Advertisement

 அத்தியாயம் – 22

பிரபஞ்சனுக்கு மதியம் எளிய உணவு கொடுக்குமாறு கூறி இருந்ததால் ரஞ்சனா, கணவனுக்கு கஞ்சியைக் குடிக்க வைத்து மாத்திரை கொடுத்திருக்க, பெயின் கில்லரின் உதவியுடன் உறக்கத்தில் இருந்தான் பிரபஞ்சன். அவனையே பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் வெளியே அர்ஜூனின் குரல் கேட்கவும் எழுந்து வெளியே வந்தாள்.

அட்டண்டரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த அர்ஜூன் இவளைக் கண்டதும் புன்னகைத்தான்.

அவனை அனுப்பிவிட்டு இவளருகே வந்தவன், “என்ன சனா…? எனக்குத் தெரியாம என்னை சைட் அடிச்சிட்டு இருக்கியா…?” குரலைத் தாழ்த்தி கண்ணடித்துக் கேட்டவனை முறைத்தவள், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே…” எனவும் அவன் முகம் யோசனையாய் மாறியது.

“எ..என்ன பேசணும்…? பிரபா எதுவும் சொன்னாரா…?”

“அவர் எதுவும் சொல்லலை, நீங்க தான் சொல்லணும்…”

“புரியலை சனா…”

“நீங்க எப்ப ப்ரீ ஆவீங்க…?”

“ம்ம்… ஆல்மோஸ்ட் ஒர்க் ஓவர், ஒன் அவர்ல கிளம்பப் போறேன்… என்ன விஷயம் சனா, எனிதிங் சீரியஸ்…?” யோசனையுடன் கேட்டவனை அமைதியாய் நோக்கியவள்,

“அது நீங்க சொல்லப் போற விஷயத்தைப் பொறுத்து தான் தீர்மானிக்க முடியும்…” என குழம்பினான் அர்ஜூன்.

“நீங்க கிளம்பும்போது நானும் வரேன், எனக்கு வீட்டுல கொஞ்சம் திங்க்ஸ் எடுக்க வேண்டிருக்கு…”

“ஓகே சனா… வாட் அபவுட் பிரபா…?”

“தூங்கறார், கொஞ்ச நேரத்துல எழுந்திருவார்…”

“ம்ம்… ஓகே, பிரபா எழுந்ததும் சொல்லு, கிளம்பலாம்…” என்றவன் தலையாட்டி நகர்ந்தான்.

நாலு மணி வரை உறங்கிய பிரபா எழுந்ததும் அவனுக்கு ஜூஸ் குடிக்கக் கொடுத்த ரஞ்சனா, “பிரபா, வீட்டுல கொஞ்சம் திங்க்ஸ் எடுக்க வேண்டிருக்கு, அர்ஜூன் கிளம்பும்போது நானும் கூடப் போகட்டுமா, உங்களுக்கு ஏதாவது தேவை இருக்குமா…?” என்றாள்.

“நானே சொல்ல நினைச்சேன் ரஞ்சு, அர்ஜூன் கிட்ட அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிச்சுப் பாரு… என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்க, இங்க இப்ப எனக்கு எதுவும் தேவை இல்லை, அவசியம்னா சிஸ்டரைக் கூப்பிட்டுக்கறேன்… நீ அர்ஜூன் மனசுல என்ன வருத்தம்னு தெரிஞ்சுக்க டிரை பண்ணு…” என்ற கணவனை நெகிழ்வுடன் பார்த்தாள்.

அவனது தலை முடியைக் கோதிவிட்டு நெற்றியில் இதழ் பதித்தவளை அவன் புரியாமல் பார்க்க புன்னகைத்தாள்.

“என்ன மா…?”

“ப்ச்… ஒண்ணுமில்ல பிரபா, உங்களை அப்படியே இறுக்கி அணைச்சுக்கணும் போலத் தோணுச்சு…” மன நிறைவோடு சொன்னவளின் கையைப் பற்றியவன்,

“இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணு மா, அப்புறம் லீவு போட்டுகூட நாள் முழுதும் அணைச்சுகிட்டே இருக்கலாம்…” கண்ணடித்து குறும்புடன் சொன்னவனைக் கனிவுடன் நோக்கியவள் மறுக்கவில்லை. அவள் மனமுமே கணவனின் சூடான அணைப்புக்கு ஏங்கித் தான் கிடந்தது.

