Advertisement

காதல் 17

சுற்றியுள்ள சொந்தமெல்லாம்
காணாமல் போகும் மாயம்…
பேசுகின்ற மொழிகளெல்லாம்
புரியாமல் போகும் மாயம்…
காணுகின்ற காட்சியெல்லாம்
பதியாமல் போகும் மாயம்…
அழுகை சத்தமெல்லாம்
சங்கீதமாய் மாறும் மாயம்…
இனிமையான இசைகளெல்லாம்
அபசுரமாய் ஒலிக்கும் மாயம்…
இவையனைத்தும்
காதலில் மட்டுமே சாத்தியம்!!!

வந்தவரை வாசலிலேயே நிற்க வைப்பது முறையல்ல என்பதை உணர்ந்த கண்ணன் “வாங்க” என முகத்தில் சிறு புன்னகையுடன் வரவேற்க வேறு வழியின்றி அனைவரும் அவரை பின்பற்றி வரவேற்றனர்.

உள்ளே வந்தவன் ராதாவை பார்த்து “ஹாய்” என தன் முத்துப்பற்கள் மொத்தத்தையும் காட்ட “உட்காரு” என்றாள் ராதா கடுப்புடன். ஏனெனில் அவளுக்கு தெரியும் இப்படி ஒருவன் பெண் கேட்டு வந்தால் அந்த வீட்டினரின் நிலை என்னவென்று. அவளும் எவ்வளவோ வாதாடி பார்த்துவிட்டாள் ‘உன்ன பத்தி வீட்ல சொல்லிடுறேன்’ என்று.. ஆனால் அவனோ என்னைப்பற்றி நானன்றி வேறு எவரும் பேசுவதை விரும்பவில்லை என தெளிவாக கூறிவிட்டான்.

அந்த கோபத்துடன் தான் அவள் அவ்வாறு நடந்து கொண்டாள். அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழாமல் அவள் பேசிய விதமே கூறியது வந்தவனுக்கும் ராதாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை. அனைவரும் வந்து அமர்ந்த பின்பு அமைதி நிலவ அந்த அமைதியை கலைப்பதற்காக பேச்சை ஆரம்பித்தார் கண்ணன்.

“அப்பறம் தம்பி.. உங்க பேரென்ன?” என கேட்க

“சேகர் அங்கிள்” என்றான் அவன்.

“இந்த பையன்?” என அவர் கேள்வியாக நிறுத்த

“என்னோட பையன். பேரு சரத்” என்றான்.

“ஓ…” என்ற கண்ணனின் முகமே கூறியது இதில் விருப்பமில்லை என்பதை. அதை பார்த்துக் கொண்டிருந்த ராதா ஏதோ கூறவர “உன் நாத்தனார கண்ணுல காட்ட மாட்டியா? போ.. போய் கூட்டிட்டு வா” எனவும் அவனை முறைத்தபடியே எழுந்து சென்றுவிட்டாள் ராதா.

அவளின் கோபத்தை பார்த்து சிரித்தவன் “என்ன கேட்டீங்க அங்கிள்?” என கேட்க “இந்த பையனோட அம்மா?” என்றார் கண்ணன் தயங்கியவாறு

“அவங்க ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டாங்க” என்றான் அவன்.

லலிதாவின் அறைக்கு சென்ற ராதா “போகலாமா?” என கேட்க “ராதா… ரொம்ப நர்வஸா இருக்கு. இது அவசியம்தானா?” என அவள் கரங்களை பிடித்து பதட்டத்துடன் கேட்டாள். “அவங்க வந்து ஹால்ல உக்காந்துருக்காங்க. இப்ப வந்து நீங்க இப்புடி சொன்னா எப்புடி? வாங்க” என லலிதாவை அழைத்துச் சென்று காபியுடன் நிற்க வைத்தாள் ராதா.

சேகரை நிமிர்ந்து பார்த்த லலிதா பிரம்மித்துத்தான் போனாள். ஆறடி உயரமும் அழகான கேசமும் அடர்ந்த மீசையும் குறும்பான கண்களும் கோதுமை நிறமும் அழகான இளைஞனாக காட்சியளித்தான் அவன். ஆனால் அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை பார்த்தவுடன் அவளை சுற்றியிருந்த மாயவலை அறுந்து விழுந்தது. அமைதியாக சென்று காபியை கொடுத்தவள் திரும்பி செல்ல எத்தனிக்க “எனக்கு உங்க பொண்ண பிடிச்சுருக்கு.. உங்க பொண்ணுக்கும் என்ன பிடிச்சிருக்கான்னு கேட்டீங்கன்னா நான் வந்த வேலை முடிஞ்சுரும்” என்று சேகர் சொல்ல அனைவருக்கும் கோபம் கண்மண் தெரியாமல் வந்தது.

“வீட்ல எல்லாரும் பேசிட்டு முடிவு சொல்றோம்ப்பா” என தன்மையாக கண்ணன் எடுத்துச் சொல்ல “பரவாயில்ல அங்கிள்.. நான் வெயிட் பண்றேன் நீங்க பேசிட்டு முடிவு சொல்லுங்க” என்று சோபாவில் நன்றாக அமர்ந்தபடி சொன்னான்.

