Advertisement

அத்தியாயம் – 5

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்…

தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்…

இலை வடிவில் இதயம் இருக்கும்…

மலை வடிவில் அதுவும் கனக்கும்…

சிரித்து சிரித்து சிறையிலே

சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்…

ஹரிஹரனின் துள்ளலான குரலில் காதல் வழிந்து கொண்டிருக்க, இரவு நேரக் குளிர்ந்த காற்றைக் கிழித்தபடி சென்னைக்கான பாதையில் பாய்ந்து கொண்டிருந்தது அந்த சொகுசுப் பேருந்து.

பிரபஞ்சன், ரஞ்சனா இருவரும் அப்பர் பர்த்தில் கால் நீட்டியபடி அமர்ந்திருக்க, லாப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த பிரபஞ்சன் அந்த வேலையை முடித்து எடுத்து வைத்துவிட்டு ரஞ்சனாவைப் பார்த்தான். அவள் கண்மூடி பாட்டைக் கேட்டு புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

“லவ்லி சாங், ஹரிஹரன் வாய்ஸ் அருமையா இருக்குல…” அவன் குரலைக் கேட்டு கண்ணைத் திறந்தவள், அவன் சொன்னதை ஆமோதித்து தலை ஆட்டினாள்.

“சரி, எதுக்கு சிரிச்சிட்டிருந்த…”

“அது… சாங் லைன்ஸ் கேட்டு…”

“ம்ம்… ரஞ்சு, உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்… உண்மைய சொல்லுவியா…?” அவள் கேள்வியில் புரியாமல் பார்த்தவள்,

“என்ன கேக்கணும், கேளுங்க…” என்றாள்.

“அது…வந்து… நான் இப்படிக் கேக்கறேன்னு நீ தப்பா நினைச்சுக்க மாட்டியே…”

“முதல்ல என்னன்னு கேளுங்க, அப்பதானே தப்பா, சரியான்னு நான் நினைக்க முடியும்…”

“அது… முந்தாநாள், உன் வீட்டுல…”

அவன் தொடங்கியதுமே அந்த நினைவு வந்து மனதுக்குள் அமர அவள் முகம் சிவந்து போய் தவிப்பைக் கொடுத்தது.

“ப்ச்… சும்மா அதையே கேட்டுட்டு இருக்காதீங்க, பிரபா…”

“இல்லமா, முந்தாநாள் உன் வீட்டுல மாமாட்ட பேசிட்டு இருக்கும்போது வண்டி ஓட்டிப் பழகும்போது கல்லுல ஏத்தி கீழ விழுந்த பிறகு நீ வண்டியைத் தொடவே இல்லன்னு சொன்னார், அதான் நான் வேணும்னா பழக்கி விடவான்னு கேக்க வந்தேன்…” என்றான் அவன் நமட்டுச் சிரிப்புடன்.

“ஓ…! அதுவா, அப்புறம் பழகலாம்…”

“ம்ம்… நீ வேறென்ன நினைச்ச ரஞ்சுமா…” அவன் கேள்வியில் திணறியவள், “அது ஒ..ஒண்ணுமில்ல, எனக்குத் தூக்கம் வருது…” என்றவள் படுக்கத் தயாராக, அவளுக்கு இடம் விட்டு அவனது இடத்தில் அமர்ந்தான்.

“நீங்க தூங்கலியா…?”

“நீ தூங்கு, நான் அப்புறம் தூங்கறேன்…” என்றவன் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க அவளுக்குத் தலையணை இல்லாமல் படுக்க கஷ்டமாய் இருந்தது. சுரிதார் துப்பட்டாவை தற்காலிகப் போர்வையாக்கி கையைத் தலைக்கு மடித்துக் கொடுத்து மாறி, மாறிப் படுக்க முயன்றவளைக் கண்டவன் சட்டென்று அவள் தலையைத் தூக்கி தன் மடியில் வைக்க திகைத்துப் போனாள்.

“என் மடியில படுத்துக்கோ, ரஞ்சு…”

“இ..இல்ல பரவால்ல…” என எழப் போனவளின் தலையைப் பிடித்து மடியில் படுக்க வைத்தவன் அவள் காதருகே குனிந்து, “ரஞ்சுமா, நான் உன் புருஷன்… படுத்துக்கலாம் தப்பில்லை…” எனக் கிசுகிசுக்க உடல் கூசியது அவளுக்கு.

அமைதியாய் ஒருக்களித்து குறுகிப் படுத்திருந்தவளின் தலையில் கை வைத்து மெல்ல கோதிக் கொடுத்தான் அவள் கணவன். இதமான அந்தக் கோதலில் கண்ணை மெல்ல மூடிக் கொண்டவள் பேருந்தின் தாலாட்டிலும், ஜன்னல் வழியே தழுவிய காற்றிலும் உறங்கத் தொடங்கினாள்.

