Advertisement
அவள் நான் பயணம் – 3
உன் புருவத்திடை
பள்ளத்தாக்கில்
வீழ்ந்து கிடக்கிறதடி
என் வீரமெல்லாம்…
ஆம் வீரம் பேசும் என் கண்கள் உன் இமைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. விடுவிக்க உனக்கும் எண்ணம் இல்லை. விடுபட எனக்கும் விருப்பம் இல்லை. வரமென நான் வாழும் வசந்த வாயிலடி அது. என்ன மாயம் செய்தாயடி பெண்ணே… உன்னுள் என்னை புதைத்துக் கொண்டாய்… எழுந்து வருகிறேன் காதலாக… விரைந்து வருகிறேன் காற்றாக…
” தம்பி, … நீ காத்தா போவியோ காதலா போவியோ, டிக்கெட்ட எடுத்தா தான் இந்த பஸ்ஸில போக முடியும், எடுப்பா டிக்கெட்ட, எங்கே போகணும்” (அவர் வேலைய அவர் பாக்குறார், நடத்துனர்).
“மனசார அவள நெனக்க விடமாட்டாங்களே, டெம்பிள்ரன் நடுவுல வந்த டெட்டிபியர்ஸ்” என வாய் விட்டு சொல்ல முடியாம சொன்னேன் , ”திருச்சி ஒண்ணு” (அதே அக்மார்க் சிரிப்போட)
இங்க இருக்க யாரோ எனக்காக யோசிக்கிறாங்க, எம் பொண்டாட்டிக்கு தூரத்து சொந்தம்னு நெனக்கிறேன், எனக்காக ரொம்ப கவலைப் படுறாங்க, இதெல்லாம் எப்புடி கண்டுபிடிச்சேன்னு பாக்குறீங்களா…
அந்த நலம்விரும்பி போன் பண்ணி, “பஸ்ஸுல மாப்ள தனியா பேசிகிட்டு வராருமா, உடம்புக்கு ஒண்ணுமில்லையே நல்லாத் தானே இருக்காரு, பாவம் சின்ன வயசு, இப்ப தான் கல்யாணம் வேற ஆயிருக்கு, ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிருக்க போகுது, பாத்துக்குங்க” என்று தன் அக்கறையை தெரியப்படுத்தியிருக்கு. (அவனவன் பொழப்பு எப்படியிருந்தாலும், அடுத்தவனுக்காக ரொம்ப அக்கறை)
ஆனாலும் உங்ககிட்ட பேசாம எப்படீங்க கதை சொல்ல முடியும், இப்ப கூட பாருங்க என் நண்பனுக்கு போன் பண்ணி சொல்லிருக்கா, எனக்கு போன் பண்ணல.
இன்னிக்கு மாதிரி இல்லைங்க அன்னைக்கு, அவளே வந்தா, ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருந்த என்கிட்ட அவளே பேசுனா……
“காபி கேக்கும் போது, உங்க கண்ணு என்கிட்ட எதோ கதை சொன்னுச்சு, அந்த மீதி கதையவும் கேட்டிட்டு போகலாம்னு வந்தேன்”. (கிள்ளி பாத்துகிட்டேன், கனவு இல்ல)
“எவ்வளவு ரொமாண்டிக்கான விசயத்தை எப்பிடி சொல்லுறா, இவளுக்கு வெட்கமெல்லா வராதோ, இவ்வளவு இயல்பா இருக்கா, இவ வந்ததும் என் தைரியமெல்லா எங்க போணுச்சின்னே தெரியலையே,” அப்படின்னு நான் யோச்சிகிட்டு இருக்கும் போதே காபிய வச்சிட்டு திரும்பீட்டாங்க.
போய்டுவாளோ பேச மாட்டாளான்னு நெனச்சவ வந்திருக்கா, மக்கர் பண்ணாம பேசு மாறா, மனசு கெடந்து அடிச்சிகிச்சு…
“கதை கேக்க வந்தியா” இது நானு.
“கதையோ கவிதையோ என்ன சொல்ல வந்தீங்களோ, அத கேட்க வந்தேன்” இது அவ.
