Advertisement
அத்தியாயம் – 20
‘திருமணம் என்பது ஆணும், பெண்ணும் ஒரு கூரைக்கு கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. காதல், காமம், தாபம், சோகம், மகிழ்வு, நல்லது, கெட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறி வாழ்வது. இவர்கள் மனம் உணர்வுகளைப் பரிமாற சம்மதப்பட்டு விட்டது என்பதை ஊருக்கு அறிவிக்கும் விஷயம் திருமணம்…’ பாலகுமாரனின் வரிகளை மீண்டும் படித்தான் பிரபஞ்சன். அவன் கையில் ‘இனிது இனிது காதல் இனிது’ என்ற புத்தகம் இருந்தது.
தியா தினமும் கொண்டு வந்து கொடுக்கும் புத்தகங்களை மேலோட்டமாய் பார்வையிடும் மனநிலை மட்டுமே அவனில் இருந்தது. இன்று மனம் முழுதும் ஒரு குழப்பமும், சூன்யதையும் நிறைந்திருக்க, எண்ண ஓட்டங்களைத் தவறான பாதையில் செல்லாமல் திருப்புவதற்காய் கண்ணில் பட்ட பாலகுமாரனின் புத்தகத்தைக் கையிலெடுத்தவனை அதிலிருந்த எழுத்துகள் மிகவும் கவர்ந்தன.
“எத்தனை எளிதாய் திருமணத்துக்கான அர்த்தத்தை சொல்லி இருக்கிறார்… ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இதெல்லாம் எதிர்பார்த்து தானே கல்யாண பந்தத்தில் இணைகிறார்கள்…” யோசித்தவனின் மனது மீண்டும் ரஞ்சனாவில் நின்றது.
“ஒருவேளை, ரஞ்சுவும் அர்ஜூனைக் காதலித்திருந்தால்…! இந்த எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் தானே இருப்பாள்… ஆனால் அவள் என்னிடம் காட்டிய நெருக்கமும், ஈடுபாடும் அவள் மனதில் நான் இருப்பதாய் அல்லவா சொல்கிறது…”
“ஊரார் பேசுவதைக் காதோடு விடாமல் மூளைக்குக் கொண்டு சென்றால் நானும் மூடனாகிப் போவேன்… அர்ஜூன் நல்ல மனிதன், அவனிடம் எந்த கள்ளத்தனமும் இல்லை… ரஞ்சனாவிடம் உள்ள அன்பால் அவளது கணவனான என்னையும் அக்கறையோடு கவனித்துக் கொள்கிறான்… என் ரஞ்சனாவின் அன்பிலும் குறை எதுவும் இல்லாமலிருக்க யாருடைய அவலுக்கோ இவர்களை நான் சந்தேகிப்பது பெரும் தவறு…” மனம் தெளிவானது.
“அது சரிதான், ஆனால் இந்த ஆப்பரேஷன் ஒருவேளை தோல்வி அடைந்துவிட்டால், அதற்குப் பின் என் நிலை…? எதிர்கால எங்களுடைய வாழ்க்கை…?” யோசிக்கும்போதே அவனுக்குள் ஒரு பீதி கிளம்பியது.
இரண்டு நாட்கள் கணவனின் மௌனத்தைக் கண்ட ரஞ்சனா அவன் ஆப்பரேஷனைப் பற்றி யோசித்து குழம்பிப் போயிருப்பதாய் நினைத்து அவனுக்கு ஆறுதல் சொல்லி பயப்பட வேண்டாம் என்று தேற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனால் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட முடியாமல் எப்போதும் மௌன சாமியார் போல் இருந்தான்.
தவிப்புடன் ஜன்னலருகே அமர்ந்திருந்தவனை “ஹலோ பிரபா, ஜன்னல் வழியா யாரை சைட் அடிக்கிறீங்க…” என்ற அர்ஜூனின் உற்சாகக் குரல் திரும்ப வைத்தது. வாடிய பூவாய் புன்னகை தொலைத்த முகத்துடன் திரும்பியவனை அர்ஜூனின் விழிகள் அளவிட்டுக் கொண்டிருக்க எதிரில் சோபாவில் அமர்ந்தான்.
“என்னாச்சு பிரபா..? எனிதிங் ராங்…” பரிவோடு கேட்டவனை பிரபாவின் விழிகள் யோசனையுடன் பார்த்தன.
