“நான் உன்கிட்ட தானே கேட்டேன், நீ எதுக்கு வேலை செய்துட்டு இருக்கவகிட்ட சொல்லுற…” என்று பேத்தியைக் கடிந்து கொள்ள, “போங்க பாட்டி, சீரியல்ல முக்கியமான ஸீன் ஓடிட்டிருக்கு…” என்றவள் திரும்பிக் கொண்டாள்.
“ம்ம்… என்ன பெரிய சீரியல்…? நல்லாருக்கற குடும்பத்தைக் கெடுக்க வீட்டுக்குள்ளயே வில்லன், வில்லியைக் கொண்டு வந்து குடி வைப்பாங்க, அவங்க பண்ணுறது எல்லாம் தெரிஞ்சாலும் நேர்மைங்கற பேருல அவங்க பண்ணுற சித்திரவதையை அனுபவிப்பாங்க, அது இல்லன்னா கல்யாணமான ஒருத்தனை பொண்டாட்டிகிட்ட இருந்து பிரிச்சு மறுபடி கல்யாணம் பண்ணிக்கறேன்னு இன்னொருத்தி வருவா…? இதான இப்பத்த சீரியல்…” பாட்டி கேட்க திகைப்புடன் திரும்பினாள் வைஷாலி.
அவருக்கு தண்ணி எடுத்து வந்த ரஞ்சனாவும் பாட்டி சொன்னதைக் கேட்டு புன்னகைத்தாள்.
“போடி போக்கத்தவளே, இதெல்லாம் பார்த்தா குடும்பம் விளங்கின போலதான்… உன் சித்தப்பா வீட்டுல இருந்தப்ப உன் சித்தி பார்க்கிறாளேன்னு ஒரு நாள் உக்கார்ந்து பார்த்தேன், ஒரு நல்ல விஷயம் சொல்லுறானா அதுல… நான் புத்தி சொன்னதுல இருந்து அவளும் பார்க்கிறதில்ல…”
“ஓ… இனி சித்தி உங்களை ஊருக்குக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க, பாருங்க…”
“என் சின்ன மருமக என்ன உன்னப் போலவா…? அவ நான் சொன்னதைப் புரிஞ்சுகிட்டு சீரியல் பார்க்காம அந்த நேரத்துல நல்ல பாட்டைக் கேட்டுகிட்டு சீக்கிரம் வேலைய முடிக்கிறா, பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறா… அதனால என் மகனுக்கும், பேரப் புள்ளைங்களுக்கும் நல்ல சாப்பாடும், படிப்பும் கிடைக்குது…” என்றார் பெருமையுடன்.
“ஹூக்கும், எல்லாரும் திருந்திட்டா அப்புறம் இந்த டீவி சீரியல் எடுக்கிறவன் எல்லாம் எப்படிப் பொழப்பு நடத்துறது…” சலித்துக் கொண்டு வைஷாலி டீவியில் கண் பதிக்க, “ஏண்டி, உன் அண்ணி தனியா இத்தன பேருக்கும் சப்பாத்தி பிசைஞ்சுட்டு இருக்கா, நீ போயி அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல…” என்ற பாட்டியை முறைத்தாள் பேத்தி.
“போங்க பாட்டி, என் புகுந்த வீட்டுக்குப் போனா எல்லாத்தையும் நான் தான பண்ணனும், இங்கயாச்சும் ப்ரீயா இருந்துக்கறேன், அதெல்லாம் அண்ணி பண்ணிப்பாங்க…” என பாட்டி கடுப்புடன் எழுந்து சென்றார்.
அன்றைய பொழுது நல்லபடியாய் கழிய அடுத்தநாள் மாலை வைஷாலி கணவனுடன் கிளம்பத் தயாராக மகளுக்காய் செய்த பலகாரங்களை பாத்திரங்களில் போட்டு எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ராதிகா. ரஞ்சனா அத்தைக்கு உதவி செய்து கொண்டிருக்க அங்கு வந்த வைஷாலி அவளை அழைத்தாள்.
