Advertisement

 அத்தியாயம் – 18

பிரபாவுக்கு மட்டுமின்றி அர்ஜூனுக்கும் சேர்த்தே சமைப்பதாய் சொன்னார் தியாவின் அன்னை. அவன் வந்திருப்பது தெரிந்ததும் சாப்பிட்டு செல்ல வேண்டுமென்று அன்புக் கட்டளையிட அவனால் மறுக்க முடியவில்லை. அன்று அர்ஜூனுக்கு ஆசுபத்திரியில் பெரிதாய் வேலையும் இல்லாதிருக்க சம்மதித்து விட்டான்.

“ஏன் டாக்டர், நீங்களும் ரஞ்சனாவும் திக் பிரண்ட்ஸ் தானே… அப்புறம் ஏன் அவங்க கல்யாணத்துக்கு நீங்க வரலை…?” மனதில் தோன்றிய கேள்வியை கேட்டாள் தியா.

“அது எனக்கும், சனாவுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம், அதை மனசுல வச்சுக்கிட்டு இப்படி ஒரு நண்பன் இருக்கிறதையே இவர்கிட்ட சொல்லாம விட்டிருக்கா… அதோட என்னைக் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணவும் இல்லை… பிரபாகிட்ட என்னைப் பத்தி சொல்லவே இல்லன்னா பாரு…”

“ஓ… ரஞ்சனாவுக்கு அவ்ளோ கோபம், பிடிவாதமெல்லாம் இருக்கா…? நான் ரொம்ப சாப்ட்னு நினைச்சேன்…”

“ஆமா, ரொம்ப சாப்ட் தான்… அவளை யாரும் குத்தம் சொல்லுற போல நடந்துக்க மாட்டா… ஆனா, மனசுக்கு சரியில்லைன்னு தோணுற விஷயங்களை யாருக்காகவும் ஒத்துக்க மாட்டா, அவளா போனாப் போகட்டும்னு மனசு இறங்கி வந்தா தான் உண்டு… அந்த குணம் தான் அவளை வித்தியாசப்படுத்தி காட்டுச்சு…” ரஞ்சனாவைப் பற்றி சொல்லும்போது அர்ஜூனின் விழிகள் கனிந்து குரல் நெகிழ்வாய் ஒலிக்க பிரபஞ்சனும் கேட்டிருந்தான்.

“ஓ… என் அண்ணனும் உங்க பிரண்டுதானே, அவனுக்கு ரஞ்சனா பத்தி தெரியலியே…” தியாவுக்கு அவனிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன. இருவரும் அடுக்களையில் பேசுவது பிரபா காதிலும் விழுந்தது.

“பிரதாப் பார்டர்ல தானே இருப்பான், அவனை வேறு விதமா எனக்குப் பழக்கம்… ரஞ்சனாவை அவனுக்குத் தெரியாது…”

“ஓ…! அண்ணாவும் உங்களோட வந்திருக்கலாம், பார்க்கணும் போல இருக்கு…” தியா சகோதர பாசத்தில் சொல்ல புன்னகைத்தான் அர்ஜூன்.

“இன்னும் ரெண்டு மாசத்துல வர்றதா சொல்லிருக்கானே… அதுவரை என்னை உன் அண்ணனா தத்தெடுத்து வகை வகையா சாப்பாடு செய்து போடுங்க, எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை…” என்றவனை தியா முறைக்க கேட்டிருந்த பிரபாவுக்கு சிரிப்பு வந்தது.

“என் அண்ணனைத் தவிர வேற யாரையும் அண்ணான்னு அழைக்கிற பழக்கம் எனக்கு இல்லை, வேணும்னா கலகலன்னு பேசுற உங்களை என் பிரண்டா தத்தெடுத்துக்கிறேன்… டீலா…?” என்று கை நீட்ட அதில் தன் கையை வைத்து சம்மதித்தான் அர்ஜூன்.

“சரி… நீங்க நார்த் சைடு தானே, எப்படி இவ்ளோ நல்லா தமிழ் பேசறீங்க…” தியா திகைப்புடன் கேட்டாள்.

“அது… என் கல்லூரி லைப் சென்னைல தான்… தமிழ் எனக்குப் பிடிக்கும், அப்புறம் தமிழ் மேல் உள்ள ஆர்வம் அதைத் தப்பில்லாம பேச வைச்சது…” என்றவனை நினைத்து தியாவுக்கும், பிரபாவுக்கும் பெருமிதம் தோன்றியது.

