Advertisement

 அத்தியாயம் – 24

மேலும் இரண்டு வாரங்கள் ஓடியிருக்க பிரபஞ்சனைப் பரிசோதித்த அர்ஜூன், “யூ ஆர் பர்பக்ட்லி ஆல்ரைட்…” என்றான் சந்தோஷத்துடன். அதைக் கேட்டதும் பிரபஞ்சனின் முகம் பூவாய் மலர அருகே இருந்த மனைவியைக் காதலுடன் நோக்கினான்.

“அப்படின்னா நான் நார்மல் ஆகிட்டேனா… இனி எப்பவும் போல, எல்லாரையும் போல இருக்கலாமா…?”

“கண்டிப்பா… இனி எந்தத் தடையுமில்லாம பழைய போல சந்தோஷமா இருக்கலாம், வேலைக்கும் போகலாம்…”

“தேங்க்ஸ் அர்ஜூன், தேங்க் யூ வெரி மச்…” என்றவன் கை குலுக்கி அவனைக் கட்டிப்பிடிக்க, புன்னகைத்தான் அர்ஜூன்.

அவர்களைப் பார்த்து நின்ற ரஞ்சனாவின் மனம் நிறைந்து கண்களில் கண்ணீர் நிறைந்தது.

“இதெல்லாம் உங்களால தான் சாத்தியம் அர்ஜூன், என் பிரபாவை பழையபடி எனக்குத் திரும்பக் கொடுத்திருக்கிங்க, உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னு தெரியல…”

“அதுக்கென்ன, சீக்கிரமே ஒரு பையனைப் பெத்துக்கங்க… நானும் ஒரு பொண்ணுக்கு ஏற்பாடு பண்ணிடறேன், ரெண்டு பேரும் வருங்காலத்துல சம்மந்தி ஆகிடுவோம்…”

“அய்யே, மூஞ்சப் பாரு… நான் என் பையனுக்கு எந்த கமிட்மெண்டும் கொடுக்க மாட்டேன்ப்பா… அவனுக்கு யாரைப் பிடிக்குதோ அவ தான் என் மருமக…”

“ம்ம்… குட் பாலிஸி… நான் சன்டே ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கேன், கார்ல தான் போறேன்… நீங்களும் என்னோட வரீங்க தானே…”

“கண்டிப்பா வரோம் அர்ஜூன், அதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கோம்…”

“ஓ…! எப்ப கிளம்பறீங்க…?”

“டுடே நைட் போயிட்டு நாளை மறுநாள் நைட் ரிட்டர்ன்…”

“ம்ம்… பத்திரமா போயிட்டு வாங்க…”

“சரி, நீங்க ஆரதி கிட்ட மறுபடி பேச டிரை பண்ணலியா…?”

“கால் பண்ணேன் சனா, பட் அவ எடுக்கலை…”

“ம்ம்… ஓகே, பார்த்துக்கலாம்…” என்றவள் பிரபஞ்சனுடன் வீட்டுக்குக் கிளம்பினாள்.

“ரஞ்சு…! நாம பேசினா ஆரதி புரிஞ்சுப்பாளா…? அர்ஜூன் இவ்ளோ டிரை பண்ணியும் போன் எடுக்கலைன்னு சொல்லறாரே…” கவலையாய் கேட்டான் பிரபஞ்சன்.

“ம்ம்… புரிஞ்சுக்கிற போல பேசுவோம், அப்புறம் கடவுள் விட்ட வழி…” என்றாள் ரஞ்சனா.

இருவரும் இரவுப் பேருந்தில் கோவை கிளம்பினர். விடியலில் சர்ப்ரைஸாக வந்து நின்ற மகன், மருமகளைக் கண்டு ராதிகா திகைத்துப் போனார். மகனைக் கண்ட சிவகுமார் கண்களில் நீர் நிறைய அவன் கையை ஆறுதலாய் பற்றிக் கொண்டார்.

“சாரி டா பிரபா… ஒரு அப்பாவா உங்களுக்கு நான் எந்த நல்லதும் பண்ணலை, உனக்கு உடம்புக்கு முடியாம இத்தனை நாள் படுக்கைல கிடந்தும் வந்து பார்க்கக் கூட முடியாத பாவியாகிட்டேன்… இந்த அப்பாவை மன்னிச்சிடு கண்ணா…” என்றார் கை கூப்பி கண்ணீருடன்.