“எதையோ பலமா யோசிச்சுட்டே இருக்கீங்க, என்னன்னு சொன்னா நானும் தெரிஞ்சுப்பனே…”
“ம்ம்… ஒரு கேள்வி இருக்கு, சொன்னா அதுக்கு உங்ககிட்ட இருந்து உண்மையான பதில் வரணும் அர்ஜூன்…” அவன் சொல்லுவது புரியாமல் நெற்றியை சுருக்கினான் அர்ஜூன்.
“ஆஹா, பெரிய இண்டர்நேஷனல் கேள்வி எதுவும் கேக்காம என் அறிவுக்கு எட்டுற போல கேளுங்க, சொல்லுறேன்…” சூழ்நிலையை சுமுகமாக்க இவன் புன்னகைத்தே கூறினான். ஆனாலும் மனதுக்குள் ஏதோ சரியில்லையே, என்ற நெருடல் இதயத்தைப் பிராண்டத் தொடங்கியது.
“உங்களுக்கும், ரஞ்சனாவுக்கும் ஹாஸ்பிடல்ல ஒண்ணா வேலை செய்ததால வந்த பழக்கம் தானா…? இல்ல வேற விதத்துல பரிச்சயப்பட்டிங்களா…?”
பிரபஞ்சனின் கேள்வியில் சட்டென்று சிவந்த முகத்தை மறைத்து அர்ஜூன் சுதாரிக்க முயல்வதற்குள் பிரபஞ்சனின் விழிகள் கவனித்து விட்டிருந்தன.
“அ..அது வந்து, எதுக்கு இந்தக் கேள்வி… நாங்க ஒண்ணா ஒரே ஹாஸ்பிடல்ல வேலை பார்த்தவங்க தானே…”
அவனை ஆழ்ந்து நோக்கிய பிரபஞ்சன், “நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பல அர்ஜூன்… உங்களுக்கு ரஞ்சனா மேல வெறும் தோழமை மட்டும் தானா…? இல்ல, அவளை லவ் பண்ணீங்களா…?” பிரபஞ்சனின் கேள்வியில் அவனுக்கு எதிரே ஜன்னலருகே சுவரில் சாய்ந்தபடி நின்றவனின் முகம் பல பாவங்களைக் காட்டி அதிர்ச்சியில் சுருங்கியது.
“பி..பிரபா, எ..என்ன இப்படில்லாம் கேக்கறீங்க…?”
“முதல்லயே உங்ககிட்ட இருந்து உண்மையான பதில் மட்டுமே வரணும்னு சொன்னனே அர்ஜூன்…”
பிரபஞ்சன் சொல்ல அர்ஜூன் திகைத்து நின்றிருந்தான்.
“ஏதாவது அரைகுறையாய் காதுக்கு வந்த செய்தியை வைத்து பிரபஞ்சன் எங்கள் இருவரையும் சந்தேகப் படுகிறானா, அதுதான் இந்த இரண்டு நாள் மௌனத்துக்குப் பின் உள்ள காரணமா…?” அர்ஜூன் பதில் சொல்லாமல் யோசிக்க அவனையே பார்த்திருந்தான் பிரபஞ்சன்.
“என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்காம உண்மையை சொல்லுங்க அர்ஜூன்…”
“பி..பிரபா, நீங்க எங்க ரெண்டு பேரையும் சந்தேகப் படறீங்களா…?” என்றான் விழிகளில் சற்று வலியைத் தேக்கி.
“சேச்சே, என் ரஞ்சனாவைப் பத்தி எனக்குத் தெரியும்… ஆனா, உங்க கண்ணுல சில நேரத்துல சின்ன தடுமாற்றத்தை கவனிச்சிருக்கேன்… சும்மா சொல்லுங்க, நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்… நீங்க ரஞ்சனாவை லவ் பண்ணீங்களா…?” ஊக்கினான் பிரபஞ்சன்.
சில நிமிடங்கள் மௌனித்த அர்ஜூன், எங்கோ பார்த்தபடி அவன் கேள்விக்கு பதில் சொன்னான்.
“ஒரு காலத்துல பண்ணேன்…”
“அப்படின்னா இப்பப் பண்ணலியா…?” என்றவனை அதிர்ச்சியுடன் நோக்கினான் அர்ஜூன்.
“இப்ப ரஞ்சனா இன்னொருத்தர் மனைவி, அடுத்தவன் பொண்டாட்டியை லவ் பண்ணற அளவுக்கு என் மனம் தாழ்ந்து போகலை…” வலியோடு வந்தன வார்த்தைகள்.
