Advertisement

 அத்தியாயம் – 25

கோபமாய் உள்ளே நுழைந்த ஆரதி உணவு மேஜையில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும் கடுப்புடன் முறைக்க, அவளை அப்போது எதிர்பார்க்காத பிரபஞ்சனும், ரஞ்சனாவும் திகைப்புடன் எழப் போக அர்ஜூன் தடுத்தான்.

“பிரபா…! முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க, அவளை அப்புறம் பார்த்துக்கலாம்…” அர்ஜூன் சொல்லவும் அவனை முறைத்த ஆரதி கடுப்புடன் உள்ளே சென்று விட்டாள். அங்கிருந்த மஹதி தங்கையை சமாதானப் படுத்துவதற்காய் அவள் பின்னேயே அறைக்கு செல்ல அர்ஜூனின் அன்னை அவர்களிடம் பரிமாற வந்தார்.

“தும் காவோ பேட்டா…” என்றபடி பிரபாவின் தட்டில் சப்பாத்தியை வைக்க புரியாமல் முழித்தவனிடம் ரஞ்சனா,

“நம்மை சாப்பிட சொல்லுறாங்க…” என்றாள்.

“ச்சே… மோடிஜி சொன்ன மாதிரி ஹிந்தி படிச்சிருந்தா இப்ப ரொம்ப யூஸ் ஆகிருக்குமே…” என யோசித்தபடி சப்பாத்தியை சப்ஜியுடன் வாய்க்குள் தள்ளும் வேலையில் இறங்கினான்.

பிளைட்டில் கொடுத்த உணவு பிடிக்காததால் யாரும் சரியாக சாப்பிடவில்லை. இந்த சுவையான உணவோடு, அர்ஜூனின் அன்னையின் அன்பான உபசரிப்பும் சேர வயிற்றுக்கு வஞ்சனை இன்றி திருப்தியாய் சாப்பிட்டு எழுந்தனர்.

“அர்ஜூன், இனி ஆரதியைப் பார்க்கலாமா…?” அர்ஜூனிடம் கேட்ட ரஞ்சனாவிடம் சிரித்தான் அவன்.

“எதுக்கு இவ்ளோ அவசரம் சனா… அவ வீட்டுல தானே இருப்பா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க… அப்புறம் பேசலாம்…” அர்ஜூன் சொல்ல பிரபஞ்சன் மறுத்தான்.

“இல்ல அர்ஜூன், அவங்க முகத்தைப் பார்க்கவே பாவமா இருக்கு… பாவம் சின்னப் பொண்ணு, இப்படிதான் விஷயம்னு சொல்லிட்டா அவங்களும் ஹாப்பி ஆகிடுவாங்கல்ல…”

“ம்ம்… சரி உங்க இஷ்டம், வாங்க…” என்றவன் அவர்களுடன் நடந்தான். எதிரில் வந்த அண்ணியிடம்,

“ஆரதி கஹாங் ஹே பாபி…” என்றான் ஹிந்தியில்.

“வஹ் ஊப்பர் ஹே…!” அவரும் ஹிந்தியில் பதில் சொல்ல பிரபா மட்டும் புரியாமல் மனைவியைப் பார்த்தான். மனதுள் இப்போதும் மோடிஜியின் ஹிந்தி திணிப்பு வந்து போனது.

“ச்சே… மோடிஜிக்காக இல்லன்னாலும் நமக்கு யூஸ் பண்ணுற அளவுக்காச்சும் ஹிந்தி படிச்சு வச்சுக்கணும்…” மனது உடனடித் தீர்மானம் போட்டது. அவர்கள் மாடிக்கு சென்று அறையில் எட்டிப் பார்க்க அவளைக் காணவில்லை. பால்கனிக்கு செல்லும் கண்ணாடிக் கதவு திறந்திருக்க அங்கிருந்த ஆரதி கண்ணுக்குக் கிடைத்தாள்.

“சனா, நீங்க இங்கயே இருங்க, நான் முதல்ல அவகிட்ட பேசிட்டு வரேன்…” சொன்ன அர்ஜூன் உள்ளே சென்றான்.

“ரதி…!” அர்ஜூனின் அழைப்பில் திரும்பியவளின் முகம் கதவுக்கு வெளியே நின்ற இவர்களைக் கண்டதும் இறுகியது.