“அப்பா… உங்களுக்கு முடியாம இருக்கும்போது எப்படி வருவிங்க, பரவால்ல விடுங்க… அதான் சரியாகிட்டேனே…” தந்தையை சமாதானப் படுத்தினான் மகன். பேச்சு சத்தம் கேட்டு உறக்கம் கலைந்து எழுந்து வந்த பரிமளம் பாட்டி இவர்களைக் கண்டதும் சந்தோஷக் கண்ணீருடன் அணைத்துக் கொண்டார்.

“பிரபா… எப்படிடா கண்ணா இருக்க…? ரஞ்சுக் கண்ணு, ஒத்த ஆளா நின்னு என் பேரனை நல்லபடியா திரும்பக் கொண்டு வந்துட்டியே… ராசாத்தி…” இருவரையும் உச்சி முகர்ந்தார். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ராதிகா நெகிழ்வுடன் மருமகளின் கையைப் பற்றிக் கொண்டார்.

“ரெண்டு பேரும் உக்காருங்க, காபி எடுத்திட்டு வரேன்…” சொன்னவர் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தார். காபி குடித்ததும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும்படி கூறி இருவரையும் பிரபாவின் அறைக்கு அனுப்பினார்.

வெகு நாட்களுக்குப் பிறகு நீண்ட பயணம் செய்ததில் பிரபா உண்மையிலேயே களைத்துப் போயிருந்தான். இருவரும் உறங்கி எழுந்து வரும்போது டிபன் தயாராய் இருந்தது. உணவு மேஜையில் பெரிய வயிற்றுடன் அமர்ந்து ஆப்பத்தை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் வைஷாலி.

“வைஷூ… எப்படி இருக்க…? என் மருமகன் என்ன சொல்லுறான்…” வாஞ்சையுடன் தங்கை தலையைக் கோதிவிட்டு அருகே அமர்ந்தான் பிரபஞ்சன்.

“எனக்கென்ன சூப்பரா இருக்கேன் அண்ணா, இனி உனக்கு உடம்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையாமே… என் பிள்ளை பிறந்து அவனுக்கு சீர் செய்ய சபைல தாய்மாமன் வந்து முன்னாடி நிக்க முடியாமப் போயிருமோன்னு நினைச்சேன், நான் கும்பிடற கடவுள் காப்பாத்திட்டார்…” அண்ணனுக்காய் செய்த பிரார்த்தனையில் கூட அவளது சுயநலம் கலந்திருக்க பிரபஞ்சன் மனைவியைப் பார்க்க அவள் சிறு புன்னகையுடன் கண் சிமிட்டினாள்.

“உன் கடவுள் காப்பாத்தினாரோ இல்லியோ, என் ரஞ்சு தான் ராத்திரி, பகல் பாராம என்னை கவனிச்சு காப்பாத்திருக்கா…” என்றவனின் பார்வையில் நேசம் வழிந்தது.

“உக்காரு ரஞ்சு மா… உனக்கும், பிரபாவுக்கும் பிடிச்ச ஆப்பமும், கடலைக் குழம்பும் தான் செய்திருக்கேன்…” சொன்ன ராதிகா இருவருக்கும் தட்டு வைத்துப் பரிமாறினார். மகன் சாப்பிடும்போது கலங்கிய கண்ணை முந்தானையால் துடைத்து அவன் தலையை வருட அன்னையை ஆறுதலாய் நோக்கிப் புன்னகைத்தான் பிரபஞ்சன்.

சாப்பிட்டு மதியம் சமைக்க உதவி செய்ய வந்த மருமகளை அதட்டி ஹாலுக்கு செல்லுமாறு அனுப்பினார் ராதிகா.

“அண்ணி…! நீங்க போட்டிருக்க சுரிதார் நல்லாருக்கே… நான் கூட இதே டிஸைன்ல தேடிட்டு இருக்கேன், வேற கலர்ல இருந்தா எனக்கொண்ணு வாங்குங்க…” என்றாள் வைஷூ.