“ஓ…! அப்ப முன்னாடி லவ் பண்ணிருக்கீங்க…?”
“ப்ச்… இப்ப எதுக்கு அதெல்லாம், நானே மறந்து ஒதுக்க நினைக்கிற விஷயங்களைக் கிளற வேண்டாமே…”
“பேச்சுன்னு வந்த பிறகு முழுமையா பேசிடறது நல்லது, இல்லேன்னா இந்த மனசு கண்டபடி ஊகிச்சிட்டா வம்பு…”
பிரபாவை ஆழமாய் பார்த்தான் அர்ஜூன். “உங்களுக்கு என்ன தெரியணும், பிரபா…” என்றான் நிதானமாக.
“ரஞ்சனாவோட உள்ள பழக்கம் பத்தி…”
அவனை ஆழ்ந்து நோக்கியவன் பிரபாவின் முகத்தில் தெரிந்த தெளிவையும், நிதானத்தையும் கண்டு அவன் கோபத்தோடு கேட்கவில்லை எனப் புரிய குலாபியை சந்தித்தது முதல் அமைதியாய் சொல்லத் தொடங்கினான்.
அர்ஜூன் முழுமையாய் சொல்லி முடிக்கும் வரை குறுக்கிடாமல் கேட்ட பிரபஞ்சனின் முகத்தில் ஒரு மென்மையும், புன்னகையும் வந்திருந்தது. அது ரஞ்சனாவின் மனதில் முழுமையாய் தான் மட்டுமே இருப்பதை அறிந்ததால் வந்த நிம்மதிப் புன்னகை.
“ரஞ்சனா இப்படி செய்ததுல உங்களுக்கு கோபமோ, வருத்தமோ இல்லையா அர்ஜூன்…”
“முதல்ல கோபம் வந்தது… அப்புறம் யோசிச்சப்போ அது வருத்தமா மாறிடுச்சு… ஏன்னா, சனா எந்த சூழ்நிலைலயும் என்கிட்ட நட்பைத் தாண்டி சின்னதா ஒரு விருப்பத்தைக் கூடத் தெரிவிச்சது இல்லை, நண்பனா என்னைப் பிடிச்ச அவளுக்கு காதலனா யோசிக்கப் பிடிக்கலை… அதுக்குக் காரணம் அவளுக்கு காதலில் விருப்பம் இல்லை, வீட்டுல பெத்தவங்க மனசை நோகடிக்காம அவங்க விருப்பப்படி, பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சா, அது அவ தப்பில்லையே… நான்தான் எப்படியாச்சும் சம்மதம் வாங்கிடலாம்னு இருந்தேன், அந்த நேரத்துல சனாவோட அப்பாவுக்கு ஹெல்த் இஸ்சூஸ் வராம இருந்திருந்தா நிச்சயம் நான் அவங்க வீட்டுல போயி உங்க பொண்ணைக் கட்டிக் கொடுங்கன்னு கேட்டிருப்பேன்… அதுக்கான வாய்ப்பைக் காலம் எனக்குத் தரலை, இன்னார்க்கு இன்னார்னு கடவுள் எழுதி வச்சதை மாத்த யாராலயும் முடியாதே… சனா ரொம்ப நல்ல பொண்ணு, அவளை மனைவியா அடையற பாக்கியம் உங்களுக்கு தான் இருந்திருக்கு…” என்றான் மனம் நிறைந்த புன்னகையுடன்.
“ம்ம்… மனசுல உள்ளதை மறைக்காம சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அர்ஜூன், உங்க சனா மேல நீங்க வச்சிருந்த காதலும், அன்பும் இப்பவும் அப்படியே தானே இருக்கு…”
“தப்பு பிரபா, இப்ப என் மனசுல சனா மேல அன்பும், அக்கறையும் மட்டும் தான் இருக்கு…! காதல் இல்லை…” என்றவனைப் பெருமையுடன் நோக்கினான் பிரபஞ்சன்.
“உங்களைப் போல நல்ல ஒரு மனுஷனோட நட்பு கிடைக்க நானும், ரஞ்சுவும் கொடுத்து வச்சிருக்கணும்…”
“அப்படில்லாம் இல்லை பிரபா, எங்களை சந்தேகப்படாத, உங்களைப் போல புரிதலான நல்ல கணவன் கிடைக்க ரஞ்சனா கொடுத்து வச்சிருக்கணும்…” என்றான் அர்ஜூன்.
