Advertisement

எதுவும் பேசாமல் தலையைத் துவட்டியபடி இருந்தவனின் முகம் யோசனையைக் காட்ட, “நான் காபி கொண்டு வரேன்…” என நகர்ந்தாள் அவள். அவள் காபி கொண்டு வருகையில் பிரபஞ்சன் தயாராகி இருக்க, குடித்துவிட்டு இருவரும் கீழே வர மற்றவர்களும் தயாராகி இருந்தனர். டாக்ஸியும் வந்துவிட நல்லசிவத்திடம் சொல்லிவிட்டு மருதமலை கிளம்பினர்.

நல்லபடியாய் சாமி தரிசனம் முடிந்து காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். மதிய உணவு முடிந்து பிரபஞ்சனும், ரஞ்சனாவும் கிளம்ப, ஆயிரம் பத்திரம் சொல்லி மாதம் ஒரு முறையாவது சென்னையிலிருந்து விடுப்பு எடுத்து வந்து பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து அனுப்பி வைத்தனர்.

அடுத்த நாள் சின்ன மகனுடன் இவர்கள் கல்யாணம் முடிந்து ஊருக்கு சென்றிருந்த சிவகுமாரின் அன்னை பரிமளமும் வீட்டுக்கு வந்துவிட வீடு மேலும் கலகலப்பானது. ராதிகாவும், அவரும் பேசிக் கொள்வதைக் காண்கையில் மாமியார், மருமகள் என்றே தோன்றாமல் அம்மாவும், மகளும் போலவே இருக்க ரஞ்சனாவும் சேர்ந்து கொண்டாள்.

“ஏம்மா ராதிகா, என் பேரனுக்கு கல்யாணமாகி சம்சாரம் வந்தாக் கொடுக்கணும்னு உன்கிட்ட ஒரு அட்டிகையைக் கொடுத்து வச்சிருந்தனே, அதை எடுத்திட்டு வா…” அவர் மருமகளிடம் சொல்ல புன்னகையுடன் ஒரு நகைப் பெட்டியை எடுத்து வந்து கொடுத்தார் ராதிகா. அதில் அழகாய் சின்னதாய் சிவப்புக்கல் டாலருடன் இருந்த அட்டிகையை ரஞ்சனாவிடம் கொடுத்தவர், “இந்தா கண்ணு, இது இந்தப் பாட்டியோட கல்யாணப் பரிசு…” என்று கொடுக்க,

“எதுக்கு பாட்டி இதெல்லாம், நான் அதிகம் நகையே போட மாட்டேன்…” ரஞ்சனா சொல்ல,

“இருக்கட்டும் கண்ணு… பாட்டி கொடுக்கிறேன்ல, வாங்கிக்க…” எனவும் சந்தோஷமாய் வாங்கிக் கொண்டாள். பழைய கால அட்டிகை ஸ்டைலில் புது மாடலும் சேர்ந்து புதிதாய் செய்திருக்க வேண்டும்…

“இது புதுசு போல இருக்கே பாட்டி…”

“புதுசுதான்… இத்தன வருஷமா உங்க தாத்தா நினைவா என் தாலிக்கொடியை எதுவும் செய்யாம அப்படியே வச்சிருந்தேன்… இனி என் பேரப் புள்ளைகளுக்கு கொடுப்போம்னு மாத்தி செய்தேன்… பிரபா தான் எனக்கு மூத்த பேரன், நீதான் இந்தக் குடும்பத்துல மூத்த மருமக… அதான், உனக்கு முதல்ல கல்யாணப் பரிசு கொடுக்கறேன்…”

“ஓ… ரொம்ப அழகாருக்கு பாட்டி…” அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அங்கே வந்த வைஷாலி ரஞ்சனாவின் கையில் இருந்த நகையைக் கண்டதும் வாங்கி, “என்ன பாட்டி, இந்தப் பேத்திக்கு உன் கல்யாணப் பரிசு எதுவும் இல்லையா…? அட, அட்டிகை அழகாருக்கே…” என்றாள்.