கஞ்சி தயார் ஆனதும் ரஞ்சனாவுக்குக் கொடுத்து குடிக்க வைத்து மீண்டும் அவளது டெம்பரேச்சரை பரிசோதித்து மாத்திரை கொடுத்து ஓய்வெடுக்க சொல்லிவிட்டு பிரபஞ்சனுடன் அர்ஜூனும், தியாவும் அமர்ந்து விட்டனர். அவர்கள் ஏதோ பேசுவது புரிந்தாலும் ரஞ்சனாவின் காதில் முழுமையாய் எதுவும் கேட்கவில்லை. சோர்வில் அரை மயக்கத்தில் படுத்திருந்தவள் சாப்பிட்டு மாத்திரை போடவும் உறங்கிப் போனாள்.

சிறிது நேரத்தில் அவர்களுக்கான உணவு தயாரென்று தியாவின் அன்னை அழைக்கவும் இருவரும் சென்று உணவை எடுத்துக் கொண்டு பிரபஞ்சனிடம் வந்தனர்.

அர்ஜூனே பிரபாவுக்கான பிளேட்டை எடுத்து எல்லாவற்றையும் பரிமாறி ஸ்பூனிட்டு கையில் கொடுக்க வாங்கிக் கொண்டான் பிரபஞ்சன்.

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்… உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும், அதுக்கு நடுவுல எங்களையும் கவனிச்சுக்க நினைக்கறிங்க…”

“ஹேய்…! இதுல என்ன இருக்கு பிரபா, அப்புறம் நீங்க என்னை அர்ஜூன்னே கூப்பிடலாமே, நான் உங்களுக்கும் நண்பன் தான்…” என புன்னகைத்தான் பிரபஞ்சன்.

அர்ஜூனும், தியாவும் சோபாவில் அமர்ந்தபடி சாப்பிட பிரபா கட்டிலில் அமர்ந்து சாப்பிட்டான். சிறிதும் கூச்சமின்றி அவனது தட்டை வாங்கி, கை கழுவ தண்ணீர் கொடுத்து என்று கவனித்துக் கொண்டான் அர்ஜூன்.

“அர்ஜூன், உங்க பாமிலி பத்தி எதுவும் சொல்லலியே…” தியாவின் கேள்விகள் பிரபஞ்சனுக்கும் உதவியானது.

“மத்யபிரதேஷ்ல குவாலியர் சிட்டில தான் என் வீடு இருக்கு… அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தை, நான்… அப்பா இராணுவத்துல வேலை செய்தவர், கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டார்… அண்ணன் பிசினஸ், குடும்பத்தோட அங்கே இருக்கான்… நான் டாக்டருக்குப் படிச்சு இராணுவத்துல சேர்ந்து ஊர் ஊரா சுத்திட்டு இருக்கேன், இவ்ளோதான் என் விஷயம்…”

“ம்ம்… நீங்க ஏன் இன்னும் மேரேஜ் பண்ணிக்கலை, அவ்ளோ ஒண்ணும் சின்னப் பையனா தெரியலியே…” அவளது கேள்வியில் திகைத்தவன் சமாளித்தான்.

“அடடா, விட்டா என்னைப் பேட்டி எடுத்துருவ போலருக்கே…”

“ப்ச்… பதில் சொல்லுங்க அர்ஜூன்…”

“எனக்கானவளை சந்திக்கும்போது என் கல்யாணம் நிச்சயம் நடக்கும்…” என்றான் அவன் புன்னகையுடன்.

“உங்களைப் போல ஸ்மார்ட்டான டாக்டரை யாருக்கு தான் பிடிக்காது…” பிரபஞ்சன் சொல்ல,

“அப்படில்லாம் இல்ல பிரபா… ஸ்மார்ட்னஸ் மட்டுமே ஒரு பொண்ணுக்கு நம்மைப் பிடிக்கிறதுக்கான தகுதி இல்லை போலருக்கு, நீ என்ன நினைக்கற தியா…”

“ம்ம்… நீங்க சொல்லுறது சரிதான்… இந்த பிடித்தம், எதனால் எப்படி வருதுன்னு எல்லாம் சொல்ல முடியாது… அது ஒரு நொடில மனசுக்குள்ள நடக்கிற மாயாஜாலம்…” என்றவளின் விழிகள் பிரபஞ்சனை ஏக்கத்துடன் நோக்கி பெருமூச்சு விட அதை அர்ஜூன் கவனித்துவிட்டான்.

“என்ன தியா, ஏதோ லவ் பெயிலர் போல பெருமூச்செல்லாம் பலமா இருக்கு…” கேட்கவும் செய்தான்.