அவளுக்கும் தான் இந்த சில மாதங்களாய் எத்தனை பிரச்சனைகள்…? எத்தனை ஓட்டங்கள், இடைவிடாத வருத்தங்கள்…! எப்படியாவது எல்லாவற்றையும் கடந்து விடும் முயற்சியில் தனியே ஓடிக் கொண்டிருந்தாலும், கணவனின் அணைப்புக்குள் இளைப்பாற அவளது மனமும் தவித்தது. இயல்பான வாழ்க்கைக்கு மனம் ஏங்கியது.

டியூட்டி நர்ஸிடம் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் அர்ஜூனுடன் கிளம்பிவிட்டாள் ரஞ்சனா.

காரை செலுத்தியபடி அவள் எதைப் பற்றிப் பேசப் போகிறாள் என யோசித்துக் கொண்டிருந்த அர்ஜூனிடம், “காபி சாப்பிடலாமா…?” என்றாள் ரஞ்சனா.

“யா, எனக்கும் லைட்டா தலைவலி… காபி ஈஸ் த பெஸ்ட் சாய்ஸ்…” என்றவன் அடுத்து வந்த காபி ஷாப் ஒன்றின் முன்பு காரை நிறுத்தினான். இருவரும் உள்ளே சென்று காபி சொல்லிவிட்டு எதிரெதிரே அமர்ந்தனர்.

அமைதியாய் அமர்ந்திருந்தவளிடம், “என்ன குலாபி, என்கிட்ட என்ன பேசப் போற… பிரபாவைப் பத்தி இன்னும் ஏதாவது பயம் இருக்கா…? அவருக்கு தான் ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சுதே, இன்னும் கொஞ்ச நாள்ல முழுமையா ரெடியாகி உன் பழைய பிரபாவா நிக்கப் போறார்… உங்களோட தாம்பத்திய வாழ்க்கைக்கும் இனி எந்தப் பிரச்சனையும் இருக்காது…” அவளை நோக்கி சொன்னவனை ஆழ்ந்து நோக்கினாள் ரஞ்சனா.

“அதைத்தான் ஆப்பரேஷன் முடிஞ்சதுமே சொல்லிட்டிங்களே அர்ஜூன், எனக்குத் தெரிய வேண்டியது பிரபாவைப் பத்தி இல்ல, உங்களைப் பத்தி…”

“என்னைப் பத்தி நீ இனி தெரிஞ்சு என்னாகப் போகுது சனா…” என்றவனின் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது. அவனை ஆழ்ந்து நோக்கியவள் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு தொடர்ந்தாள்.

“நீங்க இன்னும் அந்த பழைய மனநிலைல இருந்து வெளிய வரலியா…? என்னவோ தேவதாஸ் மாதிரி அப்பப்போ ரீவைண்ட் பண்ணிட்டு இருக்கீங்க, அன்னைக்கு என்னமோ… நான் நடந்ததை ஏத்துகிட்டேன்… இனி உன் வழில வராம என் வாழ்க்கையைப் பார்த்திட்டு போகணும்னு தான் நினைச்சேன்… பிரபாவுக்கு ஆக்சிடன்ட்ல உடம்புல பிரச்சனை இருக்குன்னு சரி பண்ண வந்தேன், நீங்க சந்தோஷமா வாழறதைப் பார்த்திட்டு கிளம்பிருவேன்னு எல்லாம் சொன்னிங்க… இப்ப என்னாச்சு…?”

“இப்பவும் அதே தான் சொல்லறேன்… பிரபா ரொம்ப கிரேட், அவரைப் போல புருஷன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்… அவர் உன்மேல வச்சிருக்கிற அன்பு, நம்பிக்கைக்கு முன்னாடி என் காதல் எல்லாம் பின்னாடி தான்…” என்றான் கையிருந்த விரல்களைப் பார்த்தபடி.

“அதான் தெரியுமே… இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை, யாரந்தப் பொண்ணு…?”

“யாரைக் கேட்கிற…?” என்றான் தெரியாதது போல.