அதை பார்த்த ராதா “மாமா.. சரத்” என ஆரம்பிக்க

“ராதா” என்றான் சேகர்.

“இவர் கால்”

“ராதா”

“இவர்”

“ராதா” என அவளை பேசவிடாமல் அவன் அடக்கிக் கொண்டே இருக்க தன் இரு கண்களையும் மூடி பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள் “இவ்ளோ பிடிவாதம்” என அவனை பார்த்து கோபமாக பேசியவளை இடைமறித்து “உன்னவிட கம்மிதான்” என்றான்.

“ஆ…” என கத்தியவள் சென்று அவன் காலடியில் அமர்ந்து “நான் உங்க செல்லம்தான.. இந்த செல்லத்துக்காக”

“இதமட்டும் செய்யமாட்டேன். யாருக்கு என்ன தெரியனுமோ அத நேரடியா என்கிட்ட கேக்க சொல்லு.. நான் சொல்றேன்” என்றான் இளகாமல்.

“மவனே… இவங்கள நீ நல்லா பாத்துப்பேன்ற ஒரே காரணத்துக்காக சும்மா விடுறேன். என்னபத்தி உனக்கு தெரியும் பாத்துக்க” என ஒருவிரல் நீட்டி எச்சரித்தவள் அனைவரிடமும் திரும்பி “நீங்க கேட்டாதான் பதில் சொல்லுவேன்னு சொல்லிட்டாங்க.. ப்ளீஸ் என்ன நம்புங்க. உங்க மனசுல உள்ள கேள்விய எல்லாம் கேட்டுருங்களேன்” என்றாள் ராதா கெஞ்சலாக.

“ராதாவ உங்களுக்கு எப்புடி தெரியும்?” என கண்ணன் கேட்க

“சுகந்தி சித்தியும் எங்க அம்மாவும் உடன் பிறப்பு.. அம்மா அப்பா சின்ன வயசுல இறந்துட்டாங்க ஒன்னாதான் வளந்தோம். அப்பறம் அண்ணனுக்கு கல்யாணம் ஆனப்பறம் நாங்க அம்மா அப்பா இருந்த ஊருக்கு போய்ட்டோம்” என்றான்.

“உங்கண்ணன் எங்க இருக்காங்க?”

“எங்கண்ணன் ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டாங்க”

“உங்கண்ணி”

“ரெண்டு பேருமே சேந்துதான் போனாங்க.. கார் ஆக்சிடண்ட். ரெண்டு பேருமே ஸ்பாட் டெட்”

“சாரி” என கண்ணன் வருத்தத்துடன் சொல்ல

“இட்ஸ் ஓ.கே அங்கிள்” என்றான் சேகர்.

“உங்க வயசு என்ன?”

“முப்பத்தஞ்சு”

“ஏன் இவ்ளோ நாளா கல்யாணம் பண்ணிக்கல?” என சந்தேகமாக கேட்டான் கோகுல்.

“சரத் கொஞ்சம் பெரிய பையனா இருந்தா நல்லாயிருக்கும்ன்னு தோனுச்சு”

“ஏன்?”

“ஏன்னா? ம்… என் அண்ணனோட சொத்து எல்லாம் சரத் பேர்லதான் இருக்கு. அவன் சின்ன வயசுல இருந்து ஒருத்தர் வளத்தா அவங்கள ரொம்ப நம்ப ஆரம்பிச்சுடுவான். அவங்க சுயநலத்துக்காக அவன் சொத்த எழுதி வாங்கிக்கிட்டு வீட்டவிட்டு வெளிய தொறத்திட்டா? அதான்”

“நீங்க இருப்பீங்களே?”

“சாசுவதம் இல்லையே”

சேகரின் பேச்சில் நியாயம் இருப்பது போன்று தோன்ற அமைதியாகிவிட்டான் கோகுல். “உங்க அண்ணனுக்கு பசங்க?” என கண்ணன் கேட்க அவரை பார்த்து புன்னகைத்தவன் “ராதா சொன்னது சரிதான்.. நீங்க ரொம்ப ஷார்ப். சரத்தான்” என்றான்.

“அப்ப உங்களுக்கு இது ஃபர்ஸ்ட் மேரேஜா?” என சிவகாமி ஆர்வமாக கேட்க

“இன்னைக்கு தான் நான் ஃபர்ஸ்ட் டைம் பொண்ணு பாக்க வர்றேன்” என்றான் சேகர் புன்னகையுடன்.

அவன் கூறியதை கேட்டபின்தான் அனைவருக்கும் நிம்மதியே.. அதுவரை ஒட்டாத தன்மையுடன் பேசியவர்கள் அதன்பின்பு நன்றாக பேசினர்.

“உங்க காலுக்கு என்னாச்சு தம்பி” என கேட்டார் சிவகாமி.