நல்ல உறக்கத்தில் இருந்தவள் சட்டென்று பேருந்து நின்று, பேச்சுக் குரல் கேட்கவும் உணர்ந்தாள். கண்ணைத் திறந்து பார்க்க பிரபஞ்சன் அமர்ந்தபடியே சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க வேகமாய் எழுந்து அமர்ந்தாள்.

அவளது அசைவில் உணர்ந்து கொண்டவன், “என்னமா, என்னாச்சு…” என்று கேட்க,

“ஒ..ஒண்ணுமில்ல, எனக்கு பாத்ரூம் போகணும் போலருக்கு…” என்றாள் தயங்கியபடி.

வெளியே பார்வையை விரட்ட ஒரு பெட்ரோல் பங்கு முன்னில் பேருந்து நின்றிருந்தது. டிரைவரும், சில பயணிகளும் அருகே இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்க, அவளை அழைத்துக் கொண்டு இறங்கினான்.

“பாத்ரூம் போறவங்க போயிட்டு வந்திடுங்க… இனி வண்டி எங்கயும் நிக்காது…” டிரைவர் சொல்ல பிரபஞ்சன் ரஞ்சனாவை அழைத்துக் கொண்டு பெட்ரோல் பங்கின் ஓரமாய் இருந்த கழிப்பறைக்கு அழைத்துச் சென்றான்.

அவள் பாத்ரூம் போய் வரும் வரை வெளியே காவலுக்கு நின்றவன் அவள் வந்ததும், “காபி எதுவும் குடிக்கறியா ரஞ்சு…” என்றான்.

“ம்ம்…” அவள் சம்மதிக்க, இருவருக்கும் இரண்டு காகிதக் கப்பில் காபியை வாங்கி வந்தான். இருவரும் குடித்து வண்டியில் ஏற சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பியது.

படுக்கத் தயாராகி ஸ்க்ரீனை இழுத்து கவர் செய்தவன்,

“ரஞ்சு, என் பாகைத் தலைக்கு வச்சு படுத்துக்க…” என அதே போல் படுத்துக் கொண்டாள் ரஞ்சனா. அவள் ஒருக்களித்து ஒரு பக்கமாய் திரும்பிப் படுத்தாலும் முதுகுக்குப் பின்னால் படுத்தபடி அவன் அவளையே பார்ப்பது போல் தோன்ற சட்டென்று அவனை நோக்கித் திரும்பிப் படுத்தாள்.

அவன் வழக்கம் போல் மல்லாந்து படுத்து ஒரு கையை முகத்துக்கு மேல் வைத்து மறுகையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்க, தன்னை நினைத்து நாணியவளுக்கு அன்று இருவரும் படுத்திருந்தது நினைவில் வர வெட்கம் வந்தது. அவனையே பார்த்தபடி அப்படியே படுத்திருக்க கிசுகிசுப்பாய் அந்தக் குரல் கேட்டது.

“தூங்குற புள்ளைய ரசிச்சா ஆயுள் குறையும்னு பாட்டி சொல்லுவாங்க, படுத்துத் தூங்கு ரஞ்சுமா…” என அவன் குரல் கேட்கவும் திகைத்துப் போனவள் சட்டென்று கண்ணை மூடிக் கொண்டு அவனை கவனிக்க அக்கள்ளனோ அசைவின்றி அப்படியே படுத்திருந்தான்.

அவள் மெல்ல கண்ணைத் திறந்து அவனைப் பார்க்க, அதே நேரத்தில் அவனும் கையை விலக்கி அவளை நோக்க, இருவரும் நாணத்துடன் சிரித்துக் கொண்டனர்.

“பெட் இல்லாம படுக்க கஷ்டமா இருந்தா, அன்னைக்கு மாதிரி என் நெஞ்சுல கூட தலை வச்சுப் படுத்துக்கலாம்… நான் எதுவும் சொல்ல மாட்டேன்…” என்று நெஞ்சைத்  தொட்டுக் காட்டினான் அவள் கணவன். அதில் சிவந்து போனவள் வேகமாய் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

புன்னகையுடன் அவள் முதுகையே பார்த்திருந்தவன் மெல்ல உறங்கத் தொடங்கினான். அதிகாலையில் இன்னும் முழுமையாய் உணராத சென்னைக்குள் பேருந்து நுழைந்தது.

எழுந்து அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்த பிரபஞ்சன் உறங்கும் மனைவியை எழுப்பினான்.

