Advertisement

காதல் 4

யாரும் தானாக மாறுவதில்லை!
யாரோ ஒருவரால் மாறுகிறோம்!!
நல்லவராக…
கெட்டவராக…
ஏமாளியாக…
கோமாளியாக…
முட்டாளாக…
என அனைவரும் யாரோ
ஒருவருக்காக ஏதோ ஒரு
சூழ்நிலையில் ஏதாவது ஒரு
பரிணாமத்தை மாற்றி மாற்றி
எடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!!!
ஆனால் அவை எந்தளவு சாத்தியம்
என்பதை நாம் உணர மறுக்கிறோம்!!!!
மறக்கிறோம்!!!!!

“ராதாவா… அவ செத்து மூனு மாதமாச்சேப்பா. நீ யாரு?” என கேட்க அதிர்ச்சியில் உறைந்து நின்றான் கோகுல். அவன் அப்படியே நிற்பதை கண்ட சுகந்தி “நீ யாருப்பா” என மீண்டும் கேட்க…

“நா… நான் ராதாவோட பிரண்ட்” என்றான் கோகுல் தடுமாற்றமாகவே…

“ஓ…” என்றவர் “சரிப்பா. உள்ள வா” என அழைக்க

“இல்ல.. எனக்கு வேலயிருக்கு” என கூறிவிட்டு கிளம்பிவிட அவனை யோசனையுடன் பார்த்தவாறு நின்றிருந்தார் சுகந்தி. சுகந்தி யோசனையுடன் நின்றிருப்பதை கண்ட செல்வம் அவரிடம் என்னவென்று விசாரிக்க “ஒன்னுமில்லைங்க… அந்த பையன் ராதாவ தேடி வந்தான். அவன் முகத்த பாத்தா ஏதோ சரியில்லாதத போல தோனுதுங்க” என கூற

“என்னவா இருந்தா இனி நமக்கென்ன” என்று கூறி சென்றுவிட அவரது மனைவியும் அவருடனே சென்றுவிட்டார்.

காரை ஓட்டிவந்த கோகுலின் மனம் தவறிழைத்துவிட்டோமோ என எண்ணி தன் வாழ்வின் முதன்முதலாக கவலைகொண்டது. வீட்டிற்கு செல்ல மனமில்லாதவன் நேராக வண்டியை கடற்கரைக்கு விட்டவன் கடற்கரைக்கு சென்று கடல் அலைகளை பார்த்தவாறு அமைதியாக அமர்ந்துவிட்டான்.

ஏகாந்த இரவு பௌர்ணமி நிலவு வெள்ளிப் பாலங்களாய் கடலலலைகள் சில்லென்ற காற்று முகத்தில் மோத கரையில் அமர்ந்திருந்தவன் இது எதையுமே உணரவில்லை. அவன் நினைவு முழுவதும் இருந்தது ஒன்றே ஒன்றுதான் ‘ராதா! ராதா! ராதா!’ என அரற்றிய தன் மனதை அடக்கும் வழி தெரியாது அமர்ந்திருந்தான். ‘அவள் சாவிற்கு நான் தான் காரணமா?’ என அவன் மனம் அமைதியின்றி தவிக்க ஆரம்பித்தது. “என் வீட்டு பொண்ணுங்களுக்கு ஏன் அந்த நெலம வரப்போகுது. நான் ஒன்னும் அவ வாழ்க்கைய கெடுக்கல. நீங்க வேணா பாருங்க நான் சொன்னது மாதிரியே அவ எவனையாவது கல்யாணம்பண்ணி செட்டில் ஆயிடுவா. சும்மா சொன்னதவே சொல்லாதீங்க. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எல்லாம் தெரியும். எவனாவது இளிச்சவாயன பாத்து கல்யாணம்பண்ணி செட்டில் ஆகிடுவா. நீங்க ஏன் கவலைபடுறீங்க” அவன் ஏளனமாக கூறிய வார்த்தைகளே அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் கேட்க நெடுநேரம் கடற்கரையில் இருந்தவன் நள்ளிரவின் போதுதான் வீடு வந்து சேர்ந்தான். அந்த நள்ளிரவு வேளையிலும் தன் குடும்பத்தின் மொத்த நபரும் சோகம் முகத்தில் படிய ஹாலில் அமர்ந்திருப்பதை கண்டவன் மனம் மேலும் கனத்தது.