“இது பைக்ல போகும்போது ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு ஆன்ட்டி”

“எப்போப்பா ஆக்சிடெண்ட் ஆச்சு”

“இப்ப ஒரு நாலு மாதம் ஆச்சு”

“ஓ… டாக்டர் என்னப்பா சொல்றாங்க?” என கண்ணன் கேட்க

“இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்ல சரியாகிடும்ன்னு சொன்னாங்க அங்கிள்” என்றான்.

“என்னப்பா பிசினஸ்”

“விவசாயம் அங்கிள்”

“விவசாயமா?” என புன்னகையுடன் கேட்டார் கண்ணன்.

“யெஸ் அங்கிள்.. அப்பா சொத்து இருந்தது… அதுல விவசாயம் பண்ணலாம்ன்னு தோனுச்சு. செஞ்சு பாத்தேன்.. பிடிச்சிடுச்சு… அதவே தொழிலா பண்ணிட்டேன். அது போக ஒரு ரைஸ்மில்லும் அரிசி மண்டியும் இருக்கு அங்கிள்” என்றான்.

அதன் பின்னர் பேசிக்கொண்டிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பிடித்துவிட “சரி அங்கிள் நாங்க கிளம்புறோம். எனக்கு ஓ.கே… உங்க பொண்ணுக்கு பிடிச்சிருந்தா கால் பண்ணுங்க” என்றவன் “வர்றேன்” என ராதாவிடம் சொல்ல அவள் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.

“ராதா” என கோகுல் அதட்ட காது கேளாதவளை போல சென்றவளை பார்த்து சிரித்தபடியே விடைபெற்று சென்றான் சேகர். சேகரை வழியனுப்பிவிட்டு வந்த கோகுல் “ராதா.. நீ செஞ்சது கொஞ்சம் கூட சரியில்ல.. அவர் வர்றேன்னு சொன்னா நீ முகத்த திருப்பிக்கிட்டு போற” என கோபத்துடன் கடிய

“ஏன்? எனக்கு கோபம் வராதா? நானும் எவ்ளோ சொல்றேன். அப்பறமும் என்னப்பத்தி நான்தான் சொல்லுவேன்.. அதுவும் அவுங்க கேட்டாதான் சொல்லுவேன்னா கடுப்பு வருமா? வராதா? மனுஷிக்கு” என ராதாவும் பதிலுக்கு கோபப்பட

“சரி… அவர் ஏன் உன்ன அவரப்பத்தி சொல்லக்கூடாதுன்னு சொன்னாரு?” என்றான் யோசனையுடன் கோகுல்.

“ம்… அந்த லூசுக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவங்ககிட்ட கூட சொல்லாம நான் போய்ட்டேன்னு கோபம்.. ரெண்டு மாசமா நானும் டைப்டைப்பா மன்னிப்பு கேட்டுட்டேன். ஆனாலும் கோபம் மட்டும் குறையவே இல்ல. அதுக்குத்தான் இப்புடி பழி வாங்கிட்டாங்க” என்றாள் கோபம் குறையாமல்.

“சரி சரி… கோபப்படாத” என

“அப்படிதான் கோபப்படுவேன்” என பிடிவாதமாக கூறியவள் கோபத்துடனேயே தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

சேகரைப்பற்றி அனைவருக்கும் திருப்தியே. சுகந்தியிடம் கேட்டதற்கு சுகந்தியும் “ராதா சொன்னாண்ணா… அவ சொன்ன மாதிரி ரெண்டு பேருமே ரொம்ப பொருத்தமா இருப்பாங்க. நான் சேகர்கிட்ட பேசுறேன்ணா அவன்தான் நான் மட்டும்தான் போவேன் நீங்க யாரும் வரக்கூடாதுன்னு பிடிவாதமா சொல்லிட்டான். நான் பேசுறேன்” எனவும் அனைவருக்கும் சம்மதம் என்றானது.

லலிதாவிடம் கேட்டதற்கு அவளும் சம்மதம் தெரிவித்துவிட சுகந்தியிடம் கூறி ஒரு நல்ல நாளாக பார்த்து மாப்பிள்ளை வீடு சென்று பார்க்கலாம் என முடிவு செய்தனர்.

பத்து நாட்களில் மாப்பிள்ளை வீடு பார்க்க செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. சுகந்தி தன் அக்கா இல்லாததால் அவரது இடத்தில் இருந்து திருமணத்தை நடத்த சேகரின் வீட்டிற்கு முன்கூட்டியே சென்றுவிட கண்ணனின் குடும்பம் மட்டும் காஞ்சிபுரம் நோக்கி காரில் பயணப்பட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள சுமநேரிகுப்பம் தான் சேகரின் சொந்தஊர். சுமநேரிகுப்பத்தை நோக்கி செல்லும்போது தென்னேரியின் செழுமை நன்றாக தெரிந்தது. பச்சை விரிப்புடன் இயற்கை காற்று முகத்தில் மோத பட்டணத்தில் இருந்த அத்தனை அழுத்தத்தையும் அதனுடன் எடுத்துச்செல்வது போன்ற எண்ணத்தை கொடுத்தது.

Advertisement