அங்கிருந்து செல்லப் போனவளை அர்ஜூனின் வலிய கரம் பிடித்து நிறுத்த கோபமாய் நிமிர்ந்தாள். அவள் பேசிய ஹிந்தி நமக்கும் புரியாததால் தமிழில் தொடர்வோம்.

“என்ன நினைச்சிட்டு இருக்கிங்க அர்ஜூ, நான் பார்க்கவே கூடாதுன்னு நினைக்கற இவங்களை எதுக்கு என்கிட்ட கூட்டிட்டு வந்திங்க…?” கோபமாய் பொரிந்தாள் ஆரதி.

“உனக்கு அவங்க மேல கோபம் இருக்கலாம், பட் அவங்க உன்னைப் பார்த்து பேசணும்னு நினைக்கறாங்களே…!”

“நான் யாரோடவும், எதுவும் பேசத் தயாரில்லை…”

“ரதி…! குழந்தை போல பிஹேவ் பண்ணாத… உன்னைப் பார்த்துப் பேசறதுக்காக தான் ரெண்டு பேரும் இவ்ளோ தூரம் பயணம் செய்து வந்திருக்காங்க…”

“ஓ… எதுக்கு…? நீங்க ரொம்ப நல்லவரு, வல்லவரு, யாருக்கும் எந்த துரோகமும் பண்ணாதவரு… டாக்டர்ங்கற முறைல அவ புருஷனுக்கு ஹெல்ப் பண்ண தான் சென்னை போனிங்க, அவளுக்கும், உங்களுக்கும் வெறும் நட்பு மட்டும் தான்… இப்படில்லாம் தான சொல்லப் போறாங்க…!” படபடப்புடன் கேட்டாள் ஆரதி.

“வாவ்… எக்ஸாக்ட்லி…! அவங்க பேச வந்ததை அப்படியே சொல்லுற, யூ ஆர் பிரில்லியன்ட்…!”

“எனக்கு உங்க சர்டிபிகேட்டும் வேண்டாம், கல்யாணம் பண்ணப் போற பொண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நீங்களும் வேண்டாம், சமாதானம் சொல்ல ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கார்… முதல்ல வழிய விடுங்க, நான் போகணும்…” என்றாள் எரிச்சலுடன்.

“நீ எங்கயும் போகலை… அவங்க பேசறதைக் கேக்கணும், எங்க ரிலேஷன்ஷிப்பை புரிஞ்சுக்கணும், ஏன்னா நீ தான் என் லைப், நீதான் என் ஒயிப்னு முடிவு பண்ணிட்டேன் ரதி…”

அதைக் கேட்டதும் அவளது கொதிப்பு சற்று அடங்க வெளியே காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்தாள்.

“செய்யறதெல்லாம் செய்துட்டு இப்ப சப்போர்ட்டுக்கு ஆள் பிடிச்சிட்டு வந்திருக்கான்…” வாய்க்குள் முணுமுணுத்தாள்.

“அவங்க கிட்ட நீ கோபமா பேசிடக்கூடாது, பிரபாக்கு ஆப்பரேஷன் முடிஞ்சு கொஞ்சநாள் தான் ஆச்சு… அவங்களால நாம பிரிஞ்சுட்டோம்னு அவங்களை வருத்தப் பட விடக் கூடாது… நம்மளை சேர்த்து வச்ச நிம்மதியோட அவங்க சந்தோஷமா கிளம்பிப் போகணும், இட்ஸ் மை ஆர்டர்…” என்றவன் அவள் நிமிரவும், கண்ணடிக்க அவள் மொத்தமாய் உருகிக் கொண்டிருந்தாள். அவளது வீராப்பும், கோபமும் எல்லாம் அவன் அருகாமையிலும் உரிமையான வார்த்தையிலும் காணாமல் போய்க் கொண்டிருந்தது. இதைத் தானே அவள் மனமும் எதிர்பார்த்தது. இவன் என்னவன், எனக்கானவன் என்ற உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்க விரும்பாமல் தவித்தது.

“இப்ப கூட அவங்க வருந்தக் கூடாது, அவங்களைக் கோபமா பேசக் கூடாதுன்னு அவங்களுக்காகவே தான பேசறீங்க, உங்க மனசுல கொஞ்சமாச்சும் என்மேல லவ் இருக்கா…?”

