Advertisement

 அத்தியாயம் – 8

காலை ஏழு மணி.

அந்தக் கல்யாண மண்டபம் முழுதும் பட்டும், பகட்டுமாய் ஜனங்களோடு நிறைந்திருக்க, முன்னில் பளிச்சென்ற புன்னகையுடன் நின்றிருந்த பிரபஞ்சன் வருபவர்களை கை கூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தான். கணவன் அருகே மனதின் மகிழ்ச்சி முகத்தில் வழிய அணிந்திருந்த பொன்னகைக்குப் போட்டியிடும் அழகான புன்னகையோடு தேவதையாய் நின்றிருந்தாள் ரஞ்சனா.

வைஷாலியின் கல்யாணத்துக்கு வந்திருந்த ரஞ்சனாவின் பெற்றோருக்கு, மகள் அவளது கல்யாணத்தின் போது கூட இத்தனை மலர்ச்சியோடு இல்லை, இது மருமகனால் வந்த சந்தோஷம்… என்பது புரிய நிறைவாய் இருந்தது. அக்காவைக் கண்டதும் சஞ்சனா அவளுடன் ஒட்டிக் கொண்டு பன்னீர் தெளிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தாள்.

மணமகன் வீட்டார் வந்து மேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருக்க மாப்பிள்ளை, பெண்ணை அழைத்து வந்ததும் இவர்களும் மேடைக்கு சென்றனர்.

வைஷாலி அணிந்திருந்த நகையிலும், மணப்பெண் அலங்காரத்திலும் பளபளப்பாய் மின்னினாள். அவளது தோழிக்கு அலங்கரித்த காஸ்ட்லியான பியூட்டிஷியனையே இவள் கல்யாணத்துக்கும் அழைக்க வேண்டுமென்று அடம் பிடித்து அலங்காரம் செய்ததில் ஆளே வேறு தோற்றத்தில் தெரிந்தாள். அவளுக்கு அருகே அமர்ந்திருந்த மாப்பிள்ளை வினோத்தின் பார்வை தனது காதல் துணையை அடிக்கடி ஆவலுடன் தழுவிக் கொண்டிருந்தது.

அலட்டலான அவனது அன்னை தனது வீட்டாருடன் அமர்ந்து ஜம்பமாய் அதிகாரம் செய்து கொண்டிருந்தார்.

“சம்மந்தி… மண்டபம் கொஞ்சம் சிம்பிளாப் போயிருச்சே, A/c ஹால் புக் பண்ணிருப்பிங்கன்னு நினைச்சோம்… புழுக்கமா, எல்லாருக்கும் கசகசன்னு வேர்க்குது, பாருங்க…”

சொல்லிக் கொண்டே பட்டு சேலை சுற்றிய தனது மலை போன்ற உடம்பைத் தூக்கிக் கொண்டு ஓரமாய் இருந்த ராட்சச மின்விசிறி அருகே சென்று அமர்ந்தார். ராதிகா எதுவும் சொல்லாமல் புன்னகையோடு நகர்ந்து விட்டார்.

முகூர்த்த நேரம் நெருங்க நல்லபடியாய் வைஷாலியின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான் வினோத். அன்னையைப் போல் இல்லாமல் அவன் சாதாரணமாகவே  எல்லாரிடமும் பழகினான். மாப்பிள்ளைக்கு இவர்கள் போடும் செயின், பிரேஸ்லட் எல்லாம் உறவால் கவனிக்கப்பட்டது.

“பொண்ணு வீட்டுல மாப்பிள்ளைக்கு கார், பைக் எதுவும் வாங்கிக் கொடுக்கலியா…?” மணமகனின் உறவுக்காரி ஒருத்தி வினோத்தின் அன்னையிடம் சற்று சத்தமாகவே கேட்க அருகிருந்த ராதிகாவுக்கு திக்கென்றது.

“அதை ஏன் கேக்கற சுபத்ரா, நம்ம பையன் தான் வரதட்சணை வாங்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டானே, பொண்ணு வீடும் நம்ம அளவுக்கு வசதி இல்லை… அதான், அவங்க பொண்ணுக்கு என்ன செய்யுறாங்களோ செய்யட்டும்னு எதுவும் கேட்காம விட்டுடோம்…” ராதிகாவை நோக்கி சொல்லியபடி தன் மகனுக்குப் பெருமை தேடிக் கொண்டார் அந்தம்மா. சடங்குகள் முடிந்து மணமக்கள் போட்டோ, வீடியோ எடுப்பதில் முனைப்பாய் இருக்க ரஞ்சனா பெற்றோரிடம் வந்து அமர்ந்தாள்.

