Advertisement

அத்தியாயம் – 4

“ரஞ்சு மா, உன் புகுந்த வீடு பிடிச்சிருக்கா…? மாமியார், நாத்தனார் எல்லாம் நல்லா அன்பாப் பழகுறாங்களா…?” அடுக்களையை ஒதுக்கிக் கொண்டே தனிமையில் மகளிடம் விசாரித்தார் துர்கா.

“ம்ம்…”

“ஹூம், நீங்க சென்னை கிளம்பும்போது உங்க கூட வந்து வீட்டுக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு வரணும்னு அப்பாக்கு ரொம்ப ஆசை, ஆனா அவர் உடல்நிலை இப்படி இருக்கும்போது ரொம்ப தூரம் யாத்திரை செய்யக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே… அதான் வர முடியாதேன்னு அவருக்கு ரொம்ப வருத்தம்…”

“பரவால்ல மா… அப்பா முதல்ல உடம்பு தேறி வரட்டும், அப்புறம் அதெல்லாம் வாங்கிக்கலாம்…”

“இல்ல மா… உன்கிட்ட ஒரு தொகையைக் கொடுக்க சொல்லிருக்கார், அங்கே உங்களுக்குத் தேவையான கட்டில் பீரோ, வீட்டு சாமான்னு எல்லாம் வாங்கிக்க சொன்னார்…”

“எதுக்குமா அதெல்லாம், ஆல்ரெடி அப்பா ஆப்பரேஷனுக்கும், கல்யாணத்துகுமா நிறைய செலவு பண்ணிட்டார்… இதெல்லாம் நான் சம்பாதிச்சு வாங்கிக்கறேன்…”

“நல்லாருக்குடி நியாயம்… அதுக்காக, நாங்க செய்ய வேண்டிய முறையும் இருக்குல்ல…”

“அம்மா, அப்பாவை இன்னும் ஒரு மாசமாச்சும் வீட்டுல ரெஸ்ட் எடுக்க வைங்க, நீங்க கடைக்குப் போயி பார்த்துக்கங்க… இப்ப லோன் வேற எடுத்திருக்கார், நான் மாசம் என் சம்பளத்துல ஒரு தொகையை அனுப்பறேன், அதை லோனுக்குக் கட்டிருங்க…”

“அதெல்லாம் வேண்டாம் ரஞ்சுமா, அம்மா பார்த்துக்குறேன்… நீ நல்லபடியா மாப்பிள மனசறிஞ்சு அவரைப் புரிஞ்சுகிட்டு  சந்தோஷமா வாழ்ந்தாப் போதும்… உன் சம்பளம் இனி உன் குடும்பத்துக்கானது, அதை நாங்க வாங்கினா சரியாருக்காது… எங்களுக்கு ஏதாவது பண்ணனும்னு நினைச்சா உன் புகுந்த வீட்டுல எல்லாரையும் அனுசரிச்சு நடந்து எங்க பொண்ணை நல்லா வளர்த்திருக்கோம்கிற பேரை வாங்கிக்கொடு…”

அவர்கள் பேசிக் கொண்டிருக்க சஞ்சனா வந்தாள்.

“அம்மா, அப்பா உங்க ரெண்டு பேரையும் கேட்டார்…”

“இதோ வரோம், மாப்பிள்ள என்ன பண்ணுறார்…?”

“அவரும் அப்பாகிட்ட உக்கார்ந்து பேசிட்டு இருக்கார் மா…”

“ஓ…! சரி வா ரஞ்சு…” என்றவர் மகளுடன் கணவனின் அறைக்கு செல்ல அங்கே நல்லசிவம் ஏதோ சொல்ல பிரபஞ்சன் சிரித்துக் கொண்டிருந்தான்.

“என்ன மாம்ஸ்…? ஏதாவது காமெடியா, சொன்னா நாங்களும் சிரிப்போம்ல…” சஞ்சனா கேட்க அவன் சிரித்தான்.

“அது வேறொண்ணும் இல்ல சஞ்சனா, உன் அக்கா வண்டி ஓட்டிப் பழகின கதையை மாமா சொல்லிட்டு இருந்தார்…” சொன்னவன் மனைவியை சிரிப்புடன் நோக்க மற்றவர்களும் அதைக் கேட்டு சிரிக்க ரஞ்சனா, “அப்பா, என்னப்பா…” எனக் கேட்டபடி முகத்தை சுருக்கினாள்.