“அட, நீங்க என்னம்மா…? நான் ஒண்ணும் உங்க மருமகளைக் கடிச்சு தின்னுட மாட்டேன், எனக்கு சேலை கட்ட ஹெல்ப் பண்ண தான் அண்ணியைக் கூப்பிடறேன்…”
“ஓ…! சரிம்மா ரஞ்சு, நீ போயி பாரு…” ராதிகா சொல்ல வைஷாலியுடன் அவளது அறைக்கு சென்றாள் ரஞ்சனா. மாடியில் பிரபஞ்சனின் அறைக்கு எதிர்ப்பக்கம் வைஷாலியின் அறை இருக்க, இரு அறைகளுக்கு நடுவில் ஹாலும், சின்ன பால்கனியும் இருந்தது.
“அண்ணி, எனக்கு சேலை கட்டவே சரியா வராது, நீங்க கட்டி விடுங்க…” என்ற வைஷாலி கொடுத்த சேலையை மடிப்பெடுத்து அழகாய் கட்டி விட்டாள் ரஞ்சனா.
அவளே தளர்வாய் வைஷாலியின் முடியைப் பின்னலிட்டு மல்லிகைப் பூவையும் வைத்து விட்டாள்.
“அதுவந்து… நீங்க கல்யாணம் முடிஞ்சு வந்தப்ப என்கிட்ட ஒரு மாங்கா மாலையை கல்யாணப் பரிசா வச்சுக்கன்னு சொல்லி இருந்தீங்கள்ல, அதைப் போட்டா இந்த சேலைக்கு நல்லா எடுப்பா இருக்கும், எடுத்துத் தரீங்களா…?” என்றதும் ரஞ்சனா மனதுக்குள் அதிர்ந்தாள்.
அதை அடகு வைத்துதான் ராதிகா கேட்ட ஒரு லட்சம் பணத்தை பிரபஞ்சன் கொடுத்திருந்தான். “இப்போது இவள் அதைக் கேட்கிறாளே…” என ரஞ்சனா யோசித்திருக்க வைஷூ கவனித்தாள்.
“அதில்ல வைஷூ, அந்த நகை… அதுவந்து….” ரஞ்சனா சொல்லாமல் தயங்க வைஷாலியின் முகம் மாறியது.
“என்னண்ணி…? உங்களுக்குக் குடுக்க விருப்பமில்லன்னா சொல்ல வேண்டியது தானே… அப்புறம் எதுக்கு அன்னைக்கு பெருசா இதை என் பரிசா வச்சுக்கன்னு சொன்னிங்க, இப்ப கேட்டா யோசிச்சுட்டு இருக்கீங்க…” வைஷாலியின் வார்த்தை கேட்டு அதிர்ந்த ரஞ்சனா,
“அதில்லமா, அது…அந்த நகை, என் பிறந்த வீட்டுல வச்சிட்டு வந்துட்டேன்… உனக்கு வேணும்னா வேற நகை தரட்டுமா…?” என வைஷாலி சிடுசிடுத்தாள்.
“உங்க கல்யாணத்துக்குக் கொடுத்த நகையை எதுக்கு பிறந்த வீட்டுல வைச்சுட்டு வறீங்க… கல்யாணத்துக்குக் கொடுக்கிற போல கொடுத்துட்டு உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு இருக்கட்டும்னு வாங்கி வச்சுகிட்டாங்களா…?” என்றதும் ரஞ்சனாவுக்கு கோபம் வந்தது. இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே சொன்னாள்.
“வைஷூ, எதுக்கு இப்படில்லாம் சொல்லற…? என் வீட்டு ஆளுங்க அப்படிப்பட்டவங்க இல்ல, உனக்குதான் என்னோட வேற நகை ஏதாச்சும் தரேன்னு சொல்லறேனே…” அவள் சொல்ல கதவைத் திறந்து வினோத்தும், உடன் பிரபஞ்சனும் அங்கே வர வைஷாலி வாயை மூடிக் கொண்டாள்.
“என்ன வைஷூ, கிளம்பலாமா…?” வினோத் கேட்க, பிரபஞ்சன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.
“என்ன ரஞ்சுமா, ஏதோ நகைன்னு பேசிட்டு இருந்தீங்க…?”
“அ..அது ஒண்ணுமில்லங்க, நகை எல்லாம் எடுத்து வச்சுகிட்டியான்னு கேட்டேன்…”
“ஓ…!” என பேச்சை முடித்துக் கொண்டாலும் அவளது வாடிய முகம் எதையோ உணர்த்த வைஷாலி ஏதாவது சொல்லி இருப்பாள் என நினைத்துக் கொண்டான்.
