Advertisement

காதல் 8

நீ என் வாழ்வில் வந்த நாளை
நான் சந்திக்காமல் இருந்திருந்தால்…
இன்று உன் துரோகத்திற்காக எனக்கு
கிடைத்த அழகிய மலரை
நான் கைகளில் ஏந்தி…
கண் கலங்கி… மதி மயங்கி
நின்றிருக்க மாட்டேன்!
இந்த மலராவது தெய்வத்தின் சன்னதி
சென்றடையுமா…? என் கண்ணா…!

சேலையை எடுத்து பார்த்துவிட்டு “ரொம்ப நல்லாயிருக்கு” என்ற அவளது குரலை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க “இந்த சேலைக்கும் பில் போட சொல்லுங்க” என கடைச் சிப்பந்தியிடம் கொடுத்துவிட்டு சென்றவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான். அவனுக்கு குழப்பமாக இருந்தது. ‘நேற்று குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்ததற்கு அப்படி நடந்து கொண்டவ இன்னைக்கு நான் நல்லாயிருக்குன்னு சொன்ன சேலைய எடுத்துட்டு போறா? என்னடா நடக்குது இங்க?’ என நினைத்துக் கொண்டே அவள் பின்னே செல்ல சேலைகளை பில்போட்டு முடித்து கையில் வாங்கியவள் ஒருமுறை பிரித்து பார்த்துவிட்டு “ம்… இதான் இந்தாங்க” என ஒரு பார்சலை அவனிடம் கொடுக்க அதை பிரித்துபார்த்தவன் அதில் தான் தேர்ந்தெடுத்த புடவை இருக்கவும் “இத ஏன் எங்கிட்ட குடுக்குற?” என்றான் கேள்வியாக.

“அட இது நீங்க செலக்ட் பண்ண சேலைதான். உங்களுக்காக நான் வாங்குனேன்”

“எனக்காகன்னா? புரியல” என்றான் கோகுல் சற்று கோபமாகவே

“சாரி. உங்களுக்காகன்னா.. உங்களுக்கு இல்ல. நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்காக. ஆமா… அந்த பொண்ணு பேரென்ன? என்னமோ சொன்னாங்களே” என சிறிது யோசித்தவள் “ம்… ராதிகா. ராதிகாவுக்காக” என கூறி அவன் கையில் பார்சலை மீண்டும் பேக் செய்து கொடுத்தவள் நிற்காமல் சென்றுவிட்டாள்.

அவள் செல்வதைப் பார்த்தவன் பெருமூச்சுடன் “ரைட்டு.. உன்னைப் போய் நான் அப்படி நினைத்தேன் பாரு.. என்னைச் சொல்லனும்” என்றவன் தலையை உலுக்கிவிட்டு “கஷ்டம்தான்” என வாய்விட்டு கூறியபடி அவளை பின்தொடர்ந்து சென்றான்.

காரில் இருவரும் வீடு திரும்பும்போதும் மௌனமே நிலவ அதை கலைக்கும் விதமாக அவளை திரும்பி பார்த்தவன் “ராதா” என அழைக்க.. அவள் அவன்புறம் திரும்பியதும் “நா.. நான்.. ஒன்னு கேட்டா.. தப்பா நினைக்க மாட்டியே?” என தயங்கியபடி தான் கேட்கவந்ததை கேட்டுவிட அவள் பார்த்த பார்வையிலும் உதட்டில் உறைந்த நக்கல் சிரிப்பிலுமே தெரிந்தது ஏதோ ஏடாகூடமாக கூறப்போகிறாள் என்று அதை மெய்ப்பிக்கும் விதமாக “ஓ.. தாராளமா கேளுங்க.. நீங்க கேட்டு நான் தப்பா நினைப்பேனா என்ன? உங்க கேள்விக்கு பதில் சொல்றது என்னோட பாக்கியம் இல்லையா?” என அவள் பதிலில் பசை இல்லாமல் வாய் ஒட்டிக்கொண்டது கோகுலிற்கு.