“ஹாஹா, மாப்பிள்ள கிட்ட சும்மா உன்னைப் பத்தி சொல்லிட்டு இருந்தேன் ரஞ்சுமா…”

“ஏன் ரஞ்சு, அதான் வண்டி ஓட்டிப் பழகும்போது மாமா வழில கல்லு கிடக்குன்னு சொன்னார்ல, நீ ஏன் கல்லு மேல வண்டி ஏத்தின…?”

“அதுவா…? எனக்கு கல்லு மேல ஏத்தணும்னு வேண்டுதல், அதான் ஏத்தினேன்…” கடுப்புடன் கணவனிடம் சொன்னவள்,

“போங்கப்பா, உங்களுக்கு என்னைப் பத்தி சொல்ல வேற ஒண்ணுமே கிடைக்கலியா…?” என்றாள் சிணுங்கலுடன்.

“அட, கோச்சுக்காத மா… இதெல்லாம் எல்லார்க்கும் வண்டி பழகும்போது நடக்கறது தான…” அவர் மகளை சமாதானப் படுத்த, “ஹாஹா… இருந்தாலும் கல்லை நான் பார்த்துக்கறேன்னு சொல்லி வண்டியை கல்லு மேல ஏத்திட்டு யாரும் சாணி மேல விழுந்திருக்க மாட்டாங்க…” பிரபஞ்சன் கிண்டல் செய்து சிரிக்க ரஞ்சனா அவனை முறைத்தபடி, “ப்ச்… நான் ரூமுக்குப் போறேன்…” என கோவித்துக் கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.

“அச்சோ…! நாம விளையாட்டுக்குப் பேசினது அவளுக்கு கோபம் வந்திருச்சு போலருக்கு…” நல்லசிவம் வருத்தத்துடன் சொல்ல, “அதை சரி பண்ணிக்கலாம் மாமா, நீங்க இன்னும் இந்த மாதிரி ரஞ்சு செய்த வீர சாகசங்கள் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க…” என்றான் பிரபஞ்சன்.

“அதெல்லாம் சாவகாசமா அக்கா கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோங்க மாமா… அக்காக்கு யாரும் அவளைக் குத்தம் சொல்லுற போலவோ, கிண்டல் செய்தோ பேசினாப் பிடிக்காது… அனேகமா இன்னைக்கு உங்களுக்கு நல்லா டோஸ் விழப் போகுதுன்னு நினைக்கிறேன்…” சஞ்சனா சொல்ல துர்கா மகளை அதட்டினார்.

“சஞ்சு, மாமாகிட்ட இப்படியா பேசறது… நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதீங்க மாப்பிள்ள, ரஞ்சுவைப் பொறுத்த வரைக்கும் அவளை யாரும் தப்பு சொல்லிடக் கூடாதுன்னு எல்லா விஷயத்திலும் கவனமா இருப்பா… அதுனாலயே எந்தத் தப்பும் செய்ய மாட்டா, அப்படி ஏதாச்சும் தவறுதலா நடந்திட்டா அதுக்காக ரொம்ப பீல் பண்ணுவா… அவளை யாரும் கிண்டல் பண்ணினாலும் பிடிக்காது, அதான் கோவிச்சுட்டுப் போயிட்டா, டைம் 11 ஆச்சு…! நீங்களும் போயி படுங்க… நாளைக்கு மருதமலை போறதுக்கு எல்லாரும் நேரமா எழுந்துக்கணும்ல…” என்றார் துர்கா.

“ம்ம், சரி அத்தை…” என்ற பிரபஞ்சன் எழுந்து மாடிப் படி ஏற கணவனை நோக்கினார் துர்கா.

“மாப்பிள்ள நல்லாப் பழகுறார் இல்லங்க…”

“ம்ம்… ஆமாம் மா, ரஞ்சுவைப் பத்தி சொல்லும்போது ரொம்ப ஆர்வமா கேட்டார், அதான் சொல்லிட்டு இருந்தேன்…”

“ம்ம்… சரி தூங்குங்க, நாளைக்கு உங்களுக்குத் துணைக்கு நம்ம சசியை வர சொல்லிருக்கேன்… நானும், சஞ்சுவும் அவங்களோட மருதமலை போயிட்டு வந்துடறோங்க…”

“ம்ம்… சரிம்மா…” என்றவர் படுத்துக் கொண்டார். சசி அவர்களின் உறவுக்காரப் பையன்.

