Advertisement

காதல் 14

சிலரை மறந்து விடுங்கள்…
சிலரை மன்னித்து விடுங்கள்…
சிலரை ஒதுக்கி விடுங்கள்…
சிலரை வெறுத்து விடுங்கள்…
யாரையும் தூக்கி சுமக்காதீர்கள்
வாழ்க்கை சுமையாகிவிடும்!!!

பத்து நாட்களுக்கு பிறகு…

கண்ணனின் வீட்டிற்கு வந்த மறுநாளே சுகந்தி தன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

லலிதா எதிலுமே கலந்து கொள்ளாமல் தன் அறையிலேயே இருந்தாள். வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் வீட்டிலிருந்த அனைவரும் லலிதாவை நினைத்து கவலைப்படுவதை ராதா அறிந்திருந்தாள். எப்படியாவது லலிதாவை சரிசெய்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தவளுக்கு அதை எப்படி செய்வது என்பதுதான் புரியவில்லை.

வழக்கம் போல தோட்டத்தில் நடந்து கொண்டே யோசித்தவளை ஈர்த்தது முல்லை பூவின் மணம். பூவை பறித்தவள் நேராக லலிதாவின் அறைக்கு சென்றாள். அறைக் கதவை தட்டியவள் “உள்ளே வரலாமா?” என கேட்க

“வாங்க அண்ணி” என அழைத்தாள் லலிதா.

“அண்ணியெல்லாம் வேணாம் ராதான்னு சொன்னாலே போதும்” என சினேகப் புன்னகையுடன் ராதா சொல்ல “சரி ராதா” என்றாள் லலிதா.

“பூ கட்டலாம்ன்னு வந்தேன் பூ நெறய இருக்கு. நீங்களும் சேந்து கட்டுனா சீக்கிரமா முடிஞ்சுரும். அதான் நீங்க கட்டித்தர முடியுமான்னு கேக்கலாம்ன்னு வந்தேன்”

“அட இதெல்லாம் கேக்கனுமா? உள்ளே வா கட்டலாம்” எனவும் “இங்கயா? தோட்டம் அழகா இருந்துச்சு வாங்க அங்க போய் கட்டலாம்” என உற்சாகமாக அழைத்தாள் ராதா.

லலிதா யோசிக்கவும் “உங்களுக்கு விருப்பமில்லைன்னா பரவாயில்ல நாம இங்கயே இருக்கலாம்” என ராதா கூறி அமர செல்ல “இல்லல்ல.. தோட்டத்துக்கே போகலாம்” என்றாள். இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே பூ கட்டத் தொடங்கினர்.

“கமல் அதிகமா சேட்ட பண்ணுவானா ராதா?”

“ம்ஹ_ம்… கமல் ரொம்ப அடமண்ட். அதே போல ஒரு தூசுகூட அவன் மேல இருக்கக்கூடாது. ‘அம்மா அக்கு… கவு’ன்னு ஒரேதா சத்தம் போடுவான் கழுவுற வரைக்கும் அழுதுட்டே இருப்பான்” என்றவள் “மகிதான் சேட்ட அதிகமா பண்ணுவான்” என்றவள் கண்கள் கலங்க சமாளித்தபடி

“அவன் மூணு மாசம் பிள்ளையா இருக்கும்போது நான் எங்கம்மா மடியில படுத்துருந்தேன். அப்ப மகிய கொண்டுவந்து இன்னொரு கால்ல போட்டாங்க சவிதாக்கா. இவன் நகந்து நகந்து வந்து என்ன மிதிச்சு கீழ தள்ளிவிட்டுட்டான்”

“அதிலிருந்து நான் எப்போ எங்கம்மா மடியில படுத்தாலும் உடனே ஓடிவந்து ‘போ போன்னு’ கீழ தள்ளிவிட்றுவான்.

