Advertisement

 அத்தியாயம் – 23

மறுநாள் காலையிலேயே பிரபஞ்சனை டிஸ்சார்ஜ் செய்ய, ராதிகா அவர்களை திருஷ்டி கழித்துவிட்டு வீட்டுக்குள் அனுப்புமாறு சரிதாவிடம் சொல்லியிருக்க, அவள் அதை செய்துவிட்டே இருவரையும் உள்ளே அனுப்பினாள்.

சக்கர நாற்காலியில் வந்தாலும் ஊன்றுகோலின் உதவியுடன் நடந்து உள்ளே சென்றான் பிரபஞ்சன். வயிறுவலி காணாமல் போயிருக்க முன்னைவிட இப்போது நடக்க முடிந்தது.

அவனைக் கட்டிலில் அமர வைத்து நகர்ந்த ரஞ்சனாவின் மௌனத்தை பிரபஞ்சனும் கவனித்திருந்தான். அவனும் முதலில் அதை கவனிக்கவில்லை. ரஞ்சனா அவனது தேவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டாலும், சின்னதாய் புன்னகைக்கவோ, அதிகமாய் ஒரு வார்த்தை கூடப் பேசவோ செய்யவில்லை. அவனை டிஸ்சார்ஜ் செய்ய சொன்னதும் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், புன்னகையும் பிறகு காணாமல் போயிருந்தது. இரவு கவனிக்காமல் இருந்தாலும் காலையிலிருந்து தேவையின்றி ஒரு வார்த்தை கூட அவள் பேசாமல் இருக்கவும் ரஞ்சுவுக்கு என்னாயிற்று… சட்டென்று இந்த மௌனம் எதனால்…? ஒருவேளை அர்ஜூனின் வாழ்க்கையில் வந்த குழப்பத்திற்கு தான் காரணமாகி விட்டோம் என வருந்துகிறாளா…? என யோசித்தாலும் அவனுக்குப் புரியவில்லை.

யோசித்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தவனின் முன்னில் கப்பை நீட்டியவள், “காபி குடிங்க…” எனவும் வாங்கிக் கொண்டவன் அவள் முகத்தை ஏறிட அங்கே நிற்காமல் நகரப் போனவளின் கை பற்றி நிறுத்தினான்.

“ரஞ்சு…!”

“சமைக்கணும், என்ன வேணும்னு சொல்லுங்க…”

“மெதுவா சமைக்கலாம், உன்கிட்ட கொஞ்சம் பேசணும், இப்படி பக்கத்துல உக்காரு…”

“இல்ல, சமைச்சுட்டு வீடெல்லாம் கிளீனிங் பண்ணனும்… என்ன விஷயம்னு சொல்லுங்க…” இறுகிய முகத்துடன் நின்று கேட்டவளை அமைதியாய் நோக்கினான்.

“சரி, போ…” என்று கையை விட சென்று விட்டாள். சமைத்து வீடு கூட்டித் துடைத்து, துவைத்து என்று சிறிதும் ஓய்வின்றி

சுழன்று கொண்டிருந்தவளைக் காண அவனுக்குப் பாவமாய் இருந்தது.

“பாவம்…! எத்தனை நாளாய் இவளும் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருக்கிறாள்…?” மனைவியை நினைத்து வருந்தினான். அன்னையிடம் பேசத் தோன்றவே அலைபேசியில் அழைக்க அவரிடம் சிறு பதட்டம் தெரிந்தது.

“பிரபா…! வைஷுவுக்கு திடீர்னு வயிறு வலிக்குதுன்னு சொல்லுறா, அதான் ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கோம்…”

“ஓ…! அவளுக்கு டெலிவரிக்கு இன்னும் நாள் இருக்குன்னு தானே டாக்டர் சொல்லி இருந்தாங்க…”

“ஆமாம்பா, இதென்னவோ முன்னமே வலிக்குதுன்னு வயித்தைப் பிடிச்சிட்டு கதர்றா… பயமாருக்கு…”

“ம்ம்… சரிம்மா…! பயப்படாதீங்க, டாக்டரைப் பார்த்திட்டு எனக்குக் கூப்பிடுங்க…”

“சரிப்பா…! நீ காலைல டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தாச்சு தானே, இப்ப உடம்புக்கு நல்லாருக்கா…?”

