Advertisement

வர்ணணை இன்றி கவியெழுதி காட்டு என்று 
காகிதத்தை நீட்டினாள்…
அடுத்த கணமே எழுதி முடித்துவிட்டேன்
அவளது பெயரினை அங்கே…
      ஆட்டோவில் இருந்து அம்பிகையின் உருவம் போல அலுங்காமல் குலுங்காமல் தரையிரங்கிய அந்த வண்ண நிலவு, அடிமேல் அடிவைத்து அவன் இருக்கும் இடம் வந்து நின்றது. ஏற்கனவே அங்கே அமர்ந்திருந்த மாப்பிள்ளை வீட்டு ஆட்களும், புதிதாய் வந்திறங்கிய புதுப்பெண்ணின் வீட்டு ஆட்களும் ஒருவருக்கொருவர் வரவேற்று நலம் விசாரித்து, தங்களுக்குள்ளான உறவினை தொடங்கி கொண்டிருக்க, நம் நாயகன் மணியோ மண்டப தூண்களோடு தானும் ஒரு தூணாக மாறி போயிருந்தான். 
     “பெரியவங்களுக்கு நமஸ்காரம் பண்ணுமா…” என்று கீர்த்தனாவின் அத்தை அவளை அழைத்து முன் நிறுத்த, பயங்கர பவ்யமாக மணியின் பெற்றோர் காலில் விழுந்தெழுந்தாள் கீர்த்தனா. 
     “எதுக்குத்தா இதெல்லாம்? இருக்கட்டும் ராசாத்தி… மகராசியா இருக்கனும்… எந்திரி…” என்று ஆசிர்வதித்து தூக்கிய மணியின் அம்மா, இனி இவள்மீது எங்களுக்கே முதலுரிமை என்பதைப்போல தன் அருகிலேயே கீர்த்தனாவை அமர வைத்து கொண்டார். 
     தரகர் மூலமாக ஏற்கனவே  பெண்ணின் பெயர் தெரிந்திருந்தாலும் அவள் குரலை கேட்கும் ஆசையில், “உன் பேரு என்னம்மா?” என்றார்.
     மாமியார் கேட்க்கும் போது மறுத்து பேசிட முடியுமா? அவள் தன் பவளவாய் திறந்து, “கீர்த்தனா” என்ற நொடி முதல் உலகின் மற்ற எந்த ஓசையும் மணியின் செவிகளை தீண்டவில்லை.
    இரண்டு வாரங்களுக்கு முன்பாக தரகர் மூலம் வந்த பெண்ணின் போட்டோவையே, ‘தனக்கு சொந்தம்…’ என்று இரண்டு மூன்று நாட்களுக்கு போகின்ற இடத்திற்கெல்லாம் தூக்கிக் கொண்டு திரிந்த குட்டிப்பெண் ஷாலினி, முழு புதையலாக சித்தி வந்த பிறகு அவள் முந்தானையை விட்டு விலகுவாளில்லை… 
    “சித்தி என்னோட ப்ரெண்ட்ஸ்ட்ட எல்லாம் சொல்லிட்டேன், எங்க வீட்டுக்கு புது சித்தி வரப்போறாங்கன்னு. எங்க பாட்டி வீட்ல மூணு புது ரோசாப்பூ செடி இருக்கு, அதுல பூ பூத்துச்சுனா நான் உங்களுக்கு தர்றேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சித்தி, இந்த சேல உங்களுக்கு சூப்பரா இருக்கு, எங்கிட்டயும் இதே கலர்ல ஒரு பட்டு பாவாடை இருக்கு தெரியுமா?…”  என்று அவள் தன்னுடைய உலகத்தை தன் புது சித்திக்கு விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
     இடைவிடாமல் நசநசக்கும் குழந்தையை பார்த்து பெரியவர்கள், “உனக்கு உங்க சித்திய அவளோ புடிச்சிருந்தா இன்னிக்கே உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறியா?” என்று வம்பிழுத்தனர்.
