Advertisement

காதல் 6

வாழ்வே…
பொய்யாய் போனதே..!
அதில் வலிகளே மீதம் ஆனதே..!
ரத்தம் இல்லை! ரணங்கள் மட்டும் மனதில்…
காயங்கள் இல்லை! கறையாத வடுக்கள்
மட்டும் மனதினில்…
இந்த வாழ்வு மாறுமோ..?
மாற்றம் மட்டுமே மாறாதது!
அந்த மாற்றம் என் வாழ்வில் வருமோ..?
வருவதானால் உன் உருவில் மட்டுமே வரும்…
நீயே என் அருகில் இல்லாதபோது
அந்த மாற்றம் மட்டும் எவ்வாறு நிகழும்..!
என்னவனே..! என் மன்னவனே..!

கோகுல் செல்வதற்கென்றே காத்திருந்தது போல சுதாகரிடம் வந்து நின்றார் சுந்தரம். அவரை பார்த்தவன் “அப்பா நீங்க கஷ்டப்பட்ட காலத்துல உதவுன உங்க பிரண்டுக்கு நீங்க உதவி செய்யறதுல தப்பில்ல. ஆனா அதுக்காக என் பிரண்ட்ஸ கல்யாணத்துக்கு கூப்பிட கூட கூடாதுன்னு சொல்றது நியாயமேயில்ல” என கோபத்துடன் பொங்க…

“ஏய்… நிறுத்துடா. கண்ணன் என்கிட்ட உதவி கேக்கலைன்னா கூட நான் உன் பிரண்ட்ஸ இந்த கல்யாணத்துக்கு கூப்பிட கூடாதுன்னுதான் சொல்லியிருப்பேன்” என்றார் சுந்தரம்.

“ஏன்ப்பா?” என அப்பாவியாக கேட்க

“ஏனா..?” என தன் மகனை முறைத்தவர் “பிரெண்ட்ஸாடா அவனுங்க.. அதுல எவனாவது ஒருத்தன் உருப்படியா பேசுவானா..? பேசுறத விடு. எவனாவது ஒழுங்கா ட்ரெஸ் பண்ணுவானா? சரி.. எவனாவது ஒழுங்கா முடி வெட்டியிருக்கானா?.. ஏதோ குரங்குட்ட போயி தலையக் குடுத்த மாதிரி அங்கங்க புடுங்கி வச்சுருக்கானுங்க” என எகத்தாளக் குரலில் கூற

“அப்பா என் பிரண்ட்ஸ பத்தி பேசாதீங்க” என்றான் மகன் கோபமாக

அவனை பார்த்து நக்கலாக சிரித்தவர் “மகனே.. நீ காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னதும் ஏன் ஒத்துக்கிட்டேன்னு தெரியுமா?” என…

“பொண்ணு நல்லவ. சொத்து சுகத்துல உங்களுக்கு கொறையாதவ.. அதனால தானே?” என்றான் அலட்சியமாக…

“அவ்ளோ நல்ல பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நான் எப்புடிடா சம்மதிப்பேன். நான் சம்மதிச்சது உன் மாமனாருக்காக”

“என்ன? அவருக்காகவா.. ஏன்?” என்றான் சுதாகரன் ஆச்சர்யமாக.

“ஏன்னா…? உன் மாமனார் அந்த ஊரு பெரிய மனுஷன். ஊருல யாராவது தப்பு பண்ணாலே தண்டன பலமா இருக்குமாம். அவரு பொண்ண கட்டுன நீ தப்பு பண்ணுனா?” என கேட்டு அவன் வயிற்றில் புளியை கரைத்தவர் “நியாபகம் இருக்கட்டும் இந்த கல்யாணம் முடியிற வரைக்கும் கோகுல் உன்கூட தான் இருக்கனும்” என மிரட்ட… அந்த நேரம் கோகுல் கிளம்பிவர அனைவரும் சாப்பிட்டு பெண் வீட்டிற்கு சென்றனர்.

போகும்போதும் சுந்தரம் தன் மகனை தனியே அழைத்து “நினைவிருக்கட்டும். கோகுல் எப்பவும் உன் கூட தான் இருக்கணும்” என கூற…

“சரி” என பல்லைக் கடித்தான் சுதாகரன்.

“ரொம்ப கடிக்காதடா. அப்புறம் கல்யாணத்துக்கு அப்பறம் உன் மாமனார் கழட்ட வேண்டிய பல்லெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே கொட்டிட போகுது” எனக்கூறியவர் முன்னே சென்றுவிட இவர்கள் இருவரும் சுரேந்திரனுடன் காரில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.