பிரபஞ்சன் மாடியில் ரஞ்சுவின் அறைக்கு செல்லும்போது அவள் குளியலறையில் இருந்தாள். அவளைப் பற்றிய யோசனையில் புன்னகையுடன் கட்டிலில் அமர்ந்தான். அவன் வீட்டுக் கட்டில், அறையைப் போல் இல்லாமல் இந்த அறை சின்னதாய் இருந்தாலும் அழகாய் இருந்தது.

உடை மாற்றி நைட்டியில் வெளியே வந்த ரஞ்சனா கோபமாய் இருக்கிறாளா என பிரபஞ்சன் அவள் முகத்தைப் பார்க்க இயல்பாகவே இருந்தாள்.

வந்தவள் தலையணை, போர்வையை எடுக்க, “ரஞ்சு, எதுக்கு அதெல்லாம் எடுக்கிற…?” என்றான் பிரபஞ்சன்.

“இந்த கட்டில் உங்க கட்டில் போல பெருசு இல்லை…”

“அதனால என்ன…?”

“ரெண்டு பேரும் ஒண்ணாப் படுத்தா சரியா வராது…”

“ஏன் சரியா வராது, இப்படி உக்கார்…” என்றான்.

அவள் உட்காராமல் யோசனையுடன் பார்க்க கையைப் பிடித்து அருகே அமர்த்தினான்.

“இங்க பார் ரஞ்சுமா… என்னைப் பொறுத்தவரைக்கும் புருஷன் பொண்டாட்டின்னா எந்த விஷயமா இருந்தாலும் ஒரே போல ஷேர் பண்ணிக்கணும், அது சந்தோஷமோ, துக்கமோ, மட்டும் இல்ல… இந்த கட்டிலா இருந்தாலும் சரி…”

“ப்ச்… அதுக்காக இதுல ஒருத்தரை ஒருத்தர் இடிச்சுட்டுப் படுக்க முடியுமா…?”

“ஏன் படுத்தா என்னவாம்…?” அவன் குறும்புடன் கேட்க சட்டென்று அவனைப் பார்த்தவள் வேகமாய் தலையைக் குனிந்து கொள்ள பிரபஞ்சன் புன்னகைத்தான்.

“சரி, டைம் ஆச்சு… தூங்கலாம்…” சொன்னவன் கட்டிலின் ஒரு பக்கம் படுத்துக் கொள்ள அவள் தயக்கத்துடனே மறுபக்கம் படுத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் அவன்மேல் கை படுமோ, கால் படுமோ எனப் பார்த்துக் கொண்டே அட்டென்ஷனில் படுத்திருந்தவள் தன்னை அறியாமல் உறங்கிப் போயிருந்தாள்.

காலையில் அலாரம் அடிக்கும் ஓசையில் கண்ணைத் திறந்தவள், தான் எங்கோ சிறைபட்டது போல் தலையைத் தூக்க முடியாமல் திணற, பிரபஞ்சனின் வலிய கரம் அவள் கழுத்தைச் சுற்றி வளைத்து நெஞ்சோடு அணைத்திருக்க அவன் மார்பில் தலை வைத்துப் படுத்திருந்தாள் ரஞ்சனா. சட்டென்று அதிர்ந்தவள் அவன் கையை விலக்க முயல அவன் மேலும் அவளை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான். உறக்கத்தில் அறியாத ரசாயன மாற்றம் இப்போது உடலில் உற்பத்தியாவது புரிய அவஸ்தையில் நெளிந்தாள்.

கணவனின் முகத்துக்கு வெகு அருகாமையில் அவள் முகம். அவனது பரந்த நெஞ்சில் அவளது இதழ்கள் மெல்ல முத்தமிட்டுக் கொண்டிருக்க, அவனது தாடை அவளது தலையில் மென்மையாய் பதிந்திருக்க, கைகளால் அவளை சிறைபிடித்திருந்தான் அந்தக் கள்வன். அவள் கால் மீது காலை வளைத்துப் போட்டு, இடுப்பில் கையிட்டு வளைத்து அணைத்தபடி நெருக்கமான நிலையில் படுத்திருந்தனர்.