     அதை உண்மையென நம்பிய குழந்தை, “ம்…” என வேகவேகமாக தலையாட்டிவிட்டு தன் பாட்டியிடம், “நெஜம்மாவே சித்திய நம்ம கூட கூட்டிட்டு போவோமா பாட்டி?” என்றாள்.
     ஷாலினியின் அம்மா, “சும்மா கூட்டிட்டுபோனா உன் ப்ரெண்ட்ஸ்க்கு தெரியாதுல்ல. ஒரு பெரிய பங்ஷன் வச்சு, சாப்பாடு போட்டு, கொட்டு அடிச்சு எல்லாருக்கும் சித்திய காமிச்சுட்டு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என்று குழந்தையை சரிக்கட்டி விட, பெரியவர்கள் அடுத்த கட்ட பேச்சிற்கு நகர்ந்தார்கள்.
     கீர்த்தனாவின் தாத்தா, “உங்களுக்கு நாங்க சொல்லி தெரிய வேண்டியது இல்ல, பொண்ணுக்கு அப்பா கிடையாது. ஆனா நானும் எம் மகனும், இப்ப இருந்து குழந்தையோட காதுகுத்து வரைக்கும் அவளுக்கான எல்லா சம்பிரதாய முறையையும், எந்த குறையும் இல்லாம எடுப்பு எடுத்து செஞ்சுடுவோம். அவளுக்கு அப்புறம் அவளோட தம்பியையும் அவ அம்மா படிக்க வைக்க வேண்டி இருக்கு. அதனால நீங்க கேக்குறத கொஞ்சம் பாத்து கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்” என்றார்.
     “தங்க சிலையாட்டம் பொண்ணு இருக்கும் போது மத்தது எதுக்கு எங்களுக்கு? எங்க புள்ளைங்க ரெண்டு பேரும் கை நிறைய சம்பாதிக்குதுங்க… பூர்வீக வீடும், என் வீட்டுக்காரரு சம்பாதிக்கிற சம்பாத்தியமுமே எங்க ரெண்டு பேரோட கடைசி காலம் வரைக்கும் போதும். அதுனால எங்களுக்கு நகைநட்டுனு பெருசா எதுவும் நீங்க போட வேணாம், நீங்க உங்க பொண்ணுக்கு என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ அதை மட்டும் செய்யுங்க போதும்.”
     அந்த ஒரு வார்த்தையே கீர்த்தனாவின் வீட்டு ஆட்களுக்கு மிகப்பெரிய மன நிம்மதியை தர அவளின் அம்மா  கொஞ்சம் தயக்கத்துடனே , “நீங்க தப்பா நினைக்கலேன்னா நான் ஒண்ணு கேக்கலாமா?”  என்று பேச ஆரம்பித்தார்.
     “எங்க பாப்பா காலேஜ்ல கடைசி வருஷம் படிச்சுகிட்டு இருக்கா,  இந்த மாசத்துல ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயம் பண்ணிட்டு, அவ படிப்பை முடிச்சதும் நாம கல்யாணத்த வச்சிக்கலாமா? ஏன் கேக்கறேன்னா பொண்ணு ரொம்ப எல்லாம் படிக்கிற பொண்ணு,  சின்ன வயசுல இருந்தே அவ எப்பவும் எல்லாம் பரீட்சையிலுமே முதல் மார்க் எடுத்திடுவா, படிப்ப முடிக்கிறதுக்கும் ரொம்ப நாள் இல்ல வெறும் ரெண்டு மாசம்தான் இருக்கு, அதான்…” என்று தயங்க,
     மணியின் அப்பா, “அதுக்கென்ன தாராளமா பண்ணிக்கலாம் சம்பந்தியம்மா. எங்க மருமக நல்ல மார்க் எடுத்தா அது எங்களுக்கும் பெருமை தானே… கல்யாணத்துக்கு நிறைய நாள் இருந்தா நமக்கு மண்டபம் பாக்குறதுக்கும், கல்யாண வேலைய செய்றதுக்கும் சுலவா இருக்கும்.  மிஞ்சி மிஞ்சிப்போனா  ரெண்டு மாசம்தான முன்னபின்ன ஆகப்போகுது, பொண்ணு படிப்ப முடிச்சதுமே வச்சுக்கலாம்…” என்றதில் கீர்த்தனாவின் அம்மாவிற்கு சொல்லவொண்ணா திருப்தி.
