Advertisement

 அத்தியாயம் – 7

மொபைலில் அலாரத்தின் சத்தத்தில் கண்ணைச் சுருக்கிய ரஞ்சனா உறக்கம் போதவில்லை என்று கெஞ்சிய இமைகளை கஷ்டப்பட்டுப் பிரித்தாள். கணவனின் அணைப்புக்குள் இருந்தவளுக்கு முந்தைய இரவு நடந்தது நினைவில் வந்து முகத்தை செம்மையாக்கியது.

பிரபஞ்சனின் இதழ்கள் உறக்கத்திலும் புன்னகையை சுமந்திருக்க நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தைக் காதலுடன் நோக்கினாள் அவன் மனைவி. அவள் அவனிடமிருந்து விடுபட முயல, மீண்டும் இழுத்து நெஞ்சில் சேர்த்து இறுக்கிக் கொண்டான்.

“டேய் புருஷா, குட் மார்னிங்…” அவனது காதில் கிசுகிசுப்பாய் சொல்ல புன்னகையுடன் கண்ணைத் திறந்தவன், “குட் மார்னிங் ரஞ்சுமா…” என்றபடி அவள் நெஞ்சில் முகம் புதைக்க அவஸ்தையில் தவித்துப் போனாள் அவள்.

“ப்ச்… என்னை விடுங்க, டைம் ஆச்சு…! இன்னைக்கு டியூட்டிக்குப் போகணும்ல…” அவள் சிணுங்கியது கவிதை போல் அவன் காதில் கேட்க புன்னகைத்தான்.

“கண்டிப்பா போகணுமா…?”

“ம்ம்…”

“அப்ப எனக்கு ஒரு கிஸ் குடு, விட்டுடறேன்…” என்றான் அவள் நெஞ்சில் படுத்தபடியே.

“ச்சீ… டர்ட்டி கிஸ்ஸா, நான் மாட்டேன்…”

“அப்ப நான் விட மாட்டேன்…” அவன் பிடிவாதம் பிடிக்க செல்லமாய் கணவனின் முதுகில் அடித்தாள் ரஞ்சனா.

“ப்ச்… படுத்துறடா புருஷா…”

“படுத்தினா தானே புருஷன்…” என்றான் சளைக்காமல்.

“பிரபா…” அவள் குரல் மெல்ல ஒலித்தது.

“ம்ம்…”

“நேத்து அப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல…”

“நாங்க மட்டும் பிளான் பண்ணியா பண்ணோம், நீதான் உசுப்பேத்தி என்னை ரணகளம் பண்ண வச்சுட்ட…”

“ச்சீ… நான் சொல்லலேனா எதுவுமே தெரியாது பாரு…”

“இப்பதான தொடங்கிருக்கோம், போகப் போகப் பாரு, இந்த பிரபஞ்சனோட ஆட்டத்தை…”

“சரி, இப்ப முதல்ல எழுந்திருங்க…”

“கன்னத்தில் முத்தம் ஒன்று தா தா…

நீரோட்டம் போல நெஞ்சில் வா வா…

நினைக்கும் பொழுதே இனிக்கும் கரும்பே…

சிரிக்கும் சிலையே வா…”

“தப்புத் தப்பா பாட்டு வேற, எழுந்திருங்க…”

“ப்ச்… நான் கேட்டதைக் கொடுக்காம விட மாட்டேன்…”

“சரி, எழுந்திருங்க தரேன்…” மெல்லிய குரலில் சொன்னவள் அவன் எழுந்து கன்னத்தைக் காட்டவும் பட்டென்று ஒரு அடி கொடுத்துவிட்டு இறங்கி குளியலறைக்குள் ஓடி விட்டாள்.

புன்னகையுடன் எழுந்தவன் கசங்கிக் கிடந்த கட்டில் விரியை  சரி செய்துவிட்டு ஜன்னல் அருகே வந்தான். மனமெங்கும் புது உற்சாகத்தில் நிறைந்திருக்க உதட்டில் புன்னகைச் சாயம் குதூகலமாய் ஒட்டிக் கொண்டிருந்தது.

