Advertisement

காதல் 5

நான் உன்னை விட்டு
பிரிந்து போனாலும்
என்னை காட்டிக் கொடுக்கும்
என் கண்ணீர் தடங்கள்!!!
உள்ளுக்குள் காதல் இருந்தால்
பின் தொடர்ந்து வா
அந்தக் கண்ணீர்த் தடத்தை…
அது சொல்லும் நான் சென்ற இடத்தை…
காத்திருப்பேன் கண்ணா உனக்காக…

“அந்த பொண்ணு பேர் என்னம்மா சொன்ன… ராதாவா?” எனவும் கார் “கிரீச்” என்ற சத்தத்துடன் நின்றது. திடீரென கார் நின்றதில் தடுமாறிய சிவகாமி “என்னாச்சுப்பா?” என மகனை கேட்க…

“ஆங்… அது… ஒன்னுமில்லம்மா” என கோகுல் தடுமாறியபடி சமாளித்து தன் தந்தையைப் பார்க்க… கண்ணனோ எதுவுமே அறியாதவர் போல தன் மகனையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார்.

கோகுல் மீண்டும் காரை எடுக்கவும் “என்னம்மா சொன்ன…? அந்த பொண்ணு பேரு..” என திரும்பவும் கேட்க…

“அவ பேரு ராதா இல்லைங்க ராதிகா” என்றார் சிவகாமி அப்பாவியாக.

“ஓ… நான் ராதாவோன்னு நெனச்சேன்” என அளவுக்கதிகமாகவே கண்ணன் ரியாக்ட் செய்ய… “இல்லைங்க ராதிகா. ராதின்னு கூப்பிடுவாங்க” என்றார் சிவகாமி அப்பாவியாக.

காரை ஓரமாக நிறுத்திய கோகுல் “அப்பா நீங்க காரை ஓட்டிட்டு போங்க. எனக்கொரு முக்கியமான வேலையிருக்கு நான் கொஞ்ச நேரத்துல வந்திடறேன்” எனவும்

“என்னப்பா சொல்ற.. கல்யாணம் உனக்குதான்ப்பா. பொண்ண உனக்கு பிடிக்க வேண்டாமா? போய் நீயும் நேர்ல பாத்தாதானே. என்ன வேலைன்னு சொல்லுப்பா நான் பாக்குறேன் அந்த வேலையை” என்றார் வெகு அக்கறையாக…

அவரை பார்த்தவன் அவர் முகத்தில் தெரிந்த நக்கலை பார்த்து “தேவையில்ல. என் வேலைய நானே பாத்துப்பேன்” என்றவன் இறங்கி செல்ல “கோகுல்” என சிவகாமி அழைத்தார்…

அவரை தடுத்த கண்ணன் “அவன் வருவான். வா போகலாம்” என கூறி டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிச் செல்ல தன் கணவன் தனக்கு தெரியாமல் ஏதோ செய்கிறார் என்பதை உணர்ந்த சிவகாமி அவரை கேள்வியுடன் பார்த்தவாறே வந்தார்.

அவரின் பார்வையை உணர்ந்த கண்ணன் அவரை பார்த்து புன்னகைத்துவிட்டு மீண்டும் திரும்பி காரை செலுத்த “நான் கேட்டா சொல்ல மாட்டீங்கன்னு புரியுது. ஆனா எது நடந்தாலும் என் பையன் சந்தோஷமா இருக்கனும்ங்க. நீங்க இப்ப என்ன செஞ்சீங்கன்னு தெரியாது. ஆனா அவன் முகம் வாடி இறங்கி போனான்.” என வருத்தத்துடன் சிவகாமி சொல்லவும்…

“அவன் செஞ்ச தப்புக்கு அவன் வருத்தப்பட்டுதான் ஆகனும் சிவகாமி” என்றார் இளகாமல்.

“அவன் தப்பே செய்திருந்தாலும் இன்னைக்கு அவன் நல்லவன் தாங்க” என தன் மகனை விட்டுக் கொடுக்காமல் பேச… அவரை பார்த்து புன்னகைத்தவர் எதுவும் பேசாமல் காரை செலுத்துவதில் கவனம் செலுத்தினார்.

பெண் வீட்டிற்கு சென்று சம்பிரதாய விசாரிப்புக்கு பின்னும் தன் மகன் வராதது கண்டு சிவகாமி தன் கணவரிடம் அவனை அழைத்து பேச சொல்ல கோகுலுக்கு அழைப்பை ஏற்படுத்திவிட்டு காத்திருந்தார் கண்ணன்.

