Advertisement

காதல் 15

காதலனே…
உனை எண்ணி காத்திருந்தேன்!
உன் காதலின் தடத்தை
என் நெஞ்சில் பதிக்க…
நீ கண்ணீரின் தடத்தை
என் கண்களில் பதித்தது
ஏனடா…? என் கண்ணா…!
உன்னை எண்ணி ஏங்கும் நெஞ்சம்
நெருங்க மறுக்கிறதே…!
என் மன்னா…!

“உங்க அம்மாகிட்ட கேட்டேன்.. உங்களுக்கும் உங்க அக்காவுக்கும் பூரி மசலான்னா பிடிக்குமாமே.. இன்னைக்கு நான் செய்யறேன். சீக்கிரமா வந்து சாப்பிடுங்க” என்றபடியே சென்றவளை பார்த்து “கடவுளே… உங்கிட்ட என்ன கேட்டேன். எங்கம்மா மாதிரி ஒருத்திய என் லைப் பாட்னரா கேட்டேன். அது ஒரு குத்தமா…? ஏன் எங்கப்பா மாதிரி ஒருத்திய குடுத்த.. அவ என்ன யோசிக்குறா..? எப்ப என்ன செய்வான்னு ஒன்னுமே புரிய மாட்டுது” என புலம்பியவன் தன் மொபைல் ஒலிக்க அதை எடுத்து பார்த்தவன் சுரேந்தர் என வரவும் எடுத்த எடுப்பிலேயே “டேய்… இந்த ராதாவ எப்புடி கரெக்ட் பண்றதுன்னு ஐடியா சொல்றா” என கேட்க

“என்ன டேய்ன்னு சொன்னதகூட நான் பொறுத்துப்பேன்.. ஆனா என் தங்கச்சிய கரெக்ட் பண்ண என்கிட்டையே ஐடியா கேக்குறத நான் பொறுத்துக்கவே மாட்டேன்டா” எனவும் தான் நினைவு வந்தது ராதாவின் அண்ணன் பெயர் சுரேந்தர் என்பது.

தன் தலையில் அடித்துக் கொண்டவன் “ஈஈஈ……” என இளித்தபடி “சும்மாதான் மச்சான்.. காமெடி… நீங்க என்ன விசயமா போன் பண்ணிங்க” என கேட்;டான்.

“ராதா போன் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு.. கால் பண்ண சொல்லு” என்றவன் வைத்துவிட ‘இன்னைக்கு யார் மூஞ்சியில முழிச்சேனோ நாள் ரொம்ப நல்லா இருக்கு’ என நினைத்தபடி ராதாவிடம் சென்றவன் “உன் போன் எங்க?” என்றான்.

“ரூம்ல” என்றவள் வேலையை பார்க்க

“உன் போன் ஸ்விட்ச் ஆப்ல இருக்காம்.. உங்கண்ணன் பேச சொன்னான்” என்றவன் தன் மொபைலை கொடுக்க அதிலிருந்து பேசியவள் “என்னண்ணா?” என…

“இரு.. அம்மா உன்கிட்ட ஏதோ பேசனும்ன்னு சொன்னாங்க” என்றபடி மொபைலை தன் தாயிடம் கொடுத்தான்.

“அம்மா” என இவள் ஆரம்பிக்க “மாப்பிள்ளைக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?” என கேட்டார் சுகந்தி.

“என்ன பிரச்சனை? அப்படியெல்லாம் எதுவும் இல்லையே” என்றாள் ராதா குழப்பத்துடன்.

“உங்களுக்குள்ள பிரச்சனை இல்லாமலா மாப்பிள்ளை உங்க அண்ணன்கிட்ட அப்புடி பேசுனாரு” என கேட்க

“எப்புடி பேசுனாரு?” என்றபடி கோகுலை திரும்பி பார்த்தவள் அவன் முழிப்பதை பார்த்து “என்ன பேசுனீங்க?” என்றாள்.

“ஏய்… மாப்பிள்ளைகிட்ட கேக்காதடி” என சுகந்தி கூறும்போதே “அப்பறமா பேசுறேம்மா” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு “என்ன பேசுனீங்க?” என்றாள் மீண்டும்…

“அது… ஒன்னுமில்லையே” என்றவன் அவளருகில் வந்து “அப்பறமா பேசிக்கலாம் ப்ளீஸ்” என்றான் பூரிக்கு மாவை தேய்த்துக் கொண்டிருந்த தன் தாயை பார்த்தபடி… அவன் பார்வையை உணர்ந்து கொண்ட ராதா அமைதியாக கோகுல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

அன்று இரவு உணவின் போது “உங்களுக்கு இந்த பூரி மசாலா ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னாங்க… நல்லா சாப்பிடுங்க” என லலிதாவிற்கு வைத்த ராதா கோகுலிற்கு இட்லியை வைக்க அவன் விழித்தான்.