“நாளைக்கு ஆப்பரேஷன், நீங்க எனக்கொரு வாக்கு தரணும்…”
“என்ன வாக்கு…?” புரியாமல் நெற்றியை சுருக்க பிரபஞ்சன் சொன்னதைக் கேட்டவன் அதிர்ந்து, திகைத்துப் போனான்.
இரவு உணவு முடிந்து அடுக்களையை ஒதுக்கிவிட்டு சக்கர நாற்காலியில் மடியில் அவனது டைரியுடன் அமர்ந்திருந்த கணவன் அருகே வந்தாள் ரஞ்சனா.
“பிரபா தூங்கலியா, நாளைக்கு சீக்கிரம் எழுந்துக்கணுமே…”
“ம்ம்…” என்றபடி டைரியை மூடி வைத்தான்.
“என்னங்க, ஏதோ யோசனையாவே இருக்கீங்க… நாளைக்கு ஆப்பரேஷன் நல்லபடியா முடியும், நான் வடபழனி முருகன் கோவிலுக்கும், குலதெய்வம் கோவிலுக்கும் நிறைய வேண்டுதல் வச்சிருக்கேன்… பயப்படாம தைரியமா இருங்க…”
“ம்ம்… யாருக்கு என்ன துரோகம் பண்ணினேனோ… படிப்பு, வேலைன்னு ஓடிட்டே இருந்தவனை காலம் இந்த சக்கர நாற்காலியில் முடக்கிப் போட்டிருச்சு பார்த்தியா…”
“கடவுள் உங்களுக்கு கொடுத்த ஓய்வுன்னு நினைச்சுக்கோங்க பிரபா… இனி அடுத்த ஓட்டத்துக்கு தயாராகுங்க…”
அவள் சொன்னதைக் கேட்டவன் புன்னகைத்தான்.
“நீ எல்லாத்தையும் பாஸிடிவ் ஆகவே யோசிக்கிற ரஞ்சு…”
“அப்படி யோசிச்சா தான் நம்மால முடங்கிப் போகாம இருக்க முடியும் பிரபா, இந்த உலகத்துல பிரச்சனை யாருக்கு தான் இல்லை… அதுக்காக கலங்கி, உடைஞ்சு போயிடாம அடுத்து என்னன்னு யோசிச்சு அதைக் கடந்து வர்றதுல தான நம்ம வெற்றி இருக்கு, தேடல்கள் இல்லாத வாழ்க்கைல என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது… நாளைக்கு உங்களுக்கு நல்லபடியா ஆப்பரேஷன் முடிஞ்சு சரியானதும் கோவிலுக்குப் போயி வேண்டுதலை நிறைவேற்றுவோம்…”
“ம்ம்… ஒருவேளை, ஆப்பரேஷன் பெயிலர் ஆகிட்டா…?” பிரபஞ்சன் சுருங்கிய முகத்துடன் கேட்டு அவளையே பார்க்க அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
“ஏன் இப்படி கேக்கறிங்க..? அதெல்லாம் சக்ஸஸ் ஆகும்…”
“ஒருவேளை ஆகலேன்னா…?”
“ஆகலேன்னா, இதான் இனி நம்ம வாழ்க்கைன்னு மனசைப் பக்குவப்படுதிக்கிட்டு அதுக்குப் பழகிக்க வேண்டியது தான்…” சொன்னவள் கோபத்துடன் எழுந்து விட்டாள். அவள் கையைப் பற்றியவன், சிவந்து கிடந்த முகத்தை நிமிர்ந்து பார்க்க, அப்பெரிய கலங்கிய விழிகளில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் கன்னங்களைத் தழுவ நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.
“ரஞ்சு…! உனக்கு என்னை பிடிக்குமா…?” என்றதும் உடைந்து போனவள் சட்டென்று தரையில் அமர்ந்து அவனது கைகளில் முகம் வைத்து விசும்பத் தொடங்க கலங்கிப் போனான். அவளது தலையை தனது மடியில் வைத்துக் கொண்டு வருடிக் கொடுத்தவனின் விழிகளிலும் கண்ணீர்.