“அதெல்லாம் நீ நடந்துக்கறது பொறுத்து தான் வரும்… இப்ப அவங்களைக் கூப்பிடறேன், அமைதியா அவங்க சொல்லுறதைக் கேட்டு சமாதானம் ஆயிடணும், ஓகே…?” என்றவன் கையசைத்து அவர்களை உள்ளே வர சொன்னான்.

“ஹாய் ஆரதி, ஹவ் ஆர் யூ…?” புன்னகையுடன் கேட்ட ரஞ்சனாவை பதில் சொல்லாமல் முறைத்தாள்.

“சாரி ஆரதி… எங்க மேல உங்களுக்கு கோபம் இருக்கலாம், அது விஷயம் என்னன்னு சரியாப் புரிஞ்சுக்காததால வந்த பிரச்சனை… சோ, நடந்தது என்னன்னு பொறுமையா கேட்டா யார் மேலயும் எந்தத் தப்பும் இல்லன்னு உங்களுக்கே புரியும்…” நிதானமாய் சொன்ன ரஞ்சனா, “எனக்காக ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் கேட்க முடியுமா…?” என்றாள்.

ஆரதி அர்ஜூனைப் பார்க்க அவன் கண்ணாலேயே சம்மதிக்க சொல்லி ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தான். அதைக் கண்டவள் அமைதியாய் தலையாட்டினாள்.

“தேங்க் யூ ஆரதி…! ஆக்சுவலா அர்ஜூனும், நானும் லவ்வர்ஸ் கிடையாது, வி ஆர் குட் பிரண்ட்ஸ்…” என்றவள் நடந்த எல்லாவற்றையும் ஒளிக்காமல் கூறினாள். பிரபாவும் அதைக் கேட்டிருந்தாலும் அவர்கள் ஹிந்தியில் பேசியதால் பொதுவாய் மட்டுமே புரிந்தது.

அவள் சொன்னதை இடையிடாமல் கேட்டிருந்தாள் ஆரதி.

“நான் லவ் பண்ணறது என் பிரபாவைத்தான், ஒரு பிரண்டா என்னோட ஹஸ்பண்டுக்கு உண்டான பிரச்சனையைத் தெரிஞ்சுகிட்டு அவரை சரி பண்ணி பழைய போல எங்களை சந்தோஷமா வாழ வைக்க தான் அர்ஜூன் டிரை பண்ணார்… எங்க வாழ்க்கையை மீட்டுக் கொடுத்திருக்கார், இப்படிப் பட்ட என் நண்பனோட வாழ்க்கைல எங்களால பிரச்சனை வந்திடக் கூடாது… உங்களைப் பத்தி சொல்லும்போது அர்ஜூன் கிட்ட ஒரு பீல் இருந்துச்சு… அவர் உங்களை லவ் பண்ணறார்னு புரிஞ்சுது, நீங்களும் அவர் காதலைப் புரிஞ்சு ஏத்துகிட்டு கல்யாணத்துக்கு சம்மதிக்கணும், ப்ளீஸ்…”

“நீங்க பேச வேண்டியதெல்லாம் பேசியாச்சா…?” ஆரதி கேட்க, திகைப்புடன் ரஞ்சனா கணவனைப் பார்த்தாள்.

“ஹாங்… ஆமா, நீங்க இன்னும் எங்களை நம்பலியா…?”

“ஓகே..! நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் நம்பறேன், பட் இனியும் பியூச்சர்ல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரலாம், அப்பவும் உங்க பிரண்டு என்னையும், குடும்பத்தையும் விட்டுட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன்னு ஓடி வர மாட்டார்னு என்ன நிச்சயம்…?”

அவள் கேள்வியில் ரஞ்சனாவும், அர்ஜூனும் அதிர்ந்து போக பிரபஞ்சனுக்கு புரியாவிட்டாலும் இவர்களின் முகத்தைப் பார்த்து ஏதோ ஷாக்கான கேள்வி என்று புரிந்து கொண்டான்.

“ஆரதி…! அது வந்து, நான் என்ன சொல்ல வர்றேன்னா…” ரஞ்சனா மீண்டும் விளக்க முயல அர்ஜூன் இடையிட்டான்.