அப்பறம் அவனுக்கு ஒன்றை வயசு இருக்கும் போது மாடு கத்துறத பாத்துட்டு ‘அம்மம்மா… மாடு ம்மா…’ ன்னு அம்மாவ கூப்பிட்டு சொன்னான்.

அம்மா “மாடு அப்புடி கத்துச்சாடி தங்கம்”ன்னு கேட்டாங்க

‘ம்… மாடு அம்மா ம்… ஆத்தா’ என்றதும்

‘மாடு ஆத்தான்னாடி கூப்பிட்டுச்சு’

‘ம்… அம்மம்மா..”

‘வேற…’

‘ராதம்மா’ மாடு இப்புடியெல்லாம் கத்துச்சுன்னு சொல்லி சிரிப்பான்”

ராதா தன் அக்கா மகன் மகியைப் பற்றி சொல்லவும் சிரித்தவர் பின்பு “அவன நீ ரொம்ப மிஸ் பண்றியா ராதா?” எனக் கேட்டார் .

“ம்… ரொம்ப..” என்றாள் ராதா வருத்தம் தோய்ந்த குரலில் “அவன் முதல்ல அம்மான்னு கூப்பிட்டது என்னைதான்” எனும்போது அவள் குரல் உள்ளடங்கி போயிருந்தது.

“அவன நீ இங்க வர சொல்லி பாரு ராதா” என லலிதா கூற

“சவிதா மாமியார் ரொம்ப குடும்ப கௌரவம் கட்டுப்பாடுன்னு சொல்லுவாங்க.. நான் லவ் பண்ற பையன்கூட ஓடி போய்ட்டேன்னு நெனச்சுட்டு இருக்காங்க. அதனால அவங்க அனுப்பமாட்டாங்க” என வருத்தத்துடன் கூற

“அவங்கள விட்டுட்டு உங்கக்கா அவங்க பையனமட்டும் கூட்டிட்டு வரலாமே?”

“சவிதாவுக்கு மகி பிறக்கும்போது கருப்பையில் பிரச்சனை ஆயிடுச்சு. இனிமே வேற குழந்தைக்கு வாய்ப்பே இல்லைனு சொல்லிட்டாங்க. அதனால மகி எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த பிரச்சனையில சவிதா மாமியார் அவங்க இல்லாம இனிமே குழந்தையை வெளியில தூக்கிட்டு போக கூடாது என்று சொல்லிட்டாங்க”

“ஓ… அப்ப அவங்ககிட்ட உண்மைய சொல்லிற வேண்டியதுதான”

அவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் “சுரேஷ் மாமாவோட தம்பிக்கு என்னை கல்யாணம் பண்ணிவைக்கிறதா பேசியிருந்தாங்க. நான் வீட்டைவிட்டு போனதால அந்த கல்யாணம் நின்னுடுச்சு. அவங்க குடும்ப கௌரவத்தையும் சேர்த்து வாங்கிட்டேன்னு செம்ம கோபத்துல இருக்காங்க கிடைச்சா அவ்வளவுதான்” என லலிதாவும் சிரித்தாள். “அதுமட்டுமில்ல எங்கம்மா என்கிட்டயும் சவிதாகிட்டயும் சொல்லுவாங்க.. நாம போறவீட்ல என்ன வேணாலும் நடக்கட்டும்.. அத அம்மா அப்பான்னு கூட சொல்லக்கூடாதும்மா.. ஏன்னா..? ஒரு நேரம் இல்ல ஒரு நேரம் அவங்க அப்படிதான்னு செய்யாத விசயத்தகூட அவங்க மேல பழி சொல்லிருவாங்க.. அது மட்டுமில்ல மதிப்பு இருக்காதுன்னு” என்றவள் ஒரு பெருமூச்சுடன் “சரியோ…? தப்போ…? நடந்து முடிஞ்சுருச்சு.. அத சரிபண்ண முடியலைன்னாலும் அப்படியே விட்டுறனும்” என்றாள்.

