Advertisement

காதல் 9

நாம் ஒருமுறை செய்த தவறு உலகிற்கு அம்பலம்
ஆகும் போது நாம் செய்த
அத்தனை விசயங்களும்
சந்தேகத்திற்கு உள்ளாக்கப் படும்…!

ராதா அந்த படிவத்தை வாங்கி அதை நிரப்ப ஆரம்பித்தாள். அதில் தந்தை பெயர் அருகே ஒரு நொடி தயங்கினாலும் மறுநொடி அதில் நிரப்பியிருந்தாள் அவன் பெயரை “கோகுலக் கண்ணன்”. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் தான் யோசிக்காத ஒரு புதிருக்கான விடை கிடைத்திருந்தது. கமலின் தந்தையைப் பற்றி யோசித்தவன் அது தானாக இருக்கக்கூடும் என இதுவரை யோசிக்கமல் போனான். அது தான்தான் என அறிந்த நொடி என்ன மனநிலையில் இருக்கிறான் என்பது அவனுக்கே புரியாமல் போனது. மகிழ்ச்சி, வேதனை, வலி, கோபம், ஆற்றாமை எல்லாம் ஒரு நொடியில் ஒரே நொடியில் இயலாமையாகவும் வேதனையாகவும் மட்டும் மாறிப் போயின. அவன் செய்த தவறு அனைத்து உறவுகளிடமிருந்தும் அவனைப் பிரித்துவிட்டது. முதலில் தந்தை பிறகு தமக்கை இப்பொழுது மகன் மற்றும் மகனின் தாய்.

செவிலி கூறிச்சென்றது போல அந்த படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு மருத்துவரை பார்க்க சென்றாள். அவளுக்கு மீரா கூறியது எதுவுமே புரியவில்லை. ராதா தனியே செல்வதை பார்த்த சுரேந்தர் அவளுடன் போக நினைக்க அவன் கையை பற்றி நிறுத்தினார் சுந்தரம். அவன் ஏனென்ற கேள்வியுடன் தந்தையை பார்க்க அப்போது கோகுல் அவள் பின்னால் செல்வதை கவனித்து அமைதியானான்.

ராதா டாக்டர் அறையினுள் செல்லும்போது தான் கவனித்தாள் தன் பின்னால் வந்து கொண்டிருந்த கோகுலை. அப்போது இருந்த மனநிலையில் ஏதும் பேசாமல் உள்ளே சென்றவளுக்கு டாக்டர் சொன்ன செய்தியில் முதலில் அதிர்ச்சி ஏற்பட்டாலும் இறுதியில் எரிச்சலே மிஞ்சியது.

“உங்க பையனுக்கு முதுகு தண்டுல ஒரு கட்டி இருக்கு. அந்த கட்டி வளர்ந்து இப்போ முதுகு தண்டுல உள்ள நரம்ப அழுத்துறதால உங்க பையனால நடக்க முடியல. ஒரு ஆபரேசன் செஞ்சா வித்இன் சிக்ஸ் மந்த்ல சரியாகிடுவான். பட் லேட் பண்ணா கொஞ்சம் ரிஸ்க் தான்” எனவும்

“எப்ப டாக்டர் ஆபரேசன் பண்ணனும்” என கேட்டான் கோகுல்.

“இப்ப இருந்து ட்ரீட்மெண்ட் பண்ண ஆரம்பிச்சா இன்னும் பத்து நாள்ல சர்ஜரி பண்ணிடலாம்”

“ஓ.கே டாக்டர் நீங்க பார்மாலிட்டீஸ் எல்லாம் பாருங்க. ஆபரேசனுக்கு டேட் பிக்ஸ் பண்ணலாம். ஆனா அதுக்கும் முன்னாடி ரிப்போர்ட்ஸ் குடுங்க ஒருமுறை வேறவொரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட அட்வைஸ் கேட்டுக்குறேன்” என அவன் கேட்கவும் சரியென கூறியவர் ரிப்போர்ட்டை கையில் கொடுத்துவிட்டு “பையன் இப்போ ட்ரீட்மெண்ட்ல இருக்கட்டும். நீங்க போய் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட ஒபினியன் கேட்டுட்டு வாங்க” என்று அனுப்பிவைத்தார்.

வெளியே வந்ததும் அனைவரும் என்னவென்று கேட்க டாக்டர் கூறியதை கூறியவன் “ஒரு செகேன்ட் ஒபீனியன் கேட்டுட்டு அவங்களும் இதே சொன்னா ஆபரேசனுக்கு ரெடி பண்ணிருவோம்” எனவும் மற்றவர்களும் அவன் கூறியதை ஆமோதித்தனர்.

டாக்டர் அறையிலிருந்து வெளிவந்த ராதா எதுவுமே பேசாமல் அமர்ந்திருப்பதை கண்டு கோகுல் அவளிடம் சென்று “கமலுக்கு ஒன்னும் ஆகாது நீ கவலப்படாத” என்றான்.

