Advertisement

காதல் 7

எத்தனை கோபத்திலும் வார்த்தைகளை

விட்டு விடாதீர்கள்… காயங்களை விட

அது தரும் வலிகள் அதிகம்.

பின்பு எத்தனை முறை மன்னிப்பு

கேட்டாலும் ஆறாத காயம் அது!!

ராதா அழைப்பை துண்டித்த அடுத்த நொடியே கோகுலிடமிருந்து அழைப்பு வந்தது கண்ணனிற்கு. ‘இப்ப இவன வேற சமாளிக்கனுமா?’ என நினைத்தவர் அழைப்பை ஏற்று காதில் வைக்க…

“என்ன எதுக்காக இங்க அனுப்புனீங்கப்பா?” என்றான் கோகுல்.

“சுந்தரத்தோட பையன் சுதாகர் கல்யாணத்துக்குப்பா” என்றார் கண்ணன் எந்தவிதமான அலட்டலுமின்றி.

“ராதா இங்க இருக்க விசயம் உங்களுக்கு தெரியாது. அப்புடிதானப்பா?” என பீடிகையின்றி கோகுல் கேட்க…

“எந்த ராதா…?” என சிறிது நேரம் யோசித்தவர் “ஓ… உன் அம்மா உனக்கு பாத்த பொண்ணா…? ஃபார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன் அவ பேர் ராதா இல்ல ராதிகா” என்றார்

“அப்பா” என கோகுல் அழுத்தி அழைக்கவும்

“அப்ப அந்த பொண்ண சொல்லலையா…? வேற யாருப்பா?” என்றார் அறியாதவர் போல

“ராதாப்பா”

“யாருப்பா?”

“அன்னைக்கு மாமா இறந்தப்ப சொன்னேனே. அந்த ராதாப்பா” என்றான் கோகுல் அவருக்கு விளக்கும் விதமாக.

“ஓ… ஆனா அவ செத்துட்டதா சொன்னியேப்பா.. இப்ப எப்புடி உயிரோட வந்தா?” எனவும்…

“தெரியலப்பா. ஆனா சுதாகர்கிட்ட கேட்டதுக்கு அவ ஒரு வருஷமாவே அவங்க ஆபிஸ்லதான் வேலையில இருக்கறதா சொன்னாம்பா” என்றவன் தயங்கியபடியே “அவ.. அவளுக்கு… குழ..ந்.தை இருக்கதா சொன்னாம்ப்பா” என்றான்.

‘சொல்ல சொன்னதே நான்தானப்பா’ என சிரித்துக் கொண்டவர் “ஒருவேள நீ சொன்ன மாதிரி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாளோ?”

“அப்பா” அவர் கூறிமுடியும் இவன் பல்லை கடித்தான்.

“என்னடா இப்ப பிரச்சனை? எனக்கு நெறய வேலையிருக்கு” என இவர் சற்று கடுப்பாக கூறவும்

“தெரியலப்பா. ரொம்ப குழப்பமா இருக்கு. அவ பேரு ராணின்னு சொல்றாங்க. குழந்தை இருக்கதா சொல்றாங்க. ஐம் டோட்டலி கன்பியூஸ்டு” என்றான் குழப்பமாக.

“அவ யாரா இருந்தா உனக்கென்னப்பா. நீ கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வா” என்றார் கண்ணன் அலட்சியமாக.

“எனக்கென்னமோ நீங்கதான் எனக்கு தெரியாம அவளுக்கு ஹெல்ப் பண்றீங்களோன்னு தோனுது” என்றான் சந்தேகமாக

“நான் எதுவும் பண்ணல. உன்கூட இருந்த பொண்ணுங்களுக்கெல்லாம் நான் ஹெல்ப் பண்ணா பிசினஸ் இல்லப்பா ஆசிரமம்தான் வச்சு நடத்தனும்” என நக்கலாக கண்ணன் கூற…

“ஆனா நீங்க சப்போர்ட் பண்ண ஒரே பொண்ணு இவதானேப்பா” என்றான் கோகுல் நக்கலுடன்

“ஆனா நீதான் அன்னைக்கே சொல்லிட்டியேப்பா. கவலைப்படாதீங்கப்பா அவ வேற கல்யாணம் பண்ணி ஜாலியா இருப்பான்னு” மகனின் நக்கலுடன் கண்ணனும் பதில் கூற

“அப்பா” என கத்தத்தான் முடிந்தது அவர் மகனால்.

