Advertisement

 அத்தியாயம் – 2

அழகான அடர் பச்சை நிற கிரேப் சேலை உடலைத் தழுவி இருக்க, எளிய அலங்காரமும், தலை நிறையப் பூவுமாய்  நின்ற ரஞ்சனாவை திருப்தியுடன் பார்த்தார் ராதிகா.

“ம்ம்… அழகா இருக்க ரஞ்சனா… சரி, நேரம் ஆச்சு… நான் பாலை சுண்டக் காய்ச்சி எடுத்திட்டு வர்றேன்…” என்று நகர்ந்தார். அவளுக்கு அலங்காரம் செய்துவிட்ட பெண்ணும் வேலை முடிந்துவிட்ட திருப்தியில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, ரஞ்சனாவின் அலைபேசி சிணுங்கி எடுக்கச் சொன்னது.

டிஸ்பிளே ‘அம்மா காலிங்’ என ஒளிர்ந்து கொண்டிருக்க அதை எடுத்து காதுக்குக் கொடுத்தாள் ரஞ்சனா.

“அ..அம்மா…”

“ரஞ்சுமா…”

“ம்ம்…”

“அம்மா சும்மா தான் கூப்பிட்டேன், உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்ப் ஆகலியே… நீ தனியா தானே இருக்க…?”

“ம்ம்…” என்றதும் சில வினாடி நிசப்தமாய் இருந்துவிட்டுப் பேசினார் துர்கா.

“ரஞ்சுமா, உனக்குத் தெரியாதது இல்லை… உனக்கு உபதேசம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை… ஆனாலும் ஏதாச்சும் தயக்கமோ, வருத்தமோ இருந்தா எல்லாத்தையும் துடைச்சு எறிஞ்சிட்டு இந்தப் புதிய வாழ்க்கைக்கு உன் மனசைத் தயார் பண்ணிக்கன்னு சொல்லதான் கூப்பிட்டேன்… நீ சந்தோஷமா இருந்தா தான் எங்களுக்கும் சந்தோஷம், இல்லன்னா தப்புப் பண்ணிட்டமோன்னு குற்றவுணர்ச்சியா இருக்கும்… நீ இந்த வாழ்க்கையை மனசார ஏத்துகிட்ட தானே ரஞ்சு…” அன்பும், ஆதங்கமும், சிறிது வருத்தமுமாய் வெளிப்பட்டது அன்னையின் குரல்.

“அம்மா, என்னைப் பத்தி யோசிச்சு கவலைப்படாம நிம்மதியா இருங்க… நிச்சயம் உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்…”

“ம்ம்… எனக்கு இது போதும்டா, மாப்பிள்ள மனசறிஞ்சு நடந்துகிட்டு ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்… இனி அதான் உன் வீடு, அங்கே உள்ளவங்கதான் உன் சொந்தங்கள்… அவங்களுக்கு ஏத்தபோல நடந்துகிட்டு நல்ல மருமகள்னு பேரேடுக்கணும்…”

“ம்ம்… அப்பாவை நல்லாப் பார்த்துக்கங்க ம்மா…”

“சரிடா கண்ணு, அம்மா நாளைக்கு போன் பண்ணறேன்… டைம் ஆச்சு, மறக்காம உன் அத்தை கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போடா….” சொன்னவர் அழைப்பைத் துண்டிக்க, இதுவரை ஏதேதோ யோசித்து அலைப்புறுதலில் குழம்பி இருந்த மனம் சற்றுத் தெளிந்தது.

“பிடிக்கிறதோ இல்லையோ, இனி இதுதான் என் வாழ்க்கை… இதை அழகாக்குவதும், அலங்கோலமாக்குவதும் என் கையில் தான் இருக்கிறது…” தெளிவாய் யோசித்தவளின் மனதோடு முகமும் தெளிந்தது.

அதற்குள் பால் சொம்புடன் ராதிகா அங்கே வர, அதைக் கண்டதும் மீண்டும் சிறு தயக்கமும், படபடப்பும் அவளிடம் ஒட்டிக் கொண்டது.

அவளைக் கவனித்த ராதிகா, சொம்பை மேஜை மீது வைத்துவிட்டு மருமகளிடம் வந்தார்.

