Advertisement

காதல் 13

புத்தம்புது தாவரமாய் முளைக்கட்டும்
புது வாழ்வு…
பூக்களை போல பூக்கட்டும்
புதிதாய் பல உறவுகள்…
வாடாமல் வாசம் என்னும்
மகிழ்ச்சி மணம் பரவட்டும் எந்நாளும்
காய்ந்த சறுகென உதிரட்டும்
துன்பமும் துயரமும்… என் கண்ணா!!!

மூன்று நாட்களுக்கு பின்…

ஆபரேசன் தியேட்ருக்குள் கமலை அழைத்துச் செல்வதற்காக செவிலியர் வர குழந்தை ராதாவின் கரத்தை பற்றியவாறு அழத்தொடங்கினான். அவனை சமாதானப் படுத்தி அனுப்பியவள் ஆபரேசன் தியேட்டர் வாசலில் அமர்ந்தவள் யாரிடமும் எதுவும் பேசவில்லை. ராதா அமைதியாகவே இருக்க அவளிடம் சென்ற சிவகாமி “சாப்பிட்டு வாம்மா” என வேண்டாம் எனும்படியான தலையசைப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது.

“இங்க சாப்பாட கொண்டு வரவாம்மா?” அதற்கும் தலையசைப்பு மட்டுமே பதிலானது.

“ஜூஸ் வாங்கிட்டு வரவாம்மா?” என சுகந்தி தன் மகளின் தலையை பரிவுடன் வருடியபடி கேட்க அதற்கும் தலையசைப்பு மட்டுமே.

இப்படி யார் என்ன கேட்டாலும் பதில் பேசாமல் அறை வாயிலையே பார்த்தபடி இருந்தாள்.

ஏழு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை முடிந்து டாக்டர் வெளியில் வந்ததும் அனைவரும் எழுந்து அவரிடம் செல்ல… “எல்லாம் ஓ.கே. ஆபரேசன் சக்சஸாகிடுச்சு. இன்னும் ரெண்டு மணி நேரத்துல கண் முழிச்சுடுவான். அப்பறம் நார்மல் வார்டுக்கு மாத்திருவாங்க. அப்ப நீங்கல்லாம் பாக்கலாம்” என கூறி முடியும்முன் ராதா மயங்கி விழுந்துவிட்டாள்.

ராதா கீழே விழும்முன் தாங்கி பிடித்த கோகுல் அவளை பெஞ்சில் படுக்க வைக்க அனைவரும் அவளிடம் வந்தனர். கமலின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துவிட்டதாகவும் இரண்டு மணி நேரம் கழித்து அறைக்கு மாற்றிய பிறகு அனைவரும் சென்று பார்க்கலாம் எனவும் டாக்டர் சொல்ல அதற்குள் மயங்கிய ராதாவை தாங்கி பெஞ்சில் படுக்க வைத்தான் கோகுல். ராதாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர் “பயப்பட ஒன்னுமில்ல. காலையிலிருந்து சாப்பிடாததால பீ.பி லெவல் கம்மியாகிடுச்சு. ட்ரிப்ஸ் ஏத்துனா சரியாகிடும்” என்றுவிட்டு ராதாவிற்கு ட்ரிப்ஸ் போட்டுவிட்டு சென்றார்.

ராதா மயக்கத்தில் இருக்க “எல்லாரும் வெளியில வாங்க” என்று அழைத்துச் செல்ல அவர் பின்னே சென்ற கோகுலை மட்டும் “நீங்க இங்கயே இருங்க” என தடுத்து நிறுத்திய சுகந்தி “ஆறாத காயம் மனசுல இருந்தாலும் அத ஆறவைக்கிற சக்தி மனுசன்கிட்டதான் இருக்கு. என் பொண்ணு கோபப்பட்டாலும் மத்தவங்க மனம் வருந்துறத தாங்கமாட்டா.. நீங்க அவகிட்ட சரியா பேசாதது போல எனக்கு தோனுது” என்று கூறவும்

“அவ என்கூட பேச விரும்பல. எப்பவும் எரிஞ்சு விழறா” என்றான் கோகுல் ஆற்றாமையுடன்.