சம்சாரம் என்பது வீணை,

சந்தோஷம் என்பது ராகம்…

சலனங்கள் அதில் இல்லை…

மணம் குணம் ஒன்றான முல்லை…

அவனுக்குப் பிடித்த பாடல் மனதுக்குள் விடாமல் ரீவைண்ட் மோடில் கேட்டுக் கொண்டே இருக்க வாழ்வின் அடுத்த கட்டமாய் தாம்பத்ய சங்கீதத்தை இசைக்கத் தொடங்கிய சந்தோஷத்தில் மனது கொண்டாட்டம் போட்டது.

கதவைத் திறந்து வெளியே சென்று பையில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்து வந்தவன் பாலைக் காய்ச்சி காபி தயாரிக்கத் தொடங்குகையில் குளியலறையில் இருந்து ரஞ்சனாவின் குரல் கேட்டது.

“பிரபா, டவல் மறந்துட்டேன்… எடுத்துக் குடுங்களேன்…” எனவும், சிரித்தான்.

“தினமும் டவல் மறக்கறதே என் பொண்டாட்டிக்கு வழக்கமாப் போயிருச்சு…” நினைத்தபடி வந்தவன் டவலுடன் கதவைத் தட்ட கையை மட்டும் வெளியே நீட்டினாள். டவலைக் கொடுத்துவிட்டு காபி கலந்து வைக்கையில் தலையில் சுற்றிய டவலுடன் வெளியே வந்தாள் ரஞ்சனா.

சாமிக்கு விளக்கு வைத்து பிரார்த்தித்தவள் மனதிலும் ஒரு நிறைவு இருந்தது.

“பிரபாதான் என் வாழ்க்கை, இதுவே என் குடும்பம்… இனி என் செயல்களும், விருப்பங்களும் என் கணவனைச் சுற்றி மட்டுமே இருக்க வேண்டும்… இதில் எந்த வேண்டாத சலனங்களுக்கும் இடம் கொடுக்காமல் என்னை வழிநடத்து ஆண்டவா…” கண் மூடி தீவிரமாய் வேண்டிக் கொண்டவள் முன்பு புன்னகையுடன் நின்று பார்த்திருந்தான் பிரபஞ்சன்.

“வேண்டுதல் பலமாருக்கு, என்ன வேண்டிகிட்ட…?”

“ஹூம், அதெல்லாம் சொல்ல முடியாது…” என்றவள் அவன் கையிலிருந்த காபிக் கோப்பையை வாங்கி உதட்டில் வைத்தாள். அதன் சுவையை கண்ணை மூடி ரசித்தபடி உதட்டைச் சுழித்துக் கொண்டு குடித்தாள்.

“பிரபா, உண்மைலயே உங்க காபி ரொம்ப நல்லாருக்கு…” பாராட்டிவிட்டு சமையலைத் தொடங்கினாள்.

பிரபஞ்சன் குளிக்க செல்ல சிறிது நேரத்தில் அவனுடன் பணி புரியும் நண்பர் பைக்கை வீட்டில் கொண்டு வந்து கொடுத்தார். சமையலை முடித்து சாப்பிட்டு கிளம்பியவளை பைக்கிலேயே ஹாஸ்பிடலில் விட்டவன், மாலை வந்து அழைத்துச் செல்வதாய் கூற அவள் மறுத்து விட்டாள்.

“வேண்டாம் பிரபா, ஈவனிங் மெதுவா நான் பஸ்ல வந்துக்கறேன்… நீங்க பஸ் ஸ்டாப்புக்கு வந்தாப் போதும்…”

“சரி, இன்னிக்கு முதல் நாள், ஆல் தி பெஸ்ட் ரஞ்சு மா…” வாழ்த்தியவனின் புன்னகை அவள் உதட்டிலும் ஒட்டிக் கொள்ள விடைபெற்று உள்ளே சென்றாள்.