“ஹலோ”

“எங்கப்பா இருக்க உனக்காக எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க. எப்ப வருவ?” என கேட்டார் கண்ணன்.

அவர் பேச்சில் எரிச்சல் வர… “அப்பா நான் வரல. நீங்க ஏதாவது சொல்லி சமாளிச்சுட்டு வாங்க” என்றவன் இணைப்பை துண்டித்துவிட

கண்ணன் புன்னகையுடன் “பையனுக்கு வேல முடியலயாம். நீங்க பாத்துட்டு வாங்கப்பா நான் இன்னொரு நாள் பாத்துக்கறேன்னு சொல்லிட்டான்” என்று கூற சிவகாமி தன் கணவனை பார்வையால் சுட்டார்.

அதை பார்த்தவர் “பொண்ண வரச்சொல்லுங்களேன்” என கேட்கவும் அவரும் சிரித்துக் கொண்டே “பொண்ண வரச்சொல்லுங்க. என் பையன் நான் பாத்தா போதும்ன்னு தான் சொன்னான் நான்தான் அவன வரச்சொன்னேன். இப்ப கடைசி நேரத்துல ஒரு வேல வந்ததனால அவன் போக வேண்டியதாயிருச்சு” என சமாளிப்பாக கூறி முடித்தார் சிவகாமி.

பெண் பார்க்கும் படலம் நல்லபடியாக முடிந்து வீட்டைவிட்டு கிளம்பியபின் காரில் அமைதி மட்டுமே நிலவ… ‘இத வாங்க வேண்டியவன் நான் இல்ல’ என நினைத்த கண்ணன் வாயே திறக்கவில்லை.

காரிலிருந்து இறங்கிய கோகுல் பக்கத்திலிருந்த பார்க்கில் சென்று தனியாக அமர்ந்துவிட்டான். தனிமை என்பது மிகவும் விசித்திரமானது. நாம் வேண்டும் என நினைப்பதைவிட மறக்க வேண்டும் என நினைப்பதை அதிகம் நியாபகப் படுத்தும். கோகுலுக்கும் அதுவே நிகழ்ந்தது. அவனது தனிமை அவனுக்கு நினைவுபடுத்தும் ஒரே விசயம் ராதாதான். அதனால்தான் கோகுல் எப்போதும் தனிமையை விரும்பமாட்டான். ஒரு உயிர் பிரிய தான் காரணமாக இருந்துள்ளோம் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மீண்டும் மீண்டும் மனதில் அவள் முகமே தோன்ற இத்தனை நாட்களாக மறந்துவிட்டோம் என அவன் நினைத்து உருவாக்கிய மாயபிம்பம் அவன் கண்முன்னே விழுந்து சுக்கல் சுக்கலாக நொருங்கியது. அவன் அலுவலகம் சென்றதிலிருந்து தன்னை எப்போதும் பிசியாகவே வைத்துக் கொண்டான். எனவே அவளை நினைக்க நேரமின்றி போனது. இன்று தனிமையும் கிடைத்து அவன் தந்தையின் உபயத்தால் ராதாவின் நினைவும் தூண்டிவிடப் பட்டிருக்க ராதாவை தவிர வேறு நினைவின்றி போனது.

மனம் வெதும்பிக் கொண்டிருந்தான் கோகுல். தவறு செய்துவிட்டோம்! ஒரு உயிர் போக காரணமாய் இருந்துவிட்டோம் என்பதை தவிர அவன் நினைவில் வேறொன்றுமில்லை. நெடுநேரம் மனதில் போட்டு குழம்பிக் கொண்டிருந்தவனுக்கு தன் தந்தை தன்னிடம் ஏதோ மறைமுகமாக கூற வருவது போல தோன்றியது. இந்த எண்ணம் தோன்றியவுடன் நேராக வீட்டிற்கு கிளம்பி சென்றான்.

