Advertisement

 அத்தியாயம் – 21

சென்னை ஏர்போர்ட்.

அழகான உச்சரிப்பில் ‘யுவர் அட்டன்ஷன் ப்ளீஸ்’ என்ற இனிய குரல் ஆங்கிலத்தில் வழிந்து மும்பையிலிருந்து வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் தரை இறங்கப் போவதாய் அறிவித்தது.

சில நிமிடத்தில் தனது பெரிய அலுமினிய உடலைத் தூக்கிக் கொண்டு விமானம் தரை இறங்கத் தயாரானது. அதன் வயிற்றில் ஏணிப் படிகள் உதயமாக பயணிகள் வரிசையாய் இறங்கத் தொடங்கினர்.

காலை ஒன்பதரை மணிக்கே வெயிலில் சூடு அதிகமிருந்தது. அதற்கு சற்றும் குறையாத சூட்டுடன் சிவந்த முகத்துடன் இறங்கினாள் அழகிய இளம் பெண் ஒருத்தி. கோதுமையில் பளபளத்த அவளது சருமத்தை பிரவுன் நிற குர்தி தழுவியிருக்க, வெளிர் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள். இளம் பன்னீர் ரோஜா போலிருந்த முகம், உதட்டிலிருந்த லிப்ஸ்டிக் நிறத்துக்குப் போட்டியாய் சிவந்திருந்தது. ஆனால் கோபமென்னும் கருமை படர்ந்ததால் அவளது அழகிய முகம் சற்று பொலிவிழந்த போல் தோன்றியது. சட்டென்று பார்த்தால் ரஞ்சனா சற்று மெலிந்து வெளுத்தது போலத் தோன்றும் தோற்றம். தனது பாகுடன் வெளியே வந்தவள் முன்னிலிருந்த டாக்ஸி ஒன்றைக் கை காட்டி அழைத்தாள்.

“டாக்ஸி…!”

செல்வச் செழிப்போடு காலையிலேயே ஒரு பயணி கிடைத்த உற்சாகத்தில் டாக்ஸி டிரைவர் பறந்து வந்து அருகே வண்டியை நிறுத்த ஏறிக் கொண்டாள்.

“எங்க போகணும் மேடம்…”

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் கையிலிருந்த பேப்பரை நீட்டினாள். அதிலிருந்த அட்ரஸைப் படித்தவன், வண்டியை எடுத்தான்.

காலைப் பரபரப்பிலிருந்த சென்னை நகரை ரசிக்கும் நிலையில் அப்பெண் இல்லை… மனதுள் இருந்த கோபத்தில் குமுறியபடி வெளியே வெறித்திருந்தாள். டாக்ஸி டிரைவர் ஏதோ பாட்டை ஒலிக்கவிட அதில் இன்னும் சிவந்தவள், “ப்ளீஸ், ஸ்டாப் தட்…” என்று உரக்க சொல்லவே டிரைவர் ஆப் செய்துவிட்டான்.

அவள் ஒரு மாதிரி நகத்தைக் கடித்துக் கொண்டு ரெஸ்ட்லசாய் இருப்பதைக் கண்ணாடியில் கண்டவன், “எதுவும் பிராப்ளமா மேடம்…” என முறைத்தவள்,

“குச் நஹி…” என்று திரும்பிக் கொண்டாள். அதற்கு மேல் அவனும் அமைதியாகி விட்டான்.

அந்த காலை நேரத்தைய போக்குவரத்து நெரிசலையும், சிக்னலையும் கடந்து கிண்டி சாலைக்குள் நுழைந்த டாக்ஸி முப்பதாவது நிமிடம் முடிவதற்குள் மிலிட்டரி ஹாஸ்பிடல் வளாகத்துள் நுழைந்திருந்தது.

வண்டி நின்று இறங்கியவள், அவன் சொன்ன பணத்தைக் கொடுத்துவிட்டு, காற்றில் அலைபாய்ந்த கூந்தலை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டு மறு கையால் தனது பாகை எடுத்து முதுகில் மாட்டிக் கொண்டவள் குதிகால் செருப்பு சப்திக்க ஆசுபத்திரிக்குள் நுழைந்தாள்.

முன்னில் பொறுப்பாய் ரிஷப்ஷனில் மேஜையைத் தொடைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், “வேர் ஈஸ் டாக்டர் அர்ஜூன் கிஷோர், ஐ வான்ட் டு ஸீ ஹிம்…” என்றாள் தெளிவான ஆங்கிலத்தில்.

