Advertisement

இலேசான மனநிலையுடன் அனைவரும் தன் பயணத்தை தொடர சுமநேரிகுப்பமும் வந்து சேர்ந்தது. அங்கு சென்றதும் ராதாவிடம் வீட்டிற்கான வழியை கேட்டுக்கொண்டு சென்றனர். அந்தவீட்டை பார்த்ததும் அனைவரும் ஒருநிமிடம் அதிர்ந்து நின்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கண்டது ஓட்டினால் வேயப்பட்ட பழங்காலவீடு.

அதைக்கண்ட கண்ணன் “என்னம்மா இங்க எப்புடி…? லலிதா அட்ஜஸ்ட் பண்ணிப்பாளா?” என சந்தேகமாக கேட்க…

“அட்ஜஸ்ட் பண்ண தேவையில்ல மாமா.. உள்ள வந்து பாருங்க” என மர்மகதை போல கூறிவிட்டு செல்ல அவளைத் தொடர்ந்து அனைவரும் சென்றனர்.

உள்ளே செல்ல ஹாலில் சேகர் மற்றும் செல்வம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க பின்கட்டிலிருந்து சமையல் வாசம் மூக்கை துளைத்தது. இவர்களை கண்டதும் செல்வமும் சேகரும் எழுந்து வரவேற்க அனைவரும் சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர்.

“என்ன சம்பந்தி பொண்ண எங்க வீட்ல குடுத்துட்டு நாங்க மாப்பிள்ளை வீடு பாக்கவந்தா எங்ககூட வராம எங்கள வரவேற்க இங்கவந்து உக்காந்துருக்கீங்க” என கண்ணன் கேட்க “என்ன இருந்தாலும் கடைசி வரைக்கும் வச்சு கஞ்சி ஊத்தப்போறவன் மகன்தான சம்பந்தி.. அதான் அவன் கட்சிக்கு தாவிட்டேன்” என பதிலுக்கு கூற சிரித்தனர் அனைவரும்.

இவர்கள் வந்ததை உணர்ந்த சுகந்தி வந்து அனைவரையும் வரவேற்க “என்னம்மா ஸ்பெஷல்… சமையல் வாசம் வீட்டை தாண்டி வருதே” என கண்ணன் சுவாரசியமாக கேட்க

“மாமா.. அது என் சாப்பாடு. அதுல கை வைக்காதீங்க. நானே ரொம்ப நாள் கழிச்சு எங்க சித்தி கையால பிரியாணி செய்யச்சொல்லி இன்னைக்கு தான் சாப்பிடலாம்ன்னு இருக்கேன். அதுக்கு நீங்க பங்குக்கு வந்துருவீங்க போல இருக்கே” என சேகர் சொல்ல “அடடா… பிரியாணியா.. அப்பசரி ஒருகட்டு கட்டிடலாம்” என்றார் கண்ணன்.

“அம்மா… உங்க பையனுக்கு மட்டும் ஸ்பெஷல் பிரியாணியா?” என இடுப்பில் கை வைத்து முறைத்தபடி ராதா கேட்க

“ஏய்.. அதான் நீயும் வந்துட்டயில்ல” என்றார் சுகந்தி சமாதானமாக

“பிரியாணி மட்டுமில்ல… சித்தி நேத்து ஆப்பமும் தேங்காய்ப்பாலும் செஞ்சாங்க. அதுவும் அந்த தேங்காய்ப்பாலுல நாட்டுச்சக்கரையும் ஏலக்காயும் போட்டு.. ம்… ப்பா.. அவ்வளவு டேஸ்ட்” என கண்களை மூடி ரசனையுடன் சப்புக்கொட்டியபடி அவன் சொல்ல சொல்ல ராதா அவள் தாயை உஷ்ணப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்பறம்… இன்னைக்கு நைட் ஏதோ பண்ணிக்குடுக்குறேன்னு சொன்னீங்களே.. அது என்ன சித்தி?” என வேறு கொழுத்திப்போட

“ஓ… மகனுக்கு வகைவகையா விருந்து சமைச்சு போடுறீங்களா? இதுல நாங்க வந்தா நாங்களும் சேந்து சாப்பிட்டுக்கலாம்.. அப்புடித்தான?” எனவும் சிரித்த சுகந்தி “ஏய்… பிள்ள ரொம்ப நாளைக்கப்பறமா இப்பதான் நல்லா சாப்பிடுறான் கண்ணு வைக்காதடி” என்றார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்குவந்த சமையலாள் ஈஸ்வரி சூப்பைக் கொடுத்துச் சென்றார். “சாப்பிடுங்க.. நாட்டுக் கோழி சூப்” என சுகந்தி கூற “ம்… சாப்பிடுங்க சாப்பிடுங்க.. சித்தி சமையல் சூப்பரா இருக்கும்” எனவும் “டேய்… ஏன்டா அவள வம்புக்கிழுக்குற?” என அதட்டி அடக்கிவிட்டு உள்ளே செல்ல அவருக்கு உதவிசெய்வதற்காக சிவகாமியும் ராதாவும் பின்னாடி சென்றனர்.