“நான் என்ன சொல்ல வந்தேன்”
“அப்ப ஒண்ணுமில்லயா, சரி காபிய குடிச்சிட்டு கிளம்புங்க”
“கிளம்பீடவா”
“ம்ம்ம்ம்ம்ம்…”
அவ திரும்பவே இல்லை, அப்ப தான் முதல் தடவையா அவ கைய பிடிச்சேன், எதிர்ப்பு காட்டாம, திரும்பினா, நிமிந்து என்னைய பாக்கவே இல்லைங்க, மெல்ல தாடைய பிடிச்சி முகத்த நிமிர்த்துனேன்.
“என்னை யாருன்னு தெரியலையா உங்களுக்கு” (இதென்னடா புது கேள்வியா இருக்கு).
”நீ சக்தி, எங்கம்மா எனக்கு சர்ப்ரைஸா குடுத்த கிப்ட், ஒரே நாள்ல என் உலகத்தையே மாத்துனவ, இன்னும் சொல்லிகிட்டே போகலாம், நீ என்ன புதுசா கேக்குற”
“இதெல்லாம் இப்ப நடக்குறது, நல்லா யோசிச்சு பாருங்க, என்னைய தெரியலையா”
“இப்ப நடக்குறதா, இதுக்கு முன்னாடி வேற நடந்திருக்கா, அய்யோ என்னன்னு தெரியலையே”(மைண்ட் வாய்ஸ் தான் )
“ இல்ல எனக்கு நியாபகம் இல்லை, நீ… நீங்க யாரு…” (எனக்கு எதுவுமே நியாபகம் இல்லைங்க. அம்னீசியா வந்திருச்சோ)
“கல்யாணத்துக்கு முன்னாடியாச்சும் தெரிஞ்சுகோங்க… நான் வரட்டா…”
“நீ சொல்லாம எப்படி தெரியும் சக்தி, நில்லு சொல்லீட்டு போ”
“தேடிக் கண்டுபிடிங்க, இல்ல கேட்டு தெரிஞ்சுக்கோங்க, அப்ப பேசுவோம்”
“அது வரைக்கும்…”
“இதுக்கு முன்னாடி எப்படியோ அப்படித் தான்” (அடியே கதைய சொல்லுற நான் தான் டி டிவிஸ்ட் வைக்கனும், நீ வச்சிட்டு போறியே)
“ஹே நில்லு சக்தி” என்னோட கையில இருந்த அவ கைய எப்ப எடுத்தான்னே தெரியலை, மின்னல் மாதிரி போயிட்டா, அவள பிடிச்சிடலாம்னு நானும் அவ பின்னாடியே ஓடுனேன்.
யார் மேலயோ மோதி நின்னேன், பாத்தா கமெண்ட்ரி பாட்டி, நான் என்னமோ கொலைகுத்தம் பண்ணுன மாதிரி ஒரு லுக் விடுது பாட்டி.
”என்ன பேரான்டி ஓடியே ஊருக்கு போலாம்னு முடிவு பண்ணீட்டீங்களா, உங்களுக்காக வண்டி வரச் சொல்லியிருக்கு, கிளம்பும் போது இந்த கெழவியவா இடிச்சிட்டு போகனும், ஹா ஹா ஹா”
“சக்தி முன்னால போறத பாத்துட்டு என்ன கிண்டல் பண்ணுதாமா… அடடா முடியல பாட்டி நகருங்கன்னு சொல்லீட்டு போய் பாத்தா மின்னல் மறைஞ்சிடுச்சு”
காபி ஆறிடுமே அப்பிடியே போய் காபிய குடிச்சிட்டு வெளியில வந்தேன்(காபி முக்கியம் பாஸ்), அவள பிரிஞ்சி போகுற சோகம், அவ வச்சிட்டு போன சஸ்பென்ஸ் எல்லாம் சேர்ந்து மாப்பிள்ளை களையே காணாம போயிடுச்சுன்னா பாத்துக்கோங்களேன், அப்பிடி கிளம்பி வந்தேன் அங்க இருந்து.
