Advertisement

காதல் 11

எது நடந்தாலும் அதை அந்த
இடத்தில் அப்படியே விட்டுவிட்டு
செல்லுங்கள்… தூக்கி சுமந்து
செல்லாதீர்கள்…
இல்லையெனில் நத்தை போல
இருக்கும் இடத்தில் இருந்து
நடந்து அல்ல… நகர்ந்து தான்
செல்வீர்கள்!!!

மறுநாள் காலை எட்டு மணிக்கு நெருக்கமான வேளையில் வந்த கண்ணன் “உன்ன இவங்க பாக்கனும்ன்னு சொன்னாங்கம்மா” எனவும் வாயிலை பார்த்தவள் திகைத்து எழுந்துவிட்டாள்.

பிறகு தன்னை சுதாரித்தவள் “இது… உங்க வேலதான..?” என்றாள் கோபத்துடன்.

“நான் நெனச்சத செய்ய எந்த எல்லைக்கும் போவேன்” என்றார் கண்ணன் அமைதியாக. அவர் கூறியதை கேட்டு மேலும் அவரை முறைத்தவள் கன்னத்தில் இடியென இறங்கியது ஒருகரம்.

தன் கன்னத்தில் விழுந்த அடியை பொருட்படுத்தாமல் தலைகுனிந்து அமைதியாக நின்றிருந்தவளை சரமாரியாக அடிக்கத் தொடங்கினார் அவர். அடி வாங்கியவள் அமைதியாக இருக்க அவளுக்கு விழுந்த அரையில் தன் கன்னத்தில் கைவைத்து கொட்ட கொட்ட விழித்தபடி அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்திருந்தான் கோகுல்.

அவனை பார்த்த கண்ணனோ “நான் எதிர்பார்த்த அளவுக்கு எபெக்ட் கொஞ்சம் கம்மியாதான் இருக்குல்ல” என அவரை திரும்பி பார்த்தவன் “இப்போ இந்த வேலையை எதுக்குப்பா பாத்தீங்க?” என்றான் அதிர்ச்சி குறையாமல்.

“ராதாவுக்கு அவங்க பணம் கொடுத்துடக் கூடாதில்ல.. அதுக்காகத்தான்” என அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தார் கண்ணன்.

அவரை பார்த்து “நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா?” எனக் கேட்டான் கோகுல்.

“தெரியலையேப்பா..” என நாயகன் ஸ்டைலில் கொஞ்சம் ஓவராக்ட் பண்ணிய கண்ணன் “கொஞ்சம் பொறு மகனே.. வைகை பொங்கி இந்தப் பக்கம் திரும்பி வரும். அப்பத் தெரியும் இங்க யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு..” என வாயை மூடி அமைதியாகினான் மகன்.

“ஏன்டி.. இப்படி பண்ணின?” என சுகந்தி ஆதங்கமாக தொண்டையடைக்க கேட்கவும்

“ஐம் சாரிமா” என்றவள் அப்படியே மடிந்து அமர்ந்துவிட… அவளுடன் சேர்ந்து தானும் அழுதார் சுகந்தி.

கோகுல் கண்ணனை அழைத்து பேசியதும் அருக்கு புரிந்துவிட்டது. ராதா தன் வீட்டினரை தான் தொடர்பு கொண்டிருக்கிறாள் என…

கோகுலிடம் ஊருக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்பியவர் நேராக சென்றது அவளது பெற்றோரை சந்திக்கதான்.

செல்வம் தன் சொத்துக்களை தன் மகனது பெயருக்கு மாற்ற எண்ணினார். ஆனால் அந்த சொத்தில் முக்கால்வாசி பரம்பரை சொத்து. அதை மாற்ற ராதாவும் கையெழுத்து போட்டாக வேண்டும். எனவே தான் ராதா அவளது வீட்டை அழைத்து டிமாண்ட் போல தன் தேவையை நிறைவேற்ற எண்ணினாள். ஆனால் அதை கெடுக்க கண்ணன் எண்ணினார்.

