Advertisement

“சாரி…” என்றவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அவள் திரும்பி வர காபிக் கோப்பையை நீட்டினான் அர்ஜூன்.

“சரி, நான் கிளம்பறேன்…” என்ற அர்ஜூன் விடைபெற வழியனுப்ப அவனுடன் வெளியே வந்த ரஞ்சனா, “தேங்க்ஸ் அர்ஜூன்…” என்றாள் நெகிழ்வுடன்.

“ஹேய்… எதுக்கு சனா…”

“எல்லாத்துக்கும்…” நெகிழ்வுடன் சொல்லிவிட்டு ரஞ்சனா வீட்டுக்குள் சென்றுவிட அவன் புன்னகைத்து நகர்ந்தான்.

லிப்டில் இறங்கி காரை எடுத்தவன் மனது பழைய நினைவுகளில் சிக்கிக்கொண்டது.

“ஹேய் குலாபி…! உன்னோட கொஞ்சம் பேசணும்… ஈவனிங் எங்காச்சும் மீட் பண்ணலாமா…?” குறுகுறுத்த பார்வையுடன் தன்னை வழி மறித்து முன்னில் நின்றபடி கேட்டவனை கண்கள் அகல முறைத்தாள் ரஞ்சனா. இரண்டு வருடத்துக்கும் மேலான நட்பு இருவருக்குள்ளும் நல்ல  நெருக்கத்தைக் கொடுத்திருந்தது.

“ஏன், என்ன சொல்லணுமோ இங்கயே பேசலாமே… எதுக்கு வெளிய மீட் பண்ணனும்…?”

“ப்ச்… இது கொஞ்சம் பர்சனல், இங்கே உள்ள சூழ்நிலை சரியில்லை…” என்றவனை யோசனையுடன் பார்த்தாள்.

“அர்ஜூன், நான் உங்ககிட்ட முன்னமே சொன்னது தான்… இந்த காதல்ல எனக்கு நம்பிக்கை இல்லை, காதல் கல்யாணத்துக்கு என் வீட்டுல சம்மதிக்கவும் மாட்டாங்க, அதனால அதைப் பத்தி பேசுறதா இருந்தா நான் கேக்கத் தயாரில்லை… ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க…”

“ஹேய் சனா… நீதான் முன்னமே என்கிட்ட இதைப் பத்தி சொல்லிட்டியே, இது வேற விஷயம்…” எனவும் யோசித்து தலையாட்டினாள்.

“சரி, வர்றேன்…”

“ம்ம்… எங்க எப்போன்னு மெசேஜ் பண்ணறேன்…” என்றவன் உற்சாகத்துடன் நகர்ந்தான்.

மாலை அருகே இருந்த பூங்கா ஒன்றில் அவனுக்காய் காத்திருந்தவள் முன் கையில் ஒரு ரோஜாப் பூங்கொத்துடன் ஹாஜரானான் அர்ஜூன் கிஷோர்.

“மேரி குலாபி கே லியே யே குலாப்…” என்று புன்னகையுடன் நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். அவர்கள் தனிமையில் சந்திக்கும் போதெல்லாம் அவன் இப்படி ஏதாவது ரோஸ் கொடுப்பது வழக்கம் என்பதால் வாங்கிக் கொண்டவளின் மனம் வண்ண ரோஜாக்களின் அழகிலும், மணத்திலும் மயங்கியது.

சில நிமிடங்கள் அவன் பேசுவதற்காய் காத்திருந்தவள், “என்ன பேசணும் அர்ஜூன்…?” என்றாள்.

“சனா, என் வீட்டுல மேரேஜ் பத்தி பேசத் தொடங்கிட்டாங்க…”

“ஓ… நல்ல விஷயம், என் வாழ்த்துகள்…” என்றவளை நிதானமாய் பார்த்தவன், “என்னால உன்னைத் தவிர அந்த இடத்துல வேற ஒரு பொண்ணை நினைச்சுப் பார்க்க முடியலை… உனக்கு ஏன் என்னைப் புரிய மாட்டேங்குது…”

“ப்ச்… இதைப் பத்தி பேசினா நம்ம நட்பையே கட் பண்ணிருவேன்னு சொன்னதை மறந்துட்டிங்களா…?”

“ப்ளீஸ் சனா, நானும் நீ சொன்ன போல நட்போட மட்டுமே இருக்கணும்னு தான் நினைக்கறேன்… ஆனா மனசு உன்னை ஆசைப்படறதை தவிர்க்க முடியலியே… இந்த நட்புக்கும், காதலுக்கும் ரொம்ப சின்ன வித்தியாசம் தான், உனக்கு ஏன் என்னைப் பிடிக்கலை…?” என்றான் வருத்தத்துடன்.