அமைதியாக உள்ளே சென்றவனை தடுத்தது அவனது தாய் சிவகாமியின் குரல். “சாப்பிட்டு போ கோகுல்” என…

“வேண்டாம்” என்றவன் அமைதியாக தன்னறைக்கு சென்றுவிட்டான்.

அவனையே பார்த்திருந்த சிவகாமிக்கு தன் மகனின் தளர்ந்த நடை எதுவோ சரியில்லை எனத் தோன்ற “அவன் மொகமே சரியில்லைங்க” என தன் கணவரிடம் கவலையுடன் கூற…

“ஆமாமா உன் மகன் அப்புடியே கவலைபட்டுட்டாலும்” என நக்கலுடன் சொன்னார் அவர் கணவன்.

“ஏங்க இப்புடி பேசுறீங்க. இந்த பிள்ளைக்காக எத்தன கஷ்டப்பட்டோம்” என ஆற்றாமையுடன் கேட்க…

திருமணமாகி லலிதா பிறந்தவுடன் அனைவரும் ஆண்வாரிசு இல்லை என குறைபட… லலிதா பிறந்து ஐந்து வருடம் கழித்து பிறந்தவன் கோகுல். கோவில் கோவிலாக ஏறி இறங்கி கடைசியாக திருக்கோஷ்டியூர் சென்று வேண்டி விளக்கெடுத்து வந்தபிறகு பிறந்தவனாதலால் அவனுக்கு அந்த கண்ணனின் நினைவாக கோகுலக் கண்ணன் என பெயர்வைத்தனர்.

“நீ இப்படியே சொல்லி என்வாய அடச்சதனால தான் இப்படி தறுதலையா மாறிட்டான். இப்ப என்ன போய் அவன்கிட்ட என்ன பிரச்சனைன்னு கேக்கனும் அதான… போ” என கோபமாக பேச அமைதியாக நின்றிருந்தார் சிவகாமி.

அவன் செய்த தவறுகளுக்கு இவரை நொந்து என்ன ஆகப்போகிறது. இவர்கள் நால்வரை தவிர சிவகாமிக்கு வேறு உலகம் இல்லை என்றுணர்ந்த கண்ணன் “சரி போ…” என மீண்டும் அமைதியாக கூறவும் தன் மகனின் அறையை நோக்கி நகர்ந்தார்.

அறையினுள் நுழைந்தவர் கண்டது காலிலிருந்த ஷ_வைகூட கழற்றாமல் படுக்கையில் கிடந்த கோகுலைதான். தன் மகன் வாடிகண்டிராத சிவகாமியின் மனம் துடிக்கத்தான் செய்தது. அவன் அருகில் சென்று அமர்ந்தவர் “கோகுல்” என வாஞ்சையாக அழைத்து அவன் தலையை தடவ… அப்படியே வந்து அவர் மடியில் படுத்துவிட்டான்.

தந்தைக்கும் மகனுக்கும் பிரச்சனை வரும்போதும் கூட தாயை தேடியதில்லை கோகுல். இருவருக்கும் பிரச்சனை பெரிதாகி அவன் வீட்டைவிட்டு வெளியேறியபோதுகூட தன் தாயிற்கு ஆறுதல் கூறி சென்றானே தவிர அவன் கவலைப் படவில்லை. இன்று அவன் அக்காவின் வாழ்க்கை வீணானதை எண்ணி மனம் தாங்கவில்லை என நினைத்தவர் கண்களிலிருந்து நீர் அருவிபோல கொட்டியது.

