Advertisement

“போயிட்டு வா, ரஞ்சு…” என்றான் அவன்.

அர்ஜூனைப் பார்த்த ரஞ்சனாவின் பார்வையில் சிறு எரிச்சல் இருந்ததோ…? என்று தோன்றியது பிரபாவுக்கு.

அவர்கள் சென்றதும் சட்டென்று ஒரு பேரமைதி வந்து சூழ்ந்து கொண்டது போல் தோன்றியது பிரபஞ்சனுக்கு. அர்ஜூன் இருக்கும் இடம் கலகலப்பாய் நிறைந்திருப்பது போல் இருந்தது. அமைதியாய் கண்ணை மூடி அப்படியே சாய்ந்து கொண்டான் பிரபஞ்சன்.

சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான மெத்தென்ற விரல்கள் அவன் நெற்றியை வருட கண்ணைத் திறக்காமலே கைக்கு சொந்தக்காரி அவன் மனைவியென்று புரிந்தது.

“தலை வலிக்குதா பிரபா…?”

மழையின் குளிர்மையும், மனைவியின் அருகாமையும் மனதுக்குள் சில்லென்று உணர்வுகளைத் தூண்ட அவளது கைகளை எடுத்து தனது தோளில் வைத்துக் கொண்டவன் கைகளை அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து தன் முகத்தை வயிற்றோடு வைத்து அமர்த்திக் கொண்டான். நெருக்கமும், கணவனின் வெதுவெதுப்பான ஸ்பரிசமும் அவளுக்குள் உணர்வுகளைக் கிளற தவித்துப் போனாள் ரஞ்சனா.

அது புரியாமல் அவளது வயிற்றில் முத்தமிட்டவனின் கைகள் அவள் மென்மையை தொட்டு விடும் முயற்சியில் தாபத்துடன் முன்னேற, அதற்குமேல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நெகிழ்ந்தவள், சுதாரித்து சட்டென்று அவனை விட்டு விலகினாள்.

மனம் விரும்பிய இனிப்பை குழந்தையின் கையிலிருந்து யாரோ தட்டிப் பறித்தது போல் சட்டென்று ஒரு கோபம் வந்தது பிரபஞ்சனுக்கு.

சீறலாய் தகிப்புடன் வந்த அவனது பார்வையில் ஒரு கணம் அவள் மனம் நடுங்கித்தான் போனது.

“ட..டைம் ஆச்சு, சமைக்கணும்…” என்றவள் அதற்குமேல் அங்கே நின்றிருக்கவில்லை.

முதன்முறையாய் மனதுக்குள் ஒரு ஏமாற்றம் வெறுப்பின் புகை மூட்டமாய் படிவதை உணர்ந்தான் பிரபஞ்சன்.

இரவு அவள் கொடுத்த தோசையோடு மாத்திரையும் விழுங்கி படுக்கையில் சாய்ந்தவனின் மௌனம் அனலாய் அவளைச் சுட்டது. ஒரு பெருமூச்சுடன் வேலைகளை முடித்து படுக்கையறைக்குள் நுழைந்தவள் அவனது கட்டிலுக்குக் கீழே பாய் விரித்து படுத்துக் கொண்டாள்.

வெளியே பெய்த மழை மனதுக்குள் இருந்த வெம்மையைக் குறைப்பதற்கு பதில் கூட்டவே செய்தது. ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் கீழே படுத்திருந்தவளைத் திரும்பிப் பார்த்த பிரபஞ்சனின் மனம் வேதனையில் தவித்தது.

ஒரு பக்கமாய் ஒருக்களித்துப் படுத்திருந்தவளின் செழுமையான வளைவுகளும், நெளிவுகளும் அந்த இருட்டிலும் அவனது உணர்வுகளைத் தூண்ட உள்ளுக்குள் கிளர்ந்த தாபத்தை அடக்கும் வழியறியாது வெறுப்புடன் படுத்திருந்தான். சிறு அணைப்பு, சிறு முத்தம், சின்னச் சின்ன அத்துமீறல்கள் இவையெல்லாம்தானே காதலின் சுவையைக் கூட்டும் அஸ்திரங்கள்.

“சரியாய் நிற்கவே முடியாத நிலையில் நான் அவளை என்ன செய்துவிடப் போகிறேன்… என் சிறு அணைப்பையும், ஸ்பரிசத்தையும் கூட விலக்கி ஓடுமளவிற்கு என்மீது விருப்பம் போய்விட்டதா, நான் தொட்டாலே வெல்லமாய் கரைந்து என் நெஞ்சில் ஒட்டிக் கொள்பவள், என் அணைப்புக்குள் நாய்க்குட்டி போல் சுருண்டு கொள்பவளுக்கு இப்போது என்னவாயிற்று… என் அணைப்பு இப்போது இனிக்கவில்லையா…? என் முத்தம் திகட்டிப் போனதா…?” அவளது சின்ன உதாசீனத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவன் மனம் அரற்றிக் கொண்டிருந்தது.

