Advertisement

 அத்தியாயம் – 9

“ரஞ்சு…”

“ம்ம்…” காதில் கிசுகிசுத்த கணவனின் குரலில் அவன் கைகளுக்குள் சுகமாய் கோழிக் குஞ்சு போல் கிடந்த ரஞ்சனா கண்ணைத் திறக்காமல் சிணுங்கினாள்.

“இன்னைக்கும் ரெண்டு பேரும் லீவு போட்டுடலாமா…?” கேள்வி காதில் விழவும் சட்டென்று அதிர்ந்து அவனை விலக்கி எழுந்து அமர்ந்தாள்.

இருவரும் முன்தினம் இரவு கோவையிலிருந்து கிளம்பி அதிகாலையில் சென்னை வந்து சற்று ஓய்வெடுக்க படுத்தவர்கள் நன்றாய் உறங்கிப் போயிருந்தனர்.

“அச்சோ பிரபா, டைம் எட்டாகப் போகுது, என்னைக் கொஞ்சம் சீக்கிரம் எழுப்பி இருக்கலாம்ல…” பதறியபடி எழுந்தவளைப் புன்னகையுடன் நோக்கினான் பிரபஞ்சன்.

“அதுக்கென்ன, இன்னிக்கு லஞ்ச் நீ ஹாஸ்பிடல் கான்டீன்ல சாப்பிட்டுக்க… நானும் ஹோட்டல்ல சாப்பிடறேன்…” அவன் சொல்லவும் தான் சற்று நிதானித்தவள்,

“ஆமால்ல, ஒருநாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிப்போம்…” என்றபடி குளியலறைக்குள் நுழைந்தாள். எழுந்த பிரபஞ்சன் ஜன்னல் கர்ட்டனை விலக்கி விட்டு சூரியக் கதிர்களை வீட்டுக்குள் அனுமதித்தான். கட்டில் விரியை சரி செய்து அடுக்களைக்கு வந்தவன் காபி தயாரித்து வெங்காயம் தோல் நீக்கிக் கொண்டிருக்க ரஞ்சனா வந்துவிட்டாள்.

அவன் வெங்காயம் கட் பண்ணிக் கொண்டிருப்பதைக் கண்ட ரஞ்சனா புன்னகையுடன் கணவனைப் பின்னிலிருந்து கட்டிக் கொண்டாள்.

சோப் வாசம் மனதை மயக்க, ரசனையுடன் கண்ணை மூடி நின்றவனின் காதுக்குள், “தேங்க்ஸ்டா புருஷா…” காதலாய் அவளது குரல் ஒலிக்க புன்னகையுடன் திரும்பினான்.

தலையில் நீர் வடிய நின்றவளைக் கண்டிப்புடன் நோக்கி, “நல்லா தலையைத் துவட்டு ரஞ்சு, அப்புறம் தலை வலி வரும்…” சொன்னவன் காபியை கிளாஸில் ஊற்றி அவளிடம் கொடுக்க அவனையே குறுகுறுவென்று பார்த்தபடி வாங்கிக் கொண்டவளின் இதழில் புன்னகை நெளிந்தது.

அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன் புருவத்தை மேலே தூக்கி, “என்னவாம்…” எனவும் சிரித்தாள் ரஞ்சனா.

“நான் ரொம்ப லக்கி பிரபா…”

“ஓ…! எதுக்காம்…”

“உங்களைப் போல அன்பும், அக்கறையுமான புருஷன் கிடைச்சா எந்தப் பொண்ணும் லக்கி தானே…”

“ஓஹோ…! அப்படின்னா என் குடும்பத்தை தன் குடும்பமா நேசிக்கிற மனைவி கிடைச்ச நானும் லக்கி தானே…” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டு.

“ஹூம், நான் உங்களை சொன்னா நீங்க என்னை சொல்லறீங்க… சரி குளிச்சிட்டு வாங்க, கிளம்பலாம்…” அவள் சொன்னதும் புன்னகையுடன் நகர்ந்தான் பிரபஞ்சன்.

இருவரும் தயாராகி ரஞ்சனா செய்த உப்புமாவை சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பினர்.

ரஞ்சனாவுக்கு அன்று சர்ஜிகல் செக்ஷனில் டியூட்டி இருக்க மிகவும் பிஸியாய் இருந்தாள். நான்கைந்து நோயாளிகளுக்கு அன்று சர்ஜரி இருக்க, சர்ஜரிக்கு முன் அவர்களுக்கு எடுக்க வேண்டிய பரிசோதனைகளை முடித்து, ரிசல்ட்டுகளை டாக்டருக்கு அனுப்பினாள்.