அவன் அமைதியாக வரவும் ராதாவே தொடர்ந்து “ஏதோ கேட்க்கனும்ன்னு சொன்னீங்க..? இப்போ அமைதியா வர்றீங்க.. கேட்க்கறதுக்கு எதுவும் இல்லையா? இல்ல..” என கேள்வியாக நிறுத்த கோகுல் திரும்பி அவளை கேள்வியாக பார்க்கவும் “என்ன கேள்வி கேட்க்குற தகுதி உங்களுக்கு இல்லையா?” என அவனை கூர்மையாக பார்த்து அவள் கேட்கவும் ஏதோ பதில் சொல்ல வந்தவனை கை உயர்த்தி தடுத்தவள் “தகுதி மட்டுமில்ல என்ன கேள்வி கேட்க்கற எந்த உரிமையும் உங்களுக்கு இல்ல” என முகத்தில் அடித்தாற் போல கூறியவள் வெடுக்கென்று திரும்பிக்கொள்ள ‘எப்பா.. கடவுள் இவளுக்கு மட்டும் இதயத்த இரும்பாலயும் நாக்க தேள் கொடுக்காலயும் செஞ்சிருப்பாரு போல.. என்ன சொல்ல வர்றேன்னு ஒரு வார்த்தை நான் பேசி முடிக்கற வரைக்கும் பொறுமையா கேக்கறாளா? எப்படா வாயத் திறப்பான்னு காத்துக்கிட்டே இருப்பா போல’ என நினைத்தவன் தன் ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் ஸ்டியரிங் வீலில் ஓங்கி குத்த அந்த சத்தத்தில் திரும்பி பார்த்த ராதாவோ ஒரு ஏளனப் புன்னகையுடன் அமைதியாக திரும்பிக் கொண்டாள்.

இருவரும் தனிமையில் சந்திக்க வாய்ப்பில்லாதபடி பார்த்துக் கொண்டாள் ராதா. மறுநாள் திருமணம் நல்லபடியாக முடிய அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ராதா பெரிதாக திருமணக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருக்க கோகுல் ராதாவை அதிகம் பார்க்கும் வாய்ப்பும் ஏற்படாமல் போகவே அந்த நாள் எந்த சலசலப்பும் இன்றி நன்றாகவே முடிந்தது.

திருமணம் முடிந்த மறுநாள் இளையவர்கள் அனைவரும் வெளியில் செல்ல பிளான் செய்ய பெரியவர்களும் ஒத்துக் கொண்டனர். ராதாவை மீரா வற்புறுத்தி அழைக்க எப்போதும் போல அவள் பிடிவாதமே வென்று ராதாவும் மற்றவர்களுடன் செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

அனைவரும் ஒன்றாக சென்றாலும் போகும் வழியில் ஒரு இடத்தில் கூடி ஆளுக்கொரு இடம் செல்வதாக தீர்மானித்து சுரேந்தர் மீராவுடன் கமலையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான். அவர்கள் மூவரும் சென்றதும் சுதாகரும் அவன் மனைவி மித்ராவும் “நாங்க லேக் போறோம். நீங்களும் எங்கயாவது போய் சுத்தி பாத்துட்டு இங்கயே வந்துருங்க நாம எல்லாரும் சேந்தே போகலாம்” என அவர்கள் ஒரு காரில் சென்றுவிட புதிதாய் திருமணமானவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என அமைதியாக இருந்துவிட்டாள் ராதா.

கோகுல் அமைதியாக இருக்க “வீட்ல கொண்டுபோய் விடுங்க” என்றாள் ராதா.

“கார்டன் பக்கத்துலதான் இருக்கு. போகலாமா?” என்றவனை தீப்பார்வை பார்த்தாள் ராதா.

“இல்ல.. நாம இப்ப போனா அவங்க தனியா போன விசயம் தெரிஞ்சுரும். அதான்” என்றான் கோகுல். ‘அவன் கூறுவதும் சரிதான். சுதாகரும் மித்ராவும் திருமணமானவர்கள். ஆனால் சுரேந்தரும் மீராவும்’ என யோசித்தவள் அமைதியாக சென்று காரில் அமர்ந்துவிட இருவரும் சிறிது நேரத்தில் கார்டனில் இருந்தனர்.

