Advertisement

காதல் 10

காண்பவர் அனைவரையும்
ரசிக்க வைப்பது ஒன்று
உண்டெனில் அது
மழலையின் சிரிப்பு மட்டுமே…

“நீ கோகுல கல்யாணம் பண்ணிக்க அவன் கமலுக்கு செலவு பண்ணிப்பான்” என கண்ணன் சாதாரணமாக கூற…

அவரை அதிர்ச்சியுடன் பார்த்தான் கோகுல். ராதாவோ கண்ணனை கோபத்துடன் ஏறிட்டு “இதுதான் உங்க ப்ளானா?” என கேட்டாள்.

“ஐயோ.. என்னம்மா என்ன பாத்து இப்புடி சொல்லிட்ட? நான் எதுவும் ப்ளான் பண்ணலமா. என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க கமல நான் பாத்துக்குறேன்னு இவன் தாம்மா சொன்னான்” என கோகுலை கைகாட்ட “அப்பா…” என்றான் அவன் அதிர்ச்சியுடன்.

அவனை கொலைவெறியுடன் பார்த்தவள் “இவரு..” என ஆரம்பிக்க “என்னடா அப்பா.. நீ சொன்னத நான் இந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டேன்னு அதிர்ச்சியா இருக்கா?” என்றார் கண்ணன்.

“ஆனா இதவிட்டா நமக்கு வேற வழியும் இல்லம்மா.. என்கிட்ட அவ்ளோ பணமில்ல இருந்த பணத்த எல்லாம் இவன்கிட்ட குடுத்துட்டேன். இவன் பணம் குடுக்கனும்ன்னா நீ இவன கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்றான்” என கோகுல் மேல் கோபம் போல கூறியவர் ராதா யோசனையில் இருக்கவும்

“என்ன இருந்தாலும் நமக்கு கமல்தான் முக்கியம். அவனால நடக்க முடியலைன்னா நாராயணா… என்னால அத தாங்கிக்கவே முடியாதும்மா” என பிரம்மாஸ்திரத்தை அவள் மீது ஏவிவிட்டு அவளிடம் பதற்றம் உண்டானதை உறுதிசெய்தவர் “யோசிச்சு சொல்லும்மா. நான் நாளைக்கு வர்றேன்” என்றுவிட்டு கிளம்பினார்.

கண்ணன் சென்றதும் அவர் பின்னால் சென்ற கோகுலை நிறுத்தியவர் “நீ இங்கயே இரு. அவ என்ன சொன்னாலும் அவளவிட்டு நகராத” எனவும்

“நீங்க என்ன செய்யனும்ன்னு ஆசப்படுறீங்கப்பா?” என்றான் புரியாமல்.

அவனை பார்த்து சிரித்தவர் “ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என்னைக்கு இருந்தாலும் நீதான் என் மருமகள்ன்னு அவளுக்கு நான் வாக்கு குடுத்தேன். அத இவ்ளோ நாளா செயல்படுத்த எவ்வளவோ முயற்சி பண்ணுனேன் ஆனா பலன்தான் கிடைக்கல. இன்னைக்கு இந்த சான்ஸவிட்டா வேற சான்ஸே கிடைக்காதுன்னு தோணுது. அதனால இத யூஸ்பண்ணி ராதாவ நம்ம வீட்டுக்கு கொண்டுட்டு போகப் போறேன்” என்றவர்

“நியாபகம் இருக்கட்டும். நான் நெனச்சத உன்னால நடத்த முடியல… குடுத்த வார்த்தைய காப்பாத்தாம வாழறதவிட..” என்றவர் தான் கூறவந்த வார்த்தையை கூறாமலே சென்றுவிட ஏற்கனவே நடப்பதனைத்திலும் புரியாமல் குழப்பத்துடன் இருந்தவன் மேலும் குழம்பினான். மகனை காப்பாற்றவே அவன் இன்னும் போராட வேண்டியிருக்க ஒரு மகனாகவும் நீ போராட வேண்டும் என கூறிச் சென்றார் கண்ணன்.