ரெஜிஸ்டரில் ஒப்பிட்டவளை அங்கே இருந்த ஹெட் நர்ஸ் டியூட்டியில் இருந்த டாக்டரிடம் அழைத்துச் செல்ல அந்தப் பெண் டாக்டரிடம் அறிமுகம் முடித்து வந்தவளை சக பணியாளர்களுக்கும் அறிமுகப்படுத்த புன்னகையுடன் அன்றைய பணிகளைத் தொடங்கினாள்.

வீட்டுக்கு வந்த பிரபஞ்சனுக்கு தனிமை ஒரு மாதிரி சுகத்தையும், தவிப்பையும் ஒன்றாய் கொடுத்தது. இத்தனை நாட்களாய் ரஞ்சனாவுடனே இருந்தது அவள் இல்லாமல் இன்று அவளை மிஸ் செய்வது போல் இருந்தது.

தன்னை நினைத்து அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

கல்யாணமாகி இந்தப் பத்து நாட்களில் அவளை மனது எத்தனை நெருக்கமாய் உணர ஆரம்பித்திருக்கிறது என்று வியப்பாய் இருந்தது. அவளது அலட்டலில்லாத அழகும், குடும்பத்தின் மீதும், பெரியவர்களிடமும் காட்டும் அக்கறையும், அவ்வப்போது அவன் கேள்விக்கு கொடுக்கும் பதிலடியும் எல்லாமும் மிகப் பிடித்திருந்தது.

முக்கியமாய் அவன் காதுக்குள் ஹஸ்கி வாய்ஸில் முன்னிரவு அவள் சொன்ன, “டேய் புருஷா, வலிக்குது…” என்ற வார்த்தைகள் காதுக்குள் ஒலித்து உடலெங்கும் ரத்த ஓட்டத்தைக் கூட்ட உடனே அவளைக் காணத் தோன்றியது.

புன்னகையுடன் கட்டிலில் சிறிது நேரம் படுத்திருந்தான். அங்கும் அவள் வாசம் மிச்சம் இருப்பது போல் தோன்ற தவிப்புடன் எழுந்தவன் மனைவிக்கு போன் செய்தான்.

“ஹலோ, சொல்லுங்க பிரபா…” அவள் குரலைக் கேட்டதும் தவிப்பு மெல்ல அடங்குவது போல் தோன்ற, “ஒண்ணுமில்ல மா… வீட்ல நீ இல்லாம ரொம்ப மிஸ் பண்ணறேன், சீக்கிரம் வா…” என்று வைத்துவிட வேலைகளுக்கு நடுவில் அவன் அழைப்பை எடுத்தவள் முகம் தாமரையாய் மலர்ந்தது.

சும்மா இருக்கப் பிடிக்காமல் எழுந்தவன் அழுக்குத் துணியை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு வீட்டைப் பெருக்கித் துடைத்தான். சிங்கில் கிடந்த பாத்திரங்களைத் துலக்கி வைத்துவிட்டு வெளியே கிளம்பினான்.

அவனைக் கண்ட சரிதா, “என்ன பிரபா சார், ரஞ்சனா டியூட்டிக்குப் போயிட்ட போல இருக்கு…” விசாரித்தாள்.

“ஆமாக்கா, இன்னைக்கு ஜாயின் பண்ணிட்டா…”

“உங்களுக்கு இன்னும் எவ்ளோ நாள் லீவு…”

“நாளான்னிக்கு ஜாயின் பண்ணனும் அக்கா, சார் இல்லியா…?”

“அவர் பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்கார், வர ரெண்டு நாளாகும்… சரி, எங்கயோ கிளம்பினவரை  நான் நிறுத்தி வச்சுப் பேசிட்டு இருக்கேன், போயிட்டு வாங்க…” என அவன் விடைபெற்று மின் தூக்கிக்குள் நுழைந்தான்.