“எனக்கு தெரியும். என் பையனுக்கு எதுவும் ஆகாதுன்னு” என்றாள் அவனை பார்த்து.. அவன் அமைதியாக புருவச்சுழிப்புடன் அவளைப் பார்த்தபடி இருக்கவும் “எப்புடி ஆகும்? எதாவது இருந்தாதானே அவனுக்கு எதுவும் ஆக” என நக்கலாக சொல்லவும்

“அப்புடின்னா?” என்றான் கோகுல் கூர்மையாக அவளை பார்த்தபடி

“அப்புடின்னா.. ஒரு தடவ ஏமாந்தா பரவாயில்ல வாழ்கை முழுக்க ஏமாந்துட்டே இருக்க முடியாதுன்னு சொல்றேன். அதுவும் ஒரே மாதிரி” என்றாள் ராதா கோகுலை பார்த்து ஏளனமாக

“என்ன சொல்ற..? நான்.. நான் போய்.. கமல்” என திணறவும் அவனை பார்த்து ஏளனமாக சிரித்தவள் “புதுசா இருக்கே இந்த நடிப்பு.. அன்னைக்கு என் முகத்துக்கு முன்னாடி வந்து நீ வந்தாதான் உன் பையன் உயிரோட இருப்பான்னு சொன்னதகூட ஏத்துக்க முடிஞ்சுச்சு. ஆனா இந்த நடிப்ப…” என ஏளனமாக ஆரம்பித்தவள் கோபத்துடன் முடிக்க…

“ராதா அப்போ நான் சொன்னது உண்மதான். ஆனா இப்ப நான் எதுவும் பண்ணல”

“பொய்… பொய் சொல்லாதீங்க”

“ஏய்… நெஜமாவே” என அவளருகில் செல்ல வேகமாக பின்னோக்கி சென்றவள் “அங்கயே நில்லுங்க. என் பக்கத்துல வந்தா என்னையும் ஏதாவது பண்ணி இதே ஹாஸ்பிடல்ல சேத்துருவீங்க” எனவும் அப்படியே நின்றுவிட்டான்.

“நான்தான் பண்ணேன்னு நீ நினைக்குறியா?” என கண்களில் வலியுடன் கேட்க…

“ஆமாம்” என்றாள் அவள் ஆத்திரத்துடன்.

“சரி நீ அப்புடி நெனச்சா நானே அவன் சரியாக என்னென்ன பண்ணனுமோ பண்றேன்” என்றான்.

“நீங்க சரி பண்றீங்களா? ஒரு வேளை உங்க காசுல என் பிள்ளை பொழச்சாலும் அவன் செத்ததுக்கு சமம்” என அவள் கூறி முடியும்முன் கோகுலின் கரம் ராதாவின் கன்னத்தில் பதிந்திருந்தது. அனைவரும் என்ன நடந்ததென்று உணரும் முன் அப்பொழுது தான் மருத்துவமனையில் நுழைந்து இவர்களை காண வந்துகொண்டிருந்த கண்ணன் இதைப் பார்த்துவிட கண்ணனின் கரம் கோகுலின் கன்னத்தில் இறங்கியது. “அப்பா.. அவ”

“அவ செஞ்சது தப்புதான். அதுக்காக நீ எப்புடி அவள கை நீட்டலாம்” என அதட்டலுடன் கேட்க

“ஆனா” என ஆரம்பித்தவனை கை நீட்டி தடுத்தவர் “என்ன வார்த்தமா இது?” என்றார் குறையாத கோபத்துடன் ராதாவிடம்

“அது… கோபத்துல.. தெரியாம”

“கோபம் வந்தா என்ன வேணாலும் பேசலாமா?” என்றான் கோகுல்.

அவனை நேராக பார்த்தவள் “அவன் என் பையன்” என்றாள் “அதுக்கு?” என அவன் மேலும் சீற கண்ணன் அமைதியாக அவளையே பார்த்தபடி இருந்தார்.

அவரது பார்வையை உணர்ந்த ராதா அவரை பார்ப்பதை தவிர்த்தபடி “அடுத்து என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க. உங்க பையன்தான் இப்ப நடக்குற பிரச்சனைக்கெல்லாம் காரணம். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன செஞ்சாறோ அதவே மறுபடியும் செய்றாரு” என கூற…

“இப்ப நடந்த எதுக்கும் அவன் காரணம் இல்ல” என கண்ணன் உறுதியாக கூற

“எப்புடி சொல்றீங்க?” என்றாள் ராதா சந்தேகத்துடன்

“நீ எப்டி சொல்ற இதெல்லாத்தையும் அவன்தான் செஞ்சான்னு?” என கண்ணன் அவளையே திரும்ப கேட்க…

“ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன செஞ்சாரோ அதான் இப்பவும் செஞ்சுருக்காரு” என ராதா கோபத்துடன் கூறவும்

“ரெண்டு வருசத்துக்கு முன்னால அவன் என்ன செஞ்சானோ அது இப்ப தானா நடக்குது” என அவள் கூறியதை திருத்தியவர் “ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அது உன் பலவீனம்மா. இப்போ இது உன் வாழ்க்கை என் பையன் அடுத்தவங்க பலவீனத்த யூஸ் பண்ணிப்பான் வாழ்க்கைய இல்ல…” என பொறுமையாக எடுத்துச் சொன்னவர்

“கமலுக்கு என்ன வேணும்ன்னாலும் நான் செய்வேம்மா.. எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக்கிறேன். நீ நல்லா யோசிச்சு பாரு. நான் டாக்டர்கிட்ட பேசிட்டு வர்றேன்” என்றவர் ராதாவை தனியே விட்டுவிட்டு அனைவரையும் அழைத்துச் சென்றார்.

