Advertisement

“வி..விடுங்க பிரபா, எனக்கு நிறைய வேலை இருக்கு…” சொல்லிவிட்டு கிட்டத்தட்ட அடுக்களைக்குள் ஓடி ஒளிந்து கொண்டவளை ஏமாற்றத்துடன் நோக்கினான் பிரபஞ்சன். மனமும், உடலும் தாம்பத்ய உறவின் அடுத்த கட்டத்துக்காய் ஏங்கத் தொடங்கியிருக்க ஆவலுடன் முன்னேறத் தொடங்கியவனை அந்த உதாசீனம், சம்மட்டியால் அடித்துத் தள்ளியது போல் ஒரு வெறுப்பு எழுந்தது.

ஆனால் அடுக்களைக்குள் நுழைந்து நீண்ட மூச்சுகளை வெளியேற்றி தாபத்தில் தகிக்கும் உடலைத் தண்ணீர் குடித்து குளிர்விக்கும் முயற்சியில் கடகடவென்று தண்ணீரைத் தொண்டைக்குள் கவிழ்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா. லேசாய் நடுங்கிக் கொண்டிருந்த உடல் இயல்புக்கு மீண்டது.

“கடவுளே…! இது என்ன சோதனை… நான் ஒன்றும் செக்ஸுக்கு அலைபவள் அல்ல, ஆனால் அவரது விரல்கள் ஆவலுடன் என்னைத் தீண்டும்போது நான், நான்… எனது கட்டுப்பாடை இழந்து குழைந்து உருகிப் போவது ஏன்…? எனக்குள் ஒளிந்து கிடக்கும் ஆசைகளை அவரது தொடுகை கிளறி சுயமிழக்க வைத்து விடுகிறதே…” கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“பாவம் பிரபா, ரொம்ப பீல் பண்ணிருப்பார்…” வேதனையுடன் பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினாள். அடுத்த நாளுக்கான காய்கறிகளையும் வெட்டி வைத்து எல்லா வேலைகளையும் முடித்து வரும்போது பிரபஞ்சன் உறங்கி இருந்தான்.

இரண்டு நாள் கழித்து பிரபஞ்சனுக்கு ஸ்கேன் எடுப்பதற்காய் இருவரும் காலையில் கிளம்பினர். அவனது ஸ்கேனிங் முடிந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றப் பட்டிருக்க, இன்னும் ரிப்போர்ட் வந்திருக்கவில்லை. அலைச்சலில் உடலெங்கும் வலிக்கவே கண் மூடிப் படுத்திருந்தான். ஜெனரல் வார்டு என்பதால் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது.

“சிஸ்டர், ரஞ்சனா ஹஸ்பன்ட் தானே அது…” அறைக்கு வெளியே ஜன்னலருகே கிசுகிசுப்பாய் ஒரு பெண் குரல் விசாரித்துக் கொண்டிருந்தது.

“ம்ம்… ஆமா, ரிசல்ட் வரவரைக்கும் இவரை இங்க வெயிட் பண்ண விட்டுட்டு ரஞ்சனா டாக்டரைக் பார்க்கப் போயிட்டா… இவர் இங்க தூங்கிட்டு இருக்கார்…” அவன் உறங்கி விட்டதாய் நினைத்து வெளியே நின்ற இரு சிஸ்டர்களும் பேசிக் கொண்டிருக்க இவன் காதில் விழுந்தது.

“ம்ம்… இவரை நினைச்சாதான் பாவமா இருக்கு…”

அவர்கள் பேச்சில் திகைத்தவன் கவனித்தான்.

“ஆமா… அவளும் தான் என்ன பண்ணுவா… பாவம், சின்ன வயசு… வளப்பமா ஒரு டாக்டரைப் பார்க்கவும் மனசு தடுமாறிட்டா போலருக்கு…”

“இவர்கள் சொல்லும் ‘அவள்’ என் ரஞ்சனாவா…? அவளையும் டாக்டர், அர்ஜூனையுமா பேசுகிறார்கள்…” செவி மடுத்தான்.

“அதுவும் சரிதான், இவருக்கு தான் இடுப்புகிட்ட ஒரு எலும்பு உடைஞ்சு கிடக்கிறதால இனிமேல தாம்பத்திய உறவே கூடாது, மீறினாலும் உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் சொல்லிருக்காரே, பாவம் ரெண்டு பேருக்கும் சின்ன வயசு…”

“ஆமா சிஸ்டர், இந்த டாக்டரு மும்பைல இருக்கும்போது ரஞ்சனாவை விரும்பினாராம்… இவதான் அவரைக் காதலிச்சு அம்போன்னு விட்டுட்டு வீட்டுல சொன்னாங்கன்னு இவரைக் கல்யாணம் பண்ணிகிட்டா போலருக்கு…”

“ஓ…! அவங்களுக்குள்ள உள்ள பழைய விட்டகுறை தொட்ட குறையைத் தீர்க்கத்தான் டாக்டர் மும்பைல இருந்து இப்ப இவளைத் தேடி வந்திருக்கார்னு சொல்லு…”

“ம்ம்… இருக்கும், இருக்கும்…” ஆமோதித்தாள் மற்றவள்.

