“இல்லங்க, பாவம் அத்தை… இந்த விஷயத்துல ரொம்ப மனசு விட்டுப் போயிருப்பாங்க, கவலைப்படாதீங்க… எல்லாம் நல்லபடியா நடக்கும்…”
“ம்ம்… உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப ஆச்சர்யமாருக்கு ரஞ்சு…” என்றவன் அவளை அதிசயமாய் பார்க்க, “என்ன ஆச்சர்யம்…?” என்றாள் அவள்.
“இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டா நீ தாம்தூம்னு குதிச்சு எங்க குடும்பத்தைப் பத்தி கேவலமா சொல்லுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்… ஆனா நீ எந்த விஷயத்தையும் பிராக்டிகலா யோசிச்சு இயல்பா எடுத்துக்கற, இந்த குணம் எல்லாருக்கும் அமையாது…” என்றான் மெச்சுதலுடன்.
“நான் ஒரு நர்ஸ், இந்த மாதிரி எத்தனை விஷயங்களைப் பார்த்திருப்பேன்… அனுபவம் தான் எதார்த்தம் என்னன்னு எல்லாருக்கும் கத்துக் குடுக்குது…” அவள் சொல்லும்போதே செல்போன் அலறியது. சார்ஜரில் இருந்த அவள் மொபைலை எடுத்துப் பார்த்த பிரபஞ்சன் அவளிடம், “அத்தை கால் பண்ணறாங்க…” என்று நீட்ட வாங்கி காதில் வைத்தாள்.
“ஹாய் அக்கா, என்ன பண்ணற… மாம்ஸ் என்ன சொல்லுறார்…?”
“அதை நீயே நாளைக்கு உன் மாம்ஸ் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க, அப்பாட்ட போனைக் கொடு சஞ்சு…”
“போக்கா, உனக்கு என் மேல கொஞ்சம் கூடப் பாசமே இல்ல, நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணறேன்… நீ என்னடான்னா மாம்ஸ் கிடைச்சதும் என்னை மறந்துட்ட பார்த்தியா…” சிணுங்கினாள் தங்கை.
அதைக் கேட்டதும் அவளுக்கு சுரீரென்று எங்கோ அந்த வார்த்தை தைத்தது.
அவள் அமைதியாய் இருக்க, “அக்கா கோச்சுகிட்டியா, நான் சும்மா உன்னை வம்பிழுக்க சொன்னேன்… எனக்குத் தெரியும், நீயும் என்னை ரொம்ப மிஸ் பண்ண தான…” என்றாள் சஞ்சனா சிரிப்புடன்.
“ம்ம்… என்னை தான் மிசஸ் பண்ணி அனுப்பிட்டீங்களே, அப்புறம் உங்களை எல்லாம் மிஸ் பண்ண தானே வேணும்…”
“ஆஹா…! பார்றா… என் அக்கா கூட டைமிங்ல காமெடி பண்ணுறா… சரிக்கா, நாளைக்குப் பார்க்கலாம், அப்பாட்ட கொடுக்கிறேன்…” என்று மொபைலை எடுத்துச் சென்று நல்ல சிவத்தின் கையில் கொடுத்து, “அப்பா, உங்க மூத்த புத்திரி பேசுறா…” என்று சொல்ல ஆவலுடன் காதுக்குக் கொடுத்தார்.
“ரஞ்சுமா…! தங்கம், எப்படிடா இருக்க…” தந்தையின் நேசக் குரலில் அவள் மனம் நெகிழ்ந்தது.
“அப்பா…! நீங்க நேரத்துக்கு மருந்து சாப்பிட்டீங்களா, கொஞ்ச நாளைக்கு கடைக்கு எல்லாம் போக வேண்டாம், கணக்கு வழக்கெல்லாம் அம்மாவே பார்த்துக்கட்டும்…”
“சரிடா செல்லம், நாளைக்கு சீக்கிரமா கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்திருங்க டா… ரெண்டு நாள் இங்க இருக்கற போல மாப்பிள்ள கிட்ட சொல்லிருடா…”
அன்றைய இரவும் பொதுவான பேச்சுகளுடன் கழிய, அடுத்தநாள் பிறந்த வீட்டுக்குப் போகும் சந்தோஷத்தில் சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது ரஞ்சனாவுக்கு.