“ம்ம்… என்னை விடுங்கமா, வைஷூவை கவனிங்க… டாக்டர் பார்த்ததும் எனக்கு கூப்பிடுங்க…”

“ம்ம்… சரிப்பா, அஞ்சு நிமிஷத்துல ஹாஸ்பிடல் வந்திரும், அப்புறம் கூப்பிடறேன்…” சொன்னவர் வைத்து விட்டார்.

“ரஞ்சு…!” அவனது அழைப்பில் மாடியில் துவைத்த துணியை காயப் போட்டு வந்தவள் அருகே சென்றாள்.

“என்னங்க…!”

“அம்மாக்கு கால் பண்ணேன்… வைஷுவுக்கு திடீர்னு வலி வந்திருச்சுன்னு ஹாஸ்பிடல் போயிட்டு இருக்காங்களாம்…”

“ஓ… அவளுக்கு இன்னும் டெலிவரிக்கு டைம் ஆகலியே…”

“அதான் எனக்கும் தெரியல, டாக்டரைப் பார்த்திட்டு கூப்பிட சொன்னேன்…”

“ம்ம்… பயப்படாதீங்க, கேஸ் பிராப்ளம் எதுவுமா இருக்கும்…” சொன்னவள் அடுக்களைக்கு நகர்ந்தாள். மதியம் உணவு முடிந்து மாத்திரையின் உதவியில் கண் அசந்தவன் எழுந்ததும் அவளிடம் கேட்டான்.

“ரஞ்சு…! அம்மா கால் பண்ணாங்களா…?”

“ம்ம்… வைஷுவுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை, நேத்து நிறைய உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டிருப்பா போலருக்கு, சேரல… கேஸ் பார்ம் ஆகிருக்கு, ட்ரிப்ஸ் ஏத்திட்டு வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக சொன்னாங்களாம்…”

“ஓ…! சரியான தின்னிப் பண்டாரம், இப்பவாச்சும் கொஞ்சம் வாயைக் கட்டுறாளா பாரு…” என்றான் மனைவியிடம். ரஞ்சனா பதில் எதுவும் சொல்லாமல் நகர்ந்து விட மீண்டும் அவன் மனம் குழம்பியது.

கணவனுக்காய் காப்பி தயாரிக்கும்போதே அர்ஜூனும் வந்து சேர அவனுக்கும் சேர்த்து காபி கலக்கினாள்.

“வாங்க அர்ஜூன்…” வரவேற்ற பிரபஞ்சனிடம் உற்சாகம் குறைந்திருப்பதை உணர்ந்தான்.

“என்ன பிரபா, முகத்துல கொஞ்சம் உற்சாகம் குறையுது… வலி எதுவும் இல்லையே…”

“உடம்புல உள்ள வலியைப் போக்க தான் டாக்டர் நீங்க இருக்கீங்களே…” என்றவன் முன்னில் அமர்ந்தான்.

“என்னாச்சு…? வேற எதுவும் பிராப்ளம்…?” தன்னைக் கண்டு கொண்டு கேட்பவனைக் கனிவோடு நோக்கினான் பிரபஞ்சன்.

“மனசு தான் கொஞ்சம் சரியில்லை அர்ஜூன், நடந்ததை ரஞ்சு சொன்னா… எங்களால தேவையில்லாம உங்களுக்கும் சங்கடம்…” வருத்தமாய் சொன்னான்.

“இது தேவையில்லாத சங்கடமில்லை பிரபா, என் மனசுக்கு நிறைவைக் கொடுக்கக் கூடிய ஆறுதல்… நீங்க நல்லா இருந்தா தான் சனா முகத்துல சந்தோஷம் இருக்கும்… அது எப்பவும் இருக்கணும், இது சின்ன விஷயம்… ஆரதி புரிஞ்சுக்காம கோவிச்சிட்டிருக்கா… நான் நேர்ல போயி ஒரு ஹக், ரெண்டு கிஸ்ல அவளைக் கூல் பண்ணிடறேன்… பயப்படாதீங்க…” சொல்லி கண்ணடித்து சிரித்தவனை புன்னகையுடன் பார்த்தான் பிரபஞ்சன்.

“எப்படி, எப்படி…? ஒரு ஹக், ரெண்டு கிஸ்ஸா…? இந்தப் பொண்ணுங்க அவ்ளோ வீக்கர் செக்ஸா என்ன…? எனக்கு அப்படித் தோணலியே…” காபியுடன் வந்த மனைவியை அடிக்கண்ணால் பார்த்தபடி பிரபஞ்சன் சொல்ல அவள் இருவரையும் முறைத்தாள்.