“சனா… ஸ்டாப்…! இதுக்கு மேல நீ என்ன சொல்லியும் பிரயோசனம் இல்லை… எனக்காக ஒரு ரெண்டு நிமிஷம் ரெண்டு பேரும் ஹால்ல போயி வெயிட் பண்ணுங்க, நான் கொஞ்சம் பர்சனலா ரதி கிட்ட பேச வேண்டிருக்கு…”

“இல்ல அர்ஜூன்… நான்…”

“வேண்டாம், ப்ளீஸ்… ஜஸ்ட் டூ மினிட்ஸ்… கீழ வெயிட் பண்ணுங்க, நான் அவளோட வர்றேன்…” கண் சிமிட்டி அவன் சொல்ல புன்னகையுடன் கணவனை அழைத்தாள் ரஞ்சு.

“பிரபா, வாங்க…!”

“என்னாச்சு ரஞ்சு, ஆரதி என்ன சொன்னாங்க…” அவன் புரியாமல் கேட்க, “சொல்லறேன் வாங்க…” என்றவள் அவனை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

அவர்கள் சென்றதும் கோபத்துடன் கை கட்டி நின்ற ஆரதி, “என்ன, இனி நீங்க என்ன சொல்லப் போறீங்க…?” என்றாள்.

“சொல்லறேன், இந்த உதடு ரொம்பப் பேசுதே… எப்ப இருந்து இப்படிப் பேசுது…?” கேட்டுக் கொண்டே அவள் இதழ்களை விரலால் தடவ தட்டி விட்டாள் அவள்.

“கை கூட ரொம்ப கோபப்படுது…” என்றவன் அவள் கையைப் பற்றி தன்னிடம் இழுக்க அவன் நெஞ்சில் விழுந்தவளை இரு கையால் சிறையெடுக்க அவள் விடுபட திமிறினாள்.

“ப்ச்… விடுங்க அர்ஜூன், இதெல்லாம் பண்ணினா நான் மயங்கிருவேன்னு நினைச்சிங்களா…?”

“ஓஹோ…! அப்ப மயங்க மாட்டியா…? உன் கோபம் என் மேல நீ வச்சிருக்கிற லவ்வை விடப் பெரிசா…?” அவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டே கேட்க, அவள் பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.

“ரதி…! இப்ப சொல்லறேன், ஐ லவ் யூ… ஐ வான்ட் டு மேரி யூ… நீ வேண்டாம்னு சொன்னாலும் விட மாட்டேன், ஏன்னா நீயும் என்னை லவ் பண்ணிருக்க…! ஒன் சைடு லவ்வுக்கே அவ்ளோ பண்ணவன் நான்… நீ என்னை லவ் பண்ணது தெரிஞ்சும் விட்டுக் கொடுப்பேனா…?” என்றபடி அவள் மூக்கில் தனது மூக்கை உரச நாணத்திலும் அவன் தீண்டலிலும் தவித்து மேலும் சிவந்து போனாள் ஆரதி.

“ப்ச், விடுங்க அர்ஜூ…” அவன் கையை விலக்க முயல, “ஒரு கிஸ் குடு, விடறேன்…” என்றான் அவன்.

“ஹூக்கும், அதுக்கு வேறாளப் பாருங்க…”

“நிஜமா தான் சொல்லறியா…?” என்றவனின் குரலில் சற்று நிதானித்தவள், தலையைக் குனிந்து கொண்டாள்.

“உனக்கு நான் வேணுமா, வேண்டாமா…? இப்பவே தெளிவா சொல்லிடு ரதி…” என்றவன் குறுகுறுவென்று அவளையே பார்க்க தவித்துப் போனவள் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

“வேணும்…! எனக்கு மட்டும் தான் வேணும்… உன்னை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன், அர்ஜூ…” சொன்னவள் ஒரு முத்தம் கேட்டவனுக்கு முகமெங்கும் முத்த மழை பொழிந்து கொண்டிருந்தாள்.

கண் மூடி அதை அனுபவித்தவன் அவளைத் தன்னில் சாய்த்துக் கொண்டு காதில் மீண்டும் சொன்னான்.

“ஐ லவ் யூ ரதி…!”

“மீ டூ லவ் யூ அர்ஜூ…” சொன்னவள் அவன் இதழில் மென்மையாய் தனது இதழைப் பதித்து விலகினாள்.