“ஹேய்..! எனக்கு உன்னைப் பிடிக்கலன்னு யாரு சொன்னா, எனக்கு காதலைத்தான் பிடிக்கலை… காதல்ங்கற பேருல இத்தனை காலம் பெத்து வளர்த்த பெத்தவங்க ஆசையை மதிக்காம, நம்ம ஆசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எல்லாரையும் ஒதுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கல… மத்தபடி ஒரு நண்பனா உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அர்ஜூன்…” என்றாள் தெளிவாக.

“ஓ…! அப்ப உன் வீட்டுல சம்மதிச்சா நீ என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா…?” அவன் கேட்க யோசித்தாள்.

“என் வீட்டுல சம்மதிக்க வாய்ப்பு கம்மிதான், அவங்க ரொம்ப பழமையான ஆளுங்க… காதல் தப்புன்னு நினைக்கற மனசு, அவங்க ஒரு வடநாட்டு ஆளுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதிப்பாங்களா…?”

“அது என் பிரச்சனை, என் வீட்டுல உன்னைப் பத்தி சொல்லி சம்மதம் வாங்கி உன் வீட்டுலயும் பேசி சம்மதிக்க வச்சிட்டா என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு ஓகே தானே…?”

“நடக்க வாய்ப்பில்லை, ஒருவேளை அப்படி நடந்திட்டா…”

“நடந்திட்டா…?”

“எனக்கு ஓகே தான்…” அவள் சொல்ல அவன் முகம் மலர்ந்தது.

“எனக்கு இது போதும் சனா, கொஞ்சம் டைம் மட்டும் கொடு… ரெண்டு பக்கமும் பேசி சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு…” உற்சாகமாய் சொன்னான் அர்ஜூன்.

அடுத்த விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்போது தன் வீட்டில் பேசி சம்மதம் வாங்கிய கையோடு அவள் வீட்டிலும் வந்து பேசுவதாய் சொன்னான். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்திடுமா என்ன…?”

அடுத்த விடுமுறைக்கு முன்பு தந்தைக்கு ஒரு விபத்து என்று அவசரமாய் கிளம்பியவன் இரண்டு மாதம் விடுமுறை முடிந்து திரும்புகையில் வீட்டில் தனது விஷயத்தை சொல்லி சம்மதமும் வாங்கிக் கொண்டு மும்பை வரும்போது ரஞ்சனா, தந்தைக்கு உடல் நலமின்றி கோவை கிளம்பி இருந்தாள்.

அவளிடம் போனில் விவரத்தை சொன்னவன் தான் அங்கே கிளம்பி வந்து அவள் வீட்டில் பேசுவதாக சொல்ல பதறிப் போனாள் ரஞ்சனா. தந்தைக்கு ஹார்ட் பிரச்சனை, ஆப்பரேஷன் என இருக்கும் நேரத்தில் இதைப் பேசி கவலைப்பட வைக்க வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.

தந்தைக்கு மெல்லத் தேறி வீடு வந்தபிறகு அன்னையிடம் ரஞ்சனா சொல்ல “வடநாட்டுக்காரனா, அப்பா நிச்சயம் சம்மதிக்க மாட்டார்…” அதிர்ச்சியில் அவருக்கு ஏதாவது ஆகிவிடுமென்று அன்னை அதைப் பற்றிப் பேசவே கூடாதென்று அவள் வாயை அடைத்துவிட்டார்.

அதோடு அந்தப் பையனிடம் இனி போனில் பேசக் கூடாதென்று சத்தியமும் வாங்கிக் கொண்டார். அந்த நேரத்தில் பிரபஞ்சனின் ஜாதகமும் ஒத்துப் போக தந்தையின் ஆசையை மறுக்கவும் முடியாமல், அர்ஜூனின் ஆசையை ஒதுக்கவும் முடியாமல் அரை மனதுடன் பிரபஞ்சன் கட்டிய தாலிக்கு கழுத்தை நீட்டியிருந்தாள்.

என்னதான், அர்ஜூனை அவள் காதலிக்கா விட்டாலும், தன்னை அத்தனை விரும்பியவனுக்கு தன் வீட்டில் பேச ஒரு வாய்ப்பு கொடுக்க முடியாமல் போனதில் அவளுக்கு மிகவும் வருத்தமும், குற்றவுணர்ச்சியும் இருந்தது.

