Advertisement

 அத்தியாயம் – 19

நாட்கள் நகர்ந்தது.

வைஷாலியின் வளைகாப்பு நல்லபடியாய் முடிந்தது. இன்சூரன்ஸ் ஆபீஸிலிருந்து கிடைத்த பணத்தில் ஒரு தொகையை தங்கையின் விசேஷ செலவுக்கு அனுப்பிக் கொடுத்தான் பிரபஞ்சன். மீதித் தொகையை மனைவியிடம் கொடுத்திருந்தான்.

ராதிகாவுக்கு மகனும், மருமகளும் வராதது குறையாய் இருந்தாலும் மகளின் விசேஷத்தை நல்லபடியாகவே முடித்திருந்தார். பாட்டி பரிமளம் பேரனைக் காண முடியாமல் வருத்தப்படவே அவரையும், பிரபாவைக் காண வேண்டுமென்ற வைஷாலியின் கணவனையும் அழைத்துக் கொண்டு சென்னை கிளம்பி விட்டார். வைஷாலிக்கு தூர யாத்திரை முடியாதென்று அவளைத் தந்தைக்கு துணையாக்கி இவர்கள் கிளம்பி இருந்தனர்.

முன்னரே எதுவும் சொல்லாமல் விடிகாலையில் சர்ப்ரைஸாக வந்து வாசலில் நின்றவர்களைக் கண்ட பிரபஞ்சன், ரஞ்சனா இருவரும் திகைத்துப் போயினர். அதுவும் பாட்டி அவனைக் கண்டு கண் கலங்கி நெற்றியில் முத்தமிடவும் நெகிழ்ந்து போனான் பிரபஞ்சன். அவன் இப்போது கைத்தடியின் உதவியுடன் நான்கைந்து அடிகள் மெல்ல நடக்கத் தொடங்கியிருந்தான்.

“நேத்து தானே வைஷுவோட விசேஷம் முடிஞ்சது அத்தை, நைட்டே கிளம்பி வந்திருக்கிங்க… அங்கே வைஷுவும் மாமாவும் தனியா இருப்பாங்களே, சமாளிச்சுப்பாங்களா…” அவர்களுக்கு சூடான காப்பியைக் கொடுத்துக் கொண்டே கேட்டாள் ரஞ்சனா.

“அதெல்லாம் இருக்கிறதைத் தின்னுட்டு ரெண்டு நாள் அட்ஜஸ்ட் பண்ணட்டும், எனக்கு என் புள்ளையைப் பார்க்க வேண்டாமா…” மகனின் கையைப் பற்றியபடி அமர்ந்திருந்த ராதிகா நெகிழ்வுடன் கூறினார்.

“பிரபா, வீட்டுல இருந்து நல்லாக் கலர் வச்சதோட ரொம்ப உடம்பு போட்டுட்டியேப்பா… ரஞ்சனா தான் ரொம்பவே மெலிஞ்சு தெரியுறா, சரியா சாப்பிடாம ஓடிட்டே இருக்கியா மா…” மகன், மருமகள் என்ற வேறுபாடின்றி உண்மையான ஆதங்கத்துடன் கேட்டார் அன்னை.

“ம்ம்… அவளுக்கு வேலை, என்னை கவனிக்கறதுன்னு அலைச்சல் ஜாஸ்திதானே மா… நான் சாப்பிட்டு தூங்கின்னு சும்மாவே இருக்கிறதால உடம்பு ஊதிருச்சு…”

“இப்படி உக்காரு கண்ணு…” என்ற பாட்டியருகே அமர்ந்தாள்.

“கல்யாணமாகி சந்தோஷமா இருக்க வேண்டிய சின்னஞ் சிறுசுக… யாரு கண்ணு பட்டுச்சோ, படாத பாடு பட்டுட்டிங்க… உன்னைப் போல கண்ணும் கருத்துமா என் பேரனைப் பார்த்துக்கற பொண்டாட்டி கிடைக்க அவன் கொடுத்து வச்சிருக்கணும்…” பரிமளம் தனது தோல் சுருங்கிய மெல்லிய விரல்களால் அவளது கன்னம் வழித்து கூறினார்.

“நான் பெருசா எதுவும் பண்ணலை பாட்டி, என் கடமையைத் தானே செய்தேன்… தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையா இந்த மட்டும் பிரபா சரியாகி வந்தாரே, அதுக்கே நாம கடவுளுக்கு நன்றி சொல்லணும்… நான் போயி சமையலை முடிக்கறேன்…” சொன்னவள் எழப் போக, அவளைத் தடுத்தார் ராதிகா.