“அவங்க கீழே வெயிட் பண்ணுவாங்க, போகலாம் வா…”

“உனக்கு ஓகே தானே…?”

“என்ன ஓகே…”

“மிசஸ் அர்ஜூன் கிஷோர் ஆகறதுக்கு ஓகே தானே…?”

“டபுள் ஓகே…” என்றாள் ஆரதி புன்னகையுடன். அர்ஜூன் கையைக் கோர்த்தபடி சந்தோஷமாய் அவள் கீழே இறங்க, அவர்களைக் கண்டு ரஞ்சுவும், பிரபாவும் புன்னகைத்தனர்.

மகதி சுவீட் பாக்ஸ் ஒன்றைக் கொண்டு வந்து நீட்டி, “எடுத்துக்கோங்க, இவ்ளோ தான் என் தங்கையின் கோபம்…” என்று சொல்ல புன்னகையுடன் எடுத்துக் கொண்டனர்.

“என்னடா அர்ஜூன், சீக்கிரமே மேரேஜ்க்கு ஏற்பாடு பண்ணிடவா…?” என்ற அன்னையிடம் தலையாட்டியவன்,

“ஆமாம் மா… எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க… இல்லன்னா, மறுபடி வேதாளம் முருங்க மரம் ஏறிடப் போகுது…” என்றவனின் இடுப்பில் கிள்ளினாள் ஆரதி. சந்தோஷமாய் அவர்களைப் பார்த்தபடி நின்ற ரஞ்சுவின் கையைப் பற்றிக் கொண்டவள், “ரொம்ப தேங்க்ஸ் தீதி… இனி யார் என்ன சொன்னாலும் என் அர்ஜூ மேல நான் டவுட் பண்ணவும் மாட்டேன், யாருக்கும் அவரை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்…” என்றாள் புன்னகையுடன்.

“ரொம்ப சந்தோஷம் ஆரதி, எப்பவும் இதே புரிதலோட நீங்க சந்தோஷமா இருக்கணும்…” என்ற ரஞ்சனா கணவனை திருப்தியுடன் நோக்க அவன் மனதிலும் நிறைவு.

பிறகு ஆரதியின் சுபாவம் அப்படியே கலகலப்பாய் மாறிப் போயிருந்தது. ரஞ்சனாவிடம் தீதி, தீதி என்று அர்ஜூன் பத்தின விஷயங்களை ஆர்வமாய் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அடுத்த நாள் இரு ஜோடிகளும் குவாலியர் கோட்டை, ஜெய்விலாஸ் மஹால், சூரியக் கோவில் என்று ஆர்வத்துடன் சுற்றினர்.

அந்த நாளை சந்தோஷமாய் கழித்துவிட்டு மறுநாள் காலை ரஞ்சனாவும், பிரபாவும் சென்னைக்கு கிளம்பினர். விமானத்தில் இருவருக்கும் டிக்கட் புக் பண்ணிக் கொடுத்து விமான நிலையத்தில் டிராப் செய்ய அர்ஜூனுடன், ஆரதியும் வர ஜோடியாய் கிளம்பினர்.

அர்ஜூனின் அன்னை ரஞ்சனாவை அன்போடு முத்தமிட்டு அவளுக்கு ஒரு டிசைனர் சேலையும், பிரபாவுக்கு ஒரு ஜிப்பாவும் பரிசாக வழங்கினார். அனைவரிடமும் விடை பெற்று மஹதியின் குழந்தையின் குண்டுக் கன்னத்தில் ரஞ்சனா முத்தமிட்டு காரில் அமர விமான நிலையத்துக்கு புறப்பட்டனர். அண்ணனின் காரை எடுத்திருந்தான் அர்ஜூன்.

விமான நிலையத்தில் இறக்கி விட்டதும், “அடுத்து எங்க மேரேஜ்க்கு ரெண்டு பேரும் ஒன் வீக் முன்னாடியே வந்திடணும் தீதி…” என்ற ஆரதி ரஞ்சனாவை முத்தமிட்டு அவள் கையில் ஒரு கிப்ட் பாக்ஸைக் கொடுத்தாள்.