“நான் தான்ப்பா உங்க அப்பா. அது எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. ஏன் வார்த்தைக்கு வார்த்த அப்பா அப்பான்னுட்டு இருக்க” என

“……”

“என்னப்பா நீதான சொன்ன அந்த பொண்ணுக்கு குழந்த இருக்குன்னு. அப்ப வேற கல்யாணம் பண்ணியிருப்பா தான?”

“அவ அக்கா கொழந்தைய கூட அவ பையன்னுதான் சொல்லுவா. அவனும்கூட அவள அம்மான்னு தான் கூப்பிடுவான்” என்றான் கோபத்துடன்.

“ஓ… அப்ப அந்த பையன் அவ அக்கா பையன்னு சொல்றியாப்பா?” என்றார் கண்ணன்.

“நான் அவ குழந்தைன்னு தானப்பா சொன்னேன். பையன்னு சொல்லலையே?” என கோகுல் சந்தேகமாக கேட்க

“அப்ப பொண்ணாப்பா?” என்றார் கண்ணன்.

“அப்பா…” என மகன் மீண்டும் பல்லைக் கடிக்க

“என்னப்பா?” என்றார் தந்தையோ அமைதியே உருவாக.

“அப்பா நீங்க ஏதோ பண்றீங்க ஆனா என்னன்னு சொல்லல. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. அவள நீங்க தான சுந்தரம் அங்கிள் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புனது?” என்றான்.

“சுந்தரம் கம்பெனியில ஐநூறு பேர் வேல செய்வாங்க. அத்தன பேரும் நான் வேலைக்கு வைச்சவங்களா?”

“நீங்க இப்புடியெல்லாம் பேச மாட்டீங்களே… சம்திங் வென்ட் ராங்” என்றவன் திடீரென “தேங்க்ஸ்ப்பா” என்றான் நெகிழ்ச்சியுடன்.

கண்ணன் அமைதியாக இருக்கவும் “அவ உயிரோட இல்லைன்னதும் எவ்வளவு வருத்தப்பட்டேன்னு சொல்ல முடியாதுப்பா. அன்னைக்கு அவகிட்ட மன்னிப்பு கேக்கதான் அவள தேடி போனேன். ஆனா முடியல இப்ப எனக்கு இன்னொரு வாய்ப்பு கெடச்சுருக்கு. எனக்கு தெரியும்ப்பா இத நீங்கதான் பண்ணீங்கன்னு. நீங்க என்ன ஆசப்படுறீங்கன்னு தெரியல. ஆனா நான் அவகிட்ட மன்னிப்பு கேக்காம இங்கருந்து வரமாட்டேன்” என்றவன் அழைப்பை அணைத்துவிட்டான்.

இனி தன் மகன் பார்த்துக் கொள்வான் என புன்னகைத்தவர் அவரது அலுவலை பார்க்க ஆரம்பித்தார்.

தன் தந்தையிடம் பேசிய பின்பு கோகுல் நிம்மதியாக உணர்ந்தான். அவன் தந்தை தான் ராதாவை சுந்தரத்தின் பாதுகாப்பில் தங்க வைத்துள்ளார் என்பது அவனுக்கு திண்ணமே. ஏதாவது செய்து ராதாவிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் அவளும் அவனை மன்னித்தே ஆகவேண்டும் என்பதில் மட்டும் அவன் உறுதியாக இருந்தான்.

ராதா அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையைவிட்டு வெளியில் வராமல் இருக்க கோகுல் ராதாவின் மகனிடம் சென்று “உன் பேரென்ன கண்ணா..?” என…

“கண்ணா” என்றது அந்த குழந்தை. தான் கூறியதையே திரும்ப குழந்தை கூறுகிறானோ என நினைத்த கோகுல் அருகிலிருந்த சுரேந்திரனை பார்க்க “கமலக் கண்ணன்” என்றான் அவன்.

அந்த பெயரை கேட்டதும் ஏதோபோலானது அவனுக்கு. அவன் அக்கா மகள் பெயர் கமலி. இந்த குழந்தை அவளை நினைவுபடுத்துவது போலவே இருந்தது. குழந்தையை கையில் ஏந்தியவன் வெளியே அழைத்து சென்று ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தான். அதை தன் அறையில் நின்று பார்த்த ராதாவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் வர வேகமாக வெளியே வந்தவள் “கமல்.. இங்க வா” என அழைத்தாள்.