“டாக்டர் இன்னும் டியூட்டிக்கு வரலை மேடம், இப்ப வர்ற நேரம் தான்… டியூட்டி டாக்டர் இருக்கார், பார்க்கறீங்களா…?” என்றாள் அவள்.

“நோ, நோ… ஐ ஜஸ்ட் வான்ட் டு சீ அர்ஜூன்…”

“ஓகே, அப்ப வெயிட் பண்ணுங்க மேடம்…”

“ம்ம்… டூ யூ நோ, வேர் ஹி ஈஸ் ஸ்டேயிங்…?”

“சாரி மேடம், அவர் ஏதோ பிளாட்ல தங்கிருக்கிறதா சொன்னார், எனக்கு சரியாத் தெரியலை…”

“இட்ஸ் ஓகே…” என்றவள் அதற்கு மேல் பேசாமல் முன்னில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள். அங்கங்கே சிலர் சோகம் தாங்கிய முகத்துடன் யாருக்கோ காத்திருந்தார்கள். ஹால் நடுவில் பெரிதாய் தொங்கிய சுவர் கடிகாரத்தில் கண்ணைப் பதிக்க பத்து முடிந்து பத்து நிமிடங்கள் ஆனதாய் சொன்னது. அவளை அதிகம் காத்திருக்க வைக்காமல் கண்ணில் கூலருடன் அர்ஜூன் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டுவிட்டவள் முறைத்தபடி அமர்ந்திருக்க, அவளை நோக்கியவன் முகத்தில் சட்டென்று ஒரு புன்னகை உதயமாக, வியப்புடன் அவளை நெருங்கினான்.

“ஆரதி…! தும் யஹாங் கைசே மிலா…?” “நீ எப்படி இங்கே வந்த…?) (அவர்கள் பேசியதை இனி தமிழில் தொடர்வோம்..)

“ஹூம், பறந்து வந்தேன்…”

“ஓ…! ரெக்கையைக் காணோம், கழற்றி வச்சிட்டியா…?” கிண்டலாய் கேட்டவனை அவள் முறைக்க, அதற்கு மேல் வாயைத் திறந்து வாங்கிக் கட்டிக் கொள்ள அவன் தயார் இல்லை என்பதால் அமைதியாய் அவளைப் பார்த்தான்.

“எனக்கு இன்பார்ம் பண்ணாம திடுதிப்புன்னு இங்கே வந்து நிக்க வேண்டிய அவசியம் என்ன ஆரதி, கால் பண்ணிருந்தா நானே வந்து அழைச்சிட்டு வந்திருப்பனே…”

“உனக்கு என்னை அழைச்சிட்டு வரக் கூட நேரமிருக்குமா என்ன…? என்னைப் பார்த்ததும் யாருன்னு கேப்பேன்னு நினைச்சேன், நல்லவேளை இன்னும் மறக்கல போலருக்கு…” கடுப்புடன் சொன்னவளைப் பரிதாபமாய் பார்த்தவன் அங்கே சுற்றிலும் உள்ளவர்களும், சில ஊழியர்களும் அவர்களையே கவனிப்பது புரிய குரலைத் தாழ்த்தினான்.

“சரி வா, என் ரூமுக்குப் போயி பேசிக்கலாம்…”

சொன்னவன் அவளது பதிலை எதிர்பாராமல் நடக்கத் தொடங்க அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அவள் வரவில்லை என்றதும் திரும்பிப் பார்க்க முறைத்தவள், “என் பேகை எடுத்திட்டு வர மாட்டியோ…?” என்றாள்.

வேகமாய் அவள் பேகை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மறு கையால் அவளை இழுத்துக் கொண்டு தனது அறைக்கு சென்றான் அர்ஜூன். நல்ல வேளையாய் அவர்கள் ஹிந்தியில் பேசியதால் அங்கே இருந்தவர்களுக்கு விஷயம் புரியாவிட்டாலும், இருவருக்குள்ளும் ஒரு நெருக்கமும், ஏதோ பிரச்சனை இருப்பதும், புரிந்தது.

கணவனுக்கு ஜூஸ் வாங்கிக் கொண்டு அறைக்கு வந்து கொண்டிருந்த ரஞ்சனா, அர்ஜூன் ஒரு பெண்ணின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வேகமாய் அவனது அறைக்கு செல்வதைக் கண்டதும் திகைத்தாள்.

“யார் அந்தப் பெண்…? அர்ஜூனிடம் எதற்குப் பதட்டம்…”

யோசித்துக் கொண்டே அவர்களின் அறைக்கு வந்தவள் கண் மூடிப் படுத்திருந்த பிரபஞ்சனை அழைத்தாள்.