வீட்டு வாசலில் ஆட்டோ வந்துநிற்கும் சத்தம் கேட்க தன்னறையில் இருந்த சிவகாமி ஹாலிற்கு வந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கிய கோகுல் தன் தந்தையை தேடிச் செல்ல அவனை தடுத்த சிவகாமி “கோகுல் உன்ன கேட்டுதான் பொண்ணு பாக்க ஏற்பாடு பண்ணுனோம். ஆனா நீ வரல அப்புடி என்னப்பா திடீர்ன்னு உனக்கு முக்கியமான வேலை” என கோபத்தை கட்டுப்படுத்தியபடி கேட்க…

“அம்மா… நான்…” என்றவன் “அம்மா நான் முன்னாடியே சொன்னேன் எனக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லைன்னு” என சளிப்புடன் கூற

“இன்ட்ரெஸ்ட் இல்லைன்னா என்ன அர்த்தம்” என சிவகாமி கூர்மையுடன் கேட்கவும்

“அம்மா நான் அப்பாகிட்ட பேசனும். நீங்க எமோசனலா இருக்கீங்க அப்பறமா பேசலாம்” என

“அப்பாவும் பையனும் சேந்து என்னமோ பண்றீங்க. ஞாபகம் இருக்கட்டும் இந்த கல்யாணத்த மட்டும் தடுத்தீங்க..” என எச்சரித்தவர் திரும்பி சென்றுவிட தன் தந்தையை நோக்கி சென்றான். அவர் தன்னறையில் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்க அமைதியாக நின்றான்.

திருமணத்தில் எந்த குழப்பமும் வந்துவிடக்கூடாது என சொல்லி சென்ற தாயை பார்த்தவன் பெருமூச்சுடன் தந்தையை தேடிச் செல்ல அவரோ இவன் அறையினுள் வந்ததை கவனிக்காமல் முதுகுகாட்டியபடி பேசிக் கொண்டிருந்தார் கண்ணன். “என் பொண்டாட்டி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல தீர்மானமா இருக்கா. என்னால இதுக்குமேல எதுவும் பண்ண முடியாது. நான் அவன எப்புடியாவது அங்க அனுப்பி வச்சுடுறேன். நீ நாம ப்ளான் பண்ணின மாதிரி நடந்துக்க” என பேசிக் கொண்டிருக்க வந்த சுவடு தெரியாமல் திரும்பி சென்றுவிட்டான் கோகுல்.

‘என் கல்யாணத்துல யாருக்கு என்ன பிரச்சனை? ப்ளான் படின்னா யாரு ப்ளான் பண்ணது? எங்க அனுப்ப ப்ளான் பண்றாங்க?’ என பல கேள்விகள் தோன்ற ‘எப்படியும் நம்மகிட்ட சொல்லித்தான ஆகனும் அப்ப பாக்கலாம்’ என எண்ணியபடி அமைதியாக சென்றுவிட்டான்.

இரவு உணவின்போது அனைவரும் அமர்ந்திருக்க அங்கே வந்த கண்ணன் கோகுலிடம் “என் பிரண்ட் சுந்தரத்தோட பையனுக்கு கல்யாணம். எனக்கு பதிலா நீ போயிட்டு வந்துரு” என கூற…

“எனக்கு நிறைய வேலையிருக்கு”

“நான் இங்க இருக்க வேலையெல்லாம் பாத்துக்குறேன் நீ போயிட்டு வா” என வற்புறுத்தி கூற

“இல்ல. நீங்களே போயிட்டு வாங்க. எனக்கு இங்க வேலையிருக்கு” இவனும் பிடிவாதத்துடன் சொன்னான்.

“நீதான் போகனும். புதன்கிழமை கல்யாணம் ரெண்டு நாளையில இருந்து எல்லா வேலையையும் ஒதுக்கிட்டு போயிட்டு வா” என கட்டளையாக கூறிவிட்டு பாதி சாப்பாட்டிலேயே எழுந்து செல்ல… அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த கோகுல் ‘அப்போ நாம பாக்க வேண்டிய ஆள் அங்கதான் இருக்கா. ம்… அதுவும் யாருன்னு பாத்துடுவோம்’ என எண்ணியபடி தான் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினான்.

தனக்காக காத்திருக்கும் நபரை சந்திக்க வெகு ஆவலாய் இருந்தான். அப்படி யாரு என் அப்பா செய்ய முடியாதத செய்யப்போறது என எண்ணியபடி தன் வேலைகளை ஒழுங்குபடுத்தி ஒதுக்கிக் கொடுத்தவன் தன் தந்தையிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பத் தயாரானான்.

