Advertisement

“இனி நீங்க போங்க பிரபா, நான் பார்த்துக்கறேன்…” சொன்னவள் அடுக்களையை ஒதுக்கிவிட்டு ஹாலுக்கு வந்து கணவன் அருகே அமர்ந்தாள். டீவியில் கண்ணைப் பதித்திருந்தவன் அவள் வந்ததும் அமைதியாய் தன் தோளில் சாய்த்துக் கொள்ள அவளும் மறுக்கவில்லை.

“இன்னிக்கு வொர்க் எப்படி இருந்துச்சு, வேலை ஜாஸ்தியா…?”

“எப்பவும் போல தான், ஆனா என்னால தான் முழு மனசோட வேலை செய்ய முடியல…” வருத்தமாய் ரஞ்சனா சொல்லவும் அவள் முகத்தைப் பார்த்தான் பிரபஞ்சன்.

“என்னமா…? என்னாச்சு… உடம்புக்கு எதுவும் முடியலியா, வீட்டு நினைவு வந்திருச்சா…?” அவளைப் பரிவுடன் நோக்கிக் கேட்க சட்டென்று அவள் கண்ணில் கண்ணீர் தளும்பியது.

“ப்ச்… இல்ல…” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு கைகளை அணைத்துக் கொள்ள எதுவும் பேசாமல் அவள் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்து விரலுக்கு சொடுக்கு எடுத்து விட்டான் அவள் கணவன்.

“சொல்லு ரஞ்சு, வீட்டுல எல்லாரையும் மிஸ் பண்ணறியா…”

“ப்ச்… அதெல்லாம் ஒண்ணும் இல்லை, உங்களதான் மிஸ் பண்ணேன்…” குனிந்தபடி அவள் சொல்ல அவனுக்குள் ஆயிரம் மத்தாப்புகள் ஒன்றாய் சிதறின.

“நான் மட்டுமில்லை, என்னை என் ரஞ்சுவும் மிஸ் பண்ணி இருக்கிறாள்…” அதை நினைக்கும்போதே மனதுக்குள் பெரும் சந்தோஷமும், காதலும் பிரவாகமாய் பொங்கியது.

எதுவும் சொல்லாமல் அவளையே புன்னகையுடன் குறுகுறுவென்று பார்க்க அந்தப் பார்வையில் வழியும் காதலில் நாணி அவன் நெஞ்சத்திலேயே தஞ்சம் கொண்டாள் அவன் மனைவி.

“ரஞ்சு…” அவள் தலை கோதியபடி அழைத்தான்.

“ம்ம்…”

“நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்…”

“ம்ம்…”

“நமக்கு கல்யாணமாகி என்னவோ கொஞ்சநாள் தான் ஆச்சு… ஆனாலும் கொஞ்ச நேரம் உன்னை விட்டு விலகி இருந்தாலும் ரொம்ப நாள் பிரிஞ்சிருக்கிற பீல் வருது, இந்த நாள்ல நீ என் மனசுக்குள்ள ரொம்ப ஆழமாப் பதிஞ்சுட்ட ரஞ்சுமா, அதை நினைக்கும்போது ஆச்சர்யமா இருக்கு… இதுக்குப் பேர்தான் காதலோ…?” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தோளில் சாய்ந்திருந்தாலும் அவள் செய்கை ‘ஆம்’ என்றது. இருந்தாலும் அவள் வாயால் கேட்கும் ஆவல் அவனுள் எழுந்தது.

“ரஞ்சு…”

“ம்ம்…”

“உனக்கும் என் மேல லவ் வந்திருச்சா…?” அவன் கேட்க அவனது கைகளை எடுத்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டாள் ரஞ்சனா.

“என்ன மா, ஏதும் சொல்ல மாட்டீங்கற…?”

“அபத்தமா கேள்வி கேட்டா பதில் சொல்ல விருப்பமில்ல…”

“ப்ச்… எனக்கும் உன் மனசுல உள்ளதைத் தெரிஞ்சுக்க ஆசையா இருக்காதா…?” அவன் முகத்தை சுளித்து செல்லமாய் கோபித்துக் கொள்ள அவள் புன்னகைத்தாள்.

