Advertisement

 அத்தியாயம் – 3

சட்டென்று கணவனை விட்டு விலகி, “ச…சாரி…” என குனிந்தபடி சொல்ல, அவனோ “தேங்க்ஸ்…” என்றான்.

புரியாமல் நிமிர்ந்தவள் அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தில் புரிந்து கொள்ள சட்டென்று சிவந்த முகத்தைக் குனிந்து, “அத்தை உங்களை டிபன் சாப்பிட வர சொன்னாங்க…” என்றபடி அறைக்குள் சென்று விட்டாள்.

ஒரு மாதிரி படபடப்பாய் உணர கட்டிலில் அமர்ந்தாள்.

“அவனது உரிமையான பார்வையும், ஸ்பரிசமும் மனதின் ஆழம் வரை தொடுகிறதே, இதான்… திருமண பந்தத்தின் மேஜிக்கா…” யோசித்தபடி அமர்ந்தவள் கதவு திறக்கவும் நிமிர பிரபஞ்சன் தான் வந்தான்.

“ரஞ்சு, என்னை சாப்பிடக் கூப்பிட்டு நீ இங்க இருக்க, நீயும் வா, சாப்பிடலாம்…” என்றான் பிரபஞ்சன்.

அவளும் எழுந்து கொள்ள கதவைத் திறந்து மாடிப்படி இறங்கியவனைத் தொடர்ந்தாள்.

வைஷாலி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க இவர்களைக் கண்டதும் ராதிகா மகன், மருமகளுக்கும் தட்டை வைத்தார். பிரபா அமர இட்லி வைத்து சாம்பார், சட்னி ஊற்றினார்.

“மாமா சாப்பிட்டாரா அத்தை…? நீங்களும் உக்காருங்க, நான் பரிமாறறேன்…” மருமகள் சொல்ல புன்னகைத்தவர், “நீ உக்காரு மா, நேத்து நைட்டும் சரியா சாப்பிடல… நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்… உன் மாமாவுக்கு சுகர் லெவல் கூடிகிட்டே போகுது, இப்படிப் போனா கிட்னிக்கு பிராப்ளம் வரலாம்னு டாக்டர் சொன்னார்… அதனால அரிசி உணவு அதிகம் கொடுக்கிறதில்லை மா, மதியம் ஒரு கப் சாதம் மட்டும் தான்… மத்த நேரம் ஓட்ஸ், ராகி, கம்பு இப்படி தான் கொடுக்கிறேன்…” என்றார் ராதிகா.

“ஓ… நேரத்துக்கு டாப்லட் எடுத்துக்கிறார் தானே….”

“ம்ம்… கொடுக்கிறேன், இப்பல்லாம் பென்சிலின் ஊசி போட வேண்டிருக்கு…” என்றபடி அவளுக்குத் தட்டில் பரிமாறியவர் தனக்கும் ஒரு தட்டை வைத்து அமர்ந்தார்.

“அம்மா, எனக்கு முறுகலா நிறைய நெய் ஊத்தி ஒரு தோசை மட்டும் பண்ணிக் கொடுத்துட்டு நீங்க சாப்பிட உக்காருங்க மா…” என்றாள் மகள்.

“ஏய், முன்னமே சொல்லாம அம்மா உக்கார்ந்ததும் தான் கேப்பியா…” பிரபஞ்சன் தங்கையை சாட எழப் போன ராதிகாவைத் தடுத்த ரஞ்சனா, “நீங்க உக்காருங்க அத்தை, நான் தோசை ஊத்திக் கொடுக்கிறேன்…” என எழுந்தாள்.

அவள் தோசைக்கல்லை வைத்து நன்றாய் நெய் விட்டு முறுகலாய் தோசை கொண்டு வர ஒன்று கேட்டவள், மூன்று தோசையை உள்ளே தள்ளிவிட்டே நிறுத்தினாள்.

“அத்தை, உங்களுக்கு தோசை வேணுமா…?”

“எனக்கு வேணாம் மா… பிரபாவுக்கு தான் நெய் ஊத்தி முறுகலா தோசை சுட்டாப் பிடிக்கும், அவனுக்கும் வேணும்னா ஊத்திக் குடு…” என்றார் ராதிகா.

அவள் கணவனைப் பார்க்க, “எனக்கு ஒரு தோசை மட்டும் போதும் ரஞ்சு, உனக்கும் வேணும்னா ஊத்திக்க…” என்றான். இருவருக்கும் ஒவ்வொரு தோசையை முறுகலாய் ஊற்றி எடுத்துக் கொண்டு அமர்ந்தாள் ரஞ்சனா.

“ம்ம்… நல்லா மொறுமொறுன்னு ஹோட்டல் ரோஸ்ட் போலவே இருக்கு ரஞ்சு…” பிரபா சொல்ல, அவள் கூச்சத்துடன் அத்தையைப் பார்க்க அவர் புன்னகைத்தார்.