“சுந்தரம் நீ பிள்ளைங்கள அழச்சுட்டு வீட்டுக்கு போ. நான் இங்க எல்லாத்தையும் பாத்துக்குறேன்” என அனுப்பியவர் மகனிடம் திரும்பி டாக்டர் என்ன கூறினார் என கேட்டறிந்தார். கோகுல் டாக்டர் கூறிய அனைத்தையும் கூறிவிட்டு “எவ்வளவு சீக்ரம் ஆபரேசன் பண்றோமோ அவ்வளவு நல்லதுன்னு சொன்னார்ப்பா” என்றான்.

“சரி.. பணம் எவ்ளோ செலவாகும்ன்னு சொன்னார்?” என கண்ணன் கேட்கவும்

“நீங்க ஏன் பணத்தபத்தியே பேசுறீங்க? இப்ப ராதாகிட்ட கூட கமலுக்கு எவ்ளோ வேணாலும் செலவளிப்பேன்னு…” என இழுக்க…

அவனை பார்த்து சிரித்தவர் “எவ்ளோ செலவாகுமாம்?” என்றார் மீண்டும்

அவரை புரியாமல் பார்த்தவன் “பதினஞ்சு லட்சம்ன்னு சொன்னார். ஆனா அது எதுக்குப்பா?” என்றான்.

“ராதாகிட்ட அவ்ளோ பணம் இருக்காது”

“நாம கொடுக்கலாம்ப்பா”

“வாங்கமாட்டா”

“நான் குடுத்தா வாங்கமாட்டா.. ஆனா நீங்க குடுத்தா வாங்குவா” எனவும் அவனை பார்த்து சிரித்தவர் “மாட்டா” எனவும்

அவரை புரியாமல் பார்த்தவன் “ஏன்?” என்றான்.

“வா” என அழைத்துச் சென்றவர் டாக்டரிடம் சென்று பேசினார்.

ராதாவிற்கு குழப்பமாக இருந்தது. இது உண்மையென்றால் அவளுக்கு உள்ளம் நடுங்கியது. சரி செய்துவிடலாம் என தைரியம் வந்தாலும் பணம்… அவ்வளவு பணத்தை கண்டிப்பாக அவளால் ஏற்பாடு செய்யமுடியாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும். யோசிக்க யோசிக்க தலைவலி வந்ததுதான் மிச்சம். டாக்டரிடம் பேசிவிட்டு இருவரும் ராதாவிடம் வந்தனர்.

“என்னம்மா… யோசிச்சயா? நான் கமல சென்னைக்கு கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் பாக்கலாம்ன்னு இருக்கேன்” என கண்ணன் கூற…

“இல்ல என்னால அவ்ளோ செலவு பண்ணமுடியாது”

“எங்களால முடியும்”

“உங்க பணத்துல நான் வாழமாட்டேன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்” என்றாள் ராதா தீர்மானமாய்.

“உனக்காக இல்லம்மா.. கமலுக்காக”

“கமல் என் பையன்”

“உண்மதான். ஆனா அதுக்காக அவன இப்புடியே விட்டுட முடியாது”

“நான் அப்படியேவெல்லாம் விடமாட்டேன்”

“என்ன செய்வ?”

“தெரியல. ஆனா ஏதாவது செய்வேன்”

“எப்புடி?”

“நீங்க ஹெல்ப் பண்ண மாட்டீங்களா?”

“நீதான் என் பணம் வேண்டான்னு சொல்லிட்டியே”

“ஆமா.. ஆனா எனக்கு உங்களால கடன் அரேஞ்ச் பண்ணமுடியுமே”

“முடியாதேம்மா.. என் பிசினஸ் எல்லாம் இவன் பொறுப்புல விட்டுட்டேன். கடனுக்கு கையெழுத்து கோகுல்தான் போடனும்” என்றதும் அவரை ஏறிட்டு பார்த்தவள் “இப்ப நான் என்ன செய்யனும்ன்னு நினைக்குறீங்க” என்றாள் நேரடியாக.

“நீ கோகுல கல்யாணம் பண்ணிக்க.. அவன் அவனோட பையனுக்கு செலவு பண்ணிப்பான்” என்றார் வெகுசாதாரணமாக.

தொடரும்…

Advertisement