ஒரு சின்னப் பையன் காலில் எலும்பு வளைவுப் பிரச்சனையாய் வந்திருக்க, பயத்திலும் வலியிலும் அழுது கொண்டிருந்த மகனைத் தேற்ற முயன்று தோற்றாள் அவனது அன்னை. அவனிடம் சென்றவள் புன்னகையுடன் பேசத் தொடங்கினாள்.

“சஜீவ்… நீ ஒரு மிலிட்டரி மேன்க்கு புள்ளையா இருந்துட்டு இப்படி பயப்படலாமா…? கால்ல சர்ஜரி முடிஞ்சா நீயும் எல்லாரைப் போல சாதாரணமா நடக்கலாம், ஓடலாம்… உனக்கும் அதெல்லாம் ஆசையா இருக்கு தானே…” என அவன் அழுகையை நிறுத்தி யோசித்தான்.

“ம்ம்… உடனே நடக்க முடியுமா…?”

“உடனே முடியாது… சர்ஜரி முடிஞ்சு டாக்டர் சொல்லுற மெடிஸின் எல்லாம் சரியா எடுத்துகிட்டு அவர் சொல்லுறதை பாலோ பண்ணினா சீக்கிரம் நடந்துடலாம்…” என்றாள் ஆறுதலுடன்.

“ம்ம்… அப்ப நான் அழலை…” என்றான் கண்ணைத் துடைத்து.

“குட் பாய்… சர்ஜரி முடிஞ்சு வா, உனக்கு பெரிய சாக்கலேட் வாங்கித் தர்றேன்…” என்றவள் அவன் தலைமுடியை செல்லமாய் கலைத்துவிட்டாள்.

“என்ன சிஸ்டர், சஜீவ் பயத்தைப் போக்கி அழுகையை நிறுத்திட்டிங்க போலருக்கு…”

“பாவம் சின்னப் பையன், வலிக்கும்னு பயப்படறான்… நீங்க அவனுக்கான டிரஸ்ஸை கொடுத்து தியேட்டருக்கு அனுப்ப தயார் பண்ணிடுங்க…” பேசிக் கொண்டே நடந்தனர்.

“சரி சிஸ்டர், சஜீவ்க்கு அடுத்து யாருக்கு சிஸ்டர்…”

“சாவித்திரி அம்மாவுக்கு…” சொன்னவள் நகர்ந்தாள்.

பகல் வரை சிறிதும் ஓய்வில்லாமல் வேலை இருக்க மாலை அடுத்த ஷிப்டுக்கான நர்ஸ் வரவும் கிளம்பினாள்.

பிரபஞ்சன் வருவதற்கு தாமதமாகுமென்று போன் செய்யவே பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்தவளை பின்னில் வந்த தியாவின் குரல் நிறுத்தியது.

“ஹலோ மேடம்…” என்றவள் ஸ்கூட்டியுடன் நின்றிருந்தாள்.

“இன்னைக்கு சார் இல்லியா, நடந்து போறீங்க…?”

“ம்ம்… அவர் வர லேட்டாகும்னு சொன்னார் தியா…”

“ஓ…! வாங்க, உக்காருங்க…” என்றவள் அழைக்க ரஞ்சனாவும் புன்னகைத்து அமர்ந்து கொண்டாள்.

“சார் வர லேட்டாகும்ல, எங்க வீட்டுக்கு வந்து ஒரு காபி சாப்பிட்டுப் போகலாமே… அம்மாவும் இன்னும் உங்களைப் பார்க்கலைன்னு சொல்லிட்டு இருந்தாங்க…”

“அது வந்து, இன்னொரு நாள் வரேன் மா, நாங்க காலைல தான் ஊருல இருந்து வந்தோம், எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது, அம்மாவை நீ நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரலாமே தியா…” தியாவின் தோளில் கை வைத்திருந்த ரஞ்சனா சொன்னாள். அதைக் கேட்டதும் தியாவின் முகம் வாடியது.

“அம்மா எங்க பிளாட் விட்டு எங்கயும் போக மாட்டாங்க…”

“ஓ… எதனால தியா…?”