“டேய் புருஷா, லவ் யூ டா…” காதில் கிசுகிசுத்தாள்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. என்னதான் தாலி கட்டிய மனைவி என்றாலும் அவள் மனதுக்குள் தான் நுழைந்து விட்டோம், அவளும் தன்னை நேசிக்கிறாள் என்பதை அறிய இறக்கையின்றி பறப்பது போலிருந்தது.

“வாவ் ரஞ்சு, உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கா…?” குரலில் துள்ளலோடு கேட்டவனை நேருக்கு நேர் நோக்கியவளின் விழிகள் காதலை சுமந்திருந்தது.

“பிரபா, உங்களைப் போல அன்பான, அனுசரணையான புருஷன் கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கியா பீல் பண்ணறேன், உங்களை எந்தப் பெண்ணுக்கு தான் பிடிக்காது…” என்றதும் அவளை சந்தோஷத்தில் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் பிரபஞ்சன்.

அவனைக் கஷ்டப்பட்டு விலக்கியவள், “ஆ..! வலிக்குது பிரபா, எல்லாத்துலயும் சாப்டா இருக்கிற நீங்க காதல்ல மட்டும் தீவிரவாதி போல நடந்துக்கறிங்க…” என சிரித்தான்.

“பொண்ணுங்களுக்கு கட்டில் மேல அஹிம்சைவாதியா இருக்கிறதை விட தீவிரவாதியா இருக்கிறது தான் பிடிக்குமாமே…” அவளைக் குறுகுறுவென்று பார்த்தவன் காதில் கிசுகிசுப்பாய் கேட்டான்.

“ச்சீ… இதெல்லாம் யாரு சொன்னா…” என்றவள் நாணத்துடன் எழுந்து அறைக்கு ஓட பின்னிலேயே வந்தான் கணவனும். அங்கிருந்த மல்லிகைப் பூவை எடுத்து நீட்ட திரும்பியவள் தலையில் அவனே வைத்துவிட்டான்.

முதல் நாள் தவிப்பும், ஆவலுமாய் தொடங்கிய தாம்பத்தியம் இன்று நிதானமாய், ரசனையோடு கழிய இருவர் மனதிலும் திருப்தியும், சந்தோஷமும் நிறைந்திருந்தது.

அடுத்த நாளும் இனிமையாய்க் கழிய பிரபஞ்சனும் அலுவலகம் செல்லத் தொடங்கிவிட்டான். காலையில் மனைவிக்காய் நேரமே கிளம்புபவன் அவளைப் பேருந்து நிலையத்தில் விட்டு தனது வங்கிக்கு செல்வான்.

மாலை அவளுக்கு முன்னே வீடு திரும்பி சின்னச் சின்ன வேலைகளை செய்து அவளுக்காய் காத்திருப்பான். நேசம் சுமந்த அழகிய காதல் பறவைகளாய் இனிமையோடு அவர்களின் குடும்ப வாழ்க்கை நகரத் தொடங்கியது. அன்று டியூட்டியில் இருக்கும்போது அன்னையின் அழைப்பு வர யோசனையுடன் எடுத்தாள் ரஞ்சனா.

“சொல்லுங்க மா, எப்பவும் நைட் தானே கால் பண்ணுவிங்க… எதுவும் எமர்ஜன்சியா…?” என்றால் சிறு பதட்டத்துடன்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா ரஞ்சு, நைட்டு பேசும்போது மாப்பிள்ளயும் வீட்டுல இருப்பார், உன்னோட தனியாப் பேசவே முடியுறதில்லை… அதான், இப்ப கூப்பிட்டேன்…”

“ம்ம்… என்னமா, ஏதாச்சும் கேக்கணுமா…?”

“அது..வந்து, ரஞ்சுமா… நீ மாப்பிள்ளையை மனசார ஏத்துகிட்டு சந்தோஷமா இருக்க தானே…?”