“நேத்து ஒரு பொண்ணு கோபமா உங்களைப் பார்க்க வந்திருந்தாளே, அவளைத் தான் கேக்கறேன்…”

சிறிது மௌனித்தவன், “நீ அவளைப் பார்த்தியா…?” என்றான் ஆவலுடன் அவள் முகம் பார்த்து.

“ம்ம்… ரொம்ப அழகா இருந்தா, ஆனா முகத்துல டன் கணக்கா கோபம் வழிஞ்சது…” அவன் சொல்லப் போகும் பதிலுக்காய் ஆவலுடன் பார்த்திருந்தாள்.

அதற்குள் கடைப் பையன் கதவைத் தட்டி காபியுடன் வர காபியைக் குடித்தபடி அர்ஜூனை நோக்கினாள். அவன் எதுவும் சொல்லாமல் காபிக் கோப்பையைப் பார்த்தபடி அமர்ந்திருக்க மீண்டும் கேட்டாள்.

“என்னை இப்பவும் நல்ல பிரண்டா நினைச்சா மனசு திறந்து பேசுங்க அர்ஜூன்…” தயக்கமாய் நிமிர்ந்தவன் மெல்ல அவளைப் பற்றி சொல்லத் தொடங்கினான்.

“அவ பேரு ஆரதி, என் அண்ணி மகதியோட தங்கச்சி…”

“ஓ…!”

“நீ உன் அப்பாக்கு உடம்பு முடியாம ஊருக்கு கிளம்பினதும், என் அப்பாக்கும் சீரியஸா ஹாஸ்பிடல்ல இருக்கார்னு நானும்  கிளம்பிட்டேன், அப்ப ஆரதியை எனக்கு கல்யாணம் பண்ணப் பேசிட்டு இருந்தாங்க… நான் உன்னைப் பத்தி என் விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்டேன்… முதல்ல அம்மா சம்மதிக்கல, அப்புறம் அப்பாக்கு சரியானதும் உன் வீட்டுக்கு வந்து பேசறோம்னு சொன்னாங்க, பட் அப்பாக்கு சரியாகல அவர் இறந்து அங்கே எல்லா சடங்கும் முடிஞ்சு நான் மும்பை திரும்பும்போது உனக்கு மேரேஜ் முடிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சுது… நான் ரொம்ப நொறுங்கிப் போயிட்டேன், உன்னோட வாய்ஸ் மெசேஜ் கேட்டுகிட்டே இருந்தேன்… நான் அவ்ளோ தூரம் சொல்லியும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்காம உன் வீட்டுல சொன்னவனைக் கல்யாணம் பண்ணிகிட்டியேன்னு கோபம் வந்துச்சு… உன்னை நேர்ல பார்த்து நல்லாத் திட்டி விடணும்னு கூடத் தோணுச்சு…”

“சாரி அர்ஜூன், எனக்கு அந்த சூழ்நிலைல காத்திருக்கவோ, விளக்கம் சொல்லவோ முடியல… என் அம்மாட்ட உங்களை  சொன்னாலும் சம்மதிக்கல, அப்பாட்ட சொல்ல முடியாத சூழ்நிலை… நான் உங்களை லவ் பண்ணலேன்னாலும், நீங்க என்னை மேரேஜ் பண்ணிக்க விரும்பினது தெரிஞ்சும் ஒரு வாய்ப்பு கொடுக்கலையேன்னு குற்றவுணர்ச்சில தான் மெசேஜ் போட்டேன்…” என்றாள் ரஞ்சனா வருத்தத்துடன்.

“ம்ம்… என்னோட தவிப்பும், வேதனையும் உன் மேல கோபமா மாறி உனக்கு எதிரா ஏதாச்சும் செய்திடுவனோனு மனசு தவிச்சுது… காலமெல்லாம் கல்யாணம் பண்ணாம உன்னையே நினைச்சிட்டு இருக்கிறது எல்லாம் நிஜத்துல சாத்தியம் இல்லைன்னு எனக்கும் தெரியும்… ஒரு மாற்றம் தேவையா இருந்துச்சு, கொஞ்ச நாள் கழிச்சு அம்மாகிட்ட ஆரதியைக் கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னேன்…”

“ம்ம்… நல்ல முடிவு…!”