ராதாவின் வீட்டிற்கு சென்ற கண்ணன் அழைப்பு மணியை அழுத்தி அது திறந்ததும் “ராதா வீடு” என்று கேள்வியாக நிறுத்த

“அவ செத்துட்டா.. உயிரோட இல்லாதவள பத்தி பேச எதுவுமில்ல. நீங்க கிளம்புங்க” என்றார் ராதாவின் தாய் சுகந்தி.

அவரை பார்த்து புன்னகைத்த கண்ணன் “ராதா என்கூடதான் இருக்கா..” என்றவர் அவர் அதிர்ச்சியாக பார்க்கவும் “உங்ககிட்ட ராதாவ பத்தி கொஞ்சம் பேசனும். உள்ள போய் பேசலாமா?” எனவும் சுகந்தி வழிவிட உள்ளே சென்றவர் செல்வம் ஹாலில் அமர்ந்திருக்க அவர் எதிரில் சென்று அமர்ந்தார்.

கண்ணனை பார்த்த செல்வம் “நீங்க யாருன்னு மட்டுப்படலைங்களே” என கேட்க

“நான் ராதாவோட மாமனார்” என கண்ணன் கூறவும் அனைவரிடமும் ஒரு விறைப்புத் தன்மை வர… அதை அளவெடுத்தவர் “ராதாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல” எனவும் அனைவரிடமும் விரைப்புத் தன்மை மறைந்து குழப்பம் சூழ்ந்தது.

“என்ன சொல்றீங்கன்னு புரியல… கொஞ்சம் வெளங்குற மாதிரி சொல்றீங்களா?” என கேட்டார் செல்வம்.

அனைவரிடமும் நடந்தது அனைத்தையும் கூறியவர் “இப்போ என் பையன் திருந்திட்டான். அவன் செஞ்சது சரின்னு நான் சொல்லமாட்டேன். ஆனா அவன் செஞ்ச தப்புக்கு உங்க பொண்ணு தண்டனை அனுபவிக்குறது நியாயமில்ல. அதனாலதான் அவள என் பையன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன்” என அனைவரும் கொதித்தனர்.

“என் தங்கச்சிக்கு இப்புடி ஒரு துரோகம் பண்ணவன போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தள்ளனும்” என சுரேந்தர் ஆத்திரப்பட

“ஒரு பொண்ண ட்ராப் பண்ண உங்க பையனையே அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கனுமா? எந்த ஊரு நியாயம் சார் இது?” என்றார் சவிதாவின் கணவன் சுரேஷ்.

அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர் ராதாவின் பெற்றோர் எதுவும் கூறப்போவதில்லை என்பதை உணர்ந்து “கோகுல போலீஸ்ல புடிச்சுக் குடுக்க உங்க வீட்டு பொண்ணு ஒத்துக்கல. அவ மட்டும் சரின்னு சொல்லியிருந்தா அன்னைக்கே நானே போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணியிருப்பேன்” என்றவர் சுரேஷிடம் திரும்பி “ராதா கோகுலத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு நான் சொல்லல தம்பி. இந்த ரெண்டு வருசத்துல நான் எத்தனையோ தடவ வேற கல்யாணத்த பத்தி பேசுனேன். ஏன் ஒரு மாப்பிள்ளை பாத்து எல்லாத்தையும் பேசி முடிச்சி அவரே வந்து என்ன கல்யாணம் பண்ணிக்குறீங்களான்னு கேட்டும் முடியாதுன்னுட்டா. என் பையன தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு தெரிஞ்சுதான் நான் இந்த ஏற்பாடு பண்ணினேன்” எனவும் அனைவரும் அமைதியாக இருக்க அதை ஆமோதித்தவர் சுகந்திதான்.

“அவர் சொல்றது சரிதான்” என கண்ணனின் கூற்றை ஆமோதித்தவர் “ஆனா என் பொண்ணுகிட்ட நான் பேசினதுக்கு அப்பறமாதான் இந்த கல்யாணத்த பத்தி எதுவும் பேசமுடியும்” என சுகந்தி உறுதியாக கூற அவர் கூற்றை கேட்டு சிரித்தவர் “உங்க பொண்ணு உங்கள போலதான். அதே ஆளுமை” என்றவர் “இப்போவே கிளம்புங்க. நாம அங்க தங்க எல்லா ஏற்பாடும் பண்ணி வச்சுட்டுதான் வந்தேன்” என்றவர் அத்தோடு விடாமல் கட்டாயபப்படுத்தி அனைவரையும் இரவோடு இரவாக அழைத்தும் வந்துவிட்டார்.

