Advertisement

 அத்தியாயம் – 17

மேகமில்லா வானம் தெளிந்திருந்தது. ஆனால் மனதுக்குள் குழப்ப மேகங்கள் சூழ்ந்திருந்ததால் பிரபஞ்சனின் முகமும் மனமும் கறுத்து இறுகிக் கிடந்தன. அதற்குக் காரணம் சற்று முன் அலைபேசியில் அவனுக்கு வந்த தகவல்.

அவனை அழைத்திருந்த இன்சூரன்ஸ் அலுவலக நண்பர் அவனுக்கான காப்பீடு தொகை “இரு நாளில் உங்கள் வங்கி எண்ணுக்கு டிரான்ஸ்பர் செய்து விடுவார்கள்…” என்று மட்டும் சொல்லி இருந்தால் அவனும் சந்தோஷமாய் இருந்திருப்பான். ஆனால் கொசுறாய் அவர் சேர்த்துக் கூறிய தகவல் அவனுள் குழப்பத்தையும் சேர்த்து விதைத்திருந்தது.

“வீட்டுக்கு வரும்போது ரஞ்சு எதற்கு காபி ஷாப் செல்ல வேண்டும்…? அதுவும் ஏதோ ஒரு ஆடவனுடன்… அவன் யாராக இருக்கும்…?” யோசிக்கும்போதே அர்ஜூனின் புன்னகை முகம் நினைவில் வந்தது.

“அர்ஜூன் கிஷோர்…? அந்த டாக்டராய் இருக்குமோ…? இங்கே நான் தனியாய் காத்திருப்பேன் என்று தெரிந்தும் ரஞ்சு அவனுடன் போயிருப்பாளா…? ஒருவேளை ரஞ்சனாவின் ஜாடையில் வேறு யாரையாவது பார்த்து இவள் என்று நினைத்து விட்டாரோ…?” குழப்பமாய் கடிகாரத்தைப் பார்க்க அது வழக்கமாய் ரஞ்சனா வரும் நேரத்தைக் கடந்திருந்தது.

கடுப்புடன் நாற்காலியில் சாய்ந்தவனுக்கு வெறுப்பாய் இருந்தது. அழகான பூ மாலையாய் கையில் கிடைத்த வாழ்க்கை இப்போது மணம், தொலைத்து, நிறமிழந்து வாடிப் போவது போல் தோன்றியது.

“எத்தனை சந்தோஷமாய் கழிந்த நாட்கள்… ரஞ்சனா போன்ற மனைவி கிடைத்ததில் எத்தனை பூரித்துப் போயிருந்தேன்… இருவரும் ஒருவரை ஒருவர் மனதாலும், உடலாலும் நெருங்கி, புரிந்து, இன்னுமின்னும் அறிந்து கொள்ளத் துடிக்கையில் விதி புரட்டிப் போட்டதில் வாழ்க்கை வசமிழந்து போய் விட்டதே…” வருந்தினான்.

“என் ரஞ்சனா, முதலில் தயக்கத்தோடு நெருங்கினாலும் எனக்குள் மூழ்கித்தானே போயிருந்தாள்…? என்னையும், என் குடும்பத்தையும் புரிந்து கொண்டு நல்ல மனைவியாய், மருமகளாய் கடமையோடு காதலிலும் குறை வைக்காமல் இருந்தவளை எப்படி என்னால் தவறாய் யோசிக்க முடியும்…? வேண்டாம் இந்தக் குழப்பம்… அவள் வந்து இன்று நடந்ததை என்னிடம் ஒளிக்காமல் சொல்லத்தான் போகிறாள்… நான் தான் தேவையில்லாமல் சாதாரணமாய் சென்றதைக் கூட தப்பாய் யோசிக்கிறேனோ…? தனிமையில் இருக்கும் மனதில் சாத்தான் குடியிருப்பான் என்பது சரிதான் போலிருக்கிறது…” தன்னையே கடிந்து கொண்டவன் ரிமோட்டை எடுத்து டீவியை வைத்தான்.

அதில் ஏதோ சீரியல் ஓடிக் கொண்டிருக்க நியூஸ் சானலை வைத்து கண்களைப் பதித்தான். ஆனால் எந்த நியூஸும் கருத்தில் தான் பதிய மாட்டேனென்றது. அடிக்கடி கடிகாரத்தை நோக்கித் திரும்பிய விழிகளை அடக்கிக் கொண்டு தவிப்புடன் அமர்ந்திருந்தான் பிரபஞ்சன்.

அவனது தவிப்பை அதிகமாக்காமல் சற்றே தாமதமாய் வந்து கதவைத் திறந்தவளைக் கண்டதும் மனம் நிம்மதியானது.  மனைவியின் முகத்தை ஆர்வமாய் பார்த்தான் பிரபஞ்சன்.