“வீட்டுல கல்யாண விஷயம் பேசத் தொடங்கினாங்க… அந்த நேரத்துல தான் ஒரு கான்பரன்ஸ்ல இங்கிருந்து வந்த சீனியர் டாக்டரை மீட் பண்ணினேன்… உன்னைப் பத்தி பொதுவா விசாரிக்கவும் பிரபாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆன விவரம் தெரிஞ்சுது, நீ கல்யாணமாகி புருஷனோட சந்தோஷமா இருக்கன்னு நினைச்சுட்டு இருந்தா, பிரபாவுக்கு இப்படி ஆனதோட அவரோட வயித்து வலிக்கு இன்னொரு ஆப்பரேஷன் பண்ணனும், அது சக்ஸஸ் ஆகலேன்னா அவங்க தாம்பத்திய உறவு வச்சுக்கக் கூடாது, உயிருக்கே ஆபத்துன்னு என்கிட்ட சொல்லவும் துடிச்சுப் போயிட்டேன்… கல்யாணமாகி அப்போதான் வாழ்க்கையைத் தொடங்கின உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்தா நீ தவிச்சுப் போயிருப்பியேன்னு மனசு துடிச்சுது… என் காதலைத் தான் காப்பாத்த முடியல, உங்க காதலையாவது காப்பாத்தி சந்தோஷத்தை மீட்டுக் கொடுக்கணும்னு நினைச்சேன்… நீங்க சந்தோஷமா இல்லாம எனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கத் தோணல, முதல்ல உங்க வாழ்க்கையை சரி பண்ணனும்னு நினைச்சு இங்க டிரான்ஸ்பர் கேட்டேன்…” அவன் சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தான்.

“சரி, இதுல ஆரதியோட என்ன பிரச்சனை…?”

“அவளுக்கு கொஞ்சம் பொசசிவ்னஸ் ஜாஸ்தி… நான் தினமும் அவளுக்கு கால் பண்ணனும், பேசணும், கொஞ்சணும்னு எதிர்பார்ப்பு அதிகம்… என்னோட மனநிலைல அதெல்லாம் பண்ணத் தோணல, அதனால கோவிச்சிட்டு பேசாம இருந்தா… மும்பைல ஒரு பங்க்ஷன் போனப்ப அங்கே ஜீவிகாவைப் பார்த்திருக்கா, அவளும், என் அண்ணியும் பிரண்ட்ஸ்… ஜீவிகா என் அண்ணிகிட்ட என் ஒரு தலைக் காதலை சொல்ல, இப்ப உனக்கும், உன்னோட ஹஸ்பண்டுக்கும் வேண்டிதான் நான் சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்தேன்னு ஏதேதோ சேர்த்து யோசிச்சு, இந்த விஷயம் ஆரதி காதுக்குப் போயிருச்சு…”

“கடவுளே…!” ரஞ்சனா அதிர்ச்சியுடன் சொல்ல தொடர்ந்தான்.

“இவ உடனே கிளம்பி என்னைப் பார்க்க வந்திருக்கா… அதான், அவ வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிப் போயிட்டாளே, அவளுக்காக எதுக்கு இங்கே வந்திருக்கீங்க, இப்பவும் அவளைத்தான் நினைச்சுட்டு இருக்கீங்களா… அவளைப் பார்த்து நல்லா திட்டப் போறேன்னு சண்டை…” என்றவன் சற்று நிதானித்தான்.

ரஞ்சனா திகைப்புடன் கேட்டிருக்க தொடர்ந்தான்.

“எல்லாருக்கும் எல்லாமும் புரிஞ்சுக்க முடியறதில்லை சனா… பிரபா நம்மை சரியாப் புரிஞ்சுகிட்ட மாதிரி ஆரதியால ஏத்துக்க முடியல, அவளுக்கு இன்னும் அந்தப் பக்குவம் வரலை, சின்னப் பொண்ணு தானே…”

“என்ன சொல்லறீங்க அர்ஜூன், பிரபாவுக்கு நம்மளைப் பத்தி தெரியுமா…?” அதிர்ச்சியும் வியப்புமாய் கேட்டாள் ரஞ்சனா.