மடியில் படுத்திருந்தவனின் கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்து கொண்டுதான் இருந்தது. இதுவரை கலங்காதவன் ஒரு உயிர்போக தான்தான் காரணமோ என்ற எண்ணத்திலேயே கலங்கினான். தன் மகனின் கண்ணீரை உணர்ந்த சிவகாமி “கோகுல்… நீயே இப்படி கலங்கினா எப்படிப்பா.. அக்காவுக்கு நீதானே ஆறுதல் சொல்லனும் எழுந்திரி… வந்து அக்காகிட்ட பேசு” எனக் கூற…

“அம்மா நான் நெறய பாவம் பண்ணிட்டேம்மா. நான் பண்ண பாவம் தான் அக்காவோட சந்தோஷத்த பறிச்சிடுச்சு” என வேதனையுடன் சொல்ல…

“அப்புடியெல்லாம் இல்லடா கண்ணா. நீ எந்த பாவமும் செய்யல… நீ கொஞ்சம் தப்பு பண்ணினதான் ஆனா எந்த பாவமும் செய்யலப்பா” என தன் மகனுக்கு ஆறுதலாக சிவகாமி பேசினார்.

“இல்லம்மா… அப்பா சொன்னது சரிதான். நான் பண்ண பாவம்தான் எல்லாமே” என்றவன் எழுந்து “நான் அப்பாகிட்ட பேசிட்டு வர்றேன்” என கூறிவிட்டு கீழே சென்றுவிட்டான்.

கீழே வந்து பார்த்தவன் ஹாலில் தன் தந்தை இல்லாததை கண்டு அவரது அறைக்கு சென்று பார்க்க ஓய்ந்த தோற்றத்துடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவனது தந்தை கண்ணன்.

அவர் அருகில் சென்றவன் “அப்பா…” என்றழைக்க…

“என்ன அப்புடி கூப்பிடாதடா” என்றார் கண்ணன் வேதனையுடன் “எப்ப நீ என் பேச்ச கேக்காம உன் சந்தோஷம்தான் முக்கியம்ன்னு தப்புக்கு மேல தப்பு பண்ணுனையோ அப்பவே நமக்குள்ள இருந்த உறவு முடிஞ்சிருச்சு. நீ திருந்துவேன்னு இருந்த என் நம்பிக்கையும் போச்சு” என்றார் கண்களை திறவாமலே.

அவர் காலடியில் அமர்ந்தவன் “சாரிப்பா… நான் பண்ணதெல்லாம் தப்பா இல்லையான்னு தெரியல. ஆனா நான் ராதாவுக்கு பண்ணது பாவம்தான்ப்பா. அத நான் நீங்க வந்து என்கிட்ட பேசினப்பவே புரிஞ்சுட்டு இருந்துருக்கனும்” என வேதனையுடன் சொல்ல…

“ஓ… நீ செஞ்சது தப்புன்னு உனக்கு தெரியுதாப்பா.. ரொம்ப சந்தோஷம். இவ்ளோ சீக்கிரம் புரிஞ்சுக்கிட்டியே…” என நக்கலாக கூறினார்.

“நீங்க சொன்னது சரிதான்ப்பா. ஒருநாள் நீ செஞ்சது தப்புன்னு உணருவ அப்போ உன் தப்ப திருத்திக்க முடியாத நிலமைக்கு போயிராம பாத்துக்கோன்னு சொன்னீங்க. அது உண்மைதான்ப்பா. இன்னைக்கு நான் செஞ்ச தப்ப திருத்திக்க முடியாத நெலமைல இருக்கேன்ப்பா” எனவும்

புரியாமல் பார்த்தவர் “என்னப்பா சொல்ற… தப்ப திருத்த முடியாத நிலைன்னா..?” என கேட்க…

“ராதா.. ராதா… இறந்துட்டாப்பா” என்றான் கண்களில் நீர்நிறைய.