“நைட்டு அவ்ளோ டயலாக் பேசிட்டு இப்ப படுத்திருக்க லட்சணத்தைப் பாரு…” செல்லமாய் சிணுங்கினாலும் அந்த அணைப்பு ஏனோ மனதுக்கும், உடலுக்கும் ஒரு இதத்தைக் கொடுப்பதை உணர்ந்தவளுக்கு வியப்பாய் இருந்தது.

கஷ்டப்பட்டு அவன் கையை விடுவித்து கைகளுக்குள் இருந்த தன் தலையை மீட்டவள் மெல்ல எழுந்தாள். கடிகாரத்தைப் பார்க்க சின்ன முள் ஐந்தில் இருக்க பெரிய முள் அதைத் தாண்டி நடை போடத் தொடங்கியிருந்தது. டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். சில்லென்ற தண்ணீர் மேனியைத் தழுவ அவனது அணைப்புக்குள் இருந்த நிலை நினைவில் வந்து தேகத்தில் வெம்மையைக் கூட்டியது. குளித்து நைட்டியுடன் வெளியே வந்தவள் கணவனை நோக்க அவன் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தான்.

“பிரபா, எழுந்திருங்க… டைம் ஆச்சு…”

அவள் குரலுக்கு அசையாமல் அப்படியே படுத்திருந்தவனின் கையைத் தொட்டு அழைக்க மெல்ல கண்ணைத் திறந்தவன் அவள் குளித்து தலையில் டவலுடன் நிற்பதைக் கண்டதும் வேகமாய் எழுந்து அமர்ந்தான்.

“டைம் என்னாச்சு ரஞ்சு…?”

“அஞ்சரை ஆச்சு, போயி குளிச்சிட்டு வாங்க… சீக்கிரம் கிளம்பினா தான் சீக்கிரம் சாமி கும்பிட்டு வரலாம்…”

“ம்ம்…” என்றவன் ஏதோ யோசனையுடன் அவளைப் பார்க்க,

“என்ன யோசிக்கறீங்க…” என்றாள் அவள்.

“இல்ல நைட்டு தூக்கத்துல… அதுவந்து, நீ… நான், நாம…” என சொல்லத் தயங்கி அவள் முகம் நோக்க சட்டென்று அந்த நினைவில் சிவந்து போனவள் குனிந்து கொண்டாள்.

“ரஞ்சு… அது வந்து, நமக்குள்ள எதுவும் நடக்கல தானே…” அவன் கேள்வியில் நிமிர்ந்தவள் முறைத்தாள்.

“என்ன நடக்கல, முதல்ல குளிச்சிட்டு வாங்க…” விரட்டினாள்.

“ம்ம்… இல்லியே, எனக்கு… நான் உன்னை…” என்று யோசித்தபடி சொன்னவன் அவள் பார்வையைக் கண்டு நிறுத்தி, “ப்ச்… எல்லாம் கனவு போலருக்கு…” என்றபடி குளியலறைக்குள் நுழைய அவளுக்கு சிரிப்பு வந்தது.

அவன் சென்றதும் நைட்டியை உருவிவிட்டு வேகமாய் பிளவுஸ் அணிந்து கொண்டவள் சேலையை உடுக்கத் தொடங்க, அதற்குள் குளியலறைக் கதவு திறந்து பிரபஞ்சனின் தலை மட்டும் நீண்டு, “ரஞ்சு, நிச்சயமா நமக்குள்ள எதுவும் நடக்கலியா…” எனக் கேட்க முறைத்தாள்.

“அச்சோ, இந்த மனுஷன் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம அதையே கேட்டுட்டு இருக்காரே… அதைக் கனவுன்னு நினைச்சுட்டாரோ…” என நினைத்தபடி உடுத்து தலையைத் துவட்டி தளர்வாய் முடியைக் கட்டிக் கொண்டு  முகத்தில் லேசாய் ஒப்பனை செய்து கொண்டாள்.

தன்னை அறியாமலே தான் அணிந்த சேலைக்குப் பொருத்தமான நிறத்தில் அவனுக்கு சட்டையும், வேட்டியும் எடுத்து வைக்க பிரபா குளித்து முடித்து வந்துவிட்டான்.

Advertisement