கிளம்பும் நேரம் தன் தந்தையிடம் சென்றவன் “நீங்க ஏதோ பிளான் பண்ணி என்ன அனுப்புற மாதிரி இருக்கு. ஆனா எதுவா இருந்தாலும் இத்தன நாளா என் முகத்துக்கு முன்னாடி பேசுன நீங்க இன்னைக்கு என்கிட்ட எதுவுமே சொல்லாம அனுப்புறது வித்தியாசமா இருக்கு” என அவரிடம் சொல்ல

“ப்ளானா..? நான் என்னப்பா ப்ளான் பண்ணேன். புரியலையே?” என்றார் கண்ணன் அப்பாவியாக

“இப்ப எதுக்காகப்பா என்ன கோயமுத்தூர் அனுப்புறீங்க?” என நேரடியாக கேட்க…

“அதான் சொன்னேனேப்பா. என் பிரண்ட் சுந்தரத்தோட பையனுக்கு கல்யாணம்” என அவர் சொல்ல

“சுந்தரம் அங்கிள் ஏன் கோயமுத்தூர்ல கல்யாணம் வச்சாரு?”

“பொண்ணோட அப்பா தன்னோட ஊருல கல்யாணம் வைக்கனும்ன்னு பிரியபட்டு கேட்டதுனால அங்க வச்சுருக்கான்” என்றார் கண்ணன் அலட்டலின்றி

“நீங்க எதுக்காக அடிக்கடி கோயமுத்தூர் போயிட்டு வந்தீங்க?”

“ஊர் சுத்திப் பார்க்க” என்றவரை அதிர்ச்சியுடன் பார்த்தவன் “என்ன?” என

“ஆமாம்ப்பா.. வயசுப்பசங்க மட்டும் தான் வந்து கொட்டமடிக்கனும். வயசானவங்க யாரும் ஊட்டி வரக்கூடாதுன்னு இன்னும் யாரும் சொல்லலையேப்பா” என மகன் முன்னால் வாழ்ந்த வாழ்க்கையை சுட்டிக்காட்டி அவனுக்கு ஒரு குட்டு வைத்தவர் நான் எதற்கு சென்றால் உனக்கென்ன வந்தது என மறைமுகமாக அவனை கேட்க

“அது சரிப்பா.. இந்த கல்யாணத்துக்கு நான்தான் வரனும்ன்னு யாருப்பா பிரியப்பட்டு கேட்டது?” என நக்கலாக கேட்க

“அது நான்தான்ப்பா” என்றார் அவன் தந்தை அவனுக்கு சளைக்காதவராய்

“அப்பா…” என்றான் அடுத்த வார்த்தை பேசமுடியாமல்

“கிளம்பு” என கூறியவர் கிளம்பி அலுவலகம் செல்ல தயாராக… அடுத்து சில நிமிடம் அலுவலை பற்றி பேசியவர்கள் சாப்பிட சென்றனர்.

“லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டியாப்பா?” என சிவகாமி கேட்க…

“ஹாங்… எடுத்துட்டேன்மா”

“எத்தனை நாள்ப்பா?”

“ம்…” என தன் தந்தையை ஓரப் பார்வை பார்த்தவன் அவர் தன்னை கவனிப்பதை உறுதி செய்துகொண்டு “ரெண்டு நாள்ல வந்துருவேன்மா” என்றான்.

“சரிப்பா” என சிவகாமி கூற… கண்ணன் தன் மகனை பார்த்து சிரித்துக் கொண்டார்.

‘இவர் ஏன் இப்போ வில்லன் மாதிரி சிரிக்கிறாரு? நம்மள ஊருக்கு அனுப்பி கடத்தி வச்சுட்டு கல்யாணத்த நிறுத்தப் போறாரோ?’ என யோசித்துக் கொண்டிருக்க…

“ஒரு வாரத்துக்கு தேவையான டிரஸ்ஸ எல்லாம் எடுத்து வச்சுக்கோ. அங்க இப்ப சீசன் ரொம்ப நல்லா இருக்காம். ஊர சுத்தி பாத்துட்டு வா” என கண்ணன் சொல்ல…

“கோவையில நான் பாக்காத இடம் இல்லப்பா. எத்தனையோ தடவ போயிருக்கேன்” என…

“ஆனா இந்த தடவ உன்கூட யாரும் வரலையேப்பா. போய் தனியா சுத்திப்பாரு.. உண்மையான அழகு என்னன்னு அப்ப தெரியும்” என்றார்.