“ரஞ்சு, எழுந்திருமா…” அவன் குரலில் கண் விழித்தவள் எழுந்து அமர்ந்தாள். தலை முடியை ஒதுக்கி இறங்கத் தாயாராக சிறிது நேரத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து கிளம்பியது. தங்கள் லக்கேஜ்களுடன் நின்றவன் ஒரு டாக்ஸியை கை காட்டி அழைக்க அதில் கிளம்பினர். போக வேண்டிய இடத்தைச் சொல்ல வண்டி நகர்ந்தது.

ஒண்ணரை மணி நேரப் பயணத்தில் பிரபஞ்சன் வசித்த பிளாட்டை அடைய காரை செட்டில் செய்து அனுப்பிவிட்டு வந்தனர். விடிந்திருக்க, ஓரளவு வசதியோடு கூடிய அபார்ட்மெண்டில் பிளாட் ஐந்தாவது புளோரில் இருந்தது.

லிப்டில் உயர்ந்து ஐந்தாம் தளத்தில் இறங்கினர்.

அவர்கள் வரும் நேரத்தை ராதிகா முன்னமே அடுத்துள்ள பிளாட்டில் இருக்கும் சரிதாவிடம் சொல்லியிருக்க அவள் ஆரத்தி கலக்கித் தயாராய் வைத்திருந்தாள்.

“ஹலோ பிரபா சார்… வாம்மா, ஒரே நிமிஷம்…” என்றவள் வேகமாய் பிளாட்டைத் திறந்துவிட்டு ஆரத்தி சுத்தி உள்ளே அனுப்பினாள். முன்னமே சரிதாவிடம் சாவி கொடுத்திருக்க வீடு கிளீன் செய்திருந்ததால் நீட்டாக இருந்தது.

“ஹலோ சார் வந்தாச்சா…” எதிர் பிளாட் மாதவன் சத்தம் கேட்டு வாக்கிங் செல்லத் தயாராகி இருந்தவன், இவர்களைக் கண்டு அருகே வந்தான்.

“ரோகிணி, இங்க வாம்மா…” உள்ளே குரல் கொடுக்க அவன் மனைவி ரோகிணி வந்து எட்டிப் பார்த்து,

“அடடே பிரபா சார்… வந்தாச்சா, உக்காருங்க காபி எடுத்திட்டு வரேன்…” என்று அடுக்களைக்குள் மறைந்தாள். பிரபஞ்சனை அங்கே எல்லாருக்கும் பிடிக்கும் என்பது அவர்களின் பரிமாற்றத்தில் ரஞ்சனாவுக்குப் புரிந்தது. சிறிது நேரம் பொதுவான பேச்சிலும், அறிமுகத்திலும் கழிய காபியுடன் அருகே உள்ளவர்களைப் பரிச்சயமாகி இருந்தாள்.

வீட்டில் அதிக பொருட்கள் எதுவும் இல்லை. ஹாலில் ஒரு சின்ன சோபா, டீவி, படுக்கையறையில் கட்டில் இல்லாமல் ஒரு பெட், மின்விசிறி, அயர்ன் பாக்ஸ், ஒரு சுவரில் பதித்த பீரோவில் தெரியும் ஆளுயரக் கண்ணாடி, அடுக்களையில் ஸ்டவ், மிக்ஸி, சிறிது சமையல் பாத்திரங்கள், அவ்வளவே…

ரஞ்சனா வீட்டுக்குள் சென்று பார்க்க, “நீங்க தூங்கி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, டிபன் நம்ம வீட்டுல இருந்து கொண்டு வரேன்…” சொன்ன சரிதாவுக்கு உண்மையில் ஜெயப்பிரதா என்ற பெயர் தான் பொருத்தமாய் இருக்கும்… நாற்பது வயதில் நடிகை ஜெயப்பிரதாவின் தங்கை போல் அழகாய் இருந்தாள்.

அவர்களைத் தனிமையில் விட்டு மற்றவர்கள் விலக மனைவியிடம் சொன்னான் பிரபஞ்சன்.

“ரஞ்சு, நம்ம வீடு போல இங்கே எல்லா வசதியும் கிடையாது… நான் மட்டும் தனியா இருந்ததால அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமான பொருள் தான் இருக்கு, இனிதான் எல்லாம் வாங்கணும்…” என்றான்.

“ம்ம்… அப்பா நமக்கு வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ மத்த பொருட்கள் எல்லாம் வாங்கிக்க சொல்லி பணம் கொடுத்திருக்கார்…”

“ஓ… பாவம், ஆல்ரெடி அவர் நிறைய செலவு பண்ணிட்டார்… வரதட்சணையா ரெண்டு லட்சம் பணம் வேற எனக்கு கொடுத்திருக்கார்… இன்னும் எதுக்கு செலவு பண்ணறார், ரொம்ப கில்ட்டியா இருக்கு… அதைத் திரும்பக் கொடுத்திடு…” என்றவனை மனதுக்குள் மெச்சிக் கொண்டாள் ரஞ்சனா.

Advertisement