“ம்ம்… சரி வைஷூ…” என்றவள் பாட்டியின் அருகே அமர அவளை ஏற இறங்கப் பார்த்தவர், “உன் புருஷனை கவனிச்சுகிட்ட அளவுக்கு உன்னை கவனிக்கல போலருக்கே, ரொம்ப இளைச்சுத் தெரியுற ரஞ்சு மா…” என்றார்.

“இனி, அவளை நான் கவனிச்சுப்பேன் பாட்டி…” என்ற பேரனை நெகிழ்வுடன் மறுபக்கம் அமர்த்திக் கொண்டார்.

“பாட்டி, இவங்க வந்ததும் கொஞ்சிட்டு இருக்க, என்னை எப்பவாச்சும் இப்படி கொஞ்சி, கவனிச்சிருக்கியா…?” வைஷூ பொருமலுடன் வந்து முன்னில் நிற்க முறைத்தார் பரிமளம்.

“உன்னை என்ன கவனிக்கறது…? நீ தான் கண்டதும் சாப்பிட்டு உடம்புக்கு வருத்தி வைக்கறியே… இப்படி சாப்பிட்டா பிரசவம் பிரச்சனையாகும்னு சொன்னாக் கேட்டா தானே… கொஞ்சம் கூட பெரியவங்க சொல்பேச்சு கேட்காம ஒவ்வொண்ணும் வருத்தி வச்சுப்ப… பொண்ணுன்னா உன் அண்ணியைப் போல இருக்கணும்…”

“போங்க பாட்டி, உங்களுக்கு எப்பவும் அண்ணனும், அண்ணியும் தான் உசத்தி…” சிணுங்கிய தங்கையை அருகே அழைத்து அமர வைத்தான் பிரபஞ்சன்.

“பாட்டி கொஞ்சலைன்னா என்ன…? என் தங்கையை நான் கொஞ்சறேன்…” என்று பிரபஞ்சன் தங்கையின் தலை வருடி சொல்லவும் சட்டென்று அவள் கண்கள் கலங்கியது.

“என்ன இருந்தாலும் என் அண்ணாக்கு தான் என் மேல பாசம்…” அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“ம்ம்… அவனுக்கிருந்து என்ன பண்ண, உனக்கு இல்லியே…” பாட்டி வெடுக்கென்று சொல்ல வைஷு முகம் வாடினாள்.

“பாருங்கண்ணா, பாட்டி எப்பவும் என்னோட சண்டை போட்டுட்டே இருக்காங்க…” குற்றப்பத்திரிகை வாசித்தாள்.

“வேண்டாம் பாட்டி… அவளோட சுபாவம் நமக்குத் தெரிஞ்சது தானே, அவளை அவளாவே ஏத்துக்க டிரை பண்ணுவோம்… எதையும் நாமளா சொல்லி மாத்த முடியாது, அவளாவே அனுபவத்துல புரிஞ்சுப்பா…” என்றாள் ரஞ்சனா.

“அதானே…! நான் என்ன வேணும்னா இப்படி இருக்கேன், அது என் சுபாவம்… கொஞ்சநாள் பழகின அண்ணிக்குப் புரிஞ்சது கூட இத்தனை வருஷமா கூட இருக்கிற பாட்டிக்குப் புரியலையே…” என்று பழிப்புக் காட்டினாள்.

இளையவர்கள் பேசிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் ரஞ்சனாவின் பெற்றோரும், தங்கை சஞ்சனாவும் அங்கே வர அவர்களைக் கண்டவள் இனிதாய் சந்தோஷித்தாள். வைஷுவின் கணவன் வினோத்தும் கூட மதிய உணவுக்கு வந்து விட்டான். அனைவருக்கும் அவர்கள் வந்ததை சொல்லி மதிய உணவுக்கு வரவழைத்திருந்தார் ராதிகா.

சக நல விசாரிப்பும், அக்கறையும், அன்பும், சந்தோஷக் கலகலப்புமாய் வெகு நாட்களுக்குப் பிறகு குடும்பத்தில் எல்லாரும் ஒன்று கூடி அந்நாளைக் கொண்டாடினர். மாலை சிற்றுண்டி முடிந்து வைஷுவின் கணவனும், ரஞ்சுவின் வீட்டாரும் கிளம்பினர்.