அவளிடம் வந்தவன் “அம்மா… ஐசு” என்றான் குதூகலமாக. அதை கண்டவளுக்கு மேலும் ஆத்திரம் வர கமல் கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை தட்டிவிட்டாள்.

அவள் ஐஸ்கிரீமை தட்டிவிட்டதும் குழந்தை அழஆரம்பித்துவிட்டான். அவன் அழவும் வேகமாக அவளருகில் வந்த கோகுல் “ராதா” என அதட்ட அவனை ஒரு கையை உயர்த்தி தடுத்தவள் “என் பையனுக்கு என்ன வாங்கி கொடுக்கனும்ன்னு எனக்கு தெரியும்.. நீங்க ஒன்னும் அவனுக்கு வாங்கி கொடுக்க தேவையில்லை” என்றவள் பையனிடம் திரும்பி “வா” என கையைப்பற்ற “ஆ… நோ நோ.. ஐசு..” என அழுதவன் தரையில் அமர்ந்துவிட..

“ராதா… என் மேல இருக்க கோபத்த ஏன் அவன் மேல காட்டுற? ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்க”

“என் பையனுக்கு என்ன வாங்கி கொடுக்கனும்? யார் வாங்கி கொடுக்கனும்?ன்னு நான் தான் முடிவுபண்ணனும்” என அவன் பேச்சில் இடையிட்டு பேசியவள் தன் மகனை தூக்கிக் கொண்டு சென்றுவிட அழும் குழந்தையை பார்த்தபடி நின்றவன் ‘ஒரு வார்த்த நான் என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேக்ககூட மாட்டேங்கிறாளே’ என நினைத்து பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றவன் ஒரு ஐஸ்கிரீமை வாங்கிச் சென்று சுரேந்தரிடம் கொடுத்து கமலிடம் கொடுக்கச் சொன்னான்.

அதோடு விட்டுவிட்டால் அவன்தான் கோகுல் கிடையாதே. அன்று இரவு தனிமை கிடைத்தபோது ராதாவை சந்தித்தவன் “ராதா” என அழைக்க

“ராணி” என்றாள் ராதா. அவன் பார்க்கவும் “இங்க எல்லாருக்கும் நான் ராணிதான்” என…

“நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”

“என்ன?”

“அது… அன்னைக்கு… அன்னைக்கு..” என அவன் தயங்க

“என்னைக்கு?” என்றாள் ராதா அலட்டலின்றி.

“அன்னைக்கு தான்.. அது… அன்னைக்கு.. நடந்ததுக்கு” என்ன சொல்லி விளக்குவது என புரியாமல் தவித்தபடி அவள் முகம் பார்க்க..

“என்னைக்கு..? என்ன நடந்தது?” என அமைதியாக ராதா கேட்கவும் ‘ராட்சசி’ என மனதில் திட்டியவன்… “சாரி கேக்கனும்” என்றான்.

“எதுக்கு?” என்றாள் ஒற்றைக் கேள்வியாக..

“அதான்.. அது.. அன்னைக்கு. நடந்த..து.க்கு” என்ன சொல்லி விளக்குவான் அவன் செய்த தவறை திணறியபடியே இருந்தான்.

அவன் திணறுவதை பார்த்தவளுக்கு மனதுக்குள் பரமானந்தமாக இருந்தது. ‘தப்பு செய்யும் போது இல்லாத தயக்கம் நான் தப்பு செஞ்சேன்னு சொல்லும் போது வருதா?’ என ஏளனமாக நினைத்தவள் “எனக்கு நிறைய வேலையிருக்கு. சோ நீங்க என்ன பண்றீங்கன்னா எப்போ? எங்க? என்னைக்கு? என்ன நடந்துச்சுன்னு? நல்லா யோசிச்சுட்டு வந்து சொல்லுங்க” என்றபடி நகரப்போக அவளை நகரவிடாமல் தடுத்தவன் “உனக்கு நான் என்ன சொல்லவர்றேன்னு தெரியும்” என…

“தெரியாது” என்றாள் ராதா பட்டென்று.

“நான் பேசுறத முழுசா கேக்குற அளவுக்கு உனக்கு பொறுமை இல்லையில்ல” என்றான் கடுப்புடன்

“பொறுமை இருக்கா இல்லையான்னு தெரியல. ஆனா நாம ரெண்டு பேரும் பேசுறதுக்கு விசயம் எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்” என்றவள் அவன் தன் வழியை மறைப்பான் என உணர்ந்து வந்த வழியே திரும்பி சென்றுவிட்டாள்.