“ரஞ்சனா, பிரபா ரொம்ப நல்லவன், சாப்ட் டைப்… மத்தவங்களைப் புரிஞ்சு நடந்துக்கிறவன், அவனை நினைச்சு நீ பயப்பட வேண்டாம்… இயல்பா இரு, ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையை சந்தோஷமாத் தொடங்குங்க…” என்றார் மென்னகையுடன்.

“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கத்தை…”

“ம்ம்… சந்தோஷமா நல்லாருமா…! டைம் ஆச்சு வா…” என்றவர், “அமுதா… என் மருமகளைப் பிரபா ரூம்ல விட்டுட்டு வா…” என்று கையில் சொம்பைக் கொடுத்து, உறவுக்காரப் பெண்ணைத் துணைக்கு அனுப்பி வைத்தார்.

மாடியில் இருந்த பிரபாவின் அறை வரை வந்த அமுதா அவளை அங்கே விட்டு திரும்பிச் செல்ல ரஞ்சனாவுக்கு ஒரு மாதிரி தயக்கமும், அச்சமும் மனதை நிறைத்தது.

“ச்சே… இது என் இயல்பு அல்லவே, எப்படி இருந்தாலும் நடப்பதை ஏற்கத் தானே வேண்டும்…” என நினைத்தவள் ஒரு நொடி கண்ணை மூடி மனதை நிலைப்படுத்தி கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த பிரபஞ்சன் கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்தான். ரஞ்சனாவைக் கண்டதும் அவன் இதழில் புன்னகை ஒட்டிக் கொள்ள காலை மடக்கி அமர்ந்தான்.

ரஞ்சனா பால் சொம்பை அவனிடம் நீட்ட வாங்கிக் கொண்டவன், “உக்காரு ரஞ்சுமா…” என்று அருகில் கட்டிலில் கை வைத்துக் காட்ட அமர்ந்தாள்.

“ரஞ்சு, ஏன் ஒரு மாதிரி பதட்டமா இருக்க… ரிலாக்ஸ்…! இந்தா, நீ முதல்ல பாலைக் குடி…” என்று நீட்டினான்.

“இ..இல்ல, நீங்க குடிச்சிட்டு கொடுங்க…”

“நமக்குள்ள இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம்… நீ கொஞ்சம் பதட்டமா இருக்க, பாலைக் குடி… சரியாகிடும்…”

“ஆஹா, இவன் நல்லவன்னு அத்தை சொன்னாங்க… ஆனா, இவ்ளோ நல்லவன்னு நினைக்கல…” என மனதுக்குள் நினைக்கும் போதே மனம் சகஜ நிலைக்குத் திரும்ப இயல்பாய் குடித்துவிட்டு அவனுக்கு சொம்பை நீட்டினாள்.

வாங்கிக் குடித்துவிட்டு காலி சொம்பை அருகிருந்த டீப்பாய் மீது வைத்தான் பிரபஞ்சன்.

“ரஞ்சு, நீ என்கிட்ட இயல்பா இருக்கலாம்… என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியணுமோ கேளு, உன்னைப் பத்தி சொல்லு… முதல்ல நாம நம்மளைப் புரிஞ்சுக்கலாம்…”

“ம்ம்…”

“நீ ஒரு நர்ஸ், எல்லார்கிட்டயும் பேசிப் பழகி சகஜமா இருப்பேன்னு நினைச்சா என்கிட்ட பேச இப்படித் தயங்கற…”

“இ..இல்ல, அதுவந்து…”

“ரஞ்சு, உன்கிட்ட ஒண்ணு கேக்கலாமா…?”

“கே..கேளுங்க…”

“நான் உன்னை காலைல இருந்தே கவனிச்சிட்டு இருக்கேன்… ஏன் உன் முகத்துல எப்பவும் ஒரு யோசனை இருந்துட்டே இருக்கு, உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே…” அவன் கேள்வியில் சட்டென்று திகைத்தாள் ரஞ்சனா.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க அவளையே பார்த்தவன் கேட்டான்.

“ஒருவேளை, உங்க வீட்டுல நாங்க வரதட்சணை கேட்டது உனக்குப் பிடிக்கலியா…”

“அ..அப்படில்லாம் ஒண்ணும் இல்ல, அப்பாக்கு இப்பதான் ஆப்பரேஷன் முடிஞ்சுது… அவர்கூட இருந்து கவனிச்சுக்க முடியாம உடனே கல்யாணத்தை வச்சுட்டாங்களேன்னு கொஞ்சம் யோசனையா இருந்துச்சு, வே..வேறொண்ணும் இல்ல…” படபடப்பாய் சொல்லி முடித்தாள்.