அவன் கூறியதை கேட்டு சிரித்தவர் “அவகூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. தானா எல்லாம் மாறும் கண்டிப்பா ராதா உங்கள ஏத்துக்க தான் முயற்சி பண்ணுவா. தைரியமா போங்க” என்றுவிட்டு வெளியேறி சென்றுவிட்டார்.

அரைமணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து சுற்றும் முற்றும் பார்த்தவள் அறையின் மூளையில் அமர்ந்திருந்த கோகுலை பார்க்க ராதாவின் அசைவை கண்ட கோகுல் எழுந்து அவளிடம் வந்தான்.

“கமல்…”

“இன்னும் மயக்கம் தெளியல. ஐ.சி.யுல தான் இருக்கான்” என கோகுல் கூறவும் “போவோம்” என வேகமாக எழுந்தவளை தோள்களை பற்றி தடுத்தவன் அவள் கையை சுட்டிக்காட்டி “இன்னும் ரெண்டரை மணிநேரம் ஆகும். அப்பறமா போகலாம்” என சொல்லவும்

“இல்ல…” என்றவளை உதட்டில் விரலை வைத்து “ஷ்….” என்றவன் “ரெஸ்ட் எடு ட்ரிப்ஸ் முடிஞ்சதும் போகலாம்” என்றுவிட்டு அவளருகில் அமர்ந்து மற்றொரு கரத்தை தன் கரத்தில் வைத்துக்கொண்டான்.

திருமணம் முடிந்தபின் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. இன்றுதான் பேசுகின்றனர். அதுவும் இருவரும் பார்த்துக்கொண்ட இத்தனை நாட்களில் இருவரும் இன்றுதான் முகம் சுணங்காமல் பேசிக் கொண்டனர். ஏனோ அந்த பலவீனமான சூழ்நிலையில் அனைத்தும் சூன்யமாக அவன் ஆறுதல் தேவைப்பட்டது போலும் ராதாவிற்கு.

இரண்டரை மணிநேரம் கழித்து செவிலியர் வந்து ட்ரிப்ஸை எடுத்ததும் இருவரும் சேர்ந்து கமலை பார்த்தனர். ஆனால் இவர்கள் சென்று பார்க்கும்போது கமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

“என்னாச்சும்மா…?” என ராதா பதற்றத்துடன் தன் மகனின் அருகில் சென்றபடி கேட்க…

“ஒன்னுமில்லம்மா.. அவன் வலி தாங்கமாட்டான்னு தூங்கறதுக்கு மருந்து குடுத்துருக்காங்க” என்று சுகந்தி கூறினார்.

அவர் கூறியதை கேட்டபின்தான் பதற்றம் குறைந்து அமைதியானாள் ராதா. ராதாவின் உடல் மெலிதாக நடுங்க ஆரம்பிக்க அவளருகில் சென்று பார்க்குமாறு கண்ஜாடை காட்டினார் சுகந்தி.

அவரின் செய்கையை பார்த்தவன் அவளருகில் சென்று “ராதா” என அழைத்து அவள் தலையில் கரம் பதிக்க அவள் உடல் மேலும் நடுங்கியது.

ராதாவின் நடுக்கத்தை பார்த்த கோகுல் பயந்து சுகந்தியை பார்க்க அவர் கையில் பழச்சாறுடன் வந்தார்.

“இத குடுங்க” என பழச்சாறை கோகுலின் கையில் கொடுத்து சென்றுவிட கோகுலுக்கு ராதா ஏதாவது கூறுவாளோ எனத் தோன்றினாலும் நடுங்கும் அவள் கரங்களில் கொடுக்க முடியாமல் அவனே ஊட்டிவிட்டான். கோகுல் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக ராதா எதுவுமே கூறாமல் அமைதியாக பழச்சாறை அருந்தினாள். அதன் பிறகு மெல்ல மெல்ல நடுக்கம் குறைந்து சீரானாள்.

அதன் பிறகு நான்கு நாட்கள் கமலை தூக்கத்திலேயே வைத்திருந்தவர்கள் ஐந்தாம் நாள்தான் கண்விழிக்க விட்டனர்.

கொஞ்சம் கொஞ்சமாக கமலின் உடல் தேற ஆரம்பிக்க கோகுல் ராதாவின் உறவும் பூசல்கள் ஏதுமின்றி ஓரிரு வார்த்தைகளுடன் கடந்து சென்றது.