“தங்கம்… தனியாளா உன்னை அங்கே கஷ்டப்பட விட்டுட்டு கையாலாகாம உக்கார்ந்திருக்கமேன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… ஆனாலும் எல்லாத்தையும் சமாளிச்சு மாப்பிள்ளையை பழையபடி மீட்டுக் கொண்டு வந்திருக்க, உன்னை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு ரஞ்சு மா…” மகளின் கை பிடித்து நெகிழ்வுடன் சொன்ன கணவனைப் புன்னகையுடன் பார்த்தார் துர்கா.

“அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தங்க வச்சிருக்கிற பாசம் அப்படிங்க… சம்மந்தி, பிள்ளைங்களுக்கு சுத்திப் போடுங்க…! நம்ம கண்ணே பட்டுடப் போகுது…” அன்னை சொல்லவும் கணவனைப் பெருமையுடன் ரஞ்சனா பார்க்க, அவன் விழியிலும் காதல் வழிந்தது.

இரவு உணவு முடிந்து மொட்டை மாடிக்கு சென்று நிலவொளியில், இதமாய் வீசிய காற்றை ரசித்தபடி நின்ற பிரபஞ்சனின் மனம் முழுதும் கடந்து போன நாட்களை யோசிக்க, ரஞ்சனாவே மனதில் நிறைந்திருந்தாள். மனதின் மென்மையில் முகம் விகசிக்க நிலவைப் பார்த்தபடி நின்றவனின் முதுகில் சட்டென்று ஸ்பரிசத்தை உணர்ந்தான்.

அவன் தோளில் முகம் வைத்து பின்னிலிருந்து அவனைக் கட்டிக் கொண்டிருந்தாள் அவனது மனையாள். அசையாமல் சில நிமிடங்கள் அப்படியே இருவரும் நின்றிருக்க அவள் கையைப் பற்றி முன்னில் நிறுத்தியவனின் விழிகள் அவள் முகத்தையே பார்க்க அவன் பார்வை தாளாமல் நாணத்துடன் அவள் விழிகள் நிலம் பார்த்தன.

“ப்ச்… அப்படிப் பார்க்காதீங்க பிரபா, படுக்காம இங்க வந்து காத்து வாங்கிட்டு இருக்கீங்க…”

“ரொம்ப நாளுக்கப்புறம் மனசு இன்னைக்கு ரொம்ப நிறைவா இருக்கு ரஞ்சு மா…”

“ம்ம்… எனக்கும் தான், எல்லாரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு… அத்தை நமக்கே தெரியாம சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திட்டாங்க…”

“ம்ம்… நாம சந்தோஷமா உணர்ற ஒவ்வொரு நொடியும் அர்ஜூனை நினைக்காம இருக்க முடியல, ஹி ஈஸ் ரியல்லி கிரேட்…” என்றான் பிரபஞ்சன்.

“ம்ம்…”

“ரஞ்சு…! நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்காம உண்மைய சொல்லுவியா…?” அவன் கேள்வியில் புருவங்கள் முடிச்சிட, “என்ன..?” என்றாள் புரியாமல்.

“அர்ஜூன் உன்னை அவ்ளோ நேசிச்சும் ஒரு அருமையான மனுஷனை உனக்கு எப்படி மிஸ் பண்ண தோணுச்சு…?”

“ஏன்னா, நான் உங்க மிசஸ் ஆகணும்னுங்கறது தானே விதி… என்னவோ, என்னை நம்பி வெளியூருக்கு வேலைக்கு அனுப்பின பெத்தவங்களோட நம்பிக்கையை சிதைச்சிடக் கூடாதுன்னு எனக்குள்ள ஆழமா ஒரு எண்ணம்… எந்த ஒரு சூழல்லயும் அவங்க நம்பிக்கையைப் போக்குற போல நான் நடந்துக்கக் கூடாதுன்னு தீர்மானமா இருந்தேன்… அப்புறம் இந்த ஹிந்திக்காரங்களைக் கண்டாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி… என்னதான் அர்ஜூன் நல்லவனா இருந்தாலும் அவனை நட்பைத் தாண்டி என் மனசு ஏத்துக்கலை, அப்படி ஏத்துக்காததால தானே உங்களை மாதிரி ஒரு நல்ல மனுஷன் எனக்குப் புருஷனா கிடைச்சிருக்கான்… இதுக்கு மேல காரணம் சொல்ல எனக்குத் தெரியலை…”