“அப்பாவும், அம்மாவும் ஒரு விசேஷத்துக்குப் போயிட்டு வர்ற வழில கார் ஆக்சிடண்ட் ஆகி அப்பா ஸ்பாட்லயே இறந்துட்டார்… அம்மாவுக்கு அந்த விபத்துல ஒரு கால் ரொம்ப சிதைஞ்சு அதை எடுக்க வேண்டியதாப் போயிருச்சு… செயற்கைக் கால் வச்சு வீட்டுக்குள்ள ஓரளவுக்கு மேனேஜ் பண்ணிப்பாங்க, ஆனா வெளிய எங்கயும் வர்றது இல்ல…”

தியா சொன்னதைக் கேட்டு ரஞ்சனாவும் வருந்தினாள்.

“கண்டிப்பா உன் அம்மாவைப் பார்த்திட்டுப் போறேன் தியா…” சொன்னவள் அவளுடன் செல்லவும் செய்தாள்.

லிப்டில் உயர்ந்து தியாவின் பிளாட் முன் நின்றவர்கள் காலிங் பெல்லில் கை வைக்க அது உள்ளே இசைத்து நின்றது. சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட தியாவின் அன்னை தெரிந்தார். பழைய வாணிஸ்ரீயை நினைவு படுத்தும் முகம், சிரிப்பைத் தொலைத்திருக்க மகளின் அருகே நிற்கும் பெண்ணைப் புரியாமல் பார்த்தார்.

“மம்மி, இவங்க தான் ரஞ்சனா… நம்ம பிரபஞ்சன் சார் ஒயிப்…” தியா சொல்ல அவர் முகம் மலர்ந்தது.

“வணக்கம் மா…” புன்னகையுடன் கை கூப்பியவளை, “உள்ள வாம்மா…” அழைத்தவர் நகர்ந்து கொள்ள உள்ளே சென்றனர். ஹாலில் குஷன் சோபா செட், அங்கங்கே அலங்காரப் பொருட்களுடன் வீடு அழகாய் இருந்தது. சுற்றிலும் பார்வையை ஓட்டியவளைக் கனிவுடன் நோக்கினார்.

“என்ன சாப்பிடற, காபி ஆர் டீ…?” ஏதாவது சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்லுவது போல் அதிகாரமாய் ஒலித்தது அவரது குரல்.

“காபி மா…” ரஞ்சனாவும் பிகு செய்யாமல் கூற நகர்ந்தார். அவர் காலை இழுத்து கஷ்டப்பட்டு நடந்து போனதைக் காண ரஞ்சனாவுக்கு வருத்தமாய் இருந்தது.

உடலில் எந்தக் குறையுமில்லாமல் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதே பெரும் சொத்து என்பது பணத்துக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் பலருக்கும் புரிவதில்லை… ஓடியாடி நடந்தவரை இப்போது அறைக்குள்ளேயே முடங்க வைத்தது அந்தக் குறை தானே… மனதுக்குள் யோசித்தபடி இருந்தவளின் முன்னே காபிக் கோப்பையை நீட்ட அதன் மணத்தில் திரும்பினாள்.

“எடுத்துக்க ரஞ்சனா…”

அவர் சொல்லவும் புன்னகையுடன் எடுத்துக் கொண்டாள்.

“தேங்க்ஸ் மா…” என்றவள் குடிக்கத் தொடங்கினாள்.

“நீங்க பேசிட்டிருங்க, வந்துடறேன்…”

சொன்ன தியா அறைக்கு சென்று கதவை சாத்திக் கொள்ள திரும்பினார்.

“ரஞ்சனா…! நல்ல பெயர்… நீ மிலிட்டரி ஹாஸ்பிட்டல்ல நர்ஸ்னு தியா சொன்னா, என் மகனும் மிலிட்டரில தான் இருக்கான், சொல்லிருப்பாளே…”

“ம்ம்… மும்பைல இருக்கார்னு சொன்னா…”

“ஆமா, உன் பாமிலி எல்லாம்…” அவர் கேட்க சொன்னாள்.

