Advertisement

“ஹாஹா… கிரேஸி கேர்ள், இரு…! புக் தரேன்…” என்றவன் ஷெல்பில் இருந்த புக் ஒன்றை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவளிடம், “இப்ப உனக்கு என் மேல உள்ள கோபம் போயிடுச்சா…?” என்றான் பிரபஞ்சன்.

“வேற வழி…? எனக்கு உங்களைப் பிடிச்சு என்ன பண்ண…? உங்களுக்கு என்னைப் பிடிக்கலியே, அதுக்காக உங்க லைப்ல வில்லியா வந்து ரெண்டு பேரையும் பிரிச்சு, உங்களைக் கல்யாணம் பண்ணி ரெண்டாவது பொண்டாட்டியா வரதுக்கு எல்லாம் எனக்கு ஐடியா இல்ல… எனக்கு விதிச்சது இவ்ளோ தான்னு மனசைத் தேத்திக்கிறதைத் தவிர வழியில்லை…”

“ம்ம்… குட் கேர்ள், இப்பதான் தியா தெளிவாப் பேசறா…”

“ம்ம்… இந்த ஏமாற்றத்தை ஏத்துக்க என் மனசுக்கு கொஞ்ச நாள் ஆகலாம்… பரவால்ல, பழகிப்பேன்… நீங்க சந்தோஷமா உங்க வாழ்க்கையைக் கண்டின்யூ பண்ணுங்க…!”

“ஹேய்…! நீயும் எனக்கு என் தங்கை போல தான்… இந்த வயசுல தடுமாற்றம் வர்றது சகஜம், ஆனா அதைப் புரிஞ்சு கடந்து வர்றது தான் புத்திசாலித்தனம்… நீ புத்திசாலி…!”

“ஓகே..! நான் கிளம்பறேன், பை…” என்றவள் சென்றுவிட்டாள்.

சில நிமிடங்கள் அவளை யோசித்தபடி அமர்ந்திருந்தவன் புன்னகையுடன் எழுந்து மனைவியிடம் சென்றான்.

அவள் துணியை அப்படியே போட்டுவிட்டு கட்டிலில் படுத்திருக்க யோசனையுடன் அருகே சென்றான். கண் மூடிப் படுத்திருந்தவளின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க கண்ணைத் திறந்தவள் எழப் போக தடுத்தான்.

“ரஞ்சு, என்னாச்சுமா… டயர்டா இருக்கா…?”

“இ..இல்ல பிரபா, தல வலிக்குது…”

“ஓ… வீட்டுல தைலம் எதுவும் இல்லியே, நீ படு… நான் சரிதா அக்காகிட்ட வாங்கிட்டு வரேன்…” சொன்னவன் வெளியே சென்ற சில நிமிடங்களில் தைலத்துடன் வந்தான்.

மனைவியின் அருகே அமர்ந்தவன் சிறிது தைலத்தை எடுத்து அவளது நெற்றியில் பூசிவிட கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ அவனது மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். தாயைத் தேடும் சேய் போல் அவன் அருகாமையை விரும்பியவளைத் திகைப்புடன் நோக்கியவன் அவளது நெற்றியில் வருடிக் கொடுக்க அமைதியாய் கண்ணை மூடிக் கொண்டவள் சிறிது நேரத்தில் உறங்கிப் போயிருந்தாள்.

ஒரு மணி நேரம் உறங்கியவள் எழுந்து பார்க்க அடுக்க வேண்டிய துணிகளைக் காணவில்லை. அலமாரியைத் திறந்து பார்க்க எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. அதைக் கண்டதும் கணவனின் கைங்கர்யம் என்பது புரிய இதழில் புன்னகையோடு அடுக்களையில் கிரைண்டர் ஓடும் சத்தம் கேட்டு அங்கே சென்றாள்.

புது கிரைண்டரில் கொள்ளு அரைத்த பின்னரே உளுந்து போட வேண்டுமென்று அன்னை மனைவியிடம் போனில் சொன்னதைக் கேட்டிருந்தவன் அதே போல் செய்தான். ஆனால் கொள்ளை இரு முறையாகப் போடாமல் ஒன்றாய் அரைத்தால் இப்படிப் பஞ்சுப் பொதி போல் பொங்கி வெளியே தெறிக்கும் என்று பாவம் அவனுக்குத் தெரியவில்லை.

“பிரபா, என்ன பண்ணறீங்க…?” என்றவள் கிரைண்டரின் சுவிட்சை ஆப் செய்தபடி கேட்க முழித்தான்.

“நீ தூங்கறியே, நானே மாவரைக்கப் போடலாம்னு அந்த கொள்ளைப் போட்டேன்… அது இப்படித் தெறிக்குது…” அவன் பரிதாபமாய் சொன்னதைக் கேட்டு பாவம் தோன்ற புன்னகைத்தாள் அவன் மனைவி.