இன்னும் சூரியனுக்கு முழிப்பு வராததால் உலகெங்கும் இருட்டில் இருக்க, ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் கடிகாரத்தில் கண்ணைப் பதிக்க மணி அதிகாலை நான்கு என்றது. அருகே படுத்திருந்த பிரபஞ்சனைப் பார்த்தாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் ஒரு கையைத் தலைக்கு மேலும், ஒரு கையை நெஞ்சிலும் வைத்தபடி மூச்சுக் காற்றில் நெஞ்சம் ஏறி இறங்க, மிக சன்னமான ஒரு குறட்டையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பெரிய கட்டில் என்பதால் இருவரும் ஒரே கட்டிலில் படுத்திருந்தாலும் நடுவில் நல்ல இடைவெளி இருந்தது.
சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தவள் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவசரமின்றிக் குளித்து அன்று சேலை உடுக்க முடிவு செய்தவள் பிரபா உறங்கும் தைரியத்தில் உள்பாவாடை பிளவுஸ் அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
கட்டில் மேல் இருந்த சேலையை எடுத்துக் கொண்டு சற்றுத் தள்ளி இருந்த டிரஸ்ஸிங் டேபிள் முன் நின்று அதைக் கட்டியவள் தலையைத் துவட்டி ஈரஜடை பின்னிக் கொண்டு நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டுடன் கீழே வந்தாள்.
பூஜையறையில் விளக்கேற்றி விபூதியைத் தொட்டுக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தவள் காபி கலந்து முடிக்கையில் மணி ஐந்தைத் தாண்டி இருக்க ராதிகா அப்போது தான் எழுந்து வந்தார். அடுக்களையில் லைட் எரிவதைக் கண்டு ஆச்சர்யமாய் வந்தவர் மருமகள் குளித்து முடித்து அடுக்களைக்குள் நிற்பது கண்டதும் புன்னகைத்தார்.
“அடடே, சீக்கிரம் எழுந்துட்டியா ரஞ்சனா…”
“ஆமாம் அத்தை, நேத்துதான் அசந்து தூங்கிட்டேன்… இது நான் வழக்கமா எழுந்துக்கற டைம் தான், எல்லாருக்கும் காபி போடலாம்னு வந்தேன்…?” என்றாள்.
“ம்ம் நான் குளிச்சிட்டு வறேன் மா… பிரிட்ஜ்ல நேத்துப் பால் தான் இருக்கு, அதைத் தயிர் ஊத்திக்கலாம்… இன்னைக்கு பால் வந்திருக்கும், அதுல காபி போட்டுக்கலாம்…”
“சரி அத்தை, பால் பாக்கெட் கேட்ல இருக்குமா…?”
“ம்ம்… இருட்டுல நீ தனியா வெளிய போக வேண்டாம், நான் பால் கவரை எடுத்திட்டு வரேன்…” சொன்னவர் வாசல் கதவைத் திறந்து கேட்டில் தொங்கிய மஞ்சள் பைக்குள் இருந்த பால் கவரை எடுத்து வந்து மருமகளிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றார். அவள் பாலைக் காய்ச்சி காபி தயாரித்து முடிக்க ராதிகாவும் வந்துவிட்டார்.
“நான் வாசல் பெருக்கிட்டு வரேன், நீ கொடுத்திரும்மா…” என்று வெளியே சென்றார்.
“மாமா…” அறை வாசலில் ஒலித்த மருமகளின் குரலில் கட்டிலில் அமர்ந்திருந்த சிவகுமார் திரும்பினார்.
“அடடா, இன்னைக்கு என் மருமக கலந்த காபியா…?” என ஆவலுடன் வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு,
“ப்ச்… நீயாச்சும் சக்கரை போட்டு காபி கலந்து தருவேன்னு பார்த்தா அதுக்குள்ள உன் அத்தை எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துட்டாளா…?” ஏமாற்றமாய் குழந்தை போல் கேட்டவரைக் கண்டு சிரிப்பு வந்தது அவளுக்கு.
“மாமா… பீல் பண்ணாதீங்க, டயபடிக் பேஷன்ட்குன்னு தனியா சுகர் ப்ரீ கியூப்ஸ் இருக்கு, அதை வாங்கி உங்களுக்கு காபில கலந்து தரேன்…” என்றதும் மலர்ந்தார் அவர்.
