Advertisement

பனி மழையில் கப்பல்….

  டெல்லியிலுள்ள அந்த அரங்கம் , மிகவும் கோலாகலமாக தயாராகி கொண்டிருந்தது அந்த விழாவிற்காக….ஒவ்வொரு  துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு என கிடைக்க கூடிய அங்கீகாரம். பல்வேறு துறையை சார்ந்தவர்கள் அனைவருக்கும் ‘ரெட் கார்ப்பெட் ‘ எனப்படும் மதிப்பு மிக்க வரவேற்பு அளிக்கப்பட்டு கொண்டிருந்தது. 

விழா துவங்க இன்னும் சிறிது நேரமே இருக்கும் நிலையில் அங்கு வந்த பெண்ணை பார்த்த பலரும் முகம் சுழித்து தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர்.

பார்க்க சிறு வயது பெண் போல் இருந்தாலும் அவளின் அருகே செல்லாமல் அனைவரும் ஒதுங்கிக்கொள்ள, தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தாள் அந்த மங்கை. 

கூட்டத்தின் சலசலப்பு நொடிக்கு நொடி கூடிக்கொண்டே சென்றதே ஒழிய குறையவில்லை. அவளுக்கு நன்கு தெரியும் இது அவளை பற்றிய பேச்சினால் வந்த சலசலப்பு என்பது.. இதுபோல எத்தனையோ இந்த சில வருடங்களில் கடந்து வந்து விட்டாள். முதலில் கஷ்டமாக இருந்த விசயம் இப்போது பழகி போன ஒன்றாகி போனதா இல்லை அதை ஏற்கும் துணிவு வந்ததா இல்லை அதை பொருட்டாக மதிக்காமல் இருந்து இருந்து தனது மனம் மறத்து விட்டதா அவளே விடையறியாள்… 

பிரதமரின் வருகை அறிவிக்கப்பட, அங்கே இருந்த பேச்சு குறைந்து அடுத்த கட்ட நிகழ்வுகளுக்கு தயாரானது அந்த அரங்கம். இது தான் இந்த மாதிரி நிமிடத்தில் மாறி போகும் நிகழ்வுக்காக எதற்கு நான் வருந்த வேண்டும் என்பது போல சிறு புன்னகையை இதழோரம் தவழ விட்டவள் , தனது இருக்கையில் கம்பீரமாகவே அமர்ந்திருந்தாள், வந்த போது இருந்தது போலவே.

அவளை அங்கு இருந்தவரின் உதாசினமும், பேச்சும் சிறிது சலனப்படுத்தவில்லை என்பதை கண்கூடாக கண்ட சிலர் அவளின் இந்த பரிமாணத்தில் நிச்சயம் பிரமித்து தான் போயினர். 

பிரதமரின் வருகையை தொடர்ந்து, இறைவாழ்த்து பாடல் முடிய, வரிசையாக ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கியவர்களின் பெயர்களும் அவர்களின் சாதனை, அவருக்கு அளிக்கும் விருது பற்றிய குறிப்போடு விழா துவங்கியது. பலரும் தங்களின் விருதை பெற்று கொண்டு அதற்கு காரணத்தையும் காரணியானவர்களையும் சொல்லி கொண்டு செல்ல.. 

அடுத்தாக அறிவிக்கப்பட்டது அந்த மங்கையின் பெயர்… அவளின் பெயரும் மங்கை தான்… அலர்மேல்மங்கை… சிறந்த சமூகசேவை குறித்த பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண். 

மேடை ஏறிய அந்த பெண்ணை பார்த்ததும் பிரதமரின் முகமும் சில நொடி யோசனையை காண்பித்து, பின் இருக்கும் இடம் உணர்ந்தது போல சிறு சிரிப்போடு அந்த விருதை கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டவளிடம் பேசுமாறு தொகுப்பாளர் மைக்கை கொடுக்க… பலரும் அவளின் நிலையை அதை அவள் கடந்து வந்த தைரியத்தை பற்றி அறிய ஆவலாக காத்திருந்தனர். பத்திரிக்கை டிவி நிருபர்களுக்கு தங்களுக்கு இந்த ஒரு வாரம் போக்கும் விசயம் சிக்கி கொண்டதை நினைத்து சந்தோஷமே….