டாட்டா சொல்லவாச்சும் அவ வருவான்னு திரும்பி திரும்பி பாத்தா அவ வரவே இல்லை. நிச்சயமாயிடுச்சு ஆனாலும் போன் நம்பர் குடுக்க மாட்டாங்களாம். இந்த பாட்டிகிட்ட பெர்மிஷன் கேட்டுகிட்டு இருந்தா என் பொழப்பு என்னாகுறது.
அவங்க அப்பா, என் மீசை மாமாகிட்ட, என் போன் ஹேங்க் ஆயிடுச்சுன்னு சொல்லி அவர் போன வாங்கி என் ஆளு நம்பர எடுத்திட்டேன். இனிமே நீங்க என்ன குடுக்குறது.
எந்த தைரியத்துல அவ நம்பர எடுத்தேனோ, ஆனா அந்த தைரியம் அவள திரும்ப பாக்குறவரைக்கும் போன் பண்ண கை குடுக்கல.
ஏகப்பட்ட கேள்வி வேற மனசுக்குள்ள, என்ன நடந்திருக்கும் சின்ன வயசுல இருந்து நடந்த எல்லாமே ஞாபகம் இருக்கே, எப்பயுமே, எந்த பொண்ணும் க்ராஸ் பண்ணலயே, ஒரு வேளை ஆக்சிடெண்ட் அதுவும் ஆகி, செலக்ட்டிவ் அம்னீசியா எதுவும் வந்திருக்குமோ,
இப்படியே யோசனை பண்ணிக்கிட்1டே வந்ததுல பதில் கிடைக்குறதுகுள்ள திருச்சிக்கு தலைவலியோட வந்தது தான் மிச்சம். சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ல இருந்த என் பைக்க எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
எப்படி வந்தேன்னு தெரியாத அளவுக்கு யோசனை. என்னை இதுக்கு முன்னாடி இவ்வளவு சீரியஸா எங்கம்மா பாத்ததே இல்லை. பொண்ணு வீட்டில எதையோ ஏழரைய கூட்டிட்டு வந்துருக்கேன்னு நெனச்சுகிட்டு, என்கிட்ட எதுவுமே கேக்காம, எங்கப்பா காத கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.(அம்ம்பூட்டு நம்பிக்கை என் மேல)
எங்கப்பா தான் ”அப்படியெல்லாம் இருக்காது, அவன் கிட்ட போய் என்னாச்சுன்னு கேளு, நீ திட்டுவன்னு யோசிச்சு கூட இப்படி வந்திருப்பான், பக்குவமா பேசி என்னன்னு தெரிஞ்சுகுறத விட்டுட்டு என்ன பேச்சு இதெல்லாம்” அப்படின்னு எங்கம்மாவ காபியோட என் ரூமுக்கு அனுப்பி வச்சார்.