“அதை ரெண்டு முறையாப் போட்டிருக்கணும், ஒண்ணாப் போட்டா பொங்கி வரும்ல…” என்றவள், “நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்ல, “இல்லமா, என்ன பண்ணனும்னு சொன்னா நானே பண்ணறேன்…” என்றான்.

“இல்லங்க, நான் பார்த்துக்கறேன்… நீங்க போங்க…” என்றவள் கிரைண்டரில் இருந்து பாதி மாவை எடுத்துவிட்டு ஓட விட்டாள். கீழேயும், சுவரிலுமாய் தெறித்திருந்ததைத் துடைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. கணவனை நினைத்து பாவமாய் இருந்தாலும் சிரிப்பும் வந்தது.

கொள்ளு அரைந்து உளுந்தை அரைக்கும் நேரத்தில் சப்பாத்திக்கு பிசைந்து வைத்து குருமாவுக்கும் காய்கறிகளை அரிந்து தயார் செய்தாள். உளுந்தை எடுத்து அரிசியைப் போட்டு விட்டு குருமாவைத் தயார் செய்தவள் சப்பாத்திக்கு தேய்க்கத் தொடங்க பிரபஞ்சன் மணத்தில் எட்டிப் பார்த்தான்.

“ரஞ்சு, நான் சப்பாத்தியை தோசைக் கல்லுல போட்டு எடுக்கட்டுமா…? ஈவனிங் டீ கூடக் குடிக்கல, பசிக்குது…” என்றவனைத் திகைப்புடன் பார்த்தவளுக்கு அப்போதுதான் தலைவலி என்று படுத்துவிட்டது நினைவு வந்தது.

“அச்சோ, ஏதேதோ யோசித்து மனதைக் குழப்பியதில் தலைவலி வந்து அவருக்கு டீ கூடக் கொடுக்காம விட்டுட்டமே…” என்று மனம் தவிக்க, “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிரபா, இதோ இப்ப ரெடி பண்ணிடறேன்…” என்றவள் சப்பாத்தியைத் தேய்த்து அப்படியே தோசைக் கல்லில் போட்டு எடுத்தாள். மாவும் அரைந்திருக்க கிரைண்டரை ஆப் செய்துவிட்டு கணவனை அழைத்தாள்.

“பிரபா, வாங்க சாப்பிடலாம்…”

“மாவு எடுக்கணுமே, அதுக்குள்ளே முடிச்சுட்டியா ரஞ்சு மா…” என்றபடி வந்தான் பிரபஞ்சன்.

“சாப்பிட்டு போய் எடுத்துக்கறேன்…” என்றவள் பிளேட்டில் சப்பாத்தியும், குருமாவும் வைத்துக் கொடுக்க ஆவலுடன் சாப்பிட்டான் பிரபஞ்சன்.

“ரொம்ப நல்லாருக்கு மா, நீயும் சாப்பிடு…” என, அவன் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து அவளுக்கு இரண்டு சப்பாத்தி மட்டும் எடுத்துக் கொள்ள ஐந்தாறு சப்பாத்தியை அவனது தட்டில் வைக்க முழுவதும் சாப்பிட்டான்.

“நீ என்ன அதையே வச்சிட்டு இருக்க, இன்னும் எடுத்துப் போட்டு நல்லா சாப்பிடு ரஞ்சுமா…” சொன்னவன் கை கழுவ எழுந்து செல்ல கணவனின் வயிறு நிறைந்த திருப்தியில் அவள் மனம் நிறைந்தது.

வேலையை முடித்து ஹாலுக்கு வந்து அமைதியாய் அமர்ந்தவளின் முகம் ஏதோ தெளிவில்லாதது போலவே தோன்ற பிரபஞ்சனுக்கு யோசனையாய் இருந்தது.

“ரஞ்சு ஏன் இப்படி இருக்கா…? வீட்டு நினைவு வந்திருச்சா, இல்ல எதையாச்சும் யோசிச்சு மனசைக் குழப்பிக்கிறாளா,  ஒருவேளை, தியா பேசியதைக் கேட்டிருப்பாளோ…?” பலதும் யோசித்து குழம்பியவன் அவள் அருகே சென்று அமர்ந்தான்.

“ரஞ்சு…”

“ம்ம்…”

“ஏன் ஒரு மாதிரி இருக்க…?”

“இ..இல்லயே, நான் நல்லாத்தான் இருக்கேன்…”

“இல்லையே, இவ்ளோநாள் நான் பார்த்த ரஞ்சுவோட முகம் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாதா… நீ எதையோ யோசிச்சு குழம்பிக்கற போலத் தோணுது…”

“அதெல்லாம் எதுவுமில்லை பிரபா…”

“உன் வார்த்தை அப்படி சொன்னாலும் முகம் ஏதோ இருக்குன்னு சொல்லுதே ரஞ்சு மா… அந்த தியா வந்திட்டுப் போன பிறகு தான் இப்படி இருக்க, அவ பேசினதைக் கேட்டு தப்பா நினைச்சுட்டியா…?” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் யோசனையுடன் பார்க்க அவனே தொடர்ந்தான்.