“நீ உக்காரு மா… நான் டிபன் பண்ணறேன், மதிய சமையலை நான் பண்ணிக்கறேன்… புளிக்காய்ச்சல் உனக்குப் பிடிக்கும்னு செய்து எடுத்திட்டு வந்தேன், சாதத்துல கிளறி நீ கொண்டு போயிடு…” சொன்னவரை கண்கள் கலங்கப் பார்த்தவளின் தலையைத் தடவியவர்,

“நீ என் மகனுக்காக எவ்ளோ கஷ்டப்படறேன்னு எனக்குத் தெரியும் மா… கூட நிக்க முடியலேன்னாலும் என்னால முடியும்போது இந்த உடல் உழைப்பைக் கூடத் தரலேன்னா எப்படி…” என்றவரின் வருத்தம் நிறைந்த வார்த்தைகள் கண்ணைப் பனிக்க வைத்தது.

“மச்சான், அடுத்து இன்னொரு ஆப்பரேஷன் இருக்குன்னு அத்தை சொன்னாங்க, எப்பன்னு முடிவு பண்ணியாச்சா…?” வைஷுவின் கணவன் வினோத் கேட்க தலையாட்டினான்.

“ரெண்டு நாள்ல ஒரு ஸ்கேன் பண்ண வேண்டிருக்கு, அப்புறம் தான் சொல்லுவாங்கன்னு நினைக்கறேன் மாப்ள…”

“ம்ம்… வருத்தப் படாதீங்க, ஏதோ கெட்ட நேரம்… இப்படில்லாம் நடக்கணும்னு இருக்கு, சீக்கிரமே நீங்க பழைய போல ஆயிடுவீங்க…” ஆறுதல் கூறினான் வினோத்.

ஆயிரம் ஜாக்கிரதை சொல்லி இரவு உணவை நேரமே முடித்துக் கொண்டு ஒன்பது மணி பேருந்துக்கு அவர்கள் ஊருக்குக் கிளம்பினர். இருவரையும் தலை வருடி நெற்றியில் முத்தமிட்ட பாட்டி, “இது கைல வச்சுக்க ராசா…” என்று ஒரு கவரைத் திணிக்க, அது பணக்கவர் என்று புரிந்தவன், “வேண்டாம் பாட்டி… நீங்க இவ்ளோ தூரம் என்னைப் பார்க்க வந்ததே போதும், பணமெல்லாம் வேண்டாம்…” என்று மறுத்தான் பிரபஞ்சன்.

“இருக்கட்டும் யா… என்னோட வயசு காலத்துக்கு உதவியா இருக்கட்டும்னு எடுத்து வச்சது, நீ சரியாகி வந்தா இந்தக் கிழவிக்கு ஒண்ணுன்னாப் பார்த்துக்க மாட்டியா என்ன… இப்ப உனக்குத் தேவை இருக்குல்ல, வச்சுக்க…” என்று திரும்ப வாங்க மறுத்துவிட்டார் பரிமளம். அவனிடம் உச்சி முகர்ந்து விடை பெற்ற அன்னையின் கண்களில் ஈரம்.

“இந்தப் பாவியால உங்க கூடவே இருந்து பார்த்துக்க முடியலியே பிரபா…”

“அம்மா, ப்ளீஸ் அழாதீங்க… அதான் உங்களைப் போலவே என்னைப் பார்த்துக்க உங்க மருமகளை எனக்குத் தேடிக் கொடுத்திருக்கீங்களே…” என்றவனின் விழிகள் மனைவியை நோக்க அவள் விழிகளில் வியப்பு கலந்த பெருமிதம்.

அவனிடமும், முன்னில் இருந்த சரிதாவிடமும் விடை பெற்று கீழே வந்தவர்களுடன் ரஞ்சனாவும் வர, “அக்கா… இப்போதைய சூழ்நிலைல வைஷுவோட வளைகாப்புக்கும் உங்களை செலவு செய்ய வச்சதுல எனக்கு உடன்பாடில்லை… நான் செலவு செய்யறேன்னு சொன்னாலும் அம்மாவும் வைஷுவும் ஒத்துக்க மாட்டாங்க… அதனால விசேஷத்துக்கு செலவான தொகையை தயவு செய்து நீங்க வாங்கிக்கணும்…” தயக்கத்துடன் சொன்ன வினோத்தை அதிர்ச்சியும் திகைப்புமாய் நோக்கினாள் ரஞ்சனா. பெரியவர்களும் திகைத்திருந்தனர்.

“அச்சோ, அதெல்லாம் வேண்டாம் தம்பி… வைஷுவோட  வளைகாப்புக்கு பிறந்த வீட்டுல தானே செலவு பண்ணனும், நீங்க எங்களுக்காக யோசிச்சதில் ரொம்ப சந்தோஷம், ஆனாலும் எங்க கடமையை செய்ததுக்கு நாங்க எப்படி பணம் வாங்கறது… இதை பத்திரமா எடுத்து வைங்க, பணம் சம்பாதிக்க கஷ்டப்பட்டாப் போதும்… உங்களைப் போல நல்ல உறவு கிடைக்க தான் நாங்க கொடுத்து வச்சிருக்கணும்…” பெரிய மனுஷியாய் சொன்ன மருமகளை நெகிழ்வுடன் பார்த்தனர் பெரியவர்கள். இப்படிப்பட்ட நல்ல மருமகன், மருமகளைக் கொடுத்த கடவுளுக்கு மனம் நன்றி கூறியது. அவர்கள் டாக்ஸியில் கிளம்ப சொந்தங்களின் வரவில் நிறைந்த மனதுடன் திரும்பினாள் ரஞ்சனா.