நான் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா, “எனக்கு என்னாச்சு மா”
“உனக்கு என்னடா ராஜாவாட்டம் இருக்க”
“இல்லம்மா எனக்கு ஏதோ ஆயிடுச்சி”
“அதே தான் டா என்னோட சந்தேகமும்”
“ம்மா என்ன சொல்ற”
“இல்லடா உன் முகமே சரியில்ல , என்ன யோசனை உனக்கு”
“யோசனை தான், அத நீ தான் மா தெளிவு படுத்தனும்”
“என்னப்பா என்ன யோசனை”
“சக்தி யாருமா”
“உனக்கு பாத்திருக்க பொண்ணுடா, இன்னும் சொல்லப்போனா உன் வருங்கால பொண்டாட்டி”
“ம்ம்ம்ம்ம்மாஆஆஆ”
“ஏன் டா கத்துற, அது தான உண்மை”
“அம்மா, இது உண்மை தான் ஆனா இதுக்கு முன்னாடி சக்தி யாரு”
“இதுக்கு முன்னாடியா, ம்ம்ம் பெத்தவங்களுக்கு பிள்ளை”
“ ம்ம் பாட்டிங்களுக்கு பேத்தி, தங்கச்சிங்களுக்கு அக்கா இன்னும் செல்லேன் மா, ஏன் மா என் மா கடுப்ப கெளப்புற”
“ஹா ஹா ஹா ஹா”
”சிரிக்காதீங்க மா”
“சிரிக்காம என்னடா பண்ண சொல்ற”
“அவ யாருன்னு சொல்லுமா”
“நீ என்ன கேக்குறன்னு புரியலைடா கண்ணு”
“ம்ம்ம்மா, அவ கேக்குறா,
”என்ன கேக்குறா”
“என்ன யாருன்னு தெரியலையான்னு கேக்குறா, தேட சொல்லுறா, கேட்டு தெரிஞ்சுக்கோன்னு சொல்லுறா”
“ஓஹோ அப்படி போகுதோ கதை”
“எப்படியும் போகலை எனக்கு உண்மையிலயே அவ யாருன்னு தெரியலைமா, அவகிட்ட கேக்க முடியாது, நீ சொல்லுமா, அவ யாரு”
“இத முன்னாடியே சொல்லி கேக்க வேண்டியது தான, மொட்டையா கேட்டா, எனக்கு என்ன தெரியும்”
“அதான் இப்ப தெரிஞ்சிடுச்சில்ல சொல்லுங்க மா”
“ஏன் டா, கம்ப்யூட்டர், போன், இண்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ் ஆப்ன்னு எவ்வளவு இருக்கு, இத்தன நாளைக்கு இந்த பழைய கதையெல்லாம் பேசியிருப்பீங்கன்னு நெனச்சேன், நீ என்னடான்னா, என்கிட்ட வந்து இப்ப கேட்டுகிட்டு இருக்க”
“பழைய பஞ்சாங்கத்த புடிச்சிகிட்டு அவங்க வீட்டில போன் நம்பரே குடுக்கல மா, இதுல எங்கிருந்து, பழைய கதைய பேச”
“சரி சரி, உனக்கு எப்படிடா மறந்துச்சு”
“தயவு செஞ்சு சொல்லீட்டு கேள்வி கேளு மா”
“நாம கோயம்புத்தூர்ல கொஞ்ச நாள் இருந்தோம் ஞாபகம் இருக்கா”
“ஆமா, ரெண்டு வருசம் இருந்தோம்னு நெனக்கிறேன், அப்ப நான் ரெண்டாவது படிச்சிருப்பேன்”
“ம்ம்ம் அப்ப தான், நம்ம வீட்டு பக்கத்தில தான் சக்தியோட அம்மா அப்பாவும் குடியிருந்தாங்க”
“அப்படியா எனக்கு தெரியவே இல்லை”
“முழுசா கேட்டுட்டு சொல்லுடா, கொஞ்ச லூட்டியா அடிச்ச”
“லூட்டியா”
“ஆமா, அப்ப சக்திக்கு நாலு வயசு, நல்ல அழகா, கொளுக்கு மொழுக்குன்னு, அமுல் பேபி மாதிரி இருப்பா,பாப் கட்டிங் வச்சிகிட்டு, முட்டை கண்ண முழிச்சு முழிச்சு பாத்துகிட்டு பாக்குற யாரும் தூக்கி கொஞ்சாம போகவே மாட்டாங்க”