“நான் ஏன் அவள வம்பிழுக்கப் போறேன்.. சித்தி அவ நம்மள எல்லாம் வேண்டாம்ன்னு சொல்லி ரொம்பநாள் ஆச்சு” என்றான். அவன் குரலிலும் வருத்தம் இருந்ததுதான் என்றாலும் கேட்டவர்களின் மனமும் வருத்தத்தில் மூழ்கியது.

“அம்மா..” என சுகந்தியிடம் நின்ற மகளை “உங்களுக்குள்ள என்ன இழுக்காதீங்கப்பா” என்று கழன்றுகொண்டார் சுகந்தி.

சமையல் வேலை ஓரளவு முடிந்துவிட்டபடியால் சுகந்தி “ராதா… லலிதா தனியா இருப்பா பாரு.. போ.. போய் வீட்ட சுத்திக்காட்டு” என அனுப்பி வைத்தார். ராதாவும் சென்று லலிதாவை அழைத்துக்கொண்டு வீட்டை காட்டினாள். அது ஒரு பழங்கால சுத்துக்கட்டு வீடு. வாசலில் இருபக்கமும் பெரிய திண்ணையும் எட்டு தூண்களும் அதைத் தாண்டி தேக்கால் செய்த ஒற்றை மரக்கதவும் அதன் பித்தளை பிடியும் அந்த வீட்டையே கம்பீரமாக காட்சியளிக்க செய்யும். அதைத் தாண்டி ஹாலும் அதில் பெரிய சோபாக்களும் இருக்கும். அதைத் தாண்டி உள்ளே சென்றாள் முத்தமும் முத்தத்தை சுற்றி தூண்களும் அதைச் சுற்றி சிறிது இடைவெளிவிட்டு எட்டு படுக்கை அறைகளும் அதைக் கடந்து சென்றால் சமையலறையும் இருந்தது. பின்புறம் கொள்ளைப்புறமாக பயன்படுத்தப்படும் போலும் பாத்திரம் கழுவ… துணி துவைக்க என தனித்தனி இடங்களும் கழிப்பறையும் இருந்தது. பின்புறம் மாடிக்கு செல்லும் படிகள் இருக்க அதில் ஏறிச்சென்றால் முற்றத்தைச் சுற்றிலும் கற்தூண்கள் தாங்கியிருக்க அதைச் சுற்றிலும் அறைகளாக இருந்தது.

அதில் ஒரு அறையை திறந்து “உள்ள வாங்க” என ராதா அழைக்க அவள் பின்னோடு சென்றாள் லலிதா. புழக்கம் அதிகம் இல்லாத அறை என்பது அந்த அறையினுள் நுழையும் போது வந்த வாசனையிலிருந்தே நன்றாக தெரிந்தது. உள்ளே சென்று ராதா விளக்கைப் போடவும் லலிதா அறையை சுற்றிப்பார்த்தாள்.

அறை மிகவும் நேர்த்தியாக சுத்தமாக இருந்தது. ஒரு பெரிய தேக்குமர கட்டில் ஒரு ஆள் உயர கண்ணாடி அதன் அருகில் பெரிய மரத்தாலான மேசை அதன் மேல் ஒரு வீணை இருந்தது. கட்டிலின் மேலே ஒரு ஆளுயர புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தில் லலிதாவின் கவனம் சென்றதும் “அதுதான் எங்க பெரியம்மாவும் பெரியப்பாவும்” என்றவள் “உங்களுக்கு வீணை வாசிக்க தெரியுமா?” என்றாள்.

“ம்ஹீம்” என லலிதா மறுப்பாக தலையசைக்கவும் “எங்க பெரியம்மா நல்லா வீணை வாசிப்பாங்கன்னு அம்மா சொல்லுவாங்க” என்றவள் சென்று வீணையின் நரம்பினை அசைக்க அந்த சத்தம் வீட்டினுள் ஒலிக்க ஆரம்பித்தது.