“அப்படியே விட்டா எப்படி சரியாகும் ராதா” என லலிதா கேட்க…

“ஒரு விசயத்த மாத்தனும்ன்னு நெனச்சா அத எதனால மாத்துறமோ அந்த சம்பவம் நம்மவிட்டு போகாது.. அப்படியே விட்டுட்டோம்ன்னா.. காலம் அத மறக்க வைக்கும்” என சிறு புன்னகையுடன் கூறினாள் ராதா.

“ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்த நீ இன்னும் மறக்கலையே.. காலம் மறக்க வைக்கும்ன்னா ஏன் இத மட்டும் மறக்க வைக்கல?” என பேச்சு வாக்கில் கேட்டுவிட்ட லலிதா ராதையின் முகம் மாறவும் “சாரி… அது.. ஏதோ” என தடுமாறினாள்.

அவளை பார்த்து சிரித்தவள் “சரியாகிரும்” என்றாள். அவள் புரியாமல் பார்க்கவும் “நீங்க கேட்டது சரிதான். நான் ரெண்டு வருசமா மறக்காம இருந்ததுக்கு காரணம் கமலும் உங்க அப்பாவும்தான். நான் ஊரவிட்டு போன கொஞ்ச நாள் வேலை வீடுன்னு கொஞ்சம் பிசியாகிட்டேன். கரெக்ட்டா நாற்பது நாள் கழிச்சு உங்கப்பா என்ன பாக்க வந்தாங்க.. உங்க தம்பிய நியாபகப்படுத்த அது போதுமானதா இருந்துச்சு. அப்பறம் கமல் உருவானது தெரிஞ்சது.. என் குழந்த அப்பா இல்லாம வளரப் போகுதுன்ற கோபமே உங்க தம்பிய மறக்கவிடல. யாரை பார்த்தாலும் எங்க அம்மா.. அப்பா.. அண்ணன்.. மகி.. சவிதா.. இப்படி யாராவது நியாபகம் வருவாங்க. அவங்க என் கூட இல்லாததுக்கு உங்க தம்பி தான் காரணம்ன்னு கோபம் இருக்கும். ஆனால் இப்ப அந்த காரணம் இல்ல.. சோ… சரியாகிரும்” என சொல்லவும் “சரியானால் சந்தோஷம்” என்றாள் லலிதா.

அப்போது அலுவலகத்திலிருந்து கோகுல் வரவும் “நான் இந்த பூ கொண்டுபோய் சாமிக்கு போடுறேன். நீ கட்டுன பூவ தலையில வை” என கூறி தான் கட்டிய பூவுடன் எழுந்து சென்றாள் லலிதா.

தோட்டத்தில் அமர்ந்திருந்த ராதாவை பார்த்து அவளிடம் வந்தான் கோகுல். அவனை பார்த்து புன்னகைத்த ராதா “போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க.. காபி எடுத்துட்டு வர்றேன்” என்றாள்.

“ம்…” என்றவன் அவன் கையில் வைத்திருந்த பார்சலை அவளிடம் நீட்ட அதை வாங்கி பிரித்து பார்க்க அதில் இளம் ஊதா நிறத்தில் உடல் முழுதும் ஜரிகை வரும்படியான அழகிய பட்டுப்புடவையும் அதற்கு தகுந்தாற் போல டிசைனர் பிளவுசும் இருந்தது. அதை பார்த்தவள் எதிரில் நின்றவனை கேள்வியுடன் பார்க்க “நாளைக்கு உன்ன அம்மா கோவிலுக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க ஃபர்ஸ்ட் டைம் உன்னோட வெளியில போறதால…” என்றவன் “இந்த சேலைய கட்டிக்கிறியா?” என அவள் கண்களை பார்த்து கேட்டான். அவன் கண்களில் தெரிந்த ஆர்வமும் வேண்டுதலும் காதலும் ராதாவை அசைத்தாலும் “சேரி ரொம்ப அழகாயிருக்கு” என்றவள் அவனை பார்த்து “சாரி… இப்ப கட்டனும்ன்னு தோணல. கண்டிப்பா இன்னொரு நாள் கட்டிக்கிறேன்” என்றுவிட்டு சென்றாள்.