‘என்னடா இவ.. உங்களுக்கு பிடிச்ச பூரி மசாலா பண்றேன்னு சொல்லிட்டு வந்தா… ஆனா இப்ப இட்லிய வைக்குறா?’ என்றவாறே அவளை பார்க்க “சாப்பிடுங்க” என்றாள் இன்முகத்துடன். ‘நாம ஏதாவது பேசி அவ பதிலுக்கு எதுவும் சொல்லிறாம?’ என நினைத்தவன் அமைதியாக சாப்பிட லலிதா தன் அருகில் அமர்ந்திருந்த தந்தையிடம் “அப்பா.. அவனுக்கு பூரி மசாலான்னா ரொம்ப பிடிக்கும். ராதாகிட்ட சொல்லி வைக்க சொல்லுங்க” என… கண்ணனோ “உனக்கென்னமா? சாப்பாடு சூப்பரா இருக்கு பாரு.. சாப்புடு” என்றவாறு உண்ணத் துவங்க லலிதாவிற்கு சாப்பாடு தொண்டையில் இறங்க மறுத்தது.

பூரியை பார்த்து ஆசையாக அமர்ந்தவன் முன்னால் இட்லி நீட்டப்பட அவன் முகம் மாறியதை பார்த்த லலிதா தன் தந்தையிடம் மீண்டும் “அப்பா… ராதாகிட்ட சொல்லி அவனுக்கு பூரி வைக்க சொல்லுங்கப்பா” என “உனக்கு தேவைன்னா நீ சொல்லும்மா” என்றவர் தட்டைவிட்டு நிமிராமல் உண்டுகொண்டிருக்க பொறுத்துப் பொறுத்து பார்த்தவள் எழுந்து கொண்டாள் “ஐயோ… சாப்பாடு பிடிக்கலையா உங்களுக்கு.. சாப்பிடாமலே எழுந்துட்டீங்க” என ராதா சோகமாக கேட்கவும் “சேச்சே… சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்கு” என்றபடி மீண்டும் அமர்ந்தாள்.

“இன்னும் ரெண்டு பூரி வச்சுக்கோங்க… உங்களுக்கு ரொம்ப பிடிக்குமாமே” என்றபடி இன்னும் இரண்டு வைக்க அதற்கு மேல் தாங்க முடியாமல் “எனக்கு மட்டுமில்லம்மா.. உன் புருஷனுக்கும் பிடிக்கும்” என லலிதா கூறிவிட

“என்னது? உங்க தம்பிக்கும் பிடிக்குமா?” என்றபடி கோகுலின்புறம் திரும்பினாள். அதை பார்த்தவன் ‘உலக மகா நடிப்புடா சாமி’ என மனதினுள் நினைத்தவன் அவளையே பார்க்க “உங்களுக்கு பிடிக்கும்ன்னா என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே” என்றவள் இட்லியை ஒதுக்கிவிட்டு வேறு ஒரு தட்டில் பூரியை வைத்து கொடுக்க “எனக்கு பூரி பிடிக்கும்ன்னு உனக்கு தெரியவே செய்யாதுல்ல” என்றான் ராதாவிற்கு மட்டும் கேட்க்கும் குரலில்.

“உங்கக்கா உங்களுக்காக பேசுனாங்க” எனவும் அவளை பார்த்து சிரித்தவன் “தேங்க்ஸ்” என்றான். தன் கண்களை சிமிட்டி அழகாக சிரித்தவள் “கமலுக்கு சாப்பாடு குடுத்துட்டு வந்துடுறேன்” என்றவள் சாப்பாடை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

அன்று இரவு தன்னறைக்கு சென்ற கோகுல் போர்வையை தலைமுதல் கால்வரை இழுத்து போர்த்தியபடி படுத்துக்கொண்டான். தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்த ராதா கோகுலை பார்த்து நமட்டு சிரிப்புடன் “அம்மா… உங்க மருமகன் ஏதோ சொன்னதா சொன்னீங்களே.. என்ன அது?” என கேட்க அரக்க பறக்க எழுந்து அமர்ந்தவன் அவள் கையில் மொபைலை காணாது பெருமூச்சு விட்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த ராதாவை கண்டு ‘சிக்கிட்டடா செல்லம்’ என்ற மனதை கண்டுகொள்ளாமல் “என்னம்மா?” என்றான் தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியபடி

“எங்கண்ணன்கிட்ட என்ன சொன்னீங்க?” என கேட்டாள் ராதா.