சந்தோஷமாய் அவள் கையை எடுத்து தன் இதழ்களைப் பதித்தவன் கையை விடாமல் அவன் நெஞ்சில் வைத்துக் கொண்டு ரஞ்சனாவையே பார்த்தான்.

“ரஞ்சு, நான் ரொம்ப லக்கி…”

“ஓ…! பட் நான் லக்கி இல்ல, ஆசிர்வதிக்கப் பட்டவள்…! என்றவளை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவன் கைகளுக்குள் பாந்தமாய் கண்மூடி நின்றவள் அந்த இரவு நேரத் தனிமையின் இனிமையை ரசித்து நின்றாள்.

பிரபஞ்சனின் இதழ்கள் அவள் நெற்றியில் முத்தமிட சிலிர்ப்புடன் அவனை இறுகக் கட்டிக் கொண்டவளைக்  கண்டு நிலவும் நாணத்துடன் மேகத்துள் ஓடி மறைந்தது.

“ரஞ்சு…! பசிக்குது மா…” அவள் காதுக்குள் கிசுகிசுத்தவனை கண் திறந்து நோக்கியவள், “இப்ப தானே சாப்பிட்டோம், ப்ரூட்ஸ் எதுவும் கொண்டு வரட்டுமா…?” என்றாள்.

“ப்ச்… எனக்கு இந்த ப்ரூட் போதும்…” என்றவனின் இதழ்கள் மனைவியின் அனுமதியின்றியே அவள் இதழ்களைக் கவ்வி சுவைத்து பசியாற முயல, பசியோ அதிகரிக்கவே செய்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவளை விட்டவன் காதில் கிசுகிசுத்துக் கேட்டான்.

“சாப்பாடு கிடைக்க வாய்ப்பிருக்கா…?” அவள் முகம் அந்த இருட்டிலும் நாணத்தில் சிவந்து விகசித்திருக்க, “ம்ம்… ரூமுக்கு வாங்க, விருந்தே தரேன்…” என்றவள் அடுத்த நொடி அவனிடமிருந்து நழுவி கீழே சென்றிருந்தாள்.

மனதின் உற்சாகம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நெருப்பாய் பற்றிக் கொள்ள மனம் நிறைந்த காதலோடு தன்னவளைத் தேடிப் போனான் பிரபஞ்சன். தனது செயல், விருப்பு, வெறுப்பு, கோபம், நேசம், அக்கறை, அன்பு எல்லாவற்றிலும் அவன் மட்டுமே தனது பிரபஞ்சத்தின் காதலன் என நிரூபித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.

இரண்டு நாட்கள் கழிந்திருக்க, இருவரும் அர்ஜூனுடன் கிளம்பினர். முதலில் காரில் செல்ல நினைத்தாலும் பிரபஞ்சனுக்கு அத்தனை தொலைவு கார் யாத்திரை வேண்டாமென்று பிளைட்டில் டிக்கட் புக் பண்ணியிருந்தான்.

காலை 8.45க்கு சென்னையிலிருந்து இன்டிகோ பிளைட்டில் ஏறியவர்கள் நடுவில் டெல்லி வழியாக குவாலியரை சென்றடைகையில் மதியம் 3.45 ஆகியிருந்தது. அதற்கே பிரபஞ்சன் மிகவும் சோர்ந்திருந்தான். ரஞ்சனாவின் முகத்திலும் களைப்பு தெரிந்தது. டாக்ஸியில் வீட்டுக்குப் பயணிக்கும் வழியில் அவனது ஊரைப் பற்றிய பெருமைகளை அர்ஜூன் சொல்லிக் கொண்டே வந்தான்.