“ரஞ்சு, இப்படி வந்து உக்காரு…” கட்டிலில் இருந்தவன் மனைவியை அழைக்க அருகே வந்து அமர்ந்தாள்.

“பாட்டி கொடுத்த கவர்ல அம்பதாயிரம் இருக்கு, இவ்ளோ பணத்தையும் எனக்குக் கொடுத்திருக்காங்களே…” என்றவனின் குரலில் பாட்டியின் மீதுள்ள பாசம் வழிந்தது.

“ம்ம்… இருக்கட்டுங்க, பாட்டி சொன்ன போல அவங்களை நாம பார்த்துக்காம விட்டுடுவோமா… இப்போதைக்கு உங்க ஆப்பரேஷனுக்கு இந்தப் பணம் உதவியா இருக்கும், அப்புறம் மெதுவா நாம பாட்டிக்குத் திரும்ப கொடுத்துடலாம்…” மனைவியின் வார்த்தைகள் சரியே என்று தோன்ற அந்தக் கவரை அவளிடம் நீட்டினான்.

வாங்குவதற்காய் கை நீட்டியவளின் மெல்லிய பிஞ்சு விரல்களைப் புன்னகையுடன் பற்றி கன்னத்தில் வைத்தான்.

“மனசு ரொம்ப ரிலாக்ஸா சந்தோஷமா இருக்கு ரஞ்சு…”

“ஆமா… பாட்டி எப்பவும் உங்களைப் பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கறதா அத்தை சொன்னாங்க… வயசான காலத்துல உங்களைப் பார்த்தே ஆகணும்னு கிளம்பி வந்தது மனசுக்கு நிறைவாவும் ஆறுதலாவும் இருக்கு…”

“ம்ம்… நான் உன் மடில கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமா ரஞ்சு…” கணவனின் கேள்வியில் திகைத்தவள் தவிப்புடன் அவனை நோக்க, அவனது கன்னத்தில் கைகளுக்குள் சிறைபட்டிருந்த அவளது கையை இதழில் வைத்து முத்தமிட்டான் பிரபஞ்சன்.

அவளது அமைதியைக் கண்டு “ப்ளீஸ் ரஞ்சு…” மீண்டும் கெஞ்சலாய் கேட்க மறுக்க முடியாமல் அவனுக்கு தலை வைக்க வாகாய் அமர்ந்து கொண்டாள். சந்தோஷமாய் அவள் மடியில் சாய்ந்தவனின் விரல்கள் அவளது கையை மெல்ல முத்தமிட்டு நெஞ்சோடு இறுக்கிக் கொண்டது.

இரவு நேரக் குளிர்காற்று சற்றே திறந்திருந்த ஜன்னல் வழியே சுகமாய் நுழைந்து இருவரையும் தழுவியது. அவளது தலை கோதலில் சில நிமிடங்கள் கண் மூடிக் கிடந்தவன் “ர..ரஞ்சு, எ..எனக்கு உன்னை கிஸ் பண்ணனும் போலருக்கு…” எனவும் தவிப்புடன் பார்த்தாள் அவள்.

“அ…அதெல்லாம் வேண்டாம் பிரபா, எனக்கு கிச்சன்ல நிறைய வேலை இருக்கு…” சொன்னவள் அவனது தலையை மடியிலிருந்து விலக்க முயல அவள் கைகளை பலமாய் பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.

“ப்…ளீஸ் ரஞ்சு…” குழைந்து ஏக்கத்துடன் ஒலித்தது குரல்.

அவளது முகம் சிவந்து கண்களில் ஒரு தவிப்பு தெரிய, அவளையே பார்த்திருந்தவன், தனது கையால் அவளது கழுத்தை வளைத்து முகத்தருகே இழுக்க மறுக்க முடியாமல் கன்னத்தைக் காட்டியபடி குனிந்தாள் ரஞ்சனா. அக்கள்ளனோ ஆப்பிள் கன்னங்கள் வேண்டாம், ஆரஞ்சு இதழ்களே போதும் என்று அவளது இதழைத் தன் இதழால் மூடிக் கொண்டான். வெதுவெதுப்பான அம்முத்தத்தில் கரைந்து கண் மூடிக் கொண்டவள் அதில் ஆழ்ந்து போக அவனது கைகள் அவள் மேனியை சுவைக்கும் ஆவலில் எல்லை மீறின.

ஹார்மோன்கள் வேகமாய் சுரந்ததில் உணர்வுகள் தறி கெட்டோட வெகு நாட்களாய் கிடைக்காமலிருந்த அவனது மெய் தீண்டலில் சிலிர்த்து குழைந்து தன்னை மறக்கத் தொடங்கியவள் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவனை விட்டு விலகினாள்.

Advertisement