“நான் ஒன்னும் சொல்லலையே” என சமாளிக்க பார்க்க “ஓ…” என்ற ராதா தன் மொபைலை எடுத்து டயல் செய்யவும் அதை பார்த்து பதறியவன் “ஏய்.. ஏய்… இரு.. நானே சொல்றேன்” என்றான்.

ராதா கோகுலின் முகம் பார்க்க “அது… அது..” என தலையை குனிந்தபடி சொல்ல “ம்..?” என்றாள் ராதா கேள்வியாக..

“உன்ன எப்புடி கரெக்ட் பண்றதுன்னு சொல்லிக்குடுடான்னு” என்றவனை ராதா முறைப்பதை கண்டு “சத்தியமா உங்கண்ணன்னு தெரியாமதான் சொன்னேன்” என படுக்கையில் மண்டியிட்டு தன் தலைமேல் கை வைத்து அவசரமாக சொல்லவும் அந்த சூழலிலும் சிரிப்பில் உதடு துடித்தது ராதாவிற்கு. தன் சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கியவள் “எங்கண்ணன்னு தெரியாமன்னா…? அப்ப யாரானாலும் கேட்டுருப்பீங்களா?” என கோபமாக கேட்க ‘ஐயோ’ என்றானது கோகுலிற்கு.

“எங்கண்ணன்னு தெரியாதுன்னு சொன்னீங்க.. அப்ப வேற யாருன்னு நெனச்சு கேட்டீங்க” என்றாள் கறாராக..

“அது… சுரேந்தர்ன்னு..”

“புரியல…”

“அப்பா பிரண்ட் சன் சுரேந்தர்ன்னு…” என மீண்டும் இழுக்க… “அவர்கிட்டயா…?” என்றாள் கொலைவெறியுடன்.

“தெரியாம செஞ்சுட்டேன். தயவுசெய்து மன்னிச்சுடு தாயே..” என பகிரங்கமாக கோகுல் மன்னிப்பு கேட்கவும் “சரி… நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்” எனவும் “மறுபடியயுமா?” என அஞ்சுவது போல கூறினான் கோகுல்.

“ம்ப்ச்…” என அவள் மீண்டும் முறைக்கவும் “இல்ல… மணி பத்தாச்சு..” என இழுத்தான்.

“ப்ச்… உங்கக்கா ஏன் செகண்ட் மேரேஜ் பண்ண மாட்டேன்னு சொன்னாங்க”

“ம்… நான் உனக்கு பண்ணின பாவம்தான் அவங்க லைப அழிச்சுடுச்சுன்னு என்கிட்ட சண்ட போட்டாங்க.. அதுக்கப்பறமா எவ்வளவோ கன்வென்ஸ் பண்ணியும் அவங்க என்கூட பேசவே இல்ல.. அம்மா அவங்கள கல்யாணம் பண்ணிக்க கேட்டப்ப உங்க பையன் பண்ண பாவத்துக்கெல்லாம் நான் மறுபடி மறுபடி தண்டனை அனுபவிக்கனுமான்னு கேட்டாங்க அண்ட் அதுக்கப்பறமா அந்த பேச்ச எடுத்தாலே எழுந்து போயிடுவாங்க.. எனக்கு இவ்ளோதான் தெரியும்” என்றவன் அமைதியாக படுத்துக்கொள்ள யோசனையுடன் அமர்ந்திருந்தாள் ராதா.

சிறிது நேர யோசனைக்கு பிறகு ஒரு திட்டத்துடன் சென்று படுத்தவள் மறுநாள் விடியலில் கோகுலை வந்து எழுப்பினாள்.

“காபி..” என கைகளில் காபி கப்புடன் நின்றவளை பார்த்தவனுக்கு மூச்சடைத்தது. அடர் நீல நிறத்தில் உடல் முழுதும் ஆங்காங்கே தங்க நிறத்தில் ஜரிகையால் நெய்யப்பட்ட பட்டுடுத்தி தலை நிறைய மல்லிகை சரம் வைத்து நெற்றி வகிட்டில் குங்குமமும் நெற்றியில் வட்டவடிவ சிவப்பு பொட்டும் மேலே சிறு விபூதி கீற்றும் வைத்து உதட்டில் புன்னகையுடன் நின்றவளை பார்த்து மூச்சுவிடவும் மறந்து நின்றான்.

Advertisement