இருவரும் இத்தனை நாள் மனதில் சுமந்த வேதனையை மௌனமாய் கண்ணீரில் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாள் காலையில் ஆசுபத்திரிக்கு வந்ததும் ஆப்பரேஷனுக்கு முன் பிரபஞ்சனுக்கு எடுக்க வேண்டிய பரிசோதனைகளை முடித்து எல்லாம் நார்மலாக இருக்கவே ஆப்பரேஷனுக்கு வேண்டிய தயாரெடுப்புகளை செய்தனர்.
அர்ஜூன் ஆசுபத்திரிக்கு வந்ததுமே அவர்களை வந்து பார்த்து ஆப்பரேஷனுக்கு தயாராக சொல்லி சென்றிருந்தான்.
“ரஞ்சு…!” கணவனின் அழைப்பில் ஆப்பரேஷன் தியேட்டருக்கு செல்வதற்கான உடையை அணிவித்துக் கொண்டிருந்த ரஞ்சனா நிமிர்ந்தாள். நெற்றியில் காலையில் கோவிலுக்கு சென்றபோது தொட்டிருந்த விபூதி பளபளத்தது.
“சொல்லுங்க பிரபா…” அவனது தலையைக் கோதியபடி கேட்டவளின் கையைப் பிடித்துக் கொண்டவன்,
“ரஞ்சு…! ஒருவேளை இந்த ஆப்பரேஷன் சக்ஸஸ் ஆகலேன்னா நீ என்கிட்ட உண்மையை மறைக்காம சொல்லணும், சொல்லுவியா…?” என்றவனை வேதனையுடன் பார்த்தவள், “அப்படியென்ன உண்மையை மறைச்சுட்டேன், ஏன் இப்படி நம்பிக்கை இல்லாமலே பேசறீங்க பிரபா… என்னால அப்படி யோசிக்க முடியலை…” என்றாள்.
“எனக்கு ஏன் அடி வயித்துல வலி வருதுங்கற காரணம் உனக்குத் தெரியும், ஆனாலும் என்கிட்ட சொல்லலியே…” என்றவனை அவள் திகைப்புடன் நோக்க,
“எது நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும்… எனக்கு என்ன பிரச்சனைன்னு நாம யோசிக்கிறதால மட்டும் மாறிடப் போகுதா என்ன…?” அவன் சொல்லும்போதே இடுப்புக்குள் ஓடிய சுள்ளென்ற வேதனை முகத்தை சுளிய வைத்தது.
“என்னாச்சு பிரபா…?” பதட்டமாய் கேட்டவளை கண் நிறையப் பார்த்தவன், “ஆபரேஷன் முடிஞ்சதும் என்னாச்சுன்னு உண்மையை சொல்லுவியா ரஞ்சு…” என்றான்.
“ம்ம்…” என்றவள் அவன் நெற்றியில் கண்ணீருடன் முத்தமிட, அவளது நெற்றியிலும் இதழ் பதித்தான் பிரபஞ்சன். நர்ஸ் ஒருவர் வந்து அவர்களை அழைக்கவே பிரபஞ்சன் ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டான்.
வாசலில் தவிப்புடன் நின்ற ரஞ்சனாவிடம் கண்ணாலேயே ஆறுதல் சொல்லி உள்ளே சென்றான் அர்ஜூன்.
சிறிது நேரத்தில் ஆப்பரேஷன் தொடங்கியதற்கு அறிகுறியாய் வாயில் முகப்பில் சிவப்பு விளக்கு எரியத் தொடங்க, ரஞ்சனாவின் மனம் விடாமல் கடவுளை அழைத்தபடி இருந்தது.
கையில் சிணுங்கிய அலைபேசியை எடுத்துப் பேசும் மன நிலையில் அவள் இல்லாவிட்டாலும் தாயின் தவிப்புடன் மகனது நிலை அறிவதற்காய் அழைத்த ராதிகாவின் அழைப்பைத் தவிர்க்க மனம் வராமல் எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள். ரிசீவரில் எங்கோ மணி அடிக்கும் சத்தமும், பேச்சுகுரலும் கேட்க அவர கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தது நினைவுக்கு வந்தது.
“சொல்லுங்கத்தை…”
“அம்மாடி, பிரபாவுக்கு ஆப்பரேஷன் முடிஞ்சுதா…?”