பதினைந்து நாட்கள் கழித்து…

“ராதா.. நான் போய் ஹாஸ்பிடல் பில்ல செட்டில் பண்ணிட்டு வந்துடுறேன்” என கோகுல் கூற…

“ம்… சரி. போய்ட்டு வாங்க” என்றுவிட்டு அறையிலிருந்த பொருட்களை எல்லாம் பேக் செய்து கொண்டிருந்தாள்.

“நம்ம ஊருக்கு கூட்டிட்டு போயிடலாம்பா” என்றபடி வந்தார் சுகந்தி.

“சரிங்கத்த நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடலாம்” என்றுவிட்டு சென்றான்.

கடந்த இருபது நாட்களில் கோகுல் ராதாவின் உறவு மட்டுமல்ல கோகுல் சுகந்தியின் உறவும்கூட நல்லபடியாகவே வளர்ந்தது. ராதாவை கோகுலுடன் சேர்த்துவைக்க அனைவரும் அவர்களாலான உதவிகளை செய்தனர். ஆனால் சுகந்தி தான் அதிகமாக சந்தர்பத்தை உருவாக்கினார்.

அனைவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி நேராக கண்ணனின் இல்லத்திற்கு சென்றனர்.

கண்ணன் குடும்பமும் செல்வத்தின் குடும்பமும் கமலுடன் ஒரே வண்டியில் செல்ல ராதாவும் லலிதாவும் கோகுலுடன் ஒரு காரில் சென்றனர். லலிதா சிறிது நேரத்தில் உறக்கத்திற்கு சென்றுவிட கண்ணன் ரேடியோவில் பாடலை ஒலிக்கவிட்டுவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்…

உண்மை காதல் யார் என்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே

பாடலின் வரிகளை கேட்டவளின் கண்கள் கலங்க சட்டென்று பாடலை அணைத்தவள் வெளிப்புறமாக திரும்பி வேடிக்கை பார்த்தபடி வர அவளை புரியாமல் பார்த்தவன் எதையும்பேசி இருக்கும் நிலையை மாற்ற விரும்பாமல் திரும்பவும் சாலையில் கவனைத்தை வைத்தான் கோகுல்.

அங்கு சென்றபிறகு செல்வம் தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றுவிட சுகந்தி மட்டும் ராதாவுடன் இருப்பதாக கூறிவிட்டார். அன்று இரவு கமலுடன் சிவகாமியும் சுகந்தியும் தங்குவதாக கூறி ராதாவை கோகுலின் அறைக்கு போகச்சொன்னார்கள்.

“ராதா.. நானும் அண்ணியும் குட்டிகூட படுக்குறோம் நீ போய் மேல படு” என சுகந்தி சொல்ல

“சரிம்மா” என்றாள் ராதா. அவள் இப்படி சட்டென்று ஒப்புக்கொள்வாள் என எதிர்பாராத சுகந்தி ஏதோ சரியில்லை என்ற எண்ணத்தில் “அடுப்புல பால் இருக்கு அத போகும்போது எடுத்துட்டு போ” என…

“வேணாம்மா”

“உனக்கு வேணாம்மா மாப்ளைக்கு” என சுகந்தி கூறவும் தான் புரிந்தது தன்னை கோகுலின் அறையில் சென்று உறங்கச்சொல்வதை. வேகமாக யோசித்தவள் “இல்லம்மா நான் ஏன் அங்க..? நான்… இங்கயே படுக்குறேன்” என்றாள்.

“ஏன்?” என சுகந்தி கூர்மையுடன் கேட்க… ஒரு வார்த்தைதான் ஆனால் அதற்கு பதில்தான் கூற இயலாது.

“இல்லம்மா.. குட்டி பையன் என்ன விட்டுட்டு இருக்க மாட்டான்”

“அவன் மருந்து சாப்புட்டு தூங்குனா காலையிலதான் எழுவான்”

“இல்லம்மா”

“காரணம் தேவையில்ல… போ” என சுகந்தி கூறிவிட வேறு வழியில்லாமல் சென்றாள்.

சமயலறைக்கு சென்றவள் பாலை எடுத்து கலக்கியபடி யோசித்துக் கொண்டிருக்க அவளருகில் வந்து நின்ற சுகந்தி “என்னம்மா யோசிக்குற.. போய் தலையணைய எடுத்து கீழ போட்டு சினிமால வர்ற பொண்டாட்டிய மாதிரி பண்ணலாம்ன்னா” எனவும்

“இ… இல்ல.. அப்புடியெல்லாம் இல்லம்மா” என்றாள் ராதா தடுமாறியபடி..