“இதோ, என் ரஞ்சு வந்துவிட்டாள்… என்னருகே வந்து ‘சாரி பிரபா, வழியில அர்ஜூனோட காபி ஷாப் போனேன், அதான் லேட்டாகிருச்சு…’ என்று வருத்தம் தொனிக்கும் குரலில் என் தலைமுடியைக் கலைத்தபடி சொல்லப் போகிறாள்…” அவன் எதிர்பார்ப்போடு அவளைப் பார்க்க உள்ளே வந்தவளின் முகம் சுரத்தின்றி சோர்ந்திருந்தது.

கணவன் ஹாலில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டவள், “பிரஷ் ஆயிட்டு வந்திடறேன்…” என்று மட்டும் சொல்லி அறைக்குள் நுழைந்து கொள்ள அவன் மனம் ஏமாற்றத்தில் சுருங்கிப் போனது.

“சரி, சோர்வாய் இருக்கிறாள்… வந்து சொல்லுவாள்…” எனக் காத்திருக்க அவள் நேராய் அடுக்களைக்குள் நுழையவும் ஏமாற்றத்தில் முகம் சுளித்தவன் அவனே கேட்டு விட்டான்.

“ரஞ்சு ஏன் லேட்… எங்காவது வெளிய போயிருந்தியா…?”

“நான் இயல்பாய் தானே கேட்டேன்… இவளது முகம் ஏன் பேயறைந்த போல் இருக்கிறது…” அவள் முகத்தையே உன்னிப்பாய் நோக்கியவன் மனதுக்குள் யோசிக்க சட்டென்று அவள் முகத்தை மாற்றிக் கொண்டாள்.

“அ..அது வந்து… தெரிஞ்ச ஒருத்தரை வழியில பார்தேன், அ..அதான், பேசிட்டு வர லேட் ஆயிருச்சு…” வேகமாய் சொன்னவள் அவனுக்கான காபியை மேஜையில் வைத்துவிட்டு அடுத்த கேள்விக்கு நிற்காமல் அடுக்களைக்கு செல்ல யோசனையில் அவனது முகம் இறுகியது.

உள்ளே சென்றவளை மனமே கேள்வி கேட்டு கொன்றது.

“அவர் கேட்டதுக்கு உண்மையை சொல்லி இருக்கலாமோ…? அர்ஜூனுடன் காபிஷாப் சென்றதை சொல்லி அவர் ஏதாவது தப்பாய் நினைத்துவிட்டால்… வீண் பிரச்சனை எதற்கு…?” அவள் மனதிலிருந்த பயமும், பிரபஞ்சனின் இப்போதைய சூழ்நிலையும் அவளை தவறாய் யோசிக்க வைத்தது.

“இந்த அர்ஜூன் ஏன் இப்படி சினிமாத்தனமான டயலாக் எல்லாம் சொல்லுகிறார்…? அவர் காதலி இன்னொருவன் மனைவியாகலாம் என்பது புரிந்தது… அது என்ன…? இன்னொருவன் மனைவி அவர் காதலியாக முடியாது… அது குழப்புகிறதே, அப்படியானால் என்னைக் காதலியாய் நினைக்கிறேன் என்கிறாரா…? இல்லை என்கிறாரா…? அவர் சொன்னதற்கு என்ன தான் அர்த்தம்…?” குழப்பத்தில் தலையைப் பிடித்துக் கொண்டவள் அலைபேசி சிணுங்கவும் யோசனையைத் தற்காலிகமாய் நிறுத்திவிட்டு போனை எடுத்துப் பார்க்க வைஷாலி என்றது.

“வைஷூ எதுக்கு எனக்கு போன் பண்ணுறா…?” யோசித்தபடி எழுந்து கணவன் அருகே வந்தவள், “வைஷூ கூப்பிடறாங்க, உங்களோட பேச தான் கூப்பிட்டிருப்பான்னு நினைக்கறேன்… சொன்னபடி அழைப்பை எடுத்து ஸ்பீக்கரில் போட்டாள்.

“ஹலோ வைஷூ, நல்லாருக்கியா…?”

“ம்ம்… இருக்கேன் அண்ணி… நீங்க ஹாஸ்பிடல்ல தானே இருக்கீங்க…?”

“இல்லமா, வீட்டுக்கு வந்துட்டேன்… உன் வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்க தானே…”

“ம்ம்… எல்லாம் இருக்காங்க, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு கூப்பிட்டேன்…”

“ஓ… சொல்லு வைஷூ…”

“அண்ணி, எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல ஏழாவது மாசம் தொடங்கப் போகுது… என் புகுந்த வீட்டுல எப்ப உன் வீட்டுல வளைகாப்பு வைக்கப் போறாங்கன்னு கேக்கறாங்க… அதான், அதைப் பத்தி உங்ககிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்…” வைஷு சொல்ல யோசனையுடன் நெற்றியை சுருக்கினாள்.