“பொண்ணுங்க உங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ சீப்பா போயிட்டாங்களா…? ஆரதி சொன்னதுல தப்பில்லைன்னு சொல்லிட முடியுமா… நீங்க தியாகிப் பட்டம் வாங்க டிரை பண்ணறது அவகிட்டயும் சொன்னாத்தானே புரியும்…” இருவருக்கும் வார்த்தையிலேயே கொட்டிவிட்டு காபியை நீட்ட ஆண்கள் மௌனம் பூசிக் கொண்டனர்.

“அர்ஜூன், நீங்க எப்ப ஊருக்குப் போறீங்க…?”

“ரெண்டு வாரம் கழிச்சு கொஞ்ச நாள் லீவெடுத்துட்டு ஊருக்குப் போகலாம்னு நினைக்கறேன்…”

“ஓ…! அடுத்த டிரான்ஸ்பர்க்கு எப்ப அப்ளை பண்ணறீங்க…?”

“அது… மேரேஜ் பிக்ஸ் ஆன பிறகு பார்க்கலாம்…”

“இல்ல அர்ஜூன், எங்க லைப் எப்படி உங்களுக்கு முக்கியமோ, அதுபோல எங்களுக்காக யோசிக்கிற உங்க லைபும் எங்களுக்கு முக்கியம்… இந்த மாதிரி பிரச்சனையைத் தள்ளிப் போடக் கூடாது, உடனே சரி பண்ணிடணும்… இல்லன்னா தேவையில்லாத குழப்பம்…” பிரபஞ்சன் யோசனையுடன் சொல்ல தலையாட்டினான்.

“ஆமா அர்ஜூன், நீங்க ஊருக்குப் போகும்போது நாங்களும் வர்றோம், ஆரதி கிட்ட பேசி புரிய வைக்கிறோம்… அப்பதான் எங்களுக்கும் நிம்மதியாருக்கும்…” புன்னகையோடு சொன்ன ரஞ்சனாவை நெகிழ்வுடன் பார்த்தான் அர்ஜூன் கிஷோர்.

“சனா, உங்க ரெண்டு பேருக்கும் என்னை நினைச்சு எந்த குற்றவுணர்ச்சியும் வேண்டாம்… இதை நான் பார்த்துக்கறேன், டோன்ட் வொர்ரி…”

“அதெல்லாம் முடியாது, முழுசா தியாகிப் பட்டத்தை நீங்களே தட்டிட்டு போயிடலாம்னு பார்க்கறிங்களா…?”

“ஆமா அர்ஜூன்… ரஞ்சு சொல்லுற போல நாங்களும் உங்களோட வர்றோம்… எங்களைக் கூட்டிட்டு போறதுல ஒண்ணும் உங்களுக்குப் பிரச்சனை இல்லையே…”

“ச்ச்சே, ச்சே… தாராளமா வாங்க…”

“மனுஷ மனசு எப்ப எப்படி யோசிக்கும்னே தெரியாது… கோபமும், வருத்தமும் கூடுதலா இருக்கும்போது கண்டிப்பா தப்பா, அபத்தமா தான் யோசிக்கும்… அதுக்கு நாம இடம் கொடுக்க வேண்டாம்…” என்றான் பிரபஞ்சன்.

“ம்ம்… அது சரிதான், நீங்களே தப்பா தானே யோசிச்சீங்க…” என்றவன் பிரபஞ்சன் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, சட்டென்று நிதானித்து வாயை மூடிக் கொள்ள ரஞ்சனா அவர்களையே கை கட்டி பார்த்து நின்றாள்.

“ஏன் நிறுத்திட்டிங்க, இவர் சொன்னதை சொல்லுங்க…”

“அ..அவர் எதுவும் சொல்லலை, பொதுவா சொன்னேன்…”

“எது…? எனக்கு ஏதாவது ஆச்சுன்னா என் பொண்டாட்டியை நீ கட்டிக்கணும்னு சொல்லுறது பொதுவா எல்லாருக்கும் சொல்லுறதா…?” விழிகள் விரிய கோபமாய் கேட்டாள் ரஞ்சு.

“அய்யய்யோ…! அந்த டயரியைப் படிச்சிட்டா போலருக்கே… அதான், இவ மௌனத்துக்கு காரணம்னு புரியாம நான் பாட்டுக்கு பொறியை வச்சு நானே மாட்டிகிட்டனே…” பிரபா தவிக்க அர்ஜூன் முழித்துக் கொண்டிருந்தான்.