“என்ன…?” என அதிர்ந்தவர் “யார் சொன்னது?” எனக் கேட்டார்.

“அவங்க அம்மா தான்ப்பா சொன்னாங்க” என்றான் கோகுல்.

“ஓ…” என்றவர் “என்னப்பா சொல்ற..? நீதானே இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எல்லாம் தெரியும். அவ வேற கல்யாணம் பண்ணிப்பான்னு. இப்ப வந்து செத்துட்டான்ற.. சரிவிடு அவ எதுக்கு செத்தாளோ?” என்றார் அசட்டையாக…

“இல்லப்பா. அவ செத்து முனு மாசமாச்சுன்னு அவங்கம்மா சொன்னாங்க. அவ சாவுக்கு நான்தான் காரணமோன்னு மனசு தவிக்குதுப்பா” என…

“ஏன்ப்பா… அவளாதான உன்கிட்ட வந்தா?” என மீண்டும் கண்ணன் கேட்க…

அப்Nhதுதான் உணர்ந்தான் அன்று தான் பேசிய வார்த்தைகளை வைத்தே தன் தந்தை தன்னை வதைக்கிறார் என்பதை ஒரு விரக்தி புன்னகை சிந்தியவன் “நீங்க நான் திருந்தினாதான் உங்கள அப்பான்னு கூப்பிடனும்ன்னு சொன்னீங்க. நீங்க சொன்னத மாதிரியே நான் இதுவர உங்கள அப்பான்னு கூப்பிடல. ஆனா இன்னைக்கு வார்த்தைக்கு வார்த்த அப்பான்னு கூப்பிடுறேன். தப்புன்னு நான் உணராதவரைக்கும் நான் தப்பு பண்ணினேன்ப்பா. ஆனா இனிமேல் அப்படி பண்ணமாட்டேன்” என்றவன்

“அவ அன்னைக்கு சொன்னாப்பா… ஒருநாள் நீ வருத்தப்படுவ.. ஏன்டா உயிரோட இருக்கோம்ன்னு நெனப்ப அன்னைக்கு நான் உனக்கு சாபம் கொடுத்தேன்னு நெனச்சுப்பாருன்னா. இன்னைக்கு அததவிர… அவளதவிர… வேற எதையுமே நினச்சு பாக்கலப்பா” என கண்களில் நீர்வழிய கூறியவனை பார்த்து “சரி நீ செஞ்சது தப்புன்னு உணர்ந்த வரைக்கும் சந்தோஷம். ரொம்ப நேரமாச்சு போய் தூங்கு” என அனுப்பி வைத்தார்.

தன் மகன் பொய் சொல்லமாட்டான் என அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அவன் செய்த தவறுக்கு வருந்தத்தான் வேண்டும் என அவனுக்கு ஆறுதல் சொல்லாமல் விட்டுவிட்டார். அதைவிட அவனுக்கு புத்திவர அவர் மகள் கொடுத்தவிலை அவருக்கு பெரிதாக தெரிந்தது.

முழுதாக ஒருவாரம் அந்தவீடே சோகம் சூழ்ந்திருக்க யாரும் வீட்டைவிட்டு வெளியேறி செல்லவில்லை. ஒருநாள் கோகுல் பார்மல் சூட்டில்வந்து தன் தந்தையிடம் “ஆபிஸ் போயிட்டு வர்றேன்ப்பா” எனக் கூறவும் சரி என தலையாட்டியவர் அதன் பிறகு முழுபொறுப்பையும் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டார். கோகுலும் கம்பெனியை நன்றாக நிற்வகிக்கவே அப்படியே விட்டுவிட்டு அவ்வப்போது ஆலோசனை மட்டுமே கூறுவார்.