“ஆஹா…! இது சூப்பர் மா…” அவர் சந்தோஷமாய் சொல்ல புன்னகையுடன் வெளியே வந்தாள். காலை டிபன் முடிந்து விருந்துக்கு கிளம்பினர்.
அங்கே மதிய விருந்து அசைவ உணவுகளுடன் கமகமக்க, மாப்பிள்ளை வீட்டாரை மனம் கோணாமல் நன்றாய் கவனித்தனர். சாப்பிட்டு முடித்ததும் பிரபஞ்சன், ரஞ்சனாவை மட்டும் அங்கே விட்டு இவர்கள் கிளம்பினர்.
“ரஞ்சு, மாப்பிள்ளை வந்ததுல இருந்து இங்கயே இருக்கார்… கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், உன் ரூமுக்கு அழைச்சிட்டுப் போ…” அன்னை துர்கா மகளிடம் சொல்ல, அவள் கணவனைப் பார்க்க அவன் நல்லசிவம், மற்றும் உறவினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
“அவர் பேசிட்டு இருக்கார் மா, அப்புறம் சொல்லறேன்…” மகள் சொல்ல துர்காவே சென்று கணவனிடம் சொன்னார்.
“என்னங்க, மாப்பிள கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்… அவரை அனுப்பி விடுங்க…” என கணவன் காதைக் கடித்தார்.
அவர் மருமகனிடம் சொல்ல, “சரி மாமா…” என்றவன் வீட்டுக்குள் சென்றான்.
அவனைக் கண்ட சஞ்சனா “மாம்ஸ், எங்களுக்கு ஒரு டவுட், கிளியர் பண்ணறீங்களா…?” என்றாள்.
“என்னமா டவுட்…?”
“நீங்க எப்படி இருப்பீங்கன்னு என் பிரண்ட்ஸ் கேட்டாங்களா, நான் நடிகர் பிரசன்னா போல இருப்பிங்கன்னு சொன்னேன், ஆனா, என் பிரண்ட் நீங்க ஆர்யா போல இருக்கறதா சொல்லுறா… அதான் எனக்கு ஒரே கன்பியூஷன்…”
“அட இவ்ளோ தானா, நான் அவங்க ரெண்டு பேர் போலவும் இல்லயே…” என்றான் பிரபஞ்சன் சிரிப்புடன்.
“அப்புறம் யார் மாதிரி…?” அவள் யோசனையாய் கேட்க,
“நான் என்னை மாதிரி தான் இருக்கேன்…” என சிரிக்க, “மாமா…” என முறைத்தாள் ரஞ்சனா. அவர்களிடம் வந்த துர்கா, “சரி… மாப்பிள்ள நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, ரஞ்சு, அழைச்சிட்டுப் போ மா…” என கண்ணால் அவனை அழைத்த ரஞ்சனா தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
ரஞ்சனாவின் அறை மாடியில் பெரிதாகவே இருந்தது. ஷெல்பில் இருந்த மெடல்கள், பரிசுக் கோப்பைகளைக் கண்டவன், “மேடம் ஒரு படிப்பிஸ்ட் போலருக்கு…” என்று கேட்க, புன்னகைத்தாள் ரஞ்சனா. செல்ப் மேல் இருந்த அவளது பல வயதுப் புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்தான் பிரபஞ்சன். இரண்டு வயது முதல் இருபது வயது வரை உருவத்தில் பல மாற்றங்களைக் கொண்டிருந்தாலும் முகத்தில் குழந்தையில் இருந்த ஜாடை மிச்சமிருந்தது.
“சின்ன வயசுலயும் நீ ரொம்ப அழகா இருக்க ரஞ்சு… இந்த போட்டோல நடிகை சினேகா போல இருக்க…” எனவும், “அதெல்லாம் இல்லை, நான் என்னைப் போல தான் இருக்கேன்…” அவன் மனைவி பதிலடி கொடுக்க திகைப்புடன் அவளைப் பார்த்தான் பிரபஞ்சன்.
அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் அவனைப் பார்க்க அந்தப் பார்வையில் நிறைந்திருந்த காதலையும், ஆர்வத்தையும் தாங்க முடியாமல் தலை குனிந்தாள்.