“அந்த மாதிரி முட்டாள்தனம் செய்யாதம்மா… ஒரு விசயத்த மட்டும் நியாபம் வச்சுக்கோ” எனவும் அவள் நிமிர்ந்து தன் தாயை பார்க்க “இதுதான் உன் வாழ்க்கை. இத சந்தோசமா அமைச்சுக்கறதும் சங்கடமா மாத்திக்கறதும் உன் கையிலதான் இருக்கு. மனிதனா பிறந்த எல்லாருமே தப்பு பண்ணத்தாம்மா செய்வாங்க.. நீ செய்யலையா..?” என்றவர் அவள் திகைத்து நோக்கவும் “என்ன பிரச்சனைன்னாலும் நீ அத என்கிட்டதான் சொல்லியிருக்கனும். அத விட்டுட்டு என்னவோ நீ பெரிய தியாகம் பண்றதா நினைச்சுட்டு இப்படி ஒரு காரியத்த பண்ணது தப்புதான?” எனவும் கண்கள் கலங்க தலைகுனிந்தாள் ராதா. “நீ மட்டுமில்லம்மா.. நான் கூடதான் தப்பு பண்ணியிருக்கேன்.. நீ சொன்னத நம்பி நீ எங்க இருக்க? எப்படி இருக்கேன்னு கூட தெரிஞ்சுக்காம இருந்தது என்னோட தப்புதான்” என கூறியவர் அவள் முகத்தில் தெளிவில்லாதது கண்டு “உனக்கு நான் சொல்லித்தான் தெரியனும்ன்னு இல்ல புரிஞ்சு நடந்துக்க” என்று கூறி சென்றுவிட்டார்.

ராதாவிற்கு அனைவரும் சேர்ந்து அவளை கார்னர் செய்வதைபோல இருந்தது. அவசரமாக யோசிக்க அவகாசம் அளிக்காமல் அனைத்தும் விரைவாக நடக்க என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தால் என்ன நடந்தது என்பதில் தான் வந்து நின்றது.

யோசிக்கவே வேணாம் என முடிவெடுத்தவள் பாலை எடுத்துக்கொண்டு சென்றாள்.

கோகுல் தன்னறையில் இத்தனை நாட்கள் அலுவலகம் செல்லாததால் அலுவலக கோப்புகளில் மூழ்கியிருக்க உள்ளே சென்றவள் பாலை அவனிடம் கொடுக்க “இங்கே வை” என்றவன் மீண்டும் கோப்பில் பார்வை பதிக்க ராதா சென்று பால்கனியில் நின்றாள். பால்கனியில் வாகை மரத்தின் கிளைகள் மோதியபடி இருக்க வாகை மரத்து பூவின் மணம் மனம் மயக்க செய்தது.

பால்கனியில் நின்று அதன் வாசனையை நுகர்ந்தவள் அங்கேயே அமர்ந்துவிட்டாள். கோகுல் தன் வேலையை முடித்துவிட்டு ராதாவை தேட அவள் பால்கனியில் அமர்ந்திருப்பது கண்டு அங்கே சென்று “ராதா” என அழைக்க திரும்பி பார்த்தவளிடம் “தூங்கலையா?” எனக் கேட்டான்.

“தூக்கம் வரல..” என்றவள் “உங்களுக்கு தூக்கம் வருதா?” என கேட்க மறுப்பாக தலையசைத்தான் கோகுல்.

“அப்போ பேசலாமா?” எனவும் “சரி” என்றவன் அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“என்ன பேச..?” என கோகுல் கேட்க

“அது… உங்கள பத்தி.. உங்க அம்மா அப்பா பத்தி.. உங்க அக்கா லலிதாவ பத்தி” என்றாள். இரவு நெடுநேரம் பேசினார்கள். அதன் பிறகும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினார்கள். இருவரது பேச்சிலும் பெரும்பாலும் இடம் வகித்தது லலிதாதான். இருவருக்கும் இடையில் உறவு வளர ஆரம்பித்தது.

தொடரும்…

Advertisement