“ஓ… அவ்வளவுதானா…? நான் கூட ஒருவேளை உனக்கு என்னைப் பிடிக்கலியோன்னு நினைச்சுட்டேன்…” சொல்லி சிரித்தவனைக் கண்டு அவளுக்கு கஷ்டமாய் இருந்தது.

“இந்த பிரபா எத்தனை தூரம் என்னை கவனித்திருக்கிறார்… இந்தக் கல்யாணத்தை நினைத்து அவருக்குள்ளும் பல கனவுகள், ஆசைகள் இருக்கும் அல்லவா…? இப்படி தன்மையாய் பேசுவதிலேயே இவர் எத்தனை நல்லவர் என்று புரிகிறதே…” அவள் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்க பிரபஞ்சன் சிரித்தான்.

உன் மனதினைப் படித்திட

நான் துடிக்கும் பொழுது

உன் மௌனங்கள் என்னை

முறைக்கிறதா, இல்லை…!

உன்னை மறைக்கிறதா…?

“இதுக்கும் மௌனம் தானா…? இதை நான் எப்படி பதிலா எடுத்துக்கறது…? என்னைப் பிடிக்கும்னா, பிடிக்கலன்னா…?” என்றான் ஆர்வத்துடன் அவள் முகம் நோக்கி.

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டிங்களே…? அதான் யோசிச்சேன்…”

“புரியலமா, என்ன சீக்கிரம் கேட்டேன்…”

“கல்யாணத்துக்கு முன்னாடி கேக்க வேண்டிய கேள்வியை இப்ப வந்து கேக்கறிங்களே, அதை சொன்னேன்…” என்றதும் யோசித்தவன் முகம் மலர்ந்தது.

“பார்றா… அப்ப உனக்கும் காஷுவலா பேச வரும், அப்படித்தானே…” என்றவன் அழகாய் சிரித்தான்.

அவள் மீண்டும் மௌனத்தைக் கையில் எடுக்க அவளையே பார்த்தவன், “ரஞ்சு… நீ ரொம்ப அழகா இருக்க…!” என்றான்.

“ம்ம்… தேங்க்ஸ்…”

“தேங்க்ஸா…?”

“ம்ம்…”

“நீ ஏன் கந்து வட்டிக்காரன்கிட்ட கடன் வாங்கினவனைப் போல கஷ்டப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாப் பேசற, பிரண்ட்ஸ் கிட்ட பேசற போல இயல்பாப் பேசு…” என்றான்.

அவள் அதற்கும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்க, முன்னில் கையை நீட்டினான். அவள் புரியாமல் அவன் முகத்தைப் பார்க்க கண்ணடிக்கவும் சட்டென்று திகைத்தாள். “ரஞ்சுமா, சட்டுன்னு என்னைப் புருஷனா தான் ஏத்துக்க முடியல, அட்லீஸ்ட் பிரண்டாவாச்சும் ஏத்துக்கயேன்…” பிரபா சொல்ல முறைத்தாள்.

“பிரண்ட்ஸ் இப்படி தான் கண்ணடிப்பாங்களோ…?”

அவள் கேள்வியில் தலையைத் தட்டியவன், “சாரி, உன் முகத்தைப் பார்த்து ரசிச்சுட்டே இருந்தனா, அப்படியே என்னை அறியாம கண்ணடிச்சுட்டேன்…” என வழியவும் சிரித்தாள் ரஞ்சனா.

அவள் சிரிப்பை ஆர்வத்துடன் நோக்கியவன், “நீ சிரிச்சா இன்னும் அழகா இருக்க ரஞ்சுமா…” எனவும் புன்னகைத்தாள்.

“சரி, மீதியை நாளைக்குப் பேசிக்கலாம்… உனக்கு டயர்டா இருந்துச்சுன்னா தூங்கு…”

“இல்லன்னா…”

“இல்லன்னா இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம், பார்க்கலாம், பழகலாம்… லாம்…” என அவள் முகத்தையே ஆர்வத்துடன் பார்க்க நாணத்துடன் குனிந்து கொண்டாள் ரஞ்சனா. அவளை அறியாமலே அவளுக்கு அவனைப் பிடித்துப் போயிருந்தது.