“ஐ… ஐடியா. எங்க பெரியம்மா இறந்தப்போ எங்கண்ணனுக்கு எட்டு வயசு. அவங்க இருந்தவரைக்கும் தினமும் பாட்டு பாடுவாங்கன்னு இங்க வரும்போதெல்லாம் என்ன அண்ணன் பாடசொல்லுவாரு. இன்னைக்கும்; நான் அந்த பாட்டபாடி எங்கண்ணன சமாதானப்படுத்தப் போறேன்” என்றவள் வீணையைத் தூக்கிக்கொண்டு கீழே செல்ல

“பாட்டா? உங்கண்ணனுக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்குமா? என்ன பாட்டு? உனக்கு பாடத்தெரியுமா என்ன?” என கேள்வி கேட்டுக்கொண்டே லலிதா உடன்வர “நீங்க என்ன கே.பி.சுந்தராம்பாளா? என்ன என்னன்னு கேள்வியா அடுக்கிட்டே போறீங்க. வந்து பாருங்க” என்றாள் ராதா.

அவளை பார்த்;த லலிதா “ராதா.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லவா?” என கேட்க “ம்…” என ஒப்புதல் அளித்தாள் ராதா.

“உனக்கு உங்க அண்ணன பாத்ததுக்கு அப்பறம் வாய் கூடிருச்சு” எனவும் “ஈஈஈஈ…….” என கேவலமாக இளித்தவள் “எப்பவுமே நம்மளவங்கள பாக்கும்போது ஏதோ ஒரு வித்தியாசம் வரத்தானே செய்யும். எனக்கு வாயில வந்துருக்கு” என்றவள் “இத கூட்டத்துல மட்டும் சொல்லிறாதீங்க” என்றாள் பம்மிய குரலில்.

திடீரென பம்மிய ராதாவை பார்த்த லலிதா “ம்ம்… அந்த பயம் இருக்கனும்” என “ரொம்ப பண்ணவேணாம் இன்னைக்கு நீங்க நாத்தனார் கொடுமை பண்ணினா நாளைக்கு நான் பண்ணுவேன்” என கெத்தாக கூறிவிட்டு சென்றவள் நேராக பூஜையறைக்கு சென்று அமர்ந்து “இங்கதான் பெரியம்மா பாடுவாங்களாம்” என்றவள் கண்மூடி அமர்ந்து பாட ஆரம்பித்தாள்.

நீலவண்ணக் கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா
நீலவண்ணக் கண்ணா வாடா
பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
எல்லையில்லா கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா
நீலவண்ணக் கண்ணா வாடா
வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன்மலர்கள் சிரிக்கும் மாட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி
நீலவண்ணக் கண்ணா வாடா
தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்
கண்ணால் உனைக் கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்
சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நீலவண்ணக் கண்ணா வாடா
நடுங்கச் செய்யும் வாடை காற்றே
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு
விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை இது
என்றே கேட்கும் மதியைப் பாரு
இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
இணையில்லா செல்வம் நீயே
பொங்கும் அன்பின் ஜோதி நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே

சேகரின் சிறுவயதில் அவனது தாய் அவனுக்காக பாடும் பாடல். என்னதான் சுகந்தி சேகரையும் அவனது அண்ணனையும் நல்லபடியாக பார்த்துக் கொண்டாலும் அவருக்கு பாடவராது. அவன் தன் தாயை நினைத்து ஏங்கும்போதெல்லாம் ராதாவை இந்தப் பாடலை பாடச்சொல்லி கேட்பான். இன்று ராதா பாடும்போதும் அவன் தாயை உணர்ந்தான்தான். ஆனாலும் அவளின் தவறை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. ராதாவிற்காகத்தான் லலிதாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்து அவர்கள் வீடுவரை சென்றதும் அப்போதும் அவளது தவறை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல்தான் அங்கு அவ்வாறு நடந்துகொண்டதும் அவள் வருத்தப்படுவது தாங்காமல்தான் இறுதியில் தானே அனைத்தையும் சரிசெய்ததும். அவளிடம் பேசினால் சரியாகிவிடும்தான் ஆனால் பேசாமல் சென்றுவிட்டான். அவனை சமாதானம் செய்யத்தான் அவள் பாடினால் என்பது அவனுக்கும் நன்றாகவே தெரியும் ஆனாலும் எதுவும் கூறாமல் சென்றுவிட்டான்.

அனைவரும் ராதாவை பாராட்ட அவளோ திரும்பிச் செல்லும் சேகரையே வலியுடன் பார்த்திருந்தாள். “அத்த.. அப்பா இந்த பாட்ட அடிக்கடி கேப்பாங்க. நீங்க அதே மாதிரி அழகா பாடுனீங்க” என சரத்கூட அவளை பாராட்ட அவள் யாருக்காக பாடினாளோ அவன் மட்டும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான்.

தொடரும்…

Advertisement