“வாவ் அப்படியா”
“ஆமா, நம்ம வீட்டுக்கு பக்கத்திலயே இருந்ததுனால, நாம போன கொஞ்ச நாள்லயே நல்ல பழக்கமாயிடுச்சி”
“ம்ம் அப்புறம்”
“இப்ப தானே ஆண்டி, அங்கிள்ன்னு பிள்ளைங்க சொல்லிகிதுங்க, அப்பவெல்லாம் அத்தை மாமான்னு தான் சொல்லி குடுத்தோம், சக்தி அம்மாவுக்கு நீன்னா ரொம்ப இஷ்டம்”
“பார் டா அப்பவே வா… ம்ம்ம்ம்”
“டெய்லி ஸ்கூல்ல இருந்து வந்ததும், வீட்டில தங்க மாட்ட, எப்ப பாரு சக்தி சக்தின்னு அவங்க வீட்டில தான் கெடப்ப”
“ஓ மை காட்”
“ஆமா நீ வந்துட்டா, அவள ஒருத்தர் தொட முடியாது, கொஞ்ச முடியாது”
“ஏன் மம்மி”
”புதுசா வாங்குன டெட்டிபியர் மாதிரி அவள மடியிலயே வச்சுக்குவ, நீ தான் சோறு ஊட்டனும், உன் கூட தான் விளையாடனும், உன் கூடத் தான் தூங்கனும், அவள கீழ விட்டாத்தானே அடுத்தவங்க கொஞ்சுறதுக்கு”
“ஹா ஹா ஹா அப்பிடியா”
“ஆமா, அவளும் மத்தவங்கிட்ட போக மாட்டா, உன்ன பாத்துட்டா அவ பெத்தவங்களே அடுத்த பட்சம் தான், அவளையும் உன்னையும் பிரிச்சி ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குள்ள பெத்தவங்க எங்க பாடு தான் திண்டாட்டம்”
“என்ன மம்மி சொல்றீங்க”
“ஆமான் டா உங்க அலும்பு தாங்க முடியாம, அவளையும் உங்க ஸ்கூல்லயே சேத்துவிட்டோம்”
“வாவ் அப்புறம்”
“அவள எல்.கே.ஜி சேர்த்துவிட்டா, ரெண்டாங்கிளாஸ் படிக்கிற நீயும் போய் அவ க்ளாஸ்ல உக்காந்துக்குவ, ஸ்கூல்ல இருந்து தினம் கூப்பிட்டு ஒரே பஞ்சாயத்து தான்”
”இன்னும் கொஞ்சம் நல்லா படிக்கலாம்னு போயிருப்பேன்”
“அப்பயே கேடிடா நீ, அவ்வளவு சொல்லி அனுப்புவோம் ஸ்கூலுக்கு, அடுத்த நாளே என்ன பண்ணுன தெரியுமா”
“கேடியா, இப்ப வரைக்கும் நான் குட் பாய் மம்மி, அப்பாவிப்புள்ள நான் என்ன பண்ணிருக்க போறேன், சமத்தா சொல் பேச்சு கேட்டிருப்பேன்”
“நீயாடா, அதுவும் சமத்தா, அவள உன் கிளாஸுக்கு கூட்டிட்டு போய் உக்காந்துகிட்ட டா, அவளும் நீ கூப்பிட்டதும் மிஸ் சொல்றத கேக்காம உன் கூட வந்துட்டா”
“அப்பிடியா பண்ணேன் இருக்காது மம்மி, எனக்கு மறந்து போயிடுச்சுன்னு நீயா நாளைஞ்சு பிட்ட சேத்து போடாத மா”
“அடேய் நீ பண்ணதுல சும்மா சாம்பிள் தான் சொல்லிருக்கேன்”
“அப்ப இன்னும் மெயின் பிக்சர் வேற இருக்கா”
“ஆமா காலையில கிளம்பி போய் அவங்க வீட்டுக்கு முன்னாடி நின்னுகிட்டு, அத்தே அத்தே எங்க என் ஆளு, சக்தி கிளம்பீட்டாளான்னு ஒரே அலம்பல் தா”
“கிளப்பீட்டாளான்னு அக்கறையில கேட்டா, அலம்பல்னு சொல்றியே மா”