“என்னமோ போ… அவங்க செய்யறதை நியாயம்னு ஏத்துக்கவும் முடியலை, வயசுக் கோளாறுல இப்படித் தப்புப் பண்ணறாங்களோன்னு பாவமாவும் இருக்கு…”

“ஆமாக்கா, இவருக்கு மறுபடி ஆப்பரேஷன் பண்ணாலும் அந்தக் குறை சரியாகுமோ, இல்லியோ தெரியல… வாய்ப்பும் ரொம்பக் கம்மின்னு தான் டாக்டர், ரஞ்சனாகிட்ட சொல்லிட்டு இருந்தார்… இதுல அவரே வேற இவருக்கு ஆப்பரேஷன் பண்ணப் போறார், அதை நினைச்சா கொஞ்சம் கவலையா தான் இருக்கு…”

“என்ன கவலை, டாக்டர் நல்ல கைராசிக்காரர் தானே…”

“கை என்னவோ ராசி தான்… இப்ப இவர் பொண்டாட்டி கூடவும் ராசி ஆகிட்டாரே, அந்தக் கவலை தான்…”

“ம்ம்… வசதியும் வாய்ப்பும் இருக்கிற மனுஷங்களுக்குள்ள ஆயிரம் கோணலு புத்தி இருக்கத்தான் செய்யும்… நாம பேசி என்னாகப் போகுது, வேலையைப் பார்ப்போம் வா…” என்றபடி அவர்கள் நகர கேட்டிருந்த பிரபஞ்சனின் இதயமே நின்று விடுவது போல் வலித்தது. முகம் கறுத்து வேதனையில் சிறுத்துக் கிடக்க ரஞ்சனாவின் உதாசீனமும், அர்ஜூனின் சனா என்ற குழைந்த அழைப்பும் மனதுள் வந்து போனது.

சிறிது நேரத்தில் அர்ஜூனும், ரஞ்சனாவும் புன்னகையுடன் பேசிக் கொண்டே அவனிடம் வந்தனர்.

“பிரபா… ஒரு குட் நியூஸ், இன்னும் மூணு நாள்ல உங்களுக்கு ஆப்பரேஷன் பிக்ஸ் பண்ணிடலாம்னு இருக்கோம்… அதைப் பண்ணிட்டா உங்களுக்கு அடிக்கடி அடிவயித்துல வர்ற வலி நின்னுடும், ஹாப்பி தானே…” என்றவனின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.

“என்னாச்சு பிரபா, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…?”

“ஒ… ஒண்ணுமில்ல டாக்டர், டயர்டா இருக்கு… வீட்டுக்குப் போகணும்…” என்றான் பிரபஞ்சன்.

“ஓ… இட்ஸ் ஓகே… சனா, நீ இவரை அழைச்சிட்டு கிளம்பு… நான் டியூட்டி முடிஞ்சு ஈவனிங் வீட்டுக்கு வந்து பார்க்கறேன்…”

“சரி டாக்டர்…” என்றவள் கணவனை சக்கர நாற்காலிக்கு மாற்ற முயல அர்ஜூனும் அதற்கு உதவினான். அவள் அதைத் தள்ளிக்கொண்டு கிளம்ப யோசனையுடன் பார்த்து நின்றான் அர்ஜூன் கிஷோர்.

“பிரபாவுக்கு என்னாச்சு, அவர் முகமே சரியில்லையே…” யோசித்தவனுக்கு எதுவும் புரியவில்லை.

“சரி, ஈவனிங் பேசிக்கலாம்…” என நினைத்தவன் அடுத்த பேஷண்டை கவனிக்க சென்றான்.

காரில் அமர்ந்த பின்னும் கணவனின் அமைதியைக் கண்ட ரஞ்சனாவுக்கும் எதுவும் புரியவில்லை.

“என்ன பிரபா, அங்க இங்க அலைஞ்சதுல டயர்டா இருக்கா…?” எனக் கரிசனமாய் கேட்க பதில் சொல்லாமல் வெளியே வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.

வீட்டுக்கு வந்த பின்பும் மௌனம் தொடர்ந்தது. ரஞ்சனாவுக்கு துணி துவைக்க, வீடு துடைக்க என்று வேலைகள் பட்டியலிட்டுக் காத்திருக்கவே இதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் அவள் வேலைகளை கவனித்தாள்.

மாலை தியா பிரபஞ்சனைக் காண வர அறையில் கட்டிலில் படுத்திருந்தவன், “டயர்டா இருக்கு, நீயே பேசு…” என்றுவிட ரஞ்சனாவின் புருவம் யோசனையில் சுளிந்தது.