“ரஞ்சு…! அது வந்து…” பிரபஞ்சன் சமாதானம் சொல்ல முயல கோபமாய் முறைத்தாள் ரஞ்சனா.

“எப்படி…? என்னை அர்ஜூனுக்கு விட்டுக் கொடுப்பிங்களா…? அவர் நமக்கு செய்த உதவிக்கு வாழ்நாள் பூராவும் நன்றிக் கடன் பட்டிருக்கோம், அதுக்காக நீங்க தியாகியாகி என் மனசை பந்தாடுவீங்களா…? அர்ஜூனைக் கல்யாணம் பண்ண நினைச்சிருந்தா நான் என்னைக்கோ அவருக்கு மனைவியாகி இருப்பேன்… என்னமோ, அவர் உருகி உருகி என்னை நேசிச்சாலும் எனக்கு இந்த காதல் எழவெல்லாம் அவர் மேல வரவே இல்லை… அது என் தப்பு கிடையாதே, எனக்கு உங்க மேல தான லவ் வந்துச்சு, என் காதல் தானே எனக்குப் பெரிசு… என் மனசுல என்ன இருக்குங்கறது தெரியாம உங்க விருப்பத்துக்கு முடிவெடுக்கிற உரிமையை யார் கொடுத்தது, நீங்க இப்படி சொன்னதும் நான் சம்மதிச்சிருவேன்னு எந்த நம்பிக்கைல யோசிச்சிங்க…? ஆப்பரேஷன் சக்ஸஸ் ஆகலேன்னா என்னை டைவர்ஸ் பண்ணிருப்பிங்களோ…?” கேட்டவள் தாங்க முடியாமல் கண்ணில் துளிர்த்த கண்ணீருடன் திரும்பிக் கொள்ள கேட்டிருந்த இரு ஆண்களும் திகைத்திருந்தனர்.

கோபமாய் இரண்டு அடி வைத்தாலும் பரவாயில்லை, அவள் மனதைப் பற்றி யோசிக்காமல் பிரபஞ்சன் அர்ஜூனிடம் பேசியது தவறு தானே… தனக்கு ஆப்பரேஷன் தோல்வி அடைந்தாலோ, உயிருக்கு எந்த ஆபத்தும் இருந்தாலோ ரஞ்சனாவை அர்ஜூன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வாக்கு கொடுக்க சொல்லிக் கேட்டது தவறுதானே… அதை எல்லாம் நேரில் ரஞ்சனாவிடம் சொல்ல முடியாமல் டைரியில் எழுதி வைக்க, ஆப்பரேஷன் நல்லபடியாய் முடிந்து தேவையற்றுப் போன விஷயம் அவள் கண்ணில் பட்டு இப்போது பிரச்சனைக்கு வழி வகுத்து விட்டதே.

அர்ஜூன் பதில் பேசாமல் திகைத்திருக்க பிரபஞ்சன் ஊன்று கோலுடன் எழுந்தான்.

“ரஞ்சு…! சாரி மா… அது நீ சந்தோஷமாருக்கணும், என்னால நீ வாழாமப் போயிடக் கூடாதுன்னு யோசிச்சு அந்த நேரத்துல, ஒரு குழப்பத்துல அர்ஜூன் கிட்ட சொன்னேன், உன்கிட்ட நேர்ல சொல்ல தைரியம் இல்லாம டைரில எழுதினேன்… அது தப்புன்னு இப்பப் புரியுது மா…”

“பேசாதீங்க பிரபா… கணவன் மனைவிக்குள்ள தாம்பத்தியம் முக்கியம் தான், அவங்க குடும்பத்தோட தலைமுறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வாரிசு முக்கியம் தான், அதெல்லாத்தையும் விட நேசம் கொண்ட மனசு முக்கியம் இல்லையா…? இவ்ளோ நாள்ல என் மனசு முழுக்க நீங்க தான் இருக்கீங்கன்னு உங்களால புரிஞ்சுக்க முடியலியா…? எனக்கு அதைத்தான் தாங்கிக்க முடியல…” சொன்னவள் விழிகளில் இருந்து கரகரவென்று கண்ணீர் கன்னத்தில் வழிய அவளை நெருங்கினான் பிரபா.