“இன்னும் இல்லத்தை, நடந்திட்டு இருக்கு…”
“ம்ம்… நம்ம குலதெய்வம் கோவில்ல இப்பதான் பூஜை முடிஞ்சு வெளிய வரேன் மா… அவனுக்கு இனியாச்சும் அந்தக் கடவுள் நன்மையைக் கொடுக்கட்டும்…”
“ம்ம்… கொடுப்பார் அத்தை, தைரியமா இருங்க, நல்லதே நடக்கும்…” அந்த நிலையிலும் தனக்கு ஆறுதல் சொல்லும் மருமகளின் மனத் தெளிவை மனதுள் மெச்சிக் கொண்டார்.
“ம்ம்… சரி ரஞ்சனா, ஆப்பரேஷன் முடிஞ்சதும் உடனே அத்தைக்கு போன் பண்ணு மா…”
“சரிங்கத்தை…” என்றவள் அலைபேசியை வைப்பதற்குள் வேறு எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
மிஸ்டு காலில் அன்னையின் எண்ணைக் கண்டவள் திருப்பி அழைக்க, பரபரப்புடன் பேசினார் துர்கா.
“ரஞ்சும்மா, மாப்பிள்ளை எப்படி இருக்கார்… ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சுதா…? நாங்க நேத்தே அங்கே கிளம்பி வர நினைச்சோம், அப்பாக்கு கொஞ்சம் முடியல, இன்னைக்கு நைட்டு கிளம்பி வந்துடறோம் டா…”
“சரிம்மா, அப்பாவைப் பார்த்துக்கங்க…”
“நீ ஒண்ணும் கவலைப்படாத தங்கம், கடவுள் பார்த்துப்பார்… அப்பா பேசணுமாம், கொடுக்கிறேன்…”
“தங்கம்… ரஞ்சுமா, எப்படிடா இருக்க…? மாப்பிள்ளைக்கு ஆபரேஷன் முடிஞ்சுதா…?” தந்தையின் பரிவான குரலைக் கேட்டதும் வழக்கம் போல் மகளின் கண்ணில் கண்ணீர் திரண்டு நின்றது.
“அ..அப்பா…!”
“பயப்படாதடா தங்கம், மாப்பிள்ளைக்கு நல்லபடியா ஆப்பரேஷன் முடியும்… நேத்து எனக்கு கொஞ்சம் தலை சுத்துற போல இருந்துச்சு, அதான் ராத்திரி வர முடியல, இன்னைக்கு நைட்டு கிளம்பி வந்துடறோம் கண்ணு… யாருமில்லாம தனியா இருக்கமேன்னு வருத்தப் படாத…”
“பரவால்லப்பா, முடியலைனா இப்ப வரவேண்டாம்… நான் ஆப்பரேஷன் முடிஞ்சதும் கால் பண்ணி சொல்லறேன்…”
“சரி டா தங்கம், நீ ஏதாச்சும் சாப்பிட்டு தெம்பா இரு…”
“சரிப்பா, உடம்பைப் பார்த்துக்கங்க… நான் வச்சுடறேன்…” சொன்னவள் அழைப்பைத் துண்டிக்க மனதுள் ஒரு கவலையும், பயமும் வந்து ஒட்டிக் கொண்டது.
“கடவுளே…! நான் தெரிஞ்சோ தெரியாமலோ அர்ஜூனுக்கு துரோகம் பண்ணிட்டேன்… அதுக்காக என் பிரபாவை தண்டிச்சிடாத, அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாம பழைய போல திருப்பிக் கொடுத்துடு…” கண்ணை மூடி கடவுளை வேண்டியபடி அமர்ந்திருந்தாள் ரஞ்சனா. இரண்டு மணி நேரங்களை டென்ஷனில் கழித்து முடிக்க விளக்கு அணைந்து கதவு திறந்தது.
படபடப்புடன் எழுந்து வெளியே வந்த அர்ஜூனை ஆவலுடன் நோக்க, அவன் ஓகே என்று கண்சிமிட்டி புன்னகைக்க, அவளது இரு கரங்களும் அவனை நோக்கிக் குவிந்தன.
“ஹேய் சனா, வாட் ஈஸ் திஸ்…! ரிலாக்ஸ்…” என்றவன் அவளது கையைத் தாழ்த்தி தோளில் தட்டிக் கொடுத்தான்.
ஆயிரம் வைத்தியம்
தராத தீர்வை சிறு
புன்னகை தந்திடலாம்…
மனதின் நம்பிக்கை
போல் மிகச் சிறந்த
நிவாரணி உலகில்
வேறொன்றுமில்லை…
Advertisement