“என்னாச்சு ரஞ்சனா, இன்னைக்கு ஸ்கேன் எடுக்கப் போகணும்னு நேத்து ரஞ்சு சொல்லிட்டு இருந்தார்…”

“ம்ம்… அதோட அசதி தான் அவர் இன்னும் படுத்துட்டே இருக்கார்… டயர்டா இருக்குனு சொல்லிட்டார்…”

“ஓ… சரி படுக்கட்டும், ஸ்கேன் ரிபோர்ட்ல என்ன வந்துச்சு, அர்ஜூன் என்ன சொன்னார்… அவரை ரெண்டு நாளா காணமே…” என்றாள் தியா ஆர்வத்துடன்.

“என்ன தியா, அர்ஜூனை ரொம்பத் தேடற போல இருக்கு… என்ன விஷயம்…?” குறுகுறுப்பாய் நோக்கியபடி ரஞ்சனா கேட்க புன்னகைத்தாள் தியா.

“ஆத்தி…! உன் கேள்வில இருக்குற கொக்கியே நீ என்ன நினைச்சு கேக்கறன்னு சொல்லுது, ஆனா அது என்கிட்டே வேண்டாம் தாயே… இனி இந்த காதல், கீதலுக்கெல்லாம் என் லைப்ல இடமே கிடையாது… வீட்டுல சொல்லுறவனைக் கல்யாணம் பண்ணிட்டு போதும்னு கெஞ்சுற வரைக்கும் லவ் டார்ச்சர் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்… நான் சும்மா அர்ஜூனைக் காணமேன்னு தான் கேட்டேன்…” என்றாள்.

“ஹூம்… சரி சரி, ஈவனிங் வரேன்னு தான் சொன்னார், வருவாரா, இல்லியான்னு தெரியல…” அவள் சொல்லும் போதே அர்ஜூனின் குரல் கேட்டது.

“ஹாய் பியூட்டிபுல் லேடீஸ்… என்னைப் பத்தி என்ன புகழ்ந்து பேசிட்டு இருக்கீங்க…” என்றபடி உற்சாகமாய் உள்ளே வந்தான் அர்ஜூன் கிஷோர்.

“புகழ்ந்தெல்லாம் பேசலை, போர் அடிக்குதே… மொக்கை போட டாக்டர் வரலியான்னு கேட்டுட்டு இருந்தேன்…”

“அப்படியா சனா, நீயுமா என்னை மொக்கைன்னு சொன்ன…”

“அவ சும்மா சொல்லுறா, நீங்க உக்காருங்க அர்ஜூன்… ரெண்டு பேருக்கும் காபி எடுக்கறேன்…” என்றாள் ரஞ்சனா.

“பிரபா எங்கே தியா… ரூம்ல இருக்காரா…?”

“ம்ம்… டயர்டா இருக்குனு படுத்திருக்காராம்…”

“ஓ…! அப்புறம் ஆன்ட்டி என்ன பண்ணறாங்க…”

“அப்புறம் உங்க ஆன்ட்டி என்ன பண்ணுவாங்கன்னு தெரியல, இப்ப ஏதோ புக் வச்சிட்டு எக்ஸாம்க்கு படிக்கிற போல படிச்சிட்டு இருக்காங்க…” என்றாள் தியா.

“ம்ம்… ஒரு மொக்கை ராணியே என்னை மொக்கைன்னு சொல்லிருக்க…” என்றான் அவன் கிண்டலுடன்.

காபியுடன் வந்த ரஞ்சனா, பிரபாவுக்கும் கொண்டு சென்றாள்.

“பிரபா, அர்ஜூன் உங்களைப் பார்க்க வந்திருக்கார்… நீங்க ஹாலுக்கு வரீங்களா, அவரை இங்கே வர சொல்லனுமா…?”

“நானே வரேன்…” சொன்னவன் எழுந்து அமர சக்கர நாற்காலிக்கு மாற உதவினாள்.

ஹாலுக்கு வந்தவனின் முகத்தைக் கண்ட அர்ஜூன், “என்னாச்சு பிரபா… ரொம்பவே டல்லாத் தெரியுறீங்க, எனி பிராப்ளம்…” என்றான் பரிவுடன்.

“ஜஸ்ட் டயர்டு தான்…” காபியைக் குடிக்கத் தொடங்கினான்.

“அர்ஜூன், பிரபாக்கு எப்போ ஆப்பரேஷன்னு டிசைட் பண்ணியாச்சா…” ரியா கேட்க தலையாட்டினான் அர்ஜூன்.

“இன்னும் மூணு நாள்ல…”

“ஓ… அப்புறம் அவரும் நார்மல் ஆகிட்டா நீங்களும் இங்க மொக்கை போட வர மாட்டீங்கல்ல…” என்றவளின் குரலில் ஒரு வருத்தம் இருந்தது போல் ரஞ்சனாவுக்கு தோன்றியது.

ஆதாரங்கள் இல்லாமல்

அவதூறு பேசும் உலகம்

அதற்காக ஒருபோதும்

வருந்துவதில்லை…

அதற்கு நீ செவி மடுத்தால்

உலகத்தில் இழக்கப்

போவதோ ஏராளம்…

Advertisement