சுகந்தி தன்னை கட்டுப்படுத்தியபடி “ஏன்டி என்கிட்ட அப்புடி சொன்ன?” என கோபமாக கேட்க…

“என்ன சொன்னேன்?” என புரியாமல் கேட்டாள் ராதா.

“ஆங்.. நீ காதலிச்ச பையன்கூட ஓடிப் போய்ட்டேன்னு” என ஆத்திரம் பொங்க கத்தினார்.

சுகந்தி சத்தமிட்டதில் மாத்திரைகளின் விளைவால் உறங்கிக் கொண்டிருந்த கமல் எழுந்துவிட தன்னை சுற்றிலும் இருந்த புதியவர்களை கண்டு அழ ஆரம்பித்தான்.

கமல் அழவும் அவனிடம் சென்ற ராதா புன்னகையுடன் “அம்மா இருக்கேன்டி செல்லம்” எனவும் அழுகை குறைந்து அனைரையும் மிரட்சியுடன் பார்த்தான் குழந்தை.

கமல் மிரள்வதை பார்த்த கண்ணன் “எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியில இருப்போம். ராதா நீயும் வாம்மா கோகுல் கமல்கூட இருக்கட்டும்” எனவும் அனைவரும் வெளியேற… சுகந்தி கோகுலை பார்த்த பார்வையில் ஒரு நிமிடம் மிரண்டுதான் போனான். அவனறியாமல் அவன் கரம் கன்னத்தை தாங்கியது. எங்கே ராதாவை அடித்தது போல தன்னையும் அடித்துவிடுவாரோ என நினைத்தான்.

வெளியில் சென்றதும் சுகந்தி மீண்டும் “ஏன் அப்புடி சொன்ன?” எனவும் ராதா கண்ணனை பார்த்தாள்.

அவள் பார்வையை கண்ட சுகந்தி மேலும் கோபத்துடன் “அங்க என்ன பார்வ..? கேள்வி கேட்டா…?” என்றார்.

ராதா வேகமாக “பதில் சொல்லனும்.. அது… அது…” என்றவள் மீண்டும் கண்ணனை பார்க்க “நான் இங்க இருக்கேன்” என்றார் சுகந்தி. வேகமாக தன் பார்வையை மாற்றியவள் “அது… நான்..” என தடுமாறவும் “எல்லாத்தையும் சொல்லிட்டேம்மா” என்றார் கண்ணன்.

“நீங்க என்ன காணோம்ன்னு ரொம்ப தீவிரமா தேடுனீங்க.. சவிதா வீட்ல தெரிஞ்சா அவங்க தப்பா பேசுவாங்க. அண்ணனுக்கும் மாமா பொண்ணு குடுக்கமாட்டேன்னு சொல்லிருவாங்க.. அதான்” என விளக்கம் கூறியவள் கன்னத்தில் மறுபடியும் அறைந்தார் சுகந்தி.

“என்னடி பேசுற… சவிதா வீட்ல தப்பா பேசுவாங்கன்னா.. மருமக இல்லைன்னு வெரட்டியா விட்ருவாங்க. அண்ணனுக்கு பொண்ணாம்… அவ இல்லன்னா இன்னொருத்தி.. அதுக்காக நீ எப்புடி வீட்டவிட்டு வரலாம்?” என கோபமாக கேட்க…

என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் திணறியவள் பின் ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி “எனக்கு அப்போ என்ன பண்றதுன்னு தெரியலம்மா.. ஏதோ பண்ணிட்டேன் அத தயவு செய்து விட்டுடுங்க. இப்ப என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க?” என்றாள் ராதா.