“என் வருத்தம் உணராமல் எப்படி உறங்க முடிகிறது…” அவன் வெறுப்புடன் கண்ணை மூடிக் கொள்ள உறங்காமல் கிடந்த ரஞ்சனா கணவனை நோக்கித் திரும்பிப் படுத்தாள்.

“சாரி பிரபா… என்னை மன்னிச்சிடுங்க, உங்க உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியாம நான் விலகலை, என் உணர்வுகளைத் தாங்கிக்க முடியாம தான் விலகினேன்…” மருகினாள்.

அடுத்து வந்த நாட்கள் இருவருக்கும் மிகவும் சங்கடமாய்க் கழிந்தன. பிரபாவின் அளவான பேச்சும், சிரிப்பைத் தொலைத்த முகமும் அவளை வாட்டியது. மனதிலுள்ள கோபத்தை மனைவியிடம் சரியாய் காட்டக் கூட முடியாமல் எல்லா விஷயத்திற்கும் அவளையே சார்ந்திருக்கும் சூழ்நிலை அவனுக்கு வெறுப்பைக் கொடுத்தது. விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்வது.

இப்படியே மூன்று நாட்கள் கழிந்திருந்தது.

மாலை வீட்டுக்குக் கிளம்பிய ரஞ்சனா பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்போது முன்னில் காருடன் முளைத்தான் அர்ஜூன்.

“கம்மான் சனா, நான் டிராப் பண்ணறேன் வா…”

“இ..இல்ல, அர்ஜூன்… நான் பஸ்ல போயிக்கறேன்…” சொன்னவளை ஆழமாய் பார்த்தவன், “என்னோட கார்ல வரக் கூட பிடிக்கலையா சனா…?” என்றான் வருத்தத்துடன்.

அந்தக் குரல் அவளைக் குற்றப்படுத்த அமைதியாய் நின்றவளிடம், “எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சனா, நான் உனக்கு எப்பவும் நண்பன் தான்… என்னால உனக்கு எந்தக் காலத்துலயும் எதிரியாக முடியாது…” என்றவனிடம் அதற்கு மேல் மறுத்துப் பேச முடியாமல் சிறு தயக்கத்துடனே காரில் ஏறி அமர்ந்தாள்.

“ஒரு காபி சாப்பிட்டுப் போகலாமா…?”

“இல்ல, வீட்ல பிரபா வெயிட் பண்ணிட்டு இருப்பார்…”

“அப்ப என் காத்திருப்புக்கு எந்த அர்த்தமும் இல்லையா…?”

அந்த வார்த்தைக்கு அவளிடம் பதிலின்றிப் போக, “பத்தே நிமிஷம், ப்ளீஸ்…” எனவும் அமைதியாய் தலையாட்டினாள்.

அவளுக்கும் அவனிடம் பேசி விட்டால் தேவலாம் என்றே இருந்தது. அவனது திடுமென்ற வருகை, பிரபாவின் மீது காட்டும் அக்கறை, அவளிடம் பழையது போலவே நெருக்கமாய் பேசுவது எல்லாவற்றிற்குப் பின்னும் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா எனத் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் எத்தனை நாள் தான் மனதுக்குள் பதைப்புடன் இருப்பது… யோசித்தவள் இன்று பேசிவிடுவது என முடிவு செய்து விட்டாள்.

அவளை நோக்கிப் புன்னகைத்தவன் காருக்குள் இருந்த நிசப்தத்தைக் கலைக்க விரும்பி எப்எம் ஐத் தட்டினான். அது என்னடாவென்றால் சூழ்நிலையைப் புரிந்து கொண்டது போல் பாடலை ஒலிக்க விட்டது.

என்னைக் காணவில்லையே நேற்றோடு…

எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…

உயிர் ஓடிப் போனதே உன்னோடு… அன்பே…!

உணர்வுகளின் வலிகளை வரிகளில் வடித்து காதலிக்கு தன் காதலை உணர்த்திவிடும் லாவகத்துடன் உருகும் குரலில் பாடத் தொடங்கியது. ரஞ்சனா ஒருவிதத் தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

அதை கவனித்தவன் பாடலை ஆப் பண்ணி சொன்னான்.

“என்ன சனா…! பாட்டு பிடிக்கலேன்னா என்கிட்ட சொல்லறதுக்கு என்ன…”

அவள் எப்படி சொல்லுவாள், பாட்டு பிடித்திருக்கிறது… சூழ்நிலை பிடிக்கவில்லை என்று… அமைதியாய் இருந்தாள்.