“பிரபா ரொம்ப நல்ல டைப், எப்பவாச்சும் என்னைப் பார்க்க வருவார், ஆறுதலாப் பேசி புக்ஸ் எல்லாம் கொடுத்திட்டுப் போவார்… அந்த மாதிரி ஒரு பிள்ளை புருஷனாக் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும், அது இவ்ளோ நாள்ல உனக்கும் நிச்சயம் புரிஞ்சிருக்கும்…”

“நீங்க சொன்னது உண்மைதான் மா… பிரபாவை புருஷனா கிடைக்க நான் ரொம்பப் புண்ணியம் பண்ணிருக்கணும்…”

“ம்ம்… நீயும் ரொம்ப நல்ல பொண்ணாத் தெரியுற, உங்க லைப் சந்தோஷமா இருக்க என் வாழ்த்துகள்…”

“தேங்க்ஸ் மா…” ரஞ்சனா சொல்ல கையிலிருந்த அலைபேசி சிணுங்கி பிரபா என்றது.

எடுத்துப் பேச, ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்றவனிடம், காய்கறி வாங்க சொல்லிவிட்டு வைத்தாள்.

“பிரபாதான்… பக்கத்துல வந்திட்டார் போலருக்கு, நான் இன்னொருநாள் சாவகாசமா உங்களைப் பார்க்க வரேன் மா…” என்றவள் தியாவிடமும் சொல்லி விடை பெற்றாள்.

கணவனையே யோசித்திருந்தவள் கதவைத் திறந்து அவன் உள்ளே வந்ததும் கட்டிக் கொள்ள திகைத்தான் அவன்.

“என்ன ரஞ்சுமா, ரொம்ப உற்சாகமா இருக்க…? பிரமோஷன், இன்கிரிமென்ட் ஏதாச்சும் கிடைச்சிருக்கா…?” கேட்டவனை நெகிழ்வுடன் நோக்கினாள் அவன் மனைவி.

“ப்ச் இல்லடா புருஷா…” என்றவள் அவனை மேலும் இறுக்கிக் கொள்ள திணறிப் போனான் அவன்.

“ஹலோ, எக்ஸ்கியூஸ் மி… நான் ரொம்ப டர்ட்டி பாயா வந்திருக்கேன், கொஞ்சம் டைம் குடுத்தா குளிச்சுட்டு வந்திருவேன்… அப்புறம் நானும் உன்னை ஒரு கை பார்ப்பேன்ல…” என்றவனை செல்லமாய் முறைத்தவள் தனது பிடியிலிருந்து விடுவித்தாள்.

“குளிச்சிட்டு வாங்க…” சொன்னவள் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பொடி தோசை தயார் செய்து கொண்டே ஒரு அடுப்பில் காபியும் வைத்தாள். அவன் வந்ததும் இருவரும் சாப்பிட்டுவிட்டு பெட்ரூமுக்கு வர அவனை விடாமல் ஒட்டிக் கொண்டே இருந்தவளை அதிசயமாய் பார்த்தான் பிரபஞ்சன்.

“ரஞ்சுமா, இன்னைக்கு உனக்கு என்னாச்சு… நாய்க்குட்டி போல என்னையே ஒட்டிட்டு கொஞ்சிட்டு இருக்க…” மனதில் தோன்றியதை மறைக்காமல் கேட்கவும் செய்தான்.

அவன் தோளில் சாய்ந்திருந்தவள், “லவ் அதிகமாயிடுச்சுடா புருஷா…” எனக் காதில் கிசுகிசுக்க அணைத்துக் கொண்டான்.

“பிரபா… உங்களோட இருக்கிற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் புதுசா இருக்கு, எப்பவும் உங்க கூடவே இருக்கணும்னு மனசு ஏங்குது…” ரஞ்சனா சொல்ல,

“எனக்கும் தான் ரஞ்சு, உன்னை எப்பவும் காதலிச்சுட்டே இருக்கணும், இம்ப்ரஸ் பண்ணனும்… கடைசில அந்தக் காதல்லயே மூச்சு முட்டி செத்துடணும்…” அவன் உணர்ச்சி வசப்பட்டு சொல்ல ரஞ்சனா கோபத்துடன் விலகினாள்.

“பிரபா, என்ன பேசறீங்க…? வாழறதைப் பத்தி சொல்லும் போது சாவைப் பத்திப் பேசிட்டு இருக்கீங்க…”

“சாரிமா, அது ஒரு புளோல வந்திருச்சு…” என்றவனிடம் வாயிலேயே மெல்லமாய் அடிக்க அந்த விரல்களைப் பற்றியவன் மென்மையாய் கடிக்க அவள் நாணத்திலும், மனதில் எழுந்த தாபத்திலும் கண்ணை மூடிக் கொண்டாள். அங்கே காதலின் வெளிப்பாடாய் அழகிய சங்கமம் நடந்தேற இருவரும் களைத்து உறங்கத் தொடங்கினர்.