“ஏய் அதிகப் பிரசங்கி, அதை அவகிட்ட கொடு… உனக்கு எல்லாத்துக்கும் ஆசை, அவசரம்தான்… உனக்கும் செய்து வச்சிருக்கேன், கல்யாணம் முடிஞ்சதும் தரேன்…” என்றார்.

“ஏன், எனக்குதான் அடுத்த மாசம் கல்யாணம் வரப் போகுதே… இப்பவே கொடுங்க…” என்றவளின் தலையில் ராதிகா மெல்லக் கொட்டினார்.

“உனக்கு கொடுக்க வேண்டியதை அந்த நேரத்துல பாட்டி கொடுப்பாங்க, அமைதியா இரு…” என அடக்கினார்.

“நாளைக்கு எப்ப சென்னை கிளம்பனும் பிரபா… டிக்கட் புக் பண்ணிட்டியா…?” என்றார் மாடியிலிருந்து இறங்கி வந்த மகனைக் கண்டதும்.

“டிரெயின்ல டிக்கட் வெயிட்டிங் லிஸ்ட் வருதுமா… அதான் நாளைக்கு நைட் ஒன்பது மணிக்கு டிராவல்ஸ்ல பஸ்ல புக் பண்ணிட்டேன்… ரஞ்சு, உனக்கு பஸ் ஜர்னி பிராப்ளம் இல்ல தானே…” என்றான் மனைவியிடம்.

“இல்லங்க, நான் எப்பவும் பஸ்ல தான் போவேன்…” என்றாள்.

“இப்ப எங்க கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் லீவு போட்டதால வைஷூ கல்யாணத்துக்கு அதிகம் லீவ் போட முடியாது போலருக்கு மா… நீங்க தனியா எல்லாத்தையும் பார்க்கணுமேன்னு யோசனையா இருக்கு…”

“அதெல்லாம் பரவால்லப்பா, நான் பார்த்துக்கறேன்… நீங்க நாலு நாள் முன்னாடி வந்தாக் கூடப் போதும்… கல்யாணம், விருந்தெல்லாம் சேர்த்து எப்படியும் ஒரு வாரமாச்சும் அந்த டைம்ல லீவெடுக்கிற போல வரும்…” ராதிகா சொல்ல கேட்டுக் கொண்டிருந்த ரஞ்சனாவின் மனமும் கணக்குப் போட அவளுக்கு நிச்சயம் அத்தனை லீவ் கிடைப்பது கஷ்டம் என்று தோன்றியது.

“முயற்சி பண்ணறேன் மா… ரஞ்சு, நீயும் அந்த டைம்ல லீவுக்கு பிளான் பண்ணிக்க…” என்றவன்,

“எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு வந்துடறேன் மா…” என்று கிளம்பினான்.

“குடிக்க கொஞ்சம் சுடுதண்ணி குடு ராதி…” சிவகுமார் வந்து கேட்க, “நான் எடுத்திட்டு வரேன் மாமா…” என்ற ரஞ்சனா அடுக்களைக்குப் பறந்தாள்.

“அப்பா, பாட்டியைப் பார்த்திங்களா…? இத்தன நாளா நமக்கு எவ்ளோ கஷ்டம் வந்தாலும், தராம எடுத்து வச்சிருந்த தாலிக் கொடியைக் கொடுத்து பேரப் பிள்ளைங்களுக்கு நகை வாங்கிக் கொடுக்கிறாங்க…” வைஷாலி தந்தையிடம் சொல்ல, அவர் அமைதியாய் அன்னையைப் பார்த்தார்.

“ஆமா, உன் அப்பனுக்குக் கொடுத்திருந்தா அதையும் சூதாடித் தொலைச்சிட்டு வந்திருப்பான், அதான் கொடுக்கலை…” என்றவர் மகனின் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி பதிலை சொல்லிவிட்டு எழுந்து சென்றார். அவர் மகனிடம் பேசி பத்து வருடங்களுக்கு மேலாகிறது. கணவன் சேர்த்து வைத்த சொத்தையும், புகழையும் மகன் தீய வழியில் சென்று நஷ்டப்படுத்திய கோபமும், வலியும் அவருக்குள் இப்போதுமிருக்க மகனிடம் வெகு காலமாய் பேசுவதில்லை.