     மணியின் அண்ணி, “நாமளே பேசிட்டு இருந்தா எப்டி? பொண்ணும் மாப்பிள்ளையும் ஒரு தடவ பேசி பாக்கட்டும். அவங்கதான நாளைக்கி சேர்ந்து வாழ போறாங்க…” என்றதும் மணியின் மனதினில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது.
      “அதான, மாப்பிள்ளைய கூப்பிடுங்க…” என்று மொத்த கூட்டமும் கோரஸ் போட்டுவிட்டு மணியை தேட, ‘ஹப்பாடா இப்பவாச்சும் என் ஞாபகம் வந்துச்சே…’ என்று தூணிலிருந்து நகர்ந்து முன்னால் வந்தான். 
     மணியின் அப்பா, “மணி அந்த புள்ளையார் சந்நதி பக்கமா போய் பேசிட்டு வர்றீங்களா?”
    மணியின் மைண்ட் வாய்ஸ், ‘ஐயயோ… அங்க டிஸ்டர்பென்ஸ் ஜாஸ்தியா இருக்கும் போல தெரியுதே, அங்க எப்டி பேசி இந்த பொண்ண கரெக்ட் பண்றது?’
     கீர்த்தனாவின் அத்தை, “எடுத்த எடுப்புலயே புள்ளையார்கிட்டயா வேணாம் வேணாம்… உள்ள அம்பாள் சந்நதிக்கு போய் சாமி கும்பிட்டுட்டு, அப்டியே அங்க உக்காந்து பேசிட்டு வாங்க…”
     மணி, ‘ஐ லைக் திஸ் அத்த கேரக்டர், கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க எங்க வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா தயிர்வடை வாங்கித்தரேன்…’
     மணியின் அண்ணி, “அங்க இந்நேரம் அபிஷேகம் நடக்கும்னு நினைக்கிறேன்” என்றார்.
      தாத்தா, “சரி, கோவில் பிரகாரத்த ஒரு சுத்து சுத்திட்டு வாங்க, புண்ணியத்துக்கு புண்ணியம் மாதிரியும் ஆச்சு பேசிட்டு வந்த மாதிரியும் ஆச்சு. கீர்த்தனா போயிட்டு வாம்மா…”
     மணி, ‘தாத்தா… தெய்வம்யா நீ…’
    கீர்த்தனாவின் அத்தை அவளருகே வந்து, அவளை ஓரமாக அழைத்து சென்று நகை நட்டுகளையும் புடவையையும் சீராக்குவது போல நின்று கொண்டு ரகசியமான குரலில், “இங்க பாருடி, உங்க அம்மா எல்லாத்தையும் ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டா. உன்னோட ஆசை கனவு எல்லாத்தையும் உன் புருஷன் வீட்டுக்கு போனதுக்கு அப்புறமா மாப்பிள்ளைட்ட பேசிக்கோ, இப்ப அநாவசியமா எதையாவது பேசி வாய விட்டுட்டு வந்து நின்ன அவ்ளோதான். இப்பேர்ப்பட்ட நல்ல சம்பந்தம் நம்ம கைவிட்டு போனா வீட்ல எல்லாரும் வருத்தப்படுவாங்க புரியுதா?”
     “சரிங்க அத்த…” 
     மணி கீர்த்தனாவின் முன்னால் வந்து அவளது மை தீட்டிய கண்ணை பார்த்தான். அவனது அருகாமையை உணர்ந்ததும் இமை குடைகளை மெதுவாக விரித்து அவன் முகம் பார்த்தவள், ஏனோ சட்டென்று மீண்டும் இமைகளை தாழ்த்தி மண்ணை பார்த்தாள். தன் எதிரில் தலைகுனிந்து நிற்பவள் அச்சத்தால் தலை கவிழ்ந்து இருக்கிறாளா, இல்லை நாணத்தால் தலை கவிழ்ந்து நிற்கிறாளா என்று அவனுக்கு புரியவில்லை. பாவம் அவனுக்கும் இது முதல் அனுபவம் தானே…
    “வாங்க…” என்று மெல்லிய குரலில் அவளை தன்னோடு வரும்படி அழைத்தான்.