மைக் முன்பு நின்ற , மங்கை.. தான் பேசுவதற்கு முன்பு அங்கிருக்கும் அனைவரின் முகத்தையும் ஒரு முறை பார்க்க, பலருக்கு இன்னும் அவளின் முகம் பார்க்க பிடிக்காது தலை திரும்பி எங்கோ பார்வையை வைத்திருப்பது தெரிந்தது… சிலர் ஆர்வமாக, சிலர் அலட்சியமாக, சிலர் வேறு வழியில்லை என்ற மனதோடு தன்னை பார்த்திருப்பது நன்கு புரிந்தது அவளுக்கு… மனித மனங்களை படிக்க காலம் நன்கு கற்றி தந்திருந்ததே வலிக்க வலிக்க…..

“அனைவருக்கும் வணக்கம்… எனக்கு சிறந்த சமூக சேவகி என்ற விருதை இன்று தந்த இந்த சபைக்கு நன்றி. என்ன சேவையை செய்தாள், இந்த விருது இவளுக்கு ?!  என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்து இருக்கும், என்பது புரிகிறது. முதலில் நான் யார் எனக்கு நடந்ததை சொல்கிறேன். 

அங்கே புரஜெக்டரை ஆப்பரேட் செய்பவரின் அருகே சென்றவள், ஒரு பென்டிரைவ்வை கொடுக்க அடுத்த நொடி அங்கிருந்த திரையில் விரிந்த படத்தை பார்த்தவர்கள் கண்கள் ஆச்சர்யத்தில் மிளிர்ந்தது. 

காரணம் அதில் ஒளிர்ந்த பெண்ணின் முகம் . அனைத்து சௌந்தர்யமும் குடி கொண்டிருக்கும் அழகு முகம். அவர்களின் ஆச்சர்யத்தை அதிர்ச்சியாக்கியது அடுத்து மங்கை சொன்ன சொல்…. “அதில் இருக்கற பொண்ணு தான், இப்ப உங்க எதிரில் இருக்கற நான்” என்றால் அதிராமல் எப்படி இருப்பதாம்!!!. முகத்தின் முக்கால் பாகம் சிதைந்து போய் உரு தெரியாமல் இருக்கும் இந்த விகார உருவம் தானா அந்த பேரழகி …! என அனைவரும் பார்த்திருக்க… 

“அலர்மேல் மங்கை என் பெயர்.. அழகான குடும்பம், பாசத்தையுமே நேசத்தையும் கொட்டு கொடுத்த பெற்றோர், நல்ல கல்வி, இதைவிட  பேரழகி எனும் நிலை… இது போதாத தலைகனம் கொண்டு வாழ.. ஆம்.. நாம் அளவுக்கு அதிகமாய் பெற்றிடும் எதுவும் நமக்கு ஒருவித மமதையை நாம் அறியாமலே தந்திடும் போல…. 

எங்கு சென்றாலும் என்னை சுற்றி பத்து பேர்.. என் அழகை வர்ணிக்க.. அதில் நிறைய ஆண்கள்.  ஆண்கள் தன்னிடம் வந்து அழகாய் இருக்கிறாய் என்று சொன்னாள் மகிழாத பெண்கள் யாராவது இருப்பார்களா… அது போல அது ஒரு போதை.. மாயை… உணரவில்லை அப்போது நான்… எதுவும் நிரந்தரமில்லை என்பதுவும் தான்…

எனது மமதை அழியும் நாளுமே வந்தது…. என் அழகில் மயங்கி என்னிடம் காதல் சொன்ன பலரில் என் மனம் சொன்ன ஒருவரின் மேல் கொண்ட நேசம் பொய்த்து போன நேரம் .. மிகவும் கொடுமை… அவனிடமும் நான் கண்டது அவனின் வெளி அழகை மட்டுமே என்பதை வலிக்கு உணர்த்தியது காலம். 

அவன் மீதான நேசத்தில் இதுவரை உயிராய் துணையாய் போற்றி வளர்த்த என் பெற்றோரையும் தூக்கி எறிந்த முட்டாள் நான். 

அவனின் தேவை எனது உடல் என்பதை உணர்ந்த போது இந்த அழகான முகமும் உடலும் அறுவறுத்து போனது எனக்கு… அவனின் வேஷம் கலைந்ததும் என்னுடன் எடுத்து கொண்ட போட்டோவை வைத்து பணிய வைக்க முயன்றான். பணியாமல் துணிந்து நின்ற எனக்கு துணையாய் யாருமே இல்லா நிலையிலும் என் தரப்பு வெற்றி பெற வாய்ப்பு அதிகமாய் இருந்த நேரம் , என் மீது வீடப்பட்டது திராவகம்.. 