அவர்கள் சென்று பெண் வீட்டினுள் நுழையும் போது கோகுலுக்கு அழைப்பு வர அனைவரையும் முன்னே விட்டு அவன் மட்டும் வெளியில் நின்றபடியே பேச ஆரம்பித்தான்.

வீட்டினுள்ளே “மீரா நீ நல்லா வீணை வாசிப்பியே. ஒரு தடவ வாசிச்சு காட்டேன்” என கல்யாண பெண்ணின் உறவுக்கார பெண்மணி கேட்க…

“நான் வாசிக்கனும்ன்னா யாரையாச்சும் பாட சொல்லுங்க”

“அதான் உன் அக்கா மித்ரா இருக்கால்ல. அவ நல்லா பாடுவாளே”

“ம்ஹ_ம்… நான் வாசிக்கிறேன். மாப்ள வீட்ல யாரையாச்சும் பாட சொல்லுங்க”

“ஏய்… அவங்க எல்லாரும் பசங்க தான்டி வந்துருக்காங்க” என்றார் அவர்.

“அதெப்புடி என் அக்காவ கல்யாணம் பண்ணப் போற வீட்ல பாட்டுப்பாட ஒருத்தர் கூட இல்லையா?” என மச்சினிச்சிகளுக்கே உள்ள உரிமையில் மாப்பிள்ளை வீட்டாரை பார்த்து கேட்க…

“ஏன் இல்ல… எங்க ராணி எவ்ளோ நல்லா பாடுவா தெரியுமா?” என சுரேந்தர் அந்தப்பக்கம் ஏதோ எடுத்துச் செல்ல வந்த ராணியை பார்த்து சொல்லவும்

“இல்லல்ல எனக்கு பாடத் தெரியாது” என்றாள் அவள் அவசரமாக.

வேகமாக அருகில் சென்ற சுரேந்தர் “ப்ளீஸ் ராணி… எங்க குடும்பத்தையே வச்சு செஞ்சுருவா ராட்சசி!” என மீராவை பார்த்துக் கொண்டே அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன் “தனியா வந்தா உன் கால்ல கூட விழறேன். இவ முன்னாடி என் மானத்த வாங்கிறாத” என கெஞ்சிவிட்டு

“சரிசரி ராணி பாட ஒத்துக்கிட்டாங்க” என்றான் கெத்தாக.

“ஓஹோ… ஆனா நான் வாசிக்கிற பாட்டுக்கு தான் நீங்க பாடனும்” என மீரா சவால் போல கூற…

“அதெல்லாம் பாடுவாங்க” என்றான் சுரேந்தர். சம்மந்தப்பட்டவளை ஒரு வார்த்தைகூட பேச விடாமல் இவர்கள் இருவருமே பேசிமுடிக்க… மீரா தன் வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு தெரியும் இந்த பாடலை ராணி பாடமாட்டாள் என்று. அதேபோல ராணி “நான் இந்த பாட்ட பாடமாட்டேன்” என்றுவிட்டாள்.

மீரா வேறு பாடல் வாசிக்க மாட்டேன் என… ராணி இந்த பாடல் பாட மாட்டேன் என… சுற்றி இருந்தவர்கள் ராணியை சமாதானம் செய்து ஒரு வழியாக பாட வைத்தனர்.

கண்ணனை தேடி வந்த ராதையும் நானே…!
காணாமல் நீண்டகாலம் வாடுகின்றேன்…!
கண்விழி பூத்து நின்ற கோதையும் நானே…!
ஸ்ரீ வாசுதேவனை நான் சேர்வது என்று…!
யாரோடு என்ன சொல்வேன்…..ஆஆஆ.. ஆஆஆ..
யாரோடு என்ன சொல்வேன் நான் கொண்ட வேதனை…!
என்போன்ற கோபிகைக்கு ஏன் இந்த சோதனை…!
நான் கண்கள் மூடியே நாளானதே…!
கண்ணனை தேடி வந்த ராதையும் நானே…!
காணாமல் நீண்டகாலம் வாடுகின்றேன்…!
அலைபேசியில் இருந்தவனுக்கு இந்த பாடல் கேட்க “சரி.. நான் அப்புறம் கால் பண்றேன்.” என்றவன் பாடலின் குரல் இனிமையில் அலைபேசியை அணைத்துவிட்டு வீட்டினுள் சென்றான் கோகுல்.
கண்ணா நீ வா வா…
என் தேவா… என நான் அழைத்தேன்…!
காய்க்காத பூவா… ஒரு தீவா… நீ சொல் மன்னவா…!
ஓ நந்தலாலா கோபாலா உடலால் மெலிந்தேன்
ஓயாமல் வாட்டும் அனல் மூட்டும் காதல் அல்லவா
ஆகாய மேகங்கள் எல்லாம் தூதாக நான் விடுத்தேன்…!
அன்றாடம் முட்களின் மீது தூங்காமல் நான் படுத்தேன்…!
நோய் தீர்க்க வேண்டுமே நாராயணா…!
கண்ணனை தேடி வந்த ராதையும் நானே…