இரண்டு வருடங்கள் கழித்து…

அனைவரும் அமர்ந்து உணவு உட்கொள்கையில் சிவகாமி பறிமாறியபடி “என்னங்க இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவச்சுட்டா நல்லா இருக்கும். நீங்க உங்க தங்கச்சி வேணிகிட்ட பேசிப்பாருங்க” என தன் கணவனுக்கு சொல்வது போல மகனுக்கு சொல்ல…

அவர் கணவனோ “சிவகாமி… கல்யாணம் உன் பையனுக்கு. அவனையே கேளு” என கூறி அவர் கழன்று கொள்ள… சிவகாமி மகனிடம் திரும்ப அவனோ யாரோ யாரிடமோ யாரைப்பற்றியோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனும் ரீதியாக அமைதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“கோகுல் உன் கல்யாணத்த பத்திதான் பேசிக்கிட்டு இருக்கோம். இப்புடி பதிலே பேசாம சாப்பிட்டுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என சிவகாமி கோபமாக கேட்க

“எனக்கு இஷ்டமில்லைன்னு அர்த்தம்” என்றான் கோகுல் அசுவாரசியமாக…

“அப்படின்னா…” என

“எனக்கு கல்யாணம் வேணாம்” என சிவகாமியை நேராக பார்த்து சொல்லவும் சிவகாமியும் கண்ணனும் மகனை ஆழ்ந்து பார்த்தனர். ஆனால் யாரின் பார்வை எந்த விதத்தில் இருந்தது என கவனிக்கத் தவறினான் கோகுல்.

தனக்கு திருமணம் வேண்டாம் எனக் கூறிய கோகுலை கோபத்துடன் சிவகாமி பார்க்க “கல்யாணம் வேண்டாம்ன்னா…? வேற எந்த பொண்ணையும் மனசுல வச்சுக்கிட்டு பேசுறியாப்பா. அப்புடி ஏதாவது இருந்தா சொல்லு. சரியா வரும்ன்னா பேசி முடிச்சுருவோம்” என்றார் கண்ணன்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல” என கோகுல் கூறிவிட… “அப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்னப்பா கஷ்டம்?” என்றார் கண்ணன்.

“எனக்கு கல்யாணம் பண்ணிக்கறதுல விருப்பம் இல்ல”

“எனக்கு விருப்பமில்லைன்னா என்னப்பா அர்த்தம். நீ உன் விருப்பப்படி செஞ்சு செஞ்சே எங்கள கஷ்டப்படுத்தற… முன்னாடி எங்க பேச்ச கேக்காம தப்பு பண்ணி கஷ்டப்படுத்துன இப்போ கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு கஷ்டப்படுத்துற” என சிவகாமி கண்கலங்க கூறவும் கண்ணனும் “நீ கல்யாணம் பண்ணிதான் ஆகனும். எங்களுக்கும் பேரன் பேத்திய பாக்கனுமே” என்றார்.

அவரை கூர்மையுடன் பார்த்தவன் “எனக்கு கல்யாணம் வேணாம்” என்றான் அழுத்தமாக

“நான் செத்தாதான்டா உங்களுக்கு நிம்மதி. உங்கக்காவும் நீயும் இப்படி பேசிப்பேசியே என்ன கொல்றீங்க” என தலையிலடித்து சிவகாமி கதறவும்…

இவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? என் விருப்பத்திற்காக நான் ஏன் இவர்களை பழிவாங்க வேண்டும்? என யோசித்தவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “சரி. கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா சொந்தத்துல இல்லாம அந்நியத்துல பாருங்க” என்றான். கொஞ்சம் டைம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கோகுல் கூற…

“சரிப்பா” என உடனே முகம் மலர்ந்தவர் அறிந்தவர் தெரிந்தவர் என அனைவரிடமும் தன் மகனுக்கு பெண் தேடுவதாக கூறி அவர்களுக்கு தெரிந்த பெண்களை கூறும்படி கேட்டார்.