“இதெல்லாம் பத்தாதுன்னு, அவள பக்கத்து வீட்டு பையன் விளையாட கூப்பிட்டான்னு, அவன கடிச்சி வச்சிட்ட”
“ஓ நோ வயலென்ஸ் வேறயா”
“ஆமா, அவங்கம்மா, மாப்ள மாப்ளன்னு கூப்பிடவும், கொஞ்ச நாள்ல, அவ தான் என் பொண்டாட்டின்னு சொல்ல ஆரம்பிச்சுட்ட, ரெண்டு வருசத்துல உங்களால நாங்களும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம்”
“நல்ல விசயம் தானே”
“அப்பவே முடிவு பண்ணிகிட்டோம்”
“என்னன்னு”
“உங்க கல்யாணத்த தான்”
“அப்புறம் ஏன் என்கிட்ட இவ்வளவு நாளா சொல்லை”
“ஏன் டா நீ மறந்திருப்பன்னு எனக்கு எப்படி தெரியும்”
“ஆமா எப்படி மறந்தேன்”
“ரெண்டு வருசத்துல, சக்தி அப்பா சொந்த ஊருக்கே போய் பிஸினஸ் பண்ணப் போறோம்னு சொல்லீட்டு போயிட்டாங்க, உங்க அப்பாவுக்கும் திருச்சிக்கு மாத்தலாயிடுச்சி, சொந்த ஊருக்கே கெடைக்கவும், நாங்களும் சந்தோஷமா கிளம்பீட்டோம்”
“அடப்பாவிங்களா அன்னிக்கு பிரிச்சி இன்னிக்கு எனக்கு ஆப்பு வைக்கிறீங்களே”
”நாங்களாடா, வைக்கிறோம், நாம பிரிஞ்சி வந்தப்புறம், உங்க ரெண்டு பேருக்கும் காய்ச்சலே வந்துடுச்சி, கொஞ்சம் கொஞ்சமா உன்னயும் அவளையும் சகஜமாக்க படாத பாடு பட்டோம்”
“அவளும் இப்படித்தான் இருந்தான்னு உங்களுக்கு எப்படி தெரியும்”
”கொஞ்ச நாள் லெட்டர் மூலமா பேசிகிட்டு இருந்தோம், அப்புறம் வீடு மாத்தி, விலாசம் தொலைஞ்சு, தொடர்பே இல்லாம போயிடுச்சு”
“அடடா”
“இப்ப கொஞ்ச நாள் முன்னாடி அவங்க அம்மாவ ஸ்ரீரங்கத்துல பாத்தேன், டூர் வந்திருப்பாங்க போல, இத்தன வருசத்து கதையையும் பேசீட்டு, போன் நம்பர் லா வாங்கீட்டு வந்தேன்”
“ஏன் மா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம்ல, அப்போ சக்தி வரலையா, ஏன் மா எனக்கிட்ட சொல்லல”
“எத்தன கேள்வி கேக்குறான் பாரு, அவங்க அம்மா மட்டும் எதோ டூர் பேக்கேஜ் ல வந்திருப்பாங்க போல, எவ்வளவு கூப்பிட்டும் உடனே கிளம்பனும்னு போயிட்டாங்க, அப்புறம் போன்ல பேசி பேசி பழைய நட்ப புதுப்பிச்சிகிட்டோம்”
“பெருமாள் இஸ் கிரேட்”
“யாருடா அந்த பெருமாள்”
“ம்மா காட் லாட் பெருமாள் மா, நம்ம ரங்கநாதர் மா, என்னமா பொசுக்குன்னு யாருன்னு கேட்டுட்ட”
“அப்பிடி தெளிவா சொல்லுடா, ம்ம் ஓ உன் ஆள கரெக்ட்டா திரும்ப சேத்துவச்சிட்டார்னா”
“ஆமா, ஆனா இவ்வளவு க்ளோஸா இருந்துட்டு எப்பிடிமா, மறந்தேன்”
“விளையாட்டு பையன், உன்ன இங்க பாய்ஸ் ஸ்கூல்ல சேத்துவிட்டோம், கொஞ்ச நாள் அழுத, அப்புறம் மறந்துட்ட, படிப்பு, விளையாட்டுன்னு நீயும் அப்படியே மறந்துட்டு வளர ஆரம்பிச்சுட்ட, ஹாஸ்டல் வெளியூர் லைப்ல உனக்கு அவ ஞாபகமே வரல”