குழம்பிய மனதுடனே ராதாவிடம் சென்றவனை பார்வையாலேயே எரித்தாள் அவள். அவள் பார்வையை கண்டவன் அமைதியாக சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டான்.

செவிலியர் வந்து கமலை அறைக்கு மாற்றிவிட்டதாகவும் சென்று பார்க்கலாம் எனவும் கூறிச்செல்ல இருவரும் சென்று பார்த்தனர்.

அறுந்த கொடியாக வாடிப்போய் படுக்கையில் கிடந்தவனை பார்க்க பார்க்க மனம் வேதனையில் துடித்தது ராதாவிற்கு.

ராதாவை பார்த்தவன் “அம்மா” என அழைத்து கைகளை நீட்ட வேகமாக சென்று அந்த கைகளை பற்றிக்கொண்டாள் ராதா.

“அம்மா.. நானு எந்தீக்க நோ நோமா” என தான் எழ முடியவில்லை என்பதை தன் தாயிற்கு உரைக்க மனம் வெதும்பி போனாள் ராதா.

கண்களில் கண்ணீர் நிறைய தான் அழுதால் குழந்தை பயந்துவிடக் கூடும் என்பதற்காக கட்டுப்படுத்தியவள் “சீக்கிரமா சரியாகிடும்” என்றாள் அவனை தேற்றும் விதமாக

“அம்மா… நானு.. பிடி” என கமல் அழ ஆரம்பிக்க “கமல் செல்லம்.. நீங்க குட் பாய் தான குட்பாய் அழமாட்டாங்க. தெரியுமா?” என குழந்தையை சமாதானம் செய்ய வந்தான் கோகுல்.

“நோ நோ… நானு பேட்” என குழந்தை மேலும் அழ…

“நான் இங்க இருக்கேன்” என்றாள் ராதா. அவள் அவ்வாறு கூறவும் குழந்தை அவளை பார்க்க “என் பையன் ரொம்ப தைரியமானவன். அவன் இந்த உலகத்துல பாக்க வேண்டியது நெறய இருக்கு.. இது சரியாகிடும். அம்மா சொல்றேன் இல்லையா? இப்போ நீங்க சமத்து பிள்ளையா தூங்குங்க.. எல்லாம் சரியாகிரும். சரியா?” என அழுத்தமாக கூற அவள் குழந்தையும் அமைதியாக.. செவிலியர் வந்து தூக்கத்திற்கு மருந்து கொடுத்து உறங்க வைத்தார்.

கமல் உறங்கவும் அங்கிருந்த இருக்கையில் கோகுல் அமர ராதா கமலிற்கு கொடுக்கப்பட்ட படுக்கையில் அமர்ந்தவாறு கோகுலை பார்த்திருந்தாள். அவனை பார்க்க பார்க்க கோபம் கொந்தளித்தது ராதாவிற்கு.

“எல்லா குழந்தையும் அமைதியா சொன்னா கேக்கும். ஆனா நீ இப்புடி பேசுற உன் பேச்ச கேட்டு கமல் அமைதியாயிட்டானே எப்புடி?” என புரியாமல் கேட்டான் கோகுல்.

அவனை ஏளனமாக பார்த்தவள் “வைராக்கியம் ரொம்ப முக்கியம். என் பிள்ளைய வைராக்கியத்த ஊட்டிதான் வளத்துருக்கேன். கண்டவங்ககிட்ட போய் நின்றக்கூடாதில்ல” என அதே ஏளனத்துடன் சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டவனுக்கு கோபம் அவன் மீதுதான் வந்தது. ‘இவ உன்ன மட்டம் தட்டுவான்னு தெரிஞ்சும் அவகிட்ட போய் வாய குடுத்தியே… கடவுள் இவளுக்கு மட்டும் நாக்குக்கு பதிலா தேள் கொடுக்க வச்சு படச்சுட்டான் போல’ என மனதிற்குள் வசை பாடினான்.