“ஹூம்… பழங்கதை பேசி என்னாகப் போகுது அர்ஜூன்… விடுங்க, எது நடந்தாலும் காரணத்தோட தான் நடக்குது…”

பெரிய மனுஷியாய் சொல்ல ஆண்கள் புன்னகைத்தனர்.

“சரி, நீங்க பேசிட்டு இருங்க, நான் கிளம்பறேன்…” என்ற தியா விடை பெற அர்ஜூனும் கிளம்பத் தயாரானான்.

“ஓகே பிரபா… சனா நல்லாத் தூங்கி எழுந்திருக்கட்டும், காய்ச்சல் இருந்தா மறுபடி எனக்கு கால் பண்ணுங்க… நானும் கிளம்பறேன், வேற எந்த உதவி வேனும்னாலும் ஒரு நண்பனா எனக்கு நீங்க அழைக்கலாம்… நான் அதிகப்படியா உரிமை எடுத்துக்குற போலத் தோணலியே…”

“சேச்சே, அப்படில்லாம் இல்லை… ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குப் பொழுது ரொம்ப கலகலன்னு போச்சு… மனசு கூட ரிலாக்ஸா இருக்கு, அடிக்கடி வாங்க…” என்றான் பிரபா. அதைக் கேட்டதும் அர்ஜூனின் முகம் மலர்ந்தது.

“தேங்க்ஸ் பிரபா…” என்றவன் கைபிடித்து குலுக்க, “நான் வீல் சேர்ல உக்காரணும், ஹெல்ப் பண்ணுங்க…” என்றான்.

அவனை சக்கர நாற்காலிக்கு மாற உதவிய அர்ஜூன் கிளம்பினான். அதுவரை இனிமையாய் கழிந்த பொழுது அவன் சென்றதும் வெறுமையாய் தோன்றியது. அர்ஜூனின் கலகலப்பான சுபாவமும், தோற்றமும், வெளிப்படையான பேச்சும் யாருக்கு தான் பிடிக்காது… பிரபாவுக்கும் பிடித்தது.

அதன்பிறகு அர்ஜூன் அவனுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பிரபாவைக் காண வருவான். வெறுமையில் அடைந்து கிடப்பவனுக்கு அவனது வரவு கோடை கால மழை போல் மனதைக் குளிர வைத்தது. இருவருக்குள்ளும் ஒரு நல்ல தோழமை வளரத் தொடங்கியிருந்தது.

அன்று ரஞ்சனா வேலை முடிந்து வரும்போது வீட்டுக்குள் இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருப்பதைக் கேட்டவள் மனது சந்தோஷப்பட்டது. கணவனுக்குள் இத்தனை நாள் இருந்த ஒதுக்கமும், வெறுமையும் மறைந்து அவன் இயல்பாய் இருப்பது போல் தோன்றியது. வீட்டுக்குள் நுழைந்தவளை இருவரும் புன்னகையுடன் ஏறிட்டனர்.

“வா சனா… எனக்கு இன்னைக்கு நைட் டியூட்டி, அதான் பிரபா கூட இருக்கலாம்னு வந்துட்டேன், பிரஷ் ஆகிட்டு வா… காபி தரேன்…” என்ற அர்ஜூனை வியப்புடன் பார்த்தாள்.

“நீங்க காபி போடப் போறீங்களா…?”

“நாங்க ஆல்ரெடி காபி குடிச்சு உனக்கான காபியை பிளாஸ்கில் ஊத்தி வச்சிருக்கேன்… என்ன பிரபா, என் காபி அவ்ளோ மோசமில்லை தானே…” என்றான் அவனிடம்.

“சேச்சே… ரஞ்சுவோட காபியை விட நல்லாவே இருக்கு…” மனைவியை நோக்கி கண் சிமிட்டி சிரித்தபடி சொன்னவனை முறைப்புடன் நோக்கி பின் புன்னகைத்தாள் ரஞ்சனா.

“ஓஹோ, இப்ப என் காபி சுமார் ஆகிடுச்சா…” என்றவள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் தலையில் தட்ட வர கீழிருந்த மிதியடி இடறியதில் தடுமாறி, அருகில் இருந்த அர்ஜூன் மேல் விழப் போனாள் ரஞ்சனா.

“ஹேய், கவனம் சனா…” என்றவன் அவளைத் தாங்கிக் கொள்ள சட்டென்று விலகி பிரபஞ்சனைப் பார்த்தாள் அவள்.

“ச..சாரி, தடுக்கிருச்சு…”

“என்ன ரஞ்சு, பார்த்துக்க மாட்டியா… நல்லவேளை…! அர்ஜூன் தாங்கிப் பிடிச்சுகிட்டார்…” என்றான் பிரபஞ்சன்.

Advertisement