நாட்கள் வேகமாய் சிறகடிக்க இருவரும் இயல்பாய் இல்வாழ்வில் பொருந்தி காதல் பறவைகளாய் கல்யாண வாழ்க்கையில் வலம் வர மூன்று மாதங்கள் ஓடியிருந்தது. நடுவில் இருவரும் ஒரு முறை ஊருக்கு சென்று பெற்றோரைக் கண்டு வந்தனர். கணவனின் அன்பும், அக்கறையும் ரஞ்சனாவுக்கு பெரிய பலம் என்றால் அவளே அவனுக்கு பலமாய் இருந்தாள்.

அன்று ராதிகா மகனை போனில் அழைத்தவர், “அப்பாவுக்கு உடம்பு முடியலை பிரபா, காய்ச்சல் மாறவே இல்லை… வயிறும் வலிக்குதுன்னு சொல்லுறார்… டாக்டர்கிட்ட டெஸ்ட் எடுத்துப் பார்த்ததுல சிறுநீரகத்துல ஏதோ பிரச்சனைன்னு சொல்லுறார், எனக்கு பயமாருக்கு… கொஞ்சம் வந்திட்டுப் போப்பா…” என்றார் கவலையுடன்.

பிரபாவுக்கு ஆடிட்டிங் வேலை நடந்து கொண்டிருந்ததால் உடனே போக முடியவில்லை. பணம் மட்டும் அனுப்பிக் கொடுத்தவன் ஒரு வாரம் கழித்துப் போனான்.

சிவகுமாருக்கு பரிசோதித்த டாக்டர் அவரது ஒரு சிறுநீரகம் பழுதடைந்து இருப்பதால் அதை நீக்கவேண்டும், இல்லாவிட்டால் அடுத்ததும் பாதிப்படையக் கூடும் என்று சொல்லவே ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை செய்தனர். பணத்தைப் புரட்டினான் மகன். ஆபரேஷன் முடிந்ததும் ஒரு மாதம் முழு ஓய்வில் இருக்க வேண்டுமென்று கூறி வீட்டுக்கு அனுப்பினர்.

தனியார் மருத்துவமனையில் ஒரு வாரம் அட்மிட் செய்து சிகிச்சை செய்ததால் நினைத்ததை விட அதிகமாய் பணம் தண்ணியாய் செலவானது. வீட்டுக்கு வந்தாலும் அடிக்கடி பரிசோதனை, மூன்று வேளையும் உணவு போல் மருந்து என்று நிறைய செலவானது. ரஞ்சனாவும் கணவனுக்கு தோள் கொடுக்க எப்படியோ சமாளித்தனர்.

இருவரும் சக்கரம் கட்டிக் கொண்டு ஒவ்வொரு பக்கமாய் ஓடிக் கொண்டிருந்தாலும் மனம் நிறைந்த காதலில் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள நாட்கள் நகர்ந்தது.

“ரஞ்சு…” மாலை வீடு திரும்பிய பிரபஞ்சன் மனைவியை அழைக்க படுக்கையறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

“நான் இங்கிருக்கேன் பிரபா…” எனவும் அங்கே சென்றான்.

துவைத்த துணியை மடித்து வைத்துக் கொண்டிருந்தவள், “என்னங்க, இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டிங்க…” என சலிப்புடன் கட்டிலில் சாய்ந்தான் பிரபஞ்சன்.

“என்ன, உடம்புக்கு எதுவும் முடியலியா…?” பதறியவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க சாதாரணமாய் இருந்தது.

“காபி கொண்டு வரட்டுமா…?”

“ம்ம்…” என்றதும் நகர்ந்தவள் காபியோடு வந்தாள்.

அவன் குடித்து முடிக்கும் வரை அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவள் மடியில் படுத்துக் கொண்டான்.

இதமாய் அவன் தலை கோதியவள், “என்னப்பா, என்னாச்சு… டிரஸ் கூட மாத்தாம அப்படியே படுத்திருக்கிங்க…?” அக்கறையாய் விசாரிக்க அவள் வயிற்றில் முகம் புதைத்து இறுக்கிக் கொண்டான் பிரபஞ்சன்.

“டேய் புருஷா… என்னன்னு கேட்டுட்டே இருக்கேன், இப்படி அமைதியா இருந்து வயித்துல பீதியைக் கரைக்கறீங்க… என்ன விஷயம்னு சொல்லப் போறிங்களா இல்லியா…?” அவள் அதட்டலாய் கேட்க நிமிர்ந்தான்.