“ஆ…” என கத்தியவன் ‘ம்… இந்த கூட்டத்துல தனியா பாக்குறதே கஷ்டம். அதுலையும் கெடச்ச சான்ஸ மிஸ் பண்ணியாச்சு இனிமே’ அவள் சென்ற திசையை பார்த்தவன் ‘ம்ஹீம்.. முடியாதுடா சாமி. நாளைக்கு பாப்போம்’ என நினைத்தபடி மாப்பிள்ளை அறைக்கு சென்றவனை அவன் தன் வருங்கால மனைவியுடன் பேசியே கொலைவெறி ஆக்கினான்.

இங்கே ஒருவன் பல்பு வாங்கி கடுப்போட வந்தா இவன் கொஞ்சியே வெறியேத்துறான்டா என நினைத்து எழுந்து சென்றவன் சுரேந்தரின் அறையில் சென்று படுத்துவிட அவனோ தன்னுடைய காதலையும் காதலியையும் பற்றி வர்ணித்தே அவன் உயிரை வாங்கிக்கொண்டு இருக்க கோகுலோ நொந்து நூலாகி வெந்து நூடுல்ஸே ஆகிவிட்டான். ‘இந்த நாட்டுல நம்மளத் தவிர எல்லாரும் அவனவன் வாழ்க்கையை நிம்மதியா அனுபவிக்கிறான்டா’ என நினைத்தவன் சுரேந்தரை முறைத்துப் பார்த்தவாறு படுக்கையில் கவிழ்ந்து படுத்து காதுகள் இரண்டையும் அடைத்துக் கொண்டான்.

தன் அலுவல்கள் அனைத்தையும் முடித்துவிட்டு வந்த கண்ணன் வழக்கம் போல ராதாவிற்கு அழைக்க “ஹலோ” என்றாள் ராதா.

“இன்னைக்கு நாள் எப்படிம்மா போச்சு?” கண்ணன் விஷமமாக கேட்க

“ம்… ரொம்ப நல்லா போச்சு. அஸ்யூசுவல்..” என்றாள் ராதா.

“கமல் என்னம்மா செய்யறான்?”

“தூங்கறான்”

“மாமான்னு கூப்பிட இன்னும் மனசு வரல போலயேம்மா?” என கண்ணன் வருத்தத்துடன் கூறவும் அமைதியாக இருந்தாள். “கமல் கோகுல பாத்தானாம்மா?” தயங்கி தயங்கி கேட்டார்.

“உங்க பையன்கிட்ட கேட்டுருப்பீங்களே?” என்றவள் “இது தேவையில்லாதது. எனக்கு அவர் என் பையன்கிட்ட வர்றதுகூட பிடிக்கல. ஏன் இப்படி பண்றீங்கன்னு எனக்கு தெரியல.. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். என் நிம்மதிய கெடுக்கறதுக்காகவே இப்ப நீங்க உங்க பையன அனுப்பி வைச்சுருக்கீங்க” என்றாள் ராதா கோபத்துடன்.

“உன் பேச்சுக்கு மதிப்பு குடுத்துதான் ரெண்டு வருஷத்துக்கும் மேல அவன உன்கிட்ட கூட வரவிடாம பாத்துக்கிட்டேன். உன் மனசு மாறும்ன்னு பாத்தேன். ஆனா நீ மேலும் மேலும் வன்மத்த வளத்துக்கிட்டு தான் இருக்கியே தவிர அவன ஏத்துக்குற மாதிரி தெரியல. வேற வழியில்லாம தான் அவன நான் அங்க அனுப்பிவச்சேன்” என்றார் அவர் அவளுக்கு புரியவைக்கும் பொருட்டு

“எனக்கு பிடிக்கல”

“உனக்காக இல்லைன்னாலும் கமலுக்காக” என்றார் அவர். “இத நீ ஏத்துக்கிட்டு தான் ஆகனும்ன்னு சொல்லமாட்டேன். அட்லீஸ்ட் ட்ரை பண்ணி பாரு என்னோட திருப்திக்காக இத செஞ்சேன்னு இருக்கட்டுமே” என உறுக்கமாக சொல்லவும் அவளால் பதில் பேச முடியவில்லை.

“இதுவரைக்கும் நான் உன் இஷ்டத்துக்கு விரோதமா எதுவுமே செஞ்சதில்லம்மா. இன்னைக்கு நீ எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் செய்” என கண்ணன் நிறுத்த…

“சொல்லுங்க” என்றாள் ராதா.