ராதா அவ்வாறு சொல்லவும் சுகந்தி கண்ணனை பார்க்க கண்ணன் செல்வத்திடம் “வாங்களேன் கொஞ்சம் காலார நடந்துட்டு வரலாம்” என கூறி அழைத்துச் சென்றார்.

கண்ணன் கண்ணைவிட்டு மறைந்ததும் அவரின் குடும்பத்தை பற்றியும் அவரைப்பற்றியும் கேட்டவர் தன்மகள் நிறைவான பதிலையே கூறவும் “கொஞ்சம் பொறு… நான் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி பேசிட்டு பதில் சொல்றேன்” என்றவர் தனித்து சென்றுவிட ராதா கண்ணனை தேடி சென்றாள்.

“உங்க வீட்ல எல்லாமுடிவும் உங்க வீட்டம்மாதான் எடுப்பாங்களா?” என கண்ணன் கேலியாக கேட்க

“அவ எடுக்குற முடிவு சரியா இருக்கும். அதனால அவகிட்ட குடும்ப பொறுப்ப முழுசா ஒப்படச்சுட்டேன்” என்றார்.

“ராதாவும் அவங்க அம்மா மாதிரிதான். அவ எடுக்குற முடிவும்கூட சரியாதான் இருக்கும்” என்றவர் ராதா வருவதை பார்த்து “உங்க கிட்ட பேசதான் வர்றா.. நான் கிளம்புறேன்” என்றுவிட்டு கிளம்பினார்.

கண்ணன் திரும்பி நிற்க அவர் அருகில் சென்று அவரைப் போலவே நின்றாள் ராதா.

“என்னம்மா மருமகளே.. இப்போவாவது மாமான்னு கூப்புடுறது” என நக்கலாக கேட்க

“இன்னும் கல்யாணம் ஆகலையே.. ஆனா பாப்போம்”

“இன்னுமாம்மா கல்யாணத்த நிப்பாட்டலாம்ன்னு நெனைக்கிற…”

“இன்னும் முடிவு பண்ணாமலே நடக்கும்ன்னு நீங்க எப்புடி நம்புறீங்க?” என்றவள் “எனக்கு பிடிக்காதத நடத்தனும்ன்னு ஏன் இவ்ளோ பிடிவாதமா இருக்கீங்க?” என்றாள் கண்ணனை நேராக பார்த்தபடி

ராதாவை பார்த்து புன்னகைத்தவர் “எனக்கு பின்னாடி நீ, கோகுல் லலிதா நீங்க மூணு பேரும் தாம்மா. ஒரு கட்டத்துல உங்க மூணு பேரோட வாழ்க்கையுமே முடிஞ்சு போச்சு. அப்பதான் கமல் உன் வாழ்க்கையில வந்தான். சரி உங்க வாழ்க்கை சரியாகிடும்ன்னு பாத்தேன். ஆனா நீ உன் பிடிவாதத்தால அத கெடுத்துட்ட. இந்த வாய்ப்ப நான் நழுவவிட மாட்டேன். நீதான் என் வீட்டு மருமக. இந்த முடிவு இன்னைக்கு நேத்து இல்ல. ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே எடுத்தது. இதே மாதிரி ஒரு ஹாஸ்பிடல்ல நான் உனக்கு வாக்கு குடுத்தேன். அதை நிறைவேற்ற நீ விடல. இன்னைக்கு நீ உனக்கு பிடிக்கலைன்னு சொல்லலாம்மா.. ஆனா இந்த சமுதாயத்துல அப்பா இல்லாம வளருற பிள்ளைக்கு பேரென்னன்னு உனக்கு நல்லாவே தெரியும். என் பேரனுக்கு அந்த பேர நான் குடுக்க விரும்பல” என்றார்.

“ஆனா இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கல”

“நடக்கும். உனக்கு மருந்து சாப்பிட பிடிக்கலைன்னு நோயோட இருக்கவிட முடியாது” எனக் கூறியவர் “யோசிச்சு பாரும்மா.. உன் விருப்பு வெறுப்ப தாண்டி எது சரின்னு யோசி” என்றுவிட்டு சென்றார்.

தொடரும்…

Advertisement