கோகுல் வழக்கம்போல அலுவலகம் போவதும் வருவதுமாக அவன் வேலைகளை மட்டுமே கவனித்துவர… சிவகாமி தன் மகனுக்கு பெண் பார்ப்பதை மட்டுமே முழுநேர வேலையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

இவ்வாறாக நாட்கள் ஓடிக் கொண்டிருக்க ஒருநாள் “இந்த போட்டோவில இருக்க பொண்ணு பேரு ராதி. என் பிரண்ட் சௌமியாவோட பொண்ணு. நம்ம கோகுலுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா” என தன் கணவரிடம் போட்டோவை காட்டிவிட்டு அந்த பெண்ணைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் சொல்ல…

அதைக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து “சிவகாமி… கல்யாணம் உன் பையனுக்கு எதுவா இருந்தாலும் நீ அவன்கிட்ட பேசுறதுதான் சரியா வரும்ன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நீ போய் இந்த போட்டோவையும் அந்த பொண்ணோட டீடெய்ல்சையும் அவன்கிட்ட சொல்லு” என்றுவிட சிவகாமி தன் மகனை தேடி அவனறைக்கு சென்றார்.

கோகுல் அவன் அறையில் அமர்ந்து ஆபிஸ் பைல்களை பார்த்துக் கொண்டிருக்க… அவனிடம் சென்ற சிவகாமி “தம்பி உனக்கொரு பொண்ண பாத்திருக்கோம். இந்தாப்பா போட்டோவ பாத்துட்டு எப்புடி இருக்கான்னு சொல்லு. உனக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்” எனவும்

“அம்மா எனக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல. நீங்களே பாருங்க. உங்களுக்கு ஓ.கேன்னா அப்பறம் என்ன பண்ணலாம்ன்னு பாத்து புரோசீட் பண்ணுங்க” என்றுவிட்டான்.

“ஒரு தடவ போட்டோவ மட்டுமாவது பாருப்பா” என சிவகாமி வற்புறுத்தி கூற…

“எனக்கு வேலையிருக்கு. நீங்க கிளம்புங்க” என்று கராராக கூறியவன் தன் அலுவலில் மீண்டும் ஆழ்ந்துவிட்டான்.

‘இதுக்கு மேல ஏதாவது சொன்னா கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லியிருவான்’ என நினைத்த சிவகாமியும் அமைதியாக சென்று தன் கணவரிடம் மகன் கூறியதை கூற…

அவரோ “அதான் உனக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு வேலைகளை பாக்க சொல்லிட்டானே. பாரு” என அசட்டையாக கூறி சென்றுவிட்டார். சிவகாமிக்கு தான் என்ன செய்வதென்றே புரியவில்லை. ரெண்டு பேரும் இப்புடி கண்டுக்காம எனக்கென்னன்னு இருந்தா என்ன அர்த்தம் என உள்ளுக்குள் கொதித்தவர் அதை வெளியில் சொல்லத்தான் முடியாமல் போனது. எங்கே இருவரில் யாரிடம் சொன்னாலும் இந்த கல்யாணம் வேண்டாம் என கூறிவிடுவார்களோ என்ற பயத்திலேயே யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

யாரும் எதிலும் கலந்து கொள்ளாததால் சிவகாமியே முடிவெடுத்து இரண்டு நாட்களில் பெண் பார்க்க செல்வது என முடிவெடுத்து அனைவரிடமும் கூற… யாரிடமும் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் யாரும் தடுக்கவுமில்லை. லலிதா மட்டும் தான் வரவில்லை என முடிவாக கூறிவிட மற்ற மூவரும் பெண்பார்க்க சென்றனர்.

போகும் வழியில் யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக வர… அந்த அமைதியை கலைத்தார் கண்ணன். “அந்த பொண்ணு பேர் என்னம்மா சொன்ன… ராதாவா?” எனவும் கார் “கிரீச்” என்ற சத்தத்துடன் நின்றது.
தொடரும்…

Advertisement