இருவிழி கொண்டு ஈர்க்கின்றாய்

இதயக் கதவைத் திறக்கின்றாய்…

எனக்குள் ஒரு இடம் கேட்கிறாய்…

இனி நானே எனக்கில்லை

என்பதை அறியாமலே…

“சரி ரஞ்சு, நீ என்னை எப்படிக் கூப்பிடப் போற…?” பிரபஞ்சன் கேட்க அவள் முழித்தாள்.

“நீங்க இங்க தானே இருக்கீங்க, எதுக்கு உங்களைக் கூப்பிடணும்…” என்றாள் புரியாமல்.

“ப்ச்… அதில்லமா, இந்த அத்தான், மாமா, பிரபா, ரஞ்சன் இப்படி… எதை சொல்லி கூப்பிடப் போறேன்னு கேட்டேன்…”

“ஓ அதுவா… நீங்களே சொல்லுங்க, எப்படிக் கூப்பிடணும்…?”

“எதை சொல்லிக் கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான்…” என்றான் அவன் புன்னகையுடன்.

“சரி, அப்ப நான் டேய் பிரபான்னு கூப்பிடட்டுமா…” என்றாள் குறும்புப் புன்னகையுடன்.

திகைத்தவன், “ம்ம்… தாராளமா கூப்பிடு, ஆனா நாம மட்டும் தனியா இருக்கும்போது கூப்பிடு…” என்றான்.

அவள் புன்னகைக்க, “உனக்கு இன்னும் எவ்ளோ நாள் லீவு இருக்கு, எப்ப டியூட்டில ஜாயின் பண்ணனும்…” என்றான்.

“இன்னும் ஒரு வாரத்துல சென்னைல ஜாயின் பண்ணனும்…” என்றாள்.

“ம்ம்… அப்ப அஞ்சு நாள்  இங்க இருந்திட்டு கிளம்பினா ஒருநாள் நாமம் வீட்டுல ரெஸ்ட் எடுத்திட்டு நீ டியூட்டில ஜாயின் பண்ண வசதியா இருக்கும்…”

“ம்ம்… உங்களுக்கு எப்பப் போகணும்…?”

“எனக்கு இன்னும் பத்து நாள் லீவு இருக்கு…”

“ம்ம்…” என்றவள் மேலே பேசாமல் அமைதியாக, “சரி, உனக்குத் தூக்கம் வருது, தூங்கலாம்…” என்றான்.

“ம்ம்… நீங்க கட்டில்ல படுங்க, நான் கீழ விரிச்சுப் படுத்துக்கறேன்…” என்று ரஞ்சனா எழுந்து கொள்ள,

“ஹேய், அதெல்லாம் வேண்டாம், நான் உன் அனுமதி இல்லாம உன்னை எதுவும் செய்ய மாட்டேன், நீயும் கட்டில்லயே படு…” என்றான் அதட்டலாக.

அவன் சொன்னதை மறுக்க முடியாமல் அவள் கட்டிலின் ஒரு பக்கத்தில் படுத்துக் கொள்ள எழுந்து லைட்டை அணைத்துவிட்டு ஜீரோ வாட்ஸ் பல்பை ஒளிர விட்ட பிரபஞ்சன் அவள் அருகே வந்து படுத்துக் கொண்டான்.

அவள் கூச்சத்துடன் முதுகைக் காட்டி ஒருக்களித்துப் படுக்க புரிந்து கொண்டவன் புன்னகையுடன் போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்திவிட அமைதியாய் கண்ணை மூடிக் கொண்டாள் ரஞ்சனா. அவள் எதிர்பார்த்ததை விட பிரபஞ்சன் மிகவும் நல்லவனாய் புரிதலோடு இருந்தது மனதுக்கு ஒருமாதிரி ஆறுதலையும், நிம்மதியையும் கொடுத்தது.

சிறிது நேரம் ஏதேதோ நிகழ்வுகள் மாறிமாறி மனதுக்குள் வந்து போக, உடல் சோர்வில் தனை மறந்து நன்றாய் உறங்கத் தொடங்கினாள் ரஞ்சனா.

முகத்தில் விழுந்த சூரியனின் வெப்பக் கதிரில் கண்ணை சுருக்கியபடி திறந்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்ட விடிந்து வெகுநேரம் ஆனது புரிந்தது.

பிரபஞ்சனைக் கட்டிலில் காணவில்லை.