முன்தினம் முழுதும் ஆப்பரேஷன் செய்திருந்த இடத்தில் வலி தெரியாமல் இருக்க மருந்தின் உதவியால் அவனை உறக்கத்திலேயே  வைத்திருந்தனர். காலையில் தான் கண் விழித்திருந்தவனுக்கு ஜூஸ் கொடுக்குமாறு நர்ஸ் சொல்ல வாங்கி வந்தவள் ஸ்ட்ராவுடன் கொடுத்து குடிக்க வைத்தாள்.

சிறிது அசைவதற்குள் வலியில் முகத்தை சுளித்தவன் அதைக் குடித்து முடித்தான்.

“ரஞ்சு…!”

“ம்ம்…” அர்ஜூனுடன் வந்த பெண் யாராய் இருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தவள் கணவனின் அழைப்பில் திரும்பினாள்.

“என்னங்க, ஏதாச்சும் வேணுமா…?”

“ப்ச்… நீ டிபன் சாப்டியா…?”

“நான் இன்னைக்கு விரதம்…”

“நேத்தும் நீ விரதம்னு சொன்னயே…”

“ம்ம்… சாயந்திரம் கோவிலுக்குப் போயிட்டு சாப்பிடறேன்…”

“ரஞ்சு…!” அவனது குரல் குழைந்து ஒலித்தது.

“என்னங்க, வலிக்குதா…?” என்றாள் பரிவுடன்.

“இல்ல, நான் உன்கிட்ட ஒரு வாக்கு கேட்டிருந்தனே, உண்மைலயே எனக்கு செய்த ஆப்பரேஷன்ல என்னோட பிரச்சனை சரியாகிடுமா…?”

“ஏன் இப்படி சந்தேகமா கேக்கறிங்க பிரபா…! இனிமே உங்களுக்கு வயித்து வலி வரவே வராது… உங்க உடம்புல எந்தப் பிரச்னையும் இல்லை, கொஞ்ச நாள் ஓய்வுக்குப் பிறகு நீங்க எப்பவும் போல ஓடலாம், பாடலாம், ஆடலாம்… நீங்க நிம்மதியா இருங்க…” என்றாள் கனிவுடன்.

“ம்ம்… நீ நிஜமா தான சொல்லுற…”

“சத்தியமா…!”

“ம்ம்… இதுக்கெல்லாம் அர்ஜூன் டாக்டருக்கு தான் நாம நன்றி சொல்லணும்…” என்றான் பிரபஞ்சன் நெகிழ்வுடன்.

சிறிது நேரம் அவனை மறந்திருந்தவள் மனது மீண்டும் அர்ஜூனுடன் கோபமாய் சென்ற பெண் யாராக இருக்கும்…?” என யோசிக்கத் தொடங்க அமைதியானாள்.

“என்ன ரஞ்சு…? சட்டுன்னு அமைதியாகிட்ட…”

“அது..வந்து…” தயங்கியவள், “நான் ஜூஸ் வாங்கிட்டு வரும்போது ஒரு பொண்ணை அர்ஜூன் அவரோட ரூமுக்குக் கூட்டிட்டுப் போறதைப் பார்த்தேன், அதான்… யாரா இருக்கும்னு யோசிச்சேன்…” என்றாள் மறைக்காமல்.

“அப்படியா…!” என்ற பிரபஞ்சனும் யோசனையானான்.

“நீங்க டாப்லட் போட்டு தூங்குங்க… நான் அத்தைக்கும், அம்மாக்கும் பேசிட்டு வந்துடறேன்…” சொன்னவள் அவனுக்கான மாத்திரைகளை எடுத்துத் தண்ணீருடன் கொடுக்க வாங்கிக் கொண்டவன் விழுங்கி விட்டு கண்ணை மூடிக் கொண்டான்.

கண்ணுக்குள் ஆப்பரேஷனுக்கு முன்தினம் அர்ஜூனுடன் பேசியது நினைவில் வர, “கடவுளே…! ரஞ்சனா எனக்கு இனி பிரச்சனை இல்லையென்று சொல்லுவது உண்மைதானா…? இல்லை அன்று போல் மறைக்கிறாளா…? அர்ஜூன் வரும்போது கேட்க வேண்டும்…” நினைத்துக் கொண்டான்.

அறைக்கு வெளியே மொபைலுடன் வந்த ரஞ்சனா அங்கே நின்று கிசுகிசுத்துக் கொண்டிருந்த நர்ஸ் இருவரைக் கண்டதும் அவர்களிடம் சென்றாள்.