அங்கே சென்றவள் சுற்றிப் பார்க்காமல் ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டாள். ஒரு மணி நேரமாக அவளை பார்த்தவாறு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தவனுக்கு ‘இதுக்கு முன்னால இங்கவந்து என்னல்லாம் ஆட்டம் போட்டோம்’ என நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இன்றுடன் திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்து ராதா இன்று இரவு தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுவிடுவாள் என்பதை ஏற்கனவே சுரேந்தரின் மூலம் அறிந்திருந்தான் கோகுல். எப்படியாவது இன்று அவளிடம் மன்னிப்பை பெற்றே ஆகவேண்டும் என எண்ணியவன் அவளிடம் பேச வேண்டுமென முடிவெடுத்து அவளருகே சென்றான். அதுமட்டுமின்றி ராதாவின் கணவரைப் பற்றி இங்கு எவருக்கும் தெரியவில்லை. அது ஏன் என்ற கேள்வியும் தொடர்ந்து ராதையின் தாய் அவள் இறந்துவிட்டதாக கூறியதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள எண்ணினான் கோகுல்.

பூங்காவில் சென்று அமர்ந்தவள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை ரசித்தபடி அமைதியாக அமர்ந்திருக்க அவளது மனமோ அமைதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. “ராதா..” என அழைத்தவன் அவளருகில் அமர அவனை திரும்பிப் பார்த்தவள் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன் மனதை திடப்படுத்தியவன் “சாரி” என

“எதுக்கு?”

“எதுக்குன்னு உனக்கே தெரியும் ராதா. அதை நான் எப்படி விளக்கறதுன்னு எனக்கு தெரியல.. விளக்கம் சொல்ல முடியல. புரியுது.. விளக்கம் சொல்லவே முடியாதப்போ அத நீ மன்னிக்கறது ரொம்ப கஷ்டம் தான். ஆனாலும் நான் வேற என்ன சொல்றதுன்னு தெரியல.. ப்ளீஸ்.. தயவுசெய்து என்னை மன்னிச்சுரு” என

அவனையே பார்த்தவள் “நான் மன்னிச்சிட்டா இங்கிருந்து போயிடுவீங்கன்னா நான் உங்கள மன்னிச்சிடுறேன்.. தயவுசெய்து இந்த ஊரவிட்டும் என் கண்ணவிட்டும் மறைஞ்சு போயிடுங்க.” என்றவள் “என் வாழ்க்கையில நான் இழந்தது அதிகம். அந்த இழப்புகளை தினமும் இந்த வாழ்க்கை எனக்கு நியாபகப்படுத்திக்கிட்டே இருக்கு. ஒருவேளை நான் இதெல்லாம் மறந்துட்டேன்னா உங்கள மன்னிச்சிடுவேன்னு நினைக்கிறேன். ஆனா மறக்க முடியல.” என்றவள் நிமிர்ந்து அமர்ந்து தன்னருகில் இருந்தவனை பார்த்தவள் “நான் உங்கள காயப்படுத்த விரும்பல. தயவுசெய்து என்னை தனியா விட்டுடுங்க” என கேட்க

“ஆனா..” என ஆரம்பித்தவனை கை உயர்த்தி தடுத்தவள் “இதுக்கும் மேல ஒரு வார்த்தை நீங்க பேசுனீங்கன்னா கூட எனக்கு பொறுமை இருக்காது. கத்தியை விட கூர்மையான வார்த்தைகள் உங்களை குத்திக் கிழிக்க காத்திருக்கும். உங்களுக்கு ஓ.கேன்னா எனக்கும் ஓ.கே. பொதுவாகவே யாரையும் காயப்படுத்தக் கூடாதுன்னு நினைப்பேன். அதனாலதான் இவ்ளோதூரம் எடுத்துச்சொல்றேன்” என அமர்த்தலாக கூற அதற்குமேல் அவன் பேசாமல் அமைதியாக எழுந்து சென்று தள்ளியிருந்த பென்ஞ்சில் அமர்ந்துகொண்டான்.