“ரஞ்சு..! ப்ளீஸ் அழாத மா… நான் அப்படி யோசிச்சது தப்புதான், என்னை ரெண்டு அடி வேணும்னாலும் அடிச்சுக்க, தயவு செய்து அழாதடா கண்ணம்மா…” பிரபஞ்சன் சொல்லிக் கொண்டே அவள் தோளில் கை வைக்க சட்டென்று உடைந்து போனவள் அவன் நெஞ்சில் சாய்ந்து அழத் தொடங்கினாள். இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த துக்கமும், வேதனையும் எல்லாம் அழுது கரைத்து விடும் வேகம் அந்தக் கண்ணீரில் இருந்தது.

கண்கள் பனிக்க அவர்களைப் பார்த்திருந்த அர்ஜூன் எதுவும் சொல்லாமல் அமைதியாய் எழுந்து வாசலுக்கு சென்றான். இந்த நேரத்தில் அவர்களுக்கு தனிமை அவசியம் எனப் புரிய ரஞ்சனா பேசியது ஒருவிதத்தில் அவனுக்கு திருப்தியாய் இருந்தது என்று கூட சொல்லலாம்.

ரஞ்சனா அப்படிப் பேசாதிருந்தால் தான் அதிசயம். தன்னை எப்போதும் நட்பு வளையத்தில் மட்டுமே யோசிக்கும் அவளது பண்பும், அன்பும் அவனுக்கு மட்டும் புரியாதா என்ன…? நிறைவோடு அங்கிருந்து சென்றான்.

அடுத்த சில நாட்களில் பிரபஞ்சன் மேலும் தேறிவிட்டான்.

ஊன்று கோல் இன்றி நடக்க முயற்சி செய்தான். உடலில் வேறு எந்த வலியும் இல்லாததும், இத்தனை நாள் ரஞ்சனாவின் கவனிப்பும் புது வலிமையைக் கொடுத்திருக்க நன்றாகவே முன்னேறிவிட்டான்.

மதியம் சிறிது நேரம் ஓய்வெடுத்தவன் ரஞ்சனா வருவதற்கு சற்று முன்பு காபி கலக்கி பிளாஸ்கில் ஊற்றி வைத்தான். இருந்த பிரட்டை எடுத்து டோஸ்ட் போட்டு வைத்தான்.

வீட்டுக்கு வெளியே நடை போட்டபடி மனைவிக்காய் காத்திருக்க அவனைக் கண்ட சரிதா, “பிரபா… பஜ்ஜி போடப் போறேன், இங்கே காப்பி சாப்பிடுப்பா…” என்றார்.

“நான் காபி போட்டு வச்சுட்டேன்… பஜ்ஜி மட்டும் கொடுங்கக்கா…” என்று உரிமையோடு சொன்னவனை புன்னகையுடன் தலையாட்டி உள்ளே சென்றார்.

வாசல் கேட்டைப் பார்த்தபடி நின்றவன், “ரஞ்சுவை இன்னும் காணமே…” என்று யோசிக்கும் போது தியா வந்தாள்.

“என்ன ரஞ்சு, இங்க நின்னுட்டு இருக்கீங்க…? பொண்டாட்டிக்கு வெயிட்டிங்கா…?” இவனிடம் கேட்டபடி கையில் ஒரு பாத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

“சும்மா நடந்திட்டு இருந்தேன் தியா…” என்றவனும் அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.

“ம்ம்… அம்மா குலாப் ஜாமூன் செய்தாங்க, உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க, அப்படியே உங்ககிட்ட ஒரு குட் நியூஸ் சொல்லலாம்னு வந்தேன்…” என்றவளின் முகம் சந்தோஷத்தில் மின்னியது.

“என்ன குட் நியூஸ்…?”

“எனக்கு மேரேஜ்க்கு பார்த்திட்டு இருந்தாங்கல்ல, நல்ல ஒரு அலையன்ஸ் வந்திருக்கு… நாளைக்கு ஈவனிங் என்னைப் பொண்ணு பார்க்க வராங்க, நீங்களும் ரஞ்சனாவும் வீட்டுக்கு வரணும்…” என்றவளைப் புன்னகையுடன் பார்த்தான்.

“ஆஹா, இட்ஸ் கிரேட் நியூஸ்… இனி உன் தொல்லை எனக்கில்லைன்னு சொல்லு…” என்றவனை சோபாவின் மீதிருந்த தலையணையை எடுத்து அடிக்கப் போனாள் தியா.