“அம்மா எப்பவும் இதே கேள்வி தானா…?” சிணுங்கியவள்,

“சரி, நாங்க ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கோம்… உன் மாப்பிள்ளை மேல நான் உசுரையே வச்சிருக்கேன், இப்ப உனக்கு நிம்மதியா…?” சந்தோஷமாய் ஒலித்த அவள் குரலே அது உண்மை என்பதைச் சொல்ல துர்காவுக்கும் சந்தோஷமாய் இருந்தது.

“ரொம்ப சந்தோஷம்டா, இதை விட அம்மாவுக்கு வேறென்ன வேணும் சொல்லு… உனக்கு அங்கே வேலை எல்லாம் எப்படிப் போகுது, புது இடம் பரவால்லியா…?”

“எல்லாமே பழகிக்கறது தானே… இங்க எந்தப் பிரச்சனையும் இல்லை… அப்பா, சஞ்சு நல்லாருக்காங்க தானே, கடைல எதுவும் பிரச்சனை இல்லியே…?” பொதுவாய் விசாரிக்க துர்காவும் பதில் சொல்லிவிட்டு போனை வைத்தார்.

“முருகா…! நான் வேண்டினபடி உனக்குப் பால் அபிஷேகம் பண்ணறேன்…” என கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டார்.

மாலை ரஞ்சனா வீடு திரும்பும்போது பிரபஞ்சன் அலுவல் முடிந்து வந்திருக்கவில்லை… அவளே குளித்து இரவு உணவுக்கான வேலையைத் தொடங்க மனம் இன்னும் கணவனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்தது.

“எட்டு மணியாச்சு, யாரையோ பார்க்கப் போறேன்னு சொன்னவர் இன்னும் காணமே…” தக்காளி சாதம் குக்கரில் வைத்துவிட்டு மொபைலை எடுத்தாள். நான்கைந்து ரிங் போனதும் பிரபஞ்சனின் குரல் கேட்டது.

“ஹலோ ரஞ்சுமா, பத்து நிமிஷத்துல வந்திருவேன்…”

“ம்ம்… சரி பிரபா…” என்றவள் அவனுக்காய் காத்திருக்க பனிரெண்டாம் நிமிடம் மின் தூக்கியில் இருந்து வந்தவனை, வெளியே காத்திருந்தவள் புன்னகையுடன் எதிர்கொண்டாள்.

“என்னங்க, இவ்ளோ நேரம்… யாரைப் பார்க்கப் போனீங்க…?” என்றபடி உள்ளே செல்ல அலுப்பாய் அமர்ந்தான் பிரபஞ்சன்.

ரஞ்சனா, மின்விசிறியின் சுவிட்சைப் போட்டு தண்ணியைக் கொண்டு வந்து கொடுக்க கடகடவென்று குடித்தான்.

“டயர்டா இருக்கீங்களே, காபி தரட்டுமா…?”

“ப்ச்… வேண்டாம் மா…” சொன்னவன் எழுந்து உடை மாற்றச் செல்ல அவளுக்கு யோசனையாய் இருந்தது. குளித்து டிரவுசர், டீஷர்ட்டுடன் வெளியே வந்தவன் சற்று தெளிந்திருக்க மனைவியை நோக்கி புன்னகைத்தான்.

“பசிக்குது ரஞ்சுமா, சாப்பிடலாமா…?”

“ம்ம்…” என்றவள் வேறு எதுவும் கேட்காமல் சாப்பிட எடுத்து வைக்க இருவரும் தக்காளி சாதமும், தொட்டுக்கொள்ள செய்த அரிசி வடகத்தையும் சாப்பிட்டு முடித்தனர். அதிகம் பேசாமல் யோசனையுடனே அவன் சாப்பிட்டு முடிக்க அவள் அடுக்களையில் எல்லா வேலையும் முடித்து அவனிடம் வந்து அமர்ந்தாள்.

“பிரபா…”

“ம்ம்… சொல்லுமா…”

“என்ன, ஏதோ தீவிரமா யோசிச்சுட்டு இருக்கீங்க…?”