ராதாவிற்கு இதேபோல மருத்துவமனையில் கலக்கத்துடன் இருந்தது நினைவில் வந்தது. வாழ்க்கையில் இழப்புகள் அனைத்தையும் சந்திக்கவைத்த நாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்…

எப்போதும் போல அன்றும் தன் அக்கா மகன் மகிழேந்திரனுக்கு சாக்லெட் வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றாள் ராதா. வீட்டினுள் நுழைந்ததும் ஓடிவந்த மகி “அம்மா” என்றான் ராதாவின் கன்னங்களை தன் கரங்களில் ஏந்தியபடி…

“ம்… என் செல்லக்குட்டி ஏன் கொஞ்சுது..? என்ன வேணுமாம் குட்டி பையனுக்கு?” என்றாள் ராதா.

“அம்மா… சாக்கு” என குழந்தை கொஞ்ச… ராதாவோ “அச்சோ… என் செல்லத்துக்கு சாக்லெட் வாங்க மறந்துட்டேனே” என சோகமாக கூறவும் குழந்தை சிணுங்க ஆரம்பித்தான்.

அவனை சமாதானம் செய்த ராதா தன் கைப்பையில் இருந்த சாக்லெட்டை எடுத்து கொடுக்க அதை வாங்கிக் கொண்டு ராதாவின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு சென்றான்.

ராதா தன்னறைக்கு சென்ற சிறிது நேரத்தில் ஏதோ அபசுரமான சத்தம் கேட்க கீழே இறங்கி சென்றவள் கண்டது மயங்கிக் கிடந்த மகியைத்தான். செல்வமும் சுகந்தியும் அவனை எழுப்ப முயற்சிக்க சவிதா அழுது கொண்டிருந்தாள்.

“அப்பா… ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்” என ராதா கூற காரை எடுத்துக் கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு சென்று சேர்த்தனர்.

மகியை பரிசோதித்த மருத்துவர் “பையனுக்கு மூளையில கட்டி இருக்கு. ரொம்ப க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்குறதால உடனே ஆபரேசன் பண்ணனும். நாளைக்கு ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணிடலாம். நீங்க பணத்த மட்டும் ஏற்பாடு பண்ணுங்க” என யோசிக்க நேரமே கொடுக்காமல் அவசரமாக சொல்ல பதறித்தான் போனார்கள் மற்றவர்கள்.

“எவ்வளவு டாக்டர் செலவாகும்” என ராதாவின் தந்தை செல்வம் கேட்க

“இருபத்தஞ்சு லட்சம் வரைக்கும் செலவாகும்” என்றார்.

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது. ‘ச்சே.. இத எப்புடி மறந்தேன். அவங்களுக்கும் கண்டிப்பா நான் தேவை அதனால எனக்கு தேவையான பணத்த அவங்க குடுப்பாங்கள்ள’ என நினைத்தவள் உடனே அதை செயல்படுத்த நினைத்து தன் மொபைலை எடுத்தவள் அப்போது தான் கவனித்தாள் தன் எதிரே அமர்ந்திருந்த கோகுலை ‘இவரு இங்க இருக்கும் போது நான் எப்புடி பேசுறது? இவங்க அப்பாகிட்ட நான் பேசுறத சொல்லிட்டா?’ ராதாவிற்கு நன்றாக தெரியும். கோகுல் என்ன செஞ்சாலும் அவகிட்டயே நேரா செஞ்சு தான் பழக்கம். அதோட கண்ணன் ராதாகிட்ட கோகுல கல்யாணம் பண்ணிக்க சொன்னப்போ கோகுலும் அதிர்ச்சியானதை ராதா கண்டிருந்தாள்.

எனவே அவளுக்கு நன்றாக தெரியும் இது கோகுலின் பிளான் இல்லை கண்ணனின் பிளான் என்று. அது மட்டுமல்ல கண்ணனை சமாளிப்பது என்பது அசாத்தியம் என்பதும் கூட தெரியும். எனவேதான் கோகுல் கண்ணனிடம் கூறிவிட்டால் என எண்ணி தனியாக சென்று பேச முடிவுசெய்து எழுந்து சென்றாள்.