“சிஸ்டர், அர்ஜூன் டாக்டர் ரவுண்ட்ஸ்க்கு வரலியா…?”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ஒருத்தி, “அவர் கிளம்பிப் போயிட்டார், ஏதோ ஒரு வடநாட்டுப் பொண்ணு அவரைப் பார்க்க வந்துட்டு ஹிந்தில குய்யோ, முய்யோன்னு கத்திட்டு இருந்துச்சு… அப்புறம் அது கோபமா கிளம்பிப் போகவும், அவரும் பின்னாடியே போயிட்டார்… ரெண்டு பேருக்கும் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன்…” என்றாள் தனக்குத் தெரிந்த விஷயத்தை உடனே செய்தியாய் பரப்பிவிடும் அவசரத்தில்.

“ஓ…!” என்றாள் இவள் புருவத்தை நெரித்துக் கொண்டே.

“நீ எவ்ளோ நாள் லீவு ரஞ்சனா, ஹஸ்பன்டுக்கு எவ்ளோ நாள் அட்மிட்ல இருக்கணும்னு டாக்டர் சொன்னாரா…?”

“ஒன் வீக் இருக்கணும்னு சொன்னார்… நான் இன்னும் ரெண்டு நாள் லீவு தான், அப்புறம் டியூட்டிக்கு வந்திட்டு அப்படியே அவரையும் கவனிச்சுக்க வேண்டியது தான்…”

“உங்க ரெண்டு பேர் வீட்டுலயும் பெரியவங்க யாரும் வந்து துணைக்கு நிக்கறதுக்கு இல்லையா…?”

“என் அப்பா ஹார்ட் பேஷன்ட், அவருக்கு இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்லை… அவரைத் தனியா விட்டுட்டு அம்மாவுக்கு வர முடியாது… அவர் வீட்டுல மாமாக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்யூஸ், அவரோட தங்கை வேற டெலிவரிக்கு வீட்டுல இருக்கா, அத்தைக்கு விட்டுட்டு வர முடியாது… அதான், இவரை நானே பார்த்துக்கறேன்னு அவங்களை வர வேண்டாம்னு சொல்லிட்டேன்…”

“ஓ…! உனக்கு தான் சப்போர்ட் பண்ண அர்ஜூன் டாக்டரும் இருக்காரே, அப்பப் பிரச்சனை இல்லை…” அவள் சொன்னது எதார்த்தமாகவா, இல்லை அதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா என்று ரஞ்சனா நிமிர்ந்து நோக்க, அதற்குள் தியா கையில் ஒரு பழங்கள் நிறைந்த கவருடன் அங்கே வந்து கொண்டிருப்பதைக் கண்டவள் அவளிடம் சென்றாள்.

தியா பிரபஞ்சனைக் கண்டு சிறிது நேரம் இருந்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பும் போது அர்ஜூனை விசாரிக்க  அவன் ஏதோ வேலையாய் வெளியே சென்றதாய் கூறினாள்.

அன்று முழுதும் அர்ஜூன் வரவில்லை. மாலையில் பிரபஞ்சனைப் பரிசோதிக்க வேறு டாக்டரே வந்தார்.

அருகே இருந்த கோவிலுக்கு சென்று விரதத்தை முடித்துக் கொண்ட ரஞ்சனா, கான்டீனில் இட்லி சாப்பிட்டு விட்டு கணவனுக்கு கஞ்சியோடு வந்தாள். அவனுக்கு ஸ்பூனில் எடுத்து ஊட்டிவிட்டு சாப்பிட்டதும் வாயைத் துடைத்து விட, அவளது கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டான்.

“என்னால உனக்கு ரொம்ப சிரமம், நீ மட்டும் என் மனைவியா வரலன்னா நான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்…”

“அப்படிலாம் இல்லை, நான் இல்லேன்னா வேற ஒரு பொண்ணு உங்க மனைவியா வந்திருப்பாளே… ஆனா எனக்கு தானே அந்த அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு…” என்றாள் அவள்.

அவளை ஆழமாய் பார்த்தவன் கேட்டான்.

“நீ யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா ரஞ்சு…?”

“ம்ம்… பண்ணிட்டு இருக்கேன்…” என்றவளின் பார்வை கனிவுடன் கணவனைத் தழுவ நெகிழ்ந்தான் அவன்.