பாடிக் கொண்டிருக்கும்போது யாரோ வீட்டினுள் நுழைவதை உணர்ந்தவள் திரும்பிப்பார்க்க அதிர்ச்சியாகி அப்படியே நின்று விட்டாள். அழைத்ததும் வந்து நிற்க இவன் என்ன தேவதூதனா..? என் பிரம்மையோ..? இத்தனை வருடங்களாக இவன் முகம் மறக்காமல் இருப்பதேனடா..? என ஒரு நொடிக்குள் ஏதேதோ எண்ணிவிட்டாள் ராதா.

அப்பொழுதுதான் தன் நண்பனிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்த கோகுலுக்கும் அதிர்ச்சிதான். சிலையாக வாயிலிலேயே நின்றுவிட்டவனை சுதாகரன் தோளைத் தொட்டு அழைக்க அப்போதுதான் இருவரும் உணர்விற்கு வந்தனர்.

வாய் தானாக பாடிக்கொண்டே இருக்க யார் கண்களிலும் சிக்காமல் போனது இவர்களது அதிர்ச்சி.

உன் தோற்றம் யாது பாராது எனை நான் கொடுத்தேன்
உன்னோடு வாழ நலம் சூழ நாளும் ஏங்கினேன்
பொன் அந்தி வேளை பூமாலை புதிதாய் தொடுத்தேன்
உன் காதில் மெல்ல இதை சொல்ல நாளும் ஏங்கினேன்
பாஞ்சாலி வாடிய போது பூஞ்சேலை தந்தவனே
போர்நாளில் விஜயனுக்காக தேரோட்ட வந்தவனே
நான் கூவும் வேளையில் வாராததேன்
கண்ணனை தேடி வந்த ராதையும் நானே
காணாமல் நீண்ட காலம் வாடுகின்றேனே
கண்ணனை தேடி வந்த ராதையும்… நானே…

பாடினாள். ஆனால் கண்ணனை நினைத்து ஏக்கத்துடன் பாட வேண்டிய பாடலை எவ்வாறு பாடினாள் என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

ஒரு படத்தில் கே.ஆர்.விஜயா அழகாக பாடியிருப்பார்.

பாடல் ஒன்று…
ராகம் ஒன்று…
தாளம் கொஞ்சம் மாறிவிட்டதென்ன…
எனும் படியாக மாறிவிட்டிருந்தது அவளது பாடல்.

பாடலை பாடிமுடித்தவள் வேகமாக அங்கிருந்து சென்றுவிட அவள் செல்வதையே பார்த்தபடி இருந்தான் கோகுல். அவன் மனதில் விடையறியா ஆயிரம் கேள்விகள் யாரை கேட்பது எனத் தெரியாமல் நின்றிருந்தவனிற்கு பதில் சொல்லவென்றே வந்தான் சுதாகரன் கையில் குழந்தையுடன். கோகுலிடம் வந்த சுதாகரிடம் “இது யாரு குழந்தை?” என கேட்டான்.

“இப்ப பாட்டு பாடுனாங்கள்ல அவங்க குழந்தை”

“என்ன…? அவ… குழந்தையா”

“அவங்கள உங்களுக்கு தெரியுமா?” சந்தேகமாக கேட்டான் சுதாகர்.

“அது யாரு?”

“அதுவா… ராணி. எங்க ஆபிஸ்லதான் ஒர்க் பண்றாங்க”

“எவ்வளவு நாளா?”

“அது எனக்கு தெரியாது. நான் கம்பெனிக்கு வந்து ஒரு வருஷமா அவங்க இங்க தான் இருக்காங்க. அப்பாவோட ஸ்பெஷல்”

“ஓ… அவங்க தனியாவா இருக்காங்க”

“ம்ஹீம். அவங்க பையன் கூடதான் இருக்காங்க” என்றான் சுதாகர் கிண்டலாக.

அதை கவனியாதவன் “பையன் கூடன்னா… அவங்க ஹஸ்பண்ட்” என்றான்.

“தெரியாது” என்றவன் உறவுக்காரர் ஒருவர் அழைக்க அவரிடம் சென்றுவிட்டான்.