ராதா எழுவதை பார்த்த கோகுல் “உனக்கு ஏதாவது வேணுமா?” என கேட்க

“என்ன பாத்துக்க எனக்கு தெரியும்” என வெடுக்கென கூறியவள் சென்றுவிட அவள் பேச்சில் ஏதோ ஒன்று சரியில்லையே என எண்ணிய கோகுலும் அவள் பின்னாடியே சென்றான்.

சிறிது தூரம் சென்றவள் ஒரு மறைவான இடத்தில் இருந்து தன் மொபைலில் கால் செய்தாள். மறுமுனை எடுக்கப்பட்டதும் “நான் ராதா பேசுறேன்” இவள் கூறி முடிக்கும் முன் எதிர்முனை கத்த ஆரம்பிக்கவும்

“நான் உங்களுக்கு தேவை. சோ… நான் சொல்றத கேளுங்க”

“……..” மறுமுனை அமைதியாகவும் ஒரு பெருமூச்சை வெளியிட்டவள் பேச ஆரம்பித்தாள்.

“நான் உங்களுக்கு தேவ.. எனக்கு பதினஞ்சு லட்சம் பணம் தேவ. உங்களுக்கு ரெண்டு நாள் டைம் தர்றேன் எனக்கு பணத்த செட்டில் பண்ணுங்க. பத்தரமும் ரெடி பண்ணுங்க.. அதுல என்ன கண்டிஷன் இருந்தாலும் பரவாயில்ல நான் ஒத்துக்கிட்டு கையெழுத்து போடுறேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

எதை செய்தால் ஒன்றுமே இல்லாமல் யாருமே இல்லாமல் போய்விடுவாள் என பயந்து இத்தனை காலமாக செய்யாமல் இருந்தாளோ அதையும் இன்று செய்யத் துணிந்துவிட்டாள். இனி எதுவுமில்லை என முடிவெடுத்தவள் எழுந்து தன் மகனை நோக்கி சென்றாள்.

ராதா பேசியதை எல்லாம் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் சென்றதும் தன் தந்தையை அழைத்தான்.

“ஹலோ”

“அப்பா ராதா உங்ககிட்டதான் உதவி கேப்பான்னு சொன்னீங்க?”

“தப்பு. நம்மகிட்ட உதவி கேக்குற சூழ்நிலைய நாம உருவாக்கனும்” என்றவர் “சரி இப்ப அவ யார்கிட்ட உதவி கேட்டா?” எனவும்

“அப்பா அவ பணம் கேட்டா ஆனா உதவியா இல்ல.. ஆர்டர் மாதிரி கேட்டா”

“யார்கிட்ட?”

“தெரியலப்பா”

“சரி நான் பாத்துக்குறேன்” என்றவர் “நான் ஊருக்கு போய்ட்டு காலைல வர்றேன். நீ நாளைக்கு தங்குற மாதிரி நாலு ரூம் புக் பண்ணிரு”

“நாலு ரூம் எதுக்குப்பா?”

“சொன்னத மட்டும் செய். நாளைக்கு தெரியும்” என்றவர் அழைப்பை அணைத்துவிட கோகுல் கண்ணன் கூறியது போல செய்துவிட்டு இரவு மருத்துவமனையிலேயே தங்கிவிட்டான்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு நெருக்கமான வேளையில் வந்த கண்ணன் “உன்ன இவங்க பாக்கனும்ன்னு சொன்னாங்கம்மா” எனவும் வாயிலை பார்த்தவள் திகைத்து எழுந்துவிட்டாள்.

பிறகு தன்னை சுதாரித்தவள் “இது… உங்க வேலதான..?” என்றாள் கோபத்துடன்.

“நான் நெனச்சத செய்ய எந்த எல்லைக்கும் போவேன்” என்றார் கண்ணன்.

தொடரும்…

Advertisement