என்னதான் கோகுலுக்கும் ராதாவிற்கும் இடையில் உறவு பூசல்கள் இல்லாமல் சென்றாலும் அவர்களிடையே இருந்த எந்த பூசல்களும் சரிசெய்யப்படாமல் அப்படியேதான் இருந்தது. அவனிடம் இருந்து எந்தவொரு சலுகைகளையும் அவள் ஏற்றுக்கொண்டது இல்லை. அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கண்களிலிருந்து மறைந்ததும் “கடவுளே… இவள கரெக்ட் பண்றதுக்கு ஒரேஒரு ஐடியா குடேன். ப்ளீஸ்..” என கையெடுத்து கும்பிட்டபடி நிற்க கண்ணன் வந்து அவன் தோளில் அடித்தார்.

“ஆ…” என்றபடி திரும்பியவன் “வலிக்குதுப்பா” என்றான் தோள்களை தேய்த்தபடி

“என்னடா பண்ணிட்டு இருந்த?”

“ம்… ஒன்னுமில்ல” என்றான் மகன் தன் முகத்தை திருப்பிக்கொண்டு…

“டேய்… பாருடா.. இப்புடி ஒரு பொண்டாட்டி போனா பின்னாடியே நீயும் போயிருக்க வேணாம்” என கேட்டார் தந்தை.

அவரை பார்த்தவன் “உங்களையெல்லாம் பெத்தாங்களா இல்ல கடையில ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா?” என்றவன் வீட்டை நோக்கி நடந்தபடியே “மருமகளுக்கு ஏதாவது பிரச்சனைன்னா மட்டும் மனுசன் மொதல்ல வந்துருவாரு.. பெத்தபுள்ள செத்துக்கிட்டு இருக்கேன் கண்டும் காணாத மாதிரி இருக்காரு” என புலம்பியபடி செல்ல அதை கேட்டு சிரித்தபடியே அவனை தொடர்ந்து தானும் வீட்டினுள் நுழைந்தார் கண்ணன்.

“இப்ப உனக்கு என்னடா பிரச்சனை?” என கேட்டபடி கண்ணன் சோபாவில் அமர

“ம்.. கேட்டா மட்டும் பதில் சொல்லிடுவீங்களா?”

“கேட்டுத்தான் பாரேன்.”

“ராதாவ நீங்கதான் சுந்தரம் அங்கிள்கிட்ட வேலைக்கு சேர்த்துவிட்டு ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. ஆனா அதை ஏன் என்கிட்ட சொல்லல.. முன்னாடி சொல்லியிருந்தா நான் அதை பெருசா நினைச்சிருக்கமாட்டேன் ஓ.கே. ஆனா நான் அவ்ளோ ஃபீல் பண்ணியும் நீங்க என்கிட்ட சொல்லாம இரண்டு வருஷம் என்ன நரகத்துல வாழ வைச்சுருக்கீங்க” என குற்றம் சாட்ட

“தப்பு செய்த நீயே இரண்டு வருஷம் கஷ்டத்தை அனுபவிச்சதுக்கு இவ்வளவு வருத்தப்படுறியே.. எந்த தப்புமே செய்யாம அத்தனையும் இழந்து எதுவுமே இல்லாம ரோட்டுல நின்னு ஒரு பொண்ணு இத்தனை வருஷம்… கிட்டத்தட்ட மூ…ணு… நீண்ட நெடிய வருடங்கள் என்னென்ன வேதனைப்பட்டிருப்பாள்ன்னு யோசிச்சியா?” என்றவர் எழுந்து கொண்டு “போடா.. வந்துட்டான் வேலையில்லாம.. இவருக்கு பிரச்சனையாம். இவனாலதான் இங்க எல்லோருக்கும் பிரச்சனையே” என்றபடி சென்றுவிட அவனும் எழுந்து சென்றுவிட்டான்.