ஸ்டீயரிங்கை வளைத்துக் கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்தவன் என்ன நினைத்தானோ பிறகு எதுவும் பேசவில்லை. வழியில் தெரிந்த காபி ஷாப் ஒன்றில் வண்டியை நிறுத்த இருவரும் இறங்கினர்.

இருவருக்கும் காபி சொல்லிவிட்டு ஓரமாய் இருந்த மேஜை ஒன்றின் எதிரெதிரே அமர்ந்தனர். ரஞ்சனா ஒருவித அவஸ்தையுடன் சுற்றிலும் பார்வையை ஓட்ட, “கூல் குலாபி, ஜஸ்ட் டென் மினிட்ஸ்… உனக்குள்ள என்னை இங்கே பார்த்ததுல இருந்து மனசுல நிறைய கேள்விகள் இருக்கும்… அதையெல்லாம் தெளிவு படுத்திட்டா நீயும் ரிலாக்ஸா இருப்பேன்னு நினைச்சுதான் உன்னோட பேசணும்னு சொன்னேன்…” நிதானமாய் சொன்னவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் குனிந்திருந்தாள்.

“ப்ளீஸ் அர்ஜூன், என்னை இப்பவும் அந்தப் பேர் சொல்லிக் கூப்பிட வேணாமே…” அவளது கோரிக்கையில் அவனது முகம் சுருங்கிப் போக குரல் கூடத் தணிந்திருந்தது.

அவனால் அது எப்படி முடியும்…?

அவளுக்கு வேண்டுமானால் குலாபி என்பது ரோஜாவைக் குறிக்கும் வெறும் வார்த்தையாக இருக்கலாம்… ஆனால் அவனைப் பொறுத்த வரை அந்த ரோஜாவுடன் கனவிலேயே குடும்பம் நடத்தி குழந்தைகளைக் கூட கண்டு விட்டவன் அவன். சட்டென்று எப்படி அந்தப் பெயரை மாற்ற முடியும்… பூக்களின் அரசி ரோஜா என்றால் அவன் மனதில் எப்போதும் அரசியாய் மலர்ந்திருக்கும் குலாபி அவனது சனா தானே.

“அது என்னால முடியாது சனா…” சில நொடிகள் அமைதிக்குப் பின் உறுதியாய் ஒலித்தது அவனது குரல்.

திகைப்புடன் அவள் அவனையே நோக்க, “சனா, இத்தனை நாள் பழக்கத்துக்குப் பின்னாடியும் உனக்கு இன்னும் என்னைப் புரியவே இல்லை…” என்றான் மென்குரலில்.

“வேண்டாம், எனக்கு எதுவும் புரிய வேண்டாம்… ஆனா கல்யாணமாகி இன்னொருத்தர் தாலியை நெஞ்சுல சுமந்திட்டு இருக்கிற பொண்ணை இப்படி கொஞ்சலா கூப்பிடறது சுத்தமா நல்லா இல்லைன்னு புரியுது…”

“சாரி சனா, நான் அவ்வளவு கீழ்த்தரமானவன் இல்லை… நான் யாரோட மனைவியையும் கொஞ்சலை, என் மனசுல அதே ரோஜாப்பூ வாசத்தோட நிறைஞ்சிருக்கறவளை, என் குலாபியை கொஞ்ச வேண்டாம்னு சொல்ல யாருக்கும் உரிமையில்லை…” அவனது வாதத்தில் தலை குழம்பித்தான் போனது அவளுக்கு. “இவன் சொல்லுவதன் அர்த்தம் தான் என்ன…” என்று.

“நான் உன்கிட்ட சொல்ல நினைச்ச விஷயத்தை சொல்லிடறேன், ஆல்ரெடி அஞ்சு நிமிஷம் முடிஞ்சிருச்சு…” என்றவன் காபியை உறிஞ்சியபடி சொன்னான். “சனா, நீ என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம்… நான் உன்னை உன் கணவர்கிட்ட இருந்து அபகரிக்கவோ, உன் வாழ்க்கையை நாசமாக்கவோ வரலை… என் காதலி இன்னொருத்தருக்கு மனைவியாகலாம், ஆனா எப்பவும் இன்னொருத்தர் மனைவி என் காதலியாக முடியாது… நீ இயல்பா இரு…” என்றவன் சொல்லி எழுந்து நடக்க அவள் திகைத்து அமர்ந்திருந்தாள்.

சிறகடித்த வண்ணத்துப்பூச்சி

அறிவதில்லை – மலரில்

ஒட்டிக் கொண்டது அதன்

வர்ணங்கள் என்று…

என் எண்ணங்கள்

ஒருபோதும் மறக்காது

உன் வண்ணங்களை…

Advertisement