அன்னையின் மௌனத்தை இத்தனை கால தண்டனையாய் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிவகுமாருக்கு அவரது வார்த்தைகள் வலிக்கவே செய்தது. மகனின் செயல்களுக்கு பரிமளம் அவரது குடும்பத்தை தண்டிக்கவில்லை. ராதிகா கணவனின் போக்கில் கலங்கி அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் கையாலாகாதவளாய் நிற்கையில் அவருக்கு சொந்த மகள் போலவே தோள் கொடுத்து நம்பிக்கையும் கொடுத்து தேற்றியவர் பரிமளம் தான்.

அவரது உபதேசமும், வழிகாட்டலும் தான் ராதிகாவுக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்து கணவனை எல்லாம் இழந்த நிலையிலாவது மீட்டெடுக்க உதவியது.

கணவனின் வேதனை படிந்த முகத்தைக் கண்ட ராதிகா, “விடுங்க, அத்தை தான சொன்னாங்க…” என்று சமாதானம் சொல்ல அதற்குள் ரஞ்சனா சுடு தண்ணி கொண்டு வந்து மாமாவுக்குக் கொடுக்க வாங்கிக் கொண்டார்.

“அத்தை, இன்னைக்கு நான் சமைக்கட்டுமா…?”

“நானும் வரேன் மா, மாமாவுக்கு கொஞ்சம் பத்தியமா சமைக்கணும்… நீ எனக்கு கூட உதவி செய்தாப் போதும்…”

“ஏய் வைஷூ, டீவி பார்த்தது போதும்… நீயும் வா, நாளைக்கு உன் மாமியார் வந்து உங்க பொண்ணுக்கு சமையலே கத்துக் குடுக்கலையான்னு என்னைத் தான் திட்டப் போறாங்க… கல்யாணம் ஆகற வரைக்குமாச்சும் கொஞ்சம் கத்துக்க…” என அதட்ட, முனங்கிக் கொண்டே எழுந்து வந்தாள் வைஷாலி.

ரஞ்சனா காய்கறிகளை அரிந்து தர, தனது மேற்பார்வையில் வைஷாலியை சமைக்க வைத்தார் ராதிகா. அவள் எரிச்சலுடன் விருப்பமின்றியே சமைத்து முடிக்க ருசி பார்த்தவரின் முகம் மாறியது.

“சாப்பிடறதை மட்டும் விரும்பி செய்தாப் போதாது, சமையலையும் விருப்பமா செய்தா தான் ருசிக்கும்… நான் செய்யுற அதே பக்குவமா இருந்தாலும் உன் விருப்பமில்லா மனசால எல்லாத்துலயும் ருசி குறைஞ்சிருச்சு பாரு…”

“போங்க மா… எனக்கு இவ்ளோ தான் சமைக்க முடியும்…”

“இப்படி சொன்னா உன் மாமியார் மூஞ்சிலயே குத்துவாங்க..”

“ஹூக்கும்… அவங்க வேணும்னா சாப்பிடட்டும், இல்லன்னா அவங்களே சமைச்சுகிட்டும்… எனக்கு எப்படி வருமோ அப்படி தானே சமைக்க முடியும்…” என்றவளுக்கு வெகு நேரமாய் சமையலறையில் நின்றது அந்த வாசனைகளில் குமட்டிக் கொண்டு வர வாஷ்பேசினைத் தேடி ஓடினாள்.

“ஹூம்… எனக்கு இப்படி ஒரு பொண்ணு…” ராதிகா சலித்துக் கொள்ள, “விடுங்கத்தை, தேவைன்னு வரும்போது வைஷூவும் சமைச்சுப் பழகிப்பா…” என்றாள் ரஞ்சனா.