அவர்கள் கிளம்பும் நேரத்தில் பேச்சை வளர்க்க வேண்டாமென்று நினைத்தவன் அமைதியானான்.
“சரி… வைஷூ புறப்பட்டாச்சுல்ல, அம்மா உன்னைக் கூப்பிடறாங்க… நீ வா, அவங்க வரட்டும்…” என்ற பிரபஞ்சன் ரஞ்சனாவின் கை பிடித்து கீழே அழைத்துச் செல்ல வைஷாலி எதுவும் சொல்ல முடியாமல் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் கீழே வர வினோத்தின் காரில் இருவரும் புகுந்த வீட்டுக்கு கிளம்பினர். மகளின் முகம் காற்றுப் போன பலூனாய் சிறுத்திருப்பதைக் கண்டாலும் ராதிகா, எதுவும் கேட்கவில்லை. பாட்டி தந்த கல்யாணப் பரிசைக் கழுத்தில் போட்டிருந்தவள் எல்லாரிடமும் விடைபெற்று ரஞ்சனாவிடம் சொல்லாமலே காரில் ஏற அவள் முகம் வாடியது.
அவர்கள் சென்றதும் அடுக்களைக்கு சென்ற மனைவியின் பின்னால் வந்த பிரபஞ்சன் ரஞ்சனாவிடம் கேட்டான்.
“என்கிட்ட மறைக்காத ரஞ்சு, என் தங்கையைப் பத்தி எனக்குத் தெரியும்… அவ ஒண்ணும் வருத்தப்படற டைப் கிடையாது, நீ மறைக்காம உண்மையை சொல்லு…” எனவும் சட்டென்று ரஞ்சனாவின் கண்ணில் கண்ணீர் துளிர்க்க பதறிப் போனான் பிரபஞ்சன்.
“என்னமா, நீ கண் கலங்கற அளவுக்கு அவ என்ன சொன்னா… சொல்லுமா…” ஆறுதலாய் ஒலித்த கணவனின் குரலில் நடந்த எல்லாத்தையும் சொல்லி விட்டாள்.
“அந்த மாலையைத்தான் அத்தை கேட்ட ஒரு லட்சத்துக்கு நாம அடகு வச்சு பணம் வாங்கினோம்…”
“ஓ…! இதை நீ அவகிட்ட சொல்லி இருக்கலாமே…”
“இல்ல பிரபா, அதை சொன்னா வைஷூ ஒருவேளை அத்தை கிட்ட சொல்லிடுவா, அத்தை இதை நினைச்சு வருத்தப் படுவாங்களோன்னு தான் சொல்லல…”
“ம்ம்… வைஷூக்கு எவ்ளோ கிடைச்சாலும் ஆசை அடங்காது, நீ இதை நினைச்சு பீல் பண்ணாத… விடு, அம்மா பார்த்தா என்னன்னு கேப்பாங்க…” சொன்ன பிரபஞ்சன் மனைவியின் தோளில் தட்டிக் கொடுத்து வெளியே வர அங்கே ராதிகா நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். “அ…அம்மா… அது வந்து…” என்ற மகனின் கை பற்றி ஓரமாய் அழைத்துச் சென்றவர் கண்கலங்க சொன்னார்.
“பிரபா, எனக்கு கடவுள் நல்ல புருஷனையும், மகளையும் கொடுக்காம தப்புப் பண்ணி இருந்தாலும் நல்ல மாமியார், மகன், மருமகளைக் கொடுத்து தன் தப்பை திருத்திக்கிட்டார்… எனக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவேன்னு தான என் மருமக சொல்லாம மறைக்க நினைச்சா, அது அப்படியே இருக்கட்டும்… நான் நீங்க பேசினதைக் கேட்டது அவளுக்குத் தெரிய வேண்டாம்…” என்றார் மகனின் கையில் தட்டி.
“சரிம்மா…”
“உன் நல்ல மனசுக்கு கடவுள் மிகப் பெரிய பொக்கிஷத்தை உனக்கு மனைவியாக் கொடுத்திருக்கார், ரெண்டு பேரும் நல்லாருப்பிங்க…” என கண்ணைத் துடைத்தபடி நகர்ந்தார்.