“ரஞ்சுமா… ரெண்டு பேரும் எவ்ளோ நாள் லீவு போட்டு வந்திருக்கிங்க…” அன்னை துர்கா கேட்க,

“ஒரு வாரம் மா… நாலு நாள் மேல தர மாட்டேன்னு சொன்னவங்களை எப்படியோ கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சு லீவு வாங்கினேன், அவரும் தான்…”

“ம்ம்… கிளம்பறதுக்கு முன்ன நம்ம வீட்டுக்கு வந்திட்டுப் போங்க… உனக்குப் பிடிச்ச இட்லிப் பொடி, பருப்புப் பொடி, எள்ளுருண்டை எல்லாம் செய்து வைக்கறேன்…”

“சரிம்மா… இங்க கொஞ்சம் கல்யாண பிஸி முடியட்டும், கிளம்பறதுக்கு முந்தின நாள் வரேன்…”

“ரஞ்சு மா… சென்னைல வீடு, வேலை எல்லாம் பழகிருச்சா…” தந்தையின் கேள்விக்குப் புன்னகைத்தாள் மகள்.

“அதெல்லாம் பழகிட்டேன் ப்பா… உங்க மாப்பிள்ள எல்லா விஷயத்துலயும் எனக்கு ஆதரவா இருக்கார், எதுன்னாலும் எனக்கு முன்னாடியே யோசிச்சு பக்காவா பண்ணிடுவார்…”

“ம்ம்… ரொம்ப சந்தோஷம் டா, மாப்பிள்ளை தங்கம்…”

“குறைச்சலா சொல்லாதீங்கப்பா, உங்க மாப்பிள்ளை வைரம்… இல்லல்ல, அதுக்கும் மேல… அவரை எதோடவும் கம்பேர் பண்ண முடியாது…” மகள் கணவனைப் பற்றி பெருமையாய் சொல்ல, கேட்டிருந்த துர்காவின் கண்கள் ஏனோ பனித்தது. அன்று மகளை வற்புறுத்தி தான் எடுத்த முடிவு நல்லதே என்ற சந்தோஷத்தில் மனம் நெகிழ்ந்தது.

அதற்குள் ராதிகா மருமகளை யாருக்கோ அறிமுகப் படுத்துவதற்காய் அழைக்க புன்னகையுடன் எழுந்து சென்ற மகளை நிறைவாய் நோக்கினர் பெற்றோர்.

“பிரபா, நாம எல்லாரும் பாமிலி போட்டோ எடுத்துக்கலாம், பாட்டியை அழைச்சிட்டு வா…” ராதிகா சொல்ல குடும்பமாய் மணமக்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.

பரிசு கொடுத்து, விருந்து முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டுக்குக் கிளம்ப இவர்களும் கிளம்பினர்.

கல்யாணம் முடிந்தாலும் வீட்டில் வேலை நிறைய இருந்தது. ரஞ்சனா சளைக்காமல் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தாள். சில நாள் முன்பு சிவகுமார்க்கு சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட, கல்யாண வேலைகளுக்கு நடுவே கணவருக்கான தேவைகள், நேரத்திற்கு மருந்து என்று கவனித்துக் கொள்ள முடியாமல் ராதிகா எப்படியோ சமாளித்திருந்தார். கல்யாணம் முடிந்ததும் அப்பாடா என்று அமர முடியாமல் அடுத்து விருந்துக்கான வேலை இருந்தது.

அடுத்த நாளே விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மணமகன் வீட்டார் நேரமே வந்துவிட ஜூஸ், மதியம் அசைவ விருந்து என்று களை கட்டியது.

“அம்மா, அண்ணி வீட்டுல வச்ச விருந்தைப் போல சிம்பிளா பிரியாணி மட்டும் போட்டு அனுப்பிடாதிங்க, விருந்துக்கு கோழி, மட்டன், முட்டை, மீன்னு விதவிதமா ஏற்பாடு பண்ணுங்க… சாப்பிட்டு என் புகுந்த வீட்டுல உள்ளவங்க பிரம்மிச்சுப் போகணும்…” கல்யாணத்துக்கு முன்பு ரஞ்சனாவின் முன்னில் வைஷாலி சொன்னதைக் கேட்டு மருமகளின் முகம் சுருங்க ராதிகா மகளை அதட்டினார்.