“ம்ம்… ஹி ஈஸ் அ ஜெம்… என்கிட்ட கேட்டார், நான் ஒன் சைடா உன்னை லவ் பண்ணதை ஒத்துகிட்டேன்… இருந்தும் என்மேல கோபப்படாம நம்பிக்கையோட இந்த ஆப்பரேஷன் பண்ண அனுமதிச்சார்… உன்னையும் அவர் சரியாப் புரிஞ்சு வச்சிருக்கார், உன் மேல ரொம்ப அன்பும், நம்பிக்கையும் வச்சிருக்கார்…” என்றான் அவசரமாக.

“ம்ம்…” என்றவளின் குரல் கணவனைப் பற்றிய நினைவில் நெகிழ்ந்திருந்தது.

“பிரபா ரொம்ப நல்லவர் ரஞ்சனா, அவர் உனக்கு புருஷனாக் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்…”

“ம்ம்… ஆரதியும் கொடுத்து வச்சவள் தான் அர்ஜூன், நீங்களும் எந்த விதத்துலயும் குறைஞ்சவர் இல்லை… நான் சந்தோஷமா இருக்கணும்னு எவ்ளோ பண்ணிருக்கீங்க, பிரபா மேல நான் வச்சிருக்கிற காதலை ரட்சிக்க கடவுள் அனுப்பின இரட்சகனா தான் உங்களை நினைக்கறேன்…”

“ஹாஹா, காதல் இரட்சகனா…!” என்று சிரித்தான் அர்ஜூன்.

“ம்ம்… சரி அதை விடுங்க, ஆரதி என்ன சொன்னா…?”

“ஹூம், என்ன சொல்லுவா…? அவ உன்னைத் திட்டப் போறேன்னு சொன்னதைக் கேட்டு எனக்கு கோபம் வந்திருச்சு… எனக்கு உன்னை விட ரஞ்சனா லைப் தான் முக்கியம்னு நானும் கோபத்துல யோசிக்காம வார்த்தையை விட்டுட்டேன், அதைக் கேட்டு அவளுக்கு இன்னும் கோபம் அதிகமாயிடுச்சு… எனக்கும் உங்களுக்கும் சேராது, நம்ம கல்யாணம் நடக்காது… நீங்க உங்க முன்னாள் காதலிக்கு சேவகம் பண்ணிட்டு இங்கயே இருங்கன்னு கோபமாக் கத்திட்டு நேத்தே ஈவனிங் பிளைட்ல கிளம்பிப் போயிட்டா…”

“அச்சச்சோ…!”

“விடு சனா… கொஞ்சம் விட்டுப் பிடிப்போம், அவளை எப்படி சரி பண்ணறதுன்னு எனக்குத் தெரியும்… பிரபா டிஸ்சார்ஜ் ஆனதும் ஊருக்குப் போயி அவளைக் கூல் பண்ணிட்டு வந்துடறேன்…” மனதில் உள்ள முழுவதையும் அவளிடம் கொட்டிவிட்ட திருப்தியோடு சிரித்தான் அர்ஜூன் கிஷோர்.

ஆனால் ரஞ்சனாவின் மனதில் நண்பனின் எதிர்காலம் பற்றிய பாரம் நிறைந்திருந்தது.

“எந்த மாதிரி ஆண்கள் இவர்கள்…! தான் நேசித்த பெண் வேறொருவனை மணந்தாலும் அவள் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்று அர்ஜூன் தன் வாழ்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறான்… பிரபா என்னவென்றால் இவன் என்னை ஒருமுகமாய் காதலித்தான் என்று தெரிந்தும் எங்கள் இருவர் மீதும் நம்பிக்கையும், அக்கறையும் கொண்டிருக்கிறான்… என் வாழ்வில் வந்த முக்கியமான இரு ஆண்களும் மிகவும் நல்லவர்கள்… ஆனாலும் இருவருக்கும் எதற்கு இத்தனை சோதனைகள்…? என் வாழ்க்கைக்காக இத்தனை யோசிக்கும் இவனது பிரச்னையை சரி பண்ணும் பொறுப்பு எனக்கு மட்டும் இல்லையா…?” யோசித்தாள் ரஞ்சனா.