‘இவரு பேசும்போது ஏன் எனக்கு ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு. ஒருவேளை என் பிரம்மையோ?’ என யோசித்தபடியே சரியென தலையாட்டினான்.

‘அப்புடி என்னதான் அந்த ஊருல எனக்காக காத்திருக்குன்னு பாக்குறேன்’ என அவரை பார்த்தபடியே சாப்பிட அவரோ இவனை கண்டுகொள்ளாமல் தன் உணவை உண்டுமுடித்து அலுவலகம் சென்றுவிட்டார்.

தன் உணவை முடித்தவன் தானும் கிளம்புவதாக கூறி வெளியேறி சென்றுவிட்டான். கோயமுத்தூருக்கு காரில் செல்கிறேன் என்றவனை இரயிலில் செல்ல சொல்லி வற்புறுத்தி கூறிய அவன் தந்தை சொல்லை கேட்டு ரயிலில் சென்றான்.

செல்லும் வழியெங்கும் ஒரே யோசனை ‘ஏன் அப்பா என்ன கட்டாயப்படுத்தி இங்க அனுப்பி வைக்கிறார்?’ என யோசித்துக் கொண்டே இருந்தான். என் கல்யாணத்த ஏன் நிறுத்தனும்? அதுவும் என் அப்பாவுக்கும் மேல என் கல்யாணத்த நிறுத்த யாரு ப்ளான் பண்றது என யோசித்தவன் நேர்ல போயே பார்ப்போம் என நினைத்து தன் மனவோட்டத்தை மாற்ற சுற்றி இருப்போரை வேடிக்கை பார்க்க அங்கே ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை அந்த கம்பார்ட்மெண்ட்டையே என்னை பாருங்கள் என்ற அறிவிப்பு இல்லாமலே தன்னை பார்க்க வைத்துக் கொண்டிருக்க இவனும் அந்த குழந்தையை சுவாரஸ்யத்துடன் பார்க்க ஆரம்பித்தான்.

கோகுல் தன் மனவோட்டத்தை மாற்ற சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அப்போது அங்கே இருந்த ஒரு குழந்தை அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துக் கொண்டிருந்தது. அந்த குழந்தையின் மீதுதான் அங்கிருந்த அனைவரின் கவனமும் இருந்தது. கோகுலும் அந்த குழந்தையை பார்க்க அவனது பயணத்தை சுவாரசியமாக மாற்றியது அந்த குழந்தை.

அந்த குழந்தையை ரசித்தபடி தன் பயணத்தை முடித்தவன் சந்தோசமான மனநிலையுடனேயே ரயில் நிலையத்தில் இறங்க அவனை வரவேற்க காத்திருந்தான் சுந்தரத்தின் இளைய மகன் சுரேந்திரன்.

அவனை பார்த்து சந்தோசமாக கையசைத்தவன் அவனிடம் சென்றான்.

“ஹாய் பாத்து ரொம்ப நாளாச்சு” என சுரேந்திரன் கேட்க…

“நான் வேலபாக்குறேன்டா தம்பி உன்ன மாதிரி வெட்டியா இல்லையில” என அவன் காலைவார

“உங்களபத்தி எனக்கு தெரியாதாண்ணா” என சுரேந்தர் கோகுலை காலைவாரினான்.

“சரி சரி” என அந்த பேச்சை முடித்தவன் “ஆமா. உங்க அண்ணனுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு அடுத்து உனக்குதான” என அவன் தோள்மேல் கைபோட்டு பேசியபடியே ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினர்.

“ஆமாண்ணா” என சுரேந்தர் கூறவும்

“லவ் மேரேஜா? அரேஞ்சுடு மேரேஜா?”

“கண்டிப்பா லவ் மேரேஜ் தான்” என்றான் சுரேந்தர் உறுதியாக

“ஓ… அப்ப இந்த கல்யாணத்துக்கு உன் லவ்வர வர சொல்லியிருக்கியா?”

“கல்யாணத்துக்கு வருவா. ஆனா நான் கூப்பிடல” என புதிர்போல கூறவும்

“என்னடா சொல்ற. கொஞ்ச நாளா நீ உன் பிரண்ட்ஸ் கூட சேர்றதில்லைன்னு கேள்விப்பட்டேன். என்னாச்சு?” என்றான் கோகுல்.