     எந்த செயலை செய்தாலும் செய்யும் முன்பாக அம்மாவிடம் ஒரு முறை அனுமதி கேட்கும் வழக்கம் உடையவள், இப்பொழுதும் தன்னிச்சையாக தன் அன்னையின் முகம் பார்த்தாள். அவர் முகமும் இதழும் தாத்தாவுடன் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தாலும், ‘பூவும் பொட்டும் இருந்திருந்தால் தானே முன் நின்று தன் மகளுக்கான அனைத்து தேவைகளையும் பார்த்து பார்த்து செய்திருக்கலாமே, இன்று மூன்றாம் வீட்டு பெண்ணாகிய தன் நாத்தி தன் மகளுக்காக அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டி இருக்கிறதே, மாப்பிள்ளை பையனுக்கு கீர்த்தனாவின்  குணம் பிடிக்க வேண்டுமே, தன் மகளின் திருமண வைபவம் எந்த பிசிறும் இன்றி நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே’ என ஆயிரத்தெட்டு கவலைகள் அவர் விழிகளை சூழ்ந்திருந்தை கண்ட கீர்த்தனா தன் மன ஆசைகளை எல்லாம் அந்த நொடியிலேயே தன்னுள் புதைக்க தொடங்கிவிட்டாள்.
     கீர்த்தனாவின் அத்தை, “மதினி இங்க பாருங்க, உங்க பொண்ணு உங்களோட பர்மிஷன் கேட்டு நிக்கிறா…” என்றதும் அனைவரும் அவளை பள்ளி குழந்தை போல் நினைத்து கேலியாய் சிரிக்க, கீர்த்தனா வெட்கத்தில் தலைகுனிந்து கொண்டாள்.
     “போயிட்டு வாம்மா…” எனும் அவளது அம்மாவின் குரல் கேட்டதும், அவள் கொலுசுகள் கொஞ்சும் தன் முதல் பாதத்தை எடுத்து முன்னால் வைக்க, மணியும் அவளோடு இணைந்து நடக்க ஆரம்பித்தான். கோவிலின் முன்பகுதியிலிருந்த மண்டபத்திலேயே இது அத்தனையும் நடந்ததால், இப்பொழுதுதான் இருவரும் கோவிலின் உள்ளே நுழைகின்றனர். காலை நேரத்து வெயில் பிரகார பாதையினை அதிக வெளிச்சமாய் பிரகாசிக்க வைத்தாலும், அந்நேரத்தில் பக்தர்களின் போக்கு வரத்து அந்தப் பகுதியில் குறைவாகவே இருந்தது.
    குடும்பத்தினரின் பார்வை படும் தூரத்தை தாண்டிய பிறகு மணி மெதுவாக, “ஹாய்…” என்றான்.
      அவளும் ஃபார்மலாக, “ஹாய்…” என்றாள்.
    அடுத்து என்ன பேசுவது என்று தெரியாததால் சற்றே தொண்டையை செருமி விட்டு “உங்க முழுப்பேரே கீர்த்தனாதானா?” என்றான்.
     “ம்…”
     “உங்க அம்மா நீங்க ரொம்ப நல்லா படிப்பீங்கன்னு சொன்னாங்களே, க்ளாஸ் டாப்பரோ?”
     “ஆமாங்க….”
     “நானும் உங்க காலேஜ்லதான் படிச்சேன், பட் உங்கள மாதிரி பர்ஸ்ட் மார்க் எல்லாம் எடுத்தது கிடையாது. அரியர் வைக்காம  ஓரளவு நல்ல பர்சன்டேஜ்ல பாஸ் பண்ணினேன்.”
     “ஓ….”