“அப்ப, இத்தன நாளா நான் செய்த தோசை எல்லாம் மொறு மொறுன்னு இல்லியாக்கும்…” வேண்டுமென்றே அவர் மகனிடம் வம்பு வளர்க்க அவன் முழித்தான்.

“அச்சோ, ரஞ்சு செய்தது நல்லாருக்குன்னு சொன்னா நீங்க செய்தது நல்லா இல்லன்னு அர்த்தம் இல்லைம்மா… நீங்க தான் விதவிதமா சமைச்சு எங்க நாக்கை உங்க சமையலுக்கு அடிமையாக்கி வச்சிருக்க சமையல் ராணியாச்சே…”

“ஆமாம் அத்தை, சாம்பாரும் தேங்கா சட்னியும் ரொம்ப நல்லாருக்கு…” சாப்பிட்ட ரஞ்சனாவும் பாராட்டினாள்.

“ம்ம்… சாப்பாட்டுல நாக்கை அடிமையாக்கிட்டா மத்த எல்லா விஷயத்துலயும் புருஷனைக் கைக்குள்ள போட்டுக்கறது சுலபம்னு என் மாமியார் சொல்லுவாங்க… இதெல்லாம் அவங்ககிட்ட இருந்து கத்துகிட்டு தான் இவங்களை எல்லாம் கைக்குள்ள வச்சிருக்கேன்… உனக்கும் சொல்லித் தரேன், நீயும் கத்து வச்சுகிட்டா இந்தப் பயலைக் கைக்குள்ள போட்டுக்க வசதியா இருக்கும்…” என்றார் மகனைக் கிண்டலாய் பார்த்து நமட்டு சிரிப்புடன்.

பிரபஞ்சன் ஆஹா என்பது போல் அன்னையைப் பார்த்து முழிக்க, பெண்கள் இருவரும் சிரித்தனர். மாமியார் தோரணை எதுவுமின்றி தோழி போல மிக இயல்பாய் பேசும் ராதிகாவை ரஞ்சனாவுக்கு மிகவும் பிடித்தது.

“என்ன…? என் அம்மாவை ஏதோ சொன்ன போலக் கேட்டுச்சு…” அறைக்குள் இருந்த சிவகுமார் அவர்கள் பேச்சைக் கேட்டு வெளியே வர புன்னகைத்தாள் ரஞ்சனா.

“மாமா, நீங்களும் வந்து உக்காருங்க… காபி, டீ எதாச்சும் வேணுமா…?”

“ஒண்ணும் வேண்டாம் மா, நீங்க சாப்பிடுங்க… நான் தோட்டத்துல இருக்கேன்…” என்றவர் மெல்ல நடந்து வெளியே செல்ல ராதிகாவிடம் கேட்டாள் மருமகள்.

“மாமாக்கு மூட்டு வலி பிரச்சனை இருக்கா அத்தை, ஏன் காலை இழுத்து கஷ்டப்பட்டு நடந்து போறார்…”

“ஆமாம் மா… மூட்டு எலும்புல தேய்மானம் இருக்குன்னு டாக்டர் சொன்னார், வயசானாலே உடம்புக்கு எல்லாப் பிரச்சனையும் வந்திருது… இவருக்கும் பிரஷர், சுகர், கொலஸ்ட்ரால், மூட்டுவலின்னு எல்லாம் இருக்கு…”

சாப்பிட்டு எழுந்ததும் மகன், மருமகளை தண்டு மாரியம்மன் கோவிலுக்கு போய் பூஜை செய்துவர சொல்லிவிட்டு மதிய சமையலை முடித்தார் ராதிகா. உறவினர் சிலர் மணமக்களைக் காண வர அவர்களுடன் பேசி நேரம் நகர மாலை வைஷாலியின் மாப்பிள்ளை வீட்டிலிருந்து மணமகனின் பெற்றோர் பத்திரிகை வைக்க வரவே அவர்களை மனைவிக்கு அறிமுகப்படுத்தினான் பிரபஞ்சன்.

சிறிது படோடோபத்துடன், ஓவர் அலட்டலாய் தெரிந்தாள் வைஷாலியின் வருங்கால மாமியார். மாப்பிள்ளையின் அம்மா என்ற பந்தாவுடன் ஹாலில் அமர்ந்து கல்யாண வேலைகள் எப்படி நடக்கிறது என விசாரித்தார்.

எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பதாக ராதிகா சொல்ல, “சொந்தக்காரங்க கண்ணுல எந்தக் குறையும் படாத அளவுக்கு எல்லாத்தையும் கவனமாப் பார்த்துக்கங்க… இல்லன்னா எங்களுக்கு குறைச்சலாப் போயிடும், பேசின போல எல்லாம் சரியாப் பண்ணிடுங்க…”

அவர்கள் கிளம்பியதும் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்த  வைஷாலி சட்டென்று குமட்டிக் கொண்டு வரவே வாயைப் பொத்திக் கொண்டு எழுந்து வாஷ்பேசினுக்கு ஓடினாள்.

அதைக் கண்ட ரஞ்சனா என்னவோ, ஏதோவென்று பயந்தபடி அவள் பின்னால் ஓட கணவன், மகனுடன் அறையில் பேசிக் கொண்டிருந்த ராதிகாவும் சத்தம் கேட்டு வந்தார்.

ரஞ்சனா வைஷாலியின் முதுகில் தடவிக் கொடுத்து, அவள் வாய் கழுவி வந்ததும் தண்ணியைக் கொடுக்க குடித்துவிட்டு பெரிதாய் மூச்சு விட்டாள் வைஷாலி.

“என்னாச்சு வைஷு, சாப்பிட்ட எதுவும் சேரலியா…? ஏன் வாந்தி எடுத்த, உடம்புக்கு ஒண்ணும் இல்லையே…” ரஞ்சனா அவளை அமர வைத்தபடி கேட்க வைஷாலி எதுவும் சொல்லாமல் தயக்கத்துடன் அன்னை, அண்ணனைப் பார்க்க அவர்களின் முகம் இறுகிப் போய் கிடக்க ரஞ்சனாவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன அத்தை, வைஷூக்கு உடம்புக்கு என்ன…?”

“பிரபா, நீ ரஞ்சனாகிட்ட எதையும் சொல்லலியா…?” ராதிகா மகனிடம் கேட்க அவன் மறுப்பாய் தலையாட்டினான்.

“ரஞ்சனா, வைஷாலிக்கு ஒண்ணும் இல்ல… என்ன விஷயம்னு பிரபா விளக்கமா சொல்லுவான், வைஷூ, நீ ரூமுக்குப் போ…” என்று மகளை அனுப்பிவிட்டு அடுக்களைக்கு சென்று விட்டார் ராதிகா. ரஞ்சனா ஒன்றும் புரியாமல் அப்படியே நிற்க அவள் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு மாடிக்கு அழைத்துச் சென்றான் பிரபா.

“என்ன பிரபா…? வைஷூக்கு என்ன பிரச்சனை, ஏன் அவ வாந்தி எடுக்கிறா…?”

“சொல்லறேன், நீ முதல்ல உக்கார்… நேத்தே உன்கிட்ட இதை சொல்லிருக்கணும், எடுத்ததும் இப்படி ஒரு விஷயத்தை சொன்னா நீ எப்படி எடுத்துப்பியோன்னு நினைச்சு தான் சொல்லாம விட்டுட்டேன்…”

“ம்ம்… அப்படி என்ன விஷயம்…? சொல்லுங்க பிரபா…”

அவள் விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டுக் கொண்டே இருக்க தயங்கியபடி தொடங்கிய பிரபஞ்சன் ஒருவழியாய் விஷயத்தை சொல்லி முடிக்க அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தாள் ரஞ்சனா.

“ரஞ்சு, வைஷாலி பண்ணினது தப்புதான்… கோபம் வந்தாலும் அவளைத் தண்டிக்க முடியல, அதான் என்ன பண்ணறதுன்னு ரெண்டு குடும்பமும் கலந்து பேசி கல்யாணத்தை முடிவு பண்ணிட்டோம்…” என்றான் சங்கடத்துடன்.

ரஞ்சனா அமைதியாய் இருக்க, “ரஞ்சு, வைஷாலி மேல உனக்கு ஒரு தப்பான அபிப்ராயம் வந்திருமோன்னு தான் நான் சொல்லல, மாப்பிள வீடு நம்மள விட கொஞ்சம் வசதி ஜாஸ்தி, சீர்வரிசை எல்லாம் அதிகமா எதிர்பார்க்கிறாங்க… சம்மதிச்சு தான் கல்யாணம் முடிவாச்சு, எனக்காக அவளை வெறுக்காம நீயும் மன்னிச்சு ஏத்துக்கணும்…”

“ம்ம்… இப்படிதான் நடக்கணும்னு விதி இருந்தா அவளால மட்டுமில்ல, யாராலும் மாத்த முடியாது… போகட்டும், அவளை டாக்டர்ட்ட அழைச்சிட்டுப் போயி செக்கப் பண்ணிங்களா, மெடிஸின் எல்லாம் பாலோ பண்ணறாளா…?”

“ம்ம்… அதெல்லாம் அம்மா பார்த்துக்கறாங்க, நீ நம்ம  குடும்பத்தைத் தப்பா நினைக்கலியே…” என்றான் வலியுடன்.

Advertisement