பிறகு நடந்ததை விரிவாய் ஒருநாள் அவனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மன்னிப்பு கேட்ட பிறகே மனதிலிருந்த சஞ்சலம் நீங்கி முழு மனதோடு பிரபஞ்சனுடன் வாழ்க்கையை தொடங்கியிருந்தாள். அர்ஜூனால் இந்த ஏமாற்றத்தை முதலில் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பிறகு விதி இதுவெனப் புரிய ஏற்றுக் கொண்டான்.

நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை எதிரில் வந்த வண்டியின் ஹாரன் கவனத்தைத் திருப்ப சாலையில் பார்வையைப் பதித்தான் அர்ஜூன்.

ராதிகா மகனை அழைத்து மகளின் வளைகாப்பு பற்றிப் பேச நல்ல நாள் பார்த்து அதற்கான ஏற்பாடுகளை அவரையே செய்து கொள்ளும்படி கூறிவிட்டான் பிரபஞ்சன். எவ்வளவு செலவாகுமென்று கூறினால் பணம் அனுப்பி வைப்பதாகவும் கூறியவனிடம், “நீயும் ரஞ்சனாவும் இல்லாம எப்படிப்பா…?” என்றார் அன்னை.

“என்னோட சூழ்நிலை உங்களுக்குத் தெரியும்ல மா, இப்பெல்லாம் அந்த வயித்து வலி அதிகமாகிட்டே போகுது… ரெண்டு வாரத்துல அதுக்கான ஆப்பரேஷன் பண்ணுவாங்கனு நினைக்கறேன்… என்னால இப்ப அவ்ளோ தூரம் வர முடியாது, ரஞ்சனா மட்டும் என்னை விட்டுட்டு எப்படி வருவா… நீங்க பார்த்துக்கோங்க…” என்று விட்டான் மகன்.

ராதிகாவுக்கு அதில் வருத்தம் தான் என்றாலும் அவர்களின் சூழ்நிலை தெரியுமாததால் அரை மனதாய் சம்மதித்தார்.

ரஞ்சனாவின் பெற்றோரும், சஞ்சனாவும் பிரபாவைக் காண வந்திருந்தனர். மகள் நிற்காமல் ஓடுவதைக் கண்டு நல்லசிவம் மனம் வருந்தினாலும், மருமகனை அவள் ஒரு தாய் போல் அக்கறையாய் கவனித்துக் கொள்வதைக் கண்டு பெருமிதம் கொண்டார். அன்னை இருந்த இரண்டு நாட்களும் சமையல், வீட்டு வேலைப் பொறுப்பிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டாள் ரஞ்சனா. துர்காவும் மெலிந்து சோர்ந்திருந்த மகளுக்குப் பிடித்த உணவுகளாய் செய்து கொடுத்தார். மல்லி, மிளகாய் சாம்பார்தூள், ரசத்தூள் என்று எல்லாவற்றையும் பொடியாக்கிக் கொண்டு வந்து கொடுத்த அன்னையை நேசத்துடன் நோக்கினாள் மகள்.

கடையில் வாங்கும் மசாலாப் பொடிகள் பிடிக்காமல், வீட்டில் செய்யவும் நேரமின்றி ஓடியவளுக்கு அது பெரும் ஆசுவாசமாய் இருந்தது. அன்னையின் நேசம் என்றும் பிள்ளைகளின் வயிறு சார்ந்தே இருக்கும்… தந்தையின் நேசம் வாழ்வியலை சீர்படுத்தும் நோக்கில் இருக்கும். சஞ்சனா சலசலவென்று ஓயாமல் பேசிக் கொண்டு மாமனை வம்பிழுத்தபடி சுற்றிக் கொண்டிருக்க அவனுக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்து கலகலத்த வீடு அவர்கள் கிளம்பியதும் மீண்டும் மௌனம் போர்த்திக் கொண்டது.

அடுத்த நாள் அவனைப் பரிசோதித்த அர்ஜூன் அடுத்த வாரம் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு ஆப்பரேஷன் தேதியை முடிவு செய்யலாம் என்று கூறிச் சென்றான்.

காகிதத்தில் எழுதியதை

அழிப்பது போல்

அத்தனை எளிதில்

மனதின் எண்ணங்களை

அழித்திட முடிவதில்லை…

அதற்கான அழிப்பான்

காலம் மட்டுமே…

Advertisement