“எனக்கு பிரபாவை முழுமையாய் மீட்டுக் கொடுத்தவனின் வாழ்க்கையை சரி செய்யும் பொறுப்பு எனக்கு மட்டும் இல்லையா…? யோசித்தபடி அமர்ந்திருந்தவளின் தோளில் தட்டினான் அர்ஜூன்.

“என்ன சனா, ரொம்ப நேரமா கூப்பிடறேன்… யோசிச்சுட்டே இருக்க… கிளம்பலாமா…?” கிளம்பத் தயாராய் நின்றிருந்த அர்ஜூன் கேட்க தலையாட்டியவள் எழுந்தாள். இருவரும் கிளம்ப அவளை வீட்டில் விட்டு சென்றான்.

அலுப்பு தீர குளித்து சேலைக்கு மாறியவள் காப்பி வைத்து பிளாஸ்கில் எடுத்துக் கொண்டாள். தேவையான பொருட்களை கொண்டு செல்ல எடுத்து வைத்தவள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

அவளைக் கண்டதும் பிரபஞ்சனின் முகம் மலர்ந்தது.

“அர்ஜூன் கிட்ட பேசினியா ரஞ்சு மா…?” கேட்டவனுக்கு புன்னகையோடு விஷயத்தையும் பரிமாறினாள் ரஞ்சனா.

அதைக்கேட்டவன் முகம் யோசனையானது.

“அர்ஜூன் நமக்காக ரொம்ப மெனக்கெட்டிருக்கார், நாம ஏதாச்சும் பண்ணனும் ரஞ்சு…”

“ம்ம்… பண்ணலாம், நம்ம லைப் நல்லாருக்கணும்னு நினைச்ச அர்ஜூன் லைபை அப்படியே விட்டிருவோமா… முதல்ல உங்களுக்கு சரியாகி எழுந்து வாங்க…” என்றவள் நேசத்துடன் அவன் தலையைக் கோதி விட்டாள்.

அடுத்தநாள் அவனுக்கு சில பரிசோதனைகள் செய்து பார்த்த அர்ஜூன் திருப்தியாய் புன்னகைத்தான்.

“பர்பெக்ட்… இன்னும் கொஞ்சநாள் மட்டும் ரெஸ்ட் எடுத்தாப் போதும்…” என்றான் பிரபஞ்சனிடம். அவனது உடல் நிலையைப் பற்றி அறிய ஹெல்த் இன்சூரன்ஸ் அலுவலகத்திலிருந்து வந்திருந்தனர்.

மேலும் நான்கு நாட்களுக்குப் பிறகு அவனைப் பரிசோதித்து ஆப்பரேஷன் செய்த இடத்தில் புண் நன்றாய் காயத் தொடங்கவும் மறுநாள் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் எனக் கூறினான் அர்ஜூன்.

சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து குளித்து சேலை உடுத்து கோவிலுக்குப் புறப்பட்ட ரஞ்சனா, பிரபஞ்சனுக்கு மாற்று உடை எடுப்பதற்காய் அவனது அலமாரியைத் திறக்க மடித்து வைத்திருந்த துணிகளுக்கு அடியிலிருந்து அவனது டைரி காலடியில் விழுந்தது.

அதை எடுத்தவள் உள்ளே வைக்க செல்லும்போது பிரபஞ்சன் அதில் அன்று ஏதோ எழுதிக் கொண்டிருந்தது நினைவு வர, தன்னைப் பற்றி ஏதாவது எழுதி வைத்திருப்பானோ என்ற ஆர்வத்தில் அதைத் திறந்தாள்.

அன்றன்று நடந்த சம்பவங்களை பிரபஞ்சன் சுருக்கமாய் எழுதி வைத்திருந்தான். பக்கங்களைத் திருப்பிக் கொண்டே வந்தவள் கண்ணில் இறுதியாய் எழுதி இருந்த வார்த்தைகள் படவும் படித்தவள் முகம் சிவந்தது.

வைரங்களும்

மதிப்பிழக்கும்

எனக்காக நீ சிந்தும்

கண்ணீர் துளிகளில்…

வளமோடு வேண்டாம்

உன்னோடு நலமாக

வாழும் வாழ்க்கை

வரமொன்றைக் கேட்கிறேன்…

Advertisement