தன்னறைக்கு சென்ற கோகுலுக்கு காபி எடுத்துக்கொண்டு சென்ற ராதா காபியை டேபிளில் வைத்துவிட்டு தான்; கொண்டுவந்த பூவை எடுத்து தலையில் வைக்கப்போக “நான் வச்சுவிடவா?” என்றபடி குளியலறையில் இருந்து வெளிவந்தான் கோகுல்.

அவன் கூறியதை கேட்டு அவனை பார்த்து நக்கலாக சிரித்தாள் ராதா. அதை பார்த்தவன் “அட்லீஸ்ட் இதையாவது செய்யலாமேன்னு தான்” எனவும் மேலும் சிரிப்பு விரிய “இந்தாங்க” என அவன் கையில் கொடுத்தாள். அதை அவள் தலையில் வைத்துவிட்டவன் காபியை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு செல்ல ராதாவும் அவனுடன் சென்று அமர்ந்துகொண்டாள்.

‘ம்க்கும்… இவள விட்டு தூரமா இருக்கனும்ன்னு நெனச்சா வந்து பக்கத்துல உக்காந்துருக்கா பாரு’ என கோகுல் மனம் சொல்ல… இன்னொரு மனமோ ‘பக்கத்துல உக்காந்தா பரவாயில்லடா.. எதிர்ல உக்காந்துருக்கா’ என்றது.

“உங்ககூட கொஞ்சம் பேசனும்” என ராதா கூறினாள்.

‘கல்யாணமான இவ்ளோ நாள்ல பேச மட்டும்தான செய்யுறோம்’ என மனதில் நினைத்தவன் “சொல்லு” என்றான்.

“உங்க அக்கா…” என அவள் ஆரம்பிக்கவும் “எங்கக்கா ஏதாவது சொன்னாங்களா? ப்ளீஸ்… அவங்க ஏதாவது சொன்னா பெருசா எடுத்துக்காத. என்மேல உள்ள கோபத்துல ஏதாவது பேசிருப்பாங்க.. நீ ப்ளீஸ் பதிலுக்கு அவங்கள எதுவும் பேசிறாத” என அவசரமாக சொன்னான் கோகுல்.

அவனை வினோதமாக பார்த்தவள் அவன் கூறியதை கேட்டு “உங்க அக்காவுக்கு ஏன் செகண்ட் மேரேஜ் பண்ணி வைக்கலைன்னு கேக்க வந்தேன்” என அவள் சொல்ல “ஓ… அதுவா?” என்றவன் அப்போதுதான் ஒழுங்காக அமர்ந்தான்.

ஒரு பெருமூச்சுடன் “எவ்வளவோ பேசி பாத்தாச்சு.. ம்ஹீம்” என தலையை இருபுறமும் ஆட்டியபடி உதட்டை பிதுக்கி கூறினான். “ம்…?” என சந்தேகமாக கேட்டவள் சிறு புன்னகையுடன் “ம்…” என்றுவிட்டு எழுந்து சென்றாள்.

“உங்க அம்மாகிட்ட கேட்டேன்.. உங்களுக்கும் உங்க அக்காவுக்கும் பூரி மசலான்னா பிடிக்குமாமே.. இன்னைக்கு நான் செய்யறேன். சீக்கிரமா வந்து சாப்பிடுங்க” என்றபடியே சென்றவளை பார்த்து “கடவுளே… உங்கிட்ட என்ன கேட்டேன். எங்கம்மா மாதிரி ஒருத்திய என் லைப் பாட்னரா கேட்டேன். அது ஒரு குத்தமா…? ஏன் எங்கப்பா மாதிரி ஒருத்திய குடுத்த.. அவ என்ன யோசிக்குறா..? எப்ப என்ன செய்வான்னு ஒன்னுமே புரிய மாட்டுது” என புலம்பினான்.

தொடரும்…

Advertisement