     “கேம்பஸ் இன்டர்வியூ புட்டுக்கிச்சு, அப்போ மெச்சூரிட்டியும் இல்ல, கைடு பண்றதுக்கு ஆளும் இல்ல. சென்னைக்கு போய் ஒரு ஏழெட்டு மாசம் வேலைதேடி அலைஞ்சு திரிஞ்சு நாஸ்தியானதுக்கு அப்புறமா இந்த கம்பெனிக்கு வந்தேன். அப்டியே திறமைய டெவலப் பண்ணி இப்போ இதே கம்பெனில ஒரு நல்ல பொஷிஷனுக்கு வந்திருக்கேன். நம்ம காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூலாம் இன்னேரம் ஸ்டார்ட் ஆகி இருக்கும்ல?”
     “ஆமா…”
     “நீங்க பைனல் இயராச்சே, ஏதாவது இன்டர்வியூ அட்டர்ன் பண்றீங்களா?” 
     “இல்ல….”
     “வேணும்னா இன்டர்வியூக்கு கைடு பண்ணலாமேன்னு கேட்டேன்….”
     “வேணாங்க…”
     “ஏங்க? இன்னிக்கி முழுக்க ஒத்த வார்த்தைதான் பேசுவேன்னு அம்மா மேல சத்தியம் பண்ணிட்டு வந்திருக்கீங்களா?”
     “இல்ல… அப்டி எல்லாம் இல்லங்க…”
     “இந்த கல்யாணம் புடிக்கலன்னா மூஞ்சிக்கி நேரா சொல்லிடுங்க, நான் உங்க வீட்ல போட்டுக் கொடுக்கலாம் மாட்டேன். ஜஸ்ட் பாஸிங் கிளவுட் மாதிரி ஒதுங்கி போயிடுவேன்…”
     “இல்லைங்க, புடிச்சிருக்கு”
    “சரிங்க நம்பிட்டேன்…” என்றதும் அவள் தன்னை மறந்து மெல்லமாய் சிரித்து விட்டாள்.
    “சரிங்க, பிரகாரத்தை சுத்தி முடிக்கிற வரைக்கும் நாம சும்மா ஃப்ரெண்ட்லியா பேசலாமா?”
    “ப்ரெண்ட்லியாவா?” 
    “பயப்படாதீங்க, உங்க உங்க பர்சனல் லைஃப் பத்தி எதுவும் கேட்க மாட்டேன். பொதுவான ஜிகே, சினிமா, அரசியல், அறிவியல் இதமாதிரி விஷயங்கள பேசலாம்.”
    “ம்….”
    “உங்களோட பேவரைட் ஹீரோ யாரு?”
    “விஜய்…”
     “சுத்தம்…” என்று தலையை சொரிய,
     “நீங்க தல ஃபேனா?” என்றாள்.
     “ம்… வெறும் ஃபேன் இல்ல, ரொம்ப தீவிர ரசிகன்… ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் முதல் நாளே பாத்திடுவேன், அவ்ளோ பிடிக்கும். நீங்க?”
     “நான் தியேட்டருக்கு போனதே இல்ல, அப்பா இல்லாததால எங்க போகனும்னாலும் அம்மாதான் எங்கள கூட்டிட்டு போகணும். ஷாப்பிங், டூர் இதெல்லாம் அம்மா கூட்டிட்டு போவாங்க, ஆனா தியேட்டர் மட்டும் வேணாம்னு சொல்லிடு வாங்க…”
     “ஓ… சரி கிரிக்கெட் பாப்பீங்களா?”
     “ம்… விராட் ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு?”
     “அடிச்சாலும் புடிச்சாலும் எப்பவுமே எனக்கு எங்க தல தோனி தான்…”
    “ஓகோ…” என்றவளது குறும்பான குரலில், இப்பொழுது நட்புணர்வு நன்றாக இழைந்தோடியது.