“வீட்டுக்குப் போயி தான் இதைப் பிரிச்சுப் பார்க்கணும்…” என,

“உனக்கு நான் எந்த கிப்டுமே கொடுக்கலையே…” என ரஞ்சனா வருந்த, “எனக்காக மிகப் பெரிய கிப்ட்டை விட்டுக் கொடுத்திருக்கிங்களே, இதுக்கு மேல என்ன பரிசு இருக்கு…” எனக் கூறித் திகைக்க வைத்தாள் ஆரதி.

பிரபஞ்சன் அர்ஜூனை அணைத்து விடுவித்தான்.

“எல்லாத்துக்கும் தேங்க்ஸ் அர்ஜூன்… சீக்கிரமே கல்யாண இன்விடேஷனை எதிர்பார்க்கிறோம்…” என்று இருவரும் விடைபெற்று விமானத்தில் சந்தோஷமாய் கிளம்பினர்.

வீட்டுக்கு வந்து சிறிது ஓய்வுக்குப் பிறகு ஆரதி கொடுத்த கிப்ட் பாக்ஸைத் திறந்து பார்க்க அதில் ரோஜாக்களுக்கு நடுவே அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.

“இந்த குலாபி எப்பவும் இனி என் பிரபா பையாவுக்கு மட்டுமே சொந்தம்…” என எழுதி இருந்தாள். அதைக் கண்ட ரஞ்சனாவும், பிரபாவும் புன்னகைத்துக் கொண்டனர்.

“ரஞ்சு…! மனசு ரொம்ப லேசா சந்தோஷமா இருக்கு…”

“ஆமாங்க, ஆரதி ரொம்ப நல்ல பொண்ணு… கொஞ்சம் குழந்தைத் தனமா இருந்தாலும் அர்ஜூன் மேல உயிரையே வச்சிருக்கா… அந்த உரிமை உணர்ச்சி தான் அவளைக் கோபப் பட வச்சிருக்கு, அவங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடி… இனி சீக்கிரமே அவங்க கல்யாணத்துக்கு ரெடியாக வேண்டியது தான்…” என்றாள் மன நிறைவுடன்.

“ம்ம்.. அதுக்கு முன்னாடி நாம அர்ஜூன் கேட்ட பரிசை ரெடி பண்ண வேண்டாமா…?” பிரபா கண்ணடித்துக் கேட்க புரியாமல் பார்த்தவளிடம்,

“அதான் மா, அர்ஜூனுக்கு மாப்பிள்ளை ரெடி பண்ண வேண்டாமான்னு கேட்டேன்…” விளக்கியவனை அவள் செல்லமாய் முறைக்க அவன் வெள்ளமாய் அணைத்துக் கொண்டான். இத்தனை நாள் அனுபவித்த வேதனைகள் எல்லாம் அந்த காதல் வெள்ளத்தில் அடித்துச் செல்ல சந்தோஷம் மட்டுமே இருவர் மனதிலும் நிறைந்திருந்தது.

“ரஞ்சு…! ஐ லவ் யூ தங்கம்…” மனைவியின் காதில் கிசுகிசுக்க அவன் நெஞ்சோடு இறுக ஒட்டிக் கொண்டாள் ரஞ்சனா.

“ம்ம்… நானும் லவ் யூ டா புருஷா…!”

“என்னது..? டா வா…?”

“ம்ம்… காதல் கரை புரண்டு ஓடும்போது இப்படியும் சில மாற்றம் வரும்…” என்றாள் அவள் கிறக்கத்துடன்.

“ஓஹோ…! காதல்ல எழுத்துப் பிழை வந்தா தப்பில்லை, எண்ணத்துல தான் பிழை வரக் கூடாது…” என்றவன் அவளை மேலே பேச விடாமல் இதழை மூடிக் கொள்ள அங்கே காதலென்னும் சாகரத்தில் கரையேற மனமின்றி  இருவரும் சந்தோஷமாய் நீந்தத் தொடங்கினர்.

அன்பான ஒரு சொல்லுக்குள்

உருகி விடுவது தான் காதல்…

உரிமைகள் கொடுக்கும் உணர்விலே

தான் உறவுகள் வாழ்கிறது…

வாழ்க்கை நமக்காக வைத்திருப்பதை

ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டால்

மாற்றங்களும் மகிழ்ச்சி தரும்…

Advertisement