“அது… அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும் யாருன்னு உங்க எல்லாருக்கும் சொல்றேன். அண்ணனோட கல்யாணம் முடிஞ்சதும் என் கல்யாண அறிவிப்புதான்” என்றான் குதூகலத்துடன். தன் நண்பர்களை பற்றி அவன் பேச விரும்பாததை உணர்ந்து அந்த பேச்சை விட்டுவிட்டான் கோகுல்.

காரில் சுரேந்தரை வம்பிழுத்தபடியே வந்தான் கோகுல். ஒரு வழியாக இருவரும் வீடுவந்து சேர அனைவரும் பெண் வீட்டிற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தனர்.

கோகுல் வந்ததும் சம்பிரதாய நலவிசாரிப்புகளை தொடங்கிய சுந்தரம் “கண்ணன் தான் கல்யாணத்துக்கு வர்ரதா இருந்துச்சு. அப்பறமா உன் அம்மா உனக்கு கல்யாண ஏற்பாடு பண்றதா சொல்லி உன்ன அனுப்பிட்டான்” என தன் நண்பன் வராத வருத்தத்தை கூற…

“ஆனா எனக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சா இப்ப என்ன அங்கிள்?” என்று கூர்மையுடன் கேட்டான் கோகுல்.

“நீ பாக்க வேண்டியது இங்க நெறய இருக்கே அதான்ப்பா” என சுந்தரம் சொல்ல

“எத அங்கிள்?” என்றான் புரியாமல்

“அது… இங்க உள்ள எடங்கள்லாம் ரொம்ப நல்லாயிருக்கும் அதான் சொன்னேன்”

“ஆனா நான் இங்க நெறய தடவ வந்துருக்கேன் அங்கிள். நான் இங்க உள்ள எல்லாமே பாத்துருக்கேன்” என இளையவன் கூற…

சிரித்தவர் “நீ பாக்காதத எல்லாம் நான் காட்டுறேன். நீ போய் இப்ப குளிச்சு ரெடியாகிட்டு வா சாப்பிட்டதும் கிளம்பலாம்” என்றவர் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட

‘என்ன சொல்றாரு இவரு?’ என யோசித்தவன் ‘நம்மள வச்சு செய்யப்போறாங்கன்னு நெனைக்கிறேன். ம்…. பாப்போம்’ என விட்டுவிட்டு கிளம்ப சென்றான்.

போகும் வழியில் சுந்தரத்தின் மகன் சுதாகரை பார்க்க அவனிடம் சென்று “என்ன மாப்பிள எப்புடி இருக்க?” என்றான் கோகுல்.

“ஹேய்… எப்படா வந்த? அங்கிள் வர்றதா சொன்னாங்க நீ வரமாட்டேன்னு நெனச்சேன்டா” என்றான் சுதாகர் மகிழ்ச்சியுடன்.

“அப்பா வரலடா நான்தான் வந்தேன். அதுசரி நீ ஏன்டா டல்லாயிருக்க?”

“அத ஏன்டா கேக்குற. பொண்ணு ஊருல தான் கல்யாணத்த வைக்கனும்ன்னு அவங்க அப்பா பிடிவாதமா சொல்லிட்டாரு. இங்க கல்யாணம் வச்சதுனால எந்த பிரண்ட்ஸ{ம் வரல” என சோகமாக கூற…

“இதுக்காகவா கவலப்படுற?”

“அது மட்டுமில்லடா.. யாருமே இங்க நம்ம ஏஜ்ல இல்லடா? சரின்னு சுரேந்தர்கிட்ட பேசலாம்ன்னா அவனுக்கும் ஏதாவது வேலய குடுத்து அனுப்பியிடுறாங்க”

“ஓ… கஷ்டம்தான்”

“ம்… அதான் நீ வந்துட்டியே. இனி என் கல்யாணம் முடியற வரைக்கும் என்கூட தான் இருக்கனும்” என கேட்க…

“சரிடா” என சிரித்தபடி ஒத்துக்கொண்டு குளிக்க சென்றவன் “ஆமா நாம இப்ப எங்க போறோம்?” என கேட்க

“பொண்ணு வீட்டுக்கு. இன்னும் மூனு நாளைக்கு நாம எல்லாரும் அங்கதான் தங்க போறோம்”

“ஏன்?”

“யாருக்குத் தெரியும். சரி போய் குளிச்சுட்டு வா” என்றவுடன் அவனும் அறைக்கு சென்றுவிட்டான்.

தொடரும்…

Advertisement