இதுவரை தங்கை பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரபஞ்சனின் முகத்தில் சுரத்தேயில்லை. அண்ணன் எப்படி இருக்கிறான் என்ற சாதாரண நலம் விசாரிப்பு கூட வரவில்லை அவனது அன்புத் தங்கையிடமிருந்து.

“நீ உன் அண்ணனுக்கு போன் பண்ணி இதைப் பத்தி பேசி இருக்கலாமே வைஷூ…”

“அவர்கிட்ட பேசி என்னாகப் போகுது அண்ணி… அவரே உங்க தயவுல தான வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கார், அதான் நேரடியா உங்ககிட்டயே பேசிடலாம்னு கூப்பிட்டேன்… நீங்கதான் சீக்கிரம் இதுக்கான ஏற்பாடைப் பண்ணனும்…” அவள் சிறிதும் கூச்சமில்லாமல் தனது காரியத்தில் மட்டும் கண்ணாகப் பேச, சட்டென்று கணவனை நோக்கியவளின் மனம் தவித்துப் போனது. அவன் முகத்தில் அத்தனை வேதனையும், இயலாமையும், வெறுப்பும் மண்டிக் கிடந்தன. வேகமாய் ஸ்பீக்கரை ஆப் செய்து மொபைலைக் கையிலெடுத்துக் கொண்டாள் ரஞ்சனா.

அவள் சற்று ஓரமாய் சென்று போனில் பேச பிரபஞ்சனின் முகம் சிறுத்துக் கிடந்தது.

“வைஷாலி, அண்ணனால் இனி எதுவும் முடியாது என்ற முடிவுக்கே வந்து விட்டாளா…? என்மீது அவள் வைத்திருந்த பாசம் இவ்வளவு தானா…? இனி என் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடப் போகிறதா…? எனக்குத் தெரியாமல் ஏதாவது உண்மையை இந்த ரஞ்சனா மறைக்கிறாளா…? இந்த வயிற்று வலி கூட அதன் ஒரு பாகம் தானோ…?” ஏதேதோ நினைத்துக் குழம்பித் தவித்தது அவன் நெஞ்சம். கண்ணை மூடி அமர்ந்திருந்தவனின் கண்களுக்குள் சூடாய் கண்ணீர் பொங்கியது. அதை வெளியே வழிய விடாமல் பிடித்து வைக்க முயன்றதில் கருவிழிகள் அசைந்தன.

“பிரபா…” அவனது கேசத்தை இதமாய் தடவி சமாதானிக்க முயன்றாள் அவன் மனைவி. ஏனோ இந்த நேரத்தில் அவளது தலைகோதல் கூட அவஸ்தையாய் தோன்ற சட்டென்று கைகளைத் தட்டிவிட அதிர்ந்து போனாள்.

“பி..பிரபா…”

“ப்ச்… என்னைக் கொஞ்சம் தனியா விடு…” கடுகடுத்துச் சொன்னவன் வண்டியை உருட்டிக் கொண்டு அறைக்கு சென்றுவிட்டான். தனக்கென யாருமின்றி ஒற்றைக்கு நிற்பது போல் வெறுமையில் மனது வலித்தது. அடக்கி வைத்த கண்ணீர் கன்னத்தில் வழிய துடைத்துக் கொண்டான்.

ரஞ்சனாவின் மனதும் வைஷூவின் பேச்சில் அதிர்ந்திருக்க, பிரபஞ்சன் அவளது ஆறுதலை ஏற்றுக் கொள்ளாமல் கையைத் தட்டிவிட்டது மனதை வலித்தது. காலையிலிருந்து ஓடிய சோர்வும், மாறி மாறி வந்த பிரச்சனைகளும், மனதைத் துவளச் செய்ய காலையில் எழுந்தவளுக்கு கண்கள் எரிய உடம்பெல்லாம் அனலாய் சுட்டது.

இரவெல்லாம் உறக்கமின்றிப் படுத்திருந்த பிரபஞ்சனும் விடியலில் தான் கண்ணுறங்கி இருந்தான். எப்போதும் ஏழு மணிக்கு கணவனை எழுப்பி காபி கொடுப்பது ரஞ்சனாவின் வழக்கம். அந்த நேரத்தில் கண்ணை விழித்தவன் கீழே பாயில் போர்வைக்குள் சுருண்டிருந்த மனைவியைக் கண்டதும் திகைத்தான். அதுவரை அவளைப் பற்றி மனதை அலட்டிக் கொண்டிருந்த நினைவுகள் காணாமல் போக மெல்ல அமர்ந்தவன் ஊன்று கோலால் மனைவியைத் தொட்டு எழுப்ப முயன்றான்.

Advertisement