“அந்தப் பொண்ணுக்கு என் மேல ஒரு விருப்பம் இருந்துச்சு, எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை, வீட்டுல பார்க்கிற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு தெளிவா சொல்லிட்டேன்… சின்னப் பொண்ணு, இந்த வயசுல இப்படித் தோணுறது சகஜம் தானே, நான் சொன்னதும் புரிஞ்சுகிட்டா…” அவன் சொல்லிக் கொண்டிருக்க அவள் மனது சாடியது.

“பிரபா எவ்வளவு ஓப்பனா மனசுல உள்ளதை சொல்லிட்டார், நீயும் அதே போல அர்ஜூன் பத்தி உன் மனசுல உள்ளதை சொல்லிடலாம்ல…” ஒரு பக்கம் மனசாட்சி குரல் கொடுக்க, “அவர் ஈஸியா சொல்லிட்டார்… ஆனா நான் சொன்னாப் புரிஞ்சுப்பாரா…? ஒருவேளை என்னைத் தப்பா நினைச்சுட்டா…? அதை என்னால தாங்கிக்க முடியாதே…” தவிப்புடன் மனசாட்சிக்கு பதில் சொன்னாள் ரஞ்சனா.

“இந்த சமூகத்தில் ஆணுக்கான நியாயமும், பெண்ணுக்கான நியாயமும் வேறு வேறானது. ஒரு ஆணின் தவறை பெருந்தன்மையாய் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் உலகம், பெண் தவறே செய்யாவிட்டாலும் அந்த சூழலில் மாட்டிக் கொண்டாலே தவறாக சித்தரித்து விடும்… அவள் மனதால் கூட குற்றமற்றவளாய் இருக்க வேண்டுமென்று நினைக்கும். நியாயம் இருவருக்கும் ஒரே போல் இருந்தால் என் மனதை இவரிடம் திறக்கலாம்… ஆனால் இவர் எப்படி எடுத்துக் கொள்வார் எனத் தெரியாதே…” யோசித்தாள் ரஞ்சனா.

அவள் அமைதியாய் யோசித்திருப்பதைக் கண்டு பிரபா மேலும் தெளிவு படுத்தினான்.

“ரஞ்சு… தியாவும் எனக்கு வைஷூ போலத்தான், நீ எங்களை எதுவும் தப்பா நினைக்கலியே…” அவன் பரிதவிப்புடன் அவள் கை பற்றி சொல்ல புன்னகையுடன் அவனையே பார்த்தாள்.

“என்னமா, எதுவும் சொல்ல மாட்டிங்கற…”

“ஹூக்கும், நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டிங்க… அப்புறம் எதுக்கு உங்களைத் தப்பா நினைக்கணும்…?” என்றவள் எழுந்து கொள்ள அவன் புரியாமல் பார்த்தான்.

“ரஞ்சு, என்ன சொல்லற…? நான் எதுக்கு சரிப்பட்டு வரல…”

“கல்யாணமாகி இத்தன நாள் ஆகியும் என்னையே இன்னும் கவர் பண்ண முடியல, இதுல நீங்க எப்படி இந்த லவ்வுக்கு எல்லாம் செட் ஆவீங்க… ம்ஹூம், நீங்க சரிப்பட மாட்டீங்க…” குறும்பு கொப்பளிக்க கிண்டலாய் சொல்லிச் சென்றவளை பின்னில் சென்று எட்டிப் பிடித்தான் பிரபஞ்சன். சுவரோடு சாய்ந்து நின்றவளின் இருபுறமும் கைகளை ஊன்றி குறுகுறுவென்று அவள் முகத்தையே பார்த்தான்.

அவள் விழிகள் அவனுக்குள் எதையோ தேட, “என்ன சொன்ன…” என்றான் மெல்லிய குரலில்.

“நீங்க, அதுக்கு சரிப்.பட மாட்…டீங்க…” மெல்லிய குரலில் சொன்னவளின் வார்த்தையில் முன்பாதி காற்றில் கரைய, பின்னது அவன் இதழ்களுக்குள் கலந்தது. எதிர்பாராத முத்தத்தில் முதலில் திணறியவள் பின் அவனுக்குள் அடங்கிப் போக ஒரு நீண்ட யுத்தத்தின் அச்சாரம் அங்கு பதியப்பட்டது.

காதல் நோய் கண்டு

சவலையானேன்…

என்னவளே…

என் ஆகாரங்கள்

எல்லாம் உன்

அதரங்களில்

அடங்கிப் போனதால்…

Advertisement