா சொல்றீங்க, தமிழ் தானே, புரியாம என்ன, ஆனா  எனக்கு வேலை இருக்கு, சோ என்னால கூட்டிகிட்டு வர முடியாது

டேய் சும்மா ஒண்ணும் இல்லை, தாலி பிரிச்சு கோக்கணும் டா, சொன்னா கேளு, எம் மருமகளோட வரனும்

இல்லைம்மா, என்னால முடியாது, நீங்க வேணும்னா வந்து கூட்டிகிட்டு போங்கன்னு சொல்லீட்டேன்

எங்கம்மா அடிச்சு பிடிச்சு, அடுத்த நாளே வந்து நின்னாங்க, என்னம்மா எதுக்கு இப்படி அவசரமா வந்தீங்கன்னா

நீ சொன்னத வச்சு அவளுக்கு உனக்கும் எதோ பிரச்சனையாயிருக்குமோன்னு வந்தேன் டா

ஏன் மா எப்ப பாத்தாலும் நான் ஒண்ணு சொன்னா நீங்க ஒண்ணு புரிஞ்சுக்குறீங்க

ம்ம்ம்ம் வேண்டுதல் டா, வேணுமின்னே மாத்தி புரிஞ்சுகிட்டு வேப்ப மரத்த சுத்தனும்னு, திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டுதல் வச்சிருக்கேன்

அடடே இப்படியெல்லாம் கூட வைக்கிறீங்களா, நல்லது நல்லது சுத்துங்க

உனக்கு ரொம்ப மிதப்பு ஏறிக்கிடக்கு, படாத பாடுபட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா, நீ ஏன் பேச மாட்ட

நான் ஒண்ணும் அப்படி அவசியமா பண்ணியே ஆகணும் அதுவும் இந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நிக்கலையே

சத்தமா பேசாதடா அவ காதுல விழுந்திட போகுது, என்ன பேச்சு பேசுற, நீ தான அவள பேசி முடிங்கன்னு சொன்ன

ஆனா மா நீங்க அதுக்கப்புறம் ஒரு ப்ளாஸ் பேக் சொன்னீங்களே அதைத் தான் என்னால நம்ப முடியலை

நம்ப முடியலையா அதை இப்ப சொல்ற

எப்பவோ சொல்றேன், அதா சொல்லீட்டேன்ல விடுங்க

டேய் டேய் இப்படி பட்டும் படாம பேசாதடா இது உன் வாழ்க்கை, அவ உன் பொண்டாட்டி

ஆஹான் அப்படியா

அய்யோ இந்த பையனுக்கு என்ன ஆச்சுன்னு புரியலையே எல்லாம் கை கூடுற நேரத்துல கவுத்திடுவான் போல இருக்கேன்னு எங்கம்மா புலம்பும் போது கரெக்ட்டா அவ கையில அவ பேக்கோட நின்னுகிட்டு இருந்தா

இப்பயும் அவ முகத்தில எந்த உணர்ச்சியும் இல்லை. அதே சிரிப்பு, அத்தை போகலாமா,

எங்கம்மா என்ன சொல்றதுன்னு புரியாம அவளோட கிளம்பி போயிட்டாங்க.

அதுக்கப்புறம் என் வாழ்க்கையில அப்படி ஒரு இருட்டு, இப்ப என்னை சுத்தி இருக்கே அத விட கொடுமையா இருந்துச்சு,

கொஞ்சம் கொஞ்சமா அவ முகம் மறைய ஆரம்பிக்குது, ….

அன்னைக்கு மட்டுமில்லைங்க, இன்னிக்கும் தான்,

இப்ப தான் வலி எனக்கு புரிய ஆரம்பிக்குது, பின் மண்டையில அடிபட்டிருக்கும் போல,

அன்னைக்கு அவ கிளம்பி போகும் போது, மனசுக்குள்ள வலி, தாங்கவே முடியலை, அதை கம்பேர் பண்ணுனா, இன்னிக்கு இருக்குறது வலியே இல்லை.

போனதுக்கு அப்புறம் என்ன பண்ண முடியும், தேடித்தான் போகனும், அவள தேடி வெளியில கிளம்புறதுக்கு முன்னாடி உள்ள தேடுறதுன்னு முடிவு பண்ணுனேன்.

என் மனசுக்குள்ளயும் எங்க ரூமுகுள்ளயும், எனக்கான மெசேஞ் எதாவது கிடைக்குமாங்குற தேடல்,

அதிகமா தேடத்தேவையில்லை, மேலோட்டமா இருக்குறதே நம்ம கண்ணுக்கு தெரியுறதில்லை, அப்படித்தான் அவ டேபிள் மேலயே வச்சீட்டு போன டைரி, எனக்கு நேத்துவரைக்கும் கிடைக்கவே இல்லை.

அவ ஊருக்கு போய் ஒரு மாசம் ஆச்சு, என் கூட இருந்த ஒரு மாசத்த விட இந்த ஒரு மாசம் அதிகமாவே புரிஞ்சிக்கிட்டேன், என்னை அவள எங்க காதலை,

அந்த டைரியில என்ன இருந்துச்சுன்னா….

ஹே அங்க பாருங்க யாரோ ஒரு பையன் அந்த புதருகிட்ட கிடக்குறான்,

அய்யோ அந்த பையன் நம்ம பஸ்ஸில வந்தவரு தான்

ஆமாப்பா என் பக்கத்தில உக்காந்திருந்தாரு

அய்யயோ என்னாச்சுன்னு தெரியலையே

ஓடி வாங்கப்பா போய் தூக்குவோம்

கடைசியா என் காதுல அந்த சைரன் சத்தம் மட்டும் கேட்டுகிட்டே இருக்குது.…

 

Advertisement