“அது…” சற்று தயங்கியவன், “அம்மா கால் பண்ணாங்க, வைஷூ கல்யாண செலவுக்கு பணம் கொஞ்சம் பத்தலை, ஆர்டர் பண்ணின நகையை வாங்கும்போது நினைச்சதை விட தொகை அதிகமா செலவாகிடுச்சு… மண்டபம், சாப்பாடு, வண்டிக்கு எல்லாம் அட்வான்ஸ் தான் கொடுத்திருக்கோம்… மீதித் தொகை பத்தாத போல இருக்கு, இன்னும் ஒரு லட்சமாச்சும் வேணும்னு சொன்னாங்க… கல்யாணத்துக்குப் போகும்போது நாம பணத்தோட போகணும்… இன்னும் நாலஞ்சு நாள்ல நாம ஊருக்குக் கிளம்பணும், அதான் யாருகிட்டயாச்சும் முன்னாடியே சொல்லி வைக்க நினைச்சேன்… ஆல்ரெடி கல்யாணத்துக்காக ஆபீஸ்லயும், ஒரு பைனான்ஸ்லயும் லோன் போட்டிருக்கேன்… இப்ப மறுபடி கேக்க முடியாது, அதான் அபீஷியலா தெரிஞ்ச ஒருத்தர் வட்டிக்குப் பணம் கொடுத்திட்டு இருக்கார், அவர்ட்ட கேக்கலாம்னு போனேன்…” என்றான் பிரபஞ்சன்.

“என்ன பிரபா, என்கிட்ட ஒரு வார்த்தை இதைப் பத்தி கேக்கணும்னு தோணலியா உங்களுக்கு, பணத்துக்காக நீங்க எங்கயும் அலைய வேண்டாம்… அதும் வட்டிக்கு வாங்குறதெல்லாம் வேண்டவே வேண்டாம், என் நகையை அடமானம் வச்சு வேண்டியதை வாங்கிக்கலாம்… அப்புறம் கொஞ்ச கொஞ்சமா பணம் கட்டி மீட்டுக்கலாம்…”

“சேச்சே, அதெல்லாம் வேண்டாம் ரஞ்சுமா… கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள நகையை வைக்கிறது எல்லாம் சரியாகாது… உன் வீட்டுல என்ன நினைப்பாங்க…?”

“என் வீட்டுல நான் சொன்னாத்தானே நினைப்பாங்க, நான்தான் சொல்ல மாட்டனே…”

“இல்லமா, வேண்டாம்… அது சரியா வராது…” தயங்கினான்.

“என்ன பிரபா, இப்பவும் என்னை நீங்க யாரோவாத்தான் பார்க்கறீங்களா…? உங்களுக்கு ஒரு பிரச்சனை, தேவைன்னா அது என்னோடதும் கூட இல்லையா…? நானும், நீங்களும் வேற வேறயா…?” அவள் வருத்தமாய் கேட்க பிரபஞ்சன் நெகிழ்ந்து போய் அவளைக் கட்டிக் கொண்டான்.

“ரஞ்சு… அப்படில்லாம் பேச்சுக்கு கூட பிரிச்சு சொல்லாத…”

“அப்ப, நான் சொன்னதுக்கு சரின்னு ஒத்துக்கோங்க…”

“ம்ம்… சரி…” என்றான் அரை மனதுடன். “பத்தல…” அவள் சொல்ல புரியாமல் பார்த்தான்.

“சவுண்டு பத்தலன்னு சொன்னேன்…” புன்னகைத்தவன் அவளது இதழ் நோக்கிக் காதலுடன் நெருங்க, ஆவலுடன் கண்களை மூடிக் கொண்டாள் அவன் மனைவி.

நீ எனைப் பாராத

கணமும் எனை ஈர்க்கிறது…

விழியோடு விழி

மோதும் போதோ

உனக்குள் நான்

விழுந்திடுவேனோ

என மனம் வேர்க்கிறது…

Advertisement