கீழே வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் அடுத்த நாளுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் வாங்கிக் கொண்டான். மல்லிகைப் பூவைக் கண்டவன் மனது ஆசையில் கணக்குப் போட இரண்டு முழம் வாங்கி வாழை இலையில் சுற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்தான். மதியம் உணவு முடிந்து படுத்தவன் உறங்கி விட்டான். ரஞ்சனாவுக்கு ஆறு மணி வரை டியூட்டி என்பதால் வீட்டுக்கு வர ஏழு மணிக்கு மேல் ஆகும் என்று கணக்குப் போட்டவன் அவனே தேங்காய் சிரவி ஒரு சட்னியை அரைத்து வைத்தான். இருவருக்கும் காபி கலக்கி பிளாஸ்கில் ஊற்றி வைக்கும்போது ரஞ்சனாவின் போன் வந்தது.

“பிரபா, நமக்கு முந்தின ஸ்டாப் வந்துட்டேன்…” விவரம் சொல்லவும் பைக்குடன் பஸ் ஸ்டாப்புக்கு கிளம்பினான்.

வீட்டுக்குள் வந்தவளுக்கு பசித்தது. சூடாய் காபி குடித்தால் தேவலாமெனத் தோன்றியது. கணவனுக்கு வேலை சொல்லி கஷ்டப்படுத்த விரும்பாமல் குளியலறைக்குள் நுழைந்தவள் திரும்ப வரும்போது பிரபா தோசை ஊற்றிக் கொண்டிருக்க அவள் விழிகள் வியப்பில் விரிந்தது.

“பிரபா, நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணறீங்க…?”

“ஏன்..? இதெல்லாம் ஆம்பளைங்க செய்யக் கூடாதுன்னு யாராச்சும் சட்டம் போட்டிருக்காங்களா என்ன…? காலைல அவசரமா சாப்பிட்டு, மதியம் கொண்டு போன இத்தனூண்டு சாப்பாடும் சாப்பிட்ட உனக்குப் பசிக்கும் தானே, அதான் நானே தோசை ஊத்திட்டேன், குண்டு தோசை தான்… மெல்லிசா எல்லாம் எனக்கு வராது, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க,  ரஞ்சு மா…” சொன்னவன் தட்டில் தோசையுடன் சட்னியை வைத்துக் கொடுக்க அவளுக்கு சந்தோஷத்தில் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது.

நினைவுகளின் கனங்களில்

மனங்கள் துவளும்போது

தாய் மடி தேடுகிறது…

கவலைகளைத் துடைக்கும்

மாயங்கள் கொண்டது

தாயின் கரங்கள் மட்டுமல்ல…

தாயின் பரிவைக் காட்டும்

கணவனின் மடியும் தாய் மடியே…

அவன் நீட்டிய தட்டை வாங்காமல் அவனைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட புன்னகைத்தான் பிரபஞ்சன்.

“ஆஹா, இதுக்காக தினம் நானே தோசை செய்யலாம் போலருக்கே…” எனவும் சிணுங்கியவள் விலகினாள்.

அடுக்களைத் திண்டில் அமர்ந்து கொண்டவளின் கையில் பிளேட்டைக் கொடுக்க தோசையைப் பிய்த்து சட்னியில் தொட்டு அவன் வாயில் வைக்க மறுக்காமல் புன்னகையுடன் வாங்கிக் கொண்டான் பிரபஞ்சன். உண்மையில் அவனுக்கும் பசிக்கத் தொடங்கியிருந்தது. லேசாய் காரம் தூக்கலாக உப்பு கம்மியாய் இருந்த சட்னியை சாப்பிட்டவன் பதறினான்.

“ரஞ்சு.. சட்னில காரம் அதிகமா, உப்பு கம்மியா இருக்கு மா…”

“ஓ…!” என்றவள் சிறிது உப்பைப் போட்டு கலக்க சரியாகிவிட்டது. அதற்குள் அடுத்த தோசையை அவன் தட்டில் வைக்க அவனுக்கும் தனக்குமாய் ஊட்டிக் கொண்டாள் ரஞ்சு. தோசை முடித்து காபியைக் குடித்ததும் வயிறோடு மனமும் நிறைந்தது.

Advertisement