“ம்ம்… நீ ஹாஸ்டல்ல தானே தங்கி இருந்த, எப்படி இவ்ளோ ஆசையா சமைக்கிற…”

“நான் சின்ன வயசுல இருந்தே அம்மா கூட கிட்சன்ல இருப்பேன் அத்தை… அம்மா கடைக்குப் போனா புதுசா ஏதாச்சும் செய்முறை பார்த்து சமைச்சு வைப்பேன்… எல்லாரும் அதை விரும்பி சாப்பிடும்போது மனசுக்கு நிறைவா, சந்தோஷமா இருக்கும்… எனக்கு சின்ன வயசுல இருந்தே நர்ஸிங் படிக்கிறது எப்படியோ, அதே போல சமையலும் ரொம்பப் பிடிக்கும்…” என்றாள் ரஞ்சனா.

“ம்ம்… இன்னைக்கு நைட் உன் சமையல் தான், பார்ப்போம்… உன் கை வண்ணத்தை…” என்றார் புன்னகையுடன்.

அன்று இரவு உணவுக்கு அவள் சமைத்த சப்பாத்தியும், வெஜ் குருமாவும் உண்மையிலேயே மிக சுவையாய் இருக்க  எல்லாரும் பாராட்டினர்.

“டேய் பிரபா, உன் பொண்டாட்டிக்கு நல்ல கைப்பக்குவம் டா… ரொம்ப அருமையா சமைச்சிருக்கா…” ராதிகாவோடு பரிமளம் பாட்டியும் சொல்லிவிட பிரபஞ்சன் பெருமையுடன் மனைவியைப் பார்க்க ரஞ்சனாவுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. ஆனால் வைஷூவுக்கு கடுப்பாய் இருந்தது.

“புது மருமகளை ஓவராத்தான் தலையில வச்சிட்டு ஆடுறாங்க…” என நினைத்தவள்,

“இதென்ன பாட்டி பிரமாதம்… யூ டியூப்ல பார்த்தா விதவிதமா சமைக்கலாமே… ஆப்டர் ஆல் வெஜ் குருமா, அதுக்குப் போயி ஓவரா பாராட்டுறிங்க… நான் கூட அண்ணி புதுசா ஏதாச்சும் சமைச்சு அசத்தப் போறாங்கன்னு நினைச்சேன், குருமாவை செய்து ஏமாத்திட்டாங்க…” என்றபடி ஐந்தாறு சப்பாத்தியுடன் எழுந்து கொண்டாள் வைஷாலி. அதைக் கேட்டதும் ரஞ்சனாவின் முகம் சட்டென்று பியூஸ் போன பல்பாய் இருண்டு போனது.

“ஹேய் ரஞ்சு, நீ ஒண்ணும் தப்பா நினைச்சுக்காத… வைஷூ எப்பவும் இப்படித்தான், அவ்ளோ சீக்கிரம் திருப்திப்பட மாட்டா… குருமா உண்மைலயே சூப்பர்…” என்றான் பிரபா.

“ம்ம்… ஆமா கண்ணு, அவ கிடக்குறா… பொறாமை பிடிச்சவ, அவளைத் தவிர வேற யாரையும் பாராட்டினாப் பிடிக்காது…” பாட்டியும் ரஞ்சனாவை சமாதானம் செய்ய ராதிகாவுக்கு மகள் பேசியதில் கோபம் வந்தாலும் மருமகள் முன்னில் எதுவும் சொல்லவில்லை. பிரபாவும், பாட்டியும் சமாதானம் சொல்லிவிட்டதால் அமைதியாய் இருந்துவிட்டார்.

வேலை முடிந்து மகனும், மருமகளும் மாடிக்கு சென்றுவிட டீவி பார்த்துக் கொண்டிருந்த மகளிடம் வந்த ராதிகா, “வைஷூ, உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க… எதுக்கு ரஞ்சனாவைப் போட்டியா நினைக்கிற, அவ உன் அண்ணன் பொண்டாட்டி… அவங்கதான் உனக்கு எல்லாம் செய்யப் போறாங்க, அதை மறந்துடாத…” என சொல்லிச் சென்றார்.

கனவா நிஜமா புரியவில்லை…

உன் கரம் பற்றி நாம்

நடந்த காதல் பயணம்…

கனவென்றால் என் இமைகள்

பிரிய மறுக்கும்…

நிஜமென்றால் நம் கரங்கள்

பிரிய மறுக்கும்…

கனவா, நிஜமா கண்ணே…!

Advertisement