அப்போது அவன் அலைபேசி அழைக்க யாரென்று பார்த்தவன் சுரேந்தர் எனவும் அழைப்பை எடுத்து “சொல்லுடா” என்றவனுக்கு அவன் சொன்ன செய்தி உவப்பாக இல்லை என்பது அவன் முகத்தை பார்த்தாலே தெரிந்தது.

“அப்பாகிட்ட சொல்லிட்டேன். அப்பா அங்கிள்க்கு கால்பண்ணி சொல்றதா சொல்லிட்டாங்க. நீங்க உடனே ராணிய கூட்டிட்டு கிளம்பி வாங்கண்ணே” என்றான்.

“வர்றோம்” என அழைப்பைத் துண்டித்தவன் “ராதா வா போகலாம்” என அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

சுரேந்தரிடமிருந்து அழைப்பு வந்ததும் ராதாவை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் கோகுல். இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது கண்ணன் தன் மகனை அழைத்தார்.

காரை ஓரமாக நிறுத்தியவன் இறங்கி சென்று அழைப்பை ஏற்க “என்ன நடந்துச்சு?” என கேட்டார் கண்ணன்.

“தெரியலப்பா. சுரேந்தர் கால் பண்ணி கமலுக்கு உடம்பு சரியில்ல ராதாவ கூட்டிட்டு வாங்கன்னு சொன்னான். உங்களுக்கும் இன்பார்ம் பண்ணிட்டதா சொன்னான்” எனவும்

“ராதாகிட்ட சொல்லிட்டயா?”

“இன்னும் இல்லப்பா. அங்க போய் சூழ்நிலைய பாத்து சொல்லலாம்ன்னு விட்டுட்டேன்”

“சரி அப்புடியே பண்ணு… நான் ஏர்போர்ட் வந்துட்டேன். இன்னும் அரைமணி நேரத்துல வந்துருவேன்” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட காரை எடுத்த கோகுல் பத்து நிமிடத்தில் மருத்துவமனையின் முன்னே நின்றான்.

மருத்துவமனையை பார்த்த ராதா கேள்வியாக கோகுலை பார்க்க “இறங்கு” என்றவன் எதுவுமே கூறாமல் முன்னே செல்ல வேறு வழியில்லாமல் மனம் நிறைந்த கேள்விகளுடன் அமைதியாக அவனை பின்தொடர்ந்து சென்றாள் ராதா.

உள்ளே நுழைந்ததும் வேகமாக ராதாவிடம் ஓடிவந்த மீரா “அக்கா.. அக்கா. நல்லா தான்க்கா விளையாண்டுட்டு இருந்தான். திடீர்னு கீழ உக்காந்துட்டான்க்கா. எந்திரிக்க முடியலைன்னு அழுதான்க்கா. நாங்க தூக்கி நிப்பாட்டுனா கீழ விழுந்துட்டே இருந்தான் அதான் நாங்க ரெண்டு பேரும் அவன ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டோம்” என….

மீரா ஏதோ புரியாத மொழி பேசுவதைப் போல புரியாமல் பார்த்தவள் “யாரு?” என்றாள்.

அவளை பார்த்தவள் “கமல்க்கா” என அந்த நேரம் அங்கே வந்த செவிலி “அந்தப் பையன கொண்டுவந்து சேர்த்தது நீங்கதான. இந்த பார்ம ஃபில் பண்ணி கொடுத்துட்டு போய் டாக்டர பாருங்க” என கூறிச் செல்ல ராதா அந்த படிவத்தை வாங்கி அதை நிரப்ப ஆரம்பித்தாள். அதில் தந்தை பெயர் அருகே ஒரு நொடி தயங்கினாலும் மறுநொடி அதில் நிரப்பியிருந்தாள் அவன் பெயரை “கோகுலக் கண்ணன்”. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் தான் யோசிக்காத ஒரு புதிருக்கான விடை கிடைத்திருந்தது. கமலின் தந்தையைப் பற்றி யோசித்தவன் அது தானாக இருக்கக்கூடும் என இதுவரை யோசிக்கமல் போனான்.

தொடரும்…

Advertisement