“அப்ப அவளும் மறந்திருக்கனும் ல எப்பிடி மா அவ மட்டும் கரெக்டா கேக்குறா”
“அதான் எனக்கே பிரமிப்பா இருக்கு, அப்ப இருந்து உன்ன பத்தியே நினைச்சிகிட்டு பேசிகிட்டு இருந்திருக்கா, அவ மனசுல ஆழமா பதிஞ்சிட்ட டா, அவளே உனக்கு பொண்டாட்டியா கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும் நீ”
“அப்பிடியா மா சொல்ற”
”ஆமா மாறா, அதுனால தான் உங்களுக்கு கல்யாண வயசு வந்ததுமே, இந்த பேச்ச ஆரம்பிச்சிட்டோம், அன்னிக்கு சக்திய இங்க இருந்த அவங்க சொந்தக் காரங்க வீட்டில வச்சு பொண்ணு பாக்கும் போது உனக்கு நினைவு வரும்னு நெனச்சேன், அவளும் அதைத் தான் உன்கிட்ட எதிர்பாத்திருப்பா”
”ஓ அதுனால தான் அவ ப்ரெண்ட்ஸ் எல்லாம் என்ன பாத்து சிரிச்சிகிட்டே இருந்தாங்களா, இந்த கதையெல்லாம் அவங்கிட்ட சொல்லிருப்பாளோ”
“ஹா ஹா ஹா ஆமா”
“இத அவ அன்னிக்கே என்கிட்ட சொல்லிருக்கலாம், அத விட்டுட்டு ப்ரெண்ஸ்கிட்ட சொல்லி சிரிச்சிருக்கா”
“டேய் நீ தான் ட்யூப்லைட்டு, அவள ஏன் டா சொல்லுற”
“இது தான ப்ளாஸ் பேக், சொல்லீட்டில மம்மி, இனி நான் பாத்துக்குறேன்”
“அடப்பாவி”
“கீழ அப்பா கூப்பிடுறார் போல, போ போ”
“காரியம் ஆனதும் கழட்டிவிடுறத பாரு”
“காபி கொண்டு வந்தியே மா, அத குடிக்கவிட்டியா, சும்மா நொய் நொய்னு”
“டேய் டேய் மாறா, இது அந்த பெருமாளுக்கே அடுக்காது டா,”
”அதெல்லாம் நான் அடுக்கி வச்சிக்கிறேன், நீ கிளம்பு மா”
“அவளுக்கு போன் பண்ணனும்னு சொல்லேன் டா, அதுக்கு ஏன் என்ன கிளப்புற”
“தெரியுதில்ல”
“நான் சொன்னத வச்சு, இன்னும் என்னென்ன பண்ணுனன்னு ஞாபகப் படுத்திபாத்துட்டு பேசுடா”
“அதெல்லாம் நான் ரிவைண்ட் பண்ணி பாத்துக்குறேன்”
“ஹா ஹா ஹா” சிரிச்சுகிட்டே எங்கம்மா கீழ போயிட்டாங்க, ஆனா அன்னிக்கு என் விதியும் என்ன பாத்து சிரிச்சிருக்கு, அது என் கண்ணுக்குத் தெரியல.
சக்தி மேல எனக்கிருந்த அன்ப எனக்குள்ள மீட்டு கொண்டு வரனும், அத உணரனும், அப்பிடியெல்லா யோசிக்கவே இல்ல, அவ கேட்டதுக்கு பதில் கிடைச்சிடுச்சி அவ்வளவு தான். அது மட்டும் தான் எனக்கு மனசுல ஓடுச்சு.
உடனே எடுத்தேன் அஸ்திரம், நாணில வச்சு, பின்னாடி இழுத்து குறி பாத்தேன், சக்தி தான் தெரிஞ்சா, விட்டேன், ”மாங்கல்யம் தந்துனானேனா மமஜீவன ஹேதுனாம்” அப்படீன்னு அவ போன் அங்க ரிங் ஆனுச்சு.
அவ போன எடுத்தாளா, என்ன பேசினோம், அடுத்து என்ன ஆச்சு, தெரிஞ்சிக்கனுமா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, பேசி பேசி நாக்கு வரண்டு போயிடுச்சி, யாருப்பா அங்க பவண்டோ இருக்கா… குடிச்சிட்டு வரேன்….