“ரஞ்சு, பத்து நாள் நீ என்னைப் பார்க்காம இருப்பியா…?”

“என்னாச்சு, எதுக்கு பார்க்காம இருக்கணும்…?”

“ப்ச்… என்னை ஆபீஸ் விஷயமா பத்து நாள் ஜெய்ப்பூர் போயி ஒரு பெரிய கிளையன்டை மீட் பண்ணிட்டு வர சொல்லி இருக்காங்க, நான் எப்படி உன்னைத் தனியா இங்க விட்டுட்டுப் போக முடியும்…?” என்றான் கவலையுடன். அவன் சொன்னதைக் கேட்டதும் அவளுக்கும் திக்கென்றது.

“பத்து நாளா…?” என்றாள் அதிர்ச்சியுடன்.

“ம்ம்… நீயும் என்னோட வந்துடறியா…?” அவன் கேட்க ஆசையாய் இருந்தாலும் அத்தனை நாள் விடுமுறை கிடைக்காதே… என்ற யோசனையில் தவித்தாள்.

“எனக்கு அவ்ளோ லீவு கிடைக்காதே பிரபா, ஆல்ரெடி நிறைய லீவு போட்டுட்டேன்…”

“ம்ம்… இந்த புரோகிராம் கான்சல் பண்ணவும் முடியாது, நான் போயே ஆகணும்… வேலை சக்சஸ்புல்லா முடிஞ்சா எனக்கு சாலரியும் கூடும், நமக்கு இப்ப இருக்கிற சூழ்நிலைல பணத்தேவையும் அதிகமா இருக்கு… அதான் யோசிக்கறேன்…”

அவன் சொல்ல அவளுக்கும் அது சரியென்றே தோன்றியது. தான் வருத்தப்பட்டால் அவன் போக முடியாமல் தவிப்பான் என்று புரிய இயல்பாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“பிரபா பத்து நாள் தானே, சமாளிச்சுக்கலாம்… தினமும் நைட் போன்ல பேசிப்போம்… சட்டுன்னு வேலை முடிச்சிட்டு வந்துடப் போறீங்க, இதுக்கு எதுக்கு இவ்ளோ பீல் பண்ணறீங்க…” என்றவளைத் திகைப்புடன் நோக்கினான்.

“அப்ப நீ, நான் இல்லாம தனியா இருந்துப்பியா…?”

“ப்ச்… இதென்ன கேள்வி பிரபா, நீங்கதான் எப்பவும் என் மனசுக்குள்ளயே இருக்கீங்களே…?”

“அப்ப டிக்கட் போட சொல்லிடட்டுமா…?” என்றான் மீண்டும். “ம்ம்…” என்றவள் அவளே அவனது போனை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவன் சில நொடிகள் யோசனையில் கழித்துவிட்டு யாருக்கோ அழைத்தான்.

“ரஞ்சித்… ஜெய்பூர்க்கு பிளைட்ல டிக்கட் எப்ப அவைலபிள்னு பாருங்க…” சொல்லிவிட்டு காத்திருந்தான். “நாளை மறுநாள் இருக்கு சார்…” ரஞ்சித் சொல்ல, “அதையே புக் பண்ணிருங்க…” என்றவன் போனை வைத்தான்.

அடுத்தநாள் பிரபஞ்சன் காலையில் வங்கிக்கு சென்றுவிட்டு மதியமே வீட்டுக்கு வர ரஞ்சனாவும் அரைநாள் விடுப்பு எடுத்து வந்து விட்டாள். இருவரும் ஷாப்பிங், ஹோட்டல் என்று ஒன்றாகவே சுற்ற இனிமையான இரவும் முடிந்து அடுத்தநாள் காலையில் பிரபஞ்சன் ஜெய்ப்பூர் கிளம்பத் தயாரானான். கதிரவனின் ஒளியில் தகதகத்த அலுமினியப் பறவை அவனையும் சுமந்து கொண்டு வானத்தில் பறந்தது.

நீ என்னை விட்டு

விலகிடும் பொழுது

பதறும் மனதோ

சிதறி விழுகிறது

விழியோர

கண்ணீர்த்துளியாய்…

நீ இல்லாத பொழுதுகளில்

நான் தேடி அலைவது

உன்னையா…?

இல்லை என்னையா…?

Advertisement