“நீ என்னை நேசிக்கிறது கமிட்மென்ட் லவ், கல்யாணம்னு ஆனா எல்லாரும் தன்னோட துணையை நேசிக்க தானே செய்வாங்க, நான் இதைக் கேட்கலை…”

“எனக்கு அதெல்லாம் தெரியாது… ஆனா, என் மனசு பூராவும் நீங்க தான் இருக்கீங்க…” பளிச்சென்று சிரிக்க திகைத்தான்.

“ஓ…! உனக்கு எப்ப என் மேல லவ் வந்துச்சு…”

“அதெல்லாம் எனக்குத் தெரியலை பிரபா, ஆனா உங்களைப் பார்த்ததும் எல்லாம் எனக்கு லவ் வரலை… உங்க குடும்பத்து மேல நீங்க வச்சிருக்கிற பாசம், அக்கறை, பெண்களை மதிக்கிற குணம், தாலி கட்டிட்டாலே மனைவியை தனக்கு அடிமைன்னு நினைச்சுக்குற ஆண்கள் மத்தியில் என்னை மதிச்சு, எனக்கு உங்களைப் புரிஞ்சுக்க டைம் கொடுத்து, எனக்கு எல்லா விதத்திலும் சப்போர்ட்டா இருந்தப்போ என்னை அறியாமலே எனக்குள்ள வந்துட்டிங்க, இதைத்தான் நான் லவ்னு நினைக்கறேன்…” அவன் அவளை திகைப்புடன் பார்த்திருக்க தொடர்ந்தாள்.

“என்னதான் ஒருத்தரை ஒருத்தர் கணவன், மனைவிங்கிற உறவுக்காக நேசிச்சாலும் பரஸ்பர புரிதலும், நம்பிக்கையும் இல்லாம அந்த உறவு பூரணமாகாது… அந்த நம்பிக்கை தான் என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்னு நம்பறேன்… எனக்கு உங்க மேல இருக்கிற நம்பிக்கை தான் நான் உங்க மேல வச்சிருக்கற காதலுக்கான அடையாளம்…” கண்கள் விரிய இதழில் சிறு புன்னகை நெளிய மனதில் இருந்து பேசியவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ளும் ஆவல் வந்தது அவனில். அது முடியாததால் கைகளில் முத்தமிட்டு நெஞ்சோடு வைத்துக் கொண்டு கண் மூடினான்.

மனது மிகவும் நிம்மதியாய் இருந்தது.

“ச்சே… என் ரஞ்சு எத்தனை தெளிவாய் இருக்கிறாள்… நான்தான் குழப்பத்தில் தப்பும், தவறுமாய் தேவையில்லாமல் யோசித்து விட்டேன்… வீட்டுக்குப் போனதும் அந்த டைரியில் எழுதி வைத்ததை முதலில் கிழித்துப் போட வேண்டும்…” நினைத்துக் கொண்டான் பிரபஞ்சன்.

அடுத்தநாள் வழக்கம் போல் காலையில் அங்கே வந்த அர்ஜூன் முகத்தில் சோர்வு தெரிந்தது. உதடுகள் சிரித்தாலும் அவனது கண்களில் ஒரு வருத்தம் ஒட்டிக் கொண்டிருப்பதை மறைக்க முடியவில்லை.

“என்ன பிரபா, இப்ப பெயின் எப்படி இருக்கு… நேத்து நல்லாத் தூங்கினிங்களா…? நேரத்துக்கு டாப்லட் எடுத்துகிட்டீங்களா…?”

“நேத்து உங்களைப் பார்க்கலையே அர்ஜூன், எங்க போனிங்க…? உடம்புக்கு முடியலியா…?” அவனது டாக்டரின் உடல் நிலையை பேஷன்ட் விசாரித்துக் கொண்டிருந்தான்.

“இ..இல்ல, அது ஒரு சின்ன வேலை… அதான் நேத்து லீவு போட வேண்டியதாப் போயிருச்சு…” சொன்ன அர்ஜூன் மேலே பேசாமல் ரஞ்சனாவிடம் தலையசைத்து நகர அவளும் யோசனையுடன் அவனைப் பார்திருந்தாள்.

ஏதோ பிரச்சனை என்பதும், அது வந்த பெண்ணால் தான் என்பதும் மட்டும் புரிய, அது யாராயிருக்கும் என்ற கேள்வி மீண்டும் அவள் மனதைத் துளைக்கத் தொடங்கியது.

பேனா முனை

வெறும் ஆயுதமல்ல…

மனிதனை கூர்

தீட்டும் பேராயுதம்…

குழம்பிய மனது வெறும்

குளக்கடை அல்ல…

மனிதனைக் கூரிடும்

பெரும் தூண்டில்…

Advertisement