“பிரபாவைக் காணோம், எழுந்துட்டாரா…?” யோசனையுடன் சுவர் கடிகாரத்தைத் தேடி கண்ணைப் பதிக்க மணி ஏழு முப்பது எனக் காணவும் பதறியடித்து எழுந்தாள்.

“ஆஹா, புகுந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே ஏழரையா…?” என வேகமாய் எழுந்தவள் உடையை எடுத்து வைத்து குளியலறைக்குள் நுழைந்தாள். அவசரமாய் குளித்து சிம்பிளாய் ஒரு சுரிதார் டாப் மட்டும் அணிந்து வெளியே வந்தவள் அங்கே பிரபஞ்சன் காபிக் கோப்பையுடன் கட்டிலில் அமர்ந்திருக்கவும், திடுக்கிட்டு மீண்டும் குளியலறைக்குள் நுழைந்தவள், “பிரபா, கொஞ்சம் அந்த பேன்ட் எடுத்துத் தரீங்களா…?” எனக் கேட்க புன்னகையுடன் எழுந்தவன், அதை எடுத்து வெளியே தெரிந்த அவள் கையில் கொடுத்தான்.

அணிந்து கொண்டு வெளியே வந்தவளை நோக்கி, “குட் மார்னிங் ரஞ்சு, காபி எடுத்துக்க…” என பிரபஞ்சன் புன்னகையுடன் காபிக் கோப்பையை நீட்ட வாங்கிக் கொண்டவள், “சாரி பிரபா, கொஞ்சம் லேட்டாகிருச்சு… நீங்க எழும்போது என்னையும் கூப்பிட்டு இருக்கலாம்ல…” என்றாள் குற்ற உணர்ச்சியுடன்.

“ஹேய், இட்ஸ் ஓகே… நல்லாத் தூங்கிட்டு இருந்த, அதான் டிஸ்டர்ப் பண்ண மனசில்லாம எழுப்பல…”

“ம்ம்… அத்தை என்ன நினைப்பாங்க…” என்றவள் அவசரமாய் காபியை உறிஞ்சிவிட்டு கீழே செல்ல ராதிகா அடுக்களையில் பிசியாய் இருந்தார்.

“சாரி அத்தை, அசதில தூங்கிட்டேன்…”

“பரவால்ல மா, நீ சாமிக்கு விளக்கு வச்சிட்டு வந்திரு…”

“ம்ம்… சரி அத்தை…” என்றவள் பூஜை அறைக்கு சென்று அங்கிருந்த பழைய பூக்களை அகற்றிவிட்டு, வரும்போது வீட்டு முன்னில் நிறைய பூச்செடிகள் இருந்தது நினைவுக்கு வர சென்று அதில் சில பூக்களைப் பறித்து வந்து சாமிக்கு வைத்து விளக்கேற்றி ஊதுபத்தி வைத்து கும்பிட்டாள்.

நெற்றியில் விபூதியை இட்டுக் கொண்டு அடுக்களைக்கு வர, “பிரபாகிட்ட காபி கொடுத்தனே, குடிச்சியா ரஞ்சனா…?” என்றார் ராதிகா.

“ம்ம்… குடிச்சேன் அத்தை, நானும் ஹெல்ப் பண்ணறேன்…”

“வேண்டாம் மா, இன்னைக்கு நீ ரெஸ்ட் எடு… இதெல்லாம் நான் தினமும் செய்யற வேலை தானே, பார்த்துக்கறேன்…”

“ம்ம்… சொந்தக்காரங்க எல்லாம் போயிட்டாங்களா அத்தை…?”

“ம்ம்… எல்லாரும் லோக்கல்ல உள்ளவங்க தானே, நைட்டே சாப்பிட்டு கிளம்பிட்டாங்க…”

“ஓ… வைஷூ எங்கே அத்தை…”

“அவ இனி தான் எழுந்து வருவா, இந்த ஓட்ஸ் கஞ்சியை மாமாக்கு கொடுத்திட்டு வரேன்… நீ இந்த பாலை மட்டும் பார்த்துக்க மா…” என்றவர் ஓட்ஸ் கஞ்சி உள்ள பவுலை எடுத்துக் கொண்டு கணவனிடம் சென்றார்.

“கடவுளே…! அத்தை முதன் முதலா சொன்ன வேலை, சொதப்பாம செய்யணும்…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு கர்ம சிரத்தையாய் பால் பொங்கப் போவதையே பார்த்து நின்றவள்,

“குட்மார்னிங் அண்ணி…” என்ற வைஷாலியின் குரலில் திரும்பி புன்னகைத்தாள்.