“குவாலியர் கோட்டை, ஜெய்விலாஸ் அரண்மனை, சூரியக் கோவில் எல்லாம் இங்கே பார்க்க வேண்டிய இடம்… இந்தியக் கட்டமைப்புல சீனாவோட கட்டமைப்பும் சேர்ந்து அழகாருக்கும்… அதுவும் கோட்டை ஒரு குன்றோட உச்சியில இருக்கிறதால அங்கிருந்து குவாலியர் சிட்டியும், பள்ளத்தாக்கும் பார்க்க ரொம்ப அழகாருக்கும்…”

அவன் சொல்லுவதை இருவரும் ஆர்வமாய் கேட்டுக் கொண்டே வெளியே பார்வையைப் பதித்திருந்தனர்.

பெரிய அழகான கட்டிடங்கள் கண்ணைக் கவர்ந்தன. மும்பை அளவு ஜனசந்தடி இல்லாவிட்டாலும் பரபரப்பாகவே இருந்தது. நிறைய அபார்ட்மெண்டுகள் உயர்ந்து நிற்க அதைக் கடந்ததும் அர்ஜூனின் வீடு வந்தது. விஸ்தாரமான இடத்தில் நான்கு படுக்கை அறைகளும், சகல வசதிகளுமாய் அழகாய் இருந்தது அவன் வீடு.

அர்ஜூன் வருகையை முன்னமே அறிவித்திருந்ததால் ஹாலிலேயே காத்திருந்தனர். அவனது அம்மா சுண்டினால் ரத்தம் வரும் அளவுக்கு கலராக இருந்தாலும் கணவனின் மறைவில் சற்று தளர்ந்திருந்தார்.

“ஸ்வாகத் ஹே பேட்டா… ஆவோ பேட்டி…” கை கூப்பி இருவரையும் இன்முகத்துடன் வரவேற்க, அர்ஜூனின் அண்ணனும், அண்ணியும் புன்னகையுடன் வரவேற்றனர்.

“வணக்கம் மா, நல்லாருக்கீங்களா…” தமிழில் பிரபஞ்சன் கை குவித்துக் கேட்க புன்னகைத்து தலையாட்டினார்.

“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க மா…” என்ற ரஞ்சனா கணவனுடன் அவரது காலில் விழ, சட்டென்று திகைத்தவர் மனம் நிறைய வாழ்த்தினார். அவர்கள் இருவரையும் அப்பெரிய மனுஷிக்கு உடனே பிடித்துப் போனது.

“சாச்சா…” ஓடி வந்து அர்ஜூனின் காலைக் கட்டிக் கொண்ட அண்ணனின் குழந்தையை எடுத்துக் கன்னத்தில் முத்தமிட்டான் அர்ஜூன்.

“சாச்சா…! வோ மேரீ சாச்சி ஹே ந…” (அவங்க என் சாச்சியா…) அவனிடம் சந்தேகம் கேட்ட குழந்தையை மறுத்து தலையாட்டினான். இனி தமிழில் தொடர்வோம்…

அர்ஜூன் அண்ணன், அண்ணியை அறிமுகப்படுத்த அர்ஜூனின் அண்ணனுக்குத் தமிழ் ஓரளவு தெரிந்திருந்தது.  மஹதிக்கு தமிழ் தெரியாதென்பதால் அவள் அதிகம் பேசவில்லை. ஆரதி விஷயத்திலும் அவள் அர்ஜூன் மேல் சற்று கோபமாய் இருப்பதாய் தோன்றியது.

குளித்து வந்தவர்களை சப்பாத்தி, குருமா, இன்னும் பெயர் தெரியாத சில வடநாட்டு உணவுகள் மணத்தோடு வரவேற்க பசியோடு சாப்பிட அமர்ந்தனர்.

அப்போது சிறு புயல் போல் உள்ளே நுழைந்தாள் ஆரதி.

அன்பின் அதிகபட்ச

எதிர்பார்ப்பென்பது

சகலமும் நீதானென

சரணடைதலே…

மண்டியிட மட்டுமல்ல

மன்னிப்பு கேட்கவும்

தயங்காதது தான்

நேசத்தின் விதிமுறை…

Advertisement