“ஹேய்…! அடிக்காத தியா…” என்று பிரபஞ்சன் முன்னில் கை வைத்துத் தடுக்க நெருக்கமாய் நின்ற இருவரையும் கண்டு கொண்டே உள்ளே நுழைந்தாள் ரஞ்சனா.

அவர்கள் இருவரும் திகைத்து நோக்க, “ஏன் தியா, அடிக்கனும்னு நினைச்சுட்டா தலையணை எல்லாம் சரிப்பட்டு வராது, ஸ்ட்ராங்கா எதையாச்சும் எடுத்து அடிக்க வேண்டியது தானே…” என்றபடி சோபாவில் அவள் அமர, இருவருக்கும் மூச்சு வந்தது.

“ரஞ்சு, உனக்கு விஷயம் தெரியுமா…? தியாவை நாளைக்குப் பொண்ணு பார்க்க வராங்களாம், பாவம்… எந்த அடிமை வந்து சிக்கப் போறானோ…? அதை நினைச்சா தான் எனக்குக் கவலையா இருக்கு…” என்றான் பிரபா வேடிக்கையாக.

“எதுக்கு அடிமைன்னு நினைக்கணும்… ரெண்டு பெரும் புரிதலான நேசத்தோட இருந்துட்டுப் போகட்டும்… அப்படியே அடிமையா இருந்தாலும் அன்புக்கு அடிமையா இருந்துட்டுப் போகட்டுமே, நல்ல விஷயம் தான…” என்றாள் ரஞ்சு.

“அப்படி சொல்லு ரஞ்சு, என்னமோ இந்த ஆம்பளைகளுக்கு பெண்களைக் கல்யாணம் பண்ணறதே தியாகம் பண்ணுற போல பெரிய பில்டப்பு… ஆனா கல்யாணம் பண்ணாமலும் இருக்க மாட்டாங்க, சரியான வெத்துவேட்டுங்க…”

“ம்ம்… கரக்டா சொன்ன தியா, பேசிட்டு இருங்க, வந்துடறேன்…” என்றவள், எழுந்து கொள்ள,

“அதுசரி… லேடீஸ் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து என்னை அவுட் பண்ணிட்டிங்களா…” செல்லமாய் கடிந்து கொண்டே மனைவியை நூல் பிடித்தபடி உள்ளே சென்றான் பிரபா.

“நீங்க எதுக்கு வந்திங்க, நான் குளிச்சிட்டு வர்றேன்… தியாகிட்ட பேசிட்டு இருங்க…” விரட்டினாள் ரஞ்சனா.

“ப்ச்… அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்…” என்றபடி அவளை பின்னிருந்து அணைக்க முயன்றான் பிரபஞ்சன்.

“ப்ச்… என்ன பிரபா இது…? நான் டர்ட்டியா இருக்கேன், தியா காதுல விழப் போகுது, அங்க போங்க…”

“ப்ச்… என்னமோ இன்னைக்கு ஒரு மாதிரியா இருக்கு…”

“ஓஹோ, இருக்கும் இருக்கும்… அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியும் கூடாது, பேசாம போங்க…”

“ப்ளீஸ் ரஞ்சு மா…” என்றவன் அவள் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அணைத்த பின்னரே விடுவித்தான்.

“ஹூம் இப்போதைக்குப் போதும், குளிக்கப் போ…” என்று வெளியே சென்றவனைப் புன்னகையுடன் நோக்கினாள் ரஞ்சு.

பிரபஞ்சன் வெளியே வரும்போது தியாவை காணவில்லை.

“அடடே…! தியா போயிட்டாளா…? நாம பேசுனது காதில் விழுந்திருக்குமோ… ஹூம், கல்யாணம் ஆகப் போற பொண்ணு, விழுந்தாலும் தப்பொண்ணும் இல்லை…” என்றபடி வெளியே எட்டிப் பார்க்க சரிதா பஜ்ஜியை நீட்டினார்.

“ரஞ்சனா வந்தாச்சு போலருக்கு பிரபா, ரெண்டு பேரும் பஜ்ஜியோட காப்பி சாப்பிடுங்க…” என்று பாத்திரத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

உனக்காக எதையும்

விட்டுக் கொடுப்பேன்…

ஆனால் எதற்காகவும்

உன்னை மட்டும் விட்டு

விட மாட்டேன் என்கிற

பேரன்பு ஒன்றே போதும்

பிரபஞ்சத்தை அழகாக்க…

Advertisement