“குட்மார்னிங் வைஷு, காபி குடிக்கறியா…?”

“இல்ல வேண்டாம் அண்ணி, வெறும் வயித்துல காபி குடிச்சா எனக்கு வாமிட் வரும்…” வைஷாலி சொல்லவும் புரியாமல் யோசித்தாலும் எதுவும் கேட்கவில்லை.

அதற்குள் பால் ‘புஸ்ஸ்சென்று’ அவளை ஏமாற்றிய சந்தோஷத்தில் வேகமாய்ப் பொங்க அவள் திரும்புவதற்குள் சிறிது வெளியே கொட்டியிருந்தது.

“அச்சோ…” எனப் பதறியவளிடம், “அச்சச்சோ அண்ணி, பாலை கவனிக்கலியா… சீக்கிரம் கிளீன் பண்ணிடுங்க, அம்மா பார்த்தா திட்டுவாங்க…” என்றாள் வைஷாலி.

வேகமாய் பால் பாத்திரத்தைக் கீழே எடுத்து வைத்து சூடான அடுப்பு ஸ்டேண்டை கையால் தொட அது சிறிதும் இரக்கமின்றி அவள் பிஞ்சு விரலை சுட்டு வைக்க,
‘ஆ…’ என கையை உதறியபடி துணியால் ஸ்டேண்டை எடுத்து கழுவினாள்.

அதை சரி செய்து வைத்ததும் ராதிகா வர, “அம்மா, அண்ணி முதல் நாளே பாலைப் பொங்க விட்டுட்டாங்க, நமக்கு இனி ஈவனிங் காபி கட்னு நினைக்கறேன்…” சிரித்துக் கொண்டே பத்த வைத்தாள் அவளது நாத்தனார் வைஷாலி.

ரஞ்சனா அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, “அம்மா, அதோட பால் பொங்கினது உனக்குத் தெரியக் கூடாதுன்னு அண்ணி கிளீன் பண்ணிட்டாங்க பாருங்க…” எனவும் திகைத்தாள்.

“ச்சே… எந்த மாதிரிப் பெண்ணிவள்…? என்னை அத்தை திட்டுவாங்கன்னு திருட்டுத்தனமாய் கழுவ சொல்லிவிட்டு அதை அவரிடமே போட்டுக் கொடுக்கிறாளே…” என அதிர்ச்சியுடன் அவள் நோக்கி நிற்க மருமகளை கவனித்த ராதிகா,

“பரவால்ல விடு மா… பால்னா எப்படியாச்சும் நம்மள ஏமாத்தி பொங்கத்தான் செய்யும், இதுக்கெல்லாம் நீ வருத்தப் படாத… பிரபாவை டிபன் சாப்பிட வரச்சொல்லு…” என்று சொல்லிச் செல்ல வைஷாலி சிரித்தாள்.

“வைஷூ, ஏன் இப்படிப் பண்ண… அத்தை என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க…?”

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க அண்ணி… இது, சும்மா விளையாட்டுக்கு… நான் அம்மாகிட்ட சொன்னதும் உங்க மூஞ்சி போன போக்கைப் பார்க்கணுமே, அடடா, செமையா இருந்துச்சு…” அவள் கூலாய் சொல்லி சிரித்துவிட்டு சென்றாள்.

“இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள்…? மற்றவர்களை மாட்டிவிட்டு அவர்களைப் பார்த்து ரசிக்கும் அளவுக்கு மட்டமான புத்தியா இவளுக்கு…” என யோசித்தவளுக்கு மனசு ஒரு மாதிரி சுணங்கிக் கொள்ள கணவனை சாப்பிட அழைக்க மாடிக்கு சென்றாள்.

அவள் கதவில் கை வைத்ததுமே கதவு திறக்க சட்டென்று தடுமாறி விழப் போனவளை வெளியே வந்த பிரபா தாங்கிக் கொள்ள, பயத்தில் அவன் சட்டையை பற்றிக் கொண்டவள் நாணத்துடன் குனிந்து கொள்ள புன்னகைத்தான் அவன்.

கவிதை எனக்குப்

பிடிக்குமென்றேன்…

புதுக்கவிதை ஒன்றைக்

கரத்தில் கொடுத்து

தினம் தினம் ரசித்திடு

என்றான் இறைவன்…

Advertisement