     “ஏங்க சிரிக்கிறீங்க? விஜய்யயும் விராட்டயும் நல்லா ஆடுறதால நீங்க சப்போர்ட் பண்றீங்க, தோனியும் தலயும் ஆடலைனா கூட இவ்வளவு ஃபேன் சப்போர்ட் பண்றாங்கன்னா அவங்க எவ்ளோ பெரிய ஆளா இருக்கனும். அவங்க ரெண்டு பேரும் எடிசன் மாதிரி ஒரு தோல்வியில இருந்து ஓராயிரம் புது வழிய கண்டுபிடிக்கிறவங்க தெரியுமா?”
     “ப்ளீஸ், தயவு செஞ்சு தோனியையும் அஜித்தையும் எடிசனோட கம்பேர் பண்ணாதீங்க. எடிசன பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?”
     “ஏன் தெரியாது, எடிசன் ஒரு லெஜன்ட்ங்க, 1900லயே ஆயிரத்துக்கும் மேல கண்டுபிடிப்புகளுக்கு பேட்டர்ன் ரைட் வாங்குன ஒரே ஆளு எடிசன்தான். ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பல ஆயிரம் தடவை தோத்து போனவரு, ஆனாலும் விடாம ட்ரை பண்ணி இருக்காரு தெரியுமா? அவர மாதிரி ஒரு சயின்டிஸ்ட் இதுவரைக்கும் பொறந்ததே இல்ல, இனிமேலும் பொறக்க போறது இல்ல…”
      “மண்ணாங்கட்டி….”
      “ஏங்க?” என்றான் நிஜ கோபத்தோடு…
      “எடிசனோட கண்டுபிடிப்புல பாதி அவரோட சொந்த கண்டுபிடிப்பு இல்லை”
     “ஏங்க, நான் படிப்புல கொஞ்சம் வீக்குதான். ஆனா அதுக்காக ஒரு மெக்கானிக்கல் ஸ்டூடண்ட்டோட அடிப்படையிலேயே தப்புன்னு சொல்றீங்களே இது நியாயமா?”
     “உங்களுக்கு டெஸ்லா தெரியுமா?”
     “ஓ தெரியுமே… இலான் மஸ்க் அப்டிங்கிற ஒரு சயின்டிஸ்ட் கம் பிஸினஸ் மேனோட லேட்டஸ்ட் கார். அது ஒரு எலக்ட்ரிக் கார், சீக்கிரமே இன்டியாக்கு வரப்போகுது, அதோட பேட்டர்ன் ரைட்ட கூட இலான் மஸ்க் ஓப்பன் சோர்ஸா குடுத்துட்டதா கேள்விப்பட்டேன்.”
     “அது ஏன் தெரியுமா?”
     “ஏன்னா இலான் மஸ்க் பெரிய பணக்காரரு, மிகப்பெரிய சயின்டிஸ்ட்டும் கூட. அதனால இந்த ஒரு ப்ராடக்ட் ஓபன் சோர்ஸ்ஸா விட்டிருக்கலாம்…”
    “இல்ல… அதுக்கு காரணமே அவருக்கு டெஸ்லாங்கிற ஒரு முன்னாள் சயின்டிஸ்ட் மேல இருந்த பக்திதான். அதுனாலதான் அந்த காருக்கு டெஸ்லான்னு பேரு வச்சு, அதோட பேட்டர்ன் ரைட்ட ஓப்பன் சோர்ஸா விட்டாரு.”
     “யாரந்த டெஸ்லா?”
     “யாரவர்னு மரியாதையா கேட்டா நல்லா இருக்கும்.”
     “மரியாதை…..(கொஞ்சம் கஷ்டம்தான்) சரி ஓகே யாருங்க அவரு?”
     “சொல்றேன், ஆனா இனிமே நம்ம லைப்ல எப்பவும் தப்பித்தவறி கூட எடிசன பெரிய சயின்டிஸ்ட்டுனு என் முன்னாடி பாராட்டி பேசக் கூடாது ஓகேவா?”
     அவள் தன்னை மறந்து தங்கள் இருவரது வாழ்க்கையையும் இணைத்து பேசியது மணிக்கு தெளிவாக புரிய, “பேசவே மாட்டேனே…” என குறும்பு புன்னகையோடு தலையாட்டினான்.

Advertisement