“கமல கோகுல்கிட்ட பழகவிடு” என்றார். இப்படி கேட்பார் என எதிர்பார்க்காதவள் “ஆனா…” என “எனக்காக இந்த ஒரு விசயத்த மட்டும் செய்ம்மா” என அவள் பேச்சை இடைவெட்டி கூறினார். அவரிடம் மறுப்பு தெரிவிக்க மனமில்;லாமல் சரியென சொல்லிவிட்டாள். ஆனாலும் மனம் முரண்டியது. ‘சரி ரெண்டு நாள் தானே’ என தன்மனதை சமாதானபடுத்தியவள் உறங்க சென்றாள்.

அடுத்த நாள் விடியல் அழகாகத்தான் இருந்தது. ஆனால் கோகுல், ராதா இருவரின் மனம் மட்டும் இன்னைக்கு என்ன காத்திருக்கோ? என்ற ரீதியிலேயே சிந்தித்தது.

பத்து மணிவரை இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. பத்து மணிக்கு ராதாவை அழைத்த சுந்தரம் “ராணி கல்யாணத்துக்கு ஆன்ட்டிக்கு ஒரு சேலை வாங்கி படைச்சு கும்பிடனும்ன்னு நெனச்சேன். ஆனா புடவைய வீட்லயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன். நீ பக்கத்துல இருக்க கடைக்கு போய் வேற ஒரு நல்ல சேலையா பாத்து வாங்கிக்கிட்டு வந்துற்றியாம்மா?” என கேட்டார்.

மறுக்க காரணம் ஏதுமில்லாததால் “சரி அங்கிள். ஒரு டென் மினிட்ஸ்ல ரெடியாகி வந்ருடுறேன்” என சொல்லிவிட்டு சென்றாள். அவள் திரும்பி வரும்போது கோகுல் நின்றிருந்தான். ராதா வருவதைப் பார்த்த சுந்தரம் “நீ தம்பிகூட போய்ட்டு வாம்மா?” என்றவர் அவள் பதில் பேசும்முன் சென்றுவிட வேறு வழியில்லாமல் அவனுடனே சென்றாள்.

தேடிய தனிமை தேடிச்செல்லாமலே கோகுலிற்கு கிடைக்க இன்று எப்படியாவது ராதாவிடம் பேசிவிட வேண்டுமென முடிவெடுத்தபடி அவளுடன் காரில் பயணத்தை ஆரம்பித்தான். காரில் ஏறியவுடன் ஜன்னல்புறம் திரும்பியவள் அவன்புறம் திரும்புவதே பாவம் எனும்படியாக அப்படியே அமர்ந்துவிட்டாள் ராதா. தான் என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என மனதிற்குள் ஓட்டியபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தவனோ கார் அந்த பிரபல துணிக்கடையின் முன்னே நிறுத்தும்வரை எந்த ஒரு வழியையும் கண்டுபிடிக்கவில்லை. கடைக்குள் சென்று மயில் கழுத்து நிறத்தில் சேலை முழுவதும் ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய ஒரு சேலையை தேர்வு செய்தவள் பில்லிற்கு அனுப்பிவிட்டு திரும்பி பார்க்க கோகுல் ஒரு செம்பவள நிறத்தில் அழகிய வேலைப்பாடுடைய சேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனருகில் சென்றவள் “போகலாமா” என கேட்க… அவளிடம் திரும்பியவன் “ராதா இந்த சேலை ரொம்ப அழகா இருக்குல” என புடவையை எடுத்து அவளிடம் காட்ட அவள் பதிலெதுவும் பேசாமல் அவனையே பார்த்தபடி இருந்தாள்.

அவளிடமிருந்து பதிலேதும் வராததால் ராதாவை பார்த்த கோகுல் அவள் கண்களிலிருந்த கேள்வியை பார்த்து ‘போச்சுடா.. நல்லாயிருக்குன்னு சொன்னதுக்கே இந்த பார்வ பாக்குறா… இதுல நாம இந்த புடவையை எடுத்தோம் அவ்வளவுதான்’ என நினைத்தபடி எடுத்த சேலையை அப்படியே வைத்துவிட்டு திரும்ப அந்த சேலையை எடுத்து பார்த்துவிட்டு “ரொம்ப நல்லாயிருக்கு” என்ற அவளது குரலை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க “இந்த சேலைக்கும் பில் போட சொல்லுங்க” என கடைச் சிப்பந்தியிடம் கொடுத்துவிட்டு சென்றவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

தொடரும்…

Advertisement