“வைஷூ, இதென்ன பேச்சு…? உனக்கு என்ன வேணும்னு கேக்கறது தப்பில்ல… அது எதுக்கு, உன் அண்ணி வீட்டுல செய்ததை குறைச்சலா சொல்லணும், அவ அப்பாவுக்கு ஆப்பரேஷன் முடிஞ்ச கையோட கல்யாணம், விருந்துன்னு எல்லாத்துக்கும் ஓட முடியுமா…? அவங்க அதிகமா செய்யலைன்னாலும் எல்லாமே நல்லாத்தானே செய்தாங்க, இப்படி குறைச்சலா பேசறது தப்பு…” மகளை கண்டித்தார். அதைக் கேட்டு வைஷூவின் முகம் கோபத்தில் மின்னியது.

“ஹூக்கும், நான் உண்மையத்தானே சொன்னேன்… மருமக வந்ததும் என் மேல உங்களுக்குப் பாசமே இல்லாமப் போயிடுச்சுல்ல, நாளைக்கு நான் புருஷன் வீட்டுக்குப் போயிருவேன், அந்த வருத்தம் கூட இல்லாம திட்டறீங்க…” அவள் கண்ணைக் கசக்க ரஞ்சனாவுக்கு வருத்தமானது.

“விடுங்கத்தை, வைஷூவை வருத்தப் படுத்தாதீங்க…” என்று ரஞ்சனா தான் அத்தையை சமாதானம் செய்தாள்.

“இல்லமா, இவளும் இன்னொரு வீட்டுக்குப் போயி வாழப் போறா… நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணை நாம நேசிச்சா தானே நம்ம பொண்ணும் இன்னொரு வீட்டுல நல்லாருப்பா… எதுக்கு உன்னைத் தேவை இல்லாம எல்லாத்துலயும் வம்பிழுத்து குத்தம் சொல்லணும், இதெல்லாம் நல்ல சுபாவம் இல்லன்னு சொன்னாலும் புரிஞ்சுக்கறதில்லை…” ராதிகா ஆதங்கத்துடன் மகளை சொல்ல அவள் கோபத்துடன் அன்னையை முறைத்தபடி எழுந்து சென்று விட்டாள்.

இருந்தாலும் மகளது விருப்பம் போல சிறப்பாகவே விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ராதிகா. மதிய விருந்து முடிந்து ப்ரூட் சாலட், ஐஸ்க்ரீம் என்று பிடிபிடித்தனர். அவர்கள் ஆளும் அதிகமாய் வந்திருந்தனர்.

வீட்டை சுற்றிப் பார்க்க வந்தவர்கள், “பொண்ணு வீடு பெருசா நல்லாத்தான் இருக்கு, என்ன ஏசி இல்லாதது தான்  உஷ்ணம் தாங்க முடியல…” ஒரு பெண்மணி சொல்ல ஆமோதிப்பாய் தலையாட்டினார் வினோத்தின் அன்னை.

“ஆமா சம்மந்தி, என் மகன் எப்பவும் ஏசிலயே இருந்து பழகினவன்… உங்க பொண்ணு ரூம்ல ஏசி இருக்கா…?”

அவர் கேட்க தவிப்புடன் மகனைப் பார்த்த ராதிகா, “அது வந்து… இப்ப இல்ல, வாங்கிக்கலாம் சம்மந்தி…” என அதை கவனித்த வினோத் அன்னைக்கு பதில் சொன்னான்.

“அம்மா, நாங்க என்ன… எப்பவும் இங்கேயா இருக்கப் போறோம், எப்பவாச்சும் வந்து தங்கறது தானே… அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன், நீங்க கவலைப் படாதீங்க…” என்று அன்னையின் வாயடைத்தான்.

அதைக் கேட்ட பரிமளம் மெச்சுதலுடன் ராதிகாவைப் பார்க்க அவரும் புன்னகைத்தார். சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பி சென்றனர்.

மாலை வைஷாலி டீவி முன்னில் எதையோ கொறித்துக் கொண்டு அமர்ந்திருக்க, பிரபஞ்சனும், வினோத்தும் தந்தையுடன் அமர்ந்து பொதுவாய் பேசிக் கொண்டிருந்தனர்.

ரஞ்சனா அடுக்களையில் அனைவருக்கும் சப்பாத்தி தயார் செய்து கொண்டிருக்க ராதிகா முற்றத்தை சுத்தப் படுத்திக் கொண்டிருந்தார். அங்கே வந்த பரிமளம், “வைஷூ, கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வா…” என்று கூற, “அண்ணி… பாட்டிக்குத் தண்ணி வேணுமாம்…” குரல் கொடுத்தாள் அவள்.

Advertisement