வேகமாக சென்ற ராதா வெளியே சமையல் செய்யும் இடத்தில் சென்று நின்றுவிட்டாள். அவள் மனம் உலைக்களம் போல கொதித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் ராணியைத் தேடிவந்த மீரா அவளிடம் “அக்கா பாத்தீங்களா… கண்ணன்னு பேர் சொல்லி கூட கூப்பிடமாட்டேன்னு சொன்னீங்க. ஆனா இப்ப நான் உங்ககிட்ட சவால்விட்ட மாதிரியே உங்கள அந்த பேரயில்ல. பாட்டையே பாடவச்சுட்டேன்” என சொல்லி சிரிக்க…

“மீரா… இனிமேல் இந்த மாதிரி பண்ணாத” என கடுமையாக கூறியவள் சென்றுவிட ‘என்னாச்சு இவங்களுக்கு?’ என யோசித்தபடி நின்றிருந்தாள் மீரா.

அவளுக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. இரண்டு வருடத்திற்கு முன் அவன் வீட்டிலிருந்து வந்தவளுக்கு எங்கே செல்வதென்று தெரியவில்லை. அவளுக்கு நிச்சயமாக தெரியும் தன் வீட்டிற்கு செல்ல முடியாது என்பது. தன் கால் போன போக்கில் நடந்தவள் சென்றது ரயில் நிலையத்திற்கு. இப்படியே இருக்க முடியாது எங்காவது சென்றுதான் ஆகவேண்டும். கையில் பணமில்லை. எங்கே செல்வதென்று தெரியவில்லை. தன் கையில் கழுத்தில் கிடந்த தங்கத்தை விற்றால்… எனத் தோன்ற எங்கே செல்வது என்ற கேள்வியே பிரதானமாக பட்டது.

இறுதியாக தன்னுடன் பள்ளியிலிருந்து ஒன்றாக படித்த தோழி தனியாக தங்கி சென்னையில் வேலைபார்ப்பதால் அங்கு செல்லலாம் என முடிவெடுத்து நிமிர்ந்தவள் எதிரில் வந்து நின்றார் ஒரு முதியவர்.

“உன் பேரென்னம்மா?” என வாஞ்சையுடன் கேட்டவரை எடுத்தெறிந்து பேச மனமில்லாமல் “ராதா ராணி” என்றாள்.

“நான் செந்தாமரைக் கண்ணன். கோகுலோட அப்பா” என வந்தவர் தன்னை அறிமுகம் செய்து கொள்ள அதுவரை இருந்த மனநிலை மாறி இறுக்கம் சூழ நிமிர்ந்து அவரை பார்த்தாள்.

“நீ நினைக்கறது புரியிதும்மா… ஆனா நான் அவனுக்காக பேச வரல” என்றவரை இடைமறித்து “தேவையில்ல. உங்க பையன் மேல இருக்க கோபத்த உங்கமேல காட்டக் கூடாதுன்னு நினைக்கிறேன்” என கடுமையாக கூற…

“நீ என்கூட வாம்மா. நான் உன்ன அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என

“அதுக்கு இந்த ட்ரெயின் முன்னாடி விழுந்து செத்துருன்னு சொல்லுங்க. பிள்ளையா பெத்துருக்கீங்க நீங்க? உங்க பையன் என்ன செஞ்சான்னு தெரியுமா உங்களுக்கு? இப்புடி ஒரு பிள்ளைய பெத்ததுக்கு” என பேசிக் கொண்டே சென்றவள் சட்டென தன் பேச்சை நிறுத்தி “தேவையில்லாம என்ன பேச வைக்காதீங்க. கிளம்புங்க” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு

“சரிமா. அவன் பண்ணது தப்புதான். ஆனா அந்த தப்புக்காக நீ கஷ்டப்பட வேண்டாம்மா. அவன நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்ன்னு சொல்லு நான் செய்யறேன்” என்றார்.

இவளும் தோழியை சென்று சந்தித்து அதன் பிறகு வேலை தேடி இவள் படித்ததற்கான ஆவணம்கூட இவளிடம் இல்லை. எனவே கொஞ்சம் சிரமமான காரியம் தான் என உணர்ந்தவள் “எனக்கு ஏதாவது வேலவாங்கி குடுங்க” என்றாள் தயக்கத்துடன்.

“என் ஆபிஸ்” என்றவரை “இல்ல வேண்டாம் எங்கயாவது தூரமா…” எனும்போதே கண்கள் கலங்கிவிட அமைதியானாள். அதன் பிறகு கண்ணன் தன் நண்பனிடம் கூறி இவளுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்து வீடு பார்த்து குடியேற்றிவிட்டு வந்தார்.