அதில் எரிந்து போனது என் முகம் மட்டுமல்ல, எனது கர்வமும் அகம்பாவும் தான். அது இல்லாவிட்டால் பெற்றோரை எதிர்த்து துணிந்து வெளிவந்திருக்கவும் மாட்டேன், இன்று இப்படி சிதைந்து போனவளாக உங்களால் பார்க்க கூட முடியாத நிலையில் வந்து நின்றிருக்கவும் மாட்டேன். 

அன்று எனக்கு புரிந்த விசயம், என்னை காத்த பெற்றோருக்கு நான் செய்த அநீதி எனக்கு அவர்கள் கொடுத்தை இழந்து சரியாக்கி இருக்கிறேன் என்பதை… எனது நிலை தெரிந்து அப்போதும் துணையாக நின்றது அவர்கள் தான். அதிலிருந்து மீண்டு வந்தாலும் அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்களும் இந்த சமூகமும் படுத்திய பாட்டை பார்த்து அவர்களை விட்டு விலகினேன். 

என்னை போல அல்லாமல் எத்தனை எத்தனை பெண்கள் இது போன்ற. நிலையில் இருக்கிறார்கள் என்பதை நான் மருத்துவ மனையில் இருக்கும்போதே பார்த்தேன். எனக்காவது பெற்றோர் உடனிருந்தனர்.. பலரும் யாருமே இல்லா அநாதை நிலையில் ஆறுதல் சொல்ல கூட ஆளில்லாமல் தவிப்பதை பார்த்ததை வைத்து முடிவெடுத்தேன். அன்று துவங்கியது இந்த இல்லம். இங்கே இது போன்ற நிலையில் பாதிப்பிற்கு உள்ளான பெண்கள் 20க்கும் மேல் தங்கியுள்ளனர்”  என்ற போது , அங்கு திரையில் தெரிந்த அந்த காப்பகமும், அங்கிருப்போரின் நிலையும் படமாய் விரிய அனைவருக்கும் மனம் கணத்து போனது.

மங்கை, “இதில் என்போல தலைகனத்தால் வீழ்ந்தவர் எவருமில்லை. பிறரின் விருப்பத்தை ஏற்க முடியாது என்ற வார்த்தைக்காக வதைபட்டவர்கள் இவர்கள். வதைக்கப்பட்டவர் இப்படி…! ஆனால் வதை கொடுத்தவர்களோ உல்லாசமாய்… !!! நாட்டின் சட்டமும் அதிலுள்ள ஓட்டையும் அவர்களுக்கு தானே சாதகமாய் உள்ளது.

பெண்களுக்கு எதிராய் இன்று நடக்கும் பல்வேறு கொடுமைகளுக்கும் கொடூரங்களுக்கும் என்று கிடைக்குமோ விடியல்….???  சட்டத்தின் ஓட்டைகளை செப்பனிட யாரும் முயல்வதில்லையே..!!!” என்ற போது அவளின் பார்வை பிரதமரை நோக்கிட… ‘அவரோ தன்னால் எதாவது செய்திட முடியுமா இனி பார்க்கிறேன்!’  என்பதான பார்வையை பார்த்தார்.. அவளுக்கும் நன்கு புரியும் இது ஒருநாளில் கிடைத்துவிடும் செயல் இல்லை. என்பது….

“இறுதியாய் ஒன்று, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இந்த நிலையில் நின்று ஜெயிக்க முடிந்திருக்கறது என்னால். இது பனி மழையில் செல்லும் கப்பலை போன்று மிகவும் கடினமான செயல். ஆனால் உங்களில் பலர் தங்களுக்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் , எனக்கு வாழ்க்கையே போர்களமாய் இருக்கிறது. ஆண்டவன் துணையில்லை என புலம்புவது உங்களுக்கே கேவலமாக இல்லையா.. வேலை என்பது உங்கள் உழைப்பு தான். அது எந்த வேலையானாலும் அதில் கடின முயற்சியை சேர்த்தால் போதும் வெற்றி மகள் உங்களிடம் தான்… நாளை நீங்களும் இந்த மேடையை உங்களுடையதாக்கலாம்…” 

குறள்:611

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

குறள் விளக்கம்:

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

Advertisement