தன்னை மற்றவரிடமிருந்து மறைக்க அவள் பொதுவாக வெளியில் செல்ல மாட்டாள். தன் பெயரையும் ராணி எனக் கூறியே பிறரிடம் அறிமுகப்படுத்தினாள்.

ஒரு வழியாக தன் மனதை தேற்றிக் கொண்டு ஆட்கள் இருக்கும் பக்கம் சென்ற ராணியை அழைத்த சுந்தரம் “எல்லாருக்கும் காபி கொண்டு போய் குடும்மா” என்றவுடன் காபியை வாங்கிச் சென்று அனைவருக்கும் கொடுத்தாள்.

சுந்தரத்தின் மனைவி இறந்தபின் அவர்கள் வீட்டில் வேறு பெண்கள் இல்லை. எனவே சுந்தரம் இந்த கல்யாண பொறுப்பை ராணியிடம் கொடுத்திருந்தார். அவளும் சரியென்று ஏற்று சரியாகவே நடத்தி வந்தாள்.

காபியை கொடுத்துக் கொண்டிருந்தவள் மனமோ ‘அவனிடம் செல்லாதே’ என அடம்பிடிக்க… இருக்கும் சூழ்நிலையோ அவனிடம் சென்று நிறுத்திவிட்டது. கோகுலின் முன்னால் காபி கப்புடன் நின்றவள் அவன் அருகில் நின்றிருந்த சுதாகரனிடம் “காபி எடுத்துக்கோங்க” என்றாள். அவன் எடுத்தபிறகும் கோகுல் எடுக்காமல் இருக்க “உங்களுக்கு வேண்டாமா?” என்றாள். உள்ளுக்குள் வெடிக்கப் போகும் எரிமலையின் ஆரவாரம் இருந்தாலும் எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் சிரித்தபடியே கேட்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கேள்வியில் முதலில் திகைத்தாலும் பின்னர் அவள் கையில் வைத்திருந்த காபி டம்ளர்களை பார்த்து அமைதியாக எடுத்துக் கொண்டான். அவனுக்கு ஆயிரம் கேள்விகள் யாரிடம் கேட்பதென்பது தான் அவனுக்கு புரியவில்லை. யோசித்தபடியே இருந்தான். ராணிக்கு குழப்பமே இல்லை. காபியை கொடுத்து முடித்தவள் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று மொபைலை எடுத்தவள் அழைத்தது கண்ணனைத்தான்.

“ஹலோ”

“இது நீங்க சொல்லி தான் நடக்குதா?”

“எதும்மா?”

“உங்க பையன் சுதாகர் கல்யாணத்துக்கு வந்தது”

‘ம்… புத்திசாலிதான். என் மகனே இன்னும் கண்டுபிடிக்கல. அதுக்குள்ள கண்டுபிடிச்சுட்டாளே’ என மனதிற்குள் மெச்சியவர் “அய்யோ. அப்படிலாம் இல்லம்மா. எனக்கு உடம்பு சரியில்ல சுகர் லெவல் ஏறியிடுச்சு. அதான் மேரேஜ்க்கு நான் போறேன்னு சொல்லிட்டு கோகுல் வந்தான்” என்றார் கண்ணன் சோர்வாக.

அந்த நேரம் பார்த்து கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த கண்ணனின் பி.ஏ “சார் இந்த பைல்ல ஒரு சைன் வேணும்” என கேட்க “ஒரு நிமிஷம்மா” என ராதாவிடம் கூறிவிட்டு பைலை பார்த்து கையெழுத்து போட்டு காரியதரசியை அனுப்பியவர் மீண்டும் ராதாவிடம் “என்னம்மா சொன்ன?” என கேட்டார்.

“உடம்பு சரியில்லாதவர் ஆபிஸ்ல என்ன செய்றீங்கன்னு கேட்டேன்” என்றாள் ராதா.

“அது… பயணம் பண்ண வேண்டாம்ன்னு தான் டாக்டர் சொன்னார்ம்மா. ஆபிஸ்ல சும்மா பைல்ஸ் தான பாக்க போறோம்” என சமாளிப்பாக கூறவும்

“நீங்க நினைக்கிறது நடக்காது. இந்த ரெண்டு வருஷத்துல உங்களால மாத்த முடியாத என்மனச உங்க பையனால மாத்த முடியும்ன்னு நினைக்காதீங்க. நான் வைக்கிறேன்” என்றவளை தடுத்தவர் “கமல் என்ன செய்றான